எங்கே எனது கவிதை – 10

எங்கே எனது கவிதை – 10

10 

சித்தார்த், மதி, கார்த்திக், மூவரும் ஆதிராவின் செல்போன் டவர் காட்டிய திசையை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்க, கார்த்திக்கிற்கு இதயம் பந்தயக் குதிரையின் வேகத்தில் துடித்துக் கொண்டிருந்தது..

கண்களை மூடிச் சாய்ந்தவனின் செல்போன் ஒலி ஒழுப்ப, சித்தார்த் அவனைப் பார்த்து புருவத்தை உயர்த்தினான்.. அவனைப் பார்த்துக் கொண்டே போனை எடுத்த கார்த்திக்,

“சொல்லு சரவணா.. வீட்டுக்கு வந்துட்டீங்களா?” என்று கேட்க,

“வந்துட்டோம்டா.. அவங்கள கார்ல உட்கார்த்தி வச்சிட்டு, சாவி எடுக்க மேல வந்தேன்.. சாவி எங்க இருக்கு?” விவரம் கேட்க,

“என்னோட கப்போர்ட்ல டிரால இருக்குடா.. ‘AK’ன்னு கீ-செயின் போட்டு இருக்கும் பாரு..” கார்த்திக் சொல்லவும், அதைத் தேடி எடுத்த சரவணன், அந்தக் கீசெயினில் ஒரு பக்கம் இருந்த அவர்களது புகைப்படத்தையும், இரு எழுத்துக்களும் சேர்ந்து இருப்பது போல ஒரு பக்கமும் இருப்பதைப் பார்த்து ஒரு பெருமூச்சுடன் அதை வருடிவிட்டு, அந்த டிராவில் இருவரும் சேர்ந்து எடுத்திருந்த புகைப்பட ஃப்ரேமையும் பார்த்து, தனது தலையிலேயே அடித்துக் கொண்டான்..   

“கார்த்திக்.. நீ ஆதிராவை இவ்வளவு லவ் பண்றியாடா? அவளோட அம்மா அப்பா ரெண்டு பேரும் உன் மேல மாப்பிள்ளைன்னு அவ்வளவு மரியாதையும் அன்பும் வச்சிருக்காங்கடா.. நீ அவங்கக்கிட்ட அப்படியா நடந்திருக்க? அவங்க கஷ்டத்தை விட, நீ எப்படி இருக்கன்னு தான் முதல்ல அவங்க என்னைக் கேட்டாங்க..” மெல்ல சரவணன் அந்த புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டே கார்த்திக்கிடம் சொல்ல,

“ஹ்ம்ம்.. அவங்க எப்படி இருக்காங்க? அவங்க மறக்காம மாத்திரை எல்லாம் எடுத்துக்கிட்டாங்க இல்ல.. இல்லன்னா சொல்லு அவங்க மருந்து ப்ரிஸ்க்ரிப்ஷன் அனுப்பறேன்.. கொஞ்சம் அவங்களுக்கு வாங்கிக் கொடுத்திரு.. அதே போல அவங்களுக்கு மதிய சாப்பாடு வாங்கிக் கொடுத்திரு சரவணா.. வேண்டாம்ன்னு சொன்னாலும் விடாம கொஞ்சம் கொடு.. அத்தைக்கு சாப்பிடலைன்னா மயக்கம் வந்திரும்..” கார்த்திக்கின் இந்த முகம் சரவணனுக்கு புதிது.. இந்த அளவு அன்பும் அக்கறையோடும் அவன் பேசுவான் என்று சற்றும் எதிர்பார்க்காதவன்,

“கார்த்திக்.. ஆதிராவை நீ பார்த்துக்கறதைப் பத்தி அத்தையும் மாமாவும் அவ்வளவு நிறைவா சொல்றாங்கடா.. அவளைக் காணும்ன்னா நீ தாங்க மாட்டேன்னு சொல்லிட்டு இருக்காங்க.. அப்போ எதுக்குடா நீ என்கிட்டே எல்லாம் அவளை கொஞ்சம் கூட மதிக்காதது போல பேசின?” என்று கேட்க, 

