எந்நாளும் தீரா காதலாக – 4
எந்நாளும் தீரா காதலாக – 4
4 💝💝
அர்ஜுனின் பார்வை நொடிக்கொரு தரம் வாசலில் படிந்து மீண்டது.. தனது வாட்சைப் பார்த்தவன், மீண்டும் வாசலைப் பார்க்க, வினய் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு அவனைப் பார்த்துக் கொண்டிருந்தான். நெடுநேரமாக அதுவே தொடர்ந்துக் கொண்டிருக்க, வினய் அவன் பக்கம் மெல்ல சாய்ந்தான்.
“என்ன சார்.. ரொம்ப வாசலையே பார்த்துட்டு இருக்கீங்க? யார அப்படி வழி மேல விழி வச்சு பார்த்துட்டு இருக்கீங்க?” என்று கேட்க,
“யாரையும் இல்லையே.. சும்மா தான் பார்த்தேன்.. ஏன் நான் வாசலைப் பார்க்கக் கூடாதா?” புருவத்தை உயர்த்தி அர்ஜுன் கேட்க,
“பாரேன்.. நல்லா பாரு.. யாரு வேண்டாம்ன்னா.. வேணும்மா வாசல்ல கூட போய் உட்கார்ந்துட்டு வாசலோட அழகைப் பாரேன்.. நாம அதுக்கு தானே அழகா தோட்டம் செஞ்சு வச்சிருக்கோம்..” என்ற வினய்யின் கண்களும் வாசலைத் தான் நோக்கியது..
இரவு சிவாத்மிகாவின் கதையைக் கேட்டப் பிறகு அவனுக்கும் அதே யோசனை தான்.. மனதெல்லாம் பாரம் ஏறியது போல இருந்தது.. அந்த சிறு வயதில் என்ன ஏதென்று புரியாத வயதில், லீவிற்கு மற்றவர்கள் வீட்டிற்குச் செல்லும் பொழுது, தான் மட்டும் ஏன் இங்கேயே இருக்கிறோம் என்று கூடப் புரியாமல், அந்த நாட்களில் ஹாஸ்டலில் இருப்பது எவ்வளவு கொடுமையான விஷயம்?
தனது அன்னையை, அதுவும் கல்லூரியில் சேர்ந்த வயதில், ஒரு நோய்க்கு பறிகொடுத்து தவித்துக் கொண்டிருந்தது இப்பொழுதும் அவனது நினைவில் நன்றாக நின்றது..
அர்ஜுனின் வீட்டில் தான் அவனது தாய் வேலை செய்துக் கொண்டிருந்தார்.. சொந்தம் என்று பெரிதாக சொல்லிக் கொள்ள ஆளில்லாத இருவரும் அதே வீட்டில் தான் தங்கி இருந்தனர்.. நிர்மலா என்றுமே அவனை ஒரு வேலை செய்பவரின் பிள்ளை என்ற பாகுபாடு பார்த்தது கிடையாது. பண்டிகை தினங்களுக்கும், பல சமயம் அர்ஜுனுக்கு துணி எடுக்கும் பொழுது எந்த பாகுபாடும் இன்றி வினய்க்கும் உடை எடுப்பது நிர்மலாவுக்கு வழக்கம்.. அர்ஜுன் படித்த அதே பள்ளியில் தான் வினயும் படித்தான். வினய் அர்ஜுனை விட மூன்று வயது மூத்தவன்.. அவன் அர்ஜுனுக்கு உற்ற தோழனாக ஒரு அண்ணனாக மாறிப் போக, அர்ஜுனுக்கும் வினய்க்கும் நெருக்கம் ஏற்பட்டது.
அதே போல அர்ஜுனுக்கு பிடித்த விஸ்காம்மை படிக்க வைத்த, அர்ஜுனின் தந்தை.. வினய்க்கு பிடித்த பேஷன் டிசைனிங் படிக்க வைத்தார்.. தனது துறையிலேயே அவனுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கி விடலாம் என்பது அவரது எண்ணமும்..
