எங்கே எனது கவிதை – 1

EEK 1-67445f5c

எங்கே எனது கவிதை – 1

1

வேலைக்குச் செல்வபர்கள், வீட்டுப் பெண்மணிகள், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் என்று அந்த வாரம் முழுவதும் ஓடிக் களைத்து, மிகவும் எதிர்பார்க்கும் நாள் அது..

வெள்ளிக் கிழமை மாலை வேளை.. அடுத்து வரும் இரண்டு நாட்கள், வேலை பலுவின் எந்த அழுத்தமும் இல்லாமல், அரக்க பறக்க எழுந்து அலுவலகத்திற்கோ, பள்ளிக்கோ, கல்லூரிக்கோ ஓடும் வாழ்க்கைச் சக்கரத்தின் ஓட்டத்தின் சுழல் சற்று மட்டுப்பட்டு, யதார்த்தமான மனிதர்களாக,, இரண்டு நாட்கள் கழிக்கப் போகும் நாள் அது. அந்தத் தருணத்திற்காக, திங்கட்கிழமை காலை துவங்கியது முதலே பலரும் காத்திருக்கும் நேரமது..

அது போன்றதொரு சமயத்தில், அந்த இரவு நேரத்தில், அந்த பப்பில் அமர்ந்துக் கொண்டு, தனது நண்பனின் பிறந்தாள் விழாவில், நண்பர்களாகப் பட்டவர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டே, பில்லியர்ட்ஸ் விளையாடிக் கொண்டிருந்தான் கார்த்திக்..

அவ்வப்பொழுது அவனது அருகில் இருந்த மது கிண்ணத்தை எடுத்து ஒரு வாய் அருந்தியவன், பூல் க்யூ குச்சியை தனது நீண்ட மெல்லிய விரல்களால் பிடித்தபடி பூலில் இருந்த பந்துகளை குறிப்பார்த்துக் கொண்டிருந்தான்.

அங்கிருந்த பெண்கள் பலரின் பார்வை அவன் மீது தான் இருந்தது.. கார்த்திக்.. ஆறடி உயரத்திற்கு சற்றுக் குறைவான உயரமும்.. ஜிம் செய்து நன்றாக உரமேறிய உடலமைப்பும் கொண்டவன்.. அவன் மிகவும் நல்ல பையன் என்று அனைவரும் சொல்லும் அளவிற்கு அவ்வளவு சாந்தம் குடி கொண்டிருக்கும் அவனது முகம்.. அந்த சாந்தத்தின் பின்னால் ஒளிந்திருப்பது?

அவனது கண்கள் கூர்மையாக அந்தப் பந்தை குறி பார்க்க, அந்த கண்களின் கூர்மையில் பலரது பார்வை அவனைத் தழுவி மீண்டது.

அவனது மாநிறத்திற்கும் சற்று அதிகமான நிறத்திற்குத் தகுந்தபடி, கருப்பு நிற டி-ஷர்ட் அணிந்து, ஸ்டைலாக தலையை கோதிக் கொண்டே, லேசாக இதழ் மடித்துக் கடித்தபடி அவன் விளையாடுவதைப் பார்ப்பவர்களின் கண்களில் பச்சக் என்று ஒட்டிக் கொண்டவன்..

அந்த சிவப்பு நிற பந்தை சரியாக குறிப்பார்த்து அந்த குழிக்குள் தள்ளுவானா என்று அனைவரும் பார்க்க, அவர்களது எதிர்ப்பார்ப்பை பொய்யாக்காமல், சரியாக குறிப்பார்த்து, அந்தப் பந்தை குழிக்குள் அடிக்க, ‘ஹே..’ என்ற கூச்சலுடன் அவனது நண்பர்கள் அவனுக்கு ஹைபை கொடுத்தனர்..  

சிறு சிரிப்புடன், அவனது முகத்தில் கர்வம் ஜொலிக்க, அவன் தனது நண்பனைப் பார்க்க, “உன் குறி என்னைக்குமே தப்பாது கார்த்திக். கேஸ்லையும் சரி.. விளையாட்டுலையும் சரி.. உன் வாழ்க்கையிலையும் சரி.. நீ வச்ச குறி தப்பினதே இல்ல.. அடிச்சா சிக்சர் தான்..” அவனது நண்பன் பொறாமையுடன் கூற, கார்த்திக் ஸ்டைலாக தனது தோளைக் குலுக்கினான்..

“என்ன? பதிலே பேச மாட்டேங்கிற? அது எப்படி நீ எது செஞ்சாலும் வெற்றில முடியுது?” அவன் மேலும் வம்பு வளர்க்க,

அதற்கு பதில் சொல்லாமல், “உன் டர்ன்.. ஆடு..” என்றவன், அருகில் இருந்த அந்த மதுக் கோப்பையை எடுத்து உரியத் துவங்கினான்..

நண்பர்களின் பேச்சு சலசலப்புடனும், கலகலப்புடனும் ஆட்டம் தொடர்ந்துக் கொண்டிருக்க, கார்த்திக்கின் செல்போன் இசைக்கத் துவங்கியது. அதில் ஒளிர்ந்த பெயரைப் பார்த்து, யோசனையுடன் புருவத்தை சுருக்கியபடி, அதை கட் செய்து கீழே வைத்தவன், மீண்டும் மதுக் கோப்பையில் தஞ்சம் புக, அவனது நண்பர்கள் அவனைத் திரும்பிப் பார்த்தனர்..

