எங்கே எனது கவிதை – 22

எங்கே எனது கவிதை – 22
22
நன்றாக உறங்கிக் கொண்டிருந்த கார்த்திக்கைப் பார்த்த சரவணனுக்கு நெஞ்சத்தில் வலி எழுந்தது.. அதுவும் உடல் அசதியில், படுத்திருந்த அதே நிலையில் அவன் கிடந்து, குறட்டை வேறு விட, சதாசிவம் அவன் அருகில் சென்று கண்கள் கலங்க அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார்..
சரவணன் அவரைத் திரும்பிப் பார்க்க, மெல்ல கார்த்திக்கின் அருகில் அமர்ந்த சதாசிவம், அவனது தலையைக் கோதிக் கொடுத்தார். “என்னடா இப்படி கிடக்கான்?” சரவணனைப் பார்த்து வருத்தமாகக் கேட்க, அவரை அந்த அறையின் பால்கனிக்கு வருமாறு கைக்காட்டிய சரவணன், மெல்ல ஓசை எழுப்பாமல் கதவைத் திறக்க, சதாசிவம் அவனைப் பின்தொடர்ந்து சென்றார்..
“என்னடா.. என்ன ஆச்சு? சம்மந்தி முகமும் சரி இல்ல.. உன் முகமும் சரி இல்ல.. அவன் என்னவோ அடிச்சுப் போட்டது போல டிரஸ் கூட மாத்தாம தூங்கறான்..” சதாசிவம் கவலையாகக் கேட்க, அப்பொழுது அங்கு கார்த்திக்கைப் பார்க்க வந்த பாலகிருஷ்ணனைப் பார்த்தவர், கைக் காட்டி அழைக்க, அவரும் மெல்ல ஓசை எழுப்பாமல் கதவைத் திறந்தவர், அவர்கள் அருகில் சென்றார்..
“என்ன சம்மந்தி? ஏன் முகம் எல்லாம் இவ்வளவு வாடி இருக்கு? கண்டிப்பா ஆதிரா கிடைச்சிருவா. கவலைப்படாதீங்க..” அவரது கையைப் பிடித்துக் கொண்டு தேறுதல் சொல்ல,
“இல்ல சம்மந்தி.. என்ன இருந்தாலும் என் குழந்தையை நினைச்சா கவலையா தான் இருக்கு.. அவ ரொம்ப கேடு கெட்டவங்க கிட்ட சிக்கி இருக்கான்னு நினைக்கிறேன்..” அவரது உடல் நடுங்குவது போல இருக்க, சதாசிவம், அவரை ஆறுதலாக தட்டிக் கொடுத்தார்..
“ஏன் சம்மந்தி? அவங்க ஏதாவது உங்ககிட்ட கேட்டாங்களா?” சதாசிவம் கேட்க,
“இல்ல சம்மந்தி.. இன்னைக்கு நடந்த விஷயம் அப்படி..” என்றவர், அங்கு நடந்த நிகழ்வுகளின் தாக்கத்தில், குலுங்கி அழத் துவங்கினார்..
சதாசிவம் பதறிப் போக, “எனக்கே இன்னைக்கு நடந்த விஷயம் பயமா இருக்குப்பா.. ஆதிரா ஜாக்கிரதையா இருக்கணும்ன்னு மட்டும் தான் என்னோட எண்ணம் எல்லாம் தெரியுமா?” சரவணனின் குரலும் அடைத்தது.
சதாசிவம் கேள்வியாகப் பார்க்க, “உங்களுக்குத் தெரியுமா? அண்ணா அங்க சின்ன புள்ள மாதிரி திடீர்ன்னு நடந்தது எனக்கு என்னவோ அவனுக்கு மனநலமே பாதிச்சிருச்சுன்னு நினைக்கவே தோணிருச்சு.. அங்க அப்படி இருந்தது.. ஒரு கார்..” என்றுத் துவங்கிய சரவணன் அனைத்தையும் சொல்லி முடிக்க, சதாசிவம் அங்கிருந்த ஊஞ்சலில் தொப்பென்று அதிர்ச்சியுடன் அமர்ந்தார்..
“என்னடா இப்படி எல்லாம் செய்யறாங்க? ஏன் இப்படி எல்லாம் செய்யறாங்க? ஹையோ என் மருமக என்ன கஷ்டப்படறாளோ?” என்று பதறியவர், சட்டென்று நிமிர்ந்து,
“இவன் எப்படிடா அது ஆதிரா இல்லைன்னு உறுதியா சொல்றான்? இப்போ நீ சொல்றதைப் பார்த்தா எனக்கு பயமா இருக்கு.. இப்போவும் அவன் இப்படித் தூங்கறான்..” என்று கேட்க,
“தெரியலைப்பா.. ஆனா அவன் முதல்ல அழுதுட்டு தான் இருந்தான்.. அப்பறம் அந்த இதோட காலுல விழுந்து அழுதான் பாருங்க.. அப்போ அந்த காலைத் தொட்ட உடனே கண்ணைத் தொடைச்சிட்டு எழுந்துட்டான்.. அவன் அதுல ரொம்ப உறுதியா இருக்கான்.. அதோட ஏதோ மச்சம்ன்னு கூட சொன்னாங்க..” சரவணன் சொல்லிவிட்டு, பாலகிருஷ்ணனைப் பார்க்க,
“அவரு சொன்னது சரி தான் சம்மந்தி.. ஆதிராவுக்கு இடது காலுல பின்னால பாதத்துக்கு மேல ஒரு பொட்டு போல குட்டி மச்சம் இருக்கும்.. அது அந்த இதுல இல்ல.. நல்லவேளை அந்தக் கால் எரியாம இருந்து நமக்கு அடையாளம் காட்டிடுச்சு..” என்ற பாலகிருஷ்ணன்,
“எனக்கு அந்த நேரம் இதயமே பிளந்து போச்சு.. அவருக்கு முன்னயே ஏதோ புரிஞ்சி தான், மதி தம்பி போன் செய்து கூப்பிட்ட பொழுது போக மாட்டேன்னு அடம் பிடிச்சார் போல.. அவரும் இவரைப் புரிஞ்சிக்கிட்டு உடனே சித்தார்த் தம்பியை கூப்பிட அனுப்பிட்டார்.. கொஞ்ச நேரம் எங்களுக்கு எல்லாம் நிஜமாவே ஒண்ணுமே புரியல.. ஆதிரா எங்களை விட்டு போயிட்டான்னே நினைச்சிட்டோம். கார்த்திக் அந்த காலைத் தொட்டு சொல்ற வரை.. எங்களுக்கு எல்லாம் உயிரே இல்ல..” அந்த நினைவுகளில் நடுங்க, சதாசிவம் அவரது கையைப் பிடித்துக் கொண்டார்.
“ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சி வச்சிருக்காங்க.. நான் இதுவரை ரெண்டு பேரையுமே சேர்த்து பார்த்தது இல்லையே.. இப்போ எனக்கு ரெண்டு பேரையும் சேர்ந்து பார்க்கணும்ன்னு ரொம்ப ஆசையா இருக்கு. அவன் எந்த அளவு அவளை கவனிச்சு இருந்தா.. அந்த மச்சத்தை வச்சு அவ இல்லைன்னு சொல்லுவான்.. சீக்கிரம் ஆதிரா கிடைக்கட்டும்.. அடுத்த முஹூர்த்தத்துலயே கல்யாணம் செய்துடலாம்.. ரெண்டு பேரும் தனியா இருந்தது போதும்.. அவங்க சந்தோஷமா வாழறதை கண் குளிரப் பார்க்கணும்.. இனிமேவாவது அவன் சந்தோஷமா இருக்கட்டும்..” கண்கள் கலங்கச் சொன்னவர், பாலகிருஷ்ணன் அவரது கையெடுத்துக் கும்பிடவும், அதைப் பிடித்துக் கொண்டு,
“என்ன சம்பந்தி இதெல்லாம்.. நம்ம பிள்ளைங்க சந்தோசம் தானே நமக்கு முக்கியம்.. கடவுளை வேண்டிப்போம்.. ஏதோ ஒரு இது இவனை அவகிட்டயே சுத்திச் சுத்தி எப்படியோ கொண்டு விடுது இல்ல.. அதே போல அவ ஏதாவது தான் இருக்கும் இடத்தை, எப்படியாவது ஒரு பேப்பர்ல எழுதி வெளிய போட்டா, யார் கையிலையாவது கிடைச்சு அவளைக் காப்பாத்திடலாம்ல.. அங்க அவளுக்கு அதுக்கான சந்தர்ப்பத்தை கடவுள் அமைச்சித் தரணும்..” தனது மனதின் ஆசையைச் சொல்ல, பாலகிருஷ்ணன் மெல்லிதாகப் புன்னகைத்தார்..
என்ன என்பது போல சதாசிவம் பார்க்க, “கண்டிப்பா அவ ஏதாவது செய்வா சம்மந்தி.. அவ இவரைத் தவிக்க விட மாட்டா.. இவரு முகம் கொஞ்சம் வாடினாலும் ஆதிரா தாங்க மாட்டா.. அவரு அதுக்கும் மேல.. அவ ஆசையா இருக்குன்னு சொல்லிட்டா அதை நிறைவேத்திட்டு தான் மறுவேலை பார்ப்பார்.. ஒருதடவ என்னைப் பார்க்கணும் போல இருக்குன்னு சொன்னவளை கூட்டிக்கிட்டு அங்க ஊருக்கே வந்துட்டார்.. என்னைப் பார்த்தவ, ரெண்டு நாள் கூட எங்கக் கூடத் தங்காம, மறுநாள் அவரோடவே ஊருக்கு கிளம்பிட்டா.. ‘அப்பறம் எதுக்குடி இங்க வந்த, ஒரு ரெண்டு நாள் கூட இருந்துட்டு போகலாம் இல்லை’ன்னு அவங்க அம்மா கேட்டதுக்கு, ‘நான் இங்க இருந்தா அவரை எப்படி நான் பார்க்கறது’ன்னு கேள்வி கேட்டா.. அவ அம்மா என்ன பதில் சொல்லுவா.. சரின்னு மாப்பிள்ளையோடவே அனுப்பி விட்டா. மாப்பிள்ளையை விட்டு எங்க கூடவே இருக்க முடியாம தவிக்கிறவ.. இப்போ இத்தனை நேரம் அவ இவரைப் பார்க்காம ரொம்ப தவிச்சு போயிருப்பா.” என்றவர், அந்த நாள் நினைவுகளில் இதழ்களில் புன்னகை பூக்க, கார்த்திக்கைத் திரும்பிப் பார்த்து விட்டு சதாசிவத்தைப் பார்த்தார்..
“ஒரு தடவ அங்க ஊருக்கு வந்திருந்த போது அங்க ஒரு மரம் சாஞ்சதுல இன்டர்நெட் வயர் எல்லாம் கட் ஆகிருச்சு.. அந்த தடவ நல்ல மழை வேற.. கரண்டும் இல்ல.. அவளோட மொபைல்ல இன்டர்நெட்டும் சரியா வரல.. சுத்திட்டே இருந்துச்சு.. அதனால அவளால அவர் கூட பேசத் தான் முடிஞ்சது.. வீடியோ கால்ல பார்க்க முடியல.. அதோட சார்ஜ் வேற போட மறந்து போய், மொத்தமா மொபைலும் ஆஃப் ஆகிப் போச்சு.. அன்னிக்கு அவ தவிச்ச தவிப்பு இருக்கே.. எனக்கும் சுதாவுக்கும் சிரிப்பு தான் வந்தது.. மறுநாள் காலையில கிளம்ப ட்ரைன் டிக்கெட் போய் வாங்கிட்டு வரச் சொல்லி நச்சரிக்கத் தொடங்கிட்டா..
