எந்நாளும் தீரா காதலாக – 12

எந்நாளும் தீரா காதலாக – 12

💝12       

வினய் அவனை கேலியாகப் பார்க்க, “இண்டு இடுக்குல கூட தெரியாத அளவுக்கு இழுத்து விட்டுட்டு தூங்கிட்டு இருக்கா..” என்றவனைப் பார்த்து சிரித்த வினய்,

“போய் குளிச்சிட்டு வா.. ஹீட்டர் எல்லாம் ரெடியா இருக்கு.. அவளைக் காலையில பார்த்துக்கலாம்..” என்றவன், அவனது பெட்டியைத் திறந்து, அவனுக்கு இரவு உடையை எடுத்து வைக்க, அர்ஜுன் அதில் இருந்த டவலை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றான்.  

ஒரு பெண் மட்டுமே உபயோகப்படுத்தும் ஒரு அறையை பயன்படுத்துவதே மனதிற்குள் சற்று கூச்சமாக இருந்தது.. அவளது குளியலறை வேறு பயன்படுத்துவது அதை விட கூச்சமாக இருக்க, ‘ஏன் சிட்டு உனக்கும் என் ரூம் யூஸ் பண்ற போது இப்படித் தான் இருந்ததா? ஒருமாதிரி இருக்குடி சிட்டு.. இது என்ன ஃபீல்ன்னு தெரியல.. நான் எங்க அம்மா ரூம் கூட யூஸ் பண்ணினது இல்ல..’ என்று நினைத்துக் கொண்டே, அந்த அறையைச் சுற்றி பார்த்து, அங்கிருந்த ஷெல்பைத் திறக்க, அதில் இருந்த பொருட்களைப் பார்த்தவனுக்கு, தன்னை நினைத்தே சிரிப்பு வந்தது.

குளித்துவிட்டு வந்தவனின் இதழ்களில் புன்னகை குடி கொண்டிருக்க, “என்னடா?” என்று வினய் கேட்க, தனது மனதைச் சொன்னவன்,

“நான் அம்மா ரூமுக்கே ரொம்ப போக மாட்டேன்ல.. இப்போ இவ ரூம்ல புதுசா இருக்கு.. கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கு.. எனக்கு எப்படி சொல்றதுன்னே தெரியல..” என்று சொன்னவன், அவளது பெட்டில் சென்று அமர்ந்தான்.

“பரவால்ல.. உன்னோட வருங்கால பொண்டாட்டி ரூம் தானே.. அப்பறம் வந்து தங்கும் போது பழக்கமா போயிடும்..” என்றவன், அர்ஜுன் சிரிக்கவும்,  

“பார்த்தியா.. உனக்கு அவ தான் அவளுக்கு நீ தான்னு விதி இருக்கு.. அது தான் வரிசையா இப்படி ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கற போல எல்லாமே பாசிடிவ்வா நடக்குது..” என்றவன், அர்ஜுனின் தோளை அழுத்தி,

“அம்மாவுக்கு அவளை ரொம்ப பிடிச்சு இருக்குடா.. அம்மாவை அப்படி பத்திரமா பார்த்துக்கிட்டு இருந்திருக்கா.. நைட் சாப்பாடு கொடுத்துட்டு பேசிட்டு இருக்கும்போது அம்மாவே மனசு நிறைஞ்சு சொன்னாங்க.. ‘அர்ஜுனை அவ குழந்தை மாதிரி நல்லா பார்த்துப்பா’ன்னு.. ஒரு அம்மா வாயில இருந்து அந்த வார்த்தை எல்லாம் வரது எல்லாம் பெரிய விஷயம் தெரியுமா? அவங்க சொல்லும்போது அவங்க குரலே அப்படி சாஃப்ட்டா இருந்தது. அப்போ பார்த்துக்கோ அவ அம்மாவை எப்படி கவனிச்சுக்கிட்டு இருந்திருக்கான்னு..” வினய் சொல்ல, அர்ஜுனின் மனதில் நிம்மதியும் மகிழ்ச்சியும் ஒருங்கே எழுந்தது..    

“நீ படுக்கல?” என்றபடி அவளது தலையணையில் சாய்ந்தவன், அருகில் இருந்த டெட்டிபியரை எடுத்து, அதன் காதை பிடித்து ஆட்டிக் கொண்டே கேட்க,

“படுக்கணும்டா.. நான் பக்கத்து ரூம்ல தான் ரெண்டு நாளா இருக்கேன். நீ டயர்டா இருக்குன்னு சொன்னியே.. நல்லா தூங்கி நீயே எழுந்து வா.. நான் உன்னை டிஸ்டர்ப் செய்யல..” என்றவன், அவனுக்கு ஸ்க்ரீனை இழுத்துவிட்டு, லைட்டை அனைக்க, சீலிங்கில் ஆங்காங்கு நட்சத்திரங்கள், நிலா என்று ஜொலிக்க, அதைப் பார்த்துக் கொண்டே கண்களை மூடியவன், உறக்கத்தின் பிடிக்குள் சென்றான்.

