எங்கே எனது கவிதை – 3

f34c936e9cca770f921bfc43a013593c-e08a5c5a

எங்கே எனது கவிதை – 3

3        

கார்த்திக்கை சிறிது நேரம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த சரவணன், “டேய் கார்த்திக் அண்ணா.. நீ என்ன இன்னைக்கு சரியே இல்ல.. என்னவோ மோட்டு வலையை புதுசா பார்க்கறது போல பார்த்துட்டு இருக்க? அங்க என்ன தெரியுது?” என்று கேட்க, அவனைத் திரும்பிப் பார்த்த கார்த்திக்கின் கை, எந்த பதிலையும் சொல்லாமல் தானாக அவனது செல்லை வருடியது..

அவனது விரல்கள் செல்லை வருடுவதை கவனித்த சரவணன், சில நொடிகள் யோசித்து, கார்த்திக்கின் செயல் புதிதாக இருக்கவும், அவசரமாக அவனது செல்லை எடுத்து, அதைத் திறந்து அதன் உள்ளே தேடிப் பார்த்தவன், அதிர்ந்து போனான். அதில் அன்றைய தினம் எடுத்த ஆதிராவின் புகைப்படங்கள் நிறைந்து இருப்பதைப் பார்த்து திகைத்து கார்த்திக்கைப் பார்த்தான்..

கண்களை மூடி கார்த்திக் தனது உலகத்தில் லயித்து இருக்க, “கார்த்திக்..” சரவணன் திகைத்து அழைக்க,

அவன் அழைப்பதன் காரணத்தைப் புரிந்தவன், “ம்ச்ப்.. எனக்கு அவளைப் பிடிச்சிருக்கு சரவணா..” கண்களை மூடியபடியே சொல்லவும்,

“என்ன? என்ன சொல்ற நீ?” சரவணன் திகைப்புடன் கேட்க,

“நான் இன்னைக்கு அவளோட டான்ஸ் ப்ரோக்ராம்க்கு போயிருந்தேன்.. அவ முதல்ல சிலை போல அப்படியே நின்னுட்டு இருந்தா.. ஏதோ சிலை தான் இவ்வளவு அழகா நல்லா செஞ்சு இருக்காங்களோன்னு போட்டோ எடுத்தேன்.. கடைசியில அது பொண்ணா மாறிடுச்சு.. அழகான பொண்ணா.. என் மனசையும் பரிசிக்கிட்டு..” ஏதோ மந்திரத்தில் அந்த சிலை பெண்ணாக மாறியது போல, கார்த்திக் எங்கோ பார்த்துக் கொண்டு சொல்லவும், சரவணன் திகைப்புடன் அவனது முகத்தைத் தன் பக்கம் திருப்பினான்..

“கார்த்தி.. ஆதிரா ரொம்ப சாஃப்ட்டான பொண்ணு..” சரவணன் மெல்ல இழுக்க,

“தெரியும்.. அதியமான் சார் சொன்னாரு.. ரொம்ப நல்ல பொண்ணும் கூட..” கார்த்திக் பதில் சொல்ல, சரவணன் மேலும் திகைத்தான்.

‘என்ன இவன் இன்னைக்கு இப்படி பேசிட்டு இருக்கான்? இவன் மனசுல என்ன தான் ஓடுது?’ மனதினில் நினைத்துக் கொண்ட சரவணன்,  

“நீ மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கன்னு எனக்குத் தெரியல? ஆனா நம்ம அம்மாவுக்கு எல்லாம் அவ சரிப்பட மாட்டா.. அம்மா அவளை மூட்ட பூச்சி மாதிரி நசுக்கி எடுத்திருவாங்க.. அவ ஒரு சொல் தாங்க மாட்டா.. அவ ரொம்ப பூ போல இருக்கற பொண்ணு.. அதிர்ந்து கூட பேசத் தெரியாது.. கோபத்தை கூட அவளுக்கு முழுசா காட்டத் தெரியாது கார்த்திக்.. அவ எப்படி நம்ம வீட்டுல வாழ முடியும்.. அவளை இன்னைக்கு தானே பார்த்த.. அதோட அவளை மறந்துட்டு வேலையைப் பாரு..” கறாராக சொன்னவன், கார்த்திக் அவனை வெற்றுப் பார்வை பார்க்கும்பொழுதே,   

