எங்கே எனது கவிதை – 24

எங்கே எனது கவிதை – 24
24
ஆதவன் போனில் அந்த டாக்டரிடம் கத்திக் கொண்டிருக்க, முந்தின இரவில் இருந்தே அவன் காட்டிய கொடூர காம முகத்தையும், காலையில் எழுந்தது முதல் தன்னைத் துச்சமாக பேசியதும் விசித்திராவை மிகவும் பாதித்தது.. ஆதவனின் கொடூரத்தின் காயங்கள் உடலில் மிச்சமிருக்க, மனமோ அதை விட மிகவும் வலித்தது..
காலையில் கண் விழித்ததும், அவளுக்கு ஆதிராவின் நினைவு வந்து மோதியது.. ஆதவனின் காமக் களியாட்டத்தில், அவனது வாயில் அடிக்கடி ஆதிராவின் பெயர் வெளி வரவும், அப்பொழுதே மனதளவில் விசித்திரா மரணிக்கத் துவங்கி இருந்தாள்.. அவனது எண்ணம் முழுதாக விசித்திராவிற்கு புலப்பட்டது.. அதை விட காலையிலேயே அந்த மருத்துவருக்கு அழைத்து பேசிக் கொண்டிருந்ததைக் கேட்ட விசித்திரா ஆதவனின் சத்தத்தில், கண்ணீருடன் காபியைக் கலக்கிக் கொண்டிருந்தாள்..
போனை பேசிவிட்டு, அங்கிருந்த சோபாவில் விட்டெறிந்த ஆதவன், “அந்த ஒரு கப் காப்பியை கலக்க உனக்கு எவ்வளவு நேரம்? நீ எல்லாம் ஒரு பொம்பளையா? ச்சை.. மனுஷன் தலைவலிக்கு ஒரு கப்பு காபி கூட கொடுக்க முடியாதவளை கல்யாணம் பண்ணி சோறு போட்டு கூட வச்சிருக்கிறதுக்கு என்னைச் சொல்லணும்..” ஆதவன் தலையில் அடித்துக் கொள்ள,
“இந்தா.. இதுக்கும் மேல ஒரு வார்த்தை பேசின என்ன செய்வேன்னே தெரியாது..” என்றபடி காபி கப்பை கீழே வைத்தவளை, ஓங்கி அறைந்தவன்,
“என்ன வாய் நீளுது? போய் அடுத்து நான் பசின்னு சொல்றதுக்குள்ள சாப்பிட எதையாவது ரெடி பண்ணு.. இன்னொரு தடவ வாய் பேசின.. அந்த வாயைக் கிழிச்சிருவேன்..” என்றவன், அந்த காபிக் கோப்பையை எடுத்துக் கொண்டு அமர, அவனைத் தீயாய் முறைத்தவள்,
“ஆமா.. ஆமா.. உனக்கு இப்போ என்னைப் பார்த்தா அப்படித் தான் இருக்கும்.. ஏன்னா நீங்க கொண்டு வந்திருக்கற பொண்ணு அப்படி பேச வைக்கிறா.. உனக்காக என்னைப் பெத்தவங்களை எல்லாம் விட்டுட்டு வந்தேன் இல்ல.. எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்..” என்றவள், கண்களைத் துடைத்துக் கொண்டு, பாலை எடுத்துக் கொண்டு குழந்தையைத் தேடிச் செல்ல, அங்கு படுக்கையில் குழந்தை இல்லாமல் போகவும்,
“கண்ணா… டேய் கண்ணா..” என்று சத்தமாக அழைத்துக் கொண்டே, கட்டிலின் அடியில் தேட,
“எங்க போனான் அவன்? குழந்தையைக் கூட ஒழுங்கா உன்னால பார்த்துக்க முடியாதா? அப்பறம் எதுக்கு பெத்துக்கற?” என்று சத்தமிட, வெளியில் வந்த விசித்திரா, அவனை முறைத்துக் கொண்டே,
“ஏன் அவன் உனக்கும் பிள்ளை தானே.. நான் உள்ள வேலை செய்யும்போது பார்த்துக்கலாம் தானே..” அவள் சத்தமிட,
“நான் தான் முதல்லையே குழந்தை குட்டி எல்லாம் வேண்டாம்ன்னு சொன்னேனே.. நீ அஜாக்கிரதையா இருந்துட்டு என்னைக் கேள்வி கேட்கற? அறிவில்லாம அது உண்டானது கூடத் தெரியாம இருந்துட்டு இப்போ என்னைக் கேள்வி கேட்கறியா? உன்னை எல்லாம்..” என்றவன் திட்டிக் கொண்டே அங்கு அமர்ந்திருக்க, அப்பொழுது அவளது கண்களில் வாசல் கதவு திறந்திருப்பது பட, விசித்திரா திடுக்கிட்டுப் போனாள்..
