எங்கே எனது கவிதை – 13

cute-lovely-couple-facebook-dps-5f40b997

எங்கே எனது கவிதை – 13

13         

 அன்று..

கார்த்திக்கின் பிறந்தநாள்.. ஆதிராவின் வீட்டில் பேசி, சம்மதம் வாங்கி, தங்களது காதலை பரிமாறிக் கொண்டப் பிறகு வரும் முதல் பிறந்தநாள்.. கார்த்திக் கோயம்பத்தூர் சென்று வந்த இரண்டு வாரத்தில் அவனது பிறந்தநாள் வரவும், அதுவும் வார இறுதி நாட்களில் வேறு வந்திருக்க, கார்த்திக் ஆதிராவை சந்திக்கச் சென்றான்..

அழகாக புடவையை உடுத்திக் கொண்டு, பின்னலிட்ட தலையில் பூச்சூடி, அவனைச் சந்திக்கவென்று அவள் அழகாக தன்னை அழகுப்படுத்திக் கொண்டு கிளம்ப, வித்யா அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்..

“மேடம் எக்ஸ்ட்ரா அழகா எங்க போகப் போறீங்க? சினிமாவா? பீச்க்கா?” அவள் கிண்டலடிக்க,

“முதல்ல கோவிலுக்கு போயிட்டு அப்பறம் அவர் எங்க போகலாம்ன்னு சொல்றாரோ அங்க போகப் போறேன்.. ஏன்?” மீண்டும் ஒருமுறை கண்ணாடியில் தன்னை சரிப்பார்த்துக் கொண்டே அவள் கேட்க,

“இல்ல.. நீ இப்படி போனா அவர் பர்த்டே ட்ரீட் கேட்டுற போறார்..” என்று கிண்டல் செய்ய, அவளைத் திரும்பிப் பார்த்தவள்,

“ஹான்.. இன்னைக்கு பர்த்டே அவருக்கா? எனக்கா? அவர் தானே எனக்கு ட்ரீட் தரணும்?” அப்பாவியாக ஆதிரா கேட்க, வித்யா அவளது கன்னத்தைத் தட்டினாள்..

“நீ இன்னும் சின்னப் பொண்ணாவே இருக்க ஆதி..” நக்கலாக அவள் சொல்ல, ஆதிரா அவளைக் குழப்பத்துடன் பார்த்தாள்.

“நீங்க தான் கல்யாணம் ஆகி காதல் கிளிகளா சுத்திட்டு இருக்கறவங்களாச்சே.. சொல்லுங்க தெரிஞ்சிக்கறேன்..” ஆதிராவும் பதிலுக்கு அவளது காலை வாரினாள்.   

“நான் எதுக்கும்மா சொல்லித் தரனும்? அவரே உனக்கு எல்லாம் சொல்லித் தருவார்.. நீ இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க.. அவரோட பர்த்டே வேற.. ட்ரீட் கேட்டுற போறார்.. நீ வேற பர்த்டே அன்னிக்கு எது கேட்டாலும் மறுக்காம செய்வியே.. அது தான்.. ஒரு சின்ன எச்சரிக்கை.. வேற ஒண்ணும் இல்ல.. கல்யாணத்துக்கு முன்ன கொஞ்சம் ஜாக்கிரதையா இருன்னு தான் சொல்றேன்..” வித்யாவின் கேலியில் அவள் சொல்ல வருவது ஓரளவு புரிய, முகம் சிவந்தவள்,

“அதெல்லாம் கேட்க மாட்டார்.. நீ ரொம்ப மோசம் வித்யா.. இப்படித் தான் கற்பனை செய்வியா?” என்று அவளுக்கு ஒரு அடியை வைக்க, அந்த நேரம் அவளது செல்போன் குரல் கொடுத்தது..

உன்னுடன் நடக்கையிலே

என் நிழல் வண்ணமாய் மாறியதே

முன்னே முன்னே நம் நிழல்கள்

ஒன்றாய் ஒன்றாய் கலக்கிறதே

நீ பேசும் வார்த்தை சேர்த்து வைத்து வாசிக்கிறேன்

உன் சுவாசகாற்று மூச்சில் வாங்கி சுவாசிக்கிறேன்

“பாட்டெல்லாம் பலமா இருக்கு..” என்று வித்யாவின் கேலியைத் தொடர்ந்து, அவளை முறைத்துக் கொண்டே போனை எடுத்தவள்,

“இதோ ரெடியா தான் இருக்கேன்.. வரேன்..” என்றபடி வெளியில் கிளம்ப,

“ஜாக்கிரதை ஆதிரா.. இப்போ விளையாட்டுக்குச் சொல்லல.. அவசரப்பட்டுடாதே.. இப்போ தான் நீ அவர் கூடப் பழகத் துவங்கி இருக்க..” வித்யா எச்சரிக்க, தலையசைத்தவள், யோசனையுடன் கேட்டைக் கடந்து வெளியில் வந்தாள்..

புன்னகை முகத்துடன் கார்த்திக் காரில் அவளுக்காக காத்திருக்க, அவனைப் பார்த்து புன்னகைத்தவள், “ஹாப்பி பர்த்டே கார்த்திக்..” என்றபடி வெளியிலேயே நிற்க, கார்த்திக் அவளைப் பார்த்து விசில் அடித்தான்..

அவனது பார்வை அவளது தலை முதல் கால் வரை ஒருமுறை வளம் வந்து, மீண்டும் ரசனையுடன் அவன் விசிலடித்து, “உள்ள வா..” என்று கார்க் கதவைத் திறந்து விட,

“பைக் எடுத்துட்டு வரலையா? இன்னைக்கு க்ளைமேட் கூட நல்லா தானே இருக்கு..” தயக்கத்துடன் அவள் கேட்க, புருவத்தை உயர்த்தி மேலே அண்ணாந்துப் பார்த்தவன், அவளை அதிசயமாகப் பார்த்துக் கொண்டே,  

“ஓ.. அப்போ எனக்கு மட்டும் ஏன் வெய்யிலா இருக்கு? என்னால பைக்ல வர முடியவே இல்ல.. ரொம்ப வேர்க்குது.. அதுவும் தவிர என் பேபி டால் வேற வெயில்ல போனா வாடிப் போயிருவான்னு உள்ள மனசு சொல்லிச்சு.. அதுக்கு தான் காரை எடுத்துட்டு வந்தேன்.. உள்ள வந்து உட்கார்ந்து கதை பேசேன்.. நானும் பக்கத்துல இருந்து ரசிப்பேன் தானே..” என்று கார்த்திக் அழைக்க, தயக்கத்துடன் ஆதிரா காரில் ஏறி அமர்ந்து, ஒரு பையை பின் பக்கம் வைக்க, கார்த்திக் கேள்வியாகப் பார்த்தவன், அவளது தயக்கத்தை கவனித்தான்..

அவளது தயக்கத்தை கவனித்தவன், யோசனையுடன் காரில் ஏறி அமர, காரில் ஏறியதும், அவனை நிமிர்ந்துப் பார்க்காமல், மீண்டும் அவனுக்கு கைக் குலுக்கி ஒரு வாழ்த்து சொல்லாமல், “நாம எங்கப் போகப் போறோம்?” என்று கேட்க, அவளது முகத்தைப் பார்த்த கார்த்திக்கிற்கு ஏமாற்றமே மிஞ்சுவதாய்..

