எங்கே எனது கவிதை – 11

close-up-hand-groom-couple-lovers-show-wear-wedding-ring-bride-holding-hands-together-bed-sprinkle-rose-petals-represents-145977347-12ed793a

எங்கே எனது கவிதை – 11

11                 

ஆதிராவின் மொபைலைப் பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக்கிற்கு, அந்த மொபைலின் இறுதியில் பதிவாகி இருந்த புகைப்படத்தைப் பார்த்ததும் அதிர்ச்சியாக இருந்தது.. ஒன்று ஆதிரா அந்த புகைப்படத்தை எடுக்கும் பொழுது அந்த மனிதன் அசைந்திருக்க வேண்டும்.. அல்லது.. அசையும் பொழுது கைப்பட்டு அவளுக்கேத் தெரியாமல், ஆதிரா கேமரா பட்டனை க்ளிக் செய்திருக்க வேண்டும்.. எப்படியோ ஒரு உருவம் அவளது கேமராவில் பதிவாகி இருக்கிறது.. அதை வைத்து ஏதாவது செய்ய முடியுமா என்று பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டவன், யோசனையுடன் சித்தார்த்திடம் நீட்டினான்..

“சித்தார்த்.. இங்கப் பாருங்க.. இதுல ஒரு போட்டோ இருக்கு.. அது அவ தெரிஞ்சோ, தெரியாமையோ எடுத்திருக்கணும்.. ஆனா.. போட்டோ க்ளியரா இல்ல..” என்றபடியே சித்தார்த்திடம் போனை நீட்ட,

அந்த போனை வாங்கிக் கொண்டே, “இது ஆதிராவோட போன் தான் ஒத்துக்கறேன்.. அதுக்காக அவ போனையே பார்த்துக்கிட்டு இருக்காதீங்க.. பார்த்து போன் கரைஞ்சிடப் போகுது..” என்று கேலி செய்ய, கார்த்திக் அவனைப் பார்த்து முறைத்தான்..

இத்தனை நேரம் கூடவே இருந்ததில் இருவரிடமும் மெல்லிய நட்பு உண்டாகி இருக்க, “இருங்க.. ஆதிரா கிடைக்கட்டும்.. அவகிட்ட நீங்க என்னை கொடுமைப்படுத்தினீங்கன்னு சொல்றேன்..” சிறு பிள்ளை போல கார்த்திக் சொல்லவும், மதி அவனைப் பார்த்து சிரித்தான்..

“அடடா வக்கீலு சாஃப்ட்வேர் சப்போர்ட் தேடறாரே.” என்று கேலி செய்ய,

“அவ எனக்காக தான் பேசுவா..” என்றவனின் முகம் கசங்க, சித்தார்த் அவனைத் தட்டிக் கொடுத்தான்.    

“அது அப்படி இல்ல கார்த்திக்.. இந்த போன்ல ரொம்ப உங்க கை ரேகையை பதிக்காதீங்க.. உங்களது தவிர அந்த கடத்தல்காரனது இருக்கான்னு பார்க்கணும்.. ஒரு வக்கீலாக அது உங்களுக்கும் தெரியும் தானே லாயர் சார்..” சித்தார்த்தின் கேலியைத் தொடர்ந்து, கார்த்திக் யோசனைக்குத் தாவினான்..

“இந்த முகம் மங்களா அசஞ்சது போல இருந்தாலும் எனக்கு இந்த முகம் எங்கயோ பார்த்தது போல இருக்கு..” என்ற யோசனையுடன் கார்த்திக் சொல்ல, அதியமானிடம் இருந்து கால் வந்தது..

