எங்கே எனது கவிதை – 7

எங்கே எனது கவிதை – 7
7
ஆதிராவின் குடியிருப்பு பகுதியின் உள்ளே நுழைந்த அதியமானின் கண்கள் அங்கிருந்த ஒவ்வொரு வீட்டில் இருந்த கார்களை கவனமாக ஆராய்ந்துக் கொண்டே வந்தது.. ஏதாவது காரைப் பார்க்கும்பொழுது, ஏதாவது ஒரு உள்ளுணர்வு அந்தக் காரைக் காட்டிக் கொடுக்காதா? என்ற எண்ணம் மனதினில் உந்த, அவனது கண்கள் கவனம் பெற்றது..
கார்த்திக்கும் அதே போன்றதொரு எண்ணத்தில் தான் மெதுவாக இருபுறமும் அலசிக் கொண்டே வண்டியை அவளது ப்ளாட்டை நோக்கிச் செலுத்தினான்.. ஆதிராவின் தந்தையின் கூற்றின் படி, யாரோ தெரிந்தவர்கள் என்று சொல்லிவிட்டுத் தான் அவள் வண்டியில் ஏறி இருக்கிறாள்.. அவளுக்கு தெரிந்தவர்களுடன் அவள் வீட்டிற்கு கிளம்பி இருக்கிறாள். அப்படியென்றால் இந்த ஏரியாவைச் சார்ந்தவர்களாகத் தான் இருக்க வேண்டும் என்று உள்மனது ஏதோ சொல்லிக் கொண்டிருந்தது..
‘அதுவும் அவள் ஒருவருடன் காரில் ஏறி வருகிறாள் என்றால் கண்டிப்பாக பார்த்து பேசி, பழகியவர்களாகத் தான் இருக்க வேண்டும்..’ என்று மனதினில் நினைத்துக் கொண்டவனின் கண்கள் ஒவ்வொரு வீட்டையும் கூர்ந்து கவனித்துக் கொண்டே வந்தது..
ஆதிரா முன்பு கூறியது போல அனைத்துமே குடும்பங்கள் இருக்கும் வீடுகள் தான்.. அவர்கள் வீட்டின் வாயிலில் இருக்கும் கார்களும், அவர்கள் உபயோகிக்கும் வகையில் இருக்க, ஆதிராவின் ப்ளாட்டின் முன்பு சென்று பைக்கை நிறுத்தினான்.
அந்த பிளாட்டின் உள்ளே நுழைந்த இருவரது கண்களும் அங்கிருந்த கார்களை நோட்டம் விட்டது.. அந்த இடத்தில் அங்கிருந்த ஒரு காரை அதன் சொந்தக்காரர் துடைத்துக் கொண்டிருக்க, இன்னொரு காரில், சேறும் சகதியுமாக இருக்க, அதன் பின் பக்க கண்ணாடியில், ‘பேபி ஆன் போர்ட்’ என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்க, ‘ம்ப்ச்’ என்ற சலிப்புடன் அங்கிருந்த குடியிருப்பவர்களின் பெயர்களை நோட்டம் விடத் துவங்கினான்..
அதே போலவே அதியமான் ஒவ்வொரு பெயராக படித்துக் கொண்டே வரவும், கவனம் களைந்து அவன் பக்கம் திரும்பிய கார்த்திக், “என்ன சார் பார்க்கறீங்க?” என்று கேட்க,
“ஒண்ணும் இல்ல.. இந்த பெயரை எல்லாம் படிக்கும்போது உள் மனசுல ஏதாவது தோணுதான்னு பார்க்கறேன்.. ஹ்ம்ம்..” என்ற பெருமூச்சுடன்,
“ஆதிரா வீட்டை பார்த்துட்டு வரலாம்..” என்று சொன்ன அதியமானை, கார்த்திக் ஆதிராவின் வீட்டிற்குக் கூட்டிச் சென்றான்..
ஆதிராவைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்காமல், பயம் ஒரு பக்கமும், பதட்டம் ஒரு பக்கமும் சூழ்ந்துக் கொள்ள அந்த வீட்டின் அமைதி வேறு அவளது நெஞ்சை இறுக்கிப் பிடிக்க, வீட்டின் உள்ளே வித்யா அங்கும் இங்கும் நிலைக் கொள்ளாமல் நடந்துக் கொண்டிருக்க, கார்த்திக் வீட்டின் கதவைச் சென்று தட்டினான்..