அவளது யோசனை படிந்த முகத்தை கவனித்தபடி, “கொஞ்சம் அப்படியே ஈசிஆர்ல டிரைவ் போயிட்டு.. மதியம் ஒரு ரிசார்ட்க்கு போய் சாப்பிட்டு, கொஞ்ச நேரம் பீச்ல டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு, சாப்பிட்டு வரலாம்.. நீ கூட நேத்து நைட் பேசும்போது பீச்க்கு போகணும்ன்னு சொன்னியே.. அதுனால இப்படி ப்ளான் பண்ணிட்டேன்மா..” அவன் சொல்லி முடிப்பதற்குள்,  

“ரிசார்ட்டுக்கா?” என்று ஆதிரா இழுக்க, வண்டியை இயக்கிக் கொண்டே,

“ஏன் அதுக்கு என்ன? நீ வேற ஏதாவது ப்ளான் வச்சிருக்கியா? உனக்கு எங்கயாவது போகனுமா? இல்ல இதுவே ஓகே வா? இல்ல உனக்கு ஏதாவது சினிமா பார்க்கணும்ன்னா கொஞ்சம் மாத்தி ப்ளான் பண்ணலாம்..” கார்த்திக் கேட்கவும்,

“ரிசார்ட் எல்லாம் எதுக்கு கார்த்திக்.. வேற எங்கயாவது..” என்று சொல்லிவிட்டு அவள் யோசனையுடன் இழுக்க,

“வேற எங்க போகணும்ன்னா எங்கன்னு சொல்லு போகலாம்..” கார்த்திக் ஊக்கவும்,

“முதல்ல கோவிலுக்கு போகலாம்..”

“கோவிலுக்கா?” கார்த்திக் இழுக்க,

“ஆமா கார்த்திக்.. இன்னைக்கு உங்க பிறந்தநாள் இல்ல..” அவள் சொல்லி முடிப்பதற்குள்,

“ஓ.. அது நியாபகம் இருக்கா?” நக்கலாக அவன் கேட்க, அந்த நக்கலை புரிந்துக் கொள்ளும் மனநிலையில் இல்லாதவள்,

“ஆமா.. அதனால தான் கோவிலுக்கு போகலாம்ன்னு சொல்றேன்.. அங்க போயிட்டு அப்பறம் இன்னொரு கோவிலுக்கு போகலாம். அப்பறம்…”

“இன்னொரு கோவிலுக்கா?” கார்த்திக் இடைப்புகுந்து கேட்க,

“ம்ம்.. ஆமா.. நாம ரெண்டு பேரும் சேர்ந்து முதன்முதலா அவுட்டிங் போறோம்.. அப்போ கோவில் போனா தானே நல்லது..” என்று ஆதிரா மண்டையை உருட்டி, விளக்கம் வேறு சொல்லவும், கார்த்திக் அவளை விநோதமாகப் பார்த்துவிட்டு, காரை ஓரம் கட்டி நிறுத்தினான்..

அவனது பார்வை தன் மேல் படியவும், அவனது முகத்தைப் பார்த்து, கண்களைத் தழைத்துக் கொண்டு, விரல்களைப் பிரித்துக் கோர்த்து, புடவை நுனியை பிடித்து இழுத்துக் கொண்டு அவள் இருந்த விதமே அவளது குழப்ப மனநிலையைச் சொல்ல,  

“ஆதிரா..” அவனது குரலில் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்..

அவளது விழிகள் அவனது முகத்தில் படியாமல் இருக்கவும், “இப்போ என்ன டென்ஷன் உனக்கு?” கார்த்திக் கேட்க,

“நான் இதுவரை யார் கூடவும் கார்ல எல்லாம் தனியா போனது இல்ல.. அதுவும் ரிசார்ட்டுக்கு…” என்று இழுக்க,  

“என் கூட தானே வரம்மா? நான் உன்னை கல்யாணம் செய்துக்கப் போறவன் தானே.. உனக்கு என்னைப் பிடிச்சிருக்கு இல்ல.. அப்பறம் என்ன? என் கூட வரதுல என்ன டென்ஷன் உனக்கு? நான் என்ன உனக்கு புது ஆளா?” அவனது மனதில் பல கேள்விகள் முளைக்க, யோசித்துக் கொண்டே அவன் கேட்கவும்,   

“இல்ல கார்த்திக்.. அது அப்படி இல்ல.. ஆனா.. ஒரு மாதிரி இருக்கு.. எனக்கு சொல்லத் தெரியல.. ஒரு மாதிரி டென்ஷனா இருக்கு..” என்றவள்,

தயக்கத்துடன், “ரிசார்ட் எல்லாம் எதுக்கு கார்த்திக்? சும்மா இங்க பக்கத்துலையே ஏதாவது ஒரு ஹோட்டல்க்கு போகலாமே..” மீண்டும் கேட்கவும், கார்த்திக் அவளை முறைக்கத் துவங்கினான்..

அவன் முறைக்கவும், அவனது அமைதியில் நிமிர்ந்து அவனது முகத்தைப் பார்த்தவளின் கண்கள் கலங்க, அவளது கன்னங்களை தனது கைகளில் தாங்கியவன், “இப்போ எதுக்கு கண்ணு கலங்குது?” என்று கேட்கவும், ஆதிராவின் கண்களில் கண்ணீர் இறங்கத் துவங்கியது.

“ரிசார்ட் எல்லாம் வேண்டாம் கார்த்திக்.. என்னை நம்பி தான் எங்க அப்பா அம்மா இங்க அனுப்பி இருக்காங்க.. உங்க மேலயும் அவங்க நிறைய நம்பிக்கை வச்சிருக்காங்க..” அவள் உதடு துடிக்கச் சொல்லவும், அவளது கண்களைத் துடைத்தவன்,

“ஏன் ஆதிரா என்னைப் பத்தி உன் மனசுல இவ்வளவு சீப்பான எண்ணம் தான் இருக்கா?” என்ன முயன்றும் கார்த்திக்கின் குரல் சற்று கடினமாகவே ஒலிக்க, ஆதிரா உதடு துடிக்க அவனை நிமிர்ந்துப் பார்த்தாள்..

“இல்ல எனக்கு புரியல.. ரிசார்ட்ன்னா அதுக்கு மட்டும் தான் போவாங்களா? ஏன் உங்க ஆபிஸ்ல எல்லாம் டீம் லஞ்ச்க்கு ரிசார்ட் தானே போவீங்க? அப்பறம் ஏன் ரிசார்ட்ன்னா இவ்வளவு தப்பான எண்ணம்?” என்று அவன் கேட்க, ஆதிரா அவனை திகைப்புடன் பார்த்தாள்..  

“நான் என்னவோ தனியா நிம்மதியா எந்த டிஸ்டர்பன்ஸ் இல்லாம உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணலாம்.. நிறைய கதை பேசலாம். இப்படி எல்லாம் கற்பனை பண்ணிக்கிட்டு வந்தேன்.. இங்க நேர்ல ஒரு பர்த்டே விஷ்கே பஞ்சமா இருக்கு.. உனக்கு என் கூட வர இஷ்டம் இல்லன்னா சொல்லு.. நான் உன்னை வீட்டுல கொண்டு விட்டுடறேன்.. இவ்வளவு டென்ஷன்ல நீ என் கூட வர வேண்டாம்..” மனதில் அடிப்பட்டவனாய் கேட்க, அவனது கேள்வியில் ஆதிராவின் கண்ணீர் அதிகரிக்க,  

தன்னை நிதானித்துக் கொண்டவன், “முதல்ல என் கண்ணைப் பாரு..” அவளது நாடியைப் பிடித்து நிமிர்த்திச் சொல்லவும், ஆதிரா மெல்ல நிமிர்ந்து அவனது கண்களைப் பார்க்க,

அவளது கண்களைத் துடைத்துவிட்டு, “இன்னைக்கு சொல்றேன் கேட்டுக்கோ கண்ணம்மா.. உன்னோட சுய மரியாதைக்கும், உன்னோட தன்மானத்துக்கும் எந்த வித பாதிப்பும் வர விட மாட்டேன்.. உன்னை விரல் நீட்டி யாரும் பேசும்படியாவும் வைக்க மாட்டேன்.. உங்க அப்பா உன்னை என் கையில பிடிச்சுக் கொடுத்து, நீ எனக்கு சொந்தமான பின்ன தான் எதுவா இருந்தாலும்ன்னு நான் தெளிவா இருக்கேன்.. ஏன்னா அது தான் நான் உனக்கு கொடுக்கற மாரியாதை.. உன்னைப் பெத்தவங்களுக்கு கொடுக்கற மாரியாதையும் கூட..