“ம்ப்ச்.. உன்னை வெறுப்பேத்தி பார்க்க எனக்கு பிடிக்கும்.. அதுவும் அவ விஷயத்துல நீ ரொம்ப அக்கறை காட்டினா எனக்கு உள்ள கொஞ்சம் கடுப்பா இருக்கும்.. அது தான்.. அவளைச் சொன்னா நீ கோபப்படுவ இல்ல.. அதுக்காகவே வெறுப்பேத்துவேன்.. சரி.. நேரமாச்சு.. அவங்களை வீட்டுக்கு கூட்டிட்டு போ.. அம்மா பார்த்தா ஏதாவது பேசிடப் போறாங்க.. இந்த நேரத்துல அது வேற பிரச்சனை வேண்டாம்.. காலையில என்கிட்டையே ஒரு மாதிரி பேசிட்டாங்க..” என்றவன், வேகமாக ஆதிராவின் மொபைலில் இருந்து தனக்கு அழைப்பு வந்ததும், அதைத் தொடர்ந்து தாங்கள் செல்வது பற்றியும் சொல்ல,

“ஒருவேளை ஆதிரா அவ இருக்கற இடம் சொல்ல கூப்பிட்டு இருப்பாளோ? கண்டிப்பா அங்க ஆதிரா இருப்பா தானே.. கண்டுப்பிடிச்சிடலாம் தானே..” ஆவலாக சரவணன் கேட்க,

“தெரியலடா.. இது நம்மளை அலைய வைக்கவும் இருக்கலாம்.. இல்ல.. ஒருவேளை அவளே அவ இருக்கற இடத்தைச் சொல்ல முடியாம நாம ட்ராக் பண்ணிடுவோம்ன்னு கால் பண்ணி இருந்தா.. அந்த வாய்ப்பை விடக் கூடாது இல்ல.. அது தான் போயிட்டு இருக்கோம்.. நான் அங்க போயிட்டு பேசறேன்.. நீ சீக்கிரம் கிளம்பு.. நேரமாகுது..” என்ற கார்த்திக், போனை அமர்த்த, சித்தார்த், அவனைப் பார்த்தான்..

அவனை கவனிக்காமல், கண்களை மூடி சீட்டில் சாய்ந்தவனின் மனது, ஆதிராவின் அருகாமைக்கு ஏங்கியது.. அப்பொழுது தான் நினைவு வந்தவனாக, அவசரமாக போனை எடுத்தவன், கூகிள் மேப்பைத் திறந்துப் பார்த்து,   

“சார்.. ஆதிராவோட செல்போன் சரியா இந்த இடத்துல இருக்கு.. அவ நெட் ஆன்ல தான் வச்சிருக்கா..” தனது செல்லில் அவளது லொகேஷனைக் காட்ட,

“வாவ்.. சூப்பர் கார்த்திக்.. நாம அங்க போறோம்.. என்ன ஏதுன்னு பார்க்கறோம்.. ஆதிரா இருந்தா அப்படியே தூக்கிட்டு வரோம்.. உங்களுக்கு கல்யாணம் செய்யறோம்.. அப்படியே நாங்க கல்யாண சாப்பாடு சாப்பிடறோம்.. கல்யாண சாப்பாடு சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு..” என்றபடி தனது வண்டியின் வேகத்தைக் கூட்ட, மெல்ல இதழ்களை விரித்து புன்னகைத்த கார்த்திக்கின் மனது, அவள் அந்த இடத்தில் இருக்க வேண்டுமே என்று வேண்டத் துவங்கியது.. அந்த இடம் நெருங்க நெருங்க கார்த்திக்கிற்கு இறங்கி ஓடி அவளை அள்ளி அணைக்கத் தூண்ட, தனது கையை இறுக கோர்த்துக் கொண்டு நிமிர்ந்து அமர்ந்தான்..  

ஆதிராவின் மொபைல் காட்டிய லொகேஷனை அடைந்த மூவரும் குழப்பமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.. அந்த இடம் மிகவும் அத்வானமாக இருக்க, அந்த இடத்தின் ஓரத்தில் இருந்த ஒரு மோட்டல் போன்ற இடத்தின் அருகே லாரிகள் நிற்க ஏதுவாக பெரிதாக இடம் ஒதுக்கப் பட்டிருந்தது.. அங்கிருந்த நான்கைந்து லாரிகளைப் பார்த்தவர்கள்,

“ஒருவேளை இங்க தான் எங்கயாவது அவ இருக்காளோ?” வேகமாக காரில் இருந்து இறங்கிய கார்த்திக், அந்த லாரியை நோக்கி ஓட்டமும் நடையுமாக சென்றான்.. காரை நிறுத்திவிட்டு மற்ற இருவரும் அவனைப் பின்தொடர்ந்து சென்றனர்..  