“ஏன் ஏதாவது ந்யூசன்ஸ் காலா? கட் பண்ணிட்ட?” அவனது நண்பன் தினேஷ் கேட்க, கண்களைச் சிமிட்டியவன், மீண்டும் ஆட்டத்தை வேடிக்கைப் பார்க்கத் துவங்கினான்..

மீண்டும் அவனது செல்போன் இசைக்க, அதை எடுத்துப் பார்த்த கார்த்திக், அதை கட் செய்யவும், “யாராவது ரொம்ப முக்கியமா பேசறதுக்கு கூப்பிடப் போறாங்க கார்த்திக்.. வேற ஏதாவது எமர்ஜென்சியா கூட இருக்கலாம் இல்ல? நீ ஏன் எடுத்துப் பேசாம கட் பண்ணிக்கிட்டு இருக்க?” மீண்டும் தினேஷ் கேட்கவும்,

“முக்கியமான கால் எல்லாம் இல்ல.. வழக்கமான கால் தான்.. போர் அடிக்கும்போது எடுத்து பேசிக்கறேன்.. இப்போதைக்கு நீங்க என்னை போர் அடிக்காம பார்த்துக்கறீங்க.. அதுனால அந்த கால் எடுக்க அவசியம் இல்லன்னு தான் கட் பண்றேன்..” என்றவனை, தினேஷ் வெற்றுப் பார்வை பார்க்கும் பொழுதே,  

அவனது பார்வையைப் பொருட்படுத்தாமல், “இந்த பிராண்ட் விஸ்கி நல்லா இருக்கு இல்ல.. ஐ லவ் இட்..” தனக்கு முன்பிருந்த டேபிளில் இருந்த பாட்டிலை எடுத்து, அதன் லேபிளை அவன் படிக்கத் துவங்க, மீண்டும் அவனது செல்போன் இசைக்கத் துவங்கியது..

அவனது கையில் இருந்த பாட்டிலை கீழே வைத்துவிட்டு அவன் போனை எடுப்பதற்குள், பாடல் முடிந்து, “ஆதிரா காலிங்..” என்று அவனது போன் அழைப்பவரின் பெயரை அறிவிக்கவும், அவசரமாக போனை எடுத்தவன், அங்கிருந்து எழ முயற்சிக்க, அவனைப் பிடித்துக் கொண்ட அனைவரின் பார்வையும் கார்த்திக்கின் மீது ஆச்சரியத்துடன் திரும்பியது..

கார்த்திக் அவசரமாக போனை அனைக்க, “ஹே.. வாட்.. ஆ…திராவா?” தினேஷ் ஆச்சரியமாகக் கேட்க,  கார்த்திக் பதில் சொல்வதற்குள்,

“ஆதிராவா? யாரு கார்த்திக் ஆதிரா? அவங்களைப் பத்தி நீ சொல்லவே இல்லையே..” அங்கிருந்த அவனது நட்பு வட்டம் அவனைச் சூழ, ஆதிராவை மனதினில் திட்டிக் கொண்டே அவர்களைப் பார்த்து பல்லைக் கடித்தான்.

‘இப்போ இவளை யாரு கூப்பிடச் சொன்னா? நான் இங்க தான் வரப் போறேன்னு தெரியும் தானே.. கொஞ்சம் நேரம் நிம்மதியா இருக்க விட மாட்டா போல இருக்கே.. இப்போ இவனுங்களுக்கு வேற பதில் சொல்லி ஆகணும்.. என்னன்னு சொல்றது? இவனுங்க வேற இன்ட்ரோ கொடுன்னு ஆராம்பிப்பானுங்க.. அப்பறம் வழிவானுங்க.. எனக்கு பத்திக்கிட்டு வரும்.. இவ வேற நேரம் காலம் தெரியாம.. எல்லாம் போதையில வேற இருக்கானுங்க..

எப்படி இவங்களை சமாளிக்கிறது? இவளுக்கு போர் அடிச்சா எனக்கு போன் அடிச்சிடறா.. பார்ட்டில இருக்கேன்னு தெரியும்ல.. நான் போனை எடுக்க மாட்டேன்னும் தெரியும் தானே.. பேசறதை நாளைக்கு பேசிக்கலாம் இல்ல.. வேற வேலை இல்ல..’ மனதினில் அவளைத் திட்டிக் கொண்டே,

“என்னோட ஃப்ரெண்டு..” என்ற கார்த்திக்கின் பதிலில் திருப்தியுறாதவர்கள், விளையாடுவதை விட்டு, அவனைச் சூழ்ந்து கொண்டனர்..