மழையில எங்கப் போய் வாங்கறதுன்னு கேட்டதுக்கு அவளுக்கு அழுகையும் ஆத்திரமுமா வருது.. புசுபுசுன்னு நைட் பூரா தூங்கவே இல்ல.. கடைசியில பார்த்தா விடிய காலையில கொட்டற மழையில மாப்பிள்ளை வந்து நிக்கறார்.. எனக்கும் சுதாவுக்கும் சிரிப்பு தாங்கல.. கையோட அவளோட மொபைல்க்கு பவர் பேங்கர் வேற.. இவரை என்னச் சொல்றது சொல்லுங்க.. ரெண்டு பேரும் தனியா இருக்கறதே ஒரு நாளைக்கு மேல ரொம்ப கஷ்டம்.. ஊருக்கு வரும்போது அவர் தான் ட்ரைன் ஏத்தி விடுவார்.. அதே போல அவ திரும்பி வரும்போதும் அவர் தான் அவளை வந்து ரெயில்வே ஸ்டேஷன்ல வந்து கூட்டிட்டு போவார். அவ்வளவு ஜாக்கிரதையா பார்த்துப்பார்.. அதுவும் இனிமே அவளைத் தனியா விடவே மாட்டார்..” என்று கேலி போலச் சொல்லியவர்,
“அதனால தான் சொல்றேன்.. அவளால ரெண்டு நாள் அவரைப் பார்க்காம இருக்கறது எல்லாம் பெரிய விஷயம்.. கண்டிப்பா மாப்பிள்ளைக்கு எப்படியாவது துப்பு கொடுப்பா.. பார்ப்போம்..” என்று பாலகிருஷ்ணன் சொல்லவும், சதாசிவமும் சம்மதமாக புன்னகைக்க, யாரோ கார்த்திக்கின் அரைக்கதவைத் தட்டும் சத்தம் கேட்டது..
வேகமாக சென்று சரவணன் கதவைத் திறக்க, “தம்பி.. மாப்பிள்ளையைப் பார்க்க போலீஸ் வந்திருக்காங்க.. ஆதிரா அப்பாவையும் கேட்கறாங்க..” பதட்டத்துடன் சுதா சொல்லவும், அந்தச் சத்தத்தில் கண்களைத் திறந்துப் பார்த்த கார்த்திக், அங்கு மூவருமே இருக்கவும்,
“என்னாச்சு?” என்று சோம்பலாகக் கேட்க,
“தம்பி.. போலீஸ் வந்திருக்காங்க போல.. அது தான் சுதா பதறி சொல்லிட்டு இருக்கா..” எனவும், கார்த்திக் பட்டென்று எழ முயன்று, அப்பொழுது தான், தான் இருக்கும் நிலை உணர்ந்தவன் போல, மூவரையும் பார்க்க, மூவரும் தலையசைத்து விட்டு வெளியில் சென்றனர்..
மதி அங்கு நின்றுக் கொண்டிருக்க, அவனைக் கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்த சுதாவைப் பார்த்த பாலகிருஷ்ணன், “வாங்க தம்பி.. உட்காருங்க.. இவங்க தான் ஆதிராவோட அம்மா.. இவரு சம்மந்தி.. கார்த்திக்கோட அப்பா..” என்று அறிமுகப்படுத்த, சுதாவையும் சதாசிவத்தையும் பார்த்து புன்னகையுடன் தலையசைத்த மதி,
“கார்த்திக் எங்க அங்கிள்?” என்று கேட்கவும்,
“அவன் இதோ வரான்..” என்று சதாசிவம் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே அவசரமாக தலையை கையால் கோதிக் கொண்டே வந்த கார்த்திக்கைப் பார்த்த மதி, ஓடிச் சென்று கட்டிக் கொண்டான்..
“மதி..” கார்த்திக் திகைக்க, மற்றவர்களும் திகைக்க,
“கார்த்திக்.. டேய் மச்சான்.. அது நீ சொன்னது போல ஆதிரா இல்ல.. அது வேற யாரோ.. இங்கப் பாரு ப்ரூஃப்..” மதி அறிவிக்க, அவன் கையில் இருந்த கவரை அவசரமாக வாங்கிய கார்த்திக், அதைப் பிரிக்க,
“என்ன தம்பி.. என்னாச்சு? ஆதிராவைப் பத்தி ஏதாவது தெரிஞ்சதா?” சுதா கேட்க, அதில் பட்டென்று சுதாரித்தவன்,
“இருங்க கண்ணாடி போட்டுட்டு பார்க்கறேன்..” என்றபடி, மதியை ஒரு பார்வை பார்த்துவிட்டு, வேகமாக அறைக்குச் செல்ல,
“தம்பி.. எப்படி சொல்றீங்க?” கார்த்திக்கைத் தொடர்ந்து உள்ளே சென்றுக் கொண்டிருந்த மதியிடம் பாலகிருஷ்ணன் கேட்க, அவரது கையைப் பிடித்துத் தடுத்த கார்த்திக் எச்சரிக்கைப் பார்வை பார்த்து,
“வாங்க மதி…” என்ற கார்த்திக், மதியை அழைத்துக் கொண்டு, தனது அறைக்குள் நுழைய, மற்ற மூவரும் அவர்களைப் பின் தொடர, சுதா வித்யாவை கேள்வியாகப் பார்க்க, வித்யா உதட்டைப் பிதுக்கினாள்..