“சரி.. நான் உடைச்சு சொல்றேன்.. அவ உன்னோட குணத்துக்கு எல்லாம் சரிபட மாட்டா.. நீ அவளை உன் இஷ்டத்துக்கு ஆட்டி வைப்ப.. உனக்கும் அம்மாவோட குணத்துல பாதி இருக்கு.. நீ நாலு தடவ அவகிட்ட அன்பா பேசினா அவ உன்னை நம்பிருவா.. அது ஒரு லூசு.. நீயோ பேசறதுல வல்லவன்.. நீ பேசிப் பேசியே கண்டிப்பா அவளைக் கவுத்திருவ. எனக்கு அவளை நினைச்சா பயமா இருக்கு கார்த்திக்.. உங்ககிட்ட சிக்கி சின்னாபின்னமாகி அவ வாழ்க்கை கெட வேண்டாம்.. விட்டுடு..” என்றவன், கோபமாக, 

“இங்கப் பாரு.. நான் சொல்றதை நல்லா கேளு.. அவளை யாரும் ஈசியா யூஸ் பண்ணிக்கறதை நான் அனுமதிக்க மாட்டேன்.. வேண்டாம்.. இதோட அவளை விட்டுட்டு வேற யாரையாவது பாரு.. உனக்கும், நம்ம வீட்டுக்கும் அவ சரி பட மாட்டா..” மீண்டும் சரவணன் அதையே கண்டிப்புடன் சொல்ல, கார்த்திக் எழுந்து அமர்ந்து அவனைப் பார்த்தான்..

“என்ன பார்க்கற?” அவனது பார்வையை உணர்ந்து சரவணன் கேட்க,

“ஒண்ணும் இல்ல.. எனக்கு ஒரு சந்தேகம்? நீ என்ன அவளுக்கு இவ்வளவு வக்காலத்து வாங்கற? ஏதாவது விஷயமா? என்கிட்டே சொல்லாம மறைக்கறியா?” சாதாரணம் போல கார்த்திக் கேட்டாலும், அவனது மனது ஏனோ அவன் சொல்லும் பதிலைக் கேட்க அடித்துக் கொண்டது. ‘சரவணா.. அப்படி மட்டும் எதுவும் சொல்லிடாதே.. நான் தாங்க மாட்டேன்..’ அவனது மனது மீண்டும் மீண்டும் அதையே சொல்லிக் கொண்டு அவனது பதிலைக் காண காத்திருந்தது..

சரவணன் சொல்லப் போகும் பதிலுக்காக அவனது முகத்தையே கார்த்திக் பார்த்துக் கொண்டிருக்க, “ஒரு பொண்ணைப் பத்தி அக்கறையா சொன்னா உடனே அது காதலா தான் இருக்கனுமா? ஏன் ஃப்ரெண்டுங்கற அக்கறையில இருக்கக் கூடாதா?” என்று கடுமையாகக் கேட்டவன், கார்த்திக், ‘உஃப்’ என்று இழுத்து வைத்திருந்த மூச்சை வெளியிடும் பொழுதே, 

“அவ என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட்.. நானும் அவளும் ஒரே டீம்ல தான் வர்க் பண்றோம்.. ஒரு வருஷமா அவ கூட இருக்கற எனக்கு அவளைப் பத்தி நல்லாத் தெரியும்.. உன்னைப் பத்தியும் எனக்கு நல்லாத் தெரியும்.. நம்ம குடும்பத்தைப் பத்தியும் எனக்கு நல்லாத் தெரியும். அதனால தான் சொல்றேன்.. அவ எல்லாம் நம்ம குடும்பத்துக்கு வேண்டாம்.. அவளை விட்டுடுடா கார்த்திக்.. ப்ளீஸ்.. அவ வேற நல்ல இடமா கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருக்கட்டும்.. காதல்ங்கற பேர்ல அவளோட வாழ்க்கையை கெடுத்திறாதே..” சரவணனின் குரலில் தான் அத்தனை படபடப்பு..