“கார்த்திக்.. நான் போன் பண்றேன்.. நீங்க அங்க தேடுங்க..” என்ற சித்தார்த் பின்னால் நடந்துக் கொண்டே, ஆதிராவிற்கு அழைத்தான்..       

இணையே என் உயிர் துணையே 
உன் இனிமையிலே நான் கரைவது ஏனடா.. 
யுகமாய் கை விரல் பிடித்து நாம் நடப்பது போல் 
நான் உணர்வது ஏனடா.. இணையே.. 

அந்த நிசப்த அமைதியைக் கிழித்துக் கொண்டு, எங்கோ கசிந்த அந்தப் பாடலைக் கேட்ட கார்த்திக்கின் கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது..    

“சார்.. அவ போன் அடிக்குது.. போன் இங்க தான் எங்கயோ இருக்கு.. எனக்கு கேட்குது சார்.. அவ போன் அடிக்குது..” அவனது கால்கள் வேகம் கூட்ட, கண்கள் கண்ணீரை உற்பத்திப் பண்ண, சித்தார்த்தைத் திரும்பிப் பார்த்தவன், சொல்லிக் கொண்டே முன்னேறினான்..

சித்தார்த்தும் மதியும் அந்த இடத்திற்கு ஓடி வந்து மீண்டும் அவளது செல்லிற்கு முயலத் துவங்கினர்.. ஒலி வந்த திசையை கூர்ந்து கவனித்த மதி, “கார்த்திக்… அந்த சைட்ல இருந்து வருது.. ஆனா.. எப்படி ரிங்க்டோன் சத்தமா இருக்கு? ஆதிரா இருந்தா மாட்டிக்க மாட்டாளா?” மதி பதட்டத்துடன் கேட்க, கார்த்திக், அவன் காட்டிய திசையில் ஓடினான்..

அங்கிருந்த ஒரு லாரியில் இருந்து தான் அந்த ஒலி கேட்டுக் கொண்டிருந்தது.. லாரியைப் பார்த்த கார்த்திக்கிற்கு பதட்டம் தொற்றிக் கொண்டது.. அந்த லாரியைத் தட்டியபடியே, “ஆதிரா.. கண்ணம்மா.. ஆதிரா..” என்று அழைக்க, அந்த லாரியில் இருந்து எந்த சத்தமும் இல்லாமல் போனது..

மீண்டும் சித்தார்த் முயற்சித்து அவனது அருகில் வந்து, அந்த லாரியின் கதவைத் தட்ட, “சார்.. இங்க தான் சார் கேட்குது..” என்ற கார்த்திக்கின் பதட்டமான குரலில், மதி, அந்த லாரியின் மீது ஏற முயன்றான்..

அப்பொழுது, அந்த மோட்டலில் இருந்து வந்த ஒரு நபர், “யாரு சார் அது? என்னோட லாரியில என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்று கேட்க, அவனைத் திரும்பிப் பார்த்த சித்தார்த்,

“இந்த லாரிய நாங்க செக் பண்ணனும்.. இது எங்க இருந்து வருது?” என்று கடுமையான குரலில் கேட்க, அவர்களைப் பார்த்த அந்த லாரி ஓட்டுனர், தனது லுங்கியை இறக்கி விட்டு,

“சார்.. நான் பாண்டிச்சேரில இருந்து மகாபலிபுரம் வழியா வரேன் சார். ஏன் சார் என்னாச்சு?” என்று குழப்பமாகக் கேட்க, அதற்குள் வண்டியில் ஏறி இருந்த மதி,

“இதோ இந்த போன் யாருது? இது எப்படி உங்க வண்டியில வந்தது?” என்று கேட்டுக் கொண்டே, தனது கர்சீப்பால் அந்த மொபைலை எடுத்து, அந்த பெட்டியின் மேல் இருந்த ஒரு கவரில் போட்டுவிட்டு, லாரியில் அடுக்கி இருந்த பெட்டிகளைப் பார்வையிடத் துவங்கினான்..

“சார்.. என்ன போன் சார் அது? யாருது? எனக்குத் தெரியாது சார்? அது எப்படி சார் இங்க வந்தது?” பதட்டமான குரலில் கூறிக் கொண்டே, அவன் இருவரையும் பார்க்க, அதற்குள் சித்தார்த், அருகில் இருந்த காவல் நிலைய உதவியையும் நாடி இருந்தான்..

