எங்கே எனது கவிதை – 14

எங்கே எனது கவிதை – 14

14     

கடற்கரை தனில் நீயும் நானும்

உலவும் பொழுது

பறவையை போல் கானம் பாடி

பறக்கும் மனது

இங்கு பாய்வது புது வெள்ளமே

இணை சேர்ந்தது இரு உள்ளமே

குளிர் வாடை தான் செந்தளிரிலே

இந்த வாலிபம் தன் துணையிலே

கண்ணாலே காதல் கவிதை சொன்னாளே எனக்காக

மறுநாள் காலையில் கார்த்திக், கண்ணாடியின் முன்பு நின்றுக் கொண்டு, தலையை நான்காவது முறையாக சீவிக் கொண்டே, அதே பாடலை மீண்டும் மீண்டும் பாடிக் கொண்டிருக்க,

“இவனுக்கு என்ன ஆச்சு? தேஞ்ச ரெக்கார்ட் போல இதையே பாடிக்கிட்டு இருக்கான்.. தலையில இருக்கற முடி எல்லாம் கொட்டற அளவுக்கு சீவு சீவுன்னு சீவிக்கிட்டு இருக்கான்.. இப்போ என்னவாம் அவனுக்கு?” புலம்பிக் கொண்டே, அவனது அறைக்கு கையில் கார்ன் ப்ளேக்சை உண்டுக் கொண்டே சரவணன் வந்து சேர்ந்தான்.. வந்தவனோ கார்த்திக்கைப் பார்த்து திகைத்துப் போனான்..

“டேய் அண்ணா.. என்ன இது புது சட்டை எல்லாம்? இதை எப்போ வாங்கின? லாயரோட வெள்ளைச் சட்டை எங்க போச்சு?” ஆச்சரியமாகக் கேட்க,

“நல்லா இருக்கா.. அப்படியே எனக்கு என் மொபைல்ல ஒரு போட்டோ எடுத்துக் கொடேன்.. பால்கனிக்கு போகலாமா?” என்று தலையை நீவிக் கொண்டே, தனது கூலர்சை மாட்டிக் கொண்டு கார்த்திக் கேட்க,

“இது என்ன இது புதுசா எல்லாம் பண்ணிட்டு இருக்க? இந்த சட்டை கலர் நல்லா இருக்கு.. உனக்கும் ரொம்ப நல்லா இருக்கு.. ஆனா.. இதை எப்போ வாங்கின? நேத்து கூட பழைய ட்ரெஸ் தானே போட்டுட்டு போன?” என்றபடி அவனுடன் பால்கனிக்குச் சென்றவன், அவனது மொபைலில் போட்டோ எடுத்துக் காட்ட, அதைப் பார்த்தவன்,

“இன்னொரு ஸ்நாப் எடு..” என்று ஸ்டைலாக பால்கனி சுவரின் மேல் சாய்ந்து நின்று சொல்லவும், அவனை ஒரு மாதிரிப் பார்த்துக் கொண்டே போட்டோ எடுத்த சரவணன்,

“போதும்.. உள்ள வா.. இந்தா இதை சாப்பிட்டுப் போ.. ஆமா.. சொல்லவே இல்லையே இந்த டிரஸ் எப்போ வாங்கின?” என்றபடி ஒரு கிண்ணத்தை அவனிடம் கொடுக்க, மீண்டும் தலையை சீவிக் கொண்டே கண்ணாடியின் வழியாக அவனைப் பார்த்தவன்,

“என்ன இன்னைக்கு என் மேல உனக்கு பாசம் ரொம்ப பொங்குது?” நக்கலாகக் கேட்கவும், சரவணன் பல்லைக் கடித்தான்..

கார்த்திக் புருவத்தை உயர்த்தி கேலியாகப் பார்த்துக் கொண்டே, “அதெல்லாம் ஒரு முக்கியமானவங்க எனக்கு பர்த்டே ஃகிப்ட்டா கொடுத்தாங்க..” என்று சொல்லிக் கொண்டே, புது வாட்ச்சை அவன் முன்பு ஆட்டிக் காட்டவும், சரவணன் அவனை திகைப்பாகப் பார்த்தான்..

“உனக்கு யாரு கிஃப்ட் கொடுக்கற அளவுக்கு ஃபிரெண்ட் இருக்காங்க?” சரவணனின் கேள்வியை புறம் தள்ளிவிட்டு,

“நீ சொல்லு என்ன இதெல்லாம்..” என்று கார்ன் ப்ளேக்ஸ் கிண்ணத்தைக் காட்ட,    

“இல்ல.. காலையில எழுந்திருச்சு பிரியாணி, கத்திரிக்காய் கொத்சு  எல்லாம் செஞ்சு வச்சிருக்க.. டேஸ்ட் பண்ணிப் பார்த்தேன்.. ஏதோ சுமாரா இருந்தது. அது தான் ஒரு வேளை வயித்துக்கு நீ எனக்கு செஞ்சு வச்சியா.. நான் உனக்கு ஒருவேளைக்கு கொடுக்கறேன்.. அவ்வளவு தான்.. பாசம் எல்லாம் ரொம்ப இல்ல.. தப்பா எடுத்துக்காதே..” விடேற்றியாக சரவணன் சொல்லவும், அவனைப் பார்த்து புருவத்தை உயர்த்தியவன், அவன் கொடுத்த கிண்ணத்தை எடுத்துக் கொண்டு, தனது மொபைலைப் பார்த்துக் கொண்டே உண்ணத் துவங்க, சரவணன் தொண்டையைக் கணைத்தான்..

உண்டுக் கொண்டே கார்த்திக், சரவணனைப் பார்க்க, “நேத்து பர்த்டேவும் அதுவுமா துரை எங்க போயிருந்தீங்க? நைட் வரை ஆளையே காணும்? இன்னைக்கு என்ன புதுசா டிரஸ் வாட்ச் எல்லாம் போட்டு இருக்க? என்ன விஷயம்?” என்று கேட்கவும், கார்த்திக்கிற்கு குறும்பு எட்டிப் பார்த்தது..   

