எந்நாளும் தீரா காதலாக – 2
எந்நாளும் தீரா காதலாக – 2
💝2
உன்னைப் பிடித்திருக்கும்
காரணத்தை விட
எதற்கு என்னை
ஆட்கொண்டாய்
என விடைதேடி தீராமல்
இறுதித் தோல்வியாய்
காதலித்துத் தொலைகிறேன்.
அவள் யாரென்று
கேட்காதீர்கள்
வெறும் கனவு என்பதற்கும்
நிஜம் என்பதற்கும்
இடைப்பட்ட
எனக்கு மட்டுமேயான
இரகசியத்தோழி அவள்!!
என் கிறுக்கல்கள்
எல்லாவற்றுக்கும்
நீரூற்று அவள்
என் தேடல்களுக்கு
முற்றுப்புள்ளி அவள்!!
அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ஷூட்டிங் தங்கு தடையின்றி நடந்தது.. அதிக டேக்குகள் வாங்காமல் அனைவரும் செய்து முடிக்க, இயற்குனர் மகிழ்ந்து போனார்..
‘சாப்பிட்டு ஒரு மணி நேரம் அப்பறம் நாம ரெஸ்யூம் பண்ணிக்கலாம்..’ இயக்குனர் சொல்லிவிட்டுச் சொல்ல, தனது முகத்தைக் துடைத்துக் கொண்டே, கண்களால் சிவாத்மிகாவை தேடியவன், அவள் தென்படாமல் போகவும், ஹீரோயினிடம் பேச்சுக் கொடுக்கத் துவங்கினான்.
“இன்னைக்கு ஷூட் நல்லா போச்சு இல்ல.. லேட்டா ஸ்டார்ட் ஆனாலும் சரியா பண்ணிட்டோம்..” அர்ஜுன், அந்த ஹீரோயினிடம் பேச்சுக் கொடுக்க, எப்பொழுதும் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருக்கும் அர்ஜுன் தன்னிடம் பேசவும், அழகாக புன்னகைத்தவள்,
“செமையா போச்சு அர்ஜுன்.. நீங்க ரொம்ப சூப்பரா பண்ணினீங்க.. உங்க எக்ஸ்ப்ரெஷன் எல்லாம் செம சூப்பரா இருந்தது.. இந்த டிரஸ்ல ஹாண்ட்சமா இருக்கீங்க..” அவள் படபடவென்று சொல்லத் துவங்கவும், அர்ஜுன் பேச்சு போகும் திசையை உணர்ந்து, புருவத்தை ஏற்றி ஒரு புன்னகையுடன்,
“தேங்க்ஸ்.. நீங்களும் நல்லா பண்ணினீங்க. உங்க இந்த காஸ்டியூம் ரொம்ப நல்லா இருக்கு.. இந்த டிரஸ் பேர் என்ன?” மீண்டும் காஸ்ட்யூமிலேயே வந்து நின்றவனின் கேள்வியில்,
“இது லெஹங்கா தான்.. ஆனா.. அதையே அவ வேற மாதிரி டிசைன் பண்ணி தந்தா..” என்றவளைப் பார்த்து புன்னகைத்தவன், மீண்டும்,
“ஆமா.. உங்க டிசைனர் எங்க? அவங்க போயிட்டாங்களா? சாப்பிட கூட ஆளைக் காணும்.. அடுத்து காஸ்ட்யூம் சேஞ் இருக்கே..” அர்ஜுன் பேச்சுக் கொடுக்க,
“இல்ல.. அவ எப்படி கிளம்புவா? நான் விட மாட்டேனே.. அவ இங்க தான் எங்கயாவது இருப்பா.. எப்பவுமே அவ வீட்ல இருந்து வர சாப்பாட்டு தான் சாப்பிடுவா.. நானும் ரெண்டு மூணு தடவ கூப்பிட்டு பார்த்து இருக்கேன்.. ஆனா.. வர மாட்டா..” என்றவள், ஸ்டைலாக தோளைக் குலுக்க, அர்ஜுனுக்கு அவளது ரசம் சாதம் நியாபகம் வந்தது..
அவனது இதழ்கள் புன்னகையை தத்தெடுக்க, “இன்னைக்கு உங்க டிரஸ் எந்த கடையில வாங்கினது? இல்ல டிசைனரே ஸ்டிட்ச் பண்ணினாங்களா?” அவனது பேச்சு முழுவதும் சிவாத்மிகாவை அறிந்துக் கொள்வதிலேயே இருந்தது..
“இல்ல.. அது ஆத்மிகா டிசைன் பண்ணினது தான்.. அவங்க ‘எலிகன்ஸ் வித் ஸ்டைல்’ பொட்டிக்கோட கலக்க்ஷன் அது.. நல்லா டேஸ்ட் அந்த பொண்ணுக்கு.. எனக்கும் பார்த்ததும் ரொம்ப பிடிச்சுப் போச்சு..” என்றவள், கேரவன் வரவும்,
“என் கூட லஞ்ச்சுக்கு ஜாயின் பண்ணிக்கறீங்களா?” என்று நட்புடன் கேட்க, புன்னகையுடன் தலையசைத்தவன்,
“இல்லைங்க.. வினய் வெயிட் பண்ணிட்டு இருப்பான்.. நான் அவன் கூட சாப்பிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கறேன்..” என்றவன், தலையசைத்து விடைப்பெற்று, தனது கேரவனுக்குள் நுழைய, வினய் அவனை விசித்திரமாகப் பார்த்துக் கொண்டே, அவனுடன் உணவை உண்ணத் துவங்கினான்.