காலையில் தாமதமாக விழித்துக் கொண்ட அர்ஜுன், காலை வேலைகளை முடித்து, குளித்துவிட்டு, வினயைத் தேடிக் கொண்டே கீழே இறங்கி வர, அங்கு வினய்க்கும், ராதாவிற்கும் வாக்குவாதம் நடந்துக் கொண்டிருந்தது..

“இப்போ என்ன பண்ணிட்டு இருக்கீங்க? நான் வெங்காயம் வெட்டித் தரேன்னு சொல்றேன்.. கேட்காம நீங்களே பண்ணிட்டு இருந்தா எப்படி? அப்போ நான் என்ன சும்மா வேடிக்கைப் பார்க்கணுமா?” என்று கேட்க,

“அது தான் தோளை உரிச்சு கொடுத்துட்ட இல்ல.. அப்பறம் நான் எனக்கு வேணுங்கற சைசுக்கு வெட்டிக்கறேன்..” வினயின் பதிலில் பல்லைக் கடித்தவள்,

“அந்த சைஸ் என்னன்னு காட்டினா நான் செய்வேன்ல.. ரொம்ப ஓவரா பண்ணிட்டு இருக்கீங்களே..” ராதா கடுப்புடன் கேட்க,

“அதை நான் உன்கிட்ட சொல்லி வெட்ட சொல்றதுக்கு நானே செய்யலாம்ன்னு செய்யறேன்.. நீ தான் தோச செஞ்ச இல்ல.. அப்போ நான் கரண்டி கொடு.. நான் தான் என்னை ஊத்துவேன்னு சண்டைப் போட்டேனா? இல்ல என் ரூம்ல இருந்து அத்தனை துணியையும் தூக்கிட்டு போய் வாஷிங் மெஷின்ல போட்டு இருக்கியே.. அப்போ நான் ஏதாவது சொன்னேனா? இல்ல நான் தான் சாப்பாடு போடுவேன்னு சொல்றியே.. நானும் பேசாம இருக்கேன்ல.. இப்போ நீ மட்டும் ஏன் வெங்காயத்தை வெட்டியே தீருவேன்னு சண்டைப் போட்டுட்டு இருக்க?” என்ற வினயின் பதிலில், அர்ஜுனுக்கு சிரிப்பு வந்தது.

சத்தமிடாமல் டைனிங் டேபிளில் அமர்ந்த அர்ஜுன், அவர்கள் பேசுவதை கேட்கத் துவங்கினான்.

“சரி.. நீங்களே செய்ங்க..” என்று ராதா சொல்லிவிட்டு நிற்க,

“மதியத்துக்கு என்ன செய்யலாம்ன்னு அப்படியே கோவிச்சுக்கிட்டே யோசி.. அவன் எழுந்ததும் அவன்கிட்டயும் கேட்கலாம்.. அதே போல கோபத்தோட ஒரு டீ போட்டு வை.. அவன் இன்னும் கொஞ்ச நேரத்துல எழுந்திருவான்.. கூட எனக்கும் போடலாம்.. தப்பில்ல.. நீயும் கூட குடிக்கலாம்.. தப்பே இல்ல..” என்றவன், ஏதோ செய்துக் கொண்டிருக்க, அர்ஜுன் அதைக் கேட்டு சிரித்துக் கொண்டே உள்ளே நுழைந்தான்.

“என்ன இங்க சத்தம்? என்ன இங்க ரணகளம்?” என்ற அர்ஜுனின் குரலில்,

“தம்பி..” திடுக்கிட்டு அவள் திரும்பவும்,

“பார்த்தியா.. கோவிச்சிக்கிட்டே நின்னுட்டு இருந்தியே.. நான் சொன்ன நேரத்துக்கு தண்ணி வச்சு டீப் பொடி போட்டு இருந்தா.. அவனுக்கு டீ கொடுத்து இருக்கலாம்.. அவனுக்கு பசிக்கும்..” வினய் தொடங்க,

“அது செய்யறதுக்குள்ள தம்பி வந்துட்டா நான் என்ன செய்யறது? அதுக்கு முதல்ல இடம் விடணும்.. இப்படியே அடுப்பை கட்டிப் பிடிச்சுக்கிட்டு நின்னா நான் என்ன உங்க தலையில வச்சா டீ போட முடியும்..” என்று நொடித்துக் கொண்டவள், வினய் முறைக்கவும்,  

“தம்பி.. ஒரு நிமிஷம் இருங்க.. நான் இதோ போட்டுக் கொடுத்துடறேன்..” என்று சொல்லவும், அவளைப் பார்த்து சிரித்த அர்ஜுன்,

“நீங்க பொறுமையா போடுங்கக்கா..” என்றவன்,

“இப்போ என்ன டிபன்? நீ என்னடா பண்ணிட்டு இருக்க?” என்று கேட்டுக் கொண்டே, அங்கிருந்தவற்றை ஆராய்ந்துக் கொண்டிருந்தான்.  