இப்படி கணவன் மனைவி இருவரும் வினய்யை அந்த வீட்டில் ஒரு பிள்ளையாகவே பார்க்க, அர்ஜுன் அவனை உடன் பிறந்தவன் போலவே பார்த்துக் கொண்டான்.. அவனுடன் வம்பு வளர்த்து, சண்டைப் பிடித்து, தனது மனதில் உள்ளதை பகிர்ந்துக் கொள்ள, அனைத்திற்கும் அர்ஜுன் தேடுவது வினயை மட்டும் தான்..
அப்படி கல்லூரி செல்லும் வயதில் தாயை இழந்த பொழுது, என்ன தான் மற்ற மூவரும் அவனை தாங்கிக் கொண்டாலும், தனது தாயின் அந்த இழப்பில் இருந்து மீளவே அவனுக்கு வெகுநாட்கள் பிடித்தது.. அப்படி இருக்க.. சிவாத்மிகாவின் நிலையை நினைத்து அவனுக்கு இன்னமும் மனமாறாமல் இருந்தது.. இருவரும் உயிரோடு இருந்தும், அவள் தனித்து நிற்பதை நினைத்து வினய் மனதினில் குமைந்தான்.
‘பிள்ளைய ஒழுங்கா பார்த்துக்க முடியலைன்னா இவங்க ஏன் பெத்துக்கறாங்க.. அந்த பொண்ணோட மனநிலை எப்படி இருக்கும்ன்னு அவங்க யோசிச்சாங்களா? அந்த பொண்ணு நல்லபடியா இருக்கு.. நல்ல முறையான வாழ்க்கை வாழுது.. இதே கேட்க ஆள் இல்லன்னு தப்பான வழிக்கு போற பொண்ணுங்க எத்தனை இருக்கு? நல்லவேளை அந்த வழியில போகாம.. நல்லபடியா இருக்காளே.. அதுவும் மன வைராக்கியத்தோட’ இப்படியாகத் தான் அவனது எண்ணம் இரவு முழுவதும் வளம் வந்தது.. காலையிலும் உறக்கம் வராமல் எழுந்து வந்தவன், நிர்மலா பூஜைக்கு தயாராகவும், அவருக்கு உதவத் துவங்கினான்..
இரவில் அவளது புலம்பலைக் கேட்டதில் இருந்து, வினயின் மனம் முழுவதும் சிவாத்மிகாவைச் சுற்றியே இருந்தது. ‘இரவு முழுவதும் அழுதிருப்பாளோ, முகம் வீங்கி இருக்குமோ?’ என்ற எண்ணம் வேறு எழ, ஏனோ அவளைப் பார்க்க மனம் தவித்தது..
‘அவளுக்கு யாரும் இல்லைன்னா என்ன? நான் அவளுக்கு அண்ணாவா இருக்கேன்..’ தெரிந்தோ தெரியாமலோ அவள் தன்னை முன்தினம் ‘அண்ணா..’ என்று அழைத்தது இப்பொழுது அவனது மனதில் அந்த எண்ணத்தை விதைத்தது.. அதை விட சிவாத்மிகாவின் இந்த நிமிர்வு அவனை வெகுவாக கவர, அவளை நினைத்து அவனது மனதில் பெருமையே எழுந்தது.
சிவாத்மிகாவும் ராதாவும் கிளம்பித் தயாராக, “அக்கா.. நிஜமா போயே ஆகணுமா? எனக்கு தயக்கமா இருக்கு.. அவங்க எனக்கு முன்னப் பின்ன பழக்கமே இல்லையே..” சிவாத்மிகா இழுக்க,
“நீ இப்படியே இருந்தா இப்படித் தனியா தான் இருப்ப.. அக்கம் பக்கம் பழகினா தான் பழக்கம் வரும்.. ஏதோ இத்தனை நாளா பக்கத்து வீடும் காலியா இருந்தது.. முன்ன இருந்தவங்களும் முகம் கொடுத்து பேச மாட்டாங்க.. இப்போ அப்படி இல்லையே.. வா.. வா.. போகலாம்.. உனக்காக இல்லைன்னாலும் எனக்காக வா.. நானும் அந்த அம்மாவும் பகல் பூரா வீட்டுல தனியா தானே இருக்கப் போறோம்.. ஒருத்தருக்கு ஒருத்தர் பேச்சுத் துணைக்கு இருக்கோம்.. சைட் கேட் வழியா நாங்க போக வர இருப்போம்.. பூட்டை திறந்து அந்த கேட்டைத் திறந்து விட வேண்டியது தான்..” என்றவள், அந்தச் சாவியை கையில் எடுத்துக் கொண்டே நடந்தாள்.