“உண்மையை சொல்லிட்டா நல்லது.. இல்ல ரொம்ப கஷ்டம்.. உண்மையைச் சொல்லிடு..” சித்தார்த் உறும, அந்த லாரியின் ஓட்டுனர் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தான்..

அதற்குள் சித்தார்த் அழைத்திருந்த அந்த காவல் நிலைய அதிகாரிகளும் வந்துவிட, சித்தார்த் அவர்களிடம் விஷயத்தைக் கூறினான்..

“அங்க ஒரு ரெண்டு மூணு பெட்டி ரொம்ப பெருசா இருக்கு.. டேப் போட்டு ஒட்டி இருக்கு..” அந்தப் பெட்டியின் அருகில் மெல்ல நகர்ந்துக் கொண்டே கார்த்திக், சித்தார்த்திடம் சொல்ல,  

“சார்… எல்லாமே மரச்சாமான்க தான்  சார்.. வேணா பார்த்துக்கோங்க சார்.. எனக்கு இந்த செல்போன் எப்படி வந்ததுன்னு தெரியாது சார்..” என்று அவன் சொல்லவும், சித்தார்த்தின் உதவிக்கு வந்த காவலர்கள், அந்த லாரியை சோதனையிடத் துவங்கினர்..

அதில் அடுக்கப்பட்டிருந்த ஒவ்வொரு பெட்டியாக இறக்கி, அதைப் பிரித்து அவர்கள் சோதனை செய்து முடிக்க, அதில் ஆதிராவைக் காணாது கார்த்திக்கிற்கு ஏமாற்றமே மிஞ்சியது..

அவன் ஏமாற்றத்துடன் மதியைப் பார்க்க, “யாரோ போன மட்டும் இந்த லாரியில தூக்கிப் போட்டுட்டு போயிருக்காங்க.. கண்டிப்பா ஆதிராவைக் கண்டுப்பிடிச்சிடலாம் கார்த்திக்.. ப்ளீஸ் தைரியமா இருங்க..” என்று தேற்றிவிட்டு, அந்த லாரி ஓட்டுனரின் லைசன்ஸ், மற்றும் ஆதார் அட்டை, அவனது குடும்ப உறுபினர்களின் எண்கள், அவனது எண், அவன் வேலை செய்த அந்த லாரி சர்விசின் எண்,     என்று அனைத்தையும் வாங்கிக் கொண்ட சித்தார்த், அந்த லாரி சர்விஸ் அலுவலகத்திற்குத் தொடர்புக் கொண்டு விஷயத்தைக் கூறி,

“நான் எப்போ கூப்பிட்டாலும் வண்டியும், இந்த டிரைவரும் எங்களுக்கு வரணும்.. இல்ல.. அப்பறம் உங்க மேலயும் கேஸ் போட வேண்டியதா போயிடும்..” என்று சித்தார்த் மிரட்ட, அந்த லாரி உரிமையாளர் அதற்கு ஒப்புக்கொண்டார்..

போனை வைத்துவிட்டு, “இப்போ எதுவரை போறீங்க?” என்று டிரைவரிடம் கேட்க,

“நான் இங்க ஹோசூர் வரை போறேன் சார்.. போயிட்டு திரும்ப ஊருக்கு தான் சார் போறேன்.. நீங்க எப்போ கூப்பிட்டாலும் ஸ்டேஷன் வரேன் சார்.. என் பிள்ளைக் குட்டிங்க மேல சத்தியமா சொல்றேன்.. இந்த போன் எப்படி வந்ததுன்னே தெரியல..” பணிவுடன் அவன் சொல்லவும்,

“அப்பறம் வரலைன்னு வை.. நீ தான் கடத்தினன்னு கேஸ் விழும் சொல்லிட்டேன்..” என்று எச்சரித்த சித்தார்த், கார்த்திக்கின் தோளில் தட்டிக் கொடுத்தான்..

அந்த லாரியை முழுவதுமாக அலசி ஆராய்ந்தும் எந்த வித ஆதாரமும் சிக்காமல் போகவும், மதி அவனிடம் கொடுத்திருந்த ஆதிராவின் மொபைலை கையில் வைத்துக் கொண்டு, வருடிக் கொண்டிருந்தான்..