இப்போ கூட  நான் ரிசார்ட்டுக்கு போகலாம்ன்னு சொன்னது கூட பீச்சை நிம்மதியா ரசிக்கத் தான்.. வேற எந்த எண்ணமும் எனக்கு இல்ல.. உனக்கு வேண்டாம்ன்னா எனக்கும் வேண்டாம்.. நாம வேற நல்ல ஹோட்டல்க்கு கூட போகலாம்.. இல்ல இப்படியே வீட்டுல கொண்டுப் போய் விடறேன்..” என்றவன், அவள் கண்கள் கலங்க அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே, கன்னத்தில் இருந்து கையை எடுத்தவன், அவளது பதிலுக்காக கையைக் கட்டிக் கொண்டு அமர்ந்தான்..

அவன் வந்த பொழுது இருந்ததை விட, அவனது முகம் வாடி, இப்படிக் கையைக் கட்டிக் கொண்டு, கோபத்தை அடக்கிக் கொண்டு அமர்ந்திருக்கவும், ஆதிரா செய்வதறியாமல் திகைத்தாள்..  

அவனை எப்படிச் சமாதானப்படுத்துவது என்று அவள் யோசித்துக் கொண்டிருக்க, கார்த்திக்கோ அசையாமல் அமர்ந்திருந்தான்..

ஒரு பெருமூச்சுடன், வண்டியை இயக்கியவன், அவளது வீடு இருக்கும் திசைக்கு வண்டியைத் திருப்ப, ஆதிரா திகைத்துப் போனாள்..

“கார்த்திக்..” அவள் மெல்ல அழைக்க, அதைக் காதில் வாங்காமல், எதுவோ யோசனையில் அவனது விரல்கள் ஸ்டீரிங்கை அழுத்தி விடுவித்து தட்டிக் கொண்டிருக்க, அவன் சொன்ன வார்த்தைகளின் தாக்கம் வேறு மனதினில் சுழல, தன்னையே நொந்துக் கொண்ட ஆதிரா, மெல்ல நகர்ந்து அவனது தோளில் சாய்ந்துக் கொண்டாள்..

அவளது அந்தச் செயலில் திகைத்து அவளது முகத்தைப் பார்க்க, “சாரி கார்த்திக்.. நிஜமா சாரி.. நான் லூசுத் தனமா பேசிட்டேன்.. நான் ஒரு மக்கு.. ப்ளீஸ் அது மறந்துட்டு கொஞ்சம் சிரிங்களேன்.. இப்படி நீங்க இருந்தா எனக்கு கஷ்டமா இருக்கு..” கண்களைச் சுருக்கிக் கெஞ்ச, மீண்டும் வண்டியை ஓரம் கட்டி நிறுத்தியவன்,

அவளது முகத்தைப் பார்த்து, “என் மேல அவ்வளவு நம்பிக்கை இல்லாமையா ஆதிரா நீ என்னை லவ் பண்றேன்னு சொன்ன? இல்ல என்னை உன் மனசுல இவ்வளவு சீப்பா தான் நினைச்சிட்டு இருக்கியா? மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு..” மனத்தாங்கலாக அவன் கேட்க, அவனது இடது கையைக் கட்டிக் கொண்டு, இன்னொரு கையை கியரில் இருந்த அவனது கை மேல் வைத்து அழுத்தியபடி,   

“இல்ல கார்த்திக்.. ப்ராமிஸா இல்ல.. நான் தான் லூசுத்தனமா கேட்டுட்டேன் கார்த்திக்.. நான் ரெடி ஆகிட்டு இருக்கும்போது அந்த வித்யா தான் என்னை கன்ப்யூஸ் பண்ணி விட்டுட்டா.. நீங்களும் ஒரு மாதிரி பார்க்கவும் கொஞ்சம் லூசாகிட்டேன்.. தேவை இல்லாம பேசிட்டேன்..” என்றவள், வித்யாவுடன் நடந்த உரையாடலைச் சொல்ல, கார்த்திக் தலையில் அடித்துக் கொண்டான்..

ஆதிரா அவனைப் பரிதாபமாகப் பார்க்க, “இந்த பொண்ணுங்க எல்லாம் ஒண்ணா சேர்ந்தா இப்படித் தான் எப்போப் பாரு குட்டைய குழப்பிக்கிட்டே இருப்பீங்களா என்ன? இல்ல ஒண்ணுமே தெரியாம அடுத்தவனைப் பத்தி தப்பா தான் நினைப்பீங்களா? என்னைக்காவது நான் உன்னை தப்பா பார்த்து இருக்கேனா? அவ சொன்னா நீ என்ன பதில் சொல்லி இருக்கணும்?” கார்த்திக் நக்கலாகக் கேட்க, ‘ஹும்..’ என்று சிணுங்கியவள்,

“என் கார்த்திக்கைப் பத்தி எனக்குத் தெரியும்ன்னு நான் சொல்லி இருக்கணும். சொல்லாம வந்தது தப்புத் தான்.. நான் ஒண்ணும் உங்களைத் தப்பா நினைக்கல.. ஏதோ மூளைக் கெட்டுப் போய் தெரியாம பண்ணிட்டேன்.. உடனே இப்படி சொல்றீங்களே.. இனிமே நான் இப்படி எல்லாம் பேச மாட்டேன்.. இந்த சின்னப்பிள்ளைய மன்னிச்சு கேசை தள்ளுபடி பண்ணிருங்க வக்கீலே.. பாவம் பிள்ளை பிழைச்சுப் போகட்டும்.. இப்படி பர்த்டேவும் அதுவுமா மூஞ்சியை தூக்கி வச்சிருக்காதீங்க.. உங்களுக்குப் பிடிக்கும்ன்னு தானே புடவை எல்லாம் கட்டிக்கிட்டு வந்திருக்கேன்.. அது எப்படி இருக்குன்னு சொல்லாம இப்படி முகத்தை வச்சிக்கிட்டா நல்லாவா இருக்கு?” கண்களைச் சுருக்கி அவள் கேட்ட விதத்தில், தன்னை மறந்தவன், அவளது நெற்றியில் இதழ் ஒற்ற, ஆதிரா அவனை விழிகள் விரியப் பார்த்தாள்..   

“இது என்னை தப்பா நினைச்சதுக்கு பணிஷ்மென்ட்..” என்றவன், அவளது அதிர்ந்த தோற்றத்தைப் பார்த்து வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு வண்டியை எடுக்க, அவனது முதல் இதழ் தீண்டலில், அந்த இதழ்களின் கதகதப்பில், அவனது தோளிலேயே முகம் புதைத்துக் கொண்டாள்..