“வித்யா.. ஆதிரா பத்தி என்னவோ சொன்னாங்க இல்ல.. தம்பி கையில ஏதோ பேப்பர் கொடுத்தாங்க இல்ல..” சுதா வித்யாவைக் கேட்க,
“ஆமாம்மா.. அது ஆதிரா இல்லைன்னு சொல்லி ஏதோ கவர் கொடுத்தாங்க.. என்ன ஏதுன்னு தெரியலம்மா.. எது ஆதிரா இல்ல? என்ன விஷயம்ன்னு தெரியலையே.. வாங்க நாமளும் போய் என்னன்னு கேட்கலாம்..” என்ற வித்யா, அந்த அறைக்கு அருகில் செல்ல, அப்பொழுது தனது கண்ணாடியைப் போட்டுக் கொண்டு கார்த்திக், அந்த பேப்பரில் மிகுந்த கவனத்துடன் எதையோ ஆராய்ச்சி செய்துக் கொண்டிருந்தான்.. அதைப் பார்க்கப் பார்க்க, அவனது முகம் புன்னகையில் மிளிர்ந்தது..
“மதி.. எப்படி மதி? அந்த பாடில ரேகை எடுக்கற அளவுக்கு விரல்ல சதை இருந்ததா?” கார்த்திக் அதிசயமாகக் கேட்க, அவனது கண்களில் கண்ணீர் தளும்பிக் கொண்டு நின்றது..
“ஹ்ம்ம்.. நிஜமாவே அவனுங்க அவசர கதில தான் செஞ்சிட்டு போயிருக்காங்க கார்த்திக்.. அதுனால சில இடம் சரியா எரியல.. அந்த பாடில கைல கீழ் பக்கம் திரும்பி இருந்ததுனால சில விரல்கள் அப்படியே இருக்கு.. அதுல இருந்து எடுத்த விரல் ரேகை ஆதிராவோட மாட்ச் ஆகல.. ஆதிராவோட ஆதார் கார்டுல இருந்து எடுத்த விரல் ரேகையோட மாட்ச் பண்ணிப் பார்த்தோம்.. ரெண்டுமே மாட்ச் ஆகல.. நீ அங்க அவ்வளவு உறுதியா சொல்லவும், முதல் வேலையா அதைத் தான் ஃபாரன்சிக்கை செய்யச் சொன்னோம்.. அவங்க உடனே அனலைஸ் பண்ணிச் சொன்னாங்க.. அடுத்து இப்போ கார்ல இருந்து கை ரேகை எடுத்து அவனை அடையாளம் காண முயற்சி செய்ய சொல்லி இருக்கோம்.. சீக்கிரம் அவனைப் பிடிச்சிடலாம்..” என்று சொல்லவும், அந்த பேப்பரையே பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக் நிமிர்ந்து,
“எஸ்.. நான் சொன்னேன் இல்ல.. அது ஆதிரா இல்ல.. அவன் கண்டிப்பா சீக்கிரம் மாட்டுவான்..” என்று கார்த்திக் மதியிடம் சொல்லவும், அவனது தோளைத் தட்டிக் கொடுத்தவன்,
“அதோட அந்த பாடி இறந்து ஒரு வாரத்துக்கும் மேல ஆகுது.. இது தான் இப்போதைக்கு முதல் அறிக்கை.. மீதி போஸ்ட்மார்டம் போய்கிட்டு இருக்கு.. ரிப்போர்ட் வந்ததும் அது யாரு என்னன்னு பார்க்கணும்.. ஆனா.. இப்போதைக்கு நம்ம நிம்மதியான மனசுக்கு இது ஆதிரா இல்ல.. சீக்கிரம் அவளைக் கண்டுப்பிடிச்சிடலாம்..” மதி சொல்லி முடிக்க, கார்த்திக் அவனை நிமிர்ந்துப் பார்த்தான்..
“நான் தான் சொன்னேன் இல்ல.. அது ஆதிரா இல்லைன்னு.. ஆனா.. கண்டிப்பா ஆதிரா அந்த ஏரியால தான் இருக்கணும் மதி.. இவ்வளவு அவசரமா செஞ்சிருக்காங்கன்னா.. அந்தக் காரை வேற ஏரியால விட்டுட்டு அவனுங்க ஆதிரா இருக்கற இடத்துக்கு போக சான்சும், டைமும் ரொம்ப கம்மி.. அந்த ஏரியால கொஞ்சம் நல்லா பாருங்க மதி.. அந்த லேடிக்கு ஒரு குட்டி பையன் இருக்கான்..” கார்த்திக் சொல்லவும், அவனது தோளைத் தட்டியவன்,
“கண்டிப்பா கார்த்திக்.. நீங்க சொல்றதைத் தான் நானும் யோசிச்சேன்.. அங்க உள்ள போற டோர் டெலிவரிக்காரங்க எல்லாரையுமே ப்ளாக் பண்ணி விசாரிக்க சொல்லி இருக்கேன்.. அதோட அங்க மஃப்டில ஆளுங்களைப் போட்டு இருக்கேன்..” என்று சொன்ன மதி,
“சரி மச்சான்.. நான் போய் கொஞ்சம் குளிச்சிட்டு என் மனையாட்டியைப் பார்க்கறேன்.. அவங்க வேற ரெண்டு நாளா கால் பண்ணிட்டு இருக்காங்க..” எனவும், கார்த்திக் சிரிக்க,
“தம்பி.. காபி குடிச்சிட்டு போகலாம் வாங்க..” சதாசிவம் அழைத்தார்..