‘போச்சு.. ஆதிரா.. உன்னை நாளைக்கு கவனிச்சுக்கறேன்..’ மானசீகமாக அவன் தலையில் கை வைத்துக் கொள்ள,

“பொய் சொல்லாதே கார்த்திக்.. உன்னோட மொபைல்ல ஒரு பொண்ணோட நம்பர்ல இருந்து போன் வரதே அதிசயமா இருக்கு.. அதுவும் அந்த பொண்ணு விடாம உனக்கு அடிச்சுக்கிட்டு இருக்கு.. அந்த அளவுக்கு ஒரு பொண்ணுக்கு உன்கிட்ட உரிமை இருக்குன்னா.. வேற ஏதோ இருக்குன்னு தானே அர்த்தம்.. எங்களுக்கு ரொம்ப டவுட் ஆகுதே.. சொல்லு.. யாரு அவங்க? என்ன செய்யறாங்க? எப்படி இருப்பாங்க? அவங்க போட்டோ இருக்கா?” ஒவ்வொருவர் ஒவ்வொரு கேள்வியாகக் கேட்க,

“இருங்க இருங்க சொல்றேன்.. நீங்க நினைக்கிற மாதிரி எதுவுமே இல்ல.. அவ நிஜமா என் ஃப்ரெண்ட் தான்.. நம்புங்க மக்களே..” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, மீண்டும் ஆதிராவிடம் இருந்து போன் வரவும், அனைவரின் பார்வையும் சந்தேகமாக அவன் மீது பாய்ந்தது..

“கார்த்திக்.. உண்மையைச் சொல்லு.. உனக்கு ஒரு பொண்ணு இவ்வளவு தடவ கால் பண்றாங்க.. அவளை முதல் தடவையே ‘ஏன் டிஸ்டர்ப் பண்ற’ன்னு சத்தம் போடாம, நீ நழுவ பார்க்கற.. சும்மா, அமைதியா கட் பண்ணிக்கிட்டு இருக்க? இது உன்னோட இயல்பே இல்லையே? என்ன விஷயம்? ஏதாவது மேட்டரா? உனக்கு இப்படி ஒரு இது இருக்குன்னு ஒரு க்ளூ கூட இதுவரை எனக்கு கிடைக்கலையே.. எப்படி?” தினேஷ் கேட்க, தனது உதட்டைப் பிதுக்கியவன்,    

அவர்களை கெத்தாகப் பார்த்தவன், போனை எடுத்து, “நான் பிசியா இருக்கேன்..” அவள் சொல்ல வருவதைக் கூட கேட்காமல், கார்த்திக் சொல்லிவிட்டு போனை வைத்துவிட, அனைவருமே அவனை திகைப்பாகவும் குழப்பமாகவும்பார்த்தனர்..

அவன் போனை எடுக்கவும், அனைவரும் அவன் ஆசையாக, அன்பொழுக, காதலாகி கசிந்து உருகி பேசுவான் என்று எதிர்ப்பார்த்திருக்க, அவனது அந்த பதிலில் அனைவருமே திகைத்து, அவனை கேள்வியாகப் பார்த்தனர்..

அவர்களது பார்வையைக் கண்டவன், ‘சப்பா.. நம்பினாங்கடா..’ என்று மனதினில் நினைத்துக் கொண்டு,

“என்ன எல்லாரும் இப்படிப் பார்க்கறீங்க?” கார்த்திக் மீண்டும் அந்த ஸ்பூல் குச்சியை கையில் எடுத்தப்படி,  

“நான் தான் சொல்றேன்ல அவ என் ஃப்ரெண்ட்ன்னு.. அவளுக்கு ஆபீஸ் பஸ் வந்திருக்கும்.. எப்பவுமே அவ ஆபீஸ் விட்டு கிளம்பும் பொழுது ஏதாவது பேச கூப்பிடுவா.. நான் க்ளையன்ட் பார்த்துட்டு இருந்தா கட் பண்ணிடுவேன்.. அப்பறம் அவ கூப்பிட மாட்டா.. இது எங்களுக்குள்ள வழக்கம் தான்..” கூலாகச் சொன்னவன், மீண்டும் ஒரு பந்தை பாக்கெட்டில் போட்டு விட்டு, மதுக் கோப்பையில் தனது கவனத்தைத் திருப்ப, அவனது செல்லில் மெசேஜ் வந்ததற்கான ஒலிகள் எழும்பத் துவங்கியது.

தனது மொபைலை எடுத்துப் பார்த்தவன், அவளது பெயர் இருக்கவும், ‘இவ என்னது இன்னைக்கு விடாம கால், மெசேஜ்ன்னு பண்ணிக்கிட்டு இருக்கா? ரொம்ப போர் அடிச்சுப் போச்சோ? இல்ல.. நாம எங்கயாவது அவளை மீட் பண்றோம்ன்னு சொல்லி மறந்துட்டோமோ? இல்லையே.. அவளுக்கு நான் இன்னைக்கு இங்க வரது தெரியுமே.. நாளைக்கு தானே அவளை மீட் பண்ற பிளான்.. சினிமாவுக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லி இருந்தேன்னு நினைக்கிறேன்.. நாளைக்கு காலையில ஏதாவது ஒரு படத்துக்கு புக் பண்ணி கூட்டிட்டு போக வேண்டியது தான்.. மொக்க படமா இருந்தாலும் நாங்க பாட்டுக்கு பேசிட்டு இருக்கலாம்..

ஆனா இப்போ மெசேஜ் பார்த்தா நான் ஃப்ரீயா இருந்துக்கிட்டு அவளோட கால் எடுக்கலைன்னு அவ நினைச்சிப்பா.. அதனால பேசாம கொஞ்ச நேரம் மெசேஜ் பார்க்க வேண்டாம்.. வீட்டுக்குப் போய் பார்த்துட்டு பேசிக்கலாம்..’ என்று தனக்குள் நினைத்துக் கொண்டவன், மொபைலை தனது பாக்கெட்டில் போட, தினேஷ் அவனைப் பார்த்தான்..

