எங்கே எனது கவிதை -4

எங்கே எனது கவிதை -4
4
இன்று..
தள்ளாடிக் கொண்டே வீட்டிற்கு வந்த கார்த்திக்கைப் பார்த்த சரவணனுக்கு கோபம் தலைக்கு மேல் ஏறியது..
“டேய்.. என்ன இன்னைக்கு ஓவரா போயிருக்கு? உனக்கு அறிவு இருக்கா? உன்னை இப்படி பார்த்தா ஆதிரா பயப்படுவா.. அவளுக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு உனக்குத் தெரியும்ல?” அரை போதையில் இருந்தவனை உலுக்கி அவன் கேட்கவும்,
“அவ கிடக்கா.. போய் உன் வேலையைப் பாரு.” என்றவன், தனது மெத்தையில் பொத்தென்று விழுந்து, அப்படியே உறங்கத் துவங்கினான்..
அவனைத் தட்டிப் பார்த்த சரவணன், “அவ பின்னாலேயே சுத்திச் சுத்தி அவளை லவ்க்கு ஓகே சொல்ல வச்சு, ஊரு சுத்தறதுக்கு வர வைக்கிற வரை எல்லாம் நல்லா இருந்துச்சோ? இப்போ அவ கிடக்காளா? உனக்கு எல்லாம் அவ அதிகம்டா.. ஈசியா கிடைச்சிட்டா இல்ல.. அது தான்.. உன் சொல்படி ஆட்டி வைக்கிற பொம்மையா வச்சிருக்கற இல்ல..” என்று அவனது முதுகில் ஒரு அடி வைத்தவன், கோபமாக அவனது அறையை அடித்து மூடி விட்டுச் செல்ல,
அந்த சத்தத்தில் விழித்தவன், “மெதுவா டா.. கதவு உடைஞ்சிடப் போகுது.. அப்பறம் அதுக்கு வேற அம்மாக்கிட்ட திட்டு வாங்கணும்..” என்று கூறிவிட்டு, அப்படியே மீண்டும் உறங்கத் துவங்கினான்.
மறுநாள் காலை கார்த்திக்கின் செல் விடாமல் அடித்துக் கொண்டிருந்தது.. அவனது செல் சைலென்ட்டில் இருந்ததினால் அதன் சத்தம் கேட்காமல் போக, உறக்கம் கலையாமல் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான்..
இருபது முறைக்கும் மேல் ஆதிராவின் தந்தை பாலகிருஷ்ணன் அழைத்திருந்தார்.. அவனும் செல்லை எடுக்காமல் போகவும், அவருக்கு பதட்டம் தொற்றிக் கொண்டது.. ஆதிராவின் செல்போன் உயிர்ப்பின்றி இருக்க, கார்த்திக்கின் செல்லிற்கு அவரது கால் செல்வதே அவருக்கு சிறிது பதட்டம் குறைந்து காணப்பட்டாலும், அவனும் எடுக்காமல் போகவும் அவருக்கு மேலும் பதட்டம் தொற்றிக் கொண்டது..
மீண்டும் ஆதிராவின் போனிற்கு முயன்றுப் பார்த்தவர், ஆதிராவின் உடன் தங்கி இருக்கும் பெண்ணிற்கு அழைத்தார்.. அப்பொழுது தான் வீட்டில் நுழைந்த அந்தப் பெண், இரவு ஆதிராவிற்கு சமைத்து வைத்த உணவு அப்படியே எடுக்கப்படாமல் இருப்பதை கவனித்து, ஆதிராவைத் தேடி அவளது அறைக்குச் சென்றாள்.
அங்கு அவள் வந்ததிற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் போகவும், சந்தேகத்துடன் மீண்டும் வீட்டில் அவளைத் தேடியவள், அவளுக்கு அழைக்கத் துவங்கினாள்.
“நைட் வீட்டுக்கு வர லேட் ஆகும்ன்னு தானே சொன்னா.. வரவே இல்லையே.. ஒருவேளை ரொம்ப லேட் ஆச்சுன்னு ஆபிஸ்ல இருந்து வரவே இல்லையோ? ஒரு மெசேஜ் போட்டு இருக்கலாம்ல.. இவ என்ன வழக்கம் இல்லாத வழக்கமா பண்ணிட்டு இருக்கா?” என்று புலம்பிக் கொண்டே இருந்தவள், ஆதிரா செல்லை எடுக்காமல் போகவும், குழம்பியபடி வேகமாக தன்னை சுத்தம் செய்துக் கொண்டு வந்தாள்.
அதற்குள் கார்த்திக்கிற்கு அழைத்து சோர்ந்து போன பாலகிருஷ்ணன், ஆதிராவின் உடன் இருக்கும் தோழி வித்யாவிற்கும் அழைத்திருக்க, அவரது எண்ணைப் பார்த்தவளுக்கு மனதில் அபாயச் சங்கு ஊத, அவசரமாக அவருக்கு மீண்டும் அழைத்தாள்.