“அவ தோசை செஞ்சிருக்காடா.. நான் இப்போ வெங்காயம் தக்காளி வதக்கி குழம்பு போல வைக்கிறேன்.. ஒரு பத்து நிமிஷம் ரெடி ஆகிடும்..” என்றவன், வெங்காயத்தை தாளித்து வதக்கி செய்யத் துவங்க, அவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுன், ராதா டீ போட்டுக் கொடுக்கவும், அதை சூடாகவே குடிக்க, ராதா ஆச்சரியத்துடன் பார்த்தாள்.

“என்ன தம்பி.. இவ்வளவு சூடா குடிக்கறீங்க? நாக்கு பொத்தல் போட்டுடாது?” திகைப்புடன் கேட்க,

“அவனுக்கு அப்படித் தான்.. காபி, டீ ரெண்டும் சூடா தான் வேணும்.. அடுப்புல இருந்து அப்படியே குடிக்கணும்..” என்ற வினயிடம்,

“பாப்பாக்கு வெதவெதன்னு தான் குடிக்கணும்.. ரொம்ப சூடா எல்லாம் ஆகாது.. மெதுவா ஊதி ஊதி குடிப்பா..” சிவாத்மிகாவின் நினைவில் சொன்னவள்,

“அவ இன்னும் எழவே இல்ல.. உடம்பு ரொம்ப முடியல போல.. தலைவலி வந்தாலே அவ தாங்க மாட்டா.. என்னைத் தேடுவா..” அவளைப் பற்றி பகிர்ந்துக் கொண்டு, வருத்ததுடன் முடிக்க, வினய் அவளைப் பார்த்துக் கொண்டே, செய்ததை இரண்டு தனி டப்பாக்களில் போட்டு வைக்க,

“ஏன்? தனித்தனியா எடுத்து வைக்கிற? சேர்ந்து சாப்பிட மாட்டாங்களா?” அர்ஜுன் குழப்பமாகக் கேட்கவும்,

“அம்மாக்கு இப்போ கொஞ்சம் பரவால்ல தானே.. அதனால அவ அம்மாகிட்டையே போறது இல்ல.. சாப்பாடு வாங்கிட்டு ரூம்ல தான் சாப்பிடறா.. அவ தனியா தான் இருக்கா..” என்று அவன் சொல்லவும், அவளது அக்கரையில் புன்னகைத்தவன், வினய்யின் கையில் இருந்த கவரை வாங்கிக் கொண்டான்.

“நான் அம்மாவைப் போய் பார்த்துட்டு வந்துடறேன்டா.. அவ இன்னும் எழுந்துக்கல.. அவளுக்கு ஒரு மெசேஜ் போட்டுட்டு போறேன்.. எழுந்தா எனக்கு அவ ரிப்ளை பண்ணுவா.. அவ பதில் சொன்ன உடனே நான் அவளுக்கு சாப்பாடு கொடுத்துட்டு பார்த்து பேசிட்டு வரேன்.. வேற வழியில போயிட்டு வரேன்..” என்று கண்ணடிக்க, வினய் புரிந்துக் கொண்டு சிரிக்கவும், இருவரையும் ராதா புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்ன இங்க சைகை காட்டிட்டு இருக்கீங்க? ரெண்டு பேரும் எனக்கு தெரியாம என்ன செய்யறீங்க?” வினயைப் பார்த்து முறைத்துக் கொண்டே கேட்க,

“அது ஒண்ணும் இல்ல ராதா.. அவன் நைட் வந்த உடனே அவளைப் பார்க்க, பால்கனி ஏறி குதிச்சு போயிட்டு வந்தான்.. இப்போ அவளுக்கு சாப்பாடு அங்க தான் கொண்டு போய் கொடுக்கறேன்னு சொல்றான்..” என்ற வினய், ஒரு கப்பில் கஷாயத்தை ஊற்ற, அனைத்தையும் எடுத்துக் கொண்டு, அர்ஜுனும், வினயும், நிர்மலாவைப் பார்க்கச் சென்றனர்.

போகும்பொழுதே, “மதியத்துக்கு நான் வந்து செய்யறேன்.. அங்க எதுவும் செய்யக் கூடாது சொல்லிட்டேன்..” என்றபடி வினய் வர, அர்ஜுன் அவனுடன் சிரித்துக் கொண்டே நடந்தான்.