அவர்களுக்கு உதவிக்கு வந்த காவலர்களுக்கு நன்றி தெரிவித்து அனுப்பிவிட்டு, கார்த்திக்கைப் பார்க்க, அந்த மொபைலே அவனது ஆதாரம் என்பது போல கார்த்திக் அதை இறுக பிடித்துக் கொண்டு ஏமாற்றத்துடன் நின்றுக் கொண்டிருந்தான்.

“ப்ரதர்.. அது ஆதிராவோட போன் தான்.. ஆதிரா இல்ல..” சித்தார்த் அவனை சாதானப்படுத்துவது போல கேலி செய்ய, சோபையாக புன்னகைத்த கார்த்திக், அந்த கவரில் இருந்து போனை எடுத்துத் திறந்துப் பார்த்தான்..

அதில் இருந்த வாட்சப்பில் கார்த்திக்கிற்கு அவள் பதிவு செய்திருந்த வாய்ஸ் மெசேஜ் ஒன்று அனுப்பாமல் அப்படியே இருக்கவும், குழப்பத்துடன் அதை தனக்கு அனுப்பி விட்டு, ஆதிராவின் மொபைலை மீண்டும் பதிவிசாக கவரில் மீண்டும் போட்டவன், அதைத் தனது மொபைலில் இயக்கிப் பார்த்தான்.. அவனது குழப்பமான முகத்தைப் பார்த்த மதியும், சித்தார்த்தும் அவனது அருகில் வர, ஆதிராவின் பதிவு ஒலிக்கத் துவங்கியது..

‘டேய் தடியா.. பார்ல பார்ட்டி பண்ணிக்கிட்டு என் போனை எடுக்க மாட்டேங்கறியா? நாளைக்கு சினிமாவுக்கு வந்து பிக்கப் பண்ணும்போது இருக்கு உனக்கு கச்சேரி.. ஓவரா தண்ணி அடிச்சு வைக்காதே.. எனக்கு உன் கண்ணைப் பார்த்தாலே எந்த அளவுக்கு தண்ணி அடிச்சிருக்கன்னு தெரிஞ்சிடும்.. அப்படி மட்டும் ஓவரா போயிருந்தது.. பாடுன்னு நீ கேட்கும்போது எல்லாம் வாயிலையே நாலு போடுவேன்.. பாவக்காய அரைச்சு வாயில ஊத்துவேன்..’ அவசரமாக பேசப்பட்ட கிசுகிசுப்பான அவளது குரலைத் தொடர்ந்து,

‘எல்லா கேப்பும் கேன்சல் ஆகிடுச்சு அப்பு.. ரொம்ப லேட் ஆகிடுச்சு இன்னைக்கு.. அதனால எங்க ஃப்ளா.. ஏன் இந்தப் பக்கம் போறீங்க? எங்கப் போறீங்க? ம்ம்.. ம்ம்..’ என்ற சத்தம் கேட்க, அதுவரை அந்த துன்பத்திலும் அவளது குரலைக் கேட்டு இதழில் புன்னகையுடன் நின்றுக் கொண்டிருந்த கார்த்திக், அவளது இறுதி வாக்கியத்தைக் கேட்டு, உடல் விறைக்க, மதியையும் சித்தார்த்தையும் பார்த்தான்..

பட்டென்று அவனது கையில் இருந்த கார்த்திக்கின் மொபைலைப் பிடுங்கிய சித்தார்த், அந்த மொபைலைப் பார்க்க, அது லாக் ஆகி இருந்தது.. பிடுங்கிய வேகத்தில் அவனது விரல் பட்டு அந்த மொபைல் லாக் ஆகி இருக்க,

“கார்த்திக்.. இதை ஓபன் பண்ணுங்க.. எனக்கு அந்த வாய்ஸ் நோட்சை மறுபடியும் கேட்கணும்..” அவசரமாக சித்தார்த் கேட்கவும், கார்த்திக் மொபைலை வாங்க,  