“என்ன விடாம மெசேஜ், போன்னு வருது.. எடுத்து பேச வேண்டியது தானே.. நாங்க ஒண்ணும் சொல்ல மாட்டோம்.. நீ நகர்ந்து போய் பேசு.. ஏதோ அவசரமா இருக்கப் போய் தானே விடாம பேசறாங்க..” என்று அவன் கேட்க,

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல.. முக்கியமா இப்போவே என்கிட்ட சொல்ல அவளுக்கு என்ன இருக்கப் போகுது? ஆபீஸ் விட்டு கிளம்பி இருப்பா.. அவங்க வீட்ல போன் செஞ்சு இருப்பாங்க.. அப்போ அவங்க ஊருல, அவ வீட்டுல இருக்கற மாடு குட்டிப் போட்டு இருக்குன்னு சொல்லி இருப்பாங்க.. அதை எக்ஸ்சைடட்டா சொல்லியே ஆகணும்ன்னு போன் மேல போன் போட்டுக்கிட்டு இருப்பா.. அதை நாளைக்கு காலையில கேட்டுக்கறேன்.. இப்போ அதைக் கேட்டு நான் என்ன முறை செய்யவா போறேன்..” என்றவன், மீண்டும் விளையாட ஆயத்தமாகவும், அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்..             

“சரி.. உன் ஃபிரெண்ட்டாவே இருக்கட்டும்.. எங்களுக்கு அவங்களைப் பத்திச் சொல்லு.. அவங்க யாரு? என்ன செய்யறாங்க? நம்ம கோர்ட்ல இருக்கறவங்களா? இல்ல வெளிய எங்கயாவது பார்த்து உனக்குப் பழக்கமா? எப்படி இருப்பாங்க? போட்டோ இருந்தா காட்டு..” என்று வரிசையாகக் கேட்க, கார்த்திக் மறுத்துப் பேச வருவதற்குள்,

“அதெல்லாம் சும்மா சமாளிக்காதே.. நீ அவங்க போட்டோ இல்லாம இருக்க மாட்டன்னு எங்களுக்கு கண்டிப்பாத் தெரியும்.. அடிக்கடி செல்ஃபி எடுக்கற ஆளு நீ.. அதுவும் இன்னைக்கே வந்ததுல இருந்து ரெண்டு போட்டோ எடுத்துட்ட.. அவங்க கூட எடுக்காமையா இருப்ப? ஏமாத்தாதே.. போட்டோவைக் காட்டு..” என்று தினேஷ் விடாப்பிடியாக நிற்க,

“ஆமா கார்த்திக்.. சொல்லு.. அவங்க பேரு என்ன? நீ சொல்லாம விட மாட்டோம்.. ஆதிரா.. அவங்க முழு பேரும் அது தானா?” என்று கேட்கவும், இதற்கு மேல் அவளைப் பற்றி சொல்லாமல் விட மாட்டார்கள் என்று உணர்ந்தவன், மீண்டும் தனது கையில் இருந்த மதுவை ஒரு சிப் அருந்திவிட்டு, அவர்களுக்கு சொல்லத் தயாரானான்.

“அவங்க பேரு ஆதிரை பாலகிருஷ்ணன்.. அவங்க ஒரு டான்சர்.. சாஃப்ட்வேர் எஞ்சினீரா வர்க் பண்ணிக்கிட்டு இருக்கா.. அவங்க ஊரு கோயம்பத்தூர் பக்கத்துல ஒரு கிராமம்..” என்ற கார்த்திக், அவர்களைப் பார்த்து தோளைக் குலுக்கி உதட்டைப் பிதுக்க, அனைவரும் அவனை கேள்வியாகப் பார்த்தனர்..

“அது தான் சொல்லிட்டேனே.. இன்னும் என்ன?” தனது கடுப்பை மறைத்துக் கொண்டு அவன் கேட்க,

“அவங்க ப்ரோஃபஷன்க்கும் உனக்கும் சம்பந்தமே இல்லையே.. நீ ஒரு க்ரிமினல் லாயர்.. அவங்க ஒரு டான்சர்.. சாஃப்ட்வேர்ல வேற இருக்காங்க.. எப்படி மீட் பண்ணினீங்க? ஏதாவது கேஸ் விஷயமா உன்னைப் பார்க்க வந்தாங்களா? அப்படியே பார்த்துப் பேசி க்ளோஸ் ஆகிட்டீங்களா? சொல்லு.. எங்க எப்படி மீட் பண்ணினீங்க?” அங்கிருந்த ஒருவர் ஆவலாகக் கேட்க, கார்த்திக் மறுப்பாக தலையசைத்தான்..

“சரி.. நீ க்ளோஸ் எல்லாம் ஆகல.. விடு.. நம்பறோம்.. அவங்க போட்டோ காட்டு.. ” என்று தினேஷ் கேட்க, அதற்கு மேல் விட மாட்டார்கள் என்று நினைத்தவன், தனது மொபைலை எடுத்து, ஆதிராவின் புகைப்படத்தைக் காட்டினான்.

கார்த்திக்கின் ஒரு பக்க தோளில் சாய்ந்தபடி ஆதிராவும், அவளது தலை மீது தலை சாய்த்தபடி, அவளது தோளோடு அணைத்தபடி  கார்த்திக்கும், இருந்த புகைப்படத்தைப் பார்த்தவர்கள் வாய்ப் பிளந்து நின்றனர்..     