கதவைத் திறந்த வித்யா, அங்கு கார்த்திக் நிற்பதைப் பார்த்து, “கார்த்திக்.. கார்த்திக்.. ஆதிரா கிடைச்சிட்டாளா? ஏதாவது விஷயம் தெரிஞ்சதா?” என்று கேட்க, கார்த்திக் கண்களில் முட்டிக் கொண்ட கண்ணீரை அடக்கியபடி இல்லை என்று தலையசைத்தான்..
அவனது முகத்தைப் பார்த்த வித்யா, “அப்போ ஆதிரா எங்க போனா? இங்க அவ வீட்டுக்கு வந்தது போலவே தெரியல.. வச்ச சாப்பாடு எல்லாம் அப்படியே இருக்கு.. அவ இப்படி எங்கயும் யார் கூடவும் போக மாட்டாளே.. அவளுக்கு யாரு எதிரி இருக்கா? அவ எங்க போயிருப்பா?” படபடப்பாக கேள்விகளைக் கேட்க,
“தெரியலையே வித்யா.. நான் அவ போன் பண்ணும்போது கொஞ்சம் எடுத்திருக்கணும்.. எப்பவும் போல கூட எல்லாரும் இருந்தாங்கன்னு நான் போனை எடுக்கல.. அவளும் அவ்வளவு தடவ மெசேஜ் பண்ணி இருக்கா.. அதைக் கேட்கக் கேட்க எனக்கு வயிறெல்லாம் கலங்குது.. நான் பேசிட்டு போயிருக்கணும்..” தொண்டையடைக்க கார்த்திக் சொல்லவும்,
“ஹையோ.. ஏன் இப்படி பண்ணினீங்க? அவ மெசேஜ் ஒண்ணு கூடவா கேட்கல? உங்களுக்கு அப்படி என்ன பொசசிவ்? மத்தவங்க இருந்தா அவகிட்ட பேசறதுக்கு என்ன? உங்களை எல்லாம்..” என்று கேட்டு தலையில் அடித்துக் கொண்டவள்,
“போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்துட்டீங்க இல்ல? அவங்க தேட ஆரம்பிச்சிட்டாங்க தானே.. கண்டிப்பா இன்னும் கொஞ்ச நேரத்துல அவளை கண்டுப்பிடிச்சிருவாங்க இல்ல? இப்போ ஆதிரா அம்மா அப்பா வந்து என்ன செய்யப் போறாங்க? எங்க தங்கப் போறாங்க? அவங்க இங்க வந்து இன்னும் டென்ஷன் ஆவாங்க இல்லையா?” அத்தனை நேரம் அடைத்துக் கொண்டிருந்த கேள்விகளையும் குழப்பங்களையும் அவள் கார்த்திக்கிடம் கேட்க,
“என் தப்பு தான்.. அவளை யாரும் கேலிப் பொருளா பார்த்துடக் கூடாது.. என் பேரை சொல்லி அவளை யாரும் நெருங்கக் கூடாதுன்னு தானே நான் யாருக்குமே சொல்லல..” என்று புலம்பியவன்,
“அத்தையும் மாமாவும் இங்க இருக்கறது தான் நல்லது வித்யா.. அவங்க அங்க இருந்து, நாம இங்க இருந்துக்கிட்டு, என்ன ஏதுன்னு போன்ல சொல்றத விட.. அவங்க இங்க இருந்தா நல்லது.. அத விட ரெண்டு பேருமே வயசானவங்க.. அங்க தனியா ஒண்ணுமே புரியாம, டென்ஷன்ல யாருக்காவது உடம்பு முடியாம போச்சுன்னா கஷ்டம்.. அது தான் கூட்டிட்டு வர சொல்லிட்டேன்..” என்றவன்,
“சரி.. நான் கேட்கற கேள்விக்கு பதில் சொல்லுங்க.. ஆதிராவை யாராவது ஃபாலோ பண்றாங்க.. இல்ல தொல்லைப் பண்றாங்கன்னு உங்ககிட்ட சொல்லி இருக்காளா? என்கிட்டே சொன்னா நான் சண்டைக்கு போகப் போறேன்னு கூட அவ என்கிட்டே சொல்லாம மறைச்சு இருக்கலாம்.. அதுனால கேட்கறேன்.. அப்படி யாராவது இருந்தா சொல்லுங்க.. நாம அவங்களைப் பிடிச்சு விசாரிக்கலாம்.. நிஜமா அவ ஏறிப் போன அந்த தெரிஞ்சவங்க யாருன்னு கூட தெரியல.. அப்படி இவ கார்ல ஏறி வர அளவுக்கு தெரிஞ்சவங்க யாரு? உங்களுக்கு ஏதாவது ஐடியா இருக்கா? இந்த தெருவுல யாராவது அவளுக்கு அந்த அளவுக்கு பழக்கமானவங்க இருக்காங்களா?” என்று கார்த்திக் கேட்க, வித்யா மூளையைத் தட்டி யோசித்துக் கொண்டே, மண்டையை இடம் வலமாக அசைத்தாள்.