“இன்னும் கொஞ்ச நேரத்துல நாங்க வந்துடறோம் சார்.. பக்கம் வந்துட்டோம்..” கார்த்திக் பதில் சொல்ல,

“சரி வாங்க கார்த்திக்.. நானும் இங்க வந்துட்டேன்.. இங்க ஃப்ளாட்ல எல்லார் வீட்டுலையும் விசாரிக்க, மதி வரச் சொல்லி இருப்பான் போல.. அவங்க விசாரிச்சிட்டு இருக்காங்க.. அந்தப் பொண்ணு வித்யா கொஞ்சம் டென்ஷனா இருக்கா.. நீ பேசறியா?” என்று கேட்க,

“இல்ல சார்.. நான் நேர்ல வந்து பேசறேன்..” என்ற கார்த்திக், தனக்கு பரிச்சயம் ஆன முகங்களை எல்லாம் யோசிக்கத் துவங்கினான்..

மதியும் வண்டியை புயல் வேகத்தில் ஓட்ட, விரைவிலேயே அவர்கள் ஆதிராவின் குடியிருப்பின் அருகில் வந்திருந்தனர்.. அங்கு மூன்று காவல்துறை அதிகாரிகள் அந்த ப்ளாட் மக்களிடம் விசாரித்துக் கொண்டிருந்தனர்..

கார்த்திக் அதியமானிடம் சென்றதும் ஆதிராவின் செல்போனைக் காட்ட, “இதுல ஏதாவது க்ளூ கிடைச்சதா? ஏதாவது தெரிஞ்சதா?” அதியமான் கேட்க,

தலையை ஒப்புதலாக அசைத்த கார்த்திக், “சார்.. இதுல ஒரு போட்டோ இருக்கு..” என்றபடி, அந்த போட்டோவைக் காட்ட, அதைப் பார்த்த அதியமானும், யோசனையுடன் அவனைப் பார்த்தான்.. இருவரையும் பார்த்த வித்யா, கார்த்திக் காட்டிய போட்டோவைப் பார்த்து யோசனையுடன் இருவரையும் பார்க்க, 

“உங்களுக்கும் இவனை எங்கயாவது பார்த்தது போல இருக்கா? எனக்கும் இந்த முகம் கலங்கி இருந்தாலும் பரிச்சயம் போல இருக்கு..” கார்த்திக் யோசனையுடன் கேட்க, மதியும் சித்தார்த்தும் அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.. அப்பொழுது அவர்கள் அருகில் வந்த ஒரு காவலர்,

“ஒரு வீடு காலியா இருக்கு சார்.. மத்தபடி எல்லாம் விசாரிச்சிட்டோம்.. அந்த வீட்டைப் பத்தியும் விசாரிச்சோம்.. திடீர்ன்னு தான் வீட்டில இருந்த பொருட்கள் எல்லாம் எடுத்திருக்காங்க.. அவங்க ரொம்ப எல்லாம் மத்தவங்க கிட்ட பழக மாட்டாங்களாம்.. அதுனால சொல்லிட்டுக் கூட போகலைன்னு சொன்னாங்க..” என்று சொல்லவும், கார்த்திக்கும் அதியமானும் ஒரே சேர, ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர்.

“சார்..” கார்த்திக் இழுக்க,

“கார்த்திக்.. இவன் அவன் இல்ல..” அதியமான் கேட்கவும், இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த சித்தார்த்,

“யாரு.. உங்களுக்குத் தெரியுமா? யாருன்னு கண்டுப்பிடிச்சிட்டீங்களா?” என்று கேட்கவும், கார்த்திக் நடந்ததை சொல்லத் துவங்க, அங்கு அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த வித்யா,

“யாரு கார்த்திக்? யாரைச் சொல்றீங்க? அந்த குட்டி பாப்பா இருக்குமே அந்த வீடா?” என்று கேட்க,

“அந்த வீடான்னு தெரியல வித்யா.. நாங்க கிளம்பும்போது ஒரு பாப்பா வந்ததே.. அந்த அம்மா தான்.. நாங்க மாடிக்கு ஓடவும் அவங்களும் குழந்தையைத் தூக்கிக்கிட்டு மாடிக்கு மூச்சிரைக்க ஓடி வந்தாங்க..” கார்த்திக் அவளிடம் சொல்லிக்கொண்டே,

“இதோ இந்த இடத்துல தான் அந்தக் கார் இருந்தது.. நாங்க உள்ள வரும்போது அவன் காரை வாஷ் பண்ணிட்டு இருந்தான்..” அதைச் சொல்லச் சொல்ல கார்த்திக்கிற்கு படபடப்பு அதிகரிக்க, அந்த கார் நின்றுக் கொண்டிருந்த இடத்தைப் பார்த்த மதி, தலையில் அடித்துக் கொண்டான்..