அவனது பார்வையை தவிர்த்தவன், வேகமாக உண்டு முடித்து, “நான் கொஞ்ச நேரம் தூங்கறேன்டா.. நீயும் தூங்கு.. நைட் எல்லாம் வீடு ஷிப்ட் பண்ணினது உனக்கும் டயர்ட்டா இருக்கும்.. ஷூட் ஸ்டார்ட் ஆகறதுக்கு கொஞ்சம் முன்னால எழுப்பச் சொல்லு.. ரொம்ப டயர்ட்டா இருக்கு.” என்றவன், படுத்ததும் உறங்கத் துவங்க, அங்கிருந்த அசிஸ்டெண்ட்டிடம் சொல்லிவிட்டு வந்த வினயும் உறங்கத் துவங்கினான்.
அர்ஜுனின் உறக்கம் சிறிது நேரத்திலேயே களைய, அருகில் இருந்த வினையைப் பார்த்தான். அவன் நன்கு உறங்கிக் கொண்டிருக்கவும், மெல்ல எழுந்து கேரவனை விட்டு வெளியில் வந்தவன், சிவாத்மிகாவைத் தேடி, நடைப்பயில்வதைப் போல நடக்கத் துவங்கினான்.
சிறிது தூரத்தில் ஒரு மரத்தின் அடியில் அமர்திருந்தவள், ஹாயாக ஆடிக் கொண்டு, ஏதோ பாடலை முணுமுணுத்துக் கொண்டு, மேலே எதையோ பார்த்து ரசித்துக் கொண்டிருக்க, அர்ஜுன் மேலே நிமிர்ந்துப் பார்த்தான்.
அவனது கண்ணுக்குத் அங்கு எதுவும் தெரியாமல் போகவும், ‘ஒருவேளை உட்கார்ந்து பார்த்தா தான் தெரியுமோ?’ என்று மனதினில் நினைத்துக் கொண்டவன், அவள் அருகில் இருந்த சிறிய இடத்தில் அமர்ந்துக் கொண்டு, அவள் பார்க்கும் திசையைப் பார்த்தான்.
யாரோ அருகில் அமர்கிறார்களே என்று கூட அவள் சிறிதும் தலையைத் திருப்பிப் பார்க்காமல், அவள் தனது உலகத்தில் லயித்து இருக்க, அர்ஜுனுக்கு அவளது செயல்கள் ஒவ்வொன்றும் சுவாரஸ்யத்தைக் கொடுத்தது.. மேலே அவள் ரசித்துக் கொண்டிருந்தது ஒரு பறவையை..
ஒரு சிறிய பறவை எதையோ மரக்கிளையில் அமர்ந்து கொத்திக் கொண்டிருக்க, ரசனையுடன் அவளைத் திரும்பிப் பார்த்தவன், அவளது கண்களின் ரசனையை ரசிக்கத் துவங்கினான். அவளது அழகிய மையிட்ட கண்கள் ரசனையில் ஒளிர, அவளது இதழ்கள் மெல்லிய புன்னகையை சிந்திக் கொண்டிருக்க, அர்ஜுனின் கண்கள் என்னும் குவியத்தின் வழியாக, மூளை என்னும் மெமரி கார்டில் அவளது முகத்தை பதிவு செய்யத் துவங்கியது.
முன்னே பின்னே ஆடிக் கொண்டு, ஏதோ பாடலை அவள் முணுமுணுத்துக் கொண்டிருக்க, காதை கூர்தீட்டிக் கொண்டு அவள் பாடும் பாட்டை கேட்டான். அவளது குரல் மெல்லிதாகக் கேட்டாலும், மிகவும் இனிமையானதாக இருக்க, அர்ஜுனுக்கு அது அடுத்த இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
திசையறியா பறவைகளாய்
நீ நான் நீள் வான்
வெளியிலே… மிதக்கிறோம்
சந்திக்காத கண்களில்
இன்பங்கள் செய்யப் போகிறேன்
சிந்திக்காது சிந்திடும்
கொண்டலாய் பெய்யப் போகிறேன்
‘வாவ்…’ என்று மனதினில் நினைத்தவன், அவளது பாடலைக் கேட்டு, இதழில் புன்னகையுடன் அங்கிருந்து நகர, அவனது உதடுகளும் அந்தப் பாடலை முணுமுணுக்கத் துவங்கியது.
போகும் நம் தூரங்கள்
நீளம் தான் கூடாதா?
இணையும் முனையம் இதயம்
என்று ஆனாலே
பயணம் முடியும் பயமும்
விட்டுப் போகாதோ
முடிவறியா
அடிவானமாய்
தனது பாக்கெட்டில் கையை நுழைத்துக் கொண்டு, பாடலை முணுமுணுத்துக் கொண்டே, தலையைக் கோதிக் கொண்டு, கீழே கிடந்த ஒரு பாட்டிலை, லேசாக எகிறி குதித்து காலால் தட்டிவிட்டு, தனக்குள் சிரித்துக் கொண்டே, தலையை இப்படியும் அப்படியும் ஆட்டி, தன்னை மறந்தபடி அவன் கேரவனுக்கு வர, கேரவனின் அருகில் வினய் நின்றுக் கொண்டு, அவனைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஏன் ஏன் நீ… நான்…
தினந்தினம்
தொடர்கிறோம்?
என்று பாடிக் கொண்டே அவன் துள்ளிக் குதித்து கேரவனுக்குள் ஏற, வினய் அவனை அதிசயப்பிறவி போல பார்த்துக் கொண்டிருந்தான்.
அதே பாடலை மீண்டும் மீண்டும் முணுமுணுத்துக் கொண்டு அவன், அடுத்த ஷாட்டிற்குத் தயாராகத் துவங்க, வினய் அவனுக்குத் தேவையானதை எடுத்து வைத்துக் கொண்டே அவனுக்கு பேச்சுக் கொடுக்கத் துவங்கினான்.