“அப்பா.. என்னப்பா இவ்வளவு தடவ கூப்பிட்டு இருக்கீங்க? ஆதிரா திடீர்ன்னு அங்க கிளம்பி வந்திருக்காளா? அவ போன் சார்ஜ் இல்லாம சுவிட்ச் ஆஃப் ஆகிருக்குன்னு சொல்ல உங்க நம்பர்ல இருந்து கூப்பிட்டு இருக்காளா?” அவர் போனை எடுத்து ஹலோ சொல்வதற்குள் வித்யா படபடவென்று கேட்டு முடிக்க, பெரியவர் அதிர்ந்தே போனார்..
“என்னம்மா சொல்ற? அவ எதுக்கும்மா இந்த வாரம் இங்க வரப் போறா? போன வாரம் தானே வந்துட்டு போனா.. அவ நேத்து நைட் ஆபிஸ்ல இருந்து கிளம்ப லேட் ஆகிருச்சே.. பஸ் ஸ்டாப்ல இருந்து எனக்கு கூப்பிட்டா.. அப்பறம் யாரோ வந்தாங்கன்னு அவங்க கூட கிளம்பிட்டா.. காலைல பேசறேன்னு சொன்னாம்மா.. மணி ஒன்பது ஆகுது.. இன்னும் போனைக் காணுமே.. அவ போன் கூட எடுக்கவே இல்ல.. ஸ்விட்ச் ஃஆப்ன்னு வருது.. அது தான் உனக்கு கூப்பிட்டுப் பார்க்கலாம்ன்னு கூப்பிட்டேன்..” குழப்பத்துடன் பெரியவர் சொல்ல, வித்யாவிற்கு பதட்டம் தொற்றிக் கொண்டது..
“அப்பா.. அவ வீட்டுக்கு வந்தது போலவே இல்லையேப்பா.. நான் சமைச்சு வச்சது எல்லாம் அப்படியே இருக்கு.. அது தான் திடீர்ன்னு அவ அங்க கிளம்பி வந்துட்டா போலன்னு நினைச்சேன்..” வித்யாவின் குரலில் நடுக்கம்..
அவளது பதிலைக் கேட்டவருக்கு உள்ளுக்குள் நடுங்கத் துவங்கியது.. “அவ போன் சார்ஜ் காலி ஆகி இருக்கும்.. உனக்கு கூப்பிட்டா அவக்கிட்ட பேசலாம்ன்னு உனக்கு கூப்பிட்டேன்மா.. மாப்பிள்ளைக்கு போன் போட்டாலும் அவர் போனை எடுக்கலைம்மா.. ரெண்டு பேரும் காலையிலேயே எங்கயாவது போயிருக்காங்களோ? ஆனாலும் அவ எங்கக்கிட்ட சொல்லாம போக மாட்டாளேம்மா..” பெரியவரின் குரல் பயத்தில் நடுங்கியது..
“நீங்க கவலைப்படாதீங்க.. நான் எதுக்கும் கார்த்திக்குக்கு கூப்பிட்டு பார்க்கறேன்.. ஒருவேளை அவரு பிக்கப் பண்ணி, லேட் ஆகிருச்சுன்னு அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிருக்கலாம்ல.. லேட் ஆனதுனால நல்லா தூங்கி இருப்பாங்களா இருக்கும்.. எதுக்கும் நான் அவங்க தம்பியையும் கூப்பிட்டு பார்க்கறேன்..” என்று அவருக்கு தைரியம் சொல்வது போல தனக்கும் சொல்லிக் கொண்டவள், போனை வைத்தவுடன் கார்த்திக்கிற்கு அழைத்து தோற்று, சரவணனுக்கு அழைத்தாள்..
சரவணன் போனை எடுக்கவும், வித்யா இழுத்து வைத்திருந்த மூச்சை வெளியிட, “ஹலோ.. யாருங்க அது? ரொம்ப மூச்சு எல்லாம் பலமா இருக்கு?” சரவணன் கேலி செய்ய,
“ஹலோ சரவணன்.. நான் ஆதிராவோட ரூம்மேட் பேசறேன்.. கார்த்திக் சாரும் ஆதிராவும் எங்கயாவது வெளிய போயிருக்காங்களா? ஆதிராவோட போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருக்கு.. அவருக்கு போன் செஞ்சா போன் எடுக்க மாட்டேங்கிறாரு..” அவனது கேலியைக் கூட மனதில் பதிந்துக் கொள்ள முடியாமல், அவள் படபடவென்று பேச, சரவணனுக்கு குழப்பமும் பதட்டமும் தொற்றிக் கொண்டது..