“இந்தக் கார்ல அளவுக்கு அதிகமா சேறு இருந்து இருக்குப் பாரு.. வாஷ் பண்ணிட்டு ஒழுங்கா தள்ளி விடாம விட்டு இருந்திருக்கான்.. கண்டிப்பா இது நார்மல் மழையில வந்த சேறு இல்ல.. எதோ ப்ளான் இருக்கு.. இப்போ ஏதோ அவசரத்துல இந்த இடத்தை க்ளீன் செஞ்சது போல இருக்கு..” என்றவன்,

“நீங்க எங்க மாடிக்கு போனீங்க? உங்களுக்கு எப்படி அங்க போகணும்னு தோணிச்சு? உங்களுக்கு அங்க ஒரு ரூம் ஏற்கனவே இருக்கறது தெரியுமா?” என்று மதி கேட்கவும்,

“இல்ல மதி.. எனக்கு அங்க இருக்கறது தெரியாது..” கார்த்திக் சொல்லத் துவங்க,

“அது தான் சொல்றானே மதி.. கிளம்பி வெளியில் வந்துட்ட அப்பறம் அவனுக்கு என்னவோ மாடியில உறுத்திக்கிட்டே இருந்துச்சு.. மேல மேல பார்த்துட்டு இருந்தவன் பட்டுன்னு மேல ஓடிப்போனான்.. அங்க ஒரு ரூம் இருக்கு மதி.. அந்த ரூம்ல கண்டா முண்டா சமான் எல்லாம் போட்டு வச்சிருக்காங்க.. இந்த ஃப்ளாட்ல இருக்கற எல்லாருமே தேவை இல்லாத சாமான் எல்லாம் போட்டு வைப்பாங்களாம்..

அங்க போய் என்னவோ யோசிச்சுக்கிட்டே கார்த்திக் அங்க தேடிக்கிட்டு இருக்கும் போதே அந்த ஆளும், அந்த குழந்தையோட அந்த அம்மாவும் ஓடி வந்துட்டாங்க.. அங்க பெரிய பெரிய பெட்டி எல்லாம் இருக்கு..” என்ற அதியமானைப் பார்த்த வித்யா,

“அந்த லேடி ரொம்ப சாஃப்ட் தானே கார்த்திக்.. அவங்களா இப்படி செஞ்சு இருப்பாங்க? எப்படி அப்படி சொல்றீங்க? என்னால நம்பவே முடியல.. எப்போ எங்களைப் பார்த்தாலும் நல்லா பேசுவாங்க.. நாங்க தனியா இருக்கோம்ன்னு சில சமயம் ஏதாவது சாப்பிட செஞ்சு கொண்டு வருவாங்க.. நீங்க கீழ பார்த்தது அவங்க ஹஸ்பெண்ட்டா தான் இருக்கணும்.. ஏன்னா இங்க இருக்கற இன்னொரு ஃபேமிலில அவங்க ஹஸ்பண்ட்டும் வெளிநாட்டுல இருக்காங்க..” என்று விவரம் சொன்னவள், நினைவு வந்தவளாக,    

“கார்த்திக்.. அந்த ஆளு ஆதிராவைப் பார்த்தா சிரிப்பார்.. சில சமயம் பேச ட்ரை பண்ணுவாரு.. அவ கவனிக்காதது போலவே வேகமா வீட்டுக்கு வந்திருவா.. ஆனா.. அது சாதாரணமா எதிர்ப்படும் போது சிரிக்கிறது, ஹாய் சொல்றது போல தானே..” வித்யா சொல்லிக் கொண்டே போக, இப்பொழுது மேலே ஓடிச் செல்வது மதியின் வேலையாகிப் போயிற்று..