“அர்ஜுன் உனக்கு இன்னைக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி மந்திரிச்சு விட்ட கோழி போல இருக்க? நீயா பாடற.. ஆடற..” அவன் கேட்க, இதழில் புன்னகையுடன் உதட்டைப் பிதுக்கியவன், தனது மொபைலை எடுத்து எதையோ தீவிரமாக ஆராயத் துவங்கினான்.
அவனது விரல்கள் தன்னால் தட்டியது சிவாத்மிகாவின் அந்த பொட்டிக்கின் பெயரைத் தான். அதன் வெப்சைட்டிற்குச் சென்றவன், அதில் இருந்த டிசைன்களைப் பார்த்து விழிகளை விரித்தான்.
“டேய்.. அர்ஜுன் திரும்ப சொல்றேன்.. நீ சரியே இல்ல.. என்ன தான் நடந்தது? கேட்கறதுக்கு கூட பதில் சொல்லாம என்ன பண்ணிட்டு இருக்க?” என்று வினய் கேட்க, தனது போனை அவனிடம் காட்டியவன்,
“இது ஆத்மிகாவோட பொட்டிக்டா.. ஷி ஹாஸ் சம் மார்வலஸ் கலக்ஷன்ஸ்.. ஆனா.. ஒரு டிசைனரா அவங்களதுல ஒரு ஜென்ட்ஸ் டிசைன் கூட இல்லயே.. ஏன்?” குழப்பமாக அவன் கேட்கவும்,
“ஏன் நீ டிசைனர மாத்தப் போறியா? என்னோட பொழப்புல மண்ணை அள்ளிப் போட்டுடாதேடா.. ஏதோ உன்னை நம்பித் தான் பொழப்பு ஓடுது..” வினய் பதறவும், கூலாக உதட்டைப் பிதுக்கியவன்,
“எனக்கும் இப்படி எல்லாம் நல்ல பேன்சியா போடணும் போல ஆசையா இருக்கு.. இப்போ இருக்கற டிசைனர் கொஞ்சம் சரி இல்ல.. டேஸ்ட் அப்டேட் ஆகலை.. இப்போ கூட பாரு.. ஆர்டினரி பட்டு வேஷ்டி அண்ட் சட்டை.. அதுல ஏதாவது புதுசா பண்ணலாம்ல.. இதுவே நல்லா இருக்குன்னு சொல்லிட்டான். எனக்கு இது வேற மாதிரி இருந்தா நல்லா இருக்கும்..” என்று சொல்லவும், வினய் தலையில் அடித்துக் கொண்டான்.
“வை டா?” அர்ஜுன் புருவத்தை உயர்த்த,
“அது எல்லாம் கிட்ஸ் அண்ட் லேடீஸ்துடா.. சின்னப் பசங்க போடறது போல நீ போட முடியுமா?” அதே ராகத்தில் வினய்யும் சொல்லவும், அர்ஜுன் அதை கற்பனை செய்து பார்த்து சிரித்து வைக்க,
‘முத்திப்போச்சு” என்றவன், அவனை தயார் செய்யத் துவங்கினான்.
‘ஷாட் ரெடி’ என்று டைரெக்டர் அழைக்கவும், அர்ஜுன் சென்று அடுத்த ஷாட்டிற்கான சீனை கேட்டுக் கொண்டிருக்க, அப்பொழுது அங்கு வந்த ஹீரோயினைப் பார்த்தவனின் கண்கள் அவளது உடையிலேயே ஒட்டிக் கொண்டது.. அந்த ஹிரோயின் வந்த உடன் அனைவரின் பார்வையும் அவளிடம் திரும்பியது என்பது தான் உண்மை..
புடவை தான்.. ஆனால், அதையே புது விதமாகவும், அதே சமயம் மிகவும் கண்ணை உறுத்தாத அளவில் சிறிதே சிறிது கிளாமராக, மிகவும் அழகாக இருக்கவும், டைரக்டர் அர்ஜுனைத் திரும்பிப் பார்த்தார்..
அவன் அணிந்திருந்தது பட்டு வேஷ்டி சட்டை தான்.. ஆனாலும் ஹீரோயினின் புடவையின் அருகில் அது மிகவும் சாதாரணமாக இருப்பது போலத் தோன்ற, டைரெக்டர் சந்தேகத்தோடு கேமாரவின் கண்கள் வழியாகப் பார்த்தார். ஏதோ பேசிக் கொண்டே கேமராமேனும், காமெரா கண் கொண்டு பார்த்து டைரக்டரிடம் எதுவோ சொல்லவும், நேராக அர்ஜுனிடம் வந்தவர்,
“அர்ஜுன் சார்.. வினய் சார்.. இதைத் தவிர வேற பட்டு வேஷ்டி சட்டையை நீங்க டிசைன் பண்ணி இருக்கீங்களா? இன்னும் கொஞ்சம் கிராண்ட்டா” என்று கேட்கவும், அர்ஜுன் குழப்பமாகப் பார்த்து,
“ஏன் என்னாச்சு சார்? ஏதாவது ப்ராப்லமா?” என்று கேட்க,
“இல்ல அர்ஜுன்.. ஹீரோயின் இந்த சாரி காட்டித் தான் ஓகே பண்ணினாங்க.. தனித் தனியா பார்க்கும்போது ரெண்டுமே ஓகே வா இருந்தது.. ஆனா.. இப்போ கேமரால அவங்க கட்டி இருக்கிற விதமும், டிசைனும் ரொம்ப அழகா இருக்கு.. உங்களது சாதாரணம் போல இருக்கு.. அது தான்.. வேற ஷர்ட் இந்த கலர்ல இருந்தா நல்லா இருக்கும்.. ப்ரேம் இன்னும் சூப்பரா இருக்கும்” தயங்கித் தயங்கி அவர் ஒரு மாதிரி தனக்குத் தேவையானதை சொல்லி முடிக்க, அர்ஜுனின் பார்வை வினயை கேலியுடன் தழுவியது..