“அதுவா.. அது என் வருங்கால பொண்டாட்டி நேத்து பர்த்டேவுக்கு கிஃப்ட் கொடுத்தா.. டிரஸ் போட்டு போட்டோ எடுத்து அனுப்ப சொன்னா.. அவ கூடத் தான் நேத்து ரிசார்ட்டுக்கு போயிருந்தேன்.. அதைத் தான் அனுப்பிக்கிட்டு இருக்கேன்..” என்று சொல்லவும், சரவணனுக்கு தொண்டைக்குழியில் சோளம் சிக்கிக் கொள்ள, புரையேறி இரும்பத் துவங்கினான்..   

அவனது தலையை மெல்லத் தட்டிக் கொடுத்தவன், “மெல்ல சாப்பிடு சரவணா.. நான் என்ன பிடுங்கிக்கவா போறேன்?” என்று கேட்கவும், அவனை முறைத்த சரவணன்,

“வருங்கால பொண்டாட்டியா? என்ன உளறிட்டு இருக்க? ஆதிரான்னு மட்டும் சொல்லாதே.. நான் அதை நம்ப மாட்டேன்.. அப்பப்போ என்னை வெறுப்பேத்த நீ வெறும் போன்ல பேசறா மாதிரி பொய் சொல்லறன்னு எனக்குத் தெரியும்.. அவகிட்ட நான் வார்ன் பண்ணி இருக்கேன்.. சும்மா என்னை வம்பு பண்ண அவ பேரைச் சொல்லாதே..” புரையேறிய தொண்டையை சரி செய்துக் கொண்டுக் கேட்க,

“உளறலா? நான் என்ன லூசா உளற? நம்பலைன்னா இங்கப் பாரு..” என்றவன், தனது செல்போனை எடுத்து, அவன் இப்பொழுது எடுத்த போட்டோவை அவளுக்கு அனுப்பியதைக் காட்ட, அவன் போட்ட போட்டோவுக்கு ஆதிரா போட்டிருந்த இதய எமொஜியையும் பார்த்து திகைத்து கார்த்திக்கைப் பார்க்க,

“நம்பலைன்னா இதையும் பாரு..” என்றவன், ஆதிராவுடன் பீச்சில் எடுத்துக் கொண்ட செல்ஃபியைக் காட்ட, சரவணன் மேலும் அதிர்ந்து போனான்..

“வாட்? அப்போ நீ பேசினது எல்லாம் நிஜமா தானா?” அவன் அதிர்ச்சியுடன் கேட்க,

“என்ன வாட்? எதுக்கு இப்போ இவ்வளவு ஷாக் ரியாக்ஷன் கொடுக்கற? நான் அவகிட்ட தானே பேசிட்டு இருந்தேன்.. அதை நீ நம்பலைன்னா நான் என்ன செய்யறது? வெறும் போனை வச்சிக்கிட்டு டார்லிங்ன்னு கொஞ்ச நான் என்ன லூசா?” என்றவன், ஆதிராவிற்கு அழைக்க, எடுத்ததும்,

“ஹலோ அப்பு.. டிரஸ் உங்களுக்கு ரொம்ப சூப்பரா இருக்கு.. அந்த கூலர்ஸ் போட்டு கூலா நீங்க நிக்கற போட்டோ எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு.. சூப்பர் க்யூட் என் அப்பு.. சட்டை சைஸ் உங்களுக்கு கரக்டா இருக்கா?” எனவும்,

“செம பெர்ஃபெக்ட் ஆதிரா.. பான்ட் தான் கொஞ்சம் லூசா இருக்கு.. நீ அவனோட சைஸ் கேட்டு வாங்கினது அதுல மிஸ் ஆகிருச்சு..” என்று குறை போலச் சொல்ல, சரவணன் பல்லைக் கடித்தான்..

“உனக்கு எல்லாம் அவ வாங்கித் தரா பாரு.. அதுக்கு நல்லா இருக்குன்னு சொல்லாம குறை சொல்லிட்டு இருக்க? உனக்கு எல்லாம் இது அதிகம்டா.. இதுல அவ என்கிட்டையே சைஸ் கேட்டு உனக்கு வாங்கித் தந்திருக்கா.. அவளை..” என்று முணுமுணுக்க,

“ஏன் என்னாச்சு? நீங்களும் எஸ்.பி. யும் ஒரே போல தானே இருக்கீங்க..” ஆதிரா குழப்பமாகக் கேட்க,

“அவன் சைஸ்க்கு வாங்கினா எனக்கு லூசா தானே இருக்கும்.. ஏன்னா அவனுக்கு லைட்டா தொப்பை இருக்கே.. உன் கார்த்திக் ஃபிட்டும்மா..” என்று சரவணனைப் பார்த்துக் கொண்டே சொல்லவும், ‘ஆதிரா..’ சரவணன் பல்லைக் கடித்தான்..

“சும்மா அவனை வம்புக்கு இழுக்காதீங்க.. சரி சொல்லுங்க.. ஆபீஸ்க்கு கிளம்பிட்டீங்களா? என்னோட பிரியாணி எங்க? நான் இன்னைக்கு லஞ்ச் எடுத்து வரல.. உங்களை நம்பி நான் காலையிலேயும் சாப்பிடாம வரேன்.. கொஞ்சம் சேர்த்து கொடுங்க..” அவள் உரிமையாகச் சொல்லவும், சரவணன் ஸ்பூனை கப்பில் குத்த,

“சரவணன் கிட்ட கொடுத்து விடறேன் ஆதிரா.. செஞ்சி எடுத்து வச்சிட்டேன்.. நேத்து நைட் வரும்போதே உனக்கு ஒரு டிபன் பாக்சையும் வாங்கிட்டு வந்துட்டேன்..” என்ற அவனது பதிலில், சரவணன் அவனை முறைக்கத் துவங்கினான்..