“என்ன? என்ன சொல்றீங்க? கார்த்திக் இங்க தூங்கிட்டு இருக்கான்.. இன்னும் அவன் எழவே இல்லயே.. ஆதிரா எங்க? ஏன் இப்படி கேட்கறீங்க?” சரவணன் குழப்பத்துடன் கேட்க,
“சரவணன்.. ஆதிரா வீடுக்கே வரல போல சரவணன்.. அவ போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருக்கு.. நான் நைட் அவளுக்காக சாப்பிட செஞ்சு வச்சது எல்லாம் அப்படியே இருக்கு.. அவங்க அப்பாவும் ரொம்ப கவலைப்பட்டு எனக்கு கால் பண்றார்.. எங்க கடைசி நம்பிக்கையா அவ கார்த்திக் கூட இருப்பான்னு தான் உங்களுக்கு கூப்பிட்டோம்.. கார்த்திக்கும் வீட்டுல தூங்கிட்டு இருக்கார்ன்னா அவ எங்க போயிருப்பா? எங்க கிட்ட அவ எதுவும் சொல்லல.. கார்த்திக் கிட்ட அவ ஏதாவது சொல்லி இருக்காளான்னு கேளுங்களேன்..” வித்யாவிற்கு ஒருபுறம் பதட்டமும், ஒருபுறம் அழுகையும் முட்டிக் கொண்டு வர, கார்த்திக்கின் வாயில் இருந்து வரும் வார்த்தைக்காக, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அவள் காத்திருந்தாள்..
கார்த்திக்கின் அறைக்குச் சென்ற சரவணன், அவனைத் தட்டி “கார்த்திக்.. கார்த்திக்.. கொஞ்சம் சீக்கிரம் எழுந்திரு..” என்று எழுப்ப,
“என்னடா? எதுக்கு இப்போ இவ்வளவு பதட்டமா எழுப்பற? நெஞ்சு படபடன்னு ஆகுது..” என்றபடி கார்த்திக் எழுந்து அமர,
“ஆதிராவைக் காணுமாம்டா.. அவ கூட வீட்ல இருக்கறவங்க போன் பண்ணி இருக்காங்க..” சரவணன் பதட்டத்துடன் சொல்ல, கார்த்திக் அவனை புரியாமல் பார்த்தான்..
“டேய்.. அவ வேலை முடியலைன்னு காலையிலேயே ஆபிஸ் போயிருப்பா.. சின்சியர் சிகாமணி.. விடியறதுக்கு முன்னயே காலையிலேயே கிளம்பிப் போயிருப்பா..” பதட்டமே இல்லாமல் சொல்லிவிட்டு மீண்டும் படுக்கப் போக, சரவணன் அவனை பிடித்து நிறுத்தினான்..
“ஆதிராவோட போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருக்கு.. அவ நேத்து நைட்டே வீட்டுக்கு வரல போல… வீட்ல வச்சது எல்லாம் வச்சப்படி இருக்காம்..” பதட்டத்துடன் சரவணன் சொல்லவும், இப்பொழுது கார்த்திக்கிற்கும் பதட்டம் தொற்றிக் கொண்டது..
“என்னது? என்ன சொல்ற? அவ போனை ஆஃப் பண்ணவே மாட்டாளே.. எங்கடா போயிருப்பா? அப்படி எல்லாம் சொல்லாம போக மாட்டாளே..” குழப்பத்துடன் கார்த்திக் கேட்டு, தனது செல்லை எடுத்துப் பார்க்க, பாலகிருஷ்ணனிடம் இருந்து இருபதிற்கும் மேற்பட்ட கால்கள் வந்திருக்க, அவசரமாக அவளிடம் இருந்து ஏதாவது மெசேஜ் வந்திருக்குமோ என்று அவன் ஆராயத் துவங்கினான்..