“நல்ல வாய்..” என்று அவன் வாயசைக்க, அர்ஜுனின் பார்வை சிவாத்மிகாவின் மீது விழுந்தது. அவளோ அங்கு நடந்துக் கொண்டிருக்கும் சம்பவத்திற்கும் தனக்கு சம்பந்தமில்லை என்பது போல நின்றுக் கொண்டிருக்க, அர்ஜுன் அவர்கள் அருகில் சென்றான்.
ஹீரோயினின் அருகே சென்று நின்றவன், புகைப்படம் எடுக்கச் சொல்லி அந்த ப்ரேமைப் பார்க்க, அவர் சொல்வது போலவே அவனது உடை சற்று மங்களாக இருப்பது போல இருக்கவும், வினயை கேள்வியாகப் பார்த்தான்.
“இப்போ வந்து சொன்னா நான் என்ன செய்யறது? இதை காட்டி நான் உங்க கிட்ட அப்ரூவல் வாங்கி தானே ரெடி பண்ணினேன்.. இப்போ போய் ரெடி செய்துட்டு வரவும் டைம் இல்லையே..” வினயின் பதிலில், அர்ஜுன் சிவாத்மிகாவைப் பார்த்தான்.
“சார்.. இப்போ நமக்கு டைம் இல்ல.. சோ.. அவங்க டிசைனரால ஹெல்ப் பண்ண முடியுமா கேளுங்க.. டு மாட்ச் வித் தி காஸ்டியூம்..” அர்ஜுன் கேட்கவும்,
“குட் ஐடியா..” என்ற டைரக்டர் நேராக சிவாத்மிகாவின் அருகில் சென்று நின்றார்.
கதாநாயகியிடம் விஷயத்தைச் சொன்னவர், சிவாத்மிகாவின் உதவியைக் கேட்க, வினய் அவள் ஏதாவது ஐடியா சொல்வாளோ என்று அவள் அருகில் சென்று நிற்க, சிவாத்மிகாவோ அவர் கேட்டதும், அவரைப் பார்த்தவள் என்ன பதில் சொல்வதென்று பேந்த விழித்தாள்.
“என்ன ஆத்மிகா.. இது நல்ல சான்ஸ்.. உனக்கு ஆஃபர் தானா வருது பாரு.. ஒத்துக்கோ.. ஏதாவது செய்..” அந்த ஹீரோயின் ஊக்கவும், மிரண்ட விழிகளுடன் டைரக்டரை நிமிர்ந்துப் பார்த்தவள்,
“எனக்கு ஜென்ட்ஸ்க்கு வர்க் பண்ணி பழக்கமில்லையே சார்..” என்று திணற,
“என்னம்மா நீ? பேஷன் இண்டஸ்ட்ரில இருக்க.. எப்படியும் நீ படிக்கும் போது ஜென்ட்ஸ் மாடல் எல்லாம் நீ ஹான்டில் பண்ணாமையா இருப்ப? நானும் அது தானேம்மா படிச்சு இருக்கேன்.. இல்லைன்னு மட்டும் சொல்லாதே..” என்று அவளை சந்தேகமாகப் பார்க்க, சிவாத்மிகா, அர்ஜுனை நோக்கி பார்வையை உயர்த்தினாள்.
“அப்படி இல்ல.. அப்போ அது மார்க்.. அப்பறம்..” என்று அவள் இழுக்க,
“இப்போவும் அப்படியே நினைச்சிக்கிட்டு ஏதாவது பண்ண முடியுமா?” என்று அவன் கேட்கவும், அதற்கு மேல் தயங்குவது சரி ஆகாது என்று நினைத்தவள்,
“ஒரு ரெண்டு நிமிஷம் தாங்க..” என்றபடி, அங்கிருந்த சேரில் அமர்ந்தவள், அர்ஜுனைப் பார்த்தாள்.
அவளது பார்வைத் தன் மேல் இருப்பதாக அவன் நினைத்துக் கொண்டிருக்க, அவளது கவனம் அந்த வேஷ்டி சட்டையை எப்படி மாற்றுவது என்று மனதினில் ஓட்டிப் பார்க்கத் துவங்கியது..
அவள் கேட்ட இரண்டே நிமிடத்தில், எழுந்துக் கொண்டவள், “ஒரு அஞ்சு நிமிஷம் வரேன்..” என்றபடி தனது காருக்குச் சென்றவள், சில பொருட்களுடன் வந்து சேர்ந்தாள்.
வினயிடம் வந்தவள், “அண்ணா.. நான் சொல்ற டிசைன் அதுல சரியா வருமா பாருங்க..” என்றவள், தனது நோட்டில், அந்த பட்டு வேஷ்டியின் கரையிலும், சட்டையின் கரையிலும், அந்த ஹீரோயினின் புடவைக் கலரில் கரை வருவது போல டிசைன் வரைந்துக் காட்ட, அர்ஜுன் வினயின் முகத்தை ஆவலாகப் பார்க்க, வினய் அவளை யோசனையுடன் பார்த்தான்..
“நல்லா தான் இருக்கு.. துண்டு போல ஏதாவது செய்யலாமா?” வினயின் பதிலில், தனத தாடை மீது விரலை வைத்து அவள் யோசிக்க, அர்ஜுன் அந்த யோசனை முகத்தை கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
“போடலாம்.. பட் ரொம்ப பட்டிக்காடு போல இருக்கும். எலகன்ட்டா இருக்காது.. வேணா இப்படி செய்யலாம்..” என்று கழுத்தைச் சுற்றி துப்பட்டா போல போட்டுக் காட்ட, வினய் யோசனையுடன் அவளைப் பார்க்க, அவசரமாக எழுந்து கொண்டவள், தனது கையில் இருந்த துணியை எடுத்துக் கொண்டு அர்ஜுனின் அருகில் சென்றாள்.
