எங்கே எனது கவிதை -6

EEK 2-cb9a68cc

எங்கே எனது கவிதை -6

6           

சித்தார்த் விடாப்பிடியாக நிற்கவும், மதி அவனது முகத்தை ஆராய, அதியமானோ கடுப்புடன் முறைத்துக் கொண்டிருந்தான்.. கார்த்திக்கிற்கோ ஒரு பக்கம் நேரமாவதில் பதட்டமும், ஆதிராவிற்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்ற வேண்டுதலும் தொடர்ந்துக் கொண்டிருந்தது.. மறுபக்கம் தன்னையே நொந்துக் கொண்டு எங்கேயாவது முட்டிக் கொள்ளலாம் போலவும் இருக்க, தலையை பிடித்துக் கொண்டு, சித்தார்த்திற்கு வழி சொல்லிக் கொண்டு வந்தான்..      

வழி சொல்லி விட்டு, “அந்த ஃப்ளாட்டோட சாவி எங்க வீட்ல இருக்கு சார்.. அத போய் எடுத்துக்கிட்டு, திரும்ப ஃப்ளாட்டுக்குப் போய் தேடிட்டு ஆதிராவோட ஆபீஸ்க்கு போக டைம் ஆகிடும்.. நிஜமா சொல்றேன்.. டைம் தான் வேஸ்ட் ஆகும் சார்.. நிஜமா ஆதிரா அங்க இல்ல சார். நீங்க ப்ளீஸ் சிசிடிவி ஃபூட்டேஜ் வாங்கப் பாருங்க சார்.. நேரமாக ஆக எனக்கு ரொம்ப பயமா இருக்கு.. நீங்க என் மேல சந்தேகப்படறேன்னு டைம் வேஸ்ட் தான் பண்ணிட்டு இருக்கீங்க.. ப்ளீஸ்.. கொஞ்சம் நான் சொல்றதைக் காது கொடுத்து கேளுங்க.. அவளை நான் எதுவுமே செய்யல.. அவளுக்கு எப்படி நான் கெடுதல் செய்வேன்?” கார்த்திக் மன்றாடுதடலுடன் கேட்க, சித்தார்த் மறுப்பாக தலையசைத்தான்.

“நீங்க அதைப் பத்தி எல்லாம் கவலைப்படாதீங்க.. அதெல்லாம் எப்பவோ வாங்க ஆளு அனுப்பியாச்சு.. இப்போ உங்க வீட்டை ஒருமுறை செக் பண்ணிட்டா நானும் முழு மூச்சுல அவங்களை தேட ஸ்டார்ட் பண்ணிடுவேன்.. என்னவோ எனக்கு உங்க மொபைல பார்த்ததுல இருந்தே இடிக்குது..

கொஞ்சம் கூட நீங்க அவங்களுக்கு அனுப்பின மெசேஜ்ல காதல் இருந்தது போலவே எனக்குத் தெரியல.. அதை விட, உங்க ரெண்டு பேரோட ரிலேஷன்ஷிப் பத்தி ஏதாவது தெரியுமான்னு ஆதிராவோட டீம் லீடர் கிட்ட கேட்டேன்.. அவங்க உங்களைப் பத்தி சொன்னது எனக்கு கொஞ்சம் இடிக்குது..” சித்தார்த் விடாமல் சொல்ல, கார்த்திக் பதில் பேசாமல் தலையைப் பிடித்துக் கொண்டான்..

“அப்படி தெய்வா என்ன சொன்னா?” மதி இப்பொழுது வாய் திறந்தான்.. அதியமானோ இருவரையும் முறைத்தான்..

“ஹான்.. என்ன சொன்னாளா? இந்த வக்கீல் சார் இருக்கார் இல்ல வக்கீல்.. திடீர்ன்னு ஆபீஸ்க்கு வருவாராம்.. ஆதிராவைப் பார்த்தே ஆகணும்னு அடம் பிடிப்பாராம்.. அவங்க வேலை இருக்கு.. மீட்டிங் இருக்குன்னு சொன்னா கூட கேட்காம அடம் பண்ணி அவங்களை வர வச்சு பேசிட்டு தான் போவாராம்..” சித்தார்த் கடுப்புடன் கேலியாகச் சொல்ல,

“ம்ப்ச்..” கார்த்திக் பார்வையை ஜன்னல் பக்கம் திருப்ப, மதி கார்த்திக்கையும் சித்தார்த்தையும் பார்த்தான்..