சிவாத்மிகா மற்றும் அர்ஜுன் இருவரின் வீடுகளும் ஒரு அண்ணன் தம்பிகளால் ஒரே போலவே அருகருகே கட்டப்பட்டது.. இருவரும் வசதியாக வந்து செல்லவே இரு வீட்டிற்கும் நடுவில் இருந்த பக்கவாட்டு மதில் சுவரில் ஒரு கேட் அமைக்கப்பட்டிருந்தது.. அதை விட ஒரு வீட்டில் இருந்து இன்னொரு வீட்டின் பால்கனிக்கு தாவி கூடச் சென்று விடும் அளவிற்கே மதில் சுவர் இருந்தாலும் இரண்டு வீடுகளுக்கும் இடையில் இடைவெளி இருந்தது.. அப்படி ஒற்றுமையாக இருந்த அண்ணன் தம்பிகள் கட்டிய வீடு அது..
சில வருடங்களில் சகோதர்களுக்கு இடையில் சண்டை வந்து விட, முதலில் ஒருவர் வீட்டை வந்த விலைக்கு விற்றுவிட்டு வெளிநாடிற்கு சென்றார். அந்த வீட்டைத் தான் சிவாத்மிகாவின் தந்தை வாங்கினார்.. ஒரு சகோதரன் சில வருடங்கள் அங்கிருந்து விட்டு, அதை வாடகைக்கும், அதற்குப் பிறகு பூட்டியும் வைத்துவிட, அந்த வீட்டைத் தான் அர்ஜுன் இப்பொழுது வாங்கி செப்பனிட்டு, குடி வந்திருக்கிறான்..
அந்த ஏரியாவைப் பார்த்ததுமே அர்ஜுனுக்கு மிகவும் பிடித்து விட்டது.. அமைதியாக, அனைவரின் வீட்டிலும், மரம், செடி, கொடிகள் என்று பச்சைப் பசேல் என்று இருக்கவும், இயற்கை ரசிகனான அவனுக்கு அந்த வீடும் பிடித்துப் போனது.. மரங்களைத் தவிர, தோட்டத்தையும் வீட்டையும் தனது ரசனைக்கு ஏற்ப செப்பனிட்டு, அர்ஜுன் குடி வந்திருக்கிறான்..
அந்த கேட்டில் தொங்கிக் கொண்டிருந்த தன் பக்கம் இருந்த பூட்டைத் திறந்த ராதா, சிவாத்மிகாவை இழுத்துக் கொண்டு, முன் வாசல் வழியாக அவர்கள் வீட்டை அடைந்தாள். சிவாத்மிகா தயக்கத்துடன் சுற்றி பார்வையை ஓட்டிக்கொண்டே உள்ளே நுழைய, அவளது கண்கள் அந்தத் தோட்டத்தில் மொட்டுகளாக பூத்திருந்த பூக்களின் மீது பதிந்தது.
‘வாவ்.. தோட்டம் ரொம்ப அழகா இருக்கு..’ என்று நினைத்துக் கொண்டே வந்தவளின் முகத்தில் அத்தனை நேரம் இருந்த தயக்கம் போய், அவளது முகத்தில் ரசனை குடிக்கொள்ள, அதை ரசித்துக் கொண்டு மெல்ல நடந்தாள். வினய்யும், அர்ஜுனும் அவளது வரவை ஆவலாக எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தனர்.