அந்த பஸ் நிறுத்தத்தில்…

“ஹே.. ஆதிரா.. என்ன பஸ் மிஸ் பண்ணிட்டியா? இன்னைக்கு லேட் ஆகிடுச்சா?” பஸ் நிறுத்தத்தில் நின்றுக் கொண்டிருந்த ஆதிராவைப் பார்த்து அவளது தோழி சுனந்தா கேட்க,

“ஆமா.. கொஞ்சம் பென்டிங் வர்க் இருந்தது.. பஸ் கிளம்பறதுக்குள்ள முடிச்சிடலாம்ன்னு நினைச்சேன்.. ஆனா.. முடிச்சிட்டு வரதுக்குள்ள பஸ் போயிடுச்சு..” சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னவளைப் பார்த்தவள், சிரிக்கத் துவங்கினாள்.

“அது தான் உன் ஆளு இருக்காரு இல்ல.. போன் பண்ணி வரச் சொல்றது.. ஆபீஸ் டைம்ல கீழ வந்து நின்னுக்கிட்டு, ‘உன்கிட்ட பேசியே ஆகணும்ன்னு அடம் பண்ணி வரச் சொல்லுவாரு இல்ல.. இப்போ நீ கூப்பிடு.. அவரை வரச் சொல்லு..” அவளது அலுவலகத் தோழி சுனந்தா கேட்க, ஆதிரா உதட்டைப் பிதுக்கினாள்..

“நானும் ரெண்டு மூணு தடவ போன் பண்ணிட்டேன்.. அவரு பிஸியா இருக்காரு போல.. கால் கட் பண்றாரு.. கூட யாராவது இருப்பாங்க.. அது தான் போனை எடுக்கல.. அவருக்கு கொஞ்சம் பொசசிவ்னஸ் அதிகம்.. ப்ரெண்ட்ஸ் கூட இருப்பாரு.. இல்ல கேஸ் விஷயமா யாருகிட்டயாவது பேசிட்டு இருப்பார்.. அந்த நேரத்துல டிஸ்டர்ப் பண்ணினா அவருக்கு பிடிக்காது.. அதுவும் கூட அவங்க கூட வர்க் பண்ற கலீக்ஸ் இருந்துட்டா கண்டிப்பா எடுக்கவே மாட்டார்.. அது அவரோட க்ளயன்ட் இருக்கறதை விட மோசம்..” இயல்பாக அவள் சொல்ல,

“என்ன கேஸ் விஷயமா இருந்தா என்ன? இல்ல ப்ரெண்ட்ஸ் இருந்தா தான் என்ன? ஒரு ரெண்டு நிமிஷம் பேசி என்னன்னு கேட்டா என்ன? ரொம்பத் தான்மா உன் ஆளு போலீசா இருக்காரு.. அப்படி என்ன பொசசிவ்? கூடவே கட்டி வச்சிக்க சொல்லு.. இல்ல ஒரு புர்கா போட்டு அனுப்ப சொல்லு..” அந்தப் பெண் ஆதிராவை வம்பிற்கு இழுக்க,

“ஹஹாஹா.. இன்னும் கொஞ்ச நாள்ல அது செஞ்சாலும் செய்வார்.. அப்பறம் அவரு போலீஸ் இல்ல லாயர்..” என்று சிரித்தவள், தோளைக் குலுக்கி உதட்டைப் பிதுக்க, அவளது தோழி புரியாமல் பார்த்தாள்.  

“அவரு ரொம்ப ஜாலி டைப் எல்லாம் இல்ல.. கொஞ்சம் ரிசர்வ்ட் தான்.. என்னைத் தவிர அவரு எந்த பொண்ணு கிட்டயும் பேச மாட்டார்.. க்ளையன்ட்னா அதோட மட்டும் தான் அவங்க.. நான் தான் அவரோட விதிவிலக்கு.. அவருக்கு எல்லாம் நான் தான்..” என்றவள், கார்த்திக்கின் நினைவில் மெல்ல புன்னகைத்து,

“அவருக்கு எப்பவுமே தொழில் தான் முதன்மை.. ரொம்ப சின்சியர்.. அதுவும் க்ளையன்ட்ஸ் இருக்கும்போது அவரோட அம்மாவையே கால் பண்ணக் கூடாதுன்னு சொல்லி இருக்காருன்னா பார்த்துக்கோங்களேன்.. அப்பறம் நான் எல்லாம் எங்க? அதுவும் தவிர அவரோட ஃப்ரெண்ட்ஸ்.. கூட இருக்கறவங்க யாருக்கும் எங்க ரிலேஷன்ஷிப் தெரியாது.. அதுனால கூட எடுக்காம இருக்கலாம்.. தேவை இல்லாத கேலி கிண்டல் எதுக்குன்னு கூட அவர் நினைச்சு இருக்கலாம்..” அவள் பதில்,

“அப்படி எல்லாம் விடக் கூடாது ஆதிரா.. மறுபடியும் மறுபடியும் கால் பண்ணனும்.. அவங்க வர சோம்பேறித்தனம் பட்டுக்கிட்டு பிசின்னு சொல்லுவாங்க.. அதுவும் இது போல சமயத்துல கண்டிப்பா விடக் கூடாது.. கூப்பிட்டு வந்து அவங்களை கூட்டிட்டு போகச் சொல்லு..” என்று சொல்லவும், ஆதிரா மீண்டும் கார்த்திக்கிற்கு அழைத்தாள்.