“கொஞ்சம் கூட அவங்களோட நிலைமையைப் புரிஞ்சிக்கவே மாட்டீங்க போலவே.. உங்க வேலை நடந்தே ஆகணும்ன்னு நினைப்பீங்க போல.. நேத்தும் அப்படித் தான் அவங்க பயந்து அவ்வளவு மெசேஜ் அனுப்பியும் அவங்களுக்கு ஒரு பதிலும் சொல்லல. போனை எடுக்கல.. எப்படி சார் நான் உங்களை நம்பறது? இதுல உங்க காதலை நான் எங்கயும் பார்க்கலையே..” நிறுத்தி நிதானமாகக் கேட்க, கார்த்திக் சித்தார்த்தைப் பார்த்துவிட்டு, அவனது ஃப்ளாட் இருக்கும் இடத்தைச் சொல்லிவிட்டு, கண்களை மூடிக் கொண்டான்..      

“டேய் நீ ரொம்ப ஓவரா பண்ணிக்கிட்டு இருக்க.. நான் தான் சொல்றேன் இல்ல.. உங்களை மாதிரி எல்லாம் உருகி உருகி எல்லாரும் மெசேஜ் போடுவாங்களா? என்னோட மொபைலை வாங்கிப் பாரு.. உங்க அண்ணிக்கு நான் அனுப்பற பதிலோட லட்சணத்தை..” கோபமாக அவன் சொல்ல,

“அது தான் சித்து அப்போ அப்போ கழுவி ஊத்தும் போது தெரியுமே.. அதை நீ தனியா வேற சொல்லணுமோ?” கிடைக்கும் இடைவெளியில் மதிநிலவன் அதியமானை வம்பிற்கு இழுக்க,

“உங்கள மாதிரி கனவுலையே எங்களால குடும்பம் நடத்த முடியாது.. நாங்க எல்லாம் நிஜத்துல வாழறவங்க..” மதிக்கு கொட்டு வைத்தவன்,

“இப்போ இது நேரம் கடத்தற வேலை சித்தார்த்.. நீ தேவை இல்லாத வேலை செஞ்சிக்கிட்டு இருக்க..” அதியமான் கடுப்பாகக் கூறினான்.

“சார்.. எதுக்கும் அவரு ஒருதடவ பார்த்துட்டார்ன்னா முழு மனசோட ஆதிராவைத் தேட முடியும் இல்ல.. எனக்கு நேரமாக ஆக பயமா இருக்கு.. அவளுக்கு எந்த ஆபத்தும் வரக் கூடாதுன்னு இருக்கு.” கண்களைத் திறக்காமலேயே கார்த்திக் அதியமானை சமாதானப்படுத்தினான்..

அவனது மனதில் சித்தார்த் கூறிய அந்த நாட்களின் காட்சிகள் விரிந்தது.. அன்றைய தினம் அவனது மனதின் அலைபுறுதல் தாங்காமல் ஆதிராவைக் காணச் சென்றான்.. சித்தார்த்திடம் தெய்வா கூறியது போல, ஆதிராவைக் காண அடம் பிடித்தான்.. அன்று மதியம் கோர்ட்டில் நடந்த வழக்கின் தாக்கம் அவ்வாறு இருந்தது..

ஆதிராவை சந்திப்பதற்கு முன்பு, ஏதாவது வழக்கு அவனது மனதைத் தாக்கினால் மதுவின் உதவியை நாடுவான். முடிந்தவரை அவன் கையாளும் வழக்கை மனதிற்கு கொண்டு செல்லாமல் பார்த்துக் கொண்டாலும், சில சமயங்களில் தன்னையும் மீறி மூளையில் பதியும் பொழுது, மனதின் அலைபுறுதல் அதிகரிக்கும்.. மதுவை நாடி அன்றைய பொழுதை உறங்கிக் கழிப்பான்.. ஆதிராவை சந்தித்த பிறகோ அவளை நாடத் துவங்கி இருந்தான்..