“தயங்காம வா பாப்பா.. நீ எல்லாம் பல பேர் வேலை செய்யற இடத்துல வேலை செய்யறேன்னு வெளிய சொல்லிறாத.. சிரிச்சிடுவாங்க..” என்று கேலி செய்துக் கொண்டே, ராதா வர,
“நான் தயங்கி எல்லாம் வரல.. இந்த தோட்டம் ரொம்ப அழகா இருக்கு ராதாக்கா.. அந்த குட்டி குட்டி ரோஜா மொட்டு எல்லாம் எவ்வளவு அழகா இருக்கு இல்ல..” அவள் ரசனையுடன் சொல்லவும், அந்தக் குரலைக் கேட்ட அர்ஜுனின் கண்கள், ஆவலாக வாசல் கதவை நோக்கித் திரும்பியது..
நிர்மலா அந்தக் குரலைக் கேட்டதும், எழுந்துச் சென்று அவர்களை வரவேற்பதற்காக நிற்க, ராதா அவரைப் பார்த்து புன்னகையுடன் கரம் குவித்தாள்.
“சிவாவாம்மா?” ஆவலாக ராதாவின் அருகில் நின்றிருந்தவளைப் பார்த்து நிர்மலா கேட்க, ராதா ‘ஆம்’ என்று தலையசைத்தாள்.
அவளது கன்னத்தை ஆசையாக வருடியவர், “மஹாலட்சுமி போல இருக்கம்மா..” வாஞ்சையாகச் சொல்ல, ராதா அவளை அழகென்று பலவிதங்களில் சொல்லி இருந்தாலும், முதல்முறை ஒரு பெரியவர், அம்மா போன்ற ஸ்தானத்தில் இருப்பவரின் வாயில் இருந்து இப்படி ஒரு வார்த்தையைக் கேட்ட சிவாத்மிகாவிற்கு, கண்களில் நீர்த்திரையிட, குனிந்து அவரது காலைத் தொட்டு கும்பிட, நிர்மலா அவளது தலையை ஆசையுடன் தடவினார்..
“நல்லா இருடா ராஜாத்தி..” என்று புன்னகையுடன் அவளது கன்னத்தைத் தட்டியவர்,
“உள்ள வா சிவா.. வா ராதா” என்று இருவரையும் அழைத்து, சிவாத்மிகாவின் கையைப் பற்றி உள்ளே அழைத்துச் செல்ல,
“பாசமலரே.. வா.. வா.. வா.. என்ன இவ்வளவு லேட்டா வர?” என்ற கூவலுடன், வினய் அவள் அருகில் வர, திடுக்கிட்டு அவனைப் பார்த்தவள், பேந்த விழிக்கத் துவங்கினாள்.
அவளது முகத்தைப் பார்த்த அர்ஜுனுக்கு புன்னகை அரும்ப, “ஏண்டா அவளை இப்படி பயமுறுத்தற? பாவம் ஆத்மிகா ரொம்ப பயந்துட்டாங்க.. எல்லாரும் என்னைப் போல ஸ்ட்ராங்கா இருப்பாங்களா?” என்ற அர்ஜுனின் பதிலில், நிர்மலா ஆச்சரியமாகத் தனது மகனைத் திரும்பிப் பார்க்க,
“என் தங்கை என்னை எல்லாம் பார்த்து பயப்பட மாட்டா.. அப்படித் தானே பாசமலரே.. நீ தானே நேத்து என்னை அண்ணான்னு கூப்பிட்டவ? இப்போ என்னவோ அது வேற கிரகம் போல முழிக்கிற?” வினயின் கேலியில், சிவாத்மிகாவின் இதழில் புன்னகை அரும்பியது..
“என்னது? நேத்து இவ உன்னை அண்ணான்னு கூப்பிட்டாளா? எங்க பார்த்து கூப்பிட்டா? என்னடா புது கதை சொல்றீங்க?” நிர்மலா திகைப்புடன் கேட்க,
“புதுக் கதை இல்லம்மா.. ஒரு நாள் பழைய கதை.. ஆமாம்மா.. உங்களுக்குத் தெரியாது இல்ல.. நேத்து நாங்க வரும்போது நீங்க தூங்கிட்டீங்க.. நானும் என் உடன்பிறவா உடன்பிறப்பும் ஒரே வேவ்லென்த் இல்ல.. அது தான் எங்களை கட்டிப் போட்டது..” வினய் சொன்னது புரியாமல், நிர்மலா அர்ஜுனைப் பார்க்க,
“டேய்.. கொஞ்சம் சும்மா இருடா.. உன்னோட கேலி எல்லாம் எனக்குத் தான் புரியும்… அம்மாவுக்கு புரியாது..” என்று வினயை அடக்கியவன்,
“அம்மா.. அவளும் இவனைப் போல ஃபேஷன் டிசைனர்ம்மா.. நேத்து ஷூட்டிங் போனேன்ல.. அங்க அவங்க தான் ஹீரோயினோட டிசைனர்.. அதைத் தான் இவன் இப்படிச் சொல்றான்..” என்று அர்ஜுன் விளக்கம் சொல்லவும், தலையை மேலும் கீழும் அசைத்த நிர்மலா,
புருவங்கள் முடிச்சிட, “நீ ஏன் சிவாவை ஆத்மிகான்னு கூப்பிட்ட?” அர்ஜுனிடம் கேள்வி கேட்க,
“அவங்க பேர் அது தானே..” அர்ஜுனின் குழப்பமான பதிலில், ராதா அர்ஜுனைப் பார்த்து புன்னகைத்தாள்.
“அவ பேர் சிவான்னு தானே ராதா சொன்னா..” குழப்பமாக நிர்மலா ராதாவைப் பார்க்கவும், சிவாத்மிகாவின் இதழ்கள் மெல்ல புன்னகையில் விரிந்தது..
“என் பேர் சிவாத்மிகா.. வீட்ல ராதாக்கா என்னை சிவான்னு கூப்பிடுவாங்க.. வர்க் ப்ளேஸ்ல என்னோட பேர் ஆத்மிகாம்மா.. அதனால வேலை செய்யற இடத்துல நிறைய பேருக்கு என் முழு பேர் தெரியாது..” சிறிய புன்னகையுடன் அவள் சொல்லவும், அர்ஜுனின் மனது ரகசியமாக அந்தப் பெயரை சொல்லிப் பார்த்துக் கொண்டது..
“ஓ… அப்படியா.. சிவாத்மிகா.. ரொம்ப அழகான பேர்ம்மா..” என்றவர்,
“இங்கேயே நின்னு பேசிட்டு இருக்க வேண்டாம்.. உள்ள வந்து உட்காருங்க.. வா ராதா.. நான் சொன்னது போல அவளையும் கூட்டிட்டு வந்துட்டே.. ரொம்ப சந்தோஷம்மா..” என்ற நிர்மலா சிவாத்மிகாவின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு, உள்ளே பூஜை நடக்கும் இடத்தில் அமர வைத்தார்..
தயக்கமாக உள்ளே வந்த சிவாவைப் பார்த்த அர்ஜுன் மெல்லிய புன்னகை சிந்த, “இந்தாங்க பாசமலரே.. சூடா காபிக் குடிங்க..” என்று வினய் சிவாவிடம் காபியை நீட்டவும்,
“அது.. அண்ணா.. காபி எல்லாம் எதுக்கு?” என்று அவள் திணற,
“உன்னை விரட்டியே எனக்கு நாக்கு வறண்டு போச்சு.. எனக்கு காப்பி வேணும்.. நீயும் எடுத்துக் குடி..” என்ற ராதா ஒரு கப்பை எடுத்துக் கொள்ளவும், அவளை முறைத்துக் கொண்டே சிவாத்மிகாவும் ஒரு கப்பை எடுத்துக் கொண்டு, மெல்ல குடிக்கத் துவங்கினாள்.
அர்ஜுனின் பார்வை அவளிடம் புன்னகையுடன் பதிந்திருந்தாலும், அவனது கண்கள் அவளது முகத்தை ஆராய்ந்துக் கொண்டிருந்தது.. கண்களிலும், முகத்திலும் அழுத தடம் அவ்வளவாக தெரியாமல் போக, இரவில் இருந்து மனதில் குடிக்கொண்டிருந்த பாரம் குறைந்தது போல இருந்தது..
அது அந்த நிமிட வருத்தம் தான்.. அதற்கு பிறகு அவள் அதைப் பற்றி இரவெல்லாம் விழித்திருந்து அழுவது இல்லை போல என்று நினைத்துக் கொண்டவன், தனது வாட்சைப் பார்த்தான்.
“அம்மா.. இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்? எனக்கு ஷூட்க்கு கிளம்பனும்..” அவன் சொல்லவும்,
“எப்போப் பாரு கால்ல சுடு தண்ணி கொட்டினது போலவே சுத்தாதேடா.. கொஞ்சம் இரு.. டைம்க்கு நீ செட்ல இருக்கலாம்..” என்றவர், சிவாவின் அருகில் சென்று அமர்ந்துக் கொண்டார்.
“சிவா.. கம்ஃபர்டபில்லா இரு.. ஏன் இப்படி முள்ளு மேல உட்கார்ந்து இருக்கறது போல இருக்கே..” நிர்மலாவின் கேள்வியில்,
“முன்ன பின்ன யார் வீட்டுக்காவது போய் பழகி இருந்தா தானேம்மா.. இது தான் முதல்முறையா அவ ஒருத்தர் வீட்டுக்கு வரது..” என்ற ராதாவின் பதிலில், சிவா அவளை அடக்க, ராதாவோ அவளுக்கு பழிப்புக் காட்டினாள்.
“இனிமே என் பாசமலர் பழகிப்பா.. அது தான் அண்ணா இங்க இருக்கேனே” என்று ராதாவிடம் பதில் சொன்ன வினய், சிவாத்மிகாவிடம் திரும்பி,
“அப்படி தானே பாசமலரே..” என்று வினய் கேட்கவும், சிவாத்மிகாவின் முகத்தைப் பார்த்து அர்ஜுன் சிரிக்கத் துவங்கினான்.
“டேய் அவ பாவம்டா விற்று.. உன்னோட பாசத்தை மனசுல அதிகமா வச்சிக்கோ.. வெளிய கொஞ்சம் கம்மியா காட்டு.. அவ மிரண்டு முழிக்கிறா பாரு.. இப்படியா பயமுறுத்துவ? இந்த ஸ்வீட் கொடுத்து கொல்லறது எப்படின்னு உன்கிட்ட தான் கத்துக்கணும் போல..” என்று அவன் இயல்பாகச் சொல்லவும், அவனது சிரித்த முகத்தைப் பார்த்த சிவாத்மிகா, கண்களைச் சிமிட்டி விழியெடுக்காமல் அவனையேப் பார்த்தாள்.
அவளது பார்வையைப் பார்த்த ராதா அவளது கையை அழுத்த, அவள் பக்கம் திரும்பியவள், ராதாவின் கண்சிமிட்டலில் தலையைக் குனிந்துக் கொண்டாள்.
அவளது அந்த ஒருசில நொடிகளின் பார்வை அர்ஜுனின் மனதினில் ஏனோ தென்றலாய் வீசியது.. அந்த மையிட்ட பெரிய கண்களில், தான் கரைவதைப் போல உணர்ந்தவன், அவளது குனிந்திருந்த முகத்தை பார்வையால் வருடினான்..
தலை முடியைப் பின்னலிட்டு, பூவைச் சூடி, நடுவில் அழகாக இருந்த சிறிய பொட்டிற்கு மேல் சிறிய கீற்றாக குங்குமம் இருக்க, அவளது அந்த மெல்லிய ஒப்பனையும், இன்று தேவதையாகக் காட்டியது.. இவை அனைத்துமே ராதாவின் வேலையாகத் தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டவன், திரும்பியப் பொழுது, வினய்யின் பார்வை அடிக்கடி சிவாவின் பக்கம் சென்று வரவும், அர்ஜுன் அவனது தோளைத் தட்டினான்.
“பாசமலர்ன்னு சொன்ன? இப்போ என்ன அங்க பார்வை?” அர்ஜுன் பல்லைக் கடிக்க,
“அவ நேத்து நைட் அழுதாளான்னு பார்த்துட்டு இருக்கேன்.. பயப்படாதே.. அவ எனக்கு தங்கை தான்.. என்னை நீ இனிமே மச்சான்னு கூட கூப்பிடலாம்.. தப்பில்ல..” வினய் சொல்லவும், அர்ஜுன் சிரித்துக் கொண்டே அவனது கையைக் கிள்ள,
“ஏண்டா இப்படி பண்ற? என்ன புதுசா பொச பொச எல்லாம் வருது?” அவன் அர்ஜுனிடம் கிசுகிசுக்க,
“அவகிட்ட எனக்கு எல்லாம் வருது..” அர்ஜுன் சொல்லவும், வினய் கலுக்கென்று சிரித்து, நிர்மலாவிடம் ஒரு முறைப்பை பெற்றுக் கொண்டு அமைதியாக அமர்ந்தான்.
அதற்குள் பூஜை முடிந்து, கற்பூரம் காட்டப்படவும், கண்களை மூடி சிவாத்மிகா நிற்க, அர்ஜுனின் பார்வை அவளது தலை முதல் கால் வரை வருடியது..
“அழகே ப்ரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்..” அர்ஜுனின் பார்வையைக் கண்ட வினய், அவனது காதில் பாட,
“அவள் என் மனைவியாக வேண்டுமென்று..” அர்ஜுன் பதில் பாட்டை அவளைப் பார்த்துக் கொண்டே பாட, அவள் கண்களைத் திறப்பது போல இருக்கவும், தனது கண்களை மூடிக் கொண்டவனின் விழிகளின் உள்ளேயும் அவளே வந்து நின்றாள்.
பூஜை முடியவும், கற்பூரம் எடுத்துக் கொண்டவன், மணியாவதை உணர்ந்து, “நான் போய் ரெடி ஆகிட்டு வரேன்ம்மா..” என்றபடி தனது அறைக்குச் செல்ல, வினய் அய்யரை அனுப்பி விட்டு தனது அறைக்குச் செல்ல, சிவாத்மிகா எழுந்துக் கொண்டாள்.
“நாங்களும் கிளம்பறோம்மா..” என்று சிவாத்மிகா சொல்லவும், நிர்மலா சிவாவின் கையைப் பிடித்துக் கொண்டு,
“நீ நல்லா பாடுவன்னு நேத்து ராதா சொன்னா.. ஒரு பாட்டுப் பாடேன்மா.. எனக்கு இருக்கறது ரெண்டு ஆம்பள கழுதைங்க தான்.. ரெண்டையும் பாட சொன்னா என் காதுல ரத்தம் வர வைக்கும்.. நீயாவது காதுக்கு தேனா ஒரு பாட்டு பாடும்மா..” என்று கேட்கவும், நிர்மலாவின் அன்பான வேண்டுகோளில், சிவாத்மிகா பாடத் துவங்கினாள்.
கண்களை மூடிக் கொண்டவள்,
மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீா் கேட்டேன் அமிா்தம் தந்தனை
எதை நான் கேட்பின் உன்னையே தருவாய்
காட்டில் தொலைந்தேன் வழியாய் வந்தனை
இருளில் தொலைந்தேன் ஒளியாய் வந்தனை
பள்ளம் வீழ்ந்தேன் சிகரம் சோ்த்தனை
வெள்ளம் வீழ்ந்தேன் கரையில் சோ்த்தனை
அவள் பாடத் துவங்கவும், அவளது குரலைக் கேட்ட அர்ஜுன், மாடியில் இருந்த தனது அறையின் கதவில் சாய்ந்து நிற்க, வினய் தனது அறையில் இருந்து எட்டிப்பார்த்தான்..
அவளது குரல் அவ்வளவு இனிமையாக இருந்தது.. நேற்று மெல்லிய குரலில் அவளது பாடலைக் கேட்டதை விட இன்று அவள் வாய்விட்டு பாடிய பொழுது இருந்த இனிமையில், அர்ஜுன் தன்னை மறந்து நின்றான்..
எதனில் வீழ்ந்தால் ஆஆஆ……
எதனில் வீழ்ந்தால் உன்னிடம் சோ்ப்பாய்
என்று பாடிக் கொண்டே விழிகளை உயர்த்தியவளின் பார்வையில் கையைக் கட்டிக் கொண்டு, கதவில் சாய்ந்து, புன்னகையுடன் நின்ற அர்ஜுன் விழ, ஏனோ கண்களை அகற்றாமல், அகற்ற முடியாமல்,
மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீா் கேட்டேன் அமிா்தம் தந்தனை..
என்று பாட, அர்ஜுன் காலை குறுக்காக வைத்து, கையைக் கட்டிக் கொண்டு, கதவில் சாய்ந்து, ஒரு மெல்லியப் புன்னகையுடன் அவளைப் பார்த்துக் கொண்டிருக்க, சிவாத்மிகாவிற்கு மாயக் கண்ணனே அங்கு நிற்பது போலவே தோன்றியது.. பாடி முடித்ததும், அவளது விழிகள் அவனிடமே இருந்தது.
இருவரின் பார்வையும் பிணைந்து இருக்க, வினய் தொண்டையைக் கனைக்கவும், அவளது கண்களில் இருந்து விடுப்பட்டவன், அவளைப் பார்த்து கண்களைச் சிமிட்டி புன்னகை விரியவும், அவசரமாக கண்களைத் தழைத்துக் கொண்டவள், அதற்குப் பிறகு நிமிர்ந்தும் பார்த்தாள் இல்லை.
“ஃப்ரீயா இருக்கும்போது எல்லாம் இங்க வாம்மா.. நான் பொழுது அன்னிக்கும் தனியா தான் இருப்பேன்.. இவன் ஷூட்டிங் ஷூட்டிங்ன்னு ஓடிடுவான்..” என்று நிர்மலா அழைக்கவும்,
“இங்கயும் அதே தானம்மா.. நான் தான் வீட்ல இருப்பேன்.. பாப்பா எப்போப் பாரு வேலை வேலைன்னு இருக்கும்.. வீட்ல இருக்கற ஒண்ணு ரெண்டு நாளும் உட்கார்ந்து எதையாவது வரைஞ்சுக்கிட்டு இருப்பா.. நான் தான் மொட்டு மொட்டுன்னு உட்கார்ந்து இருப்பேன்..” என்று ராதா அங்கலாய்க்க,
“அப்போ நீயும் நானும் பேசிட்டு இருக்கலாம் ராதா.. வேலை முடிச்சிட்டு வந்துடு..” நிர்மலா அவளை அழைத்தார்.
“அவ்வளவு தானேம்மா.. வந்துட்டாப் போச்சு.” என்றவளின் கன்னத்தை அவர் தட்ட,
“சரிம்மா.. எனக்கு டைம் ஆச்சு.. நான் பொட்டிக்குக்கு போயிட்டு ஷூட்டிங் ஸ்பாட்க்கு போகணும்.. கொஞ்சம் முன்னாலேயே கிளம்பறேன்.. இல்ல ட்ராஃபிக்ல மாட்டி லேட் ஆகிடும்.” என்று அவள் சொல்லவும், நிர்மலா அவளை அன்புடன் பார்த்துவிட்டு,
“சரிடாம்மா.. நீயும் அடிக்கடி வா.. வேலை வேலைன்னே இருக்காதே.. என்ன?” என்றபடி அவர்களுக்குத் தாம்பூலம் வழங்க