அவன் போன் எடுக்காமல் போகவும், “அவரு இவ்வளவு தடவ போன் செய்யும் போது எடுக்கல.. அப்போ எடுக்க முடியாத நிலைமையில இருக்கார் போல.. இதுக்கும் மேல போன் பண்ணினா அவரு கடுப்பாகி திட்டுவாரு.. அவருக்கு கொஞ்சம் கோபம் அதிகம்.. அவரு பேசலைன்னா எனக்கு கஷ்டமா இருக்கும்.. அவருக்கும் கோவிச்சுக்கிட்டு பேசாம இருக்கறது கஷ்டமா இருக்கும்.. ஆனாலும் கெத்தா மெண்டைன் பண்ணுவார்..” என்றவள், கால் டாக்சிக்கு முயலத் துவங்கினாள்.

அன்று ஒரு முஹுர்த்த நாள் என்பதால் அவளுக்கு கேப் கிடைப்பதே மிகவும் அரிதாக இருந்தது.. பலர் அவளது ஏரியாவைக் கேட்டு, அந்த தொலைவிற்கு வர மறுத்து, அவளது புக்கிங்கை கேன்சல் செய்து கொண்டும் இருந்தனர்.. அவள் தொடர்ந்து முயன்றுக் கொண்டிருக்க, அவளது அருகில் இருந்த சுனந்தாவோ,  

“நான் என்னோட ஆளுக்கு போன் பண்ணிட்டேன்.. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவான்.. அவனுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.. அது தான் பஸ்ல கூட போகாம இங்க நின்னுட்டு இருக்கேன். உங்க ஆளு எப்படி இருப்பாங்க? அடிக்கடி வெளிய போவீங்களா? இப்போ சமீபமா எங்கயாவது வெளிய போனீங்களா? போட்டோ எடுத்தீங்களா? காட்டு..” என்று கேட்டு,

“நாங்க இப்போ போன சனிக்கிழமை மகாபல்லிபுரம் போனோம்..” என்றபடி தனது மொபைலை எடுத்துக் காட்ட, அதைப் பார்த்த ஆதிரா புன்னகைத்தாள்..

“அவருக்கு லாங் ட்ரிப் போறது எல்லாம் பிடிக்காது.. இங்க பக்கத்துல பீச்க்கு போவோம்.. இல்ல சினிமாவுக்கு போவோம்.. அங்கேயே வந்தாலே சில சமயம் என் தோள்ள சாஞ்சு தூங்கிப் போயிடுவார்.. அது தான் சொன்னேனே அவர் ஜாலி டைப் எல்லாம் இல்ல.. அவருக்கு ரொம்ப மனசு சரி இல்லாத பொழுதோ, இல்ல ரொம்ப ஸ்ட்ரெஸ் தாங்காத பொழுதோ, பீச்க்கு கூட்டிட்டு போவார்.. பீச்கிட்ட காரை நிறுத்திட்டு என்னைப் பாடச் சொல்லிக் கேட்பார்.. அது என்னவோ.. கொஞ்ச நேரத்துல அவருக்கு சரியா போயிடும்..” என்றவள், உதட்டைக் கடித்து, பார்வையைத் திருப்பிக் கொள்ள,

“ஹே.. என்ன அப்பறம் ரொமான்சா?” சுனந்தா அவளது முகத்தைத் திருப்பிக் கேட்க,

“சீ.. போங்க.. ரொம்ப எல்லாம் இல்ல.. என் பாதத்தை ஒரு மாதிரி அமுத்தி விட்டுக்கிட்டே பேசுவார்..  அது என்னவோ அவருக்கு என் கூட பேசும்போது அப்படி ஒரு பழக்கம்.. நான் பாடும்பொழுதும் அதே தான். அவருக்கு ரிலாக்ஸ் ஆன உடனே என் கைல கிஸ் பண்ணுவார்.. அவ்வளவு தான். அது அப்படி செஞ்சாருன்னா அவரு ரிலாக்ஸ் ஆகிட்டார்ன்னு அர்த்தம்..” என்று அவள் சொல்லவும், சுனந்தா அவளை விநோதமாகப் பார்க்க, அவளோ தனது கையில் இருந்த மொபைலில் பார்வையைப் பதித்து நின்றாள்..

அந்த நேரம் சுனந்தாவின் செல்போன் இசைக்க, அதை எடுத்துப் பேசியவள், “ஆதிரா.. அவன் வந்துட்டான்.. அதோ அங்க இருக்கான்.. நான் கிளம்பவா? உனக்கு ஏதாவது கேப் கிடைச்சதா?” சுனந்தா கவலையுடன் கேட்க,

“இதோ இப்போ ஒண்ணு புக் ஆகி இருக்கு.. நான் பார்த்துக்கறேன்.. அதோ அங்க தான் நம்ம ஆபீஸ் செக்யூரிட்டி இருக்காங்க இல்ல.. சோ பயம் இல்ல.. நீ என்ஜாய் பண்ணு..” என்றவளை திரும்பிப் பார்த்துக் கொண்டே சுனந்தா தனது காதலனுடன் வண்டியில் கிளம்பிச் சென்றாள்..