“ஹே.. நீ வாசல் கதவைத் திறந்தியா?” விசித்திரா ஆதவனைக் கேட்க,
“இல்லையே.. நான் கதவு கிட்டையே போகலையே.. நீ போனியா?” ஆதவன் கடுப்புடன் கேட்க,
“நானும் காலையில இருந்தே போகல.. நேத்து நைட் கதவைப் பூட்டினியா? நீ தானே கடைசியா வந்த சாமானை எல்லாம் எடுத்த?” கடுப்பாக விசித்திரா கேட்க, ஆதவன் தலையில் அடித்துக் கொண்டான்..
“கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா? தூங்க வரதுக்கு முன்னால எல்லா கதவும் மூடி இருக்கான்னு பார்க்க முடியாத அளவுக்கு என்ன வேலையை வெட்டி முறிக்கிற? ச்சே.. உன்னை கல்யாணம் செஞ்சதுக்கு ஒரு நாயைக் கல்யாணம் செஞ்சி இருந்தா, அது கூட ஒழுங்கா காவல் காக்கும்.. இதை எல்லாமா நான் பார்த்துட்டு இருக்க முடியும்?” என்று கேட்டவனை அடிபட்ட வலியுடன் அவள் பார்க்க, ஆதவனோ அலட்சியமாக அமர்ந்திருந்தான்..
தனது மனம் முற்றிலுமாக உடைய, அழுகை வெடித்துக் கொண்டு வந்தது.. அதை விட இப்பொழுது குழந்தையைத் தேடுவது மனதில் முதன்மையாகப் பட, அவனை முறைத்துக் கொண்டே வேகமாக கதவைத் திறந்துக் கொண்டு வெளியில் சென்றவள், அங்கு அவனைக் காணாது, அருகில் இருந்த படிகளில் பார்க்க, அங்கும் அவனைக் காணாது துடித்துப் போனாள்..
“கண்ணா.. டேய் கண்ணா..” அழைத்துக் கொண்டே, வெளியில் எட்டிப் பார்க்க, கேட்டின் வெளியே குழந்தை பந்தைப் போட்டு விளையாடிக் கொண்டிருக்க, பதறியவள், அவசரமாக படிகளில் இறங்கி ஓடினாள்.
பந்தை கீழே தூக்கிப் போட்டு பிடித்துக் கொண்டிருந்த குழந்தை, பந்து உருண்டு ஓடவும், சிரித்துக் கொண்டே அதனைத் துரத்திக் கொண்டு ஓடத் துவங்கியது.. அங்கிருந்த பக்கத்து குடி இருப்பில், தனது தந்தையுடன் வெளியில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு குழந்தையும், பந்தைப் பார்த்ததும், அதனுடன் ஓடவும், எப்பொழுதும் தனிமையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைக்கு, இந்த விளையாட்டு மிகவும் பிடித்துவிட, அது பந்தைக் கால்களால் தட்டிக் கொண்டே இரண்டு குழந்தைகளும் ஓடத் துவங்கியது..
குழந்தைகளின் சத்தம் கேட்டு, ஒரு கட்டிடத்தின் மேல் உளவுப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு காவல்துறை அதிகாரயின் கண்களில் அந்தக் குழந்தை விழுந்தான்..
அவர் அந்தக் குழந்தையின் முகத்தை ஆராய்ந்துக் கொண்டிருக்கும் பொழுதே, வேகமாக வெளியில் ஓடி வந்த விசித்திரா, குழந்தையைத் தூக்கிக் கொண்டு, பதட்டத்துடன் சுற்றி முற்றி பார்க்க, அந்தக் குழந்தையின் தந்தை அவளைப் பார்த்து புன்னகைத்து,
“கொஞ்ச நேரம் அவன் என் பையனோட விளையாடட்டுமே.. நான் வெளிய நின்னு பார்த்துக்கறேன்.. நீங்க வேலையை முடிச்சிட்டு வாங்க..” தோழமை உணர்வுடன் சொல்லவும்,
“இல்ல.. பரவால்ல.. இன்னும் பால் கூட குடிக்கல.. கதவு திறந்து இருக்கவும் ஓடி வந்துட்டான்..” என்றவள், வேகமாக குழந்தையுடன் தனது வீட்டிற்கு ஓடினாள்..
அவள் அறியாதது அவளை ஒரு காவல்துறை அதிகாரி அடையாளம் கண்டுக் கொண்டது.. விசித்திரா வேகமாக வீட்டிற்குச் சென்று, கதவை அடைத்துக் கொண்டு, நெஞ்சைப் பிடித்துக் கொண்டாள்..