“என்னடா இப்படி சண்டை போட்டுட்டு இருக்க? செம டைம் பாஸ்சா?” என்று கேலி செய்ய,

“அது என்னவோ பதிலுக்கு பதில் நல்லா சண்டை போட்டுட்டு நல்லா இருக்கு..” என்றவன், கதவைத் தட்ட, நிர்மலா கதவைத் திறக்கவும்,

“நிம்மு..” என்ற அர்ஜுனின் குரலில், முகம் நிறைந்த புன்னகையுடன்,

“அஜ்ஜு.. எப்போடா வந்த? நீ நல்லா தூங்கிட்டு இருப்பன்னு தான் நான் உனக்கு போன் பண்ணல.. என்னடா.. எப்படி இருக்க? இன்னும் டயர்டா இருக்கா? முகம் சோர்ந்து இருக்கு.. சாப்பிட்டியா?” அவரது கண்கள் அவனது தலை முதல் கால் வரை வருடிக் கொண்டே கேட்க, அவரைப் பார்த்து புன்னகைத்தவன், அங்கிருந்த படியில் அமர்ந்துக் கொண்டான்.

“அம்மா.. முதல்ல நீங்க சொல்லுங்க.. அங்க ஒரு சேர் போட்டு உட்காருங்க..” எனவும், நிர்மலாவும் அப்படியே செய்தார்.

“எனக்கு டயர்டா தான் இருக்கு.. அது மதியம் தூங்கி எழுந்தா சரியா போயிடும்.. நீங்க சொல்லுங்க.. உடம்பு எப்படி இருக்கு?” என்று நலம் விசாரிக்க, அவர் அனைத்தையும் சொல்லி,

“சிவா என்னை பார்த்துக்கிட்டதுல உடம்பு சரியா போகாம இருக்குமா?” என்றவரைப் பார்த்து புன்னகைத்தவனிடம்,

“சீக்கிரம் அவகிட்ட உன் மனசுல இருக்கறதைச் சொல்லிட்டு நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வா.. கூடவே இவனுக்கும் ஒரு பொண்ணு பார்த்துடலாம்.. அவனுக்கும் வயசாகுது.. ரெண்டு தடிமாடுங்களும் சேர்ந்து சுத்தினது போதும்.. என் மருமகங்க கூட சுத்துங்க…” என்றவரைப் பார்த்து சிரித்த அர்ஜுன்,

“செய்துடலாம்மா.. அவனையும் கட்டிப் போட்டுடலாம்.. நீங்க சொல்லுங்க.. உங்களுக்கு ரொம்ப டயர்டா இருக்காம்மா.. டாக்டர்கிட்ட ஏதாவது வைட்டமின் டேப்லெட் போல இருக்கான்னு கேட்கவா? உடம்புக்கு கொஞ்சம் தெம்பா இருக்கும்.. ரொம்ப இளைச்சு போயிட்டீங்க.. முகமே ரொம்ப ஒரு மாதிரி இருக்கு..” என்று அவன் வருந்த, அவனது தலையைத் தடவ எழுந்த கைகளை அடக்கிக் கொண்டவர்,

“கொஞ்ச நாள்ல எல்லாம் சரியா போயிடும்.. எனக்கு பசிக்குது.. நான் போய் சாப்பிடறேன்.. நீயும் நேரம் கடத்தாம சாப்பிடு..” அவனை வெகுநேரம் அங்கு இருக்க விடாமல், அங்கிருந்து நகர்த்துவதற்கு அவர் சொல்ல,

“அப்படியே சாப்பிடுங்களேன்.. நான் பேசிட்டு இருக்கேன்..” அங்கிருந்து கிளம்ப மனம் இல்லாமல் அர்ஜுன் சொல்லவும்,

“டேய்.. வினய்.. இவனை கூட்டிட்டு போ.. சொன்னா கேளு அஜ்ஜு.. இன்னும் நாலு நாள் தான்.. டெஸ்ட் நெகடிவ் வரட்டும்.. என் மடியில படுத்து கொஞ்சு.. இப்போ ரொம்ப நேரம் இங்க இருக்க வேண்டாம்.. இங்க ஏற்கனவே ஒருத்தி கஷ்டப்படறது போதாதா? உடம்பு எந்த அளவுக்கு அலண்டு இருந்தா.. அவ இன்னும் எழ கூட இல்ல.. உடம்பு முடியாம கண்ணுல தண்ணி வருது..” என்று அவர் சொல்லவும், மணியைப் பார்த்தவன், ஒரு பெருமூச்சுடன்,

“சரிம்மா.. சாப்பிட்டு படுத்து தூங்குங்க.. வீடு கிளீன் எல்லாம் அப்பறம் பார்த்துக்கலாம்.. எப்படியும் நாம டிஸ்ன்பெக்ட் பண்ணனும்.. டிவியையும் தான் சொல்றேன்.. உங்களுக்கு எல்லாமே ஆப் போட்டு இருக்கேன்ல.. அதுல பார்த்துக்கலாம்..” என்றவன், எழுந்துக் கொள்ள, நிர்மலாவின் கண்கள் கலங்கியது.