அவன் அவ்வாறு சொல்லவும், கார்த்திக்கின் மனதில் ஆதிராவின் மேல் இருந்த எண்ணம் மேலும் வலுப்பெற்றது.. சரவணன் பொதுவாக பெண்களிடம் நெருங்கிப் பழகாதவன்.. அவனே ஆதிராவைப் பற்றி இப்படி சொல்வது கார்த்திக்கிற்கு மேலும் அவள் மீதான மதிப்பைக் கூட்டியது.

‘எனக்கு என்னவோ உன்னைப் பார்த்ததுல இருந்தே ரொம்பப் பிடிச்சிருக்கு.. என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ற. என்னை இப்படி முடக்கி போட்டு படுக்க வச்சிருக்கியே.. இது உனக்கே நியாயமா? இதுல நீ என் தம்பியோட ஃபிரெண்ட் வேற.. அது எனக்கு இத்தனை நாள் தெரியல பாரேன்.. அவன் இத்தனை நாளா உன்னைப் பத்தி ஏதாவது சொன்னானா பாரேன்? நீ எனக்கானவன்னு என் மனசு சொல்லுது.. அது தான் இப்படி சுத்தி சுத்தி நீ இன்னைக்கு எனக்கு அறிமுகம் ஆகற போல.. உனக்கு பட்சி அப்படி ஏதாவது சொல்லிச்சா? ஹே பேபி டால்.. உன்னோட கார்த்திக் கம்மிங் டு கெட் மை ஆதிரா.. ஆதிரா எனக்குத் தான்..’ தனக்குள் பேசிக் கொண்டவன், சரவணனை அமைதியாகப் பார்த்தான்.    

“என்ன பார்க்கற? பதில் சொல்லு.. இனிமே அவளைப் பத்தி நீ நினைக்க வேண்டாம்.. சரியா?” ஆவலாக சரவணன் கேட்க,

“பிரியாணி கேட்ட இல்ல.. அது வந்திருச்சு.. நான் போய் வாங்கிட்டு வரேன்..” அவன் கேட்டதற்கு பதில் சொல்லாமல் கார்த்திக் எழுந்து செல்லவும், சரவணன், ஆயாசத்துடன் அவனைப் பின்தொடர்ந்தான்.

“அம்மாகிட்ட சொல்லிடுவேன் கார்த்திக்..” பிரியாணியைப் பிரித்துக் கொண்டே சரவணன் மிரட்ட, கார்த்திக், உதட்டைப் பிதுக்கிவிட்டு, பிரியாணியில் கவனம் ஆனான்.. 

அதற்கு மேல் சரவணன் எதுவும் பேசாமல் உண்டு முடிக்க, “நம்ம வீடு இருக்கற இதுக்கு கல்யாணம் ஒண்ணு தான் பாக்கி.. எனக்கு அது போல எல்லாம் எந்த ஐடியாவும் இல்ல..” சரவணனின் முகத்தைப் பார்த்த கார்த்திக்கிற்கு வம்பு செய்யத் தோன்றியது.. உணவிலேயே கவனத்தைப் பதித்துக் கொண்டு கார்த்திக் இவ்வாறு சொல்லவும், சரவணன் உதடு குவித்து, ஒரு நிம்மதிப் பெருமூச்சை வெளியிட, அதைப் பார்த்த கார்த்திக் உள்ளுக்குள் புன்னகைத்துக் கொண்டான்.

‘நான் முடிவு பண்ணிட்டேன்.. அவ தாண்டா உன் அண்ணி..’ தனக்குள் சொல்லிக் கொண்டவன், அதற்கு மேல் கிரிக்கெட் மேட்சைப் போட்டுக் கொண்டு, அதில் தனது கவனத்தைப் பதிக்க, சரவணன் உள்ளுக்குள் நிம்மதி கொண்டான்..

கார்த்திக் நாட்டிய நிகழ்ச்சிக்கு சென்று வந்த நாளில் இருந்து ஒரு வழக்கு அவனைத் தன்னுள் சுருட்டிக் கொண்டது.. அந்த வழக்கிற்கு தேவையான பாயின்ட்களை அவன் சேகரிக்கவே அந்த வாரம் அவனுக்கு சரியாக இருந்தது.