“எக்க்யூஸ் மீ சார்..” என்றபடி, அவனது தோளில் அந்தத் துண்டைப் போட்டு அவனை தள்ளி நின்றுப் பார்த்தவள், முகத்தைச் சுருக்கி மண்டையை அசைத்தாள்.
“இல்ல.. வேண்டாம்.. இப்படியே இருந்தா நல்லா இருக்கும்…” முகத்தை சுருக்கி அவள் சொல்லவும், அவளது முகத்தையே ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுனைப் பார்த்துவிட்டு,
‘ஏற்கனவே இவன் இன்னைக்கு சரி இல்ல.. இவ வேற அவன் பக்கம் போய் போய் வரா.. அவன் என்னவோ தேவதையைப் பார்த்தா போல அவளையே ஈஈன்னு வச்சக் கண்ணு வாங்காம பார்த்துட்டு இருக்கான்..’ வினய் மனதினில் நினைத்துக் கொண்டு,
“அதெல்லாம் சரி.. நீங்க சொல்றதும் சரி தான்.. இப்போ உங்ககிட்ட அந்த பார்டர் இருக்கா என்ன? ரெடி பண்ண எவ்வளவு நேரம் ஆகும்?” வினய் கேட்கவும்,
“இருக்கு.. நான் சாரிக்கு ஏதாவது தேவைப்பட்டா இருக்கட்டும்ன்னு கார்ல வச்சிருந்தேன்.. எனக்கு ஒரு அரை மணி நேரம் போதும்.. நீங்க இதே போல இந்த துணியை யூஸ் பண்ணிக்கோங்க..” என்றவளைப் பார்த்த வினய்,
“அப்போ நீங்களே செஞ்சிடுங்க..” என்று சொல்லவும், சிவாத்மிகா விழிக்கத் துவங்க, டைரெக்டர் அவள் அருகில் வந்தார்.
“ஆத்மிகா.. நிஜமாவே உங்க மாடல் ப்ரேம்ல ரொம்ப அழகா இருக்கும்மா.. அது இன்னும் இந்த ஆல்பம்க்கு ப்ளஸ் ஆகும். ப்ளீஸ் சீக்கிரம் கொஞ்சம் முடிச்சுக் கொடுங்க..” என்று சொல்லவும், அவள் கதாநாயகியைப் பார்க்க, அவள் சிரித்துக் கொண்டே,
“சீக்கிரம் முடிச்சிட்டு வா..” எனவும், அவள் எதுவும் பேசாமல் வினயிடம் கேட்க தயங்கியபடி நிற்க,
அவளது தயக்கம் புரிந்தப்படி, “கேரவனுக்கு வாம்மா..” என்ற வினய்,
நக்கலாக சிரித்துக் கொண்டே, “அர்ஜுன் சார். நீங்க கொஞ்சம் டிரஸ் மாத்திட்டு கொடுங்க.. அவங்க செஞ்சு கொடுத்திடுவாங்க.. ரொம்ப நல்லா இருக்கும்.. ப்ரேம் செம சூப்பரா இருக்கும்..” என்று சொல்லவும், நேரத்தைக் கடத்தாமல் அர்ஜுன் தனது கேரவனுக்குச் சென்று உடை மாற்றிவிட்டு வினயை அழைக்க, உள்ளே சென்றவன் அர்ஜுனை கேலியாகப் பார்த்தான்.
“உனக்கு எங்கயோ மச்சம் இருக்கு மச்சான்.. பாரேன்.. இப்போ தான் கொஞ்ச நேரம் முன்னால சொல்லிட்டு இருந்த.. இப்போ அதே தானா நடக்குது..” என்று கேலியாக சொல்ல, அர்ஜுனின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் எறிவது போல இருக்கவும், வினய் அவனைப் பார்த்து கேலியாக சிரித்துக் கொண்டான்.
“சரி.. சரி.. சீக்கிரம் அவங்களை வரச் சொல்லு..” அர்ஜுனின் பதிலில், தலையில் அடித்துக் கொண்டவன், சிவாத்மிகாவை உள்ளே அழைத்து, அவளிடம் சட்டையைக் கொடுக்க, அந்த துணியை வேஷ்டியின் மேல் வைத்துக் காட்டியவள், வினயைப் பார்க்க,
“வாவ் நைஸ்.. கோ அஹெட்..” என்று அர்ஜுன் குரல் கொடுக்கவும்,
“அவங்க என்னைய கேட்கறாங்க..” என்று அர்ஜுனிடம் பல்லைக் கடித்தவன்,
“அதான் ஹீரோவே சொல்லிட்டாரே.. செய்ங்க.. நல்லா இருக்கு..” வினய் சொல்லவும், வேகமாக வேலையைத் துவங்கினாள்.
மிகவும் நேர்த்தியாக அதே சமயம் வேகமாக அவள் தையல் வேலை செய்யும் பாங்கை வினய் பார்த்துக் கொண்டிருக்க, அர்ஜுனோ அவளது கண்கள் மேலும் கீழும் அசைவதிலும், அவளது நாக்கு நீண்டு அடிக்கடி அவளது இதழ்களை ஈரப்படுத்துவதையும் ரசித்துக் கொண்டிருந்தான்.
வினய் அர்ஜுனைப் பார்க்க, அவனோ சிவாத்மிகாவை ரசித்துக் கொண்டிருக்க, “ஹையோ.. இன்னைக்கு அம்மாகிட்ட சொல்லி கண்டிப்பா இவனுக்கு வேப்பிலை அடிக்கணும்.. பையனுக்கு என்னவோ ஆகிப் போச்சு..” என்று நினைத்துக் கொண்டிருக்க, அவள் வேகமாக வேலையே முடித்தாள்.