“ஹையோ எஸ்.பி.யா? ஏன் உங்களுக்கு இந்த கொலைவெறி? அவன் என்னை கொல்லப் போறான்.. நீங்களே வந்து தந்துட்டு போங்களேன்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. என்னோட செல்ல அப்பு இல்ல.. அப்படியே நாம மீட் பண்ணினா போலவும் இருக்கும்ல.. உங்களை நான் புது டிரஸ்ல பார்த்தது போல இருக்கும்ல..” என்று கெஞ்சவும், அதை ஸ்பீக்கரின் வழியே கேட்ட சரவணனுக்கு, ஆதிரா நேரில் இருந்தால் என்ன செய்திருப்பான் என்றே புரியாத அளவு கோபம் தலைக்கு ஏறியது..

“அதெல்லாம் அவ்வளவு தூரம் வர முடியாது.. நான் நேரா ஆபீஸ்க்கு போகணும்.. நாளைக்கு கோர்ட்ல ஹியரிங் இருக்கு.. அதுக்கு ரெடி பண்ணனும்.. அதனால அவன்கிட்ட தந்து விடறேன் ஓகேவா.. அவன் ஏதாவது சொன்னா என்கிட்ட சொல்லு.. நான் பார்த்துக்கறேன்..” கார்த்திக் கேட்கவும்,

“ஹ்ம்ம்.. போங்க கார்த்திக்.. நான் சேட் ஆகிட்டேன்..” அவளது குரல் உள்ளே சென்றது..

“நான் சொன்னா புரிஞ்சிக்கணும் ஆதிரா..” கார்த்திக் சொல்லவும்,

“ச..ரி.. கொடுத்து விடுங்க.. நானும் ஆபீஸ் பஸ் ஏறிட்டேன்.. போனை வச்சிட்டு பாட்டு கேட்கறேன்.. பை அப்பு..” என்று சொன்னவளிடம், ‘சரி’ என்று போனை வைத்தவன், சரவணனைப் பார்த்து கேலியாக புருவத்தை உயர்த்த, சரவணன் கோபமாக எழுந்து கிட்சனிற்குச் சென்றான்..

அவன் பின்னோடு சென்ற கார்த்திக், “இந்த டிபன் பாக்ஸ்சை உங்க அண்ணிக்கிட்ட கொடுத்திரு.. இது உனக்கு.. கூட கத்திரிக்காய் கொத்சு பண்ணி இருக்கேன்..” என்று சொல்லவும்,      

அவனை மேலும் கீழும் பார்த்தவன், “இதெல்லாம் என்னிக்காவது எனக்கு செஞ்சு இருக்கியா? அவளுக்கு செஞ்ச உடனே அதை எடுத்துட்டு போய் கொடுக்க எனக்கு லஞ்சம் தர இல்ல.. ரொம்ப ஓவரா பண்ணிட்டு இருக்க? அவ எப்போ எப்படி உனக்கு ஓகே சொன்னா? எங்க பார்த்துப் பழகினீங்க?” என்று பல்லைக் கடிக்க,

“தம்பி.. ஒரு ஆளைக் கவுக்கணும்ன்னா சில பல வேலை எல்லாம் செய்யணும்.. அது எல்லாம் உனக்குப் புரியாது.. நீ இன்னும் சின்னப் பிள்ளையாவே இருக்க.. அவ சொல்றது போல பொடியன் நீ.. கொஞ்சம் வளர்ந்தா புரியும்.. இப்போ இதை உங்க அண்ணிக்கிட்ட சிரிச்சிக்கிட்டே கொடுக்கணும்.. அவளை முறைக்கிற வேலை எல்லாம் வேண்டாம்.. பெரிய காவலன் போல அவளை வார்ன் பண்ற வேலையும் வேண்டாம்..” என்றவன், ஆதிராவின் டப்பாவையும், அவனது டப்பாவையும் எடுத்து கையில் கொடுக்க, சரவணனோ, ஆதிரா அனைத்தையும் இவனிடம் சொன்னதில் கோபம் பொங்க, ‘ஆதிரா..’ என்று மனதினில் பல்லைக் கடித்தான்..             

அவர்கள் டப்பாவை எடுத்துக் கொள்ளவும், அங்கு வந்த அவர்களது தாய் வரமகாலட்சுமி, “என்னங்கடா வாசனை மூக்கைத் துளைக்குது? என்ன செஞ்சி இருக்கீங்க?” என்று கேட்கவும்,

“பிரியாணி செஞ்சி இருக்கேன்.. மதியத்துக்கு உங்களுக்கும் சேர்த்து செஞ்சிருக்கேன்.. சாப்பிட்டு டிவி பாருங்க..” என்று சொன்ன கார்த்திக்,

“மறக்காம அவ எல்லாமே சாப்பிட்டாளான்னு பார்த்துட்டு வா என்ன?” அவரைக் கண்டுக் கொள்ளாமல் சரவணனிடம் வம்பு வளர்க்க,

அவர்களது தாய் “யார சாப்பிடாங்களான்னு பார்க்கணும்? நானா?” என்று கேட்கவும்,

“ஹான்.. உங்களை இல்ல.. உங்க மூத்த மருமகளை..” என்ற சரவணன், இரண்டு டப்பாக்களையும் எடுத்துக் கொண்டு, தனது பையின் அருகில் கொண்டு வைத்தான்..     

“என்னது? யாரு என் மருமக? சொல்லவே இல்ல.. கார்த்திக்குக்கு கல்யாணம் ஆகிருச்சா?” என்று அவனின் பின்னோடு அவர் செல்லவும்,

“ரொம்ப அருமை.. நல்லவேளை அவன் பேராவது உங்களுக்கு நியாபகம் இருக்கே..” நக்கலாகக் கேட்டவன், 

“அவனுக்கு கல்யாணம் ஆகிருச்சான்னு என்கிட்டே கேட்கக் கூடாது.. அங்க இருக்கற உங்க பெரிய பையனைக் கேட்கணும்.. அவன் தானே லவ் பண்றான்.. பொண்ணு பேரு ஆதிராவாம். எங்க ஆபீஸ்ல வேலை செய்யறாளாம்..” என்ற சரவணனை, கேலியாக பார்த்துக் கொண்டே கார்த்திக், தனது அலுவலகத்திற்கு கிளம்பிச் செல்ல,