அந்த வார வெள்ளிக்கிழமை மாலை, அந்த வழக்கு சம்பந்தமாக பேசிவிட்டு, வேலை பலுவினால் உண்டான இறுக்கத்தை குறைக்க, தனது காரில் மனம் போன போக்கிற்கு அவன் சுற்றிக் கொண்டிருக்க, அப்பொழுது ட்ராபிக் சிக்னலில் அவன் அருகே ஒரு பஸ் வந்து நின்றது.. அதில் இருந்து சிரிப்புச் சத்தம் கேட்க, உச்சுக்கொட்டிக் கொண்டு, அவன் அந்த பஸ்ஸை நிமிர்ந்துப் பார்க்க, அவனது கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது..

அவனது இதழ்கள் தன்னாலேயே சிரிப்பை பூசிக் கொள்ள, அவனது பார்வை அந்த பஸ்சின் ஜன்னலில் மலர்ச்சியுடன் பதிந்து இருந்தது.. அருகில் இருந்த ஒரு பெண்ணிடம் சிரித்து பேசிக் கொண்டே, பஸ் நிற்கவும் வெளியில் தனது பார்வையைத் திருப்பிவளின் விழிகளில், அவளையேப் பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக் விழுந்தான்..

அவனது இதழ்கள் புன்னகைத்துக் கொண்டிருக்க, அன்றைய நாள் நினைவில் ஆதிராவின் இதழ்களும் புன்னகை பூசிக் கொண்டது.. அவளது கவனம் தான் சொல்வதில் இல்லை என்று கவனித்த அந்தப் பெண், அவளைப் பிடித்து உலுக்க, பார்வையை அவள் பக்கம் திருப்பினாலும், அவளுடன் பேசினாலும், ஆதிராவின் பார்வை ஏனோ அவனிடம் தாவத் துடித்தது..

அதை கட்டுப்படுத்திக் கொண்டு அவள் பேசிக் கொண்டிருக்க, ட்ராபிக் சிக்னல் பச்சைக்குத் தாவி வாகனங்கள் மெல்ல நகரத் துவங்க, அதை உள்வாங்கிக் கொண்டிருந்த ஆதிராவின் பார்வை அவசரமாக அவனிடம் தாவியது. மெல்ல வண்டியை நகர்த்திக் கொண்டே அவளைப் பார்த்தவன், கண்சிமிட்டி விட்டு, வண்டியை செலுத்த, ஆதிரா நெஞ்சம் படபடக்க அவசரமாக திரும்பிக் கொண்டாள்..

“ஹே ஆதிரா.. யாரு அது? உன்னையே அப்படியே வச்சக்கண்ணு வாங்காம பார்த்துக்கிட்டு இருக்காங்க?” அந்தப் பெண் கேட்க,

“அவரு ஒரு லாயராம்.. போன வாரம் ஒரு டான்ஸ் ஷோ பண்ணினோம் இல்ல.. அதுக்கு வந்திருந்தார்.. இப்போ சிக்னல்ல திரும்பினா என்னைப் பார்த்துட்டு இருக்கார்.. அதான் நான் எதுக்கு என்னைப் பார்க்கறார்ன்னு பார்த்துட்டு இருக்கேன்..” ஆதிரா சொல்லவும்,

“ஹே.. அதுக்காக பார்க்கறியா? இல்ல ஆளு நல்லா இருக்காருன்னு பார்த்துட்டு இருக்கியா? அவரோட பார்வையும் எதுவோ சரி இல்லையே..” அவள் கேலி செய்ய, ஆதிரா அவளைப் பார்த்து சிணுங்கினாள்.

“அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல.. ரொம்ப ஓட்டாதே.. தெரிஞ்ச பொண்ணுன்னு அவர் பார்த்து இருப்பார்.. நீயா கற்பனை பண்ணிக்காதே…” என்றவள், கண்களை மூடி தனது இருக்கையில் சாய்ந்துக் கொண்டாள்.