அவள் சொன்ன நேரத்திற்கு முன்பாகவே, வேலையை முடித்தவள், “அண்ணா.. ரெடி.. சரியா இருக்காப் பாருங்க..” என்று குரல் கொடுத்து, அவனது கையில் கொடுக்கவும், அதைப் பார்த்த வினய் அசந்து தான் போனான்.
“நிஜமாவே சூப்பரா இருக்கும்மா.. ரொம்ப தேங்க்ஸ்.. எனக்கு கொஞ்ச நேரம் என்ன செய்யறதுன்னே மூளை வேலை செய்யல..” வினய் அவளைப் பாராட்டிக் கொண்டே அர்ஜுனைப் பார்க்க, அவனோ எந்த பதிலும் சொல்லாமல், கன்னத்தில் கைவைத்துக் கொண்டு வினயைப் பார்க்க, சிவாத்மிகா தனது பொருட்களை எடுத்து வைக்கத் துவங்கினாள்.
“பரவால்லண்ணா.. இன்னைக்கு என்னால ஷூட் லேட் ஆகிட்டே இருக்குள்ள.. ஐம் வெரி சாரி.. என்னால முடிஞ்ச அளவு இதைச் சீக்கிரம் செஞ்சிட்டேன்.. சாரிண்ணா உங்களுக்கும் டென்ஷன்..” என்றவள், தனது பொருட்களுடன் கேரவனை விட்டு கீழே இறங்க, அர்ஜுனுக்கு அப்பொழுது தான் ஒன்று உரைத்தது..
அவளது பார்வை இதுவரை இருவரின் முகத்திலும் ஒரு சில நொடிகளுக்கு மேல் நிலைக்காதது தான்.. அவள் வினய்யை அண்ணா என்று கூப்பிட்டாள் தான்.. ஆனால் அவளது பார்வை அவனது முகத்தில் எத்தனை தரம் பதிந்திருக்கும் என்பது விரல் விட்டு எண்ணக் கூடிய ஒன்று தான்..
அதை விட, அர்ஜுன் என்ற ஒருவனை அவள் திரும்பிக் கூட பார்த்தாள் இல்லை. அவளிடம் பேசத் துடித்த நாவையும், வேலை நேரம் கருதி அடக்கிக் கொண்டவன், அவளை வேடிக்கை மட்டுமே பார்த்தான்.
சிவாத்மிகா வெளியில் காத்திருக்கவும், அர்ஜுன் உடையை மாற்றிக் கொண்டு கண்ணாடியில் பார்க்க, அந்த சாதாரண பட்டு வேஷ்டியும், மிகவும் ஆடம்பரமாக ஜொலித்தது.. ‘வாவ்..’ என்று கூறிக் கொண்டே தன்னை கண்ணாடியில் பார்த்துக் கொண்டவன், வினயை உள்ளே அழைக்க, வினய் அர்ஜுனைப் பார்த்து கண்களை விரித்தான்.
“செமையா இருக்குடா அர்ஜுன்.. சிம்ப்ளி வாவ்.. யு லுக் ஸ்டன்னிங்..” அவன் சொல்லவும், கண்ணடித்துச் சிரித்த அர்ஜுன்,
“சந்திக்காத கண்களில் இன்பங்கள் செய்யப்போகிறேன்..” என்று பாடிக் கொண்டே, வினயின் கன்னத்தைத் தட்டிவிட்டு, “ஆத்மிகா..” என்று அழைக்க, அவனது குரலில் திடுக்கிட்டுத் திரும்பியவள், அவன் கையசைத்து உள்ளே அழைக்கவும், தயங்கியபடி உள்ளே ஏறினாள். உள்ளே சென்றவள், அங்கு கம்பீரமாக முகம் நிறைந்த புன்னகையை பூசிக் கொண்டு நின்றிருந்தவனின் உடையைப் பார்த்தாள்.
அவளது விழிகளின் அசைவை ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுன், அவள், “பெர்ஃபக்ட்.. ஹ்ம்ம்.. இந்தக் கையில காப்பு போட்டா இந்த டிரஸ்க்கு நல்லா இருக்கும்.. இருந்தா போட்டுக்கோங்க..” என்றபடி, அவனை நெருங்கி, அவனது சட்டையில் ஒட்டி இருந்த ஒரு நூலை தனது விரல் நகத்தால் கத்தறிக்க, அவளது முகத்தை அவ்வளவு அருகில் பார்த்த அர்ஜுனின் இதழ்கள் புன்னகையில் மேலும் விரிந்தது.
‘இவன் என்னடா டூத்பேஸ்ட் விளம்பரத்துக்கு நிக்கற மாதிரி இளிச்சிக்கிட்டு நிக்கறானே..’ என்று வினய் மனதினில் சலித்துக் கொண்டிருக்க, அதே நேரம், அர்ஜுனின் பார்வை தனக்கு மிக அருகில் தெரிந்த அவளது முகத்தினில் ஆசையுடன் வருடியது..
அழகான சின்னஞ்சிறு முகத்தில், மையிட்டு ஓவியமாய் இருந்த திராட்சைக் கண்களும், அதை பாதுகாக்கும் குடைப் போன்ற இமைகளும், கூரான நாசியும், அதற்கு கீழே மாதுளம் சுளை நிறத்தில் இருந்த அழகிய அதரங்களும், சிறிதே சிறிது உப்பிய ஆப்பிள் கன்னங்கள் என்று அவனது கண்கள் அவளது முகத்தை அங்குலம் அங்குலமாக வளம் வந்துக் கொண்டிருந்தது.