அவள் சென்ற சிறிது நேரத்தில், இதோ அதோ என்று ஒரு நிமிடம் என்கின்ற அளவிற்கு அருகே இருந்த கேப், திடீரென்று டிரைவர் கான்சல் செய்யவும், அவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.

“கார்த்திக்.. ப்ளீஸ் போன் அட்டென்ட் பண்ணுங்க.. நான் இங்க தனியா நிக்கறேன்.. எனக்கு பயமா இருக்கு..” அவளது முதல் மெசேஜ்..

“கார்த்திக்.. நான் பஸ்சை மிஸ் பண்ணிட்டேன்.. பஸ் ஸ்டாப்ல இருக்கேன்.. இங்க நான் மட்டும் தான் நின்னுட்டு இருக்கேன்.. ப்ளீஸ் என்னை வந்து கூட்டிக்கிட்டு போங்க.. கேப் எல்லாம் கேன்சல் ஆகுது.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு..” இரண்டாவது மெசேஜ்.

“கார்த்திக்.. ரொம்ப பிசியா இருக்கீங்களா? நீங்க வரக் கூட வேண்டாம்.. அட்லீஸ்ட் எனக்கு ஏதாவது இங்க இருந்து என்னோட வீட்டுக்கு போக ஏற்பாடு பண்ணுங்களேன்.. நேரமாக ஆக ரொம்ப பயமா இருக்கு..” மூன்றாவது மெசேஜ்..

“எனக்கு என்னவோ மனசுல ஏதோ அழுத்திப் பிடிக்கற மாதிரி இருக்கு கார்த்திக்.. ஏதோ தப்பா நடக்கப் போறது போல இருக்கு.. ஏதோ உள்ளுணர்வு அப்படி சொல்லுது. ஏன்னு தெரியல.. மனசுல ஒரு வித பயம்.. அது நான் தனியா இங்க நிக்கறதுனால கூட இருக்கலாம்.. ஆனா.. ஒரு அமானுஷ்யமா இருக்கற மாதிரி இருக்கு.. மழை வேற வரா மாதிரி இருக்கு.. எனக்கு இப்போ என்ன செய்யறதுன்னே தெரியல.. பேசாம நான் ஆபீஸ் உள்ளயே போய் உட்கார்ந்துடவா? ஏதாவது சொல்லுங்களேன்.. பயத்துல நெஞ்சே வெடிச்சிடும் போல இருக்கு..” என்ற வாய்ஸ் மெசேஜ் செய்துவிட்டு, அவன் அதற்கும் பதில் இல்லாமல் போகவும்,

“போங்க கார்த்திக்.. நான் உங்க மேல ரொம்ப கோபமா இருக்கேன்.. இனிமே நான் உங்க கிட்ட பேச மாட்டேன்.. நீங்களா என்னைத் தேடி வந்தாலும் உங்களைப் பார்க்கக் கூட மாட்டேன்.. போங்க…” கண்ணீர் குரலில் அவனுக்கு வாய்ஸ் மெசேஜ் செய்துவிட்டு, தனது தந்தைக்கு அழைத்தாள்..

ஆதிரா.. பாலகிருஷ்ணன்-சுதா தம்பதியினரின் ஒரே மகள்.. பலவருடங்கள் தவமாய் தவமிருந்து, கோவில் கோவிலாகச் சென்று, பல விரதங்கள், நேர்த்திக்கடன்கள் செய்த பின்பு பிறந்த மகள்.. அவள் பிறந்த பொழுது பாலகிருஷ்ணன் ஊருக்கே இனிப்பு வழங்கி ஒரு சிறு திருவிழா போலவே தனது மகளின் வரவை அறிவித்தார்.

அந்த ஊரில் இருந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றிய அவர், ஆதிராவின் முதல் நாள் பள்ளி செல்லும் அன்று, அவளை தனது ஸ்கூட்டரில் ஏற்றிக் கொண்டு, அந்த ஊரையே ஒருமுறை வளம் வந்த பிறகே பள்ளியில் இறக்கி விட்டார்..

அவள் வகுப்புச் செல்லாது அழுது கரைய, “சரி.. கிளாஸ்க்கு இப்போ போக வேண்டாம்.. அப்பா கூடவே ஸ்கூல ஒரு ரவுண்ட் சுத்திட்டு வரலாம்..” என்று அவளைச் சமாதானம் செய்த பிறகு, பள்ளியை ஒருமுறை வளம் வந்தவர், அவள் வகுப்பில் அமர்ந்ததும் தான் அன்றைய நாள் தனது பணியையே கவனிக்கச் சென்றார்..

அதே போலவே அவளது விருப்பம் தான் அவரது விருப்பமும்.. அவள் சாக்லேட் வேண்டுமென்றால் அது அன்றைய நாள் அவளது கையில் இருக்கும்.. புது வித பேனாவோ, பென்சிலோ, பாக்ஸ்சோ எதைப் பார்த்தாலும் அதைக் கேட்டால் அடுத்த நாள் அவள் பள்ளிக்குச் செல்லும்போது அது அவளது கையில் இருக்கும்..  