இரவு அவள் அனுப்பி இருந்த வாய்ஸ் கால்கள் வந்திருக்க, “நைட் அவ எனக்கு போட்ட மெசேஜ் தவிர எதுவுமே இல்லடா.. எங்க போயிருப்பா? என்கிட்டயும் எதுவுமே சொல்லயே.. இன்னைக்கு சினமா போற ப்ளான் இருக்கறதுனால நேத்தே வேலை முடிச்சிட்டு பஸ்ல கிளம்பிருவேன்னு தான் சொன்னா.. ஒருவேளை வேலை முடியலையோ?” என்று தனக்குள் கேட்டுக் கொண்டவன்,
“அவ ஆபீஸ் தான் போயிருப்பா.. ஒரு ரெண்டு நிமிஷம்.. நான் ஃப்ரெஷ் ஆகிட்டு ஆபிஸ்ல போய் பார்க்கறேன்.. சார்ஜ் இல்லாம மொபைல் ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருக்கும்..” என்ற கார்த்திக், அவசரமாக குளியலறைக்குள் புக,
“ஒரு அரைமணி நேரம் வெயிட் பண்ணுங்க.. அவன் சொல்ற போல அவ ஆபீஸ் உள்ளே போயிருக்கலாம்.. பார்ப்போம்..” என்று வித்யாவை சமாளித்து போனை வைத்த சரவணன், கார்த்திக்கின் மொபைலில் ஆதிரா வரிசையாக அனுப்பி இருந்த வாய்ஸ் மெசேஜ்களை, அவன் அவளிடம் இருந்து மெசேஜ்களைத் தேடும்போதே கண்டுக் கொண்டிருந்த சரவணன், திறந்துப் பார்க்க, அவளது பதட்டம் நிறைந்த குரல், சரவணனுக்கும், குளியலறையில் இருந்த கார்த்திக்கிற்கும் எட்டியது..
‘ஹையோ ஆதிரா இவ்வளவு பயந்து எனக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருக்காளே.. நான் ஏன் அதை எல்லாம் கேட்காம போனேன்.. ஹையோ ஆதிரா.. ஆபீஸ்ல இருந்திடு.. நீ இல்லாம நான் என்ன செய்வேன்? என்னை பயமுறுத்தாதேடி..’ இதயம் தொண்டைக் குழியில் துடிக்க, புலம்பியபடி வேகமாக வெளியில் வந்தவனை, சரவணன் கொலைவெறியுடன் முறைத்துக் கொண்டிருந்தான்..
“அவ இவ்வளவு தடவ உனக்கு கூப்பிட்டு இருக்கா.. உன்னால என்னன்னு போனை எடுத்துக் கூட பேச முடியாதா? அவ்வளவு என்னடா உனக்குத் திமிரு.. இல்ல அவ்வளவு வெட்டி முறிக்கிற வேலையைப் பார்த்தியா? தண்ணி தானே அடிச்சிட்டு இருந்த? அவகிட்ட என்ன ஏதுன்னு கேட்டு, போய் கூட்டிட்டு வந்திருக்கலாம்ல..” என்று அவன் கேள்வி கேட்க, கார்த்திக் தலை குனிந்து நின்றான்.
“அவ மட்டும் ஆபீஸ்ல இல்லாம போகட்டும்.. உன் மேல தான் சந்தேகம்ன்னு நான் போலிஸ்ல கம்ப்ளைன்ட் தருவேன் பார்த்துக்கோ..” என்று மிரட்டியபடி, சரவணன் முன்னால் நடக்க, கார்த்திக் அவசரமாக அவனைப் பின் தொடர்ந்து சென்றான்..
கார்த்திக்கின் பைக்கை எடுத்த சரவணன், அவனை முறைத்துக் கொண்டே வண்டியை உதைக்க, “ஹலோ மாமா..” கார்த்திக் பாலகிருஷ்ணனுக்கு அழைக்க, அவரும் பதட்டத்துடன்,
“மாப்பிள்ளை.. ஆதிரா எங்கன்னு உங்களுக்குத் தெரியுமா? நீங்களும் ஏன் இவ்வளவு நேரம் போனை எடுக்கல? அவளோட போனும் ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருக்கு.. நான் இங்க இருந்து என்ன தான் நினைக்கட்டும்? அவ உங்க கூட தானே இருக்கா மாப்பிள்ளை.. அவகிட்ட போனைக் கொடுங்களேன்..” பதட்டமும், ஏக்கமுமாக அவர் கேட்க,
“இல்ல மாமா.. நா..ன். நான்.. நேத்து ஒரு மீட்டிங்ல இருந்தேன்.. அதுனால அவகிட்ட பேச முடியல.. காலையிலேயும் தூங்கிட்டேன் மாமா.. இப்போ தான் வித்யா போன் பண்ணினாங்க.. அவ நம்மளை விட்டு எங்கயும் போக மாட்டா மாமா.. ஆபிஸ்ல தான் இருப்பா.. நீங்க தைரியமா இருங்க.. நான் போய் பார்த்துட்டு உங்களுக்கு கால் பண்றேன்..” தனது தைரியத்தைத் திரட்டிக் கொண்டு அவன் சொல்ல, சரவணணின் கண்களுக்கு எரிக்கும் சக்தி இருந்தால் அவன் கார்த்திக்கை எரித்து இருப்பான்..
“கிரிமினல் லை..ய்..யர்..” சரவணன் பல்லைக் கடிக்க, கார்த்திக் ஆதிராவின் மொபைலுக்கு முயலத் துவங்கினான்..