அவனுக்குத் தெரியாமல் அவர் கண்களைத் திருப்பிக் கொள்ள, “அம்மா.. எனக்கு இப்போ தானே நீங்க தைரியம் சொன்னீங்க? இன்னும் நாலே நாலுன்னு.. இப்போ நீங்களே கண்ணு கலங்கினா எப்படிம்மா? பேசாம நான் வந்துடட்டுமா? உங்க ரெண்டு பேரையும் பார்த்துக்கிட்டு, நான் பாட்டுக்கு தனியா வினய் ரூம்ல இருக்கேன்..” என்று கேட்கவும்,

“வேண்டாம்டா.. சிவாவுமே எப்போப்பாரு மாஸ்க் எல்லாம் போட்டுக்கிட்டு ரொம்ப ஜாக்கிரதையா தான் இருந்தா.. அப்போ அப்போ கைய கழுவிக்கிட்டு இருப்பா.. என்னையும் பார்த்துக்கிட்டு, அவளும் பத்திரமா தான் இருந்தா.. எல்லாத்தையும் மீறி தான் இப்போ அவ கஷ்டப்பட்டுட்டு இருக்கா. உடம்பு வலி எல்லாம் ரொம்ப முடியலடா அஜ்ஜு.. உனக்கு எல்லாம் தாங்காது.. பேசாம அங்கேயே இரு.. இப்போ கூட போய் டிரஸ் எல்லாம் மாத்திக்கோ. கை எல்லாம் நல்லா கழுவிடு..” என்றவர், அர்ஜுன் அவரைப் பரிதாபமாகப் பார்க்க,  

“ஏதோ கொஞ்சம் தொண்டையடைச்சு போச்சு.. உடனே ரொம்பத் தான் செண்டி போட்டுட்டு உட்கார்ந்து இருக்கான்..” என்றவர், உணவை எடுத்துச் சென்று டைனிங் டேபிளில் வைக்க, அர்ஜுன் அவரைப் பார்த்துக் கொண்டு நின்றான்.

“இன்னும் நீ போகலையா?” என்று அவர் விரட்ட,

“கொஞ்சம் கொஞ்சிடக் கூடாதே.. உடனே ரொம்ப பண்ணுவீங்களே..” என்றவன்,

“வாடா.. ரொம்பத் தான் பண்றாங்க..” என்றபடி, வினயுடன் நகர,

“வினய் அவளுக்கு எங்கடா சாப்பாடு.. அவ எழுந்த அப்பறம் கொண்டு வரீங்களா?” கவரைப் பார்த்த நிர்மலா கேட்க,

“ஆமா.. அவ எழுந்ததுக்கு அப்பறம் அவ ரூம்க்கு டைரெக்ட்டா சாப்பாடு அனுப்பிடறோம்.. நீங்க எங்க தொல்லை இல்லாம நல்லா படுத்து தூங்குங்க..” என்ற வினய், அர்ஜுன், நிர்மலாவைப் பார்த்து கண்ணடித்து விட்டு  செல்ல, நிர்மலா அவனை ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு ராதா டைனிங் டேபிளில் அமர்ந்திருக்க, அவளைப் பார்த்துக் கொண்டே அறைக்குச் சென்று இருவரும் உடையை மாற்றிக் கொண்டு வர, வினயைப் பார்த்ததும் ராதா புலம்பத் துவங்கினாள்.

“அம்மா எப்படி இருக்காங்க? இன்னும் இந்த பாப்பா எழவே இல்லையே.. ரொம்ப உடம்புக்கு முடியலையோ? அவளுக்கு போன் பண்ணி எழுப்பலாம்ன்னா.. போன் பண்ணக் கூடாதுன்னு கண்டிஷன் போட்டு இருக்கீங்க.. மனசு படபடங்குதுல.. ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபிசரா இருக்கீங்க சொல்லிட்டேன்..” எனவும்,

“அக்கா.. நான் தான் அவளை எழுப்ப வேண்டாம்ன்னு சொல்லி இருக்கேன்.. அவளுக்கு நான் மெசேஜ் அனுப்பி இருக்கேன்.. அவ முழிச்சதும் அவ பதில் அனுப்புவா.. அப்போ பேசுங்க.. உடம்பு முடியாததுனால தானே இவ்வளவு நேரம் தூங்கறா.. பாவம் தூங்கட்டும்.. இப்போ ரெஸ்ட் எடுத்தா தானுண்டு.. அப்பறம் அவ பாட்டுக்கு வேலைக்கு கிளம்பப் போறா.. அதுவும் தவிர.. எனக்கு நல்லா தூங்கறவங்களை எழுப்பறது அவ்வளவு சம்மதம் இல்ல.” என்று அர்ஜுன் சொல்லிக் கொண்டே அமர,

“நாங்களும் கல்யாணத்துக்கு அப்பறம் பார்க்கறோம்.. எழுப்ப மாட்டாங்களாமா?” என்று ராதா வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டே எழுந்துச் செல்ல, அது அர்ஜுனின் காதுகளிலும் விழுந்தது..