மதி வேகமாக படிகளில் ஓட, சித்தார்த் அவனைத் தொடர்ந்து ஓட, அனைவருமே அவர்களைப் பின்தொடர்ந்து ஓடினர். மேலே சென்றதும், அங்கிருந்த இடத்தைக் காட்டிய கார்த்திக், “இந்த ரூம்ல தான் மதி நான் உள்ள போய் பார்த்துட்டு இருந்தேன்.. அப்போ தான் அந்த ஆளு வேகமா வந்து இங்க என்ன பார்க்கறீங்கன்னு கேட்டான்..” என்றபடியே உள்ளே ஒரு இடத்திற்குச் சென்ற கார்த்திக் பதட்டத்துடன்,

“இந்த இடத்துல ஒரு பெரிய பெட்டி இருந்தது.. மதி.. இங்க இருந்த பெட்டியைக் காணும்.. நாங்க வந்த பொழுது இங்க இருந்தது.. ஒரு அட்டைப் பெட்டி.. பெரிய டிவி வைக்கிற போல இருந்தது..” கார்த்திக்கின் கண்களில் கண்ணீர் வழிய, அவனது உடல் நடுங்கத் துவங்கியது..

அந்த பெட்டி இருந்த இடம் இப்பொழுது காலியாக இருக்கவும், அந்த இடத்தை கோபமாகத் தட்டியவன், “நான் இங்க இன்னும் கொஞ்சம் பொறுப்பா தேடி இருக்கணும்.. அவளை இப்படி கோட்டை விட்டுட்டேனே.. அவளை நான் பார்த்தே இருக்கக் கூடாது.. அவளை பத்திரமா பார்த்துக்கறேன்னு இப்படி கோட்டை விட்டு நிக்கறேன்..” என்று தலையில் அடித்துக் கொள்ள, அதியமானும் திகைத்து நின்றான்.. இவ்வளவு அருகில் வந்து இருவரும் அந்த ஆளின் பேச்சில், அந்த இடத்தை முழுவதுமாய் ஆராயாமல் சென்றது அவனுக்கும் வலித்தது..

கார்த்திக் ஒருபுறம் புலம்பிக் கொண்டிருக்க, மதியும் சித்தார்த்தும் அந்த இடத்தை சல்லடை போட்டு தேடத் துவங்கினர்.. அப்பொழுது அந்த இடத்தின் ஓரத்தில், ஒரு அட்டைப் பெட்டியின் இடுக்கில், ஒரு துணி கிடக்க, மதி, அதைச் சென்று எடுத்தான்..  

அந்தத் துணியை வித்யா அதிர்ச்சியுடன் பார்க்க, “கார்த்திக்.. எழுந்திருங்க.. இங்க இந்த துப்பட்டாவ பாருங்க..” அங்கிருந்த துணியை எடுத்துக் காட்ட, அதைப் பார்த்த கார்த்திக், அவசரமாக அதை தனது கையில் வாங்கி, கண்களை மறைத்த கண்ணீரை துடைத்துக் கொண்டு பார்த்தான்..

அந்த துப்பட்டா, முதன்முதலாக கார்த்திக் அவளுக்கு வாங்கித் தந்த சுடிதாரினுடயது.. ஆதிராவிற்கு அந்த துப்பட்டாவின் வேலைப்பாடு மிகவும் பிடித்துவிட, அதற்காகவே அவள் அந்த சுடிதாரை எடுத்தது நினைவு வரவும், மதியிடம் கார்த்திக் தலையசைத்தான்..

“இது அவளோட துப்பட்டா தான்..” என்ற கார்த்திக்கிடம் இருந்து அதை வாங்கிக் கொண்ட மதி,

“சித்தார்த்.. மோப்ப நாயை வரச் சொல்லி இருக்கேன்.. கண்டிப்பா அவங்க போன இடத்தை கண்டு பிடிச்சிடலாம்..” என்ற மதியின் கையில் இருந்த துப்பட்டாவைப் பார்த்த வித்யாவும்,

“இது.. ஆதிராவுது தான்.. இது எப்படி இங்க வந்தது? அப்போ ஆதிரா இங்க தான் இருந்தாளா? அவளை இங்க தான் பிடிச்சு வச்சிருந்தாங்களா? ஹையோ அப்போ ஒரு நாள் ஃபுல்லா அவ இங்க தான் இருந்திருக்காளா? அடப்பாவிங்களா..” அதிர்ச்சியாக அவள் கேட்க, கார்த்திக் மண்டையை உருட்டினான்..