“என்ன?” ஆதவன் எரிந்து விழ, மண்டையை இடம் வலமாக அசைத்தவள், மூச்சு வாங்க குழந்தையை எடுத்துக் கொண்டு அறைக்குச் சென்றவள், அதனை அணைத்துக் கொண்டு அமர்ந்தாள்..
ஆதவனின் நடவடிக்கை தந்த காயம், இப்பொழுது தாங்கள் தொட்டு இருக்கும் ஆதிராவின் பின்புலம் எல்லாம் சேர்ந்து அவளை பயமுறுத்தத் துவங்கியது.. முன்தினத்தில் இருந்தே ஆதவனின் நடவடிக்கை வேறு அவளை அச்சுறுத்தி இருக்க, என்ன செய்வதென்று புரியாமல், ஒரு மூச்சு அழுது தீர்த்தாள்.
“கண்ணா.. அம்மாவை மன்னிச்சிருடா.. உன் கூட அம்மா எவ்வளவு நேரத்துக்கு இருக்க முடியும்ன்னு தெரியல.. உன்னை விட்டு அம்மா என்ன செய்யப் போறேன்? நீ என்னோட உயிராச்சே.. எனக்கு ரொம்ப பயமா இருக்குடா.. பேசாம நீ தாத்தா பாட்டிக்கிட்ட போய் இருக்கியா? உன்னை நல்லா வளர்ப்பாங்க.. இந்த அம்மாவைப் பத்தி உனக்குத் தெரியவே வேண்டாம்.. நான் உனக்கு ஒரு அசிங்கம்..” குழந்தையிடம் பேசியவள், வெகுநாட்களுக்குப் பிறகு, தனது தந்தைக்கு அழைத்தாள்..
அவரது குரலைக் கேட்டதும், அவளது குரல் மேலும் உடைய, அவர் பேசுவதற்கு முன், “நான் செஞ்சத் தப்புக்கு என் குழந்தையை தனியா அநாதையா விட்டுறாதீங்க. ஒருவேளை எனக்கு ஏதாவது ஆச்சுன்னா அவனை நீங்க நல்லபடியா வளர்த்துடுங்க.. என்னோட பேரே தெரியாம அவனை நீங்க வளர்த்திருங்க. நான் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கறேன்.. என்னை தண்டிக்கிறதா நினைச்சு குழந்தையை கை விட்டுடாதீங்க.. தயவு செஞ்சு என்னை மன்னிச்சிடுங்க.. அதைக் கேட்கக் கூட தகுதி இல்லாதவளா நான் இருக்கேன்.. என் குழந்தையை விட்டுடாதீங்க..” படபடவென பேசிவிட்டு, அழுகை வெடிக்க, அவர் பேசுவதற்கு முன் போனை வைத்தவள், ஒரு முடிவுக்கு வந்தவளாக, குழந்தையை அணைத்துக் கொண்டு மீண்டும் ஒரு மூச்சு அழுது தீர்த்தாள்..
அந்தக் குழந்தையையும், விசித்திராவையும் பார்த்த அந்த காவல்துறை அதிகாரி, உடனே மதிக்கு அழைத்து, அவளைப் பார்த்த விஷயத்தைக் கூற, மதி அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாரானான்..
“வாவ்.. சூப்பர் அமுது.. நீங்க அங்க கொஞ்சம் அலெர்ட்டாவே வாட்ச் பண்ணுங்க.. நாங்க இப்போ உடனே வரோம்..” என்றவன், சித்தார்த்திற்கு உடனே அழைத்து, அந்த ஃப்ளாட்டை சுற்றி முற்றுகையிட காவலர்களைத் திரட்டினான்..
அந்த நேரம், குழந்தைக்கு பாலைக் கொடுத்த விசித்திரா, ஒருமுடிவுடன், வேகமாக ஒரு பையில் குழந்தையின் துணிகளையும், மருந்து, அதற்கு பிடித்த பொம்மை போன்றவற்றை எடுத்து அவசரமாகத் திணித்தவள், அதற்கு இன்னொரு பாட்டிலில் பாலை ஊற்றி வைத்து விட்டு, அதன் அருகில் அதன் சிப்பரையும் எடுத்து வைத்து விட்டு, தனது மொபைலை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் புகுந்துக் கொண்டாள்..
ஆதவன் முதல் நாள் சொன்னபடி, தனது மொபைலில் குறித்து வைத்திருத்த கார்த்திக்கின் நம்பருக்கு அவசரமாக அழைத்தாள். அவனது செல்போன் ரிங் அடிக்கத் துவங்கவுமே அவளுக்கு படபடவென்று இதயம் துடிக்க, வியர்க்கத் துவங்கியது..