“ஹயய்யோ..” என்று அவனது முகம் சிவக்க, வினய் விசில் அடித்துக் கொண்டே, அனைவருக்கும் தட்டை வைக்க, அர்ஜுன் மூன்று தட்டுகளிலும் பரிமாற, ராதா இருவரையும் ஆயாசமாகப் பார்த்தாள்.

“உங்களை எல்லாம் என்ன சொல்றது? நான் வந்து போட மாட்டேனா? இங்க நான் என்னத்துக்கு இருக்கேன்?” என்று கேட்டவள், அர்ஜுனின் கையில் இருந்து கரண்டியை வாங்கிக் கொண்டு பரிமாறத் துவங்கினாள்.   அர்ஜுனின் செல்லிற்கு மெசேஜ் சத்தம் வர, அதைத் திறந்துப் பார்த்தவன்,

“மேடம் எழுந்துட்டா.. குளிச்சிட்டு கால் பண்றேன்னு மெசேஜ் பண்ணிருக்கா..” புன்னகையுடன் கூறியவன், அதற்கு மேல் பரபரப்பு தொற்றிக் கொள்ள, அவசரமாக தோசையை வாயில் திணித்துக் கொள்ளத் துவங்கினான்.

அவன் உண்ட வேகத்திலேயே அவனது பரபரப்பு புரிய, ராதா தயங்கி அர்ஜுனைப் பார்த்தாள். ஏதோ கேட்க நிமிர்ந்த வினய், அவள் அர்ஜுனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, டேபிளின் அடியில் இருந்த அர்ஜுனின் காலை சுரண்ட, அர்ஜுன் நிமிர்ந்துப் பார்க்கவும், ராதாவை நோக்கி கண்களைக் காட்ட, அவளைப் பார்த்தவன், புருவத்தை உயர்த்தி என்னவென்று கேட்டான்.

“என்னக்கா? என் முகத்துல அப்படி என்ன இருக்கு?” அர்ஜுன் கேட்கவும்,

“தம்பி.. நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்..” என்று அவள் தயங்க, அர்ஜுன் நிமிர்ந்து அமர்ந்து,

“சொல்லுங்கக்கா.. தயங்காம சொல்லுங்க.. என்ன ஆச்சு?” அவளது தயக்கத்தை விடுவிக்க அர்ஜுன் ஊக்க, ராதா, தனது மனதில் இருந்ததை கேட்கத் துவங்கினாள்.

“உங்களுக்கு சிவாவை பத்தி தெரியுமா? எந்த அளவு தெரியும்? உங்களுக்கு அவளை எவ்வளவு பிடிக்கும்? ஏன் பிடிச்சது?” ராதா கேட்க,

“எனக்கு எல்லாம் தெரியும்க்கா.. நான் அன்னிக்கு மாடியில நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருந்ததைக் கேட்டேன்.. ஏன் எப்படி என்ன அதெல்லாம் எனக்குத் தெரியாது.. எனக்கு அவளை முதன் முதல்ல பார்த்த பொழுதே ரொம்ப பிடிச்சது.. மனசுல ஒரு பாதிப்பு.. அப்பறம் அவளோட குணம் எல்லாம் பார்த்த பொழுது ரொம்ப பிடிச்சது.. அவ தான் என் பொண்டாட்டின்னு மனசு தானா முடிவு பண்ணிடுச்சு.. அதுக்கு எனக்கு ரொம்ப நேரம் எல்லாம் எடுக்கல.. ரெண்டாவது நாள்லையே அவ கூட என் உலகமே அழகா இருந்தது..” அர்ஜுனின் பதிலில், ராதா அவனை ஆச்சரியமாகப் பார்க்க,

ஒப்புதலாக தலையசைத்தவன், “அவ நினைச்சிருந்தா அவங்க அப்பா அம்மாகிட்ட போய் சண்டைப் போட்டு இருக்கலாம்.. அதை அவ செய்யவே இல்லையே.. அதுலயே அவளோட சுயமரியாதை பிடிச்சது.. இந்த உலகத்துல நீங்க இல்லாம என்னால தலை நிமிர்ந்து வாழ்ந்து காட்ட முடியும்னு நிக்கற அந்த தைரியம் எனக்கு பிடிச்சிருக்கு..” ராதா இடையிட முயல,