அப்படி ஒரு வழக்கின் வாதங்களை அன்று அவன் கையாள வேண்டி இருந்தது.. சாட்சிகள் ஒவ்வொன்றையும் அவன் விசாரித்துக் கொண்டிருக்க, அந்தப் சிறு பெண் அனுபவித்த கொடுமைகளை சாட்சி சொல்லும் பெண்மணி சொல்லச் சொல்ல, அந்த நேரம் வழக்கை நடத்தி முடிக்கும் எண்ணம் மட்டுமே இருந்தாலும், வழக்கின் நேரம் முடிந்ததும், அவனது கண்ணிற்கு முன் அந்த பெண்மணி கூறிய நிகழ்வுகள் வளம் வரத் துவங்கியது.

அவனது மனத்திரையில் அந்த சிறிய பெண் அனுபவித்த சித்திரவதையின் காட்சிகள் படமாக விரிய, அவனுக்கு ஏனோ முதன்முறையாக ஆதிராவின் ஸ்பரிசம் தேவைப்பட்டது.. அவர்கள் இருவரும் காதலைப் பகிர்ந்த பிறகு அவனது மனதின் முதல் அலைபுறுதலில், அவன் ஆதிராவைத் தேடிச் சென்றான்.

அவளது அலுவலக வாயிலின் அருகே சென்று தனது காரை நிறுத்தியவன், அவளுக்கு செல்லில் அழைத்தான். அந்த நேரத்தில் அவனது அழைப்பை எதிர்ப் பார்க்காதவள், பதறி, “கார்த்திக்.. என்ன இந்த நேரத்துல கால் பண்ணி இருக்கீங்க? என்ன ஆச்சு?” என்று கேட்க,

“பேபி டால்.. எனக்கு உன்னை இப்போவே பார்க்கணும்.. இப்போ உடனே..” கார்த்திக்கின் குரல் கெஞ்சிக் குழைந்தது..

“கார்த்திக் என்ன ஆச்சு? ஏன் இப்படி திடீர்ன்னு கேட்கறீங்க? உங்களுக்கு உடம்புக்கு ஒண்ணும் இல்லையே.. இல்ல ஏதாவது உடம்பு முடியலையா?” திடீரென்று அவன் இவ்வாறு கேட்கவும், பதட்டமாக அவள் கேட்க,

“இல்ல.. அதெல்லாம் ஒண்ணும் இல்ல.. உடம்பு எல்லாம் நல்லா தான் இருக்கு.. என் மனசு தான் சரி இல்ல.. எனக்கு உன்னைப் பார்க்கணும்.. இப்போ நீ வரியா? இல்ல நான் பப்க்கு போகவா? போனா இப்போ இருக்கற மனநிலைமைக்கு மூக்கு முட்ட தான் குடிச்சிட்டு வருவேன்.. அப்படியே எங்கயாவது விழுந்து கூட வைக்கலாம்..” கார்த்திக் சொல்லச் சொல்ல, ஆதிராவிற்கு பதட்டம் தொற்றிக் கொண்டது.

“இல்ல.. இல்ல.. அப்படி எல்லாம் செய்யாதீங்க.. இருங்க நான் தெய்வா கிட்ட கேட்டுட்டு வரேன்..” என்றவள்,

“எனக்கு இன்னும் கொஞ்ச நேரத்துல மீட்டிங் இருக்கு.. எனக்கு மீட்டிங்க்கு வந்தே ஆகணும்.. அதுக்குள்ள என்னை ஆபீஸ்ல விட்டுடறீங்களா? சரியா?” உறுதிக் கேட்டவள், தெய்வாவிடம் சொல்லிவிட்டு, அவசரமாக கீழே வந்தாள். அங்கு கார்த்திக் நிற்கவும், அவனை நோக்கி அவசரமாக ஓடினாள்..

அவனை நெருங்கம் சிறிது நேரத்துக்குள், அவளது கண்கள் அவனது தலை முதல் கால் வரை அளவிட்டது.. சோர்வுடன் நின்ற அவனது கோலம் மனதினில் தைக்க, அவனது நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள்.