“உங்ககிட்ட சொல்லாததையா என்கிட்டே அவ சொல்லப் போறா? அப்படி யாருமே இல்ல கார்த்திக்.. அப்படி இருந்திருந்தா அவ உங்கக்கிட்ட தானே சொல்லுவா..” வித்யா கேட்கவும், அதியமான் அவனை ஆச்சரியமாகப் பார்த்தான்.
மொபைலில் அவனது மெசேஜ்களைப் பார்த்துத் தான் சித்தார்த் காலையில் இருந்து எண்ணையில் இட்ட அப்பம் போல குதித்துக் கொண்டிருந்தான்.. அப்படி இருக்க, இப்பொழுது இவர்களது பேச்சு ஆதிரா, கார்த்திக்கின் புரிதலை சொல்லாமல் சொல்லியது..
ஆதிராவின் பெற்றவர்களுக்கும், திருமணத்திற்குப் பிறகு தங்கள் வீட்டிற்கு வந்த பிறகு, ஆதிராவின் மனநிலையையும் யோசித்து அவன் வீடு வாங்கி, அதை அவன் தயாராக வைத்திருந்த விதமும், இப்பொழுது அதியமானுக்கு அவனது காதலின் அளவை சொல்லாமல் சொல்ல, அவனது மனதில் நிம்மதி பிறந்தாலும், ஆதிரா பத்திரமாக கிடைக்க வேண்டுமே என்ற வேண்டுதலும் துவங்கியது..
கார்த்திக்கின் அடாவடியும், அவனது தெனாவட்டும், திமிரு போன்று தோற்றமளிக்கும் அவனது கெத்தான செயல்களும் அதியமானுக்கு நன்கு தெரியும்.. அப்படி ஒரு தோற்றத்தை அவன் அனைவரிடமும் தோற்றுவிக்க, அவனோ ஆதிராவிடம் காட்டி இருக்கும் முகம், அந்தப் பெண்ணின் நம்பிக்கையையும், மனதையும் கவர்ந்திருக்கிறது என்ற விஷயமே அதியமானுக்கு இருவரையும் எப்படியாவது சேர்த்து வைத்து விட வேண்டுமே என்ற எண்ணம் வலுப்பெற்றது.. அதை விட அவளுக்கு ஏதாவது ஆனால் அவன் தாங்குவானா என்ற பயமும் பிடித்துக் கொள்ள, மதியிடம் பேச வேண்டும் என்ற தீர்மானம் எடுத்துக் கொண்டான்..
மனதினில் அவன் பலவற்றை நினைத்துக் கொண்டிருக்க, கார்த்திக்கின் குரல் அவனை நடப்பிற்கு கொண்டு வந்தது.. “அது தான் ஒருவேளை நான் சண்டைக்கு போகப் போறேன்னு சொல்லாம இருக்களோன்னு கேட்டேன்.. நான் சண்டைப்போட்டா அவளுக்கு பிடிக்காது.. சரி.. நான் எதுக்கும் அவ ரூம்ல ஏதாவது இருக்கான்னு பார்க்கறேன்..” என்றவன், அதியமானை மறந்து ஆதிராவின் அறைக்குள் நுழைய, வித்யா அதியமானைப் பார்த்தாள்.
“நான் அவனோட சீனியர்ம்மா.. என்னை மறந்துட்டு போறான் பாருங்க..” என்று அந்த சூழ்நிலையை இலகுவாக்க கேலி செய்தவன், அங்கிருந்த ஒற்றை சேரில் அமர்ந்தான்.
அவளது அறைக்கு உள்ளே சென்றவன், அவளது அறையை முழுவதுமாக அலசி ஆராயத் துவங்கினான்.. அவளது புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தில், ஏதாவது துப்பு கிடைக்கிறதா என்று அவன் பார்க்க, அவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.. அவனது புண் பட்ட மனதை வருடுவது போல அவளது நைட்டி அவனது கண்ணில் விழுந்தது.. அதைப் பார்த்ததும் அந்த நாள் நினைவுகள் அவனது மனதினில் வந்து மோத, இதழில் சிறிய புன்னகையுடன் அந்த நைட்டியை மெல்ல வருடிக் கொடுத்தான்..