லேசாக சுருள் சுருளாக இருந்த முடியை அடக்கி அவள் தூக்கி குதிரை வால் கொண்டையிட்டிருந்த அழகும்.. காதில் பெரிதாக தொங்கிக் கொண்டிருந்த முத்துக்களால் ஆன தோடும்.. ஆடம்பரம் இல்லாத சாதாரணமான சுடிதாராக இருந்தாலும், அதன் நேர்த்தியும் கண்ணியமும் அவனைக் கவர்ந்தது..
எல்லாவற்றிற்கும் மேலாக தனது மார்பின் அளவே இருந்த அந்த சின்னஞ்சிறு உருவம், காலையில் இருந்து, தன் மனதை ஆட்டிப் படைப்பதை எண்ணி அவன் புன்னகைத்துக் கொண்டிருக்க, அவனது நிலையைக் கண்ட வினய், ‘மச்சான் ஒரே நாள்ல இப்படி விழுந்துட்டியே மச்சான்.. எதுக்கும் சாயாத உன்னையே சாச்சுப்புட்டாளே மச்சான்.’ என்று தனக்குள் சிரித்துக் கொண்டான்.
அவனது சட்டையில் இருந்த அந்த நூலை எடுத்ததும், ஏதோ தோன்ற கண்களை மட்டும் உயர்த்திப் பார்த்தவளின் விழிகளில், புன்சிரிப்புடன் நின்றுக் கொண்டிருந்தவனின் முகம் விழுந்தது.
அவனது புன்னகையில் இருந்த ஏதோ ஒன்றில், தன்னை மறந்து நின்ற ஓரிரு நொடிகளுக்குப் பிறகு, கண்களைச் சிமிட்டி சுதாரித்தவள், அவனை விட்டு நகர்ந்து, “டன்.. தேங்க் யூ சோ மச் ஃபார் ட்ரஸ்டிங்..” என்றபடி கேரவனை விட்டு இறங்க, வினய் குழப்பத்துடன் நின்றான்.
அர்ஜுன் அந்த சட்டையை வருடியபடி, அவள் சொன்னது போல தன்னிடம் இருந்த ஒரு காப்பை எடுத்து போட்டுக் கொண்டே, ஷூட்டிங் நடக்கும் இடத்திற்குச் செல்ல, டைரக்டர் அவனைப் பார்த்து சூப்பர் என்பது போல கையசைத்துவிட்டு, ஷூட்டிங்கைத் தொடர, அர்ஜுனின் கண்கள் சிவாத்மிகாவைத் தேடியது..
“என்ன இன்னைக்கு ஒரே சைடிங் மோட்ல இருக்க?” ஷூட்டிங் கேப்பில் கிடைத்த சிறிய இடைவேளையில் வினய் அவனிடம் கேட்க,
“என்ன மாயமோ தெரியல.. என்ன மந்திரமோ தெரியல.. எனக்கு அவளைப் பார்த்த உடனே மனசு தானா குளுகுளுன்னு ஆகிடுது.. அப்படியே காத்துல பறக்கற ஃபீல்.. அப்படியே அவ கூட தனியா ஒரு உலகத்துல போகணும்னு தோணுது..” அவன் சொல்லவும், ‘அர்ஜுன்..’ என்று வினய் திகைக்க, அர்ஜுன் அவனது தோளைத் தட்டிவிட்டு, படப்பிடிப்பைத் தொடர்ந்தான்.
அடுத்த இடைவேளை கிடைத்த நேரத்தில் அவனது கண்கள் மீண்டும் அவளை நோக்கித் திரும்ப, கையில் ஒரு புத்தகத்துடன் தனது உலகத்தில் லயித்திருந்தவளைப் பார்த்தவனுக்கு அவள் மிகவும் சுவாரஸ்யமாகத் தோன்றினாள். அந்த சின்னஞ்சிறு உருவத்தில் பல சுவாரசியங்கள் புதைந்திருப்பது போல அர்ஜுனுக்குத் தோன்றியது.
அன்றைய படப்பிடிப்பு ஒரு வழியாக ஒன்பது மணிக்கு பேக்கப் ஆக, கதாநாயகியுடன் அவளது அறைக்குச் சென்றவள், அவளது உடையை அழகாக எடுத்து மடித்து வைத்துவிட்டு, “நாளைக்கு காலைல எத்தனை மணிக்கு வரணும் மேடம்? என்ன டிரஸ்? இது தானே?” என்று அவளது மொபைலில் இருந்த புகைப்படத்தைக் காட்டிக் கேட்கவும்,
“ஆமா ஆத்மிகா.. இதே தான்.. ஒன்பது மணிக்கு வரணும்.. நீயே வந்திடு ப்ளீஸ்..” என்றவளிடம்,
“சரி.. மேடம்.. நானே வரேன்..” என்று தலையசைத்து விடைப்பெற்றவள், காலையில் வருவதாகக் கூறி, தனது காரில் ஏறியதும், கையை மடித்து நெட்டி முறித்து, வாயில் ஒரு சாக்லேட்டை எடுத்து போட்டுக் கொண்டவள், பாடலை இயக்கினாள்.
“ஹ்ம்ம்.. இன்னைக்கு ரொம்ப டயர்டா இருக்கு.. போய் தூங்கனும்..” தனது வீட்டை நோக்கிப் பயணமாக, அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்த வினய், அர்ஜுனிடம் தனது செல்லைக் காட்டினான்.