“இன்னும் நேர்ல ஒருத்தர் எனக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லவே இல்ல.. ராத்திரி என்னவோ விழுந்து விழுந்து விஷ் பண்ணிக்கிட்டு இருந்தாங்க.. காருக்கு வெளிய செஞ்சாங்க.. உள்ள பக்கம் வந்து சொல்லவே இல்ல. ஒரு ஹான்ட்ஷேக்குக்கே இங்க பஞ்சமா இருக்கு.. நான் என்னவோ ஒரே க்ளாஸ்ல ரெண்டு ஸ்ட்ரா போட்டு குடிக்கிற மில்க்ஷேக்குக்கு ஆசைப்பட்டு வந்தேன்.. மொத்தமும் காலி..” என்று கேலியாகச் சொல்ல,

“ஹாப்பி ஹாப்பி பர்த்டே என் செல்ல அப்பு..” என்று வாழ்த்தியவள், தனது கையை நீட்ட, அவளது கையைப் பிடித்து தனது அருகே இழுத்துக் கொண்டவன், அவளை மென்மையாக தோளோடு அணைத்துக் கொள்ள, அவனது தோளிலேயே முகம் புதைத்தவள்,     

“லவ் யூ டி பேபி டால்..” என்று அவளது உச்சியில் இதழ் ஒற்றவும், அவனது முகத்தை நிமிர்ந்து புன்னகையுடன் பார்த்தவளைப் புன்னகையுடன் பார்த்தவன்,    

“சரி.. இப்போ எங்க போகலாம்ன்னு சொல்லுங்க யுவர் ஆனர்..” கார்த்திக் அவளை வம்பு வளர்க்க,

“முதல்ல கோவிலுக்கு போகணும்..” ஆதிரா அதிலேயே நின்றாள்..

“எனக்கு கோவில் எல்லாம் நம்பிக்கை இல்லடா கண்ணம்மா.. சொன்னா புரிஞ்சிக்கோயேன்.. வேற எங்க வேணா போகலாம் சொல்லு..” அவன் கேட்கவும்,

“எனக்கு முதல்ல கோவிலுக்குத் தான் போகணும்.. நாம போகப் போறோம்.. நீங்க என் கூட வரீங்க.. அவ்வளவு தான் சொல்லிட்டேன்.. நான் சொல்ற கோவிலுக்குப் போங்க..” என்று சொன்னவளைப் பார்த்து புன்னகைத்தவன்,        

“சரி போகலாம்..” என்று அவள் சொன்ன கோவிலுக்கு வண்டியைச் செலுத்தினான்..

கோவிலின் வாயிலில் சென்று வண்டியை நிறுத்தியவன், அவள் ஏதோ ஸ்லோகத்தை முணுமுணுத்துக்கொண்டே அவனை வண்டியை விட்டு இறங்குமாறு கைக் காட்ட, “ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபிசரா இருக்கீங்க யுவர் ஆனர்..” என்று இறங்கி நின்றவன், காரில் சாய்ந்து, பாக்கெட்டில் கை விட்டுக் கொண்டு நிற்க,

அவனைப் பார்த்து முறைத்தவள், ‘நட’ என்பது போல கண் காட்டவும், அவளுக்கு பழிப்புக் காட்டிக் கொண்டே அவளது சொல்லுக்கு கட்டுப்பட்டவன் அவளுடன் நடந்தான்..

சன்னதிக்கு சென்று கண்களை மூடச் சொல்லி கண்களால் மிரட்டியவள், அவன் கண்களை மூடிக் கொள்ளவும், அவனைப் பார்த்து மெல்லிய புன்னகையை சிந்தி, கைகளைக் கூப்பி வணங்கியபடி நின்றாள்.. அவள் கண்களை மூடவும் கண் திறந்துப் பார்த்தவன், அவளது ஆழ்ந்த வேண்டுதலில் புன்னகைத்து, அவளை ரசித்துக் கொண்டிருந்தான்..

கண்களைத் திறந்தவள், கற்பூர ஆரத்தி வரவும், அதை எடுத்துக் கொண்டு, அவனைப் பார்க்க, புன்னகையுடன் கார்த்திக்கும் கற்பூரத்தை எடுத்துக் கொண்டு, ‘இப்போ என்ன?’ என்பது போலப் பார்க்க, பூஜாரி கொடுத்த குங்கும பிரசாதத்தை வங்கிக் கொண்டு வந்தவள், அவன் அதைக் கையிலேயே வைத்துக் கொண்டிருக்கவும், அவனது கையில் இருந்த குங்குமத்தையும், திருநீரையும் அவனுக்கு எம்பி அழகாக வைத்து ஊதி விட, கார்த்திக்கின் கண்கள் கலங்கியது..

“திருநீறு வச்சா உங்களுக்கு எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா? அப்படியே சாத்வீகமா இருக்கீங்க? இனிமே தினமும் காலையில வெளிய கிளம்பறதுக்கு முன்னால வச்சிட்டுத் தான் போறீங்க.. ஆமா.. சொல்லிட்டேன்.. அது நமக்கு பாதுக்காப்பு..” என்று அவள் மிரட்ட, அவளது மிரட்டலை ரசித்துக் கொண்டே, கண்கள் கலங்க  அவன் மெல்ல தலையசைத்தான்..

அவனது முகத்தைப் பார்த்தவள், “என்னாச்சு?” என்று கேட்க,

“இல்ல.. திருநீறு கண்ணுல பட்டிருக்கும்..” என்றபடி தனது கைக்குட்டையை எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டவன், அவளுடன் நடந்தான்.. தனது மனதில் இருந்த அத்தனை ஏக்கங்களும் தீர, அவளை ரசித்துக் கொண்டே அவளுடன் நடந்தான்..

கோவிலில் பிரசாதமாக சர்க்கரைப் பொங்கல் தந்துக் கொண்டிருக்கவும், “கார்த்திக்.. கார்த்திக்.. அங்க சக்கரைப் பொங்கல் தராங்க.. வாங்க போய் வாங்கிட்டு வரலாம்.. இந்தக் கோவில்ல சக்கரைப் பொங்கல் நல்லா இருக்கும்..” என்றபடி ஓடிச் சென்று வரிசையில் நிற்க, அவனுக்கு அந்த அனுபவம் புதிதாய்..

அவளை ரசித்துக் கொண்டே பொங்கலை வாங்கிக் கொண்டு, அங்கிருந்த படிகளில் அமர்ந்தவன், அவளிடம் நீட்ட, ஒரு வாய் பொங்கலை எடுத்து அவனுக்கு கொடுத்து, “எப்பவுமே என்னோட கார்த்திக் சந்தோஷமா இருக்கணும்.. அப்போ தான் நானும் ஹாப்பி.. நாங்களும் ஹாப்பி..” வாழ்த்தியவள், அவனுக்கு பொங்கலை நீட்ட, அவளது கையில் இருந்த பொங்கலை வாயில் வாங்கிக் கொண்டவனின், கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீர் இறங்கத் துவங்கியது..