“நான் இங்கவரை வந்துட்டு அவளை காப்பாத்தாம போயிருக்கேனே.. இதுக்கு என்ன சொல்றது?” என்று கார்த்திக் மனமாறாமல் புலம்ப, மதி கோரி இருந்த மோப்ப நாய் அங்கு வந்தது.. ஆதிராவின் துப்பட்டாவை மதி அந்த அதிகாரியிடம் கொடுக்க, அவர் மோப்ப நாயின் மூக்கின் அருகில் அதை எடுத்துச் சென்றார்..

சிறிது நேரத்தில் அந்த பெட்டி இருந்த இடத்திற்குச் சென்ற அந்த நாய், நேராக கீழே படியிறங்கி சென்று, அந்த கேட்டின் அருகில் நின்றது..

அதோடு அது எங்கும் செல்லாமல் அங்கும் இங்கும் நில்லாமல் அங்கேயே சுற்றிக் கொண்டிருக்க, மதியும் சித்தார்த்தும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்..

“இங்கயோட நிக்குது சார்.. இதுக்கும் மேல எதுவும் கண்டுப்பிடிக்க முடியலையே.. நாய் போகாம இங்கயே நிக்குதே..” என்று அந்த அதிகாரி சொல்லவும், மதியும் சித்தார்த்தும் குழம்பி நின்றனர்..

குழம்பி நின்றது சில நிமிடங்களே.. அடுத்த நிமிடம் மதி, அந்த குடியிருப்பின் சங்கக் கட்டிடத்தில் இருந்தான்.. ஆதிராவைக் கடத்திய ஆள் இருந்த வீட்டு ஓனரைப் பற்றி விசாரிக்கத் துவங்கினர்.. அந்த சங்கத்திடம் இருந்து அந்த வீட்டு ஓனரின் நம்பரைப் வாங்கியவன், தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு, அவர்களிடம் பேசத் துவங்கினான்..

“சார்.. உங்க வீட்டை வாடகைக்கு விட்டு இருந்தீங்க இல்ல.. அவங்க காண்டாக்ட் நம்பர் இருந்தா தாங்க.. நீங்க அவங்களுக்கு அக்ரீமென்ட் போடும்போது ஏதாவது அடையாள அட்டை வாங்கி இருக்கீங்களா? இருந்தா அதை எனக்கு அனுப்பி விடுங்க..” மதி சொல்லவும், அந்த வீட்டு ஓனர் பதறத் துவங்கினார்..

“சார்.. என்ன சார் ஆச்சு? அந்த ஆதவன் எனக்கு ரெண்டு மாசமா வாடகை தரவே இல்ல சார்.. கேட்டா வியாபார நஷ்டம்.. குழந்தைக்கு உடம்பு சரி இல்ல.. ரொம்ப மெடிக்கல் செலவு ஆச்சு சேர்த்துக் கொடுத்துடறேன்னு சொன்னான் சார்.. இப்போ நீங்க சொல்லித் தான் அவன் வீடு காலி பண்ணிட்டான்னே எனக்குத் தெரியும்..” அவர் படப்படக்க,

“அந்த ஃபிராடு ஆதவன் உங்களையும் ஏமாத்திட்டானா? சரி. எனக்கு அவனோட ஐடெண்டிடி ஏதாவது வாங்கி இருந்தா அனுப்பி விடுங்க.. இல்ல அக்ரிமெண்ட்ல அட்ரஸ் தந்திருப்பானே..” என்று மதி கேட்கவும்,

“இருக்கு சார்.. அவனோட வோட்டர் ஐடியும், ஆதார் கார்டும் வாங்கிட்டு தான் அக்ரீமென்ட் போட்டேன்.. அக்ரீமென்ட்ல அவனோட ஊருல இருக்கற வீட்டு அட்ரஸ் தந்திருக்கான்.. இதோ உடனே அனுப்பறேன் சார்..” என்றவர், உடனே அவன் கேட்டதையும் அனுப்பி வைத்தார்..