“அவன் சரியான முசுடு.. அவன்கிட்ட அதும் ஆபீஸ் போகும்போது ஏதாவது கேட்டா கடிச்சு குதறிடுவான்..” என்றவர், அவனை விடுத்து, சரவணனைப் பிடித்து நிறுத்தி,

“யாருடா அவ? உனக்கு அந்தப் பொண்ணைத் தெரியுமா? பொண்ணு எப்படி? உன் ஆபிஸ்ல இருக்க பொண்ணை இவனுக்கு எப்படித் தெரியும்? இவனை ஏமாத்தி அவ கவுத்துட்டாளா? உங்க ஆபிஸ்ல இருந்துக்கிட்டு இவனை எப்படி பிடிச்சா?” படபடவென்று பொரிய,

“கொஞ்சம் நிறுத்தறீங்களா? அவ ரொம்ப தங்கமான பொண்ணு.. அவளை எங்கயோ டான்ஸ் ஷோல பார்த்துட்டு இவன் தான் பின்னால சுத்தி அவளைக் கவுத்துட்டான்.. இந்த சத்தம் எல்லாம் அவன்கிட்ட போடுங்க.. என்கிட்டே வேண்டாம்.. இந்த வீட்டுக்கு அவ சரிப்பட மாட்டான்னு எவ்வளவு சொல்லியும் கேட்டானா அவன்.. அவ ஒரு அப்பிராணி.. உங்கக்கிட்ட மாட்டிக்கிட்டு என்ன பாடுபடப் போறாளோ? தலைவிதி யாரை விட்டது?” என்றபடியே தலையில் அடித்துக் கொள்ள,

“டேய்.. பெரிய இடத்து பொண்ணா? நிறைய..” வரமஹாலக்ஷ்மி எதுவோ கேட்க வரவும்,

“ஆபிஸ்ல போய் அவளை வச்சுக்கறேன்.. தலையால அடிச்சுக்கிட்டேன்.. சொன்னதைக் கேட்கவே இல்ல..” கருவிய சரவணன், அடுத்து தனது அன்னை பேசுவதற்குள், தனது அலுவலகப் பையை எடுத்துக் கொண்டு கிளம்பிச் சென்றான்..

அலுவலகம் சென்ற சரவணன், தொப்பென்று அவனது சீட்டில் சென்று அமர, அவனது செவிகளில் விழுந்த பாடலில் சரவணன் கொதித்துப் போனான்..

உனக்கென மணி வாசல் போலே

மனதை திறந்தேன்

மனதுக்குள் ஒரு ஊஞ்சல் ஆடி

உலகை மறந்தேன்

வலையோசைகள் உன் வரவை கண்டு

இசை கூட்டிடும் என் தலைவன் என்று

நெடுங்காலங்கள் நம் உறவை கண்டு

நம்மை வாழ்த்திட நல் இதயம் உண்டு

இன்ப ஊர்வலம் இதுவோ ?

கண்ணாளன் ஆசை மனதை

தந்தானே அதற்காக..

இதழில் நாணப் புன்னகையுடன் பாடிக்கொண்டே கார்த்திக் அனுப்பிய புகைப்படத்தை தன்னை மறந்து அவள் பார்த்துக் கொண்டிருக்க, அதைப் பார்த்ததும் கோபம் பொங்க,

‘அங்க பாடற பாட்டுக்கு இங்க கண்டினியூட்டியா? நேத்து ரெண்டு பேரும் இந்த பாட்ட பாடி ட்யூயட் ஆடினாங்க போல.. ரெண்டும் அதே பாட்டை பாடிக்கிட்டு திரியறாங்க.. கடுப்ப கிளப்பிக்கிட்டு..’ மனதினில் பொருமிக்கொண்டு, ஆதிராவின் அருகில் செல்ல, காலையில் தான் எடுத்து கார்த்திக் அனுப்பி இருந்த புகைப்படத்தை அவள் மெய் மறந்து பார்த்துக் கொண்டிருக்கவும்,

‘சரவணா.. இப்படி நீயே உனக்கு ஆப்பு வச்சிக்கிட்டியே.. அவன் உன்கிட்ட பீடிகியா பேசும்போதே சுதாரிச்சு இருக்க வேண்டாமா? இப்போ பாரு.. என்னவோ ஷாருக்கான்.. சல்மான்கானைப் பார்க்கறது  போல பார்த்துட்டு இருக்கா.. எருமை.. எருமை..’ அவளை மனதினில் திட்டியவன், நங்கென்று டிபன் பாக்சை வைக்க, ஆதிரா அவனை நிமிர்ந்துப் பார்த்தாள்..

“ஹாய் எஸ்.பி. எப்போ வந்த?” இயல்பாக அவள் கேட்க,

“நாங்க வந்தது கூட தெரியாத அளவுக்கு ட்ரீம்லேண்ட்ல இருக்கீங்க போல இருக்கு?” என்று கடுப்புடன் கேட்டவன்,

“ஹான்.. மறந்துட்டேன்..” என்று தலையில் தட்டிக் கொண்டு,   அவளை முறைத்துக் கொண்டே தனது உதட்டை முழம் நீளத்திற்கு சிரிப்பது போல இழுத்து வைத்துக் கொண்டவன்,

“அண்ணி.. அண்ணா உங்களுக்கு இந்த டிபன் பாக்சைக் கொடுத்தார்.. ந..ல்…ல்..லாஆஆ  சாப்பிட்டு கனவு காணுங்க..” என்று சொல்லிவிட்டுத் தனது இடத்தில் சென்று அமர்ந்து அவளை முயன்ற அளவு முறைக்க, ஆதிரா அவனைப் பார்த்து திருதிருவென விழித்தாள்..

‘ஹையோ இவன் செம கோபமா இருக்கானே.. இவர் வேற என்ன சொல்லி விட்டு இருக்காரோ? இவனை நான் எப்படி சமாளிப்பேன்? என்னை இப்படி தனியா மாட்டி விட்டுட்டீங்களே..’ என்று மனதினில் நினைத்துக் கொண்டவள், “எஸ்.பி..” என்று துவங்கவும், அந்த நேரம் அலுவலக மெயில் வந்த அறிவிப்புத் தெரியவும், ‘அப்பறம் பேசிக்கலாம்..’ என்று தனது வேலையை செய்யத் துவங்கினாள்.