“இல்ல அங்கிள்.. வீட்டுக்கு போகணும்.. என்னோட பொண்ணு தேடறான்னு அவங்க அம்மா கால் பண்ணிட்டாங்க.. கொஞ்ச நேரம் அவங்க கூட ஸ்பென்ட் பண்ணிட்டு மறுபடியும் ஸ்டேஷன் போகணும்.. இல்ல ரெண்டு பேரும் என்னை வீட்டுக்குள்ள விட மாட்டாங்க.. அப்பறம் என்னோட பாட்டு கோட்டா மிஸ் ஆகிடும்..” என்றபடி கார்த்திக்கின் கன்னத்தைத் தட்டிவிட்டு, மதி விடைப்பெற்று கதவைத் திறக்க, சுதா அங்கு கண்ணீருடன் நிற்க, வித்யா கார்த்திக்கின் முன் சென்றாள்.
“கார்த்திக்.. என்ன நடக்குது? காலையில இருந்து எங்கப் போனீங்க? இப்போ இவரு என்ன தந்தார்? என்ன பாடி அது இதுன்னு பேசிட்டு இருக்கீங்க?” என்று கேட்க, கிளம்ப எத்தனித்த மதி, கார்த்திகைப் பார்க்க,
“நான் பார்த்துக்கறேன் மதி.. நீங்க போய் ஃபேமலியைப் பாருங்க.. அப்பறம் சிஸ்டர் எனக்கு போன் செய்து என்னைத் திட்டப் போறாங்க.. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் மதி.. இவ்வளவு தூரம் வந்து சொன்னதுக்கு..” கார்த்திக் மதியை கேலி செய்து நன்றி தெரிவிக்க,
“செஞ்சாலும் செய்வா.. ஏன்னா கொலை காண்டுல உங்க வீட்டுக்கே போகச் சொல்லி எனக்கு மெசேஜ் வந்திருச்சு.. அடுத்து என்னோட துணி எல்லாம் வெளிய விழுந்தாலும் விழும்.. மை ரௌடி பேபி ஃபுல் கொலைவெறில இருக்கா.. அவ எந்த அளவு அப்பிராணியா இருந்தாத் தெரியுமா? போலீஸ்னாலே பயப்படுவா.. இப்போ என்னை மிரட்டிட்டு திரியறா.. எல்லாம் என் நேரம்.. உங்க சீனியர் ட்ரைனிங்.. இப்படி ஆகிட்டா.. ஆதிராவும் ரொம்ப சாஃப்ட்டுன்னு சொல்றீங்க.. இந்த டர்ன்க்கு எல்லாம் ரெடியா இருங்க..” கேலி செய்துக் கொண்டே மதி கிளம்ப,
“யு ஆர் ஆல்வேஸ் வெல்கம்.. சீக்கிரம் போய் துணி பெட்டியைக் காட்ச் பண்ணிடுங்க.. என் பேபிடால் அப்படி என்னைச் செய்ய மாட்டான்னு நம்பறேன்.. இல்ல இருக்கவே இருக்கு மொட்டை மாடி.. நீங்களும் வந்திருங்க.. நானும் வரேன்.. நாம சங்கம் தொடங்கலாம்..” கார்த்திக் கேலியுடன் அவனை வழி அனுப்ப,
மதி, “அப்படி சொல்லு மச்சான்.. நமக்கு திண்ணைக்கு பதிலா மொட்டை மாடி தான்..” என்று கைக் கொடுத்து விட்டு, ‘பை..’ என்று விடைப்பெற்றுக் கிளம்பினான்..
இருவரும் கிண்டலும் கேலியுமாக பேசிக் கொண்டிருக்க, விஷயம் தெரிந்த மூவரும் அவர்களை புன்னகையுடன் பார்க்க, சுதாவும் வித்தியாவும் தவிப்புடன் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர்..
வித்யா அவனைக் கேள்வியாகப் பார்த்துக் கொண்டு நிற்க, ஒரு பெருமூச்சுடன் காலையில் இருந்து நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தவன், “இப்போ நான் சொன்னது போல அது என்னோட பேபி டால் இல்ல.. வேற ஏதோ பாடியை வச்சு நம்மள ஏதோ வகையில டைவர்ட் செய்யப் பார்க்கறாங்க..” ஆணித்தரமாக கார்த்திக் சொல்லவும்,
“அதுக்கு இப்படி எல்லாமா செய்வாங்க?” சுதா கண்ணீருடன் கேட்க,
“கண்டிப்பா ஃபாரன்சிக் அது இதுன்னு போய் ரிசல்ட் வந்து நம்ம மறுபடியும் ஆதிராவைத் தேட தொடங்கும் போது கொஞ்சம் டைம் எடுக்கும்.. அவங்களுக்கு இப்போதைக்கு நம்மளை கவனம் சிதறச் செய்யணும்.. ஆதிரா இல்லைன்னு நம்ப வைக்கணும்ன்னு முயற்சி செய்யறாங்க.. ஆனா.. அவங்க ஏதோ வகையில பதறத் தொடங்கிட்டாங்க.. அதுனால தான் தப்புத் தப்பா இப்படி செய்யறாங்க.. நமக்கு எல்லாம் க்ளூ விடறாங்க.. கண்டிப்பா சீக்கிரம் மாட்டுவாங்க..” தைரியமாகச் சொன்ன கார்த்திக்கின் கையைப் பிடித்துக் கொண்ட பாலகிருஷ்ணன்,
“சீக்கிரம் கிடைச்சிடுவா கார்த்திக்..” என்று தட்டிக் கொடுத்து,
“வந்து சாப்பிடுங்க..” என்று அழைத்துச் செல்ல, தலையை இடம் வளமாக அசைத்தவன்,
“எனக்கு சாப்பிடணும் போல இல்ல.. அவளைப் பார்க்கற வரை ஒரு வாய் சோறு இறங்காது.. டீ குடிச்சுக்கறேன்.. அதுவும் அவளைத் தேட எனக்கு தெம்பு வேணும்..” என்றவன், உள்ளே சென்று அனைவருக்கும் டீயைப் போட, சுதா கண்களில் கண்ணீருடன்,
“ஆதிரா கிடைச்சிடுவா இல்ல தம்பி..” உயிரைத் தேக்கி வைத்துக் கேட்க,
“கண்டிப்பா அத்தை.. மதியும் சித்தார்த்தும் கண்டிப்பா கண்டுப்பிடிச்சிருவாங்க.. பெரிய பெரிய ரௌடிங்களை எல்லாம் கண்ணுல விரலை விட்டு ஆட்டினவங்க அவங்க.. இப்போ பாருங்க சீக்கிரம் கண்டுப்பிடிச்சிருவாங்க.. அப்பறம் என்னோட வேலை.. அவங்களுக்கு தக்க தண்டனை வாங்கித் தர வரை ஓய மாட்டேன்..” அவருக்கு ஆறுதல் சொன்னவன், தனது அடைத்த தொண்டையைச் சரி செய்துக் கொண்டு, தனது வேலையை கவனித்தான்.