“அந்த வாய்ஸ் எதுல இருந்தது?” மதி அவசரமாகக் கேட்கவும்,

“வாட்ஸ்சப்ல தான் மதி.. ஆதிராவோட மொபைல்ல ரெக்கார்ட் பண்ணி அப்படியே லாக் ஆகி இருந்திருக்கு.. அதைப் பார்த்து நான் இப்போ தான் எனக்கு சென்ட் பண்ணிக்கிட்டேன்.. அவ கடைசியா ரிக்கார்டு பண்ணின வாய்ஸ்ன்னு கேட்க நினைச்சேன்.. ஆனா.. இது இப்போ ஒரு எவிடன்சா ஆகிடுச்சு.. மொபைல் ஏதாவது ஆனாலும் சென்ட் பண்ணிட்டா சர்வர்ல சேவ் ஆகி இருக்கும்..” என்ற கார்த்திக், தனது மொபைலை ஓபன் செய்து சித்தார்த்திடம் கொடுத்துவிட்டு, தனது கையில் இருந்த கவரில் இருந்து ஆதிராவின் போனை எடுத்து, அதில் முதலில் இருந்த அந்த பேட்டேர்ன் லாக்கை வரைய, அதைப் பார்த்த மதி,

“என்ன டிசைன் அது?” என்று கேட்க,

“”எங்க ரெண்டு பேரோட முதல் எழுத்து தான்..” என்ற கார்த்திக், அடுத்து வந்த ரேகைப் பதிவை செய்து ஓபன் செய்யவும், சித்தார்த் அவனை விழிகள் விரியப் பார்த்தான்..

அவனது பார்வையை உணர்ந்தவன் போல, “எங்க ரெண்டு பேரோட பேட்டர்னும் அது தான்.. ரெண்டு பேரோட போன்லையும் ரெண்டு பேரோட ஃபிங்கர் பிரிண்ட்டையும் போட்டு வச்சிருக்கோம்..” என்றபடியே ஆதிராவின் போனை சித்தார்த்திடம் நீட்டி,

“இதுல லாஸ்ட் மெசேஜ் தான் சித்தார்த்.. அவ ஏனோ அனுப்பல.. நான் இப்போ தான் அவ குரலைக் கேட்கணும்னு அனுப்பினேன்.. இதுல அவ யாரோட வரேன்னு சொல்லத் தொடங்கும் பொழுது அவ டைவர்ட் ஆகி இருக்கா.. அவ கத்தத் தொடங்கவும் சரியா அவ வாயை மூடி இருக்காங்க.. அவளை அப்போ மயக்கப்படுத்தி இருக்கணும்..” என்ற கார்த்திக், மற்ற இருவரையும் கேள்வியாகப் பார்க்க, சித்தார்த் மீண்டும் மீண்டும் அந்த பதிவையே ஓட்டிப் பார்த்தான்..

“அவ லாஸ்ட்ல ‘ஃபிளாட்’ன்னு இல்ல சொல்ல வரா?” மதி கேட்க,

“ஆமா மதி.. அவ எங்க ‘ஃப்ளா’ன்னு சொல்ல வரா.. எங்க ஃப்ளாட்டா? அப்போ அவங்க ஃப்ளாட்ல இருந்த யாரோ கூட தான் அவ வந்திருக்காளா?” கார்த்திக் படபடவென்று கேட்க,

“அப்படி தான இருக்கு.. அப்போ நாம முதல்ல அண்ணாவ அங்கப் போய் வேவு பார்க்கச் சொல்லலாம்.. நாமளும் சீக்கிரம் அங்கப் போய் தேடலாம்.. கண்டிப்பா ஆதிராவைக் கண்டுப்பிடிச்சிடலாம்..” என்று நம்பிக்கைத் தந்த மதி, அதற்கு மேல் நொடியும் தாமதிக்காமல், வேகமாக காரில் ஏறி, அதியமானுக்கு விஷயத்தைச் சொல்லிவிட்டு, ஆதிராவின் ஃப்ளாட்டை நோக்கி வேகமாகச் சென்றனர்.. அவர்கள் கடந்த அந்த இரண்டு மணி நேரத்திற்கும் மேல் இருந்த தொலைவை மதி அதி வேகமாக கடக்கத் துவங்கினான்..

ஆதிராவின் மொபைலை கார்த்திக்கின் கையில் தந்த சித்தார்த், “வேற ஏதாவது க்ளு இருக்கான்னு பாருங்களேன்.. ஆதிராவுக்கே தெரியாம ஏதாவது விட்டு இருக்கலாம்.. இதோ இப்போ அவ வாய்ஸ் மெசேஜ் போல..” எனவும்,

“அவங்க ஃப்ளாட்ல அவளுக்கு யாரு அவ்வளவு பழக்கம்ன்னு நானும் யோசிச்சிட்டு இருக்கேன்.. யாருமே மைன்ட்ல வர மாட்டேங்கிறாங்க..” கார்த்திக் சத்தமாகவே யோசிக்க,