அவளது கையைப் பிடித்தவன், அவளை காரினில் ஏற்றிவிட்டு, எதுவும் சொல்லாமல், சிறிது தூரம் காரை நகர்த்திச் சென்றான்..

அதற்குள்ளாகவே, “என்ன கார்த்திக்? ஏதாவது சொல்லுங்க.. என்ன ஆச்சு? ஏன் இப்படி இருக்கீங்க? ஏதாவது பேசுங்க..” என்று பலமுறை அவள் கேட்க, அமைதியாக ஒரு மரநிழலில் காரை நிறுத்தியவன், “பின்னால வா..” என்று அவளை இழுக்க, எதுவும் பேசாமல், ஒன்றுமே புரியாமல், அவன் சொன்னபடியே பின்பக்கம் சென்று அமர்ந்தாள்.

அவள் அமர்ந்தவுடன் அவளது மடியில் அவன் தலை சாய்க்க, அவனது செயலில் திகைத்தவள், “என்னாச்சு கார்த்திக்? நானும் அப்போ இருந்து கேட்டுட்டு இருக்கேன்.. பதில் சொல்லவே மாட்டேங்கறீங்க.. ஏதாவது சொல்லுங்களேன்.. எனக்கு நீங்க இப்படி இருக்கறது பயமா இருக்கு..” என்று கேட்கவும்,

“அது.. இன்னைக்கு கேஸ்ல அந்த சின்னப் பொண்ணு..” என்று அவசரமாக சொல்லத் துவங்கியவன், தன்னை விட, நடந்ததைச் சொன்னால் அவள் பாதிக்கப்படுவாள் என்று தன்னை அடக்கிக் கொண்டு,

“ஒரு கேஸ்டா பேபி டால்.. ரொம்ப மனசு வலிக்குது.. அது உனக்கு வேண்டாம்.. ரொம்ப கஷ்டமா இருக்கும்.. நீ எத்தனை நாளைக்கு தூங்காம இருப்பன்னு எனக்குத் தெரியும்..” என்று அவன் சொல்லி நிறுத்த, அவனது தலையை இதமாக கோதிக் கொடுத்துக் கொண்டே,

மாசில் அயோத்தியில் மன்னன் தசரதன்

மாதவத்தால் வந்தவனே தாலேலோ

கோசிகனை தொடர்ந்து கொடியவனை அழித்து,

யாகம்தனை காத்த தீரனே தாலோ..    

மெல்லிய குரலில் பாடத் தொடங்க, அவளது குரலில், அவளது வருடலில், கார்த்திக் கண்களை மூடிக் கொள்ள, மனம் மெல்ல சமன்படத் துவங்கியது..

அவள் பாடப்பாட எழுந்து அமர்ந்தவன், அவளது காலை எடுத்து தனது மடியில் வைத்துக் கொள்ள விழைய,

“என்ன பண்றீங்க கார்த்திக்?” ஆதிரா பதறி, தனது காலை உருவிக் கொள்ள முற்பட, தலையை மறுப்பாக அசைத்தவன், அவளது காலைத் தனது மடியில் வைத்துக் கொண்டு, அவளது பாதத்தை வருடிக் கொண்டே மெல்ல அமுக்கி விடத் துவங்கினான்..

அவள் பாடி முடித்து அவனைப் பார்க்க, அவளைப் பார்த்து புன்னகைத்தவன், மெல்ல அவளை நெருங்கி, அவளது இதழ்களில் இதழ் பதித்து, தனது தோளில் சாய்த்துக் கொள்ள, தனது முகத்தை அவனது தோளில் புதைக்க, அவளது தலையை வருடிக் கொண்டே, அவளது சபரிசத்தை அனுபவித்தபடி அமைதியாக அமர்ந்திருந்தான்.