வேலையைத் துவங்கவுமே அவளது கவனம் மொத்தமும் சிறிது நேரத்தில் வேலையில் செல்ல, மதிய இடைவேளையில் கார்த்திக் அனுப்பிய உணவை ரசித்து ருசித்து, முகத்தில் ததும்பிய மகிழ்ச்சியுடன் உண்டவளைப் பார்க்கப் பார்க்க சரவணனுக்கு கோபம் தலைக்கேறியது.

அவளை முறைத்தவன், தனது டப்பாவை எடுத்துக் கொண்டு அமர, ‘ஈஈ..’ என்று இளித்துவிட்டு, ஆதிரா அந்த டப்பாவை முழுவதுமாக உண்டு முடித்து, அதை சுத்தம் செய்துக் கொண்டு வந்து அவனிடம் தர, அதை வாங்கி வைத்துக் கொண்டவன்,

“நாளைக்கு என்ன மெனு சொல்லி இருக்கீங்க? சொல்லலைன்னா நல்ல மெனுவா சொல்லுங்க..” நக்கலாகக் கேட்கவும்,

“இது வரை எதுவுமே சொல்லல எஸ்.பி.. அப்பறம் ஏதாவது சாப்பிடணும் போல இருந்தா அவர்கிட்ட சொல்றேன்.. கண்டிப்பா செஞ்சுக் கொடுப்பார்..” என்று கூறிவிட்டு, அவன் திட்ட வாயெடுப்பதற்குள் லிப்ட்டை நோக்கி ஓடிச் செல்ல, சரவணன் பல்லைக் கடித்தான்..

’இவ அவனுக்கு மேல என்னை வெறுப்பேத்திட்டு இருக்காளே!! என்ன தைரியம் இருந்தா என்கிட்டயே மறுபடியும் டிபன் பாக்சை கொண்டு வந்து தருவா? என்னை என்ன அனுமாருன்னு நினைச்சிட்டாங்களா ரெண்டு பேரும்?’ என்று மனதினில் புலம்பியவன், வாயில் உணவைத் திணித்துக் கொண்டே,

‘நல்லா தான் செஞ்சிருக்கான்.. வீட்டுல இருந்து சாப்பாடு எடுத்துட்டு வரதும் நல்லா தான் இருக்கு. ஏதோ வயலுக்கு போற தண்ணி புல்லுக்கும் கிடைக்கிறது போல.. எனக்கும் நல்ல சாப்பாடு கிடைக்குது..’ என்று நினைத்துக் கொண்டவன், மீண்டும் தனது இடத்தில் சென்று அமர்ந்தான்..

அப்பொழுதும் ஆதிரா மொபைலில் சீரியாசாக மெசேஜ் செய்துக் கொண்டிருக்க, இறங்கி இருந்த அவனது கோபம் தலைக்கு ஏறியது. அவளது இதழில் இருந்த மெல்லிய புன்னகையைப் பார்த்தவன், ‘வேலை செய்யற நேரத்துல என்ன மெசேஜ்?’ என்று மனதினில் திட்டிக் கொண்டிருக்க, அப்பொழுது அவளது செல்போன் வைப்ரேட் ஆக, ஆதிரா தனது செல்லை ஹெட்போன்சில் சொருகிவிட்டு, வேலை செய்துக் கொண்டே பேசத் துவங்கினாள்..

“ஹலோ.. என்ன கால் பண்ணிட்டீங்க? நான் ஆபிஸ்ல இருக்கறதுனால தானே மெசேஜ் செய்யறேன்.. இப்படி பொசுக்குன்னு கால் செய்துட்டீங்க? என்ன வக்கீல் ரொம்ப பிசியா இருக்கீங்களா?” என்று கேட்க, அதைக் கேட்ட சரவணன், திரும்பி அவளை முறைத்தான்..

“நான் பாட்டுக்கு கேஸ் கட்டுக்குள்ள தலையை நுழைச்சிக்கிட்டு இருந்தேன்.. நீ தானே மெசேஜ் பண்ணின? அதுக்குத் தான் போன் செஞ்சிட்டேன்.. மெசேஜ் எல்லாம் லொட்டு லொட்டுன்னு எவ்வளவு நேரம் செஞ்சிட்டு இருக்கறது?” கார்த்திக்கின் கேள்விக்கு, களுக்கென்று சிரித்தவள்,  

“கேஸ் கட்டுக்குள்ள எவ்வளவு நேரம் புதைஞ்சு இருப்பீங்க? கொஞ்சம் உங்களுக்கும் ஃபிரெஷ் ஏர் வேணும்ல.. அது தான் அபயம் அளிச்சேன்..” என்றவளைப் பார்த்த சரவணன், தனது பேனாவை வேண்டுமென்றே கீழே போட, அதை விழிகளை மட்டும் திருப்பிப் பார்த்தவள்,

“இங்க உங்கத் தம்பி செம கோபமா இருக்கான்.. காலையில இருந்து என்னை முறைச்சிட்டு இருக்கான்.. இப்போ பேனா கீழ தான் விழுது.. அடுத்து என் மேல விழும்..” ஆதிரா சிரித்துக் கொண்டே சொல்லவும், தெய்வா அதற்குள் பலமுறை திரும்பிப் பார்க்கவும், அதை கவனித்த ஆதிரா,

“எல்லாருமே என்னை ஒரு மாதிரி பார்க்கறாங்க.. நான் சாயந்திரம் ஆபீஸ் விட்டு வந்த பிறகு பேசறேன்.. இப்போ போனை வைக்கவா? ப்ளீஸ்..ப்ளீஸ்” என்று கெஞ்ச,

“இல்ல.. வைக்க மாட்டேன்.. அவன் முறைச்சா நீ வைக்கணுமா?” இடக்காக கார்த்திக் கேட்க,   

“ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்… நான் போனை வைக்கிறேனே.. உங்க தம்பி வேற காலைல இருந்தே ரொம்ப முறைச்சிட்டு இருக்கான்..” எனவும், சத்தமாக சிரித்த கார்த்திக்,