அவளிடம் முதன்முதலில் தனது காதலை பகிர்ந்தத் தருணம்.. அவள் ஊருக்கு சென்ற பொழுது அவளை பார்க்கத் தவித்த மனதை அவளிடம் மறைக்காமல் தெரிவிக்க, விளையாட்டு போல அவள் சொன்ன, “அப்போ நீங்க ஊருக்குத் தான் வரணும்..” விளையாட்டாக அவள் சொன்னதும், தான் விளையாட்டு போல அவளது விலாசத்தைக் கேட்டு, நிஜமாகவே அவளது வீட்டின் முன்பு சென்றது அவனது நினைவினில் வந்து மோதியது..
அப்பொழுது ஆதிரா, தனது வீட்டின் திண்ணையில் அவளது தந்தையின் அருகில் அமர்ந்து அவரிடம் எதுவோ வளவளத்துக் கொண்டிருக்க, அவரும் அதை ரசித்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்தார்.. அவளது தாயோ அவளது பின்னால் அமர்ந்து, அவளது தலை முடியை பின்னலிட்டுக் கொண்டிருக்க, அந்தக் காட்சியை முதலில் கண்ட கார்த்திக்கிற்கு அழகான இனிமையான காட்சியாக இருந்தது..
ஆதிரா தலையை ஆட்டிப் பேசவும், அவளது தலையில் நறுக்கென்று கொட்டிய அவளது தாய் சுதா, “கொஞ்ச நேரம் தான் தலைய ஆட்டாம பேசேன்டி.. பின்னல் கூட போட முடியல..” என்று சொல்லவும்,
“நீ ஒண்ணும் பின்ன வேணாம்.. நானே பின்னிக்கறேன்..” என்று சொல்லிக் கொண்டே, அவளது முடியை அவரிடம் இருந்து பிடுங்கி அவள் பின்னலிடத் துவங்கவும், அவளது தலையில் மீண்டும் ஒரு கொட்டு விழ, அவளது கையில் இருந்த பின்னலை வாங்கி பின்னத் துவங்கியபடியே, “இந்தக் கோபம் எல்லாம் நல்லா மூக்கு மேல வரும்..” என்று திட்டியபடி பின்னலிட்டு, அவளது தலையில் மல்லிகை சரத்தை சூடி, அவளது நாடியைப் பிடித்து, இப்படியும் அப்படியும் திருப்பி பார்த்து, நெட்டி முறித்து,
“விளக்கு வைக்கிற நேரமாச்சு.. நீ போய் முகம் கழுவிட்டு சாமிக்கு விளக்கு ஏத்து. அதெல்லாம் இனிமே பழகணும் புரியுதா? உன்னை ஒரு நல்லவன் கையில ஒப்படைக்கணும்.. எங்களுக்கும் வயசாகுது..” என்று புலம்பியப்படி அவர் உள்ளே எழுந்துச் செல்ல, அவருக்கு பழிப்புக் காட்டிக் கொண்டே உள்ளே செல்ல எழுந்தவள், அங்கு நின்றுக் கொண்டிருந்த கார்த்திக்கைப் பார்த்து திகைத்து, சிலையென நின்றாள்.
“என்னடா கண்ணம்மா அப்படியே நின்னுட்ட. அம்மா சொல்றதைச் செய்.. அவ என்னைக்குமே உனக்கு நல்லது தான் சொல்வா..” என்று அவர் சொல்லவும், அவள் கார்த்திக்கைப் பார்த்த அதிர்ச்சியில் மண்டையை மண்டையை அசைத்து அவனை அங்கிருந்து விரட்டப் பார்க்க, அவனோ அவளை ரசித்துக் கொண்டு நின்றுக் கொண்டிருந்தான்..
தான் சொல்லியும் நகராமல் அவள் நிற்கவும், அவளது முகத்தைப் பார்த்த அவளது தந்தை, அவளது கண்கள் வேறெங்கோ நிலைக்குத்தி இருக்கவும், கேள்வியாக திரும்பி அவளது பார்வை சென்ற திசையைப் பார்க்க, அங்கு நின்றுக் கொண்டிருந்த கார்த்திக்கைப் பார்த்தவர், முதலில் திகைத்துப் போனார்..
மீண்டும் அவரது பார்வை அவளை நோக்கித் திரும்ப, அவனை அங்கிருந்து செல்லுமாறு அவள் சைகை செய்யவும், எதுவோ புரிவது போல இருக்க, “யாருப்பா வேணும் உங்களுக்கு? நீங்க யாரு? யாரைத் தேடி இந்த ஊருக்கு வந்திருக்கீங்க?” என்று நேராக அவனிடம் கேட்க, அவரது நேரடிக் கேள்வியை சற்றும் எதிர்ப்பார்க்காத கார்த்திக், திகைப்புடன் அவரைப் பார்த்தான்..