விசித்திரா கொடுத்த தண்ணீர் பாட்டில் காலியானதும், பசியில் ஆதிரா சுருண்டு படுத்துக் கொள்ள, அவளுக்கு கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது.. வயிற்றைப் பிடித்துக் கொண்டு அவள் மெல்ல கீழே சரிய, அதைப் பார்த்துக்கொண்டிருந்த ஆதவன், விசித்திராவிற்குக் காட்டினான்.. விசித்திரா குழந்தைக்கு உடை மாற்றிக் கொண்டிருக்கவும், மெல்ல ஆதவன் ஒரு ஜூஸ் பாட்டிலை எடுத்துக் கொண்டு நகர்ந்தான்..
“இப்போ அடுத்தது என்ன செய்யப் போறீங்க?” விசித்திரா கேள்வி எழுப்ப,
“ஹான்.. இப்போதைக்கு ஒண்ணும் இல்ல.. அவளுக்கு ஜூஸ் கொடுக்கப் போறேன்.. இல்ல பசிலையே செத்திருவா போல இருக்கு..” என்றபடி அவன் ஆதிரா இருந்த அறைக்குச் செல்ல, விசித்திராவிற்கு மனது துணுக்கென்றது..
ஆதிராவைப் பார்த்த சில தினங்களிலேயே அவன் ஆதிராவின் புகைப்படத்தை அவனது மொபைலில் பதித்து இருக்க, விசித்திரா ஒருமுறை அதைப் பார்த்துவிட்டு என்னவென்று கேட்க, ‘அவளைக் கடத்த திட்டம் போட்டு இருக்கேன்.. அவளை வெளிநாட்டுக்கு கடத்தினா சரியான ரேட்டுக்கு போவா.. அதுக்கு எடுத்தேன்..’ என்று பதில் கொடுத்தான்..
அதை நம்பிய விசித்திராவும், ஆதிராவுடன் நன்றாக பழகத் துவங்கினாள். அவளைப் பார்க்கும் பொழுது சிரித்து ஓரிரு வார்த்தைகள் பேசி, அவர்களுக்கு ஏதாவது சமைத்து கொண்டு அவர்களிடம் கொடுத்து, பழகத் துவங்கினாள்.. ஓரிரு மாதங்கள் பழகியப் பிறகு, அவளது நடவடிக்கைகளை கண்காணிக்க ஒரு ஆளை ஏற்பாடு செய்த பின், அவளைக் கடத்தும் திட்டத்தைத் தீட்டத் துவங்கினான்..
அப்படி ஒரு நாள் அவள் தனியாக நிற்பதைப் பார்த்ததும், அன்று அவளைக் கடத்த முடிவெடுத்தவன், விசித்திராவை வண்டியை செலுத்தச் சொல்லிவிட்டு, பக்காவாக அவளைக் கடத்தியும் சென்றான்.. ஆதிரா பின் பக்கம் ஏறிக் கொள்ளவும், அருகில் இருந்த ஆதவன், அவளைப் பார்த்து புன்னகைக்க, ஜன்னலோரம் மெல்ல நகர்ந்தவள், போனில் பேசிக் கொண்டிருக்க, பட்டென்று ஆதவன் அவளது மூக்கில் மயக்க மருந்தை வைத்து அழுத்த, ஆதிரா மயங்கிச் சரியவும், அவளைத் தனது தோளில் தாங்கியவன், அவளைப் பார்த்துக் கொண்டே வர, விசித்திரா என்னவென்று விசாரிக்க, ‘சும்மா தான் அவ முழிச்சிடப் போறான்னு பார்த்துட்டு இருக்கேன்..’ என்றான்..
இப்பொழுதோ, அவள் சரியவுமே ஜூஸ் பாட்டிலை எடுத்துக் கொண்டு அவன் செல்லவும், “இதுவரை எந்தப் பொண்ணுக்காவது பசின்னு சொன்னா கூட அப்படியே இருந்தா தான் நம்ம வழிக்கு வருவாங்கன்னு சொல்லுவான்.. இப்போ என்னவோ அவளுக்கு ஜூஸ் தூக்கிட்டு போறான்.. இவனோட நடவடிக்கையே சரி இல்லையே..” அவளைக் கடத்திய தினத்திலிருந்தே அவனது நடவடிக்கையை யோசித்தவள், முணுமுணுத்துக் கொண்டே குழந்தைக்கு பாலைக் கொடுத்துவிட்டு, ஆதவனின் பின்னோடு சென்றாள்.
ஆதிராவின் அருகில் சென்ற ஆதவன், அவளது அழகை கண்களால் பருகி, கன்னத்தை வருடுவதற்காக தனது கையை வைக்கப் போன நேரம், ஆதிரா பட்டென்று கண் விழித்து அவசரமாக எழுந்து அமர்ந்தாள்..