“அவளுக்கு கால் பண்ணாதே.. உன்னை அப்படியே பைக்ல இருந்து பிடிச்சுத் தள்ளி விட்டுடுவேன்.. அத அவ அத்தனை தடவ நேத்து பேசும்போது செஞ்சிருக்கணும்.. இப்போ என்னத்துக்கு அவளுக்கு போன் செய்யற? அவ அத்தனை மெசேஜ் அனுப்பறாளே என்னவோ ஏதோன்னு கூடவா உனக்கு பார்க்க முடியல.. அவ குரல்ல அவ்வளவு பயம் தெரியுதுடா.. நீ எல்லாம் ஒரு ஆம்பள.. ஒரு பொண்ணை எல்லாம் பொறுப்பா பார்த்துக்கற துப்பு உனக்கு இல்ல.. நீ எல்லாம் கல்யாணமே செஞ்சிக்காதே.. அப்படியே அம்மா குணம்.. சுயநலம்..” தனது கோபத்தை எல்லாம் கார்த்திக்கிடம் காட்டிக் கொண்டு வர, கார்த்திக் குற்ற உணர்வில் குமைந்துக் கொண்டிருந்தான்..
இருவரும் இரு வேறு மனநிலையில் அலுவலகம் சென்று சேர்ந்தனர். தனது ஐடி கார்டை எடுத்துக் கொண்டு சரவணன் அவசரமாக அலுவலக கட்டிடத்தினுள் செல்ல, கார்த்திக் தனது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அவனது வரவிற்காக காத்திருந்தான்..
உள்ளே சென்று தேடிய சரவணனோ, அங்கு ஆதிராவைக் காணாது சோர்வுடன் திரும்ப, அவன் தனியாக வருவதைப் பார்த்த கார்த்திக்கிற்கு இதயம் தாறுமாறாகத் துடித்தது.. வெளியில் வந்த சரவணன், நேராக அங்கிருந்த காவலரை விசாரிக்க, “அந்த வாட்ச்மேன் காலையிலேயே கிளம்பிப் போயிட்டாரே.. லேடீஸ் யாருமே உள்ள இல்ல தம்பி.. நைட் ஷிப்ட் பசங்க தான் கொஞ்ச பேரு வேலை செஞ்சிட்டு இருக்காங்க..” என்று சொல்லவும், அதைக் கேட்ட கார்த்திக் குழப்பமாக சரவணனைப் பார்க்க,
“இல்ல.. அவருக்கு ஆதிராவை நல்லாத் தெரியும்.. அவரோட பொண்ணுக்கு அவ தான் டான்ஸ் க்ளாஸ் எடுக்கறா..” என்று சொன்ன சரவணன்,
“ஏண்டா இப்படிப் பண்ணின? அவ போன் பண்ணின பொழுது நீ போனை எடுத்து இருக்கலாம்ல.. இப்போ இப்படி தேடிட்டு நிக்க வேண்டாம்ல..” என்று கேட்க, கார்த்திக்கின் கண்களில் கண்ணீர் வழிய, கைகள் நடுங்கிக் கொண்டிருந்தது.
விவரம் தெரிந்த நாளில் இருந்தே அவனது கண்களில் கண்ணீரைப் பார்த்திறாத சரவணனும் அவனிடம் தனது கோபத்தைக் காட்ட முடியாமல் அமைதியாகக் கேட்டான்..
“இப்போ என்ன செய்யலாம்..” தலையைப் பிடித்துக் கொண்டு சரவணன் கேட்க, கார்த்திக் அங்கேயே தொப்பென்று அமர்ந்தான்.. அவனுக்கும் அடுத்து என்ன செய்வது ஏது செய்வது என்று ஒன்றும் புரியாமல் இருக்க, சரவணன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தான்..
“நான் வேணும்ன்னு போனை எடுக்காம இல்லடா.. கூட இருந்தவனுங்க அப்பறம் கேலி பண்ணுவானுங்க.. அது தான் போனை எடுக்கல.. எல்லாரும் வேற அந்த நேரம் போதைல இருந்தானுங்க.. என்னோட ஆதிராவை எவனும் வேற பார்வை பார்க்கறதை கூட நான் அனுமதிக்க மாட்டேன்.. அவ சும்மா பஸ்ல போகும்போது பேச கூப்பிடறான்னு நான் நினைச்சேன்.. அவ இப்படி காணாம போவான்னு நான் என்னோட கனவுல கூட நினைச்சுப் பார்க்கலைடா..” கண்ணீருடன் கார்த்திக் சொல்ல, சரவணன் அவனது தோளைத் தட்டிக் கொடுத்தான்..