சட்டென்று தனது தந்தை கார்த்திக்கிடம் அவ்வாறு கேட்கவும், “அப்பா.. அவரு.. அவரு..” என்று அவள் திக்க, தன்னிடம் பேசவோ, கேட்கவோ, என்றுமே யோசிக்காத தனது மகள், கார்த்திக்கைப் பார்த்ததும் திக்கவும், அவருக்கு அவளது மனது புரிந்தது..
அவளது பயத்தைப் பார்த்தவருக்கு, கார்த்திக் அவளிடமும் அறிவிக்காமல் தான் அங்கு வந்திருக்கிறான் என்று புரிந்தவர், “உள்ள வாங்க..” என்றபடி எழுந்து வீட்டின் உள்ளே செல்ல, கார்த்திக் குழப்பமாக ஆதிராவைப் பார்க்க, ஆதிரா பயத்துடன் தனது தந்தையையும், கார்த்திக்கையும் பார்த்தாள்.
“கண்ணம்மா.. அவரை உள்ள வரச் சொல்லு.. வெளியவே நின்னுட்டு இருக்க வேண்டாம்..” பாலகிருஷ்ணனின் குரல் உறுதியும் கண்டிப்புடனும் ஒலிக்க,
“நான் உங்ககிட்ட விளையாட்டுக்கு தானே ஊருக்கு வந்து பாருங்கன்னு சொன்னேன்.. இப்படி உடனே கிளம்பி வந்திருக்கீங்க? இப்போ நான் அப்பாக்கிட்ட என்ன சொல்றது?” என்று கேட்க, அதே நேரம்,
“ஆதிரா..” அவரது குரல் ஒலிக்க,
“உள்ள வாங்க.. உங்களை அப்பறம் பேசிக்கறேன்..” என்ற ஆதிரா, கார்த்திக்கை முறைத்துவிட்டு உள்ளே சென்றவள் கதவின் அருகிலேயே நிற்க, ஒருமுடிவுடன் கார்த்திக் வீட்டிற்குள் சென்றான்..
கையைப் பிசைந்துக் கொண்டு ஆதிரா கதவின் அருகிலேயே நிற்க, “உனக்கு என்னைப் பிடிக்கும் தானே..” போகிற நேரத்தில் அவன் கேட்க,
“ஏன் இப்படி கேட்கறீங்க? உங்களை எனக்குப் பிடிக்குமே..” படபடப்பாக அவள் கேட்க,
அதற்குள், “உள்ள வாங்க..” என்ற பாலகிருஷ்ணனின் குரலில் கார்த்திக் அவர் அருகில் சென்று, அவர் காட்டிய இருக்கையில் அமர்ந்தான்..
சுதா குழப்பத்துடன் கார்த்திக்கைப் பார்க்க, ஆதிரா பயத்துடன் சுதாவின் அருகில் சென்று நின்றாள்.
“சொல்லுங்க.. என்ன திடீர்ன்னு இந்தப் பக்கம் வந்திருக்கீங்க?” பாலகிருஷ்ணன் கேட்கவும், கார்த்திக் அவரைப் பார்த்தான்.. இத்தனை நேரம் ஆதிராவிடம் கதைக் கேட்டுக் கொண்டிருந்த இலகுவான அந்த முகம் மாறி, தலைமை ஆசிரியரின் கடுமை அவரது முகத்தில் விரவி இருக்க, கார்த்திக் ஆதிராவை ஒருமுறை பார்த்துவிட்டு, ஒரு பெருமூச்சுடன் பேசத் துவங்கினான்..
“எனக்கு ஆதிராவைப் பிடிச்சிருக்கு.. அவளுக்கும் என்னைப் பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன்.. எனக்கு அவளை கல்யாணம் பண்ணிக் கொடுங்க.. நான் அவளை பத்திரமா பார்த்துக்கறேன்.. உங்க அளவுக்கு இல்லைன்னாலும் அவளை நல்லா பார்த்துக்கறேன் சார்.. என் உயிரா…” பட்டென்று அவன் கேட்கவும், முதலில் திகைத்தவளின் முகம், சட்டென்று நாணத்திற்குத் தாவ, அதைப் பார்க்காமல் பார்த்துக் கொண்டிருந்த பாலகிருஷ்ணன், சுதாவைப் பார்த்தார்..