அதைப் பெற்றுக் கொண்ட மதி, உடனடியாக அந்த முகவரி இருக்கும் அந்த காவல் நிலையத்திற்குத் தொடர்புக் கொண்டு, அந்த முகவரியில் இருக்கும் அந்த ஆதவனை கைது செய்யுமாறு கேட்க, அவர்களும் அவனுடைய ஆதார் அட்டையில் இருந்த புகைப்படத்தை வாங்கிக் கொண்டு, உடனே கைது செய்வதாக ஒப்புக் கொண்டனர்..

அந்த நேரம், அங்கிருந்த அந்த சங்க அலுவலகத்தின் கட்டிடத்தின் உள்ளே அமர்ந்து, முந்தின இரவில் இருந்து பதிவாகி இருந்த சிசிடிவி பதிவுகளைப் பார்த்துக் கொண்டிருந்தான்..

இரவு இரண்டு மணியைக் கடந்த நிலையில், ஆதவன் முன்னால் வந்து காரை நிறுத்தி சிசிடிவியை நிமிர்ந்துப் பார்த்துவிட்டு, எங்கோ நகர்ந்துச் செல்ல, அதற்குள் அங்கு வந்த ஒரு பெரிய காரில் இருந்து நான்கு பேர் ஒரு பெரிய பெட்டியை இறக்கி வைத்தனர்.. அத்துடன் அந்த சிசிடிவி முடிவடைந்து இருக்க, சித்தார்த் தலையில் கை வைத்துக் கொண்டான்..

“வேற சிசிடிவி இருக்கா இங்க? இதை எப்படி அவன் ஆஃப் பண்ணினான்? அப்போ செக்யூரிட்டி எங்க போனார்?” என்று சித்தார்த் கோபமாகக் கேட்க,

“சார்.. காலைல பால்காரன் வந்து பார்க்கும்போது செக்யூரிட்டி இந்த ரூம் வெளிய மயங்கி விழுந்து இருக்கார் சார்.. அவருக்கு லோ பிபி இருக்கு.. அதுல மயங்கிட்டார் போல.. அவருக்கு உடம்பும் சரி இல்லாம இப்போ தான் சரி ஆகி வந்தார்.. ரொம்ப வீக்கா இருக்கார்..” அந்த சங்க அதிகாரி கூறவும், சித்தார்த் அந்த அதிகாரியை புரியாமல் பார்த்தான்..

“அவர் இப்போ எங்க இருக்கார்?” சித்தார்த்தின் கேள்வியில்,

“அவர காலையில ஹாஸ்பிடல் போய் ட்ரிப்ஸ் போட்டுட்டு வீட்டுல ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கார் சார்.. காலையில நான் தான் வர வேண்டாம்ன்னு சொன்னேன்.. எனக்கு அப்போ அந்தப் பொண்ணை காணும்ங்கற விஷயம் தெரியாது..” என்று காவலருக்கான பதிலைக் கூறியவர்,

“சார்.. இங்க இந்த வீட்டுல உள்ளவங்களுக்கு எல்லாம் தெரியாம ஒரு ரெண்டு கேமரா இருக்கு சார்.. அது யாருக்கும் தெரியாது.. இந்த ஃப்ளாட் ஓனர்ஸ்க்கு மட்டுமே தெரிஞ்ச விஷயம்.. குடி இருக்கறவங்களுக்கு கூட தெரியாது.. திருட வரவங்களுக்கு தெரியாம இருக்கவே சுவரோட சுவரா பதிச்சு வச்சிருக்கு சார்..” என்றவர், தனது மொபைலில் இருந்த அந்த ரெக்கார்டிங்கை காட்டத் துவங்கினார்..