“அது நேத்து அடிச்ச தண்ணியோட எப்ஃபெக்ட்டா இருக்கும்..” சித்தார்த் வம்பு வளர்க்க, கார்த்திக் அவனை பரிதாபமாகப் பார்க்க,

“ஏன் கார்த்திக்.. நேத்து செம தண்ணியா? ஆதிரா அதை வேற கண்டுப்பிடிச்சிட்டாங்களே.. இன்னைக்கு அடி வேற தரேன்னு சொல்லி இருக்காங்க.. இன்னைக்கு அடி வாங்கி இருக்க வேண்டியது.. ஜஸ்ட் மிஸ்ஸு.. ஆமா.. இதுக்கும் முன்ன அடி வாங்கி இருக்கீங்களா?” என்று அவனை கேலி செய்த மதி,

“ஒருவேளை அடி வாங்கிடுவன்னே பயந்து அவளை எங்கயாவது கடத்திட்டீங்களா கார்த்திக்?” என்று தொடர, கார்த்திக் மெல்லிதாக புன்னகைத்தான்..

“அவகிட்ட அடி வாங்கறதும் சரி.. மிதி வாங்கறதும் சரி.. சந்தோஷமா நான் வாங்குவேன்.. ஏன்னா அத செஞ்சிட்டு அவ எனக்கு காட்டற அன்பு அதை விட பல மடங்கு இருக்கும்..” என்றவன், குலுங்கி அழத் துவங்கினான்..

சித்தார்த் தட்டிக் கொடுக்க, கண்களைத் துடைத்துக் கொண்டவன், “நானும் அதியமான் சாரும் அவ ஃபிளாட்டுக்குப் போனோமே.. அங்க எந்த காரும் நாம சிசிடிவில பார்த்தது போல இல்லையே.. எதுக்கு நமக்கு இப்போ கால் பண்ணினாங்க? அவ சொல்ல வரும்போது அவ வாய மூடி இருக்காங்கன்னா.. அப்போ அவ சொல்றதை கேட்டு இருக்கணும் இல்லையா? ஆனா.. எதுக்கு அந்த மெசேஜ் டெலீட் பண்ணாம இருக்கணும்? நம்மளை சுத்த விட்டு பார்க்கறாங்களா? இல்ல அவங்களால செய்ய முடியலையா? இல்ல அவங்க அதை செய்ய மறந்துட்டாங்களா? இல்ல ஆதிரா இந்த மெசேஜ் ரெக்கார்ட் பண்ணினது அவங்களுக்கேத் தெரியலையா?” என்று கார்த்திக் சித்தார்த்தைப் பார்த்து தனது சந்தேகங்களைக் கேட்டுக் கொண்டே வர, சித்தார்த்தும் மதியும் யோசிக்கத் துவங்கினர்..

“கார்த்திக்.. மத்த எல்லாம் என்னால இப்போ எதுவுமே யோசிக்க முடியல.. ஆனா.. ஒண்ணு மட்டும் க்ளியரா சொல்லலாம் கார்த்திக்.. கண்டிப்பா நல்லா தெரிஞ்ச வண்டிங்கறதால தான் அவ உங்களுக்கு இவ்வளவு ரிலாக்ஸ்டா மெசேஜ் அனுப்பி இருக்காங்க. இவ மெசேஜ் போட்டதை அவங்க கவனிச்சு இருக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன்.. ஏன்னா இவங்க கேள்வி கேட்கும்போது தான் அவங்க வாயை பொத்தி இருக்காங்க..” என்ற சித்தார்த்,

“அவங்க நம்மளை சுத்தல்ல விடறதா நினைச்சுக்கிட்டு இப்போ மாட்டி இருக்காங்க..” என்று கூறிய மதி, வண்டியின் வேகத்தை மேலும் கூட்டினான்…

அப்பொழுது அவளது செல்போனை பார்த்துக்கொண்டே வந்த கார்த்திக், அதில் கடைசியாக பதிவாகி இருந்த ஒரு மங்கலான, எடுக்கும்பொழுது அசைந்து கலங்கி இருந்த ஒரு புகைப்படத்தைப் பார்த்து, குழப்பத்துடன்,

“சித்தார்த்.. இங்கப் பாருங்க.” என்றபடி, அவளது போனை  சித்தார்த்திடம் நீட்டினான்.. 

Leave a Reply

error: Content is protected !!