ஹான் என்று தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருந்தவன், தனது செல்போனின் சத்தத்தில் பட்டென்று கண் திறந்து போனை எடுத்தவன், “ஹலோ..” என்று சொல்லி முடிப்பதற்குள்,
“சார்.. நான் சொல்றதை டிஸ்டர்ப் பண்ணாம கேளுங்க.. உங்க ஆதிரா இந்த அட்ரஸ்ல இருக்கா..” என்று அவசரமாக அட்ரசைச் சொன்னவள்,
“சீக்கிரம் வந்து கூட்டிக்கிட்டு போங்க.. இல்லைன்னா அவளை அவசரமா வெளிநாட்டுக்கு கடத்த முயற்சி பண்ணிட்டு இருக்காங்க. உடனே செஞ்சே ஆகணும்னு மேல இருந்து ரொம்ப ப்ரெஷர் பண்ணிட்டு இருக்காங்க.. சீக்கிரம் வாங்க.. ஆதிரா உங்களுக்காக ரொம்ப காத்துக்கிட்டு இருக்கா.. அவளை வந்து கூட்டிக்கிட்டு போங்க..” என்று சொல்லிவிட்டு, கண்ணீருடன் போனை வைக்க,
“ஹலோ.. ஹலோ.. நீங்க யாரு?” என்ற கார்த்திக்கின் குரல் படபடப்புடன் உயர, அவனது குரலைக் கேட்டு சரவணன் அங்கு அவசரமாக ஓடி வர,
அவனைப் பார்த்தவன், “டேய்.. ஆதிரா நம்ம போன ஏரியால தான் இருக்கா.. அவ இருக்கற அட்ரஸ் எனக்கு இப்போ யாரோ ஒரு லேடி போன் செஞ்சு சென்னாங்க.. வா.. நாம போய் பார்க்கலாம்.. அதுக்கு முன்னால நான் சித்தார்த்துக்கும் மதிக்கும் கால் பண்ணிச் சொல்றேன்..” என்ற கார்த்திக்கின் கைகள் பதட்டத்தில் நடுங்கியது..
“டேய்.. ஒண்ணும் பயமில்ல.. அது தான் அவ இருக்கற இடம் தெரிஞ்சுப் போச்சே.. வா.. நாம போய் அவளைக் கூட்டிக்கிட்டு வரலாம்..” சரவணனின் குரலும் பதட்டத்தில் நடுங்க, கண்களில் கண்ணீர் வழிய, தனது தந்தைக்கு அழைத்து விஷயத்தைச் சொல்லிவிட்டு, “மாமா… மாமா..” என்று கூவ, கார்த்திக் அதற்குள் சித்தார்த்திற்கு அழைத்தான்..
“சித்தார்த்.. இப்போ எனக்கு ஒரு கால் வந்தது.. ஒரு அட்ரசை சொல்லி, இந்த அட்ரஸ்ல ஆதிரா இருக்கான்னு சொல்றாங்க.. அவளை வெளிநாட்டுக்கு கடத்தப் போறதா சொல்றாங்க.. நாம சீக்கிரம் போனா அவளைக் கூட்டிக்கிட்டு வந்துடலாம்..” அவசரமாக கார்த்திக் விஷயத்தைச் சொல்ல,
“ஆமா கார்த்திக்.. நாம சிசிடிவில பார்த்த அந்த லேடி அங்க தான் இருக்காங்க.. இப்போ நாங்களும் அங்க தான் போயிட்டு இருக்கோம்.. சீக்கிரம் வாங்க..” அவனுக்கு வந்த அழைப்பை சித்தார்த்தும் உறுதி செய்ய, கார்த்திக்கிற்கு கண்களில் கண்ணீர் வழியத் துவங்கியது…
“தேங்க்ஸ்.. தேங்க்ஸ் சித்தார்த்.. இதோ நான் உடனே கிளம்பி வரேன்..” என்ற கார்த்திக், அங்கு அவனையே உயிரைக் கண்களில் தேக்கி வைத்துக் கொண்டு, அவனைப் பார்த்துக் கொண்டிருந்த பாலகிருஷ்ணனையும் சுதாவையும் பார்த்து,
“ஆதிரா இருக்கற இடம் தெரிஞ்சிருச்சு.. சித்தார்த் மதி எல்லாம் அங்க போயிட்டு இருக்காங்க.. எனக்கும் இப்போ ஒருத்தங்க கால் செஞ்சு அவ இருக்கற இடதைச் சொன்னாங்க.. நான் போய் அவளை வீட்டுக்கு கூட்டிட்டு வரேன்..” என்ற கார்த்திக், அவசரமாக முகத்தைத் துடைத்துக் கொள்ள,
“மாப்பிள்ளை.. நிஜமா தான் சொல்றீங்களா மாப்பிள்ளை.. ஆதிரா பத்திரமா இருக்காளா?” கண்களில் கண்ணீருடன் சுதா கேட்க,
“ஆமா.. அவ எனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கான்னு சொன்னாங்க..” என்றவன், தனது கண்ணீரைத் துடைத்துக் கொண்டு,
“நான் போயிட்டு வரேன்..” என்று அவசரமாக முகத்தைக் கழுவிக் கொண்டு கிளம்ப, சரவணன் வண்டியுடன் தயாராக இருந்தான்..