“அடுத்து என்ன செய்யலாம்? இப்போ இதை எப்படி நான் மாமாகிட்ட சொல்லுவேன்? அவரு இதை எப்படி தாங்குவார்?” கார்த்திக் புலம்பத் துவங்க,
“நேரா இங்க பக்கத்துல இருக்கற போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் தரலாம்.” சரவணனின் யோசனையில் பட்டென்று நிமிர்ந்தவன்,
“அதியமான் சாரோட தம்பி டி.எஸ்.பி.யா இருக்கார்.. இங்க பக்கத்துல தான்னு நினைக்கிறேன்.. எதுக்கும் ஸ்டேஷன் போறதுக்கு முன்னால, நான் அவர்கிட்ட பேசிட்டு என்ன செய்யலாம்ன்னு கேட்கறேன்..” என்ற கார்த்திக் உடனடியாக அதியமானுக்கு அழைத்தான்.
அதியமான் போனை எடுத்ததும், பதட்டமாக அவனுக்கு விஷயத்தைச் சொல்ல, “என்ன கார்த்திக்? என்ன சொல்ற? அப்படி அவளுக்கு யாரு எதிரிங்க இருக்காங்க?” அதியமானுக்கும் பதட்டம் தொற்றிக் கொள்ள,
“தெரியல சார்.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு. அவங்க அப்பாவுக்கு நான் என்ன பதில் சொல்வேன்? பாவம் வயசானவர். அவ மேல உயிரையே வச்சிருக்கார். இப்போ நான் என்ன செய்யறது? எனக்கு ஒண்ணுமே புரியல.. மதிநிலவன் சார் கிட்ட சொல்லி ஏதாவது பார்க்க முடியுமா? என்ன செய்யறதுன்னு கேட்கலாம்ன்னு தான் கூப்பிட்டேன்..” அவன் ஒரு வழக்கறிஞர் என்பதை எல்லாம் மறந்து அவன் கேட்க, அவனது மனநிலை புரிந்த அதியமான்,
“மதி பி.எம். வரதுனால ரொம்ப பிசியா இருக்கான்.. என்ன செய்யறான்னு கேட்கறேன்.. நீ பக்கத்துல இருக்கற போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடு.. அது சித்தார்த் டிவிஷன்ல தான் வரும்.. நான் அவனையும் வரச் சொல்றேன்.. பார்ப்போம்.. சீக்கிரம் அவளைக் கண்டு பிடிச்சிடலாம்..” அதியமான் சொல்லவும், அதைக் கேட்டுக் கொண்ட கார்த்திக்,
“அவரு எப்படி இதைத் தாங்குவாரு? அவரோட உலகமே அவ தானே.. நான் கொஞ்சம் பொறுப்பா இருந்திருக்கணும்..” என்று புலம்பியவன், போனை அனைக்காமலே,
“இங்க பக்கத்துல இருக்கற ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் தரச் சொல்றார்.. நாம போகலாம் வா..” என்று அவன் எழுந்துக் கொள்ள,
“இப்போ இருக்கற இந்த அக்கறை நேத்து இருந்திருக்கணும்.. அவ அவ்வளவு தடவ போன் செய்யும் போது சும்மா இருந்துட்டு.. இப்போ என்ன வந்திருக்கு?” சரவணன் திட்டிக் கொண்டே அவனுடன் அருகில் இருந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றான்.
இருவரும் அருகில் இருந்த காவல் நிலையத்திற்குச் செல்ல, அங்கு சித்தார்த், அதியமான் சொன்னதன் பெயரில், எங்கும் செல்லாமல் அவனது வரவுக்காக காத்திருந்தான்..
கார்த்திக் உள்ளே நுழையவும், அவனது முகத்தையே கூர்ந்துப் பார்த்துக் கொண்டிருந்த சித்தார்த், “நீங்க கார்த்திக்கா?” என்று கேட்க,
“ஆமா.. என்னோட ஃபியான்சியை தான் காணும்.. நேத்து நைட் ஆபீஸ்ல இருந்து வீட்டுக்கு போகல..” பதட்டமாக கார்த்திக் சொல்லவும், அவனது முகத்தை கூர்ந்துப் பார்த்த சித்தார்த்,
“நீங்க அவங்களை கடைசியா எப்போ பார்த்தீங்க?” என்று கேட்கவும்,
“நான்.. நான்.. போன வாரம் பார்த்தேன்..” கார்த்திக் குழப்பமாக பதில் கூறினான்..
“சரி.. கம்ப்ளைன்ட் எழுதி கொடுங்க.. உங்களுக்கு யாரு மேலயாவது சந்தேகம் இருக்கா?” என்று கேட்ட சித்தார்த்தின் பார்வை கார்த்திக்கின் முகத்தில் தான் நிலைத்து இருந்தது..