அவனது கண்ணீரைப் பார்த்தவள், அவனது கையைத் தட்டிக் கொடுத்து, “என்ன கார்த்திக் இது? எதுக்கு இப்படி கண்ணு கலங்குது? நீங்க ஏன் கோவிலுக்கு எல்லாம் வர மாட்டேன்னு இப்படி சொல்றீங்க?” அவனது கண்களைத் துடைத்துக் கொண்டே கேட்க,

“இல்ல.. கண்ணு எல்லாம் கலங்களையே.. அப்போ விழுந்த விபூதில தான் இன்னும் தண்ணி வருது போல..” என்று அவன் சமாளிக்க, அவனது கையைத் தட்டியவள்,

“என்கிட்டே சும்மா பொய் சொல்லாதீங்க கார்த்திக்.. உங்க மனசுல என்ன ஓடுதுன்னு எனக்குத் தெரியும்.. அது தான் நான் வந்துட்டேனே.. இனிமே உங்களை நான் பார்த்துக்கறேன்.. பர்த்டேவும் அதுவுமா காலையில சண்டைப் போட்டாச்சு.. இப்போ கண்ணு கலங்கிக்கிட்டு இருக்கீங்க.. இனிமே கண்ணுல தண்ணி வந்துச்சு.. அவ்வளவு தான் சொல்லிட்டேன்..” என்று சொன்னவள், அவனது கையை அழுத்தி,

“சொல்லுங்க.. உங்க மனசுல என்ன இருக்கு?” என்று கேட்கவும்,

“அது ஒண்ணும் இல்லம்மா.. அந்த குடும்பச் சூழல்ல எனக்கு சாமி எல்லாம் வெறுத்துப் போச்சு.. எங்க பாட்டி எங்க அம்மா திருந்தி வரணும்ன்னு நிறைய கடவுள் கிட்ட வேண்டிக்கிட்டு இருந்திருக்காங்க.. ஆனா.. எதுவுமே நடக்கலையே.. அது தான்..” என்று அவன் சொல்லவும், அவனது கையை மெல்ல வருடினாள்.   

“இது கோவிலா இருக்கு.. இல்லன்னா நானே முழுசா ஊட்டி விட்டுடுவேன்.. இப்போ சாப்பிடுங்க.. அப்பறம் நாம ரிசார்ட்க்கு போக வேண்டாமா? பீச்ல நிறைய நேரம் உட்கார்ந்து இருக்கலாம் கார்த்திக்.. ஓகே வா? எனக்கு தண்ணியில நிறைய நேரம் விளையாடணும்..” என்று கேட்கவும், கார்த்திக் அவளை ஆச்சரியமாகப் பார்க்க, தனது பொங்கலில் பார்வையைத் திருப்பியவள்,

“போதும் என்னைப் பார்த்தது.. பொங்கலை சாப்பிட்டு கிளம்புங்க.. மணி ஆகுது.. ஆனா.. பீச்சுக்கு போற ப்ளான் இருக்குன்னு சொல்லி இருந்தா நான் வேற டிரஸ்ல வந்திருப்பேன்.. ஏதாவது சொல்றீங்களா?” என்று விரட்டவும், அவளது விரட்டலை சந்தோஷத்துடன் அனுபவித்துக் கொண்டே உண்டுவிட்டுக் கிளம்பினான்..

“வேற டிரஸ் எல்லாம் வேண்டாம்.. இதுவே அழகா தான் இருக்கு. புடவை சீக்கிரம் உலர்ந்துடும் தானே..” அவனது பார்வை அவள் மீது ரசனையுடன் படிய, ஆதிரா முகம் சிவந்து போனாள்.  

“பேபி டால்.. நீ இப்படி எல்லாம் வெட்கப்பட்டா சின்னப் பையன் பாவம் தானே. இந்த ஒரு வருஷம் நாம ஜாலியா லவ் பண்ணிட்டு அடுத்த வருஷம் கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு இருக்கேன்.. ஒரு முக்கியமான வேலை இருக்கு..” ஒரு பெருமூச்சுடன் கார்த்திக் சொல்லவும், அவள் கேள்வியாகப் பார்க்க, அவளை அருகில் இழுத்து அவளது நெற்றியில் இதழ் ஒற்றியவன்,

“கண்ணாலே காதல் கவிதை சொன்னாளே எனக்காக..” என்று பாட,

“கண்ணாளன் ஆசை மனதைத் தந்தானே எனக்காக..” அவள் பதில் பாட்டுப் பாடவும்,

“என் வாழ்வில் வந்த அழகு வானவில் நீ தான்.. அழகே நீ எங்கே.. என் பார்வை அங்கே..” அந்த வரிகளைத் மாற்றி கார்த்திக் பாடவும், அவனது தோளில் சாய்ந்தவள், அவனது முகத்தை ஆசையுடன் வருடினாள்.     

அவளை அழைத்துக் கொண்டு ரிசார்ட்டிற்குச் சென்றவன், “செல்லம்.. நாம கொஞ்ச நேரம் சுத்திப் பார்த்துட்டு.. அப்பறம் சாப்பிடப் போகலாம்..” கார்த்திக் சொல்லவும்,

“அப்போ பீச்சுக்கு எப்போ போறது?” அவசரமாக அவள் கேட்க,

அவளது  தலையில் செல்லமாகத் தட்டியவன், “இப்பவே பீச்சுக்கு போய் தண்ணியில ஆடினா உன்னோட புடவை நனையாதா? அப்பறம் அதே கசகசப்போட எவ்வளவு நேரம் இருப்ப?” என்று அவன் கேட்கவும், நாக்கைத் துருத்தி, தலையில் அடித்துக் கொண்டவள்,

“ஆமால்ல.. என்கிட்டே வேற டிரஸ்சும் இல்ல..” வருத்தமாகச் சொன்னவள்,

“ஆனா.. எனக்கு நாம இந்த டிரஸ்ல போட்டோ எடுத்துக்கணும்.. என்னோட வால் பேப்பருக்கு வேணும்..” என்றவள், அவனது தோளில் சாய்ந்தபடி செல்பி எடுத்துக் கொண்டாள்.     

“நான் வண்டியை நிறுத்தின அப்பறம் போட்டோ எடுக்கலாம் இல்ல..” என்றவன், அந்த பெரிய ரிசார்ட்டின் முன்பு காரை கொண்டு நிறுத்திவிட்டு, அவளது தோளில் கையைப் போட்டு, அவளது கன்னத்தோடு கன்னம் வைத்துக் கொண்டு, தனது செல்லில் புகைப்படம் எடுக்க, காலைத் தூக்கி சீட்டில் வைத்துக் கொண்டவள், வாகாக அவனது தோளில் சாய்ந்து ஆதிரா கண்களை மூடிக் கொண்டாள்..

அவளது அருகாமையை ரசித்தபடி அவனும் அமர்ந்திருந்த சில நொடிகளுக்குப் பிறகு, “அப்பு.. நாம கேக் கட் பண்ணலாமா?” ஆதிரா கேட்கவும், அவளது முகத்தைத் திருப்பிப் பார்த்தவன்,

“நான் கேக் வாங்கலையே.. உனக்கு வேணும்ன்னா நான் ஆர்டர் செய்யறேன்..” அவன் கேட்க,  

“நான் வாங்கிட்டு வந்திருக்கேன்..” என்றவள், தான் பின் பக்கம் வைத்த கவரில் இருந்து ஒரு அட்டைப் பெட்டியை எடுத்து தனது மடியின் மீது வைத்து,

“ஹ்ம்ம்.. வெட்டுங்க..” அவனது கையில் அந்த சிறு கத்தியை திணித்தபடி அவள் சொல்லவும், அவள் பக்கம் நன்றாக திரும்பி அமர்ந்தவன், அவளது கை மீது தனது கையை வைத்துக் கொண்டு, அந்த கேக்கை வெட்டி, அவளுக்கு ஒரு வாய்க் கொடுத்தவன்,

“இந்த முப்பது வருஷத்துல எனக்கு நினைவு தெரிஞ்சு நான் வெட்டின முதல் கேக் இது தான்..” அவள் வாயில் கொடுத்த கேக்கை வாங்கிக் கொண்டே சொன்னவன், உணர்ச்சி வசப்பட்டு, அவளது தலையை தனது நெஞ்சோடு அழுத்தி அணைத்துக் கொண்டான்..