“அந்த இடத்துக்கு போடா..” கார்த்திக் சொல்லவும், சரவணன் வண்டியை விரட்டினான்.
“நிஜமா ஆதிரா அந்த இடத்துல இருப்பா தானே..” சரவணன் கார்த்திக்கிடம் கேட்க,
“கண்டிப்பா இருப்பா.. நாம இப்போ ஆதிராவோட தான் வரோம்.. இனிமே அவளை நான் எங்கேயும் தனியா விடறதா இல்ல..” என்று கூறியவன், அவளைக் காணும் நிமிடத்திற்காக தவிக்கத் துவங்கினான்..
“கண்ணா.. இந்த அம்மாவை மன்னிச்சிருடா.. உன்னை நான் பெத்தே இருக்கக் கூடாதுடா.. உன்னை நான் தனியா விட்டுட்டு போறேன்.. உன்னைத் தாத்தா பாட்டி நல்லா வளர்ப்பாங்க.. எப்போவாவது இந்த அம்மாவை நினைச்சிக்கோ.. நீ நல்லவனா வளரணும்.. இந்த உலகம் புகழ வாழணும்.. நான் உயிரோட இருந்தா அது உனக்கு கெட்ட பேரை தான் கொண்டு வரும்.. நான் உனக்கு வேண்டாம்.. என்னோட ஆத்மா உன்னைத் தான் சுத்திட்டு இருக்கும்..” என்றவள், குழந்தையின் முகமெங்கும் முத்தமிட்டு, அதனை ஒருமுறை அணைத்து விடுவித்து, தனது கையில் இருந்த பூச்சி மருந்தை குடிக்கத் துவங்கினாள்..
“அம்மாவுக்கு உவ்வாவா? கால் வலிக்குதா?” பரிதாபமாக குழந்தைக் கேட்க, விசித்திரா ‘ஆம்’ என்று தலையசைக்க,
“சன்லைட்ல விய்யாடு.. கால் எல்லாம் ஸ்ட்ரெந்த் வரும்..” என்று சைகைக் காட்டியவன்,
“அக்கா சொன்னா..” என்று சேர்த்துச் சொல்லவும், பூச்சி மருந்தை விழுங்கிக் கொண்டிருந்த விசித்திரா,
“யாருடா சொன்னா?” அவனது கன்னத்தைப் பிடித்துக் கேட்க,
“அந்த யூம்ல இருக்கற அக்கா..” என்று குழந்தை கைக் காட்டிய திசையைப் பார்த்த விசித்திராவின் இதழ்கள் புன்னகையில் விரிந்தது..
“புத்திசாலிடி நீ.. என் பையன வெளிய அனுப்பி நீ இருக்கற இடத்தைச் சொல்லப் பார்க்கறியா? நானே உன்னை அவன் கூட சேர்த்து வைக்கிறேன்.. சந்தோஷமா அவன் கூட இரு.. ஒரே ரிங்ல போனை எடுக்கறான்.. உன்னைப் பத்தி ஏதாவது தெரிய வரும்ன்னு கையிலயே வச்சிட்டு இருக்கான் போல.. உன் மேல அவ்வளவு அன்பு..” ஆதிராவிடம் சொல்வது போல சொன்னவள், அப்படியே அந்த படுக்கையில் குழந்தையை அணைத்துக் கொண்டு படுத்துக் கொண்டாள்..
பாலைக் குடித்துவிட்டு குழந்தை தனது டேபில் ரைம்ஸ் பார்க்கத் துவங்க, அப்பொழுது வாசலில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.. ஆதவன் அமைதியாக இருக்கவும், “ஆதவன்.. இப்போ நீ கதவைத் திறக்கல நாங்க வீட்டை உடைச்சிட்டு வந்துடுவோம்.. இங்க இந்த வீட்டைச் சுத்தி சர்ரவுண்ட் பண்ணியாச்சு..” என்ற மதியின் குரல் கேட்க, விசித்திரா மீண்டும் தனது தந்தைக்கு அழைத்தாள்..