“இல்ல.. அவங்க யாருக்குமே தீங்கு நினைக்க மாட்டாங்க.. ரொம்ப சாஃப்ட்.. அவங்களுக்கு அப்படி யாரும் எதிரி எல்லாம் இருக்க மாட்டாங்க.. உங்க வைஃப் டீம்ல தான் வொர்க் பண்றாங்க அவங்க.. ரொம்ப நல்ல பொண்ணு.. அவங்ளுக்கு யாரு தீங்கு செய்ய நினைக்கிறாங்கன்னு தெரியலையே..” கார்த்திக்கின் பதிலில்,
“நீங்க நேத்து அவங்க காணாம போன பொழுது எங்க இருந்தீங்க?” சித்தார்த்தின் குரல் மீண்டும் கேட்கவும்,
கம்ப்ளைன்ட் எழுதிக் கொண்டிருந்த கார்த்திக் நிமிர்ந்து, “நான்.. நான்.. நேத்து ஃப்ரெண்ட்ஸ் கூட..” அவன் சொல்லி முடிப்பதற்குள்,
“பப்ல இருந்தீங்களா?” சித்தார்த் நக்கலாகக் கேட்க, கார்த்திக் தலையை ஆமோதிப்பாக அசைத்தான்.
“ஹ்ம்ம்.. அவங்ககிட்ட கடைசியா போன்ல எப்போ பேசினீங்க?” சித்தார்த் உடனேயே தனது முதல் கட்ட விசாரணையைத் துவங்கினான்..
“நான் ரெண்டு நாளா ஒரு கேஸ்ல பிசியா இருந்ததுனால என்னால அவ கூட ரெண்டு நாளா பேச முடியால.. காலையில மெசேஜ் தான் அனுப்பினேன்..” கார்த்திக் பதில் சொல்லவும், பதட்டத்துடன் சரவணன் கார்த்திக்கைப் பார்க்க, அவனது பதட்டம் புரிந்தது போல, அவனது கையைத் தட்டிக் கொடுத்து,
“நேத்து அவ எனக்கு போன் செய்யும்போது நான் பப்ல ஃப்ரெண்ட்ஸ் கூட இருந்ததுனால எடுக்கல.. ஆனா.. அவ தனியா பஸ்ஸ்டாப்ல இருந்து இருக்கா.. அதுவும் ஆபிஸ் கிட்ட இருக்கற பஸ்ஸ்டாப் தான்.. அது அவளோட வாய்ஸ் மெசேஜ்ல தெரிஞ்சது.. ரொம்ப பயந்து இருக்கா போல.. கேப் எதுவுமே கிடைக்கல போல.. அவங்க அப்பாகிட்ட பேசும்போது யாரோ தெரிஞ்சவங்க வந்துட்டாங்க.. நான் அவங்க கூட கிளம்பறேன்னு சொன்னாளாம்.. ஆனா.. அவ வீட்டுக்கு போகல..” என்று விளக்கம் சொல்லவும், சித்தார்த் கையை நீட்டினான்..
கார்த்திக் குழப்பமாகப் பார்க்கவும், “உங்க போனைக் கொடுங்க..” சித்தார்த்தின் குரலில் கடுப்பு ஏற, கண்களை மூடித் திறந்த கார்த்திக், அமைதியாக தனது செல்லைத் திறந்து சித்தார்த்திடம் நீட்டினான்..
“சார்.. எங்க அண்ணன் ஒரு லாயர்.. நீங்க செய்யறதை, கேட்கறதை எல்லாம் பார்த்தா அவன் மேல சந்தேகப்படறது போல இருக்கு.. அவனுக்கு ஆதின்னா உயிர் சார்.. கம்ப்ளைன்ட் கொடுக்க வந்தா, அவனையே குற்றவாளி ஆக்கிட்டு இருக்கீங்க?” சரவணன் பதட்டத்துடன் கேட்க,
அந்த மெசேஜ்களை ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டு வந்த சித்தார்த், “எனக்கு இந்த மெசேஜ்ஜ எல்லாம் பார்த்தா அப்படித் தோணலையே.. நான் ஒரு நாலு நாள் மெசேஜ் தான் பார்த்தேன்.. அந்தப் பொண்ணு தான் உருகி உருகி காதல் சொல்லி இருக்காங்க.. எமோஜியா அனுப்பி இருக்காங்க.. உங்க அண்ணன் பதிலுக்கு ஒருமுறை கூட அனுப்பலையே.. நேத்தும் அந்தப் பொண்ணு பயந்து போய் அவ்வளவு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருக்காங்க.. அத்தனை தடவ கால் பண்ணி இருக்காங்க.. இவரு ஒரு பதில் கூட திருப்பி அனுப்பலையே.. இவரை நான் எப்படி நம்பறது? இவருக்கும் அந்தப் பொண்ணு மேல அவ்வளவு காதல் இருந்தா.. அவரு ஓடிப் போயிருக்க வேண்டாமா? பப்ல தஞ்சம் புகுந்து இருக்கலாமா?” சித்தார்த் கேட்ட கேள்விக்கு, கார்த்திக் ஒரு சோர்ந்த புன்னகையைச் சிந்தி,