“இப்படியே செல்லம் கொடுத்தா என்ன செய்யறது? கொஞ்சமாவது கண்டிக்கணும்.. நீங்க அவ தாளத்துக்கு ரொம்ப ஆடறீங்க.. அவளை நான் ஆட வைக்கிறேன்..” சுதா அவரை கண்டித்தும் கூட, பாலகிருஷ்ணன் அதற்கு செவி சாய்த்தார் இல்லை..

தனது மகள் சொல்வதே வேதம்.. அவளது பிடித்தமே தனது பிடித்தம் என்று வாழ்ந்து வருபவர் அவளது தந்தை.. ஆதிராவின் அழகு அவரை பலமுறை கலங்கச் செய்யும்.. அவளை ஒரு துரும்பும் அண்டாமல் பாதுகாப்பதே தனது தலையாய வேலையாக செய்தவர்..

கண்ணாடியின் முன்பு அவள் அதிக நேரம் நின்றால் சுதாவிடம் இருந்து கரண்டி பறந்து வரும். நடனத்தில் அவளுக்கு இருந்த ஈடுபாட்டில் அவளை நடன வகுப்பிற்கும் சேர்த்து விட்டனர்..  அவளது ஒவ்வொரு அடியையும் இருவருமே கண்டு ரசித்தனர். அவளது வளர்ச்சியைக் கண்டு மகிழ்ந்து, மனம் நிறைந்து போயினர்..

அதே அன்பில், அவள் சென்னையில் வேலைக்கு சேர வேண்டும் என்று சொன்னதில், அவளைப் பிரிந்து இருக்க வேண்டுமே என்ற கவலை இருந்தாலும், அவளது எதிர்காலத்தை முடக்கக் கூடாது, அவளை ஒரு கூண்டுக்குள்ளேயே அடக்கக் கூடாது என்ற ஒரே எண்ணத்தில், அவளை சென்னையில் கிடைத்த வேலையில் சேர இருவருமே அனுமதித்தனர்..

பாலகிருஷ்ணன் ரிடையர் ஆன உடன் இங்கு வந்து அவளோடு இருக்க சம்மதிக்கவே, ஆதிராவும் சென்னைக்கு கிளம்பி வந்திருந்தாள்.. இப்பொழுதும் மாதத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு அவளுடன் வந்து தங்குவதை தம்பதியர் இருவருமே வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

அதே போலவே வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதி வாங்கிக் கொண்டு ஆதிராவும் ஏதாவது ஒரு வாரம், வார இறுதி நாட்களில் தனது வீட்டிற்கு செல்வது பழக்கமாக இருக்க, அவளைப் பிரிந்திருக்கும் துயரம் இருவருக்குமே அதிகம் தாக்காமல் போனது.. கார்த்திக்கை அவள் விரும்பும் விஷயம் அறிந்த பொழுதும் அதே அன்பு.. அவனை ஏற்றுக் கொள்ளவும் வைத்தது.       

தந்தையின் எண்ணங்கள் மனதினில் மோத, அவர் போனை எடுத்ததும், “ஹலோ அப்பா..” அவள் அழைக்க,

“என்னம்மா இந்த நேரத்துல போன் பண்ணி இருக்க? வீட்டுக்கு போயிட்டு இருக்கயா? வேலை ரொம்ப அதிகமாடா?” அவர் அன்பொழுகக் கேட்க,

“இல்லப்பா.. ஆபிஸ் வெளிய தான் இருக்கேன்.. இன்னைக்கு வேலை அதிகமா இருந்தது.. அது முடிச்சிட்டு வரதுக்குள்ள பஸ் போயிட்டு.. நான் இப்போ கேப் புக் பண்ணி வெயிட் பண்ணிட்டு இருக்கேன்..” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே,

‘ஹாய்.. ஆதி.. நீ என்ன இங்க நின்னுட்டு இருக்க?’ என்ற குரல் கேட்க,

‘ஆபிஸ் பஸ் போயிடுச்சு.. கேப்க்காக வெயிட் பண்றேன்.. நீங்க என்ன இந்தப் பக்கம்?’ என்ற ஆதிராவின் பதிலைத் தொடர்ந்து,

‘எங்க கூட வாயேன்.. நாங்க உன்னை டிராப் பண்ணிடறோம்.. நாங்களும் அந்தப் பக்கம் தானே போறோம்.. இடம் கூட இருக்கு..’ என்ற குரல் கேட்க, நிம்மதி கொண்டவளாக,

“அப்பா.. எனக்கு தெரிஞ்சவங்க வந்திருக்காங்க.. நான் அவங்க கூட வீட்டுக்குப் போறேன்.. மழை வேற வரா மாதிரி இருக்கு.. காலையில எப்பவும் போல பேசறேன்பா..” ஆதிரா சொல்லவும்,

“சரிடா.. பத்திரமா போ.. நல்லா தூங்கி எழுந்திரு.. தூங்கி எழுந்து கால் பண்ணிடு.. உன்னோட போனுக்காக நான் வெயிட் பண்ணிட்டு இருப்பேன்..” அவர் பதில் சொல்லவும்,

“சரிப்பா.. பை.. நல்லா தூங்குங்க.. குட் நைட்.. டேக் கேர்..” என்றபடி போனை வைத்தவள், அந்த காருக்குள் ஏறிக் கொள்ள, இடியுடன் கூடிய மழை பொழியத் துவங்கியது.

தொடரும்..

 

Leave a Reply

error: Content is protected !!