சில நிமிடங்கள் அமைதியாக அமர்ந்தவன், “எனக்கு மீட்டிங்க்கு டைம் ஆச்சு.. தெய்வாகிட்ட கண்டிப்பா மீட்டிங்க்கு வந்துடறேன்னு சொல்லி இருக்கேன்.. ஒரு முக்கியமான டிஸ்கசன்.. நான் போகவா?” மெல்ல அவனது முகத்தை நிமிர்ந்துப் பார்த்தப்படி தயக்கத்துடன் அவள் சொல்ல, அவளது நெற்றியில் முத்தமிட்டவன்,

“மீட்டிங்க்கு லேட் ஆகாம நான் உன்னைக் கொண்டு விடறேன்.. கவலைப்படாதே..” என்றபடி அவளது கன்னத்தைத் தட்டியவன்,

“தேங்க்ஸ் பேபி டால்.. எனக்கு இப்போ ஓகே ஆச்சு..” என்றபடி, கதவைத் திறந்து ஓட்டுனர் இருக்கையில் அமர, அவனைப் பார்த்துக் கொண்டே முன்பக்கம் வந்து அமர்ந்தவள்,

“எதுனால உங்களுக்கு மனசு கஷ்டம் ஆச்சுன்னு சொல்லவே இல்லையே..” என்று கேட்க,

“அது உனக்கு வேண்டாம்.. அது சொன்னா நீ தூங்கவே மாட்ட. எனக்கே மனசு ரொம்பத் தாங்கல.. இத்தனைக்கும் நான் ஒரு மாதிரி அந்த கதையை முன்னையேக் கேட்டு இருக்கேன்.. இன்னைக்கு முழுசா கேட்கும்பொழுது எனக்கு அந்த தாக்கம் தாங்க முடியல..” என்றவனை அவள் முறைக்க,

“முறைச்சாலும் நீ அழகா இருக்கடி..” என்று கொஞ்சிக் கொண்டே அவளை அலுவலகத்தில் கொண்டு விட, அவனைப் பார்த்து தலையசைத்து இறங்கப் போனவளை இழுத்து அணைத்தவனை முகம் சிவக்கப் பார்த்தவள்,

“அன்னைக்கு முதல்முதலா ஊருக்கு வந்து நின்ன அதே அடம்..” என்று செல்லமாக அவனது புஜத்தில் தட்டியவள், வேகமாக இறங்கி அலுவலகக் கட்டிடத்தினுள் நுழைய, மனம் லேசான உணர்வுடன் கார்த்திக் தனது அலுவலகத்திற்கு கிளம்பிச் சென்றான்..     

அந்த நாள் நினைவுகளில் அவனது இதழ்கள் புன்னகைக்க, அதைப் பார்த்த மதி, சித்தார்த்தைப் பார்க்க, சித்தார்த், உதட்டைப் பிதுக்கினான்..

நேராக கார்த்திக்கின் வீட்டிற்குச் சென்று நின்ற சித்தார்த், “கார்த்திக்.. கனவு கண்டது போதும்.. நீங்க கொஞ்சம் நடப்புக்கு வந்து சாவியை சீக்கிரம் எடுத்துட்டு வந்தீங்கன்னா.. நாம அடுத்த கட்ட நடவடிக்கையைப் பார்க்கலாம்..” சித்தார்த் நக்கலாகச் சொல்ல, கண்களைத் துடைத்துக் கொண்ட கார்த்திக், வேகமாக காரில் இருந்து இறங்கினான்..

“வாங்க..” என்று அழைத்தபடி அந்த வீட்டினுள் அவன் நுழைய, ஹால் சோபாவில் அமர்ந்து டிவியைப் பார்த்துக் கொண்டிருந்த அவனது தாய், அவன் உள்ளே நுழைவதை திரும்பிப் பார்க்காமல் உணர்ந்து,

“காலங்கார்த்தால அண்ணனும் தம்பியும் சொல்லாம கொல்லாம எங்க போனீங்க? நான் பாட்டுக்கு உங்க அப்பாவ மெஸ்ல இருந்து உங்களுக்கும் சேர்ந்து இட்லி வாங்கிட்டு வரச் சொல்லிட்டேன்.. அது எல்லாம் வீணா போச்சு.. மதியத்துக்கு ரெண்டு பேரும் அதையே சுடவச்சு சாப்பிடுங்க..” என்றவர், கார்த்திக் அமைதியாக அவனது அறைக்குள் நுழையும் பொழுதே,