“அது வேற ஒண்ணும் இல்ல.. அவன் என்னை நேத்து எங்க போனன்னு கேட்டான்.. அப்போ நான் என்னோட வருங்கால பொண்டாட்டி கூட ரிசார்ட்டுக்கு போனேன்னு சொன்னேனா? அதுக்கா இருக்கும்..” என்று சொல்லவும்,  

“அடப்பாவி.. அப்போ அவனும் தப்பா தானே நினைச்சு இருக்கான்.. என்னவோ நேத்து பொண்ணுங்க தான் அப்படி இப்படின்னு சொன்னீங்க? இப்போ பாருங்க அவனை..” என்று வேகமாகக் கேட்டவள்,

“அது ஏன் அப்படி சொன்னீங்க? வெளிய போனோம்ன்னு சொல்லி இருக்கலாம் இல்ல.. இப்போ எப்படி நான் அவன் முகத்தைப் பார்க்கறது?” பரிதாபமாகக் கேட்க,

“அடச்சே.. பட்டு.. அவன் தப்பா எல்லாம் நினைச்சு இருக்க மாட்டான்டா கண்ணம்மா.. அவனுக்கு என்னைப் பத்தி நல்லாவே தெரியும்.. உன்னைப் பத்தியும் தெரியும்.. இது நீ எனக்கு ஓகே சொன்னதுக்கான முறைப்பு.. நீ வேணா நான் போனை வச்சதும் கேட்டுப் பாரேன்.. என் தம்பி நான் சொன்னதைத் தான் சொல்லுவான்..” நம்பிக்கையாகச் சொல்ல, ஆதிரா அந்தப் பேச்சில் சமாதானமானாள்.

“சரி.. போனை வைச்சிடவா? கொஞ்சம் வேலை இருக்கு.. அவனும் ரொம்ப முறைக்கிறான்..” மீண்டும் சரவணனைப் பார்த்துக் கொண்டே அவள் கேட்க,  

“அப்போ நான் கண்டிப்பா போனை வைக்க மாட்டேன்.. கொஞ்ச நேரம் பேசு.. சும்மா கேஸ் கட்டுக்குள்ள புதைஞ்சிட்டு இருந்தவனை வெளிய இழுத்துட்டு வந்துட்டு இப்போ போய் வேலையைப் பாருன்னா.. நான் மாட்டேன்பா..” கார்த்திக் அடம் பிடிக்க,

“ஹையோ இந்த அண்ணன் தம்பிங்க கிட்ட மாட்டிக்கிட்டு நான் முழிக்கறேன்.. அவன் முறைக்கிறான் நீங்க வைக்க மாட்டேன்னு அடம் செஞ்சா நான் என்ன தான் செய்யறது? இப்படி ஏன் ஏட்டிக்கு போட்டியா ரெண்டு பேருமே பண்ணிட்டு இருக்கீங்க?” அவள் சிணுங்கவும், கடுப்புடன் சரவணன், கார்த்திக்கிற்கு அழைக்கத் துவங்கினான்.

“உன்னோட கொழுந்தன் இங்க எனக்கு போன் பண்ணிக்கிட்டு இருக்கான்.. நீ என்ன செய்யற.. அவனைப் பார்த்து, ‘உன் வேலையைப் பார்த்துக்கிட்டு போடா’ன்னு சொன்னேன்னு சொல்லு..” என்று சொல்லவும்,

“ஹான்.. நான் மாட்டேன்..” அவள் பதறிப் போனாள்..  

“இப்போ நீ அதைச் சொல்லல.. நான் இப்போ நேர்ல வந்து சொல்லிட்டு போவேன்..” அவன் அடமாகச் சொல்லவும், தலையில் அடித்துக் கொண்ட ஆதிரா,

“’உன் வேலையைப் பார்த்துக்கிட்டு போடா’ அப்படின்னு அவர் சொல்றார் எஸ். பி.” அப்பாவியாக அவள் சொல்லவும், சரவணன் அவளை முறைக்க, ஆதிரா பாவமாக அவனைப் பார்க்கும்பொழுதே,

“சரி.. நான் போனை வைக்கிறேன்.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. நைட் வீட்டுக்கு வந்து பேசலாம்..” என்று கார்த்திக் போனை வைக்க, ஒரு பெருமூச்சுடன் போனை வைத்த ஆதிரா, கடகடவென்று தண்ணீரைக் குடித்துவிட்டு,  சரவணனைப் பார்த்து புன்னகைத்தாள்..

அவள் புன்னகைக்கவும், அதற்கு மேல் கோபத்தை இழுத்து வைத்துக் கொள்ள முடியாமல், “எவ்வளவு சொன்னேன் ஆதிரா? உன்கிட்ட யாராவது உன்னை ஃபாலோ செய்யறாங்களான்னு எவ்வளவு தடவ கேட்டு இருக்கேன்? இது எத்தனை நாளா நடக்குது? ஏன் என்கிட்டே சொல்லவே இல்ல..” என்று புலம்பலாகக் கேட்க,

“அது ரொம்ப நாளா ரெண்டு பேரும் பேசிட்டு இருக்கோம்.. கொஞ்ச நாள் முன்னால தான் அவரு சொன்னாரு.. எனக்கும் பிடிச்சு இருந்தது.” அதைச் சொல்லும்பொழுதே அவளது இதழ் வெட்கச் சிரிப்பை தத்தெடுக்க, சரவணன் ஆயாசத்துடன் பார்க்க,

“உங்க அண்ணா ரொம்ப நல்லவரு எஸ்.பி. நீ ஏன் இப்படிச் சொல்ற? நீயே உங்க அண்ணாவை விட்டுக் கொடுக்கலாமா? ஆனா.. நீ என்கிட்டே கோபமா இருக்கன்னு சொல்லி, நான் ரிசார்ட்டுக்கு போனதுக்கான்னு ஒரு காரணத்தை அவர்கிட்ட கேட்க, அவரு உன்னை கொஞ்சம் கூட விட்டுக்கொடுக்கல தெரியுமா? ‘என்னைப் பத்தி அவனுக்கு நல்லாத் தெரியும்’ன்னு சொன்னார்.. ஏன் அவர் மேல இவ்வளவு கோபமா இருக்க? அவர் பாவம்ல..” அவள் பரிதாபமாகக் கேட்க,

“அதுனால தானே சொல்றேன்..” சரவணன் வாய்க்குள் புலம்பினான்..