“அந்த பட்டு வேஷ்ட்யில நீ அழகா தாண்டா இருந்த.. ஆனா.. அந்த எக்ஸ்ட்ரா பிட்டிங் எல்லாம் செய்யவும்.. யு லுக் பெண்டாபுலஸ் மேன்.. ரொம்ப அழகா இருந்த.. இங்கப் பாரு.. அம்மாகிட்ட காட்டினா அம்மா அப்படியே உருகிடுவாங்க” என்று காட்டவும், தன்னையே இன்று மிகவும் பிடித்தது போல இருந்தது அர்ஜுனுக்கு..
அவனது செல்லில் இருந்து தனது செல்லுக்கு அனைத்து போட்டோக்களையும் மாற்றிக் கொண்டவன், “இந்தப் பொண்ணு பிழைக்கிறது கஷ்டம் அர்ஜுன்..” காரில் செல்லும்பொழுது திடீரென்று வினய் சொல்லவும்,
“ஏண்டா? நல்லா வர்க் பண்றா.. நல்ல ஸ்மார்ட்டா இருக்கா.. என்ன உனக்கு தொழில் போட்டி பொறாமைல சொல்றியா?” அர்ஜுன் அவளை பாராட்டி விட்டு, அவனிடம் கேட்க, வினய் அவனை முறைத்தான்.
“ஏண்டா.. உனக்கு இன்னைக்கு என்னைப் பார்த்தா எப்படி இருக்கு? இல்ல கேட்கறேன்.. போட்டிங்கற.. பொறாமைங்கற.. நக்கலா சிரிக்கிற” என்று கேட்டவன், அர்ஜுன் அவனது தோளைத் தட்டிச் சிரிக்கவும், தனது நண்பனின் முகத்தைப் பார்த்துச் சிரித்தவன்,
“அது அப்படி இல்ல அர்ஜுன்.. நான் சொல்ல வரது ஒரு பிசினஸ்மேனா.. இதே வேற டிசைனரா இருந்தா.. அடுத்து ஆர்டர்க்கு கேட்டு இருப்பாங்க.. இல்ல அட்லீஸ்ட் இதுக்கு பில் அனுப்பறேன்னு சொல்லி இருப்பாங்க.. இந்தப் பொண்ணு எதுவுமே இல்லாம நமக்கு தேங்க்ஸ் சொல்லிட்டு கிளம்பிப் போயிட்டா… அட்லீஸ்ட் கொஞ்சம் கூட தயங்கி நிக்காம அவ பாட்டுக்கு கிளம்பிப் போயிட்டால்ல.. அது சொல்றேன்..” எனவும், அர்ஜுன் ஒப்புதலாக தலையசைத்தான்.
“அதோட அவ நம்ம முகத்தை எல்லாம் நிமிர்ந்து அதிகமா பார்க்கல. அதை கவனிச்சியா நீ? அவளோட பார்வை பூரா கவனமும் டிரஸ்ல மட்டும் தான் இருந்தது. என் கிட்ட வந்து டிரஸ் பத்தி சொன்னாலும்.. அவ என்னை ரொம்ப முகத்தைப் பார்த்து பேசல.. பார்த்தாலான்னே ஐ டவுட்.. ரொம்ப சின்சியர்.. ஸ்மார்ட் வர்கர்.. நல்ல பியூச்சர் இருக்கு” அர்ஜுன் சொல்ல,
“ஆமா. நானும் கவனிச்சேன்.. பட் நல்ல டேலேன்ட்டா.. எதுக்கும் ஹீரோயின்க்கு தேவைப்படும்ன்னு எடுத்து வந்த துணியை வச்சு, அவ்வளவு சீக்கிரம் உன் டிரஸ் சரி செஞ்சது எல்லாம் செம ஸ்மார்ட் வர்க்.. அதோட ஹீரோயின் கட்டி இருந்த சாரீ அந்த சாங்க்கு ஏத்தா போல கொஞ்சம் க்ளாமரா இருந்தாலும், அது கண்ணு உறுத்தலை.. அந்த சாரீ கட்டி இருந்த விதத்துல டிகினிட்டி இருந்தது.. நல்ல பியூச்சர் இருக்கு அவளுக்கு.. ஐ அட்மையர்..” வினய் பாராட்டிக்கொண்டு வரவும்,
“போதும் உன் பாசமலரைப் புகழ்ந்தது..” என்று அர்ஜுன் கிண்டல் செய்யவும்,
“பாசமலரா?” வினய் வாய்பிளக்க,
“பின்ன அண்ணா.. அண்ணான்னு இல்ல உன்னைக் கூப்பிட்டா..” என்று அர்ஜுன் வம்பு வளர்க்க,
“லாஸ்ட்ல.. வரேன் அண்ணான்னு சொன்னது போல என் காதுல கேட்டுச்சே.. உன்கிட்ட தான் சொல்லிட்டு போனாளோ?” என்று வினய் பதிலுக்கு அவனைக் கிண்டல் செய்ய, இருவரும் ஒருவர் காலை ஒருவர் வாரிக் கொண்டே, நேர்காணல் நடக்கவிருக்கும் சானல் ஸ்டுடியோவிற்குச் சென்றனர்.. அங்கு அர்ஜுன் நேர்காணலை கொடுத்து விட்டு, நடுயிரவைத் தாண்டியே வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
அன்றய நாளின் சோர்வில் வீட்டிற்கு வந்த சிவாத்மிகா, அறைக்குச் சென்றதும், குளித்துவிட்டு வந்தவளுக்கு, பெட்டைப் பார்த்ததும் உடல் சோர்வுக்கு கெஞ்ச, ‘கொஞ்ச நேரம் படுத்துக்கலாம்’ என்று மனதினில் நினைத்தவள், படுத்த சில நொடிகளிலேயே உறங்கி விட, சுவர் ஏறிக் குதித்த அர்ஜுன், மெல்ல அவளது அறைக்குள் வந்து அவள் அருகே அமர்ந்து அவளது முகத்தின் அருகே குனிந்தான்.