“அப்பா.. சீக்கிரம் வந்து என் பையன கூட்டிட்டு போயிருங்க.. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம்.. நான் இது தான் உங்க கிட்ட கடைசியா பேசறது.. நான் இங்க இந்த அட்ரெஸ்ல இருக்கேன்.. உங்களுக்கு அட்டரசை மெசேஜ் பண்ணி இருக்கேன்.. என்னோட கடைசி மூச்சு விடும் போதும், உங்களை எல்லாம் தலைகுனிய வச்சிட்டு இப்படி ஒரு வாழ்க்கையை தேர்ந்தெடுத்ததுக்கு உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன்.. என்னை மன்னிச்சிருங்க.. முடிஞ்சா அம்மாவையும் மன்னிக்கச் சொல்லுங்க..” என்றவள், தனது போனை கிடத்தி குழந்தையைப் பார்த்து சிரிக்க, குழந்தை அவளது கன்னத்தைத் தட்டிவிட்டு, தனது டேபைப் பார்க்க, அவளது கண்கள் குழந்தையின் முகத்திலேயே நிலைத்து இருந்தது..
“இப்போ கதவைத் திறக்க போறியா இல்லையா ஆதவன்?” அந்தக் கதவை இடித்துக் கொண்டே மதியும், சித்தார்த்தும் சத்தமிட, கதவு படேலென்று திறக்கும் சத்தம் கேட்க, விசித்திராவின் இதழ்களில் இகழ்ச்சிப் புன்னகை..
“உள்ள வராதீங்க. வந்தீங்க.. உங்களை எல்லாம் சுட்டுடுவேன்..” என்ற ஆதவன் ஒரு துப்பாக்கியை கையில் வைத்துக் கொண்டு, உள்ளே நுழைய இருந்தவர்களை நோக்கி குறி வைத்தான்..
“ஆதவன்.. நீ தப்பு மேல தப்பு பண்ணிட்டு இருக்க. துப்பாக்கியைக் கீழே போடு..” மதி மெல்ல முன்னேறிக் கொண்டே அவனை மிரட்ட,
“இல்ல.. நான் மாட்டேன்.. நான் கீழ போட்டா என்னை நீங்க கொன்னுடுவீங்க.. உள்ளே வராதீங்க.. வந்தீங்க உங்களை எல்லாம் கொன்னு போட்டுடுவேன்..” ஆதவன் மிரட்டி,
“விசித்திரா.. ஏய்.. கழுத எங்கப் போய் தொலைஞ்சா.. இங்க போலீஸ் வந்துட்டாங்க.. நீ அந்த ஆதிராவை சுட்டுக் கொன்னுடு..” என்று சத்தமிட, விசித்திரா அந்தக் குரலைக் கேட்டு கண்கள் சொருக, இகழ்ச்சியாக சிரித்துக் கொண்டாள்..
ஆதவனின் கவனம், மதியை நோக்கி இருக்க, அவன் விசித்திராவின் பெயரை அழைக்கவும், “டேய் அங்க ஆதிரா ஓடி வரா பாரு..” சித்தார்த் குரல் கொடுக்கவும், ஆதவன் டக்கென்று ஒரு திசையைத் திரும்பிப் பார்க்க, அந்த சந்தர்பத்தைப் பயன்படுத்தி, பட்டென்று அவனது கையில் இருந்த துப்பாக்கியைச் தட்டி விட்ட மதி, ஆதவனை இறுகப் பிடிக்க, ஆதவன் துள்ளத் துவங்கினான்..
“சித்து.. நீ உள்ள போய் பாரு..” மதி குரல் கொடுக்க, சித்தார்த் உள்ளே நுழைய, அந்த நேரம் சரவணன் வண்டியை நிறுத்துவதற்குள், வண்டியில் இருந்து கீழே குதித்த கார்த்திக், தட்டித் தடுமாறி விழுந்து எழுந்து, படிகளில் வேகமாக ஓடிச் சென்றான்..
மதியின் குரல் கேட்கவும், அந்த வீட்டிற்கு கார்த்திக் செல்ல, துள்ளிக் கொண்டிருந்த ஆதவனைப் பார்த்தவன், அவனை எட்டி ஒரு உதை விட்டு,
“என் ஆதிராவையா தூக்கப் பார்க்கற? உன்னை.. உன்னை.. இரு வந்து கவனிக்கறேன்..” என்று கருவி விட்டு, வேகமாக அந்த ஃப்ளாட்டில் இருந்த ஒரு அறைக்குள் சித்தார்த்துடன் நுழைய, அங்கு விசித்திரா மிகுந்த சிரமத்துடன் கண்களை மூடித் திறந்துக் கொண்டிருக்க, கார்த்திக் வேகமாக அவள் அருகே சென்றபடி,
“ஆதிரா எங்க இருக்கா?” என்று கேட்க, அவனைப் பிடித்துத் தடுத்த சித்தார்த், தனது துப்பாக்கியை கவனமாக வைத்துக் கொண்டே, கார்த்திக்கை தனக்கு பின்னால் வரும் படி கைக் காட்டிவிட்டு, மெல்ல விசித்திராவின் அருகில் சென்றான்..