அவனது கை தனது கன்னத்தில் அருகில் இருக்கவும், அவனை முறைத்தவள், “என்ன? என்ன வேணும் உங்களுக்கு?” முறைத்துக் கொண்டே கேட்க, அவளைப் பார்த்து புன்னகைத்தவன்,
“எனக்கு நீ தான் வேணும்.. அப்படிச் சொன்னா என்ன பண்ணுவ?” அவளது கன்னத்தில் தனது விரல்களால் வருட கைகளை கொண்டு சென்றபடி அவன் சொல்லவும், அவளது விழிகள் தீப் பிழம்பாக மாறியது..
“என்ன முறைக்கிற? என்னைப் பார்த்தா உனக்கு அழகா தோணலையா? நானும் உன்னை எவ்வளவு நாளா பார்த்துட்டு இருக்கேன்?” அவளது முறைப்பை கிடப்பில் போட்டு அவன் வசனம் பேச,
“என் கார்த்திக்கு முன்னால எனக்கு யாருமே அழகும் இல்ல. எதுவும் இல்ல..” ஆதிரா சொல்லவும்,
“அதை நானும் பார்க்கறேன்..” என்ற ஆதவன் அவளது கன்னத்தைத் பிடிக்கப் போக, விசித்திரா அங்கு வந்து சேர்ந்தாள்.
“ஆதவா..” விசித்திராவின் குரலில், ஆதவன் நிதானமாக அவளைத் திரும்பிப் பார்க்க,
“என்ன பண்ணிட்டு இருக்க?” கோபமாக அவள் கேட்க, தோளைக் குலுக்கியவன்,
“இந்தா இதைக் குடிச்சிட்டு பேசாம உட்காரு.. உன்னை அப்பறம் வந்து கவனிச்சுக்கிறேன்..” அங்கிருந்து எழுந்துக் கொள்ள, விசித்திரா ஆதவனை முறைத்துக் கொண்டிருந்தாள்..
“என்ன டார்லிங் முறைக்கிற?” அவனது கேள்விக்கு,
“இல்ல. இங்க என்ன பண்ணிட்டு இருக்க?” விசித்திராவின் குரல் உயர்ந்தது..
“அது அவளுக்கு ஜூஸ் கொடுத்துட்டு இருந்தேன்.. கூடவே கொஞ்சம் அவளை மிரட்டிட்டு இருந்தேன்.. அவ எங்கயாவது சாப்பிடாம செத்தா என்ன செய்யறது? பொன் முட்டை இடற வாத்து இல்ல..” விசித்திராவின் கன்னத்தை வருடியபடி ஆதவன் கேட்க, எப்பொழுதும் அந்த வருடலுக்கு மயங்குபவள், இன்றோ அவனை நேராக பார்த்தப்படி,
“அது எல்லாம் சரி.. ஆனா மத்த பொண்ணுங்க எல்லாம் செத்தா கூட பரவாயில்ல.. சாப்பிடலைன்னா விடுன்னு சொல்லுவீங்க? இப்போ இவக்கிட்ட மட்டும் என்ன?” அவனை சந்தேகமாகப் பார்க்க,
“இல்ல.. இவளுக்கு நாம செம ரேட் பிக்ஸ் பண்ணலாம்டா விச்சு.. இவளை வித்துட்டு நாம வெளிநாட்டுல நல்லா சுகமா செட்டில் ஆகிடலாம்.. அதுக்கு நாம இவளை பத்திரமா வச்சிருக்கணும் இல்ல. நாளைக்கு அங்க கூட்டிட்டு போறதுக்குள்ள இவளுக்கு ஏதாவது ஆச்சுன்னு வை.. அப்பறம் நாம எப்படி வெளிநாட்டுல செட்டில் ஆகறது? இவளோட அழகுக்கு சந்தையில நல்ல ரேட் கிடைக்கும்.” அன்பாக அவளை அணைத்துக் கொண்டே அவன் சொல்லவும், விசித்திரா அவனது கன்னத்தில் இதழ் பதித்துவிட்டு, அவனது அருகில் அமர, ஆதவனோ அவளை கவனிக்காமல், தனது மொபைலை எடுத்து எதுவோ செய்துக் கொண்டிருந்தான்..
“நான் கேட்டேனே.. அடுத்து அவளை என்ன செய்யப் போறீங்க?” சில நிமிடங்களில் விசித்திரா கேட்க,
“இல்ல.. அடுத்து அவளுக்கு ஒரு போலி பாஸ்போர்ட் எடுக்கணும்.. எப்பவும் போல நம்ம டாக்டர்கிட்ட அவளுக்கு பெரிய வியாதி இருக்குன்னு சர்டிபிகேட் வாங்கணும்.. அப்போ தான் மயக்கதுலையே அவளை ஃப்ளைட்ல ஏத்தி கொண்டு போயிடலாம்.. இப்போன்னு பார்த்து இந்த டாக்டர் எங்கயோ ஊருக்கு போயிருக்கான்.. அவன் வர ரெண்டு மூணு நாள் ஆகும் போல. அவன் வந்த உடனே அது எல்லாம் வாங்கிட்டு, எப்பவும் போல அவளை வெளிநாட்டுல வித்துட்டு வரணும்.. எப்படியும் நான் உடனே வர முடியாது.. ஒரு பத்து நாள் அங்க தங்கி இருந்துட்டு தான் வர முடியும். நான் அங்க போய் எல்லாம் செட்டில் பண்ணிட்டு உன்னை கூப்பிட்டுக்கறேன்.. நீயும் அந்தக் குட்டியும் வந்திருங்க..” என்று அவன் சொல்லவும்,
“அப்போ சரி.. நீங்க இவளைக் கூட்டிட்டு போன உடனே நான் ஷாப்பிங் பண்ணிடறேன்.. ஹ்ம்ம்.. நீங்க அந்த இந்திரன் கிட்ட பேசிட்டீங்களா? அவரு என்ன சொன்னாரு?” விசித்திரா கேட்க,
“அவரு ரெண்டு டீலர் சொல்லி வச்சிருக்காங்க.. அடுத்து இவளை ஷிப்ட் பண்ண டைமும் ஆளும் சொல்றேன்னு சொல்லி இருக்கார்.. அடுத்து ஒரு பொண்ணை கடத்தணும்.. அது போட்டோ அனுப்பி இருக்காங்க.. அதுக்கு வழி பார்க்கணும்..” என்றவன், ஒரு அறைக்குள் நுழைந்துக் கொண்டான்..