சுதாவின் முகத்திலோ அதிர்ச்சி விரைவியது. “என்ன? என்ன சொல்றீங்க? ரெண்டு பேரும் லவ் பண்றீங்களா?” என்று கார்த்திக்கிடம் கேட்டவர்,
“உன்னை இதுக்குத் தான் சென்னைக்கு வேலைக்கு அனுப்பினோமா? என்ன காரியம்டி பண்ணிட்டு வந்திருக்க?” என்று கோபமாக அவளைப் பிடித்து இழுத்துக் கேட்கவும், “இல்ல.. இல்ல..” கார்த்திக் அவசரமாக மறுத்தான்..
“நான் சொன்னத நீங்க கவனிக்கலன்னு நினைக்கிறேன்.. எனக்கு அவளைப் பிடிச்சிருக்கு.. அவளுக்கும் என்னைப் பிடிக்கும்ன்னு நினைக்கிறேன்னு சொன்னேன்.. அப்படின்னா இன்னும் நான் என்னோட காதலை சொல்லி அவகிட்ட சம்மதம் கேட்கலன்னு அர்த்தம்.. நேரடியா நான் உங்ககிட்ட தான் முதன்முதலா என்னோட மனச சொல்றேன்.. அதுனால அவளுக்கு எதுவும் தெரியாது..” என்று அவரைப் பார்த்து தெளிவாகச் சொன்னவன், ஆதிராவைப் பார்த்துவிட்டு, பாலகிருஷ்ணனை நோக்கித் திரும்பினான்.
கையைக் கட்டிக் கொண்டு பாலகிருஷ்ணன் அவனைக் கூர்மையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.. அவரது முக பாவத்தை படித்த கார்த்திக், “சாரி சார்.. நான் வந்ததும் யாரு என்னன்னு சொல்லாம விஷயத்தை சொல்லிட்டேன்.. என் பேர் கார்த்திக்.. நான் ஒரு லாயர்.. அதியமான்னு ஒரு சீனியர் லாயர் கூட ஹைகோர்ட்ல ப்ராக்டிஸ் பண்ணிட்டு இருக்கேன். தனியாவும் நிறைய கேஸ்ங்களை எடுத்து பண்றேன்.. ஓரளவு வசதியா வாழற அளவுக்கு நல்லா சம்பாதிக்கிறேன்.. எனக்கு ஒரு தம்பி.. அவனும் ஆதிரா கூட தான் வர்க் பண்றான்.. ரெண்டு பேரும் ஒரே டீம்ல தான் இருக்காங்க.. அப்பா ரிடையர்ட்.. ஸ்டேட் கவர்மன்ட்ல அக்கவுண்டன்ட்டா இருந்தார்..
அம்மா ஹவுஸ் வைஃப்.. உடைச்சு சொல்லனும்னா.. அப்படி ஒண்ணும் எங்க குடும்பம் பெரிய ஒத்துமையான, சந்தோஷமான குடும்பம் இல்ல.. எங்க அம்மாவுக்கு சீரியல் பார்க்கறது மட்டுமே வேலை.. வீட்டு வேலை செய்ய எல்லாம் எல்லாம் ஆள் இருக்காங்க.. முக்கால்வாசி நாள் நாங்க வெளிய தான் சாப்பிடுவோம்.. அவங்கவங்க வேலையைப் பார்த்துட்டு நாங்க பாட்டுக்கு எங்க ரூம்ல இருப்போம்.. நானும் தம்பியும் கூட வேலைக்கு போன அப்பறம் கொஞ்சம் கொஞ்சம் பேசிட்டு இருந்தது கூட குறைஞ்சு போச்சு.. இப்போவும் காரியத்தோட பேசிப்போம்.. அவ்வளவு தான்..” என்ற கார்த்திக், நேராக பாலகிருஷ்ணனைப் பார்த்தான்..