மீண்டும் பஸ் நிற்கவும், கண்களைத் திறந்து அவனைத் தேடத் தூண்டிய மனதை அடக்கிக் கொண்டு அவள் இருக்க, அருகில் இருந்த பெண்ணோ, “ஆதி.. அங்கப் பாரு.. இந்த சிக்னல்லையும் அவரு நிக்கறாரு..” என்று உலுக்க, கண்களைத் திறந்தவளின் கண்களில் பஸ்சின் அருகே நின்றுக் கொண்டிருந்த கார்த்திக் விழுந்தான்..

அவனைப் பார்த்தவள், “சரி.. இருந்துட்டு போகட்டும்.. அவரு ஏதோ இந்தப் பக்கம் வந்து இருக்காரு.. ட்ராபிக்ல மாட்டி நம்ம பஸ் கூடவே வராரு.. அதுக்கு என்ன இப்போ?” என்று கேட்டவள், கார்த்திக்கைத் திரும்பி முறைத்துவிட்டு, மீண்டும் கண்களை மூடிக் கொண்டாள்.

அவளது முறைப்பை பார்த்தவனின் இதழ்களில் மேலும் புன்னகை விரிந்தது.. ‘ஓ. இதுக்கு பேர் தான் முறைப்பா? நாங்க அப்படியே பயந்துட்டோம்..’ என்று தனக்குள் பேசிக் கொண்டவன், தான் திரும்பிச் செல்ல வேண்டிய பாதை வந்த பொழுதும், அவளது பேருந்தை தொடர நினைத்து, தனது வண்டியை அவளது பேருந்தின் பின்னால் செலுத்தினான்.

அவள் இறங்க வேண்டிய இடம் வந்ததும், பேருந்தில் இருந்து ஆதிரா இறங்க, அதைப் பார்த்தவன், “இங்க தான் நம்ம மேடம் இருக்காங்களா? பரவால்ல நம்ம ஏரியாவுக்கும் இதுக்கும் ரொம்ப தூரம் இல்ல..” என்று சொல்லிக் கொண்டவன், காரை ஓரம் கட்டி நிறுத்தி, கீழே இறங்கி நின்றான்..

அவன் நிற்பதைப் பார்த்தவள், அவன் தன்னைத் தான் தொடர்ந்து வந்திருக்கிறான் என்று யோசித்து, கோபமாக அவன் அருகில் வேகமாக வந்து, “இங்க எதுக்கு இப்போ நின்னுக்கிட்டு இருக்கீங்க?   எதுக்கு என் பஸ் பின்னாலயே வரீங்க? இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன்.. அப்பறம் நான் அதியமான் அண்ணாகிட்ட சொல்ல வேண்டி இருக்கும்.. அவரோட தம்பி டிஎஸ்பி தெரியுமா? இதோட இதை எல்லாம் நிறுத்திக்கோங்க..” என்று மிரட்டிவிட்டு, அவன் பதில் பேசுவதற்கு முன்பே அவனைத் தாண்டிக் கொண்டு அவள் செல்ல, அவளது மிரட்டலை ரசித்துக் கொண்டிருந்த கார்த்திக், அவள் நகர்ந்து செல்லவும்,

“ஹலோ ஆதிரா.. நான் உன்னை ஃபாலோ பண்ணிட்டு வந்தேன்னு உனக்கு யாரு சொன்னா?” கார்த்திக் கேட்கவும், நின்று திரும்பிப் பார்த்தவள், அவளது அழகிய விழிகளை விரித்து அவனைப் பார்க்க,

“நான் ஒரு வக்கீல்.. என் க்ளயண்டை மீட் பண்ண இந்தப் பக்கம் வந்திருக்கலாம்ல.. வர வழியில எதேர்ச்சையா உன் பஸ் கூட வந்திருக்கலாம்ல. அது எப்படி உன்னை ஃபாலோ பண்ணறேன்னு சொல்ற?” என்று கேட்கவும், அவனை தவறாக புரிந்துக் கொண்டு பேசி விட்டோமே என்று நினைத்தவள், நாக்கை கடித்து, தனது தலையில் தட்டிக் கொண்டு,

“ஹையோ.. அப்படியா? சாரி.. சாரி.. நீங்க என்னைப் பார்த்து சிரிக்கவும், இப்போ இங்க நிக்கவும், நான் தான் அப்படி நினைச்சிட்டேன் போல.. எல்லாம் அவளால வந்தது.. சாரி சார்..” கண்களைச் சுருக்கி, அவள் மன்னிப்பு வேண்டிய விதத்தில் கார்த்திக்கின் இதயம் தானாக அவளது காலடியில் விழுந்தது..