“ஆமா.. காசு என்ன உங்க ரெண்டு பேருக்கும் மரத்துலயா முளைக்குது? ரூம்ல அது பாட்டுக்கு ஃபேன் ஓடிக்கிட்டே இருக்கு.. யாரு கரண்ட் பில்லைக் கட்டறது? அதை நிறுத்திட்டு கூட போக முடியாத அளவு உனக்கு அப்படி என்ன வேலை? எல்லாம் சம்பாதிக்கிற திமிரு.” என்று சத்தமிட்டவரிடம்,

“கரண்ட் பில்லு நான் தானே கட்டறேன்.. அதுனால ஓடிட்டு போகுது.. இப்போ நின்னு உங்க கூட சண்டைப் போட எனக்கு நேரமில்ல.. எனக்கு அதை விட முக்கியமான வேலை இருக்கு..” என்ற கார்த்திக் தனது அறைக்குள் நுழைய,

“அப்படி என்ன வேலைன்னு கேட்கறேன்? இப்போவும் என்னவோ நீ பாட்டுக்கு போயிக்கிட்டே இருக்க? நான் பாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்கேன்.. உனக்கு கொஞ்சம் கூட மரியாதையே இல்ல..” என்று அவன் பின்னாலையே நுழைய,  

“ம்ப்ச்.. இப்போ என்ன? ஆதிராவை நேத்து இருந்தேக் காணலம்மா.. எங்கப் போனான்னே தெரியல.. நேத்து ஆபீஸ்ல இருந்து அவ வீட்டுக்கு போகவே இல்ல.. காலைல இருந்து நாங்க தேடிட்டு இருக்கோம்..” பதட்டமாக கார்த்திக் சொல்லவும்,

“என்னது?” என்று அவர் வாய்ப்பிளக்க,

“எனக்கு ரொம்ப பயமா இருக்கு.. அவளுக்கு ஒண்ணுன்னா என்னால எப்படித் தாங்க முடியும்?” கார்த்திக் மனதில் அடைத்துக் கொண்டிருந்ததைப் புலம்பவும்,

“என்னது? அந்த ஆட்டக்காரியைக் காணுமா? அவளை யாரு கடத்தப்போறா? அப்படி எல்லாம் இருக்காது.. உன்னை விட வேற எந்த இளிச்சவாயனாவது கிடைச்சு உன்னை விட்டுட்டு அவ ஓடிப் போயிருப்பா.. நானும் எத்தனை சீரியல்ல பார்த்து இருக்கேன்.. காணும்ன்னு சொல்றது எல்லாம் சும்மா நாடகம்.. பாரு ஒரு நாள் அவ உன் முன்ன வேற ஒருத்தனோட வருவா..” சிறிதும் பதட்டம் இல்லாமல், மனிதாபிமானம் என்பதே துடைத்துப் போட்டது போல,  வாய்க்கு வந்ததை அவர் பேச, கார்த்திக் கோபத்தில் தனது தலையில் அடித்துக் கொண்டான்..

“வாயை மூடுங்க.. கொஞ்சமாவது மனிதாபிமானம் இருக்கா.. என்னோட பொண்டாட்டியைக் காணும்ன்னு சொல்லிட்டு இருக்கேன்.. கொஞ்சம் கூட பதறாம என்னவோ பேசிட்டே போறீங்க.. உங்க கூட நின்னு பேசறதே வேஸ்ட்.. நீங்க எல்லாம் ஒரு பொண்ணுன்னு சொல்லிடாதீங்க.. கொஞ்சம் கூட பொண்ணுக்கு உண்டான இரக்க குணம் உங்ககிட்ட இல்ல.. என்னை ஆளை விடுங்க.. எனக்கு சாப்பாடு வைக்கவே வேண்டாம்.. பசிச்சா திண்ணுக்கறேன் இல்லையா அப்படியே செத்து போறேன்.. அந்த காஞ்சு போன இட்லியை வாசல்ல நாய்க்கு போடுங்க..” என்று சத்தமிட்டவன், வேகமாக தனது அலமாரியைத் திறந்து, அவனது ஃப்ளாட்டின் சாவியில் ஒன்றை எடுத்துக் கொண்டு வர, மீண்டும் சோபாவில் சென்று அமர்ந்தவர்,