அவர் அவனை அளந்துக் கொண்டிருக்க, “இப்படி ஒரு குடும்பத்துல எங்க பொண்ணை நாங்க கல்யாணம் செஞ்சிக் கொடுப்போம்ன்னு நீங்க எப்படி நம்பி பொண்ணு கேட்கறீங்க? எங்க பொண்ணு ஒரு நல்ல குடும்பத்துல வாழணும்ன்னு நான் ஆசைப்படறேன்..” கத்தரிப்பது போல சுதா படபடப்பாகச் சொல்லவும்,
“அந்த நல்ல குடும்பம் எனக்கும் வேணும்ன்னு தான் நான் ஆதிராவை கல்யாணம் செய்துக்க கேட்கறேங்க.. ஆதிரா மாதிரி ஒரு நல்ல பொண்ணு கூட வாழணும்ன்னு ஆசைப்படறேன். ஆதிராவை கல்யாணம் செஞ்சிக்கிறது மூலமா எனக்கு ஒரு நல்ல குடும்பம் கிடைக்கும்.. நீங்க எல்லாமும் கிடைப்பீங்க..” அவன் சமாதானப்படுத்த விழைய,
“உங்களுக்கு ஒரு நல்ல குடும்பம் கிடைக்கணும்ங்கறதுக்காக, இப்படி குடும்பமே இல்லாத ஒரு குடும்பத்துல நான் என் பொண்ணை கொடுக்க இஷ்டப்படலைங்க.. இனிமே நீங்க அவளைப் பார்த்து பேசறது எல்லாம் வேண்டாம்.. அவளை நீங்க மறந்திருங்க.. நாங்க அவளுக்கு வேற நல்ல இடத்துல மாப்பிள்ளை பார்த்துக்கறோம்..” சுதா சொல்லவும், ஆதிரா அதிர்ச்சியுடன் சுதாவைப் பார்த்துவிட்டு, திகைப்புடன் கார்த்திக்கைப் பார்த்தாள்.
“இல்லைங்க.. நான் ஆதிராவைக் கல்யாணம் பண்ணின அப்பறம் அது எல்லாமே மாறிடும்ங்க.. அதுக்கு நான் கண்டிப்பா ஏற்பாடு பண்ணிடுவேன்.. அவ கண்டிப்பா என்னோட ஒரு சந்தோஷமான, நிம்மதியான வாழ்க்கை தான் வாழுவா.. எங்க பிள்ளைங்களும் ஒரு அமைதியான நல்ல குடும்ப சூழல்ல வாழும்.. நான் அதைக் கண்டிப்பா செய்வேன்.. அதை நான் உறுதியா சொல்றேன்.. என்னை நம்பி கல்யாணம் பண்ணிக் கொடுங்க.. அவளை பத்திரமா, பொக்கிஷமா நான் பார்த்துக்கறேன்..” கார்த்திக் உறுதியாகக் கூறவும், சுதா அவனைப் பார்த்து நொடித்துக் கொள்ள, பாலகிருஷ்ணன் அமைதியாக அமர்ந்திருக்கவும், கார்த்திக் அதற்கு மேல் என்ன சொல்வதென்று புரியாமல் அமைதியாக தலைகுனிந்து அமர்ந்தான்..
அவனது மனது, தான் அவசரப்பட்டு விட்டோமோ என்று ஒருபக்கம் அடித்துக்கொள்ள, மறுபக்கம் ‘இனிமேல் ஆதிராவை எப்படி பார்ப்பது? அவளை மீண்டும் சென்னைக்கு அனுப்புவார்களா? அவளும் பெற்றவர்கள் பேச்சைக் கேட்டு என்னை ஒதுக்கி விடுவாளா? அவளுடன் தான் இணைந்து வாழும் கனவு கனவாகவே முடிந்து விடுமோ?’ என்ற எண்ணங்கள் முட்டி மோத, ஒரு பெருமூச்சுடன் அவன் பாலகிருஷ்ணனைப் பார்த்தான்..
அவர் அமைதியாக அமர்ந்திருக்கவும், அதற்கு மேல் என்ன பேசுவது என்று புரியாமல், “சரிங்க சார்.. உங்களை சந்திச்சது எனக்கு ரொம்ப சந்தோசம்.. நீங்க யோசிச்சு சொல்லுங்க.. நான் கிளம்பறேன்..” என்றபடி அவன் எழுந்துக் கொள்ள, அவனது முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பெண்ணவளின் நெஞ்சம் தவிக்க, ஒரு முடிவுக்கு வந்தவளாக,
“என்னங்க.. வீட்டுக்கு முதல் தடவ வந்துட்டு ஒண்ணுமே சாப்பிடாம போறீங்க..” என்று பட்டென்று கேட்டவள், ஒரு சொம்பு தண்ணியை எடுத்துக் கொண்டு வந்து அவனிடம் கொடுக்க, ஏக்கத்துடன் ஆதிராவைப் பார்த்தான்..
அவனது பார்வையைக் கண்டவளுக்கு தொண்டை அடைக்க, “என்ன பார்த்துட்டே இருக்கீங்க.. குடிங்க.. அவ்வளவு தூரம் ட்ராவல் பண்ணி என்னைப் பார்க்க வந்துட்டு, வேற எதுவுமே சாப்பிடாம போனா எப்படி? தண்ணி குடிங்க.. நான் காபி போட்டு எடுத்துட்டு வரேன்..” என்றவள், திரும்பி தனது தந்தையைப் பார்த்துவிட்டு, சமையலறைக்குள் செல்ல, அவளது நடவடிக்கைகளைப் பார்த்துக் கொண்டிருந்த சுதா அவளைப் பின்தொடர்ந்து சென்றார்.