அவளைப் பார்த்து புன்னகைத்து, “அது பரவால்ல.. எதுக்கு இவ்வளவு சாரி.. எப்படியோ உன்னைப் பார்க்கத் தானே இப்போ இங்க நின்னுட்டு இருக்கேன்..” கார்த்திக் சொல்லவும், குழப்பமாக அவள் பார்க்க,

“இல்ல.. இப்போ உன்னைப் பார்த்துக்கிட்டு தானே நின்னுட்டு இருக்கேன்.. அதைச் சொன்னேன்..” கார்த்திக் திரித்துச் சொல்லவும், அவனைப் பார்த்துச் சிரித்து,

“கடியா? நான் சிரிச்சிட்டேன்..” என்றவள், கார்த்திக் முறைக்கும் பொழுதே,  

“ஓகே சார்.. உங்களுக்கு வேலை இருக்கும்.. நீங்க போய் பாருங்க.. நான் கிளம்பறேன்.. பை..” என்றவள், நகர்ந்து செல்ல, ‘ஆதிரா..’ கார்த்திக் அழைத்தான்..   

தனது பர்சில் இருந்து தனது விசிட்டின் கார்ட் ஒன்றை எடுத்து அவளிடம் நீட்டியவன், “என்னோட கார்ட் இது.. என்னோட போன் நம்பர் இதுல இருக்கு..” என்று அவன் சொல்லிவிட்டுத் தரவும், அவனைக் குழப்பமாக பார்த்துக் கொண்டே வாங்கிக் கொண்டவள்,

“எதுக்கு?” என்று மெல்லிய குரலில் கேட்க,

“சும்மா வச்சிக்கோ.. யாருக்காவது ஏதாவது ஹெல்ப் வேணும்ன்னா சொல்லலாம்ல..” என்று கார்த்திக் கேட்கவும், குழப்பத்துடனே தலையை ஆட்டியவள், அதை வாங்கி தனது பர்சில் வைத்துக் கொண்டு,

“சரி.. நான் கிளம்பறேன்..” என்று அவள் சொல்லவும்,

“உன்னோட போன் நம்பர் தர வேண்டாமா?” கார்த்திக் கேட்கவும்,

“எ… எதுக்கு?” அப்பொழுதும் அவள் குழப்பத்துடன் கேட்க, தனக்குள் சிரித்துக் கொண்டவன்,

“இல்ல.. ஒருவேளை நீ உனக்கு தெரிஞ்சவங்க யாருக்காவது ஹெல்ப் பண்ணனும்ன்னு நினைச்சு எனக்கு கூப்பிட்டா.. நீ தான் கூப்பிடறன்னு எனக்குத் தெரிய வேண்டாமா? அதுக்கு தான்..” காரண காரியங்களுடன் கார்த்திக் விளக்கம் சொல்லவும், ‘ஓ..’ ஆதிரா யோசனையுடன் இழுத்தாள்..

“ஹ்ம்ம்..” கார்த்திக் மண்டையை உருட்டி, தனது மொபைலுடன் தயாராக இருக்கவும், தனது நம்பரை அவள் சொல்லச் சொல்ல, கார்த்திக் தனது செல்லில் குறித்துக் கொண்டான்..

நம்பரைக் கொடுத்ததும், “நான் இப்போ கிளம்பவா?” ஆதிரா கேட்கவும்,

“நான் வேணா உன்னோட வீடு வரை டிராப் பண்ணவா? இங்க இருந்து ரொம்ப தூரம் போகனுமா? இல்ல நடந்து போற தூரம் தானா?” கார்த்திக் கேட்கவும்,

“எங்க வீடு கோயம்புத்தூர் பக்கத்துல இருக்கு.. இங்க நான் ஒரு வீடு எடுத்து தங்கி இருக்கேன்.. அதுவும் இதோ கொஞ்ச தூரம் நடந்தா வந்திரும்..” என்றவளிடம்,