மங்கிய விழிகளால் கார்த்திக்கைப் பார்த்த விசித்திரா, “ஆதி.. ஆதி..” என்று திணற,
“ஹான்.” சித்தார்த் கேட்க,
“ஆதிரா.. ஆதிராவுக்கு என்ன?” அவள் அருகில் சென்ற கார்த்திக், அவள் இருந்த நிலையைப் பார்த்து,
“சித்தார்த்.. இவங்க ஏதோ சரி இல்ல.. முதல்ல ஆம்புலன்ஸ்க்கு கால் பண்ணுங்க..” என்று கத்தவும், சித்தார்த் “பி.சி..” என்று அழைக்க, அதற்குள் மெல்ல தனது கையை எடுத்து கார்த்திக்கின் கையைப் பிடித்தவள்,
“ஆதிரா.. ஆதிரா.. அங்க இருக்கா.. சாரி..” என்று கண்களைத் துடைத்துக் கொண்டு, அவள் சொல்லவும், கார்த்திக் வேகமாக அவள் காட்டிய திசையில் ஓடிச் செல்ல, அங்கு வந்த பிசியிடம் விசித்திராவைக் காட்டி விட்டு, சித்தார்த் கார்த்திக்கைத் தொடர்ந்து அவன் சென்ற திசைக்கு ஓட, அந்த அறையின் கதவைத் திறந்த கார்த்திக்கிற்கு இதயம் தொண்டைக் குழியில் வந்து துடித்தது..
தரையில் சரிந்துக் கிடந்த ஆதிராவைப் பார்த்தவன், “ஆதிரா..” என்று கூவியபடி அவள் அருகே வேகமாகச் சென்று, கீழே கிடந்தவளைத் தூக்கி தனது மடியில் கிடத்தி, அவளது கன்னத்தைத் தட்டத் துவங்கினான்..
“ஆதிரா.. ஆதிராம்மா.. எழுந்திருடா அம்மு.. என்னை கண்ணை முழிச்சுப் பாருடா கண்ணம்மா..” அவளது கன்னத்தைத் தட்டி சத்தமாக அழைக்க, ஆதிரா எந்த அசைவுமின்றி சருகாகக் கிடந்தாள்..
“டேய் பட்டு எழுந்திருடா.. நான் உன்னோட அப்பு வந்திருக்கேன்டா கண்ணம்மா.. நான் தப்புப் பண்ணிட்டேன்டா.. அதுக்காக என்னை தண்டிச்சுடாதே.. எழுந்திரு..” என்று அவளைப் பிடித்து உலுக்கியவன், குனிந்து அவளது நெஞ்சில் தனது காதை வைத்துப் பார்க்க, அதுவரை அவனைப் பார்த்துக் கொண்டிருந்த சித்தார்த்,
“கார்த்திக்.. கொஞ்சம் அமைதியா இரு..” என்று அவனது தோளைத் தொட்டு அமைதிப்படுத்தி, அவளது கழுத்தில் விரல் வைத்து, அவளது நாடியை சித்தார்த் பரிசோதிக்க, அவனது இதயமும் படபடக்கத் துவங்கியது.. தனது முகத்தைத் துடைத்துக் கொண்டவன், அவளது நாடியை ஆராய,
“சித்தார்த்.. ஆதிராவைப் பாருங்க.. அவ எந்த அசைவும் இல்லாம இருக்கா.. எனக்கு பயமா இருக்கு..” கார்த்திக் கதறத் துவங்க,
அதற்குள் அவளது நாடித் துடிப்பை உணர்ந்தவன், “கார்த்திக்.. அவ மயங்கி தான் இருக்கா.. வேற ஒண்ணும் இல்ல.. அவளைத் தூக்கு..” என்று சொல்லவும், கண்களைத் துடைத்துக் கொண்டு, அவளைத் தூக்கிக் கொண்டு கார்த்திக் வெளியில் செல்ல, அவனைப் பார்த்த ஆதவன், மேலும் மதியிடம் எகிறத் துவங்கினான்..