“நான் அவளை எவ்வளவு விரும்பறேன்னு அவளுக்குத் தெரியும்.. அதை எல்லாம் நான் இப்படி மெசேஜ் அனுப்பித் தான் காட்டனும்ன்னு இல்ல.. அவளோட மனச அவளுக்கு இப்படிச் சொல்லப் பிடிச்சு இருக்கு.. நான் எப்படி சொல்லுவேன்னு அவளுக்குத் தானே தெரியும்.. என்னோட காதல் அவளுக்குப் புரியும்.. அவளுக்குப் புரிஞ்சா போதும்ன்னு நினைக்கிறேன்.. நீங்க என்னைப் பத்தி என்ன விசாரிக்கணுமோ விசாரிங்க..” என்ற கார்த்திக், சித்தார்த்தை நேரிடையாகப் பார்க்க,
“ஓ.. லாயர்ல.. அந்த இது.. ஆமா.. உங்களுக்கும் ஆதிராவுக்கும் ஏதாவது பிரச்சனையா? நீங்க பப்ல தான் இருந்தீங்கன்னு எனக்கு உறுதி ஆகற வரை நீங்க இங்கயே இருங்க.. அர்ரெஸ்ட்ன்னு இல்ல.. ஆனா.. விசாரிக்கணும்.. இந்த கேஸ்ல முதல் சஸ்பெக்ட் நீங்க தான்.. அதோ அங்க போய் உட்காருங்க..” என்ற சித்தார்த் கோபமாக எழுந்து செல்லவும், அமைதியாக பெஞ்சில் சென்று அமர்ந்த கார்த்திக்கைப் பார்த்த சரவணனுக்கு பயம் பிடித்துக் கொண்டது.
“என்னடா.. நீயும் எதுவுமே பேசாம இங்க வந்து உட்கார்ந்து இருக்க? இப்போ நான் என்ன செய்யறது? அவளைக் காணும்ன்னு தேடவா? இல்ல உன்னை போலீஸ்ல உட்காத்தி வச்சு இருக்காங்கன்னு கவலைப்படவா?” கவலையுடன் கேட்கவும்,
“எனக்கு எல்லாம் ஒண்ணும் இல்ல.. நீ கவலைப்படாதே.. ஆதிரா கண்டிப்பா கிடைப்பா.. இப்போ நீ எனக்கு ஒண்ணு செய்.. நீ உடனே கிளம்பி போய் ஆதிரா அப்பா அம்மாவை கூட்டிட்டு வந்து, என்னோட புது ப்ளாட்ல தங்க வச்சிரு.. அவங்க அங்க எதுவும் தெரியாம தனியா இருந்து தவிக்க வேண்டாம்.. இங்க இருந்தா என்ன நடக்குது ஏது நடக்குதுன்னு தெரியும்.. அதோட அவ கிடைச்ச உடனே அவங்க பார்க்க வசதியா இருக்கும்.. பாவம் அங்க இருந்தா எதுவுமே தெரியாம தனியா தவிப்பாங்க.. அவங்க உடம்புக்கு ஏதாவதுன்னா கஷ்டம்..” என்றவன், சரவணன் குழப்பமாக பார்த்துக் கொண்டிருக்கும் போதே,
“இது எப்பவுமே நார்மலா நடக்கற விசாரணை தான்.. முதல்ல காணாம போனவங்களுக்கு நெருங்கினவங்களை தான் விசாரிப்பாங்க.. சித்தார்த்தும் நல்ல நியாயமான ஆபிசர் தான்.. கண்டிப்பா அவர் ஆதிராவைக் கண்டுப்பிடிச்சு தந்துடுவார்.. கவலைப்படாதே.. அவளுக்கு ஒண்ணும் ஆகாது..” என்று நம்பிக்கை தந்தவன், தனது கார்டை எடுத்து சரவணனிடம் தந்து,
“உடனே கிளம்பு.. இது அவங்க அட்ரஸ்.. அவங்க ஜாக்கிரதை.. டென்ஷன் ஆகப் போறாங்க.. பாவம்.. அப்பறம் அந்த ஃப்ளாட் சாவி என்னோட செல்ஃப்ல இருக்கற லாக்கர்ல இருக்கு.. அதை எடுத்துக்கோ..” என்றவன், தயங்கி நின்ற சரவணனை அவசரப்படுத்தி அனுப்பிவிட்டு, சித்தார்த்தின் வரவுக்காக காத்திருக்க, பதட்டத்துடன் அதியமான் வந்து சேர்ந்தான்..