“ஓ அப்படியா? நான் கூட பேசிக்கிட்டே வந்து அந்த ஏரியா எல்லாம் எப்படி இருக்குன்னு பார்க்கறேன்.. எனக்கு தெரிஞ்சவங்க ரிலேடிவ் பொண்ணு இங்க வேலைக்கு வராளாம்.. ஏரியா நல்லா இருந்தா அவங்களையும் இங்க தங்க சொல்லாம் தானே.. அவளுக்கு ஏதாவது ஹெல்ப் வேணும்ன்னா நீ செய்வ தானே?” கார்த்திக் கேட்கவும், மண்டையை உருட்டியவள், மெல்ல நடக்க, கார்த்திக் அவளுடன் இணைந்துக் கொண்டான்..   

“நீ இருக்கற வீடு எப்படி இருக்கும்? அதாவது வசதியில கேட்கறேன்..” கார்த்திக் கேட்க,

“நான் தங்கி இருக்கற அந்த ஃப்ளாட்ல பத்து வீடு இருக்கு.. செக்யூரிட்டி, சிசிடிவின்னு சேஃப்டி தான்.. ஃபிளாட் ஓனர் அசோசியேஷன் இருக்கு.. அந்த அங்கிள் எந்த கம்ப்ளைன்ட் பண்ணினாலும் உடனே செஞ்சுத் தருவார்.. ரெண்டு ஃபேமிலி தவிர மீதி எல்லாமே என்னைப் போல வேலைக்குப் போற கேர்ள்ஸ் தான் தங்கி இருக்கோம்.. அவங்கவங்க அவங்க வேலையைப் பார்ப்பாங்க.. ஒண்ணும் பிரச்னை இல்ல.. என்னோட ஃப்ளாட்ல என் கூட ஒரு பொண்ணு தங்கி இருக்கா.. அவ நர்ஸ்சா இருக்கா..” என்று சொல்லிக் கொண்டே வந்தவள், தனது ஃப்ளாட் வரவும்,

“சரி.. என் ஃப்ளாட் வந்தாச்சு.. நான் வரேன்.. அப்பறம் பார்க்கலாம்.” வழக்கமாக சொல்லிவிட்டு செல்வது போல அவள் சொல்லிவிட்டுச் அந்த ஃப்ளாட்டின் கேட்டின் உள்ளே செல்ல கை வைக்க,

“எப்போ பார்க்கலாம்?” கார்த்திக்கின் கேள்விக்கு பதில் சொல்லாமல், சிரித்துவிட்டு அவள் உள்ளே செல்லவும், புன்னகையுடன் தனது தலையை கோதிக் கொண்டவன்,

“அச்சோ.. ஸ்வீட்டு ஆதிரா.. ஆனா.. இவ்வளவு அப்பாவியா இருக்கியே.. பட் எனக்கு அது ரொம்ப பிடிச்சிருக்கு.. உன்னை பத்திரமா பார்த்துப்பேன்.. இந்த சிரிச்ச முகம் வாடாம..” என்று நினைத்துக் கொண்டவன், மனதில் குமிழிட்ட சந்தோஷத்துடன், அந்த வாரம் முழுவதும் அவனை அழுத்திய வேலை பலுவின் அழுத்தம் காணாமல் போயிருக்க, எப்பொழுதுமே எதையோ தொலைத்தது போல தேடிக் கொண்டிருக்கும் மனது இன்று அமைதியாகி, நிறைந்தது போல இருக்கவும், விசில் அடித்துக் கொண்டே, தனது காரை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றான்..

அடுத்து வந்த தினங்கள், மெசேஜ் வடிவில் இருவரின் நட்பை வளர்த்தது.. அவளை சந்தித்த பிறகு இரண்டு தினங்கள் தனது மனதை அடக்கிக் கொண்டு அமைதி காத்தவன், மூன்றாவது நாள் தனது மொபைலில் இருந்து அவளது செல்லிற்கு அழைத்தான்..

அப்பொழுது அலுவலக காலில் இருந்தவள், அவனது காலை கட் செய்து, “யாரு?” என்று கேட்டிருக்க, அந்த கேள்வியில் கார்த்திக்கின் இதயம் சுருண்டு போனது..