“நீ சொன்னதை நான் கேட்டேன்.. அவர நீ ஏன் இப்படி சொல்ற? அவரு ரொம்ப நல்லவரு தானே எஸ்.பி. எனக்கு நீ அவரோட தம்பின்னு நேத்துத் தான் தெரியும்.. உன்னை பத்தி நேத்து என் உடன்பிறப்புன்னு சொல்லும்பொழுது அவரு அவ்வளவு அன்பா சொன்னார் தெரியுமா? என்னோட குட்டித் தம்பின்னு அதுல அவ்வளவு பாசம் தான் எனக்குத் தெரிஞ்சது..” என்று அவள் மீண்டும் கேட்கவும், ஒரு பெருமூச்சுடன் சரவணன் இடம் வளமாக தலையசைத்துக் கொண்டான்..      

“நல்லா உன்னை பிரைன் வாஷ் பண்ணி இருக்கான்..” சரவணன் முணுமுணுக்க,

“இல்ல எஸ்.பி. எனக்கு அவரைப் பத்தி நல்லாத் தெரியும்.. நீ தான் தப்பா புரிஞ்சி இருக்க. அவரை ஒரு நாள் புரிஞ்சிக்கும் போது நீ ரொம்ப வருத்தப்படுவ சொல்லிட்டேன்..” நிறுத்தி நிதானமாகச் சொன்னவள்,

“இன்னொரு தடவ அவரை எனக்கு முன்னால எதுவும் சொல்லாதே.. என்னால தாங்க முடியல.. எனக்கு ஒரு மாதிரி இருக்கு.. உங்க ரெண்டு பேருக்குள்ள சண்டைன்னா அது உங்களோட.. என்கிட்டே முகத்தைக் காட்டாத.. இங்க நீயும் நானும் ஃப்ரெண்ட்ஸ் அவ்வளவு தான்..” என்று சொன்னவள், தனது கணினியைப் பார்த்து திரும்பிக் கொண்டாள்..        

அவளது அந்த வார்த்தை சரவணனை திகைக்கச் செய்ய, ‘இந்த வக்கீல் நல்லா பேச ட்ரைன் பண்ணி இருக்கான்.. இதுக்கு பேர் தான் கம்பன் வீட்டு கட்டுத் தரியும் கவி பாடும்ன்னு சொல்லுவாங்க போல.. டேய் அ..ண்..ணா..” என்று பல்லைக் கடித்தவன், அவளை சமாதானம் செய்து தன்னுடன் பேச வைக்க,

“சரி.. நேத்து பீச்ல நல்லா என்ஜாய் பண்ணினயா? ஒழுங்கா பார்த்துக்கிட்டானா? நீ கேட்டது எல்லாம் வாங்கித் தந்தானா?” அவனது கேள்விக்கு,

புன்னகையுடன், “என்னை ரொம்ப ரொம்ப பத்திரமா பார்த்துக்கிட்டார்.. அலைல நிக்கும்போது என்னோட கையை விடாம அவ்வளவு கெட்டியா பிடிச்சுக்கிட்டார்.. அவருக்கு நான்னா உயிரு..” பெருமை பொங்கச் சொன்னவளை தெய்வா அழைக்க, அதற்கு மேல் சரவணன் அமைதியானான்..

‘ஏதோ அவளை நல்லா பார்த்துக்கிட்டா சரி.. தலைவிதி யாரை விட்டது.. இவளைக் கல்யாணம் செஞ்சு அவன் கூட்டிட்டு வந்தா.. அம்மாவை இவகிட்ட விடவே கூடாது.. அதுக்கு என்ன வழின்னு தான் யோசிக்கணும்.. ஆனாலும் உனக்கு இந்த அடம் ஆகாதுடா அண்ணா..’ அந்த ஆறுதலுடன் தனது வேலையை கவனித்தான்..

இணையே என் உயிர் துணையே 
உன் இனிமையிலே நான் கரைவது ஏனடா.. 
யுகமாய் கை விரல் பிடித்து நாம் நடப்பது போல் 
நான் உணர்வது ஏனடா.. இணையே.. 

அந்த வார இறுதியில், ஆதிராவின் செல்போன் இசைக்க, அதை எடுத்துப் பார்த்தவள், “ஹலோ.. சொல்லுங்க அப்பு..” சோம்பலாக பேசத் துவங்கினாள்..  

“என்ன கண்ணம்மா குரலே ஒரு மாதிரியா இருக்கு? என்ன இன்னைக்கு ரொம்ப காலைல நேரத்துக்கு மெசேஜ் போட்டு இருக்க? ஏதாவது உடம்பு சரி இல்லையா என்ன?” கார்த்திக் கேட்கவும்,

“ஹ்ம்ம்.. உடம்புக்கு எல்லாம் ஒண்ணும் இல்ல.. மனசு தான் ஒரு மாதிரி இருக்கு.. என்னவோ விடிய காலையில அப்பா கனவுல வந்தார்.. அதுல இருந்தே தூக்கமே இல்ல.. ரொம்ப பார்க்கணும் போல இருக்கு..” அவளது குரலே சுரத்தில்லாமல் ஒலித்தது..