அவனது இதயத் துடிப்பின் ஓசை அவளுக்குக் கேட்க, “அப்பு.. கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்க.. இனிமே நீங்க மிஸ் பண்ணினதை எல்லாம் நான் உங்களுக்கு செய்யறேன்.. ஃபீல் பண்ணாதீங்க ப்ளீஸ்..” அவனது நெஞ்சை வருடிக் கொண்டே சொல்ல,

“கேக் ரொம்ப டேஸ்டியா இருக்கு.. என் அம்முக்குட்டி எனக்காக வாங்கிட்டு வந்தது.. என் முதல் கேக்..” அவளது கன்னத்தை வருடிக் கொண்டே அவன் சொல்லவும், அவனது தொண்டை அடைக்க, அவன் கேக் உண்ட கையில் வருடவும், அவளது கன்னம் முழுவதும், கேக்கின் க்ரீம் அப்பிக் கொண்டது..

அவனது குரல் மாறுதலில், அவள் முகம் நிமிரவும், அவளது முகத்தைப் பார்த்தவன், “ஹஹா..” என்று சிரிக்கத் துவங்க, முகத்தைச் சுருக்கி அவனது முகத்தைப் பார்த்தவள்,

“எதுக்கு சிரிக்கறீங்க?” என்று கேட்க, சிரித்துக் கொண்டே, தனது மொபைலை எடுத்து அவளைப் படம் பிடித்தவன், அவளுக்கு காட்டவும்,

“எவ்வளவு கஷ்டப்பட்டு மேக்கப் போட்டு வந்திருக்கேன்.. இப்படி பண்ணி வச்சிருக்கீங்க? உங்களை..” என்றபடி, அவள் வரவும், அவளது கன்னத்தில் மேலும் கேக்கை எடுத்து தடவ,

“கார்த்திக்..” என்ற கூவலுடன், மீதம் இருந்த கேக்கை எடுத்து அவனது முகத்தில் தடவ சிறிது நேரம், காருக்குள் ரணகளமே நடந்தது. முழுவதுமாக கேக் இருவரின் முகத்திலும் குடியேற, இருவரும் ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்து சிரித்தனர்..

“அப்படியே ஒரு க்ளிக்..” என்று கார்த்திக் அதையும் படம் பிடித்துக் கொள்ள, பின்னால் எம்பி, அவன் காரில் வைத்திருந்த டிஸ்யூ பேப்பரை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டவள், அவனது முகத்தையும் துடைக்க, தனது காரில் இருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து கொடுத்து,

“முகத்தைக் கழுவு.. இல்ல எனக்கு கடிச்சு திங்கணும் போல இருக்கு..” கார்த்திக் சொல்லவும், “போடா..” என்று கடிப்பது போல பல்லைக் காட்டியவள், அவன் கையில் இருத்த பாட்டிலை வாங்கி முகத்தை கழுவிக் கொண்டாள்..

“ஹான்.. சீக்கிரம் அந்த பேக்ல இருக்கற மேக்கப் சாமானை எல்லாம் எடுத்து முகத்துல பூசு..” அவன் கேலி செய்ய,

“உங்களை..” என்று அவள் அடிக்க வரவும், கார்த்திக் ஓடத் துவங்க, அவசரமாக தனது பையை எடுத்துக் கொண்டு காரை மூடிவிட்டு அவள் ஓட, காரை லாக் செய்த கார்த்திக் அவளது கையில் சிக்கி அடி வாங்கி சிரித்துக் கொண்டே, அவளது கையுடன் கைக் கோர்த்துக் கொண்டு, அந்த ரிசார்ட்டில் வளம் வந்தான்..

“இடம் நல்லா இருக்கு இல்ல.. ரொம்ப அமைதியா..” கார்த்திக்கிடம் சொன்னவள், அந்த ரிசார்டைச் சுற்றி இருந்த மரங்களில் கேட்ட பறவைகளின் ஒலியை ரசித்து, மகிழ்ச்சியுடன் கார்த்திக்கைப் பார்க்க, அவளது கையை மெல்ல அழுத்தியவன், கையைக் கோர்த்துக் கொண்டான்..

அவனுடன் ஒட்டி நடந்தபடியே, “இந்த இடம் எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு கார்த்திக்..” ஆதிரா சொல்ல,

“வா.. கொஞ்ச நேரம் அங்க உட்கார்ந்துக்கலாம்..” என்றவன், அவளை அழைத்துக் கொண்டு, அங்கிருந்த குடில் போல இருந்த இருக்கையில் அமர, ஆதிரா அவன் அருகில் அமர்ந்தாள்.

அவனது கையை எடுத்து தனது கையில் வைத்துக்கொண்டு, “பார்க்க இப்படி கரடு முரடா இருக்கீங்க.. இப்படி சட்டு சட்டுன்னு கண்ணு கலங்கறீங்க.. இனிமே நீங்க எதை நினைச்சும் கஷ்டப்படக் கூடாது கார்த்திக்.. நான் உங்களை சந்தோஷமா பார்த்துக்கறேன்..” என்று அவள் சொல்லவும், அவளது கையை எடுத்து தனது உதட்டில் ஒற்றிக் கொண்டவன்,

“என்னோட பர்த்டேவ இது வரைக்கும் நான் கொண்டாடினது கூட இல்ல.. ஏன் இன்னிக்கு காலைல கூட எங்க அம்மாவுக்கு என் பிறந்த நாளே நினைவு இல்ல.. எங்க அப்பா எப்பவும் போல காலையிலேயே என் தலையைத் தடவிட்டு வெளிய போயிட்டார்.. அது தான் அவரோட பாஷையில பர்த்டே விஷ்ஷோ என்னவோ? சரவணன் தான் வந்து ‘ஹாப்பி பர்த்டேடா அண்ணா’ன்னு சொல்லிட்டு போனான்..” குறையாக அவன் சொல்லவும்,  

“சரவணன்?” ஆதிரா கேள்வியாக இழுக்க, தலையாட்டிக் கொண்டு அவளது முகத்தைப் பார்த்து புன்னகைத்தவன்,  

“ஹ்ம்ம்.. உன் டீம்ல ஒருத்தன் இருக்கானே சரவண பாலாஜி.. அவனே தான்.. என்னோட உடன் பிறப்பு..” என்று கார்த்திக் சொல்லவும், கண்களை விரித்து, ‘வாட்..’ என்று வாய்பிளக்க, கார்த்திக்கின் இதழ்களில் புன்னகை..

அவளது இதழ்களை விரல் வைத்து மூடியவன், “ரொம்ப ஷாக் ரியாக்ஷன் கொடுக்காதே.. அவன் தான் என் தம்பி.. என்னோட எதிரி.. உன் பேரை சொன்னாளே அவன் கொலைவெறி ஆகிடுவான்.. ரெண்டு பேரும் செம சண்டைப் போடுவோம்..” கார்த்திக் சொல்லவும்,

“என்னை வச்சு ரெண்டு பேருமே சண்டைப் போடுவீங்களா? நீங்க இதை இத்தனை நாளா சொல்லலையே.. அவனும் உங்களைப் பத்தி சொன்னதே இல்லையே.. அப்போ நாம மீட் பண்றதுக்கு முன்னாலேயே என்னை உங்களுக்குத் தெரியுமா? அப்போ டான்ஸ் ஷோல உங்களைப் பார்த்தது நான் மட்டும் தானா?” திகைப்புடன் ஆதிரா கேட்க,

“இல்ல இல்ல.. உன்னை நான் டான்ஸ் ஷோல தான் பார்த்தேன்.. அன்னைக்கே நான் உன்னை என்னோட செல்லுல படம் பிடிச்சிட்டேன்.. அதோட என்னோட மனசுலையேயும்.. அன்னைக்கு நான் மந்திரிச்ச விட்ட கோழி போல இருந்தேன்.. அவன் கரெக்ட்டா என்னைப் பார்த்து நீ இன்னைக்கு சரி இல்லன்னு கேட்டான்.. அப்பறம் என் செல்லை எடுத்துப் பார்த்துட்டு, அதுலயும் உன் போட்டோவையும் பார்த்துட்டு செம டென்ஷன் ஆகிட்டான்..    