“நான் என்ன சொல்லிட்டு இருக்கேன்.. நீ என்ன பண்ணிட்டு இருக்க? என்னடி மனசுல நினைச்சிட்டு இருக்க? என்னவோ அவரை உட்கார்த்தி வச்சு உபசாரம் பண்ணிட்டு இருக்க?” தட்டில் அவளுக்கு என்று சுதா செய்து வைத்திருந்த முறுக்கை எடுத்து வைத்துக் கொண்டிருந்தவளைப் பிடித்து நிறுத்த,
“அம்மா.. எனக்கு அவரை ரொம்ப பிடிச்சிருக்கும்மா.. நான் அவரை லவ் பண்றேன்.. அவருக்கு என்னை ரொம்ப பிடிக்கும்ன்னு எனக்குத் தெரியும்.. என்னைப் பார்க்கத் தான் சாக்கு சொல்லி முதல் தடவ அவர் எங்க வீட்டு பக்கம் வந்தாருன்னும் தெரியும்.. இருந்தாலும் அவரா சொல்லட்டும்ன்னு தான் நான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்..
இன்னைக்கு காலைல, ‘எவ்வளவு நாள் போன்லயே பேசிட்டு இருக்கறது.. உன்னைப் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு, மீட் பண்ணலாமா’ன்னு கேட்டார்.. எனக்கும் அவரைப் பார்க்கணும் போல இருந்துச்சு.. இருந்தாலும் நான் விளையாட்டுக்கு தான் அவரை, ‘பார்க்கணும்ன்னா இங்க வந்து பாருங்க’ன்னு சொன்னேன்.. காலைல சொன்னதும், என்னைப் பார்க்க சென்னைல இருந்து கிளம்பி இங்க நம்ம வீட்டுக்கு வந்திருக்கார்.. அதும் அவர் நேரா வீட்டுக்கு தானேம்மா வந்திருக்கார்.. எங்கயாவது கோயில்லையோ இல்ல வேற இடத்துலையோ இருந்துக்கிட்டு என்னை திருட்டுத்தனமா வான்னு சொல்லலையே.. அதுல இருந்து அவரோட நேர்மையை புரிஞ்சிக்கோங்க.. அவர் அப்பாவைப் பார்த்ததும் கூட ஓடி ஒளியலையேம்மா.. ஏன் அவரோட குடும்பத்தைப் பத்தி கூட அவர் மறைக்காம தானே சொன்னார்?” என்றவள், சுதா திகைத்துப் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே,
“அவர் நினைச்சு இருந்தா.. எங்க குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்ன்னு சொல்லி இருக்கலாம்ல.. அதையும் அவர் செய்யலையேம்மா.. நீங்க சொல்ற மாதிரி என்னால வேற யாருக்குமே கழுத்தை நீட்ட முடியாதும்மா.. ஒருவேளை நீங்க பார்த்து கல்யாணம் செஞ்சிக் கொடுக்கற குடும்பம் இப்படி இருந்ததுன்னா நீங்க என்ன செய்வீங்க? அட்ஜஸ்ட் பண்ணி போன்னு தானே சொல்லுவீங்க.. அப்போ மட்டும் ஓகே வா? அவர் என்னை கண்டிப்பா நல்லா பார்த்துப்பார்.. நம்புங்கம்மா..” என்று அவள் சொல்லிவிட்டு, காபியைக் கலந்துக் கொண்டு வெளியில் சென்று, கார்த்திக்கிடம் ஒரு டம்ப்ளரைக் கொடுத்துவிட்டு,
“இந்தாங்கப்பா..” என்று பாலகிருஷ்ணனிடமும் ஒன்றை நீட்டிவிட்டு,
“மதியம் சாப்பிட்டீங்களா என்னன்னு தெரியல.. பத்து மணிக்கு நாம பேசின உடனே கிளம்பி வந்திருக்கீங்க போல.. இந்தாங்க இதை சாப்பிடுங்க. எங்க அம்மா செஞ்சது.. ரொம்ப டேஸ்டியா இருக்கும்..” என்று முறுக்கையும் அவனுக்கு முன்பு ஒரு சிறிய மேஜையைப் போட்டுவிட்டு, அதன் மீது வைக்க, கார்த்திக் அவளை விழிகள் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்..