“சரி.. போறது தான் போற.. எனக்கு இன்னைக்கு உடம்பு முடியல.. சமைக்கவே முடியல.. அப்படியே அவளைத் தேடி போகும்போது எனக்கு நம்ம வழக்கமா சொல்ற பிரியாணி கடையில பிரியாணி ஆர்டர் பண்ணிட்டுப் போ.. உங்க அப்பாவுக்கு ஒரு மீல்ஸ் ஆர்டர் பண்ணிடு.. பசிக்குது வேற.. ரொம்ப லேட் பண்ணிடாதே.. ஆதிரா ஆதிரான்னு அவ பேரை சொல்லிக்கிட்டு சட்டையை கிழிச்சிட்டு திரியாம.. என்னையும் கொஞ்சம் மனசுல நியாபகம் வச்சிக்கிட்டு.. மறக்காம ஆர்டர் பண்ணிடு.. இல்லன்னா நானும் எங்கயாவது போயிடுவேன்..” என்றவர், மீண்டும் தனது முக்கிய பணியான சீரியல் பார்க்கும் பணியைத் தொடர, தலையில் அடித்துக் கொண்ட கார்த்திக்,

“நீங்க எல்லாம் மனுஷியே இல்ல.. ஆர்டர் எல்லாம் பண்ண முடியாது.. நீங்களே சமைச்சு சாப்பிடுங்க..” என்றபடி வேகமாக வெளியில் வர, சித்தார்த் கையைக் கட்டிக் கொண்டு நிற்க,

அவனைப் பார்த்தவன் பெருமூச்சுடன், “போகலாம் சார்.. சாவியை எடுத்துக்கிட்டு வந்துட்டேன்..” என்றபடி முன்னே நடந்தான். அதியமான் அவனை வருத்தத்துடன் பார்க்க, மதி அவனைக் கேள்வியாகப் பார்க்க, அவர்களைக் கண்டுக் கொள்ளாமல்,

“வாங்க சார் நானே கார ஓட்டறேன்.. சீக்கிரம் போகலாம்..” சித்தார்த்திடம் சொல்ல, சித்தார்த்தோ, எதுவும் பேசாமல் கார் சாவியை அவனது கையில் கொடுத்தான்.. கார்த்திக் காரை எடுக்க,  அனைவரும் அவனது ஃப்ளாட்டிற்குச் சென்றனர்..

அவன் சென்று நின்றதும், ஃப்ளாட்டை அண்ணாந்து பார்த்த சித்தார்த், அதன் பிரமாண்டமான கட்டமைப்பையும், ஆங்காங்கு பச்சைப்பசேல் என்று மரங்களும், புல்வெளிகளும், மன அமைதியைத் தரும் அளவிற்கு அழகாக வைக்கப்பட்டிருந்த பூச்செடிகளையும் பார்த்தவன், கார்த்திக்கை கேள்வியாகப் பார்க்க, “கல்யாணத்துக்கு அப்பறம் நானும் ஆதிராவும் சந்தோஷமாவும், நிம்மதியாவும் வாழறதுக்காக நான் பார்த்துப் பார்த்து அமைச்ச வீடு.. எந்த வித இடைஞ்சலும், மன உளைச்சலும்  இல்லாம நிம்மதியா அவ இருக்கணும்ன்னு தான் இந்த வீடு வாங்கி இருக்கேன்.. எங்க பிள்ளைங்களும் சந்தோஷமா, ஒரு நல்ல அமைதியான மன நிலைமையில வாழறதுக்காக வாங்கின வீடு..” என்று விளக்கம் சொன்னவன், அங்கிருந்த லிஃப்ட்டின் வழியே அவனது வீடு இருக்கும் தளத்திற்கு அவர்களை அழைத்துச் சென்றான்..

அவனிடம் இருந்து சாவியை வாங்கிக் கொண்ட சித்தார்த், அவன் காட்டிய வீட்டின் கதவைத் திறந்து உள்ளே சென்றான்.. உள்ளே சென்ற சித்தார்த் பூதக்கண்ணாடி இல்லாத குறையாக வீட்டை நோட்டமிட்டுக் கொண்டிருக்க, அந்த வீட்டில், அழகாக வாங்கி அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்களைப் பார்த்து தனக்குள் புன்னகைத்துக் கொண்டான்..       