அன்னைக்கே அவனுக்கு நான் உன்கிட்ட விழுந்துட்டேன்னு தெரியும்.. உன்னைப் பார்த்தா என்னை ஒரு வழி பண்ணிடுவேன்னு என்னை எச்சரிக்கைப் பண்ணிட்டு போனான்..

ஆனா.. நான் இன்னும் அவன்கிட்ட நம்ம விஷயத்தைச் சொல்லல.. ஆனா.. போன்ல உன்கிட்ட பேசும்போது ஆதிரா டார்லிங்ன்னு கூப்பிட்டு அவனை வெறுப்பேத்துவேன்.. பையன் செம டென்ஷன் ஆகிட்டான்.. ஆதிரா எல்லாம் உங்கிட்ட மாட்ட மாட்டான்னு அவனுக்கு அவ்வளவு நம்பிக்கை.. நான் போன்ல வேனுண்டே பொய் சொல்லிட்டு பேசறேன்னு அவனுக்கு நினைப்பு..” எனவும்,

‘அடப்பாவி’ என்று வாய் மீது விரலை வைத்து அவள் கார்த்திக்கைப் பார்க்க,

“வேணுண்டே நான் அவன்கிட்ட உன்னை நான் மதிக்காத மாதிரி வெறுப்பேத்துவேன்.. அவனோட முகத்தைப் பார்க்க ஜாலியா இருக்கும்.. அது என்ன அவன் என்கிட்டே இருந்து உன்னை பிரிக்க நினைக்கிறது? அவன் யாரு உன்னை என்கிட்டே இருந்து பிரிக்க? அவன் என்ன உனக்கு வக்காலத்து வாங்கறது? அதெல்லாம் நான் தான் செய்வேன்.. அவன் யாரு செய்ய?” அவன் கேட்கவும், ஆதிரா கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு வாய்பிளந்து,

“அடப்பாவி கார்த்திக்.. இவ்வளவு வேலை செய்யறீங்களா? எஸ்.பி. பாவம்.. இப்படி எல்லாம் செய்யக் கூடாது.. ஆனா.. ஏன் உங்களை இப்படி சொல்றான் அவன்?” எனவும், 

“ஹ்ம்ம்.. என்ன பிரெண்ட் மேல பாசமா?” என்று கேட்டவன்,

“அது.. அவனுக்கு நான் எங்க அம்மா போல செல்ஃபிஷ்ஷா இருக்கேன்னு எண்ணம்.. ஏன்னா நான் வீட்ல ரொம்ப பட்டுக்க மாட்டேன்.. சில நேரத்துல அப்பாவுக்கு கோபம் வந்து அம்மாக் கூட சண்டைப் போட்டா கூட, நான் பாட்டுக்கு பேசாம ரூம்ல வந்து உட்கார்ந்துடுவேன்.. அவன் தான் நடுவுல புகுந்து பஞ்சாயத்து பண்ணுவான்.. அவங்க சண்டையைப் பிரிச்சு விடலைன்னு என்னைத் திட்டுவான்.. அதே போல வீட்டுல சமான் இல்லைன்னு அவன் சொல்லுவான்.. நான் சமைக்காத வீட்டுக்கு எதுக்கு சாமான்னு சொல்லிட்டு போயிருவேன்.. அனாவசியமா வீட்டுக்கு செலவு செய்ய மாட்டேன்.. அவன் காலேஜ் படிக்கும்போது அவனுக்கு பாக்கெட் மணி கொடுத்துட்டு பார்த்து செலவு செய்ன்னு சொல்லுவேன்.. ஆனா.. எனக்கு ஏதாவது வேணும்ன்னா யோசிக்காம உடனே வாங்கிடுவேன்.. அது எல்லாம் சேர்ந்து அவன் என்னை சுயநலம்ன்னு திட்டுவான்..” கார்த்திக் பெரிய விளக்கமாகச் சொல்ல,

“ஏன் அப்படி? இப்போ வீட்டுக்கு நீங்க செலவுக்கு பைசா தர மாட்டீங்களா?” கவலையாகக் கேட்க,

“நானும் சரவணனும் ஆன்லைன்ல பில்ஸ் எல்லாம் கட்டிருவோம்.. நானும் அவனும் எப்போ தோணுதோ, நாங்களே கடைக்குப் போய் சாமான் வாங்கிட்டு வந்து சமைச்சு சாப்பிடுவோம்.. நான் எனக்கு மட்டும் சில சமயம் தோச சுட்டு சாப்பிட்டு போயிருவேன்.. அப்போ வெளிய இருந்து வரவன், எனக்கும் ஒரு ரெண்டு தோச சுட்டு வச்சிருந்தா என்னன்னு என்னைத் திட்டுவான்.. அவன் சாப்பிட்டு வரானா.. இல்ல வீட்டுக்கு வந்து சாப்பிடுவானான்னு எனக்கு என்ன தெரியும்.. அப்படித் தான்..” என்றவன்,      

“இப்போ ஒரு பெரிய காரியம் வீட்டுல யாருக்கும் சொல்லாம செஞ்சிருக்கேன்.. அது செஞ்சிட்டுத் தான் நான் அப்பாக்கிட்டயும், அவன்கிட்டயும் சொன்னேன். அதுவும் நேத்து தான் சொன்னேன்.. அதுல அவனுக்கு கொஞ்சம் வருத்தம்.. ஏன் அதை முன்னாலேயே சொல்லிட்டு செஞ்சிருந்தா என்னன்னு? இன்னும் அது அம்மாவுக்குத் தெரியாது.. தெரிஞ்சா தேவை இல்லாத பிரச்சனை..” என,

“நம்ம விஷயமா?” என்று ஆதிரா கேட்க, இல்லை என்று மறுப்பாக தலையசைத்தவன்,

“இது வேற.. அவனால இன்னும் நான் உன்கிட்ட பேசறேன்ங்கறதே நம்ப முடியல.. நான் அவனை வெறுப்பேத்த பொய் சொல்லிட்டு இருக்கேன்னு நினைச்சிட்டு இருக்கான்..” என்றவன்,    

“அவன் பாசக்காரன் தான்.. அதுவும் உன் விஷயத்துல அவன் ரொம்ப ஜாக்கிரதை.. நீ நல்லா இருக்கணும்ன்னு அவன் எண்ணம்.. உன்னைப் பார்க்கற வரை எனக்கு கல்யாணம் செய்துக்கற எண்ணமே இல்ல.. உன்னைப் பார்த்த பின்போ எல்லாமே தலை கீழ.. எங்க அம்மா உன்னை நசுக்கி எடுத்திருவாங்கன்னு அவனுக்கு பயம்.. அதுனால உன்னை காதல் கல்யாணம்ன்னு எங்க குடும்பத்துல இழுத்து விட்டு உன்னைக் கஷ்டப்படுத்தக் கூடாது, ‘உனக்கு நல்ல பையனா, உன்னை நல்லா பார்த்துக்கறவனா தான் வேணும், நான் வேண்டாம்’ன்னு முதல் நாளே திட்டிட்டு போனான்.. ‘பேசியே கவுத்துடாதே.. அவளை விட்டுடு’ன்னு வார்ன் வேற பண்ணினான்.. இந்த சின்னப் பையன அவன் எப்படி மிரட்டறான் தெரியுமா?” கார்த்திக் கதை சொல்ல, ஆதிரா சிரிக்கத் துவங்கினாள்..