“ஓ.. இப்போ என்னடா செய்யலாம்? நான் டிக்கெட் புக் பண்ணித் தரவா? போய் பார்த்துட்டு வரியா?” கார்த்திக் கேட்கவும்,

“அதெல்லாம் நானும் செக் பண்ணிப் பார்த்துட்டேன் கார்த்திக்.. இந்த வாரம் எதுலையுமே டிக்கெட் இல்ல.. அதனால அடுத்த வாரத்துக்கு புக் பண்ணிட்டேன்.. லாங் வீக்என்ட் இல்ல.. அதுனால கிடைக்கல போல.. முன்னாலேயே தெரிஞ்சு இருந்தா செஞ்சு இருப்பேன்.. திங்கட்கிழமை வர்க் ஃப்ரம் ஹோம் பண்ணிட்டு செவ்வாய்கிழமை விடிய காலையில ட்ரைன்ல கிளம்பி வந்திருக்கலாம்.. பஸ்ல ஏறிப் போகலாமான்னு கூட யோசிச்சேன். அப்படியே கோயம்பேடுக்கு போய் பஸ் ஏறிப் போகலாம்ன்னு பார்த்தா.. டிவி நியூஸ்ல எல்லாம் தொங்கிக்கிட்டு போறாங்க.. நமக்கு அது எல்லாம் முடியாது.. கடுப்பா இருக்கு..” என்று சொல்லவும், கார்த்திக் யோசிக்கத் துவங்கினான்..

“சரி ஆதிரா.. நீ கொஞ்சம் டிவி பாரு.. கொஞ்ச நேரத்துல சரியா போயிடும்.. எனக்கு ஒரு முக்கிய வேலை இருக்கு.. ஒரு அரைமணி நேரத்துல உனக்குத் திரும்ப கால் பண்றேன்..” என்ற கார்த்திக் போனை அப்படியே அமர்த்த, ஆதிராவிற்கு சப்பென்று ஆகியது.. அழுகை முட்டிக் கொண்டு வர, ஒரு மூச்சு அழுது தீர்த்தவள், மூக்கை உறிஞ்சிக்கொண்டே மொபைலைப் பார்த்துக் கொண்டிருக்க, காலிங் பெல்லின் சத்தம் கேட்டது..

“இப்போ யாரு வந்திருக்கா?” கோபமாக கேட்டுக் கொண்டே கதவைத் திறந்தவள், அங்கு கார்த்திக் நிற்கவும், அவனை எதிர்ப் பார்க்காதவளுக்கு, அழுகை வெடித்துக் கொண்டு வந்தது..

“அச்சோ.. பேபிடால்.. எதுக்கு இப்போ இப்படி அழற?” அவளை மெல்ல தோளோடு அணைத்துக் கொண்டு உள்ள அழைத்து வந்தபடியே கேட்க,

“நீங்க அப்போ அப்படி போனை வைக்கவும் எனக்கு ரொம்ப ஒரு மாதிரி ஆச்சு.. நீங்களாவது ஆறுதல் சொல்லுவீங்கன்னு பார்த்தேன்.. நீங்களும் போனை வைக்கவும் அழுகையா வந்துச்சு..” சிறு பிள்ளைப் போல முகத்தைச் சுருக்க,

“நான் நேர்ல வந்து உன்னை சப்ரைஸ் பண்ணலாம்ன்னு தான் அப்படி சொல்லிட்டு வந்தேன்.. எப்படி என் சப்ரைஸ்? இப்போ ஓகே வா?” என்று கேட்கவும், அவனது கழுத்தைக் கட்டிக் கொண்டு, கன்னத்தில் எம்பி முத்தமிட்டவள்,

“ஹாப்பி.. ரொம்ப ரொம்ப ஹாப்பி..” என்று புன்னகைக்க, அவளது கன்னத்தில் தனது இதழ்களைப் பதித்தவன்,

“சரி.. உனக்கு ஒரு பதினஞ்சு நிமிஷம் தரேன்.. சீக்கிரம் ரெடி ஆகிட்டு வா.. அழகா டிரஸ் பண்ணிக்கிட்டு வா.. நாம ஒரு இடத்துக்கு போகலாம்.. ஒரு செட் டிரஸ் எடுத்துக்கோ..” என்று சொல்லவும், கண்களை விரித்துப் பார்த்து,

“எங்க போகப் போறோம்?” என்று கேட்க, அவளது இமைகளில் இதழ் பதித்தவன், அவளைத் தள்ளிக் கொண்டு, அவளது அறைக்குச் சென்று உள்ளே விட்டு கதவை மூட, வேகமாக முகத்தைக் கழுவிக் கொண்டு, ஆதிரா தயாராகி வந்தாள்..

“இன்னும் கொஞ்சம் கூட எக்ஸ்ட்ரா அழகு பண்ணிக்கிட்டு வந்திருக்கலாம்.. நானும் ரசிச்சிட்டே வருவேன்..” என்று அவன் சொல்ல, மீண்டும் அவசரமாக உள்ளேச் சென்றவள், கண்களுக்கு மையிட்டு, உதட்டிற்கு மெல்லிதான உதட்டுச் சாயம் பூசிக் கொண்டு வர, அவளைப் பார்த்து விசில் அடித்தவன், தான் வாங்கி வந்திருந்த உணவைப் பிரித்து வைத்தான்..

அவனை அவள் மீண்டும் விழிகள் விரியப் பார்க்கவும், “எனக்கு பசிக்குது.. சீக்கிரம் வா.. சாப்பிடலாம்.. நீ லேட் பண்ணப் பண்ண லேட் ஆகும் சொல்லிட்டேன்..” என்றவன், அவளுக்கு ஒரு வாயை எடுத்து அவளது வாயின் அருகே எடுத்துச் செல்லவும், அதை வாங்கிக் கொண்டவள்,

“எங்கப் போகப் போறோம்ன்னு சொல்லவே இல்லையே..” என்றுக் கேட்க,

“அதை சொன்னா தான் என் கூட வருவியா என்ன?” பதிலுக்கு கேட்கவும்,

“இல்ல.. இல்ல.. சும்மா ஒரு ஜெனரல் நாலேஜ்ட்க்கு தானே கேட்டேன்.. நீங்க எங்கக் கூட்டிட்டு போறீங்களோ அங்க கண்ண மூடிக்கிட்டு வருவேன்..” என்றபடி வேகமாக உண்டு முடிக்க, அவளை அழைத்துக் கொண்டு காரில் புறப்பட்டான்..

Leave a Reply

error: Content is protected !!