“போலி பாஸ்போர்ட்டை எடுக்கறோம்.. ஆதிராவை வெளிநாட்டுக்கு கூட்டிட்டு போறோம்.. அப்படியே ஒரு வீட்டைப் பார்த்து, அங்க அவ கூட செட்டில் ஆகறோம்.. ஒரு வீட்ல யாரையும் பார்க்காம பேசாம கடத்தினவன் கூடவே இருந்தா அது என்னவோ ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம்மாமே.. கடத்தினவனையே லவ் பண்ண ஸ்டார்ட் பண்ணிடுவாங்களாமே.. அதையும் செய்ய வச்சு.. அழகான பொண்ணு கூட வாழ்க்கையை வாழ்ந்து பார்த்திடுவோம்.. இந்திரன் கண்ணுல மண்ணைத் தூவிடலாம்.. அவன் எல்லாம் பெரிய மனுஷன் போர்வையில செஞ்சிட்டு இருக்கான்.. வெளியவும் சொல்ல முடியாதுல.. நான் ராஜா தான்..” கண்ணாடியைப் பார்த்து காலரை தூக்கி விட்டுக் கொண்டு சொன்னவன்,
‘உன் மேல ஆசை தான்.. ஆனது ஆகட்டும் சே டு மீ பேபி.. போனது போகட்டும் டூ டு மீ பேபி.. இது கனவு தேசம் தான்.. நினைத்ததை முடிப்பவன் ஒன் மோர் டைம்மு..’ என்று பாடிக் கொண்டே, தனது மொபைலில் இருந்த ஆதிராவின் புகைப்படத்தை வருடினான்..
என்ன தான் ஆதவன் விசித்திராவை சமாதானம் செய்தாலும், அவனது நடவடிக்கையில் ஏதோ மாற்றம் அவளது மனதிற்குப் புரிய, அவளது மனதினில் பயம் சூழத் துவங்கியது.. ஆதிரா கூறிய வார்த்தைகள் வேறு அடிக்கடி அவளது மனதினில் எதிரொலித்துக் கொண்டிருந்தது.. ஆதவனின் நடவடிக்கை வேறு அவளது மனதினில் சந்தேகத்தைக் கொடுத்திருக்க, கண்களை மூடி சோபாவில் சாய்ந்து கலக்கமாக அமர்ந்திருந்தாள்.
“நைட் சாப்பிட எதையாவது செஞ்சியா?” ஆதவன் கேட்க,
“இல்ல.. ரொம்ப டயர்டா இருக்கு.. என்னால எதுவுமே செய்ய முடியாது.. நீ வேணா ஏதாவது செய்யேன்..” கண்களைத் திறக்காமல் விசித்திரா கேட்கவும்,
“ஏன் எனக்கு மட்டும் டயர்டா இல்லையா? இவளோட ஆளு வக்கீலு.. அவனுக்கு பெரிய போலீஸ் ஆபிசர் எல்லாம் ஃப்ரெண்ட்சா இருப்பாங்கன்னு யாரு யோசிச்சா? அதுவும் அந்த ஆபிசர்ஸ் எல்லாம் ரொம்ப நியாயமானவங்க வேற போல.. ரெண்டு நாளா பொட்டு தூக்கம் கூட இல்லாம கண்ணு எல்லாம் எரியுது.. அவனுங்க கண்ணுல மாட்டாம தப்பிக்கிறதே பெரிய பிழைப்பா இருக்கு.. சை..” என்று சலித்துக் கொண்டவன்,
“எதையாவது சாப்பாடு ஆர்டர் பண்ணு.. ரொம்ப பசிக்குது.. சாப்பிட்டு நல்லா தூங்கனும்.. இப்போ தான் அவனுங்களுக்கு இவ செத்துட்டான்னு நம்ப வச்சாச்சே.. இன்னும் ஒரு நாலு நாள் நம்ம பக்கம் வர மாட்டானுங்க.. இப்போ ஆர்டர் பண்ணிட்டு.. கூடவே நாலு பிரட் பாக்கெட் பிஸ்கட் ஜூஸ்ன்னு எல்லாம் போடு.. பசிக்கு அதையாவது தின்னுக்கலாம்..” கட்டளையாகச் சொன்னவன், மீண்டும் அறைக்குள் சென்று பதுங்கிக் கொள்ள, விசித்திராவின் கவனம் அவளது போனில் பதிய, குழந்தையின் இருப்பை கவனிக்காமல் போனாள்..
மெல்ல அவர்களோடு பின்தொடர்ந்து சென்ற குழந்தை, ஆதிரா இருந்த அறைக்குள் மெல்ல எட்டிப் பார்த்து நுழைந்தது.. ஆதிராவைப் பார்த்ததும், “அக்கா..” என்று தனது பொக்கை வாயை காட்டிக் கொண்டே அவள் அருகே செல்ல, கண்களில் கண்ணீருடன் நிமிர்ந்துப் பார்த்த ஆதிரா அந்தக் குழந்தையையே வெறித்துக் கொண்டிருந்தாள்..