“ஹோய்.. நான் எவ்வளவு சீரியஸா சொல்லிட்டு இருக்கேன்.. நீ சிரிச்சிட்டு இருக்க? என்ன சிரிப்பு உனக்கு? அவன் என்னைத் திட்டினதை நினைச்சா?” அவன் கேட்க,

“உங்கள மனசுல வச்சிக்கிட்டுத் தான் அந்த சரவணன் என்கிட்டே அப்படி வார்ன் பண்ணினானா?” அவள் கேலியாக இழுக்க, கார்த்திக் அவளைக் கேள்வியாகப் பார்த்தான்.

“அது வந்து.. திடீர்ன்னு ஒரு நாள் லஞ்ச்ல வந்து..  உன்னை யாராவது அனாவசியமா பேசி தொந்தரவு செய்யறாங்களா? யாராவது உன்கிட்ட லவ் கிவ்வுன்னு வந்து பேசறாங்களா? இல்ல ஏதாவது வம்பு பண்றாங்களா? அப்படி எல்லாம் கேட்டா ஒத்துக்காதே.. யாருன்னு சொல்லு நான் அவங்களைப் பத்தி விசாரிச்சு சொல்லறேன்னு சொன்னான்..” அவள் சொல்லவும், கார்த்திக் உதட்டைப் பிதுக்க,

“திடீர்ன்னு போன வாரம் ஒருநாள் வந்து.. ‘நீ யாரையாவது லவ் பண்றியா என்ன?’ன்னு கேட்டான்.. ‘நான் இல்லையே.. அப்படி எல்லாம் இல்லையே’ன்னு சொல்லவும்,

“என்ன சொன்னான்?” கார்த்திக் ஆவலாகக் கேட்க,

“அந்த தப்பு எல்லாம் செய்யாதே.. உனக்கு வீட்ல நல்ல மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செஞ்சித் தருவாங்க.. அது தான் உன் வாழ்க்கைக்கு ரொம்ப நல்லது. அப்படின்னு சொல்லிட்டு போனான்..” என்றவள், சிரித்துக் கொண்டே,

“அவன் சொன்ன பேச்சு கேட்டு இருக்கணுமோ?” என்று இழுக்க, அவளது காதைப் பிடித்துத் திருகியவன்,

“கேட்படி கேட்ப.. உன்னை நான் விட்டா தானே.. அப்படியே தூக்கிட்டு போயிருப்பேன்.. அவன் கண்ணு முன்னாடியே..” என்று கார்த்திக் பல்லைக் கடிக்க, அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே,

“நானும் உங்களை விட மாட்டேன்..” என்றவள்,

“வலிக்குது கார்த்திக்.. ஜிம்மிக்கில அழுத்தறீங்க..” போலியாக அலற, தனது கையை எடுத்தவன், அவளது காதை மெல்லத் துடைத்துவிட்டு,

“உனக்கு ஜிமிக்கி ரொம்ப அழகா இருக்கு..” என்று ரசனையுடன் சொல்லிக் கொண்டே, அதை மெல்ல சுண்டி விட, ஆதிரா அவனைப் பார்த்து புன்னகைத்தாள்..

அவனது தோளில் சாய்ந்தவள், “அவன் பேச்சைக் கேட்டு இருந்தா என் அப்பு எனக்கு கிடைச்சு இருப்பாங்களா? அவன் கிடக்கான்.. பொடியன்..” என்றபடி அவனது கன்னத்தைப் பிடித்து ஆட்டிக் கொண்டே,

“ஐ லவ் யூ கார்த்திக்.. அவன் என்ன வேணா சொல்லட்டும்.. எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு.. என் அப்புவைப் பத்தி எனக்குத் தெரியும்.. அவரோட மனசு எனக்குத் தான் புரியும்.. அவன் சின்னப் பையன்.. நாம மன்னிச்சு விட்டுடலாம்..” என்றவளைத் தனது தோளோடு அணைத்துக் கொண்டவன், “லவ் யூ டூ செல்லம்மா..” என,  

“என்ன அப்புன்னு சொல்ற? எனக்கு செல்லப் பேரா?” அவளது மூக்கைப் பிடித்து ஆட்டிக் கொண்டேக் கேட்க,

“தெரியல.. அப்படி செல்லமா கூப்பிடத் தோணுது.. உங்களுக்குப் பிடிச்சு இருக்கா?” ஆவலாகக் கேட்க, அவளது விழிகளில் முத்தமிட்டவன்,  

“பிடிச்சிருக்கு.. ரொம்ப பிடிச்சிருக்கு..” என்றபடி, அவளது விரலுடன் விரல் கோர்த்துக் கொள்ள, அவனது தோளில் சாய்ந்தபடி, தூரத்தில் தெரிந்த கடலை ரசித்தாள்..

சிறிது நேரம் அமைதியாக அந்த நிமிடங்களை ரசித்துக் கொண்டிருந்தவன், “என்னோட பர்த்டே கிஃப்ட் எங்க?” என்று கேட்கவும், ஆதிரா முதலில் திகைத்து, பின் தலையில் அடித்துக் கொண்டு,

“கண்ணை மூடி கையைக் காட்டுங்க..” என்று சொல்லவும், கார்த்திக் புன்னகையுடன் கையை நீட்ட, அவனது கையில் அழகான ஒரு கைக் கடிகாரத்தை கட்டிவிட்டவள், இன்னொரு கவரை எடுத்து நீட்டி,

“உங்களுக்கு புது டிரஸ் வாங்கிட்டு வந்தேன்.. பார்த்து பிடிச்சிருக்கான்னு சொல்லுங்க..” என்று அவனுக்கு வாங்கிய பேன்ட் சட்டையைத் தரவும், கண்களைத் திறந்து பார்த்தவன்,  

“ஹைய்.. அழகா இருக்கு இந்த டையல் அன்ட் ஸ்ட்ராப்.. இந்த சட்டை கூட ரொம்ப அழகா இருக்கு. என்கிட்டே இந்த கலர் இல்ல. ஆனா.. முக்கால்வாசி என்கிட்டே வெள்ளை கலர் தான் இருக்கும்..” கார்த்திக் அவளது பரிசுகளை வாங்கிக் கொண்டே சொல்ல,

“எனக்கு ரொம்ப பிடிச்சு வாங்கினேன் அப்பு.. அதுவும் எஸ்.பி.கிட்ட பேச்சோட பேச்சா அவன் சைஸ் கேட்டு போய் தான் வாங்கினேன்.. எனக்கு இது போட்டு போட்டோ எடுத்து அனுப்புங்க.. சரி இப்போ சாப்பிட போகலாமா? பசிக்குது..” என்று வயிற்றைத் தட்டிக் காட்ட,     

“ஆமா.. நேரமாச்சு சாப்பிடலாம்.. நாம மெனு ஆர்டர் பண்ணிடலாம்.. உனக்கு பிடிச்சதை சொல்லு..” என்றவன், மெனுவைப் பார்த்து அவள் சொன்ன உணவுகளை ஆர்டர் செய்ய, இருவரும் சந்தோஷமாகப் பேசி சிரித்து, ஒருவரின் அருகாமையை ஒருவர் ரசித்தபடி அந்த நாள் இனிமையானதாக கழிந்தது..

Leave a Reply

error: Content is protected !!