“இருங்க.. நான் சொல்லி முடிச்சிடறேன்.. அவங்கள எதிர்பார்க்காம தானே ஒரு தொழில் எடுத்து பண்ணிட்டு இருக்கா.. அதுல அவளால முடிஞ்ச வரை போராடுறா.. அது எல்லாம் எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா? எனக்கு அவளை அதுல இருந்தே ரொம்ப பிடிச்சது.. இப்போ எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சு இருக்கு.. அவ இல்லாம என் லைஃப் இல்லைங்கற முடிவுக்கு வந்துட்டேன்.. அவளோட காயங்கள் எனக்கு புரியுது.. அவளை நான் பத்திரமா பார்த்துக்கறேன் அக்கா.. அவ என்னோட பொக்கிஷம்..” அவன் சொல்லவும், ராதா கண்கள் கலங்க, நிம்மதியுடன் மூச்சை இழுத்து விட்டு,

“உங்களுக்குத் தெரியுமா? அவளைப் பெத்தவங்களுக்கு அவளை இப்போ அடையாளம் கூடத் தெரியாது தம்பி.. அதோட அவங்க அப்பா, இந்த வீட்டை அவ பேர்ல மாத்தி எழுதி, அவளோட விஷயங்களைப் பார்த்துக்கற வக்கீல் மூலமா பத்திரத்தை கொடுத்து அனுப்பினார்.. ஆனா.. அவ ‘எனக்கு இந்த வீட்டை அவர் தானமா கொடுக்க வேண்டாம்.. என்னவோ பிச்சைப் போடறா போல இருக்கு’ன்னு சொல்லி, ‘நானே சம்பாதிச்சு.. அவருக்கு பணத்தைக் கொடுத்து வாங்கிக்கறேன்’னு சொல்லிட்டு.. ஒரு ஹாஸ்டல்ல இருந்துக்கிட்டு, அந்த கடையைத் துவங்கி, உழைச்சு காசு சேர்த்தா.. சின்னச் சின்ன டிசைனுக்குக் கூட தயங்காம செய்தா.. ராவா பகலா உழைக்கிறா தம்பி.. அந்த கடை ஒரு இதுக்கு வர வரை அவ்வளவு கஷ்டப்பட்டா..

இந்த இருபத்தி ஆறு வயசுல அவ படாத கஷ்டம் இல்ல தம்பி.. கொஞ்சம் நிலைக்கு வந்த உடனே, பாங்க் லோன் போட்டு ஒரு பெரிய தொகையை வக்கீல் கிட்ட கொடுத்து, அவங்க அப்பாகிட்ட கொடுக்க சொல்லி சொல்லிட்டா.. கைல அவ சேர்த்து வச்ச கொஞ்ச பணத்தையும் அவ வழிச்சு கொடுத்துட்டா..” என்று சொல்லவும், இருவருமே அதிர்ந்து அவளைப் பார்த்தனர்.

“அக்கா.. அவங்க அப்பா அந்தக் காசை வாங்கிக்கிட்டாரா?” அர்ஜுன் திகைப்புடன் கேட்க, 

“தெரியல.. அவ கொடுத்துட்டு வந்துட்டா தம்பி.. அது திரும்பி வரல.. அதுவரை தெரியும்.. இப்போவும் அந்தப் பொண்ணு அப்படித் தான் உழைச்சிட்டு இருக்காத் தம்பி.. அத்தியாவசிய செலவைத் தவிர எந்த ஆடம்பரச் செலவையும் செய்யாம அவ குருவி சேர்க்கறது போல பணத்தை சேர்க்கறா. அவ கணக்கு வழக்கை நான் தான் பார்த்துக்கறேன்.. நான் இந்த வீட்டுக்கு வந்து மூணு வருஷத்துக்கும் மேல ஆகுது.. தற்கொலை பண்ணிக்கப் போன என்னை காப்பாத்தி கூட்டிட்டு வந்து, அவ என்னை பார்த்துக்கறா..” அவள் சொல்லி முடிப்பதற்குள், அதிர்ந்த அர்ஜுன்,   

“ஏன்க்கா இப்படி? அந்த அளவு உங்களுக்கு என்ன கஷ்டம்?” வலியுடன் கேட்க,

“அதை விடுங்க தம்பி.. அது நான் கிறுக்குத்தனமா ஒருத்தனை நம்பி கல்யாணம் பண்ணி ஏமாந்த கதை..” என்று கசப்புடன் சொன்னவள்,

“அவ தங்கமான பொண்ணு தம்பி.. அவ என்னை அவளோட கூட பொறந்தவ போல பார்த்துக்கறா..” எனவும், அர்ஜுன் ஒப்புதலாகத் தலையசைத்தான்.

