உருகிடும் உயிர்மெய்கள் 4

IMG-20210305-WA0007-68e3bdb0

உருகிடும் உயிர்மெய்கள் 4

அத்தியாயம் – 4  

 

சத்தியமாய் ப்ரீத்தி இப்படி செய்வாள் என்று நினைக்கவே இல்லை. தன் குழந்தையை அவள் ஏன் கடத்த வேண்டும்? மிகுந்த அதிர்ச்சியாய் போனது ரவிக்கு.

அதோடு தன்மீதும் சந்தேகப் பார்வையோடு விசாரணைக்காய் குற்றவாளி போல ஸ்டேஷனில் அமர வைத்திருப்பது மிகுந்த அவமானமாய் இருந்தது.

 

வெகுளிப் பெண் விளையாட்டாய் பழகுகிறாள். கார்ப்பரேட் நிறுவன கலாச்சாரத்தில் இதெல்லாம் சகஜம்தானே  என்று ப்ரீத்தி விஷயத்தில் அலட்சியமாய் இருந்து விட்டேனோ…? நினைக்க நினைக்க தாங்கவே முடியவில்லை அவனால்.

‘அதோடு அவளது நோக்கம் தெரிந்தும் தான் சகஜமாய் அவளோடு பழகியதும் தவறோ…? தன்னை எங்கே எப்படி கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது அவளோடான பழக்கம்.’ நினைக்கவே குற்றவுணர்வாய் இருந்தது அவனுக்கு.

 

போலீஸின் சந்தேக வளையத்தினுள் விழுந்துவிட்டால். யார் எவர் என்றெல்லாம் பார்ப்பதில்லை அவர்கள். விசாரணைக் கைதியாய் அழைத்து வந்துவிடுவர். ப்ரீத்தி பற்றிய விசாரணையில் வாகாய் சிக்கியிருந்தான் ரவி.

அதுமட்டுமல்லாமல் பெற்ற குழந்தைகளைத் தமது கள்ளக் காதலுக்குத் தடையாய் உணர்ந்தால் மனசாட்சி இன்றி கொன்று போடும் மனிதர்களை நாள்தோறும் வழக்குகளாய் சந்திக்கையில் ரவி மீது போலீசுக்கு சந்தேகம் வரவில்லை என்றால் தான் ஆச்சரியம்.

விசாரணைக்காக அழைத்து வந்து ஸ்டேஷனில் அமர வைத்திருந்தனர் அவனை.

ப்ரீத்தி தலைமறைவாகியிருக்க அவளைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டிருந்தது. அவளது கார் வொயிட் மாருதி ஸ்விஃப்ட் திருவான்மியூர்  தாண்டி ரோட்டோரத்தில் அநாதையாய் நிற்க, குழந்தையோடு தலைமறைவான அவளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வழக்கு குழந்தைகள் கடத்தல் தனிப்பிரிவு போலீசார் கைக்கு மாறியிருக்க, ஊடகங்களிலும் குழந்தை காணாமல் போன செய்தி பரவி, அவரவர் ஊகங்களுக்கு ஏற்ப செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன.

“சென்னை மெரீனாவில் மூன்று வயது பெண் குழந்தை கடத்தல்!” “கள்ளக்காதல் காரணமா?” “குழந்தையோடு தலைமறைவான காதலி??” “குழந்தையின் தந்தைக்கும் கடத்தலில் பங்கிருக்கிறதா?”

அவரவருக்குத் தோன்றிய வகையில் அவர்களது டிஆர்பியை ஏற்றிக் கொள்ள பரபரப்பாய் செய்திகளை வெளியிட, குடும்பமே நொந்தே போனது.

சிசிடிவியில் குழந்தை கடத்தப்பட்ட பதிவுகளைப் பார்த்த பிறகு குழந்தையை எப்படியும் மீட்டு விடுவேன் என்று புகழேந்தி நம்பிக்கையாய் கூறவும், நேத்ராவுக்கு ஆறுதல் கூறி உடனிருப்போம் என்று வீட்டுக்குத் திரும்பி வந்திருந்தான் ரவீந்தர்.

 குழந்தை இருக்குமிடம் தெரிந்ததும் தகவல் தருகிறேன், நீங்கள் அப்போது வாருங்கள் என்று புகழேந்திதான் அனுப்பியும் வைத்திருந்தார்.

அனைவருமே நல்ல செய்தி வந்துவிடும் என்ற நம்பிக்கையோடு வீட்டில் காத்திருக்க, ஒரு சில மணித்துளிகள் கடந்த நிலையில் வீட்டுக்கு வந்த புகழேந்தி கேட்ட முதல் கேள்வியே ஸ்தம்பிக்க வைத்தது ரவியை.

“குழந்தைய எதுக்காக கடத்துனீங்க ரவி?”

மிகக் கடுமையான முகத்தோடு புகழ் கேட்க, முதலில் கேள்வியே புரியவில்லை ரவீந்தருக்கு. புரிந்தபோது…?