“டேய்.. அவளை விடு.. விடுன்னு சொல்றேன் இல்ல.. அய்யாவுக்கு தெரிஞ்சா என்னைக் கொன்னுடுவான்.. அவளை விடுடா..” ஆதவன் கார்த்திகைப் பார்த்து எகிற, மதி அவனது கையை முறுக்க, அவனை எட்டி உதைத்த சித்தார்த், கேவலமாக அவனைப் பார்த்து,
“யாரு யாரை விடச் சொல்றது? அவளை உன்கிட்ட கொடுத்துட்டு நாங்க சும்மா போயிடணுமா?” என்று கோபமாக கேட்க, ஆதவன் மதியிடம் இருந்து விடுபடப் போராட, அவனைப் பிடித்துக் கொண்ட சித்தார்த்,
“கார்த்திக்.. அங்க ஆம்புலன்ஸ் இருக்கு.. அங்க கூட்டிட்டு போ.. சீக்கிரம்..” என்ற சித்தார்த்தின் குரல் கூட காற்றில் தான் கரைய வேண்டி இருந்தது.. கார்த்திக் படிகளில் தடதடவென்று இறங்க, சரவணனை உள்ளே விடாமல் கீழே சூழ்ந்திருந்த காவலர் தடுத்து நிறுத்தி இருக்க, மேலே கேட்ட சத்தத்தில் சரவணன் என்ன நடக்கிறது என்று புரியாமல் குழம்பி நின்றிருந்தான்.. அப்பொழுது, கார்த்திக் தட தடவென்று ஆதிராவைக் கையில் சுமந்துக் கொண்டு ஓடி வரவும், சரவணன் பதட்டத்துடன் அவன் அருகில் ஓட, அப்பொழுது மதி ஆதவனைக் கட்டுப்படுத்தி இருக்கவும், அவன் பின்னோடு ஓடி வந்திருந்த சித்தார்த்,
“கார்த்திக்.. கார்த்திக்.. நான் சொல்றதைக் கேளுங்க.. இதோ ஆம்புலன்ஸ் நின்னுட்டு இருக்கு..” என்று கார்த்திக்கைப் பிடித்து நிறுத்தி ஆம்புலன்ஸ்சைக் காட்ட, அப்பொழுது தான் அதனை கவனித்தவன், ஆதிராவை அங்கு தயாராக இருந்த ஸ்ட்ரெச்சரில் கிடத்தி,
“இவளை கொஞ்சம் சீக்கிரம் பாருங்க.. ஏதாவது பண்ணுங்க..” என்று பதற, ஆம்புலன்சுடன் வந்திருந்த மருத்துவர், உடனே அவளை பரிசோதனை செய்யத் துவங்க, கார்த்திக்கின் கண்களில் கண்ணீர் நிற்காமல் வடிந்துக் கொண்டிருந்தது.. அவளது பாதத்தைத் தேய்த்தவன்,
“அம்மும்மா.. ப்ளீஸ் எழுந்திருடி.. நான் வந்துடேன்.. கண்ணைத் திறடி..” கார்த்திக் அவளது காதின் அருகே சென்று சத்தமிட,
“நீங்க உடனே ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போங்க..” சித்தார்த் அந்த ஆம்புலன்ஸ் டிரைவரிடம் சொல்லிக் கொண்டிருக்க, மதி ஆதவனை விலங்கை மாட்டி இழுத்துக் கொண்டு வந்தான்..
இன்னொரு காவலர் குழந்தையை கையில் வைத்துக் கொண்டு விசித்திராவை மற்றொரு ஆம்புலன்சில் ஏற்றிக் கொண்டிருக்க, சரவணன் அனைத்தையும் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்..
கார்த்திக்கின் கண்கள் ஆதிராவின் முகத்திலேயே நிலைத்து இருக்க, அவளது பாதத்தைத் தேய்த்துக் கொண்டும், அவளது கன்னத்தைத் தட்டிக் கொண்டும், ‘அம்மு.. கண்ணம்மா.. ஆதிராம்மா..’ என்று பலவாறு அவளை அழைத்து எழுப்ப முயற்சிக்க,
“கார்த்திக்.. மணியாகுது.. ஆம்புலன்ஸ்ல ஏறு..” என்றபடி அவனைப் பிடித்து மேலே ஏற்றி, தானும் அவனுடன் ஏறிக் கொண்டு,
அங்கு செய்வதறியாமல் அனைத்தையும் பார்த்து திகைத்து நின்றிருந்த சரவணனைப் பார்த்த சித்தார்த், “சரவணா..” என்று கத்தி அழைத்து, அவனது கவனம் இவர்களிடம் வரவும்,
“நாங்க ஹாஸ்பிடல்க்கு போறோம்.. சரவணா நீ எங்களை ஃபாலோ பண்ணி வா..” எனவும், மண்டையை அசைத்த சரவணன், ஓடிச் சென்று வண்டியை எடுக்க, ஆம்புலன்ஸ் வேகமாக புறப்பட்டது.