“அது இல்ல தம்பி.. அவ அந்த மனசு அழுத்தம் தாங்காம அழுது, சில நாள் என் மடியைத் தேடுவா.. இல்ல சில நாள் அர்த்தமே இல்லாம கோபப்படுவா.. அப்போ ஆறின காயத்தை அவளே கீறி விட்டுப்பா.. அவ சின்ன வயசுல பட்ட காயம் அப்படி.. பாவம் அந்தப் பொண்ணு..” என்று சொல்லி விட்டு, தனது கண்களில் இருந்த கண்ணீரைத் துடைத்துக் கொள்ள,  

“அவளை யாரோ கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னான்னு.. அவன் யாரு?” வினய் இழுக்க, ராதா திகைப்புடன் அவனைப் பார்த்தாள்.

வினய் கண்களை மூடித் திறந்து அவளுக்கு தைரியம் சொல்ல, ஒரு பெருமூச்சுடன், “அவ காலேஜ் முடிக்கிற சமயத்துல, காலேஜ்ல இருந்து ஹாஸ்டல் போற வழியில பஸ்ஸ்டாப்ல ஒருத்தன் தினமும் பார்த்து அவக்கிட்ட ரொம்ப அக்கறையா, ஆசையா பேசி இருக்கான்.. அந்த அக்கறையை உண்மைன்னு நம்பி பேசும்போது, தன்னைப் பத்தி எல்லாம் சொல்லி இருக்கா.. அவளை பிடிச்சிருக்குன்னு அவனே சொல்லி, அவன் வீட்ல பேசிட்டு அவளை பொண்ணு கேட்டு கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டு போயிருக்கான்.. அநாதையா நின்ன பொண்ணு, அந்த அன்புல கொஞ்சம் தடுமாறிடுச்சு..

திரும்ப ஊருல இருந்து வந்தவன், ரொம்ப நாளா இவளைப் பார்க்கவும் வரல.. ஒண்ணு ரெண்டு தடவ பஸ்ஸ்டாப்ல பார்த்தவனும், இவளை கண்டுக்காத மாதிரி பஸ் ஏறிப் போயிட்டான் போல.. அவளும், அடுத்த தடவ பார்க்கும் போது பேச ட்ரை பண்ணி இருக்கா..

அப்போ அவன் அவனோட கல்யாண பத்திரிகை கொடுத்துட்டு, ‘எங்க வீட்ல உன்னைப் போல பொண்ணு எல்லாம் குடும்பத்துக்கு சரிப்படாதுன்னு சொல்லிட்டாங்க.. உங்க அம்மா போல நீயும் போயிட்டன்னா என் வாழ்க்கை என்ன ஆகும்ன்னு பயப்படறாங்க.. அவங்க பயமும் நியாயம் தானே’ன்னு சொல்லிட்டு, அவ ஷாக்ல நிக்கறது கூட கவனிக்காம போயிட்டான் போல.. அதுல இருந்தே அவளுக்கு கல்யாணத்து மேல எல்லாம் நம்பிக்கை இல்ல..” என்றவள், வேதனையுடன் இருந்த அர்ஜுனின் முகத்தைப் பார்த்து,

“உங்களை அவளுக்கு பிடிச்சிருக்கு, ஏதோ ஒரு வகையில பாதிப்பு இருக்குன்னு நினைச்சு இருந்தேன்.. உங்க மனசுல என்ன இருக்குன்னு இவ்வளவு நாளா தெளிவா தெரியல.. இப்போ புரிஞ்சிடுச்சு. ஆனா.. அவ மனசுல எந்த அளவு நீங்க இருக்கீங்க? நீங்க சொன்னா அவ உடனே ஒத்துப்பாளான்னு எல்லாம் எனக்கு தெளிவா சொல்லத் தெரியல தம்பி.. ஏன்னா அவ பட்ட காயம் அப்படி. நீங்க கொஞ்ச பொறுமையா தான் அவளை பேசி அவ வாயில இருந்து சம்மதம் வாங்கணும்..” என்று அவள் சொல்லவும், அர்ஜுன் அவளைப் பார்த்து இதமாக புன்னகைத்தான்.

“கண்டிப்பா நான் அவளை பத்திரமா பார்த்துக்கறேன் அக்கா.. நீங்க கவலைப்பட வேண்டாம்.. நான் சொன்னேனே அவ என் பொக்கிஷம்.. அந்தப் பொக்கிஷத்தை நான் பொத்திப் பாதுகாப்பேன்.” என்றவன்,

“சரி.. மணியாச்சு.. அவ குளிச்சு முடிச்சு இருப்பான்னு நினைக்கிறேன்.. நான் போய் அவளைப் பார்த்துட்டு வரேன்..” என்றவன், ராதா சிவாத்மிகாவிற்கு அனைத்தையும் எடுத்து வைக்க, அதை எடுத்துக் கொண்டு படியில் ஏற, வினய் அவனுடன் நடந்தான்.

Leave a Reply

error: Content is protected !!