“ஸா… ஸார், குழந்தைய நான் கடத்துனேனா? நான் எதுக்கு என் பிள்ளைய கடத்தனும்?” அவன் திகைத்து நிற்க,

குழந்தையோடு வந்து விடுவேன் என்று உறுதி சொன்ன அதிகாரி, வெறுங்கையோடு வீட்டுக்கு வந்து தன் கணவனையே குற்றம் சொல்வதை அதிர்ச்சியோடு பார்த்திருந்தாள் நேத்ரா

“என்ன சொல்றீங்க புகழ்? ரவி ஏன் கடத்தனும்? குழந்தை எங்க இருக்கு இப்ப?” ஜோவிதாதான் பரபரத்தாள்.

“குழந்தைய ஏன் கடத்தனும்? எதுக்காக கடத்தனும்? குழந்தை இப்ப எங்க இருக்கு? இதுக்கெல்லாம் பதில் ரவிதான் சொல்லனும் ஜோ. ஏன்னா அவருக்குத் தெரியாம இந்த கடத்தல் நடந்திருக்காது.” ரவியைக் கூர்மையாய் பார்த்தபடி புகழ் கூற,

“என்ன சொல்றீங்க சார்? எனக்கு எப்படி தெரியும்?” அதிர்ந்து போனான் ரவி.

“கடத்துனது உங்களோட லவ்வரா இருக்கறப்ப, உங்களுக்குத் தெரியாம எப்படி இருக்கும் ரவி?”

“ல… வ்வரா? ப்ரீ… த்தியா?” உச்சபட்சமாய் அதிர்ந்தவனின் வாயிலிருந்து துண்டு துண்டாய் வந்தன வார்த்தைகள்.

“ம்ம்… பேரை சரியா சொல்லிட்டீங்க. அதேபோல குழந்தை இப்ப எங்க இருக்குன்னும் சொல்லிட்டா பரவாயில்லை.”

புகழேந்தியும் ரவியும் பேசிக் கொள்வதை புரியாத மொழி படத்தைப் பார்ப்பது போல அனைவரும் பார்த்திருக்க,

“சார், நிஜமாவே எனக்கு எதுவுமே தெரியாது? ப்…ப்ரீத்தி எதுக்கு என் குழந்தைய கடத்தனும்? எனக்கு எதுவுமே புரியல சார்.” தவித்துப் போனான் ரவீந்தர்.

“இன்னும் நீங்க நடிக்கத் தேவையில்ல ரவி. காரோட நம்பர் வச்சு ப்ரீத்திய நாங்க ஐடென்டிஃபை பண்ணியாச்சு.

அவங்க டீட்டைல்ஸ் கலெக்ட் பண்ண ஆபீஸ்க்குப் போய் விசாரிச்சப்ப உங்களுக்கும் அவங்களுக்கும் இடையில இருக்கற ரிலேஷன்ஷிப் பத்தி தெரிய வந்திருக்கு. எதையுமே விசாரிக்காம வெறுமனே வந்து பேசல நான்.”

புகழ் அழுத்தமாய் பேசியதில் உறைந்து போனாள் நேத்ரா. நேற்று காலையில் சண்டை வந்ததும் இந்த ப்ரீத்தியின் அலைபேசி அழைப்பால்தானே.

எனக்கும் அவளுக்கும் இடையே நட்பு மட்டும்தான் என்று ரவீந்தர் கோபமாய் நேத்ராவிடம்  சொல்லி சண்டையிட்டிருக்க, இப்போது புகழ் சொல்லும் விபரங்கள் அதிர்ச்சியாய் இருந்தது அவளுக்கு.

பெற்ற பிள்ளையையே கடத்தும் அளவுக்கு கொடூரனா ரவீந்தர்? நம்பவே முடியவில்லை அவளால். ஆனால், எதையுமே நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. அதிர்ந்த விழிகளோடு அவர்களையே பார்த்திருந்தாள்.

“சார் ரவியப்பத்தி எனக்கு நல்லாவே தெரியும். அவன் குழந்தைய அவனே கடத்த வேண்டிய அவசியம் என்ன சார்?

ப்ரீத்திக்கும் அவனுக்கும் இடையில வெறும் ஃபிரெண்ட்ஷிப் மட்டும்தான். ஆபீஸ்ல ஆயிரம் பேசுவாங்க அதெல்லாம் உண்மையாகுமா?” ஜெகன் ரவிக்காய் பேச வர,

“காலேஜ் படிக்கிறப்பவே எனக்கு ரவிய பத்தி தெரியும். அவன் அப்படிப்பட்டவன் இல்ல புகழ். நீங்க தப்பா புரிஞ்சுகிட்டு பேசுறீங்க.” ஜோவிதாவும் ரவிக்காய் பேசினாள்.

“என் பையன் அப்படிப்பட்டவன் இல்ல சார். பொண்டாட்டி புள்ள மேல உயிரா இருப்பான். நீங்க தேவையில்லாம அவனை சந்தேகப் படறீங்க.” ரவியின் தந்தையும் படபடத்தார்.