“வாவ்.. செம ஐடியா..” சித்தார்த் பாராட்ட,

“இந்த ஃப்ளாட் ஓனர்ஸ்ல என்னைத் தவிர, எல்லாருமே வெளிநாட்டுலயும், வெளிய இடங்களையும் தான் இருக்காங்க.. இதுல நிறைய வேலைக்கு போற பேச்சிலர் பொண்ணுங்களும் பசங்களும் தான் தங்கி இருக்காங்க.. பின்னால ஏதாவது பிரச்சனை வந்துச்சுன்னா எல்லாமே என்னால பார்த்துக்க முடியாதுங்கறதுனால, இது போல நாங்க எல்லாம் பேசி ஏற்பாடு செய்தோம்..” என்றவரின் விளக்கத்தை மெச்சியவன், அந்த பதிவான விடியோவைப் பார்க்கத் துவங்கினான்..

அதில் அந்த ஆதவனுடன் வந்த ஆட்கள் தூக்கிக்கொண்டு சென்ற பெட்டியில் இருந்து ஆதிராவின் கை தெரிய, ஆதவன் கோபத்துடன் அவளது கையை உள்ளே தள்ளுவது தெரிந்தது.. அந்த சமயம் சித்தார்த்தைத் தேடி வந்த மதி, கார்த்திக், அதியமான் மற்றும் வித்யா அனைவருமே அதிர்ந்து போயினர். அந்தக் காட்சியைப் பார்த்த சங்கத் தலைவரும் விதிர்விதிர்த்து போனார்..

“சார்… என்ன சார் இது? ஏன் சார் இவன் இப்படி பண்றான்?” என்று அவர் திகைப்புடன் கேட்க, உதட்டைப் பிதுக்கிய சித்தார்த்,

“நம்பி கார்ல ஏறின பாவம்..” என்று நொந்துக் கொண்ட சித்தார்த், கார்த்திக்கைப் பார்க்க, அவனது முகம் இறுகிக் கிடந்தது.. அதற்குள் தடய ஆய்வாளர்கள் வந்து, அந்த அறையில் கை ரேகை போன்றவற்றை பதிவு செய்ய, கார்த்திக் அனைத்தையும் கையாளாகாத்தனத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்..

வித்யா கண்ணீரில் கரைந்துக் கொண்டிருக்க, ஆதிராவின் பெற்றோர்களை கார்த்திக்கின் வீட்டில் விட்டுவிட்டு, கார்த்திக்கிடம் விஷயம் கேட்டு அங்கு வந்த சரவணன், கார்த்திக்கைப் பார்த்து திகைத்துப் போனான்..

பிறந்ததில் இருந்து இந்த இருபத்தி ஐந்து  வருடங்களாக அவன் பார்க்காத கார்த்திக்கின் முகங்களை எல்லாம் காலையில் இருந்து அவன் காட்டிக் கொண்டிருக்க சரவணன் திகைத்தே போனான்.. அதே போலவே அவன் சென்றதில் இருந்து ஆதிராவின் பெற்றவர்கள், அவனைப் பற்றி கவலைக் கொண்டது தான் அதிகமாக தெரிய, அவனுக்கு வியப்பாக இருந்தது..

அதை விட, இப்பொழுது அவனது முகம் காட்டும் இறுக்கமும், அவனுக்கு புதிதாக இருந்தது.. சரவணன் அவனது தோளைத் தொட, அவனைத் திரும்பிப் பார்த்தவன், “அவங்க சாப்பிட்டாங்களா? அவங்க எப்படி இருக்காங்க?” என்று கேட்க,

“அவங்க உன்னைப் பத்தி தான் கவலைப் படறாங்க..” சரவணனின் பதிலில், தலையை அசைத்தவன்,

“அவளை நேரா இங்க தான் கொண்டு வந்திருக்கானுங்க.. அதுவும் ஒரு அட்டைப் பெட்டியில அடைச்சு..” மனமாறாமல் புலம்பியவனின் தோளை சரவணன் தட்ட, அந்த நேரம் மதியின் குரலில் இருவரின் கவனமும் கலைந்தது..

Leave a Reply

error: Content is protected !!