தான் மட்டும் ‘தான் அவளது நினைவுகளில் உழல்கிறோமோ? அவளுக்கு தன்னுடைய நினைவுகளே இல்லையே’ என்று நினைத்துக் கொண்டவன், “கார்த்திக்” என்று அவளுக்கு மெசேஜ் அனுப்பி இருக்க,

“ஹையோ.. சாரி.. சாரி.. நான் உங்க நம்பர் சேவ் பண்ணனும்ன்னு நினைச்சு மறந்து போயிட்டேன்.. கால்ல இருக்கேன்.. முடிச்சிட்டு கால் பண்றேன்.. சாரி..” என்று மன்னிப்பு வேண்டும் ஒரு குழந்தை படத்தைப் போட்டிருக்க, கார்த்திக்கின் இதழ்களில் புன்னகை விரிந்தது..

அவளது வேலை முடிந்ததும் அவனுக்கு உடனே அழைக்கவும் செய்ய, அதில் இருந்து அவர்களது நெருக்கம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தது..

போனிலேயே அவர்களது சம்பாஷனைகள் தொடர்ந்துக் கொண்டிருக்க, ஒரு நாள் பேசிக் கொண்டிருந்த பொழுது, “ஆதிரா.. நாம எவ்வளவு நாள் போன்லயே பேசிட்டு இருக்கறது? மீட் பண்ணலாமா?” என்று கார்த்திக் கேட்க, அவனிடம் மெல்லச் சாய்ந்திருந்த அவளது மனது அடித்துக் கொண்டது..

“நீங்க என்னை மீட் பண்ணனும்ன்னா கோயம்புத்தூர்ல இருக்கற எங்க வீட்டுக்குத் தான் வரணும்..” விளையாட்டாக அவள் சொல்ல,

“ஏன்? என்னாச்சு? எதுக்கு இப்போ ஊருக்கு போயிருக்க? விளையாடாதே ஆதிரா.. எனக்கு உன்னைப் பார்க்கணும்..” கார்த்திக்கின் படபட கேள்விகளில், அவன் வசம் மொத்தமாக சாய்ந்தவள்,   

“கார்த்திக்.. நான் நிஜமாவே ஊர்ல இல்ல.. இங்க அம்மா அப்பாவைப் பார்க்க வீட்டுக்கு வந்திருக்கேன்.. அப்பாவுக்கு என்னைப் பார்க்கணும் போல இருந்ததாம்.. அது தான் உடனே கிளம்பி வந்துட்டேன்..” வருத்தமாக அவள் சொல்ல, அவளது குரலில் இருந்த வருத்தத்தையும் தவிப்பையும் உணர்ந்துக் கொண்டவனின் மனது துள்ளிக் குதிக்க,

“எனக்கு இப்போ உன்னை ரொம்ப பார்க்கணும் போல இருக்கு.. அதுக்குத் தான் கேட்டேன்.. அப்போ நீ எப்போ வருவா?” கார்த்திக் மெல்ல தனது மனதைத் திறந்துச் சொல்லவும்,

அவனது குரலில் இருந்த ஏதோ ஒன்று ஆதிராவை “எனக்கும்..” என்று சொல்லத் தூண்ட, அதை வாய் அப்படியே சொல்லவும் செய்தது..  

“இப்போ நீ சொல்லு நான் உடனே கிளம்பி வரேன்.. சாயந்திரம் உன் வீட்ல இருப்பேன்..” குதூகலமாக கார்த்திக் சொல்ல, அந்த குதூகலம் தொற்றிக் கொண்டவளாக,

“வந்து தான் பாருங்களேன். யாரு வேண்டாம்ன்னு சொன்னா? அப்படியே எங்க அப்பா அம்மாவையும் மீட் பண்ணலாம்..” விளையாட்டாக அவள் சொல்ல, அன்று மாலை தனது வீட்டின் முன்பு நின்றுக் கொண்டிருந்தவனைப் பார்த்தவளுக்கு மூச்சடைத்தது.. தலையும் சுற்றத் துவங்கியது..

Leave a Reply

error: Content is protected !!