“திரும்பவும் சொல்றேன் எதையும் விசாரிக்காம நான் இங்க வரல.

ப்ரீத்தியோட ஃபோன் ட்ரேஸ் பண்ணப்ப நேத்து நிறைய முறை ரவிக்கு ஃபோன் பண்ணியிருக்கா.

எதுக்காக பேசினான்னு ரவிதான் சொல்லனும்.

இன்னும் அவ யார் யார்கூட பேசியிருக்கான்னு விசாரணை போயிட்டு இருக்கு.”

“…”

ரவியின் புறம் திரும்பிய புகழ், “நேத்து ப்ரீத்தி எதுக்காக உங்களுக்கு ஃபோன் பண்ணா?”

“அ…அது வந்து…” ரவி தடுமாற… கூர்மையாய் அவனைப் பார்த்த புகழ்,

“ஏன்…? வெளிய சொல்ல முடியாத விஷயமா ரவி?”

“சார்…” காற்றாய் வந்தது குரல்.

“நீங்க ப்ரீத்திகூட நிறைய தடவை அவுட்டிங் போயிருக்கீங்க… அவங்களோட நெருக்கமா பழகியிருக்கீங்க. உண்மைதானே?”

“சார், நானும் ப்ரீத்தியும் நல்ல ஃபிரெண்ட்ஸ். நாங்க நண்பர்கள் சேர்ந்து நிறைய தடவை அவுட்டிங் போயிருக்கோம்.” சற்று தொய்வாக வந்தது அவன் குரல்.

“கொஞ்ச நாளுக்கு முன்ன, ஆபீஸ்ல எல்லாருக்கும் முன்னாடி ப்ரீத்தி உங்களுக்கு புரப்போஸ் பண்ணி பப்ளிக்கா கிஸ் பண்ணியிருக்காங்க. இது நண்பர்கள் செய்யற செயல் இல்லையே.”

புகழின் கேள்வியும் ரவியின் சங்கடமான பார்வையும் அனைவரையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

புகழ் கூறியதை மறுத்து எதுவுமே பேசாத ரவியைப் பார்த்து அதிர்ந்து தளர்ந்து அமர்ந்தாள் நேத்ரா. ஏதோ ஒன்று உள்ளே உடைவது போல இருக்க, நெஞ்சை இறுக்கும் வலி தாள முடியாததாய் இருந்தது.

‘அப்ப நான் சந்தேகப்பட்டது சரிதானா? ஹைய்யோ ரவியா இப்படி?’ மனம் அரற்ற… அதன்பிறகான ரவியின் வாக்குவாதங்களோ பேச்சுகளோ அவளது செவியில் ஏறவே மறுத்தது.

மனம் முழுக்க ரணமாகியிருக்க, தொலைந்து போன குழந்தையின் நினைவுகள் உயிரை உருக்க தன்னிலை இழந்து மயங்கிப் போனாள் நேத்ரா.

மயங்கிச் சரிந்தவளைக் கண்டதும் அதிர்ந்து போன ஜோவிதா அவளைத் தாங்க, மற்றவர்களும் அதிர்ந்து போயினர்.

முகத்தில் தண்ணீர் தெளித்தும் முதலுதவிகள் செய்தும் சுயநினைவுக்கு வராதவளை உடனடியாக மருத்துவமனை அழைத்துச் சென்றனர்.

மருத்துவமனையில் அவளை அட்மிட் செய்து அவளோடு ஜோவிதாவை இருக்கச் சொல்லிவிட்டு ரவீந்தரை விசாரணைக்காய் அழைத்து வந்திருந்தான் புகழ்.

 ப்ரீத்தியைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருந்தது.

குழந்தை கடத்தப்படும் போது அவளோடு உடன் இருந்த ஹெல்மெட் அணிந்த நபர் ரவியாய் இருக்கலாம் என்ற சந்தேகம் இருந்ததாலேயே அவனை விசாரணைக்காய் அழைத்து வந்திருந்தான் புகழ்.

ஆனால் சம்பவம் நடைபெற்ற நேரத்தில் தான் தனது நண்பர்களோடு கேளிக்கை விடுதி ஒன்றில் இருந்ததை ரவி நிரூபித்ததால், ப்ரீத்தியோடு வந்து குழந்தையைக் கடத்தியது யார் என்றும் விசாரணை நடந்து கொண்டிருந்தது.

ஸ்காட்லாந்து யார்டு போலீஸார்க்கு அடுத்தபடியாக மிகத் திறமை வாய்ந்த போலீஸார் என்று அனைவராலும் புகழப்படும் தமிழக போலீசார் சில மணி நேரங்களிலேயே ப்ரீத்தியை கண்டுபிடித்திருந்தனர்.

ஆனால், தமிழகத்தை விட்டு தப்பி ஓட முயன்ற அவளிடமும் குழந்தை இல்லாதது அனைவரையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

 

 

— தொடரும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!