அவன் சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்க, கார்த்திக் அங்கிருந்த சோபாவில் அமர்ந்துக் கொள்ள, அவனது அருகே அமர்ந்த அதியமான், “என்ன கார்த்திக்.. உங்க அம்மாவுக்கு ஆதிராவைப் பிடிக்காதா? இப்படி பேசறாங்க?” கவலையாகக் கேட்க,

“அவங்களுக்கு யாரையுமே பிடிக்காது சார்.. அவங்களுக்கு வர மருமக ஒரு வேலைக்காரியா இருக்கணும்ன்னு எதிர்ப்பார்க்கறாங்க.. அதுக்கு எதுக்கு நாங்க கல்யாணம் பண்ணிக்கணும்? ஒரு வேலைக்காரியைப் பார்த்து வேலைக்கு வச்சிட்டா போச்சு.. ஏற்கனவே வீட்டு வேலை செய்ய ஆள் இருக்காங்க.. கூட சமையலுக்கு ஆளு பார்த்துடலாம்ன்னா கேட்க மாட்டேங்கிறாங்க.. இப்படி ஹோட்டல்ல ஆர்டர் பண்றேன்னு படுத்தறாங்க..” என்று சலித்துக் கொண்டவன், அதியமான் தட்டிக் கொடுக்கவும்,    

“நான் ஆதிராவைப் பார்க்கறேன்னு தெரிஞ்ச பொழுதே சரவணன் என்னை ரொம்ப திட்டினான்.. ‘அவ எல்லாம் நம்ம அம்மாவுக்கு செட் ஆக மாட்டா.. அவளை இந்த குடும்பத்துல இழுத்து விடாதே.. அவ நல்ல சந்தோஷமா வாழ வேண்டிய பொண்ணு’ன்னு சொன்னான்.. என் மனசு தான் கேட்கல.. அவளையே சுத்தி சுத்தி வந்தது.. என் சுய நலம்ன்னு கூட சொல்லலாம்.. என்னோட வாழ்க்கை சந்தோஷமா இருக்கணும்.. அழகா இருக்கணும்.. நிம்மதியா இருக்கணும்ன்னு தான் நான் அவன் சொன்னதைக் கேட்கல..

நான் மட்டும் சந்தோஷமா இருந்தா போதாதுன்னு அவளும் அந்த சந்தோஷத்தை அனுபவிக்கணும்ன்னு தான் இந்த வீட்டை வாங்கினேன்.. என் மனசுல அவ விழுந்த பொழுதே இந்த வீட்டை நான் வாங்கிட்டேன்.. அவ என்னோட வாழற வாழ்க்கை சந்தோஷமா இருக்கணும்ன்னு நானும் ஆசைப்பட்டு அவ என்னை லவ் பண்றதுக்கு முன்னாலேயே புக் பண்ணிட்டேன்.. இது அவளுக்கு கூட தெரியாது.. எங்க கல்யாணம் முடிஞ்ச உடனே நான் அவளுக்கு சப்ரைசா காட்டலாம்ன்னு இருக்கேன்..” என்றவன், அதியமானுடன் உள்ளே சென்றான்..

வீட்டில் அவன் பார்த்து பார்த்து வாங்கி வைத்திருந்த பொருட்களைப் பார்த்த சித்தார்த், எந்த பதிலையும் சொல்லாமல், “சரி.. நாம இப்போ ஆதிராவோட ஆபீஸ்கிட்ட விசாரிக்கலாம்.. நீங்க இங்க இருக்கற உங்க பைக்கை எடுத்துக்கிட்டு போய் அவங்க வீடு கிட்ட விசாரிங்க..” என்று கூறிவிட்டு முன்னே நடக்க, ஹாலில் நின்ற படியே வீட்டை கண்களால் வளம் வந்த அதியமான், கார்த்திக்கைத் தட்டிக் கொடுத்துவிட்டு,

“நீங்க ஆபீஸ் கிட்ட விசாரிங்க.. நானும் கார்த்திக்கும் அவங்க வீட்டு கிட்ட விசாரிக்கறோம்..” என்றபடி, கார்த்திக்குடன் ஆதிராவின் வீட்டை நோக்கிச் சென்றான்..

Leave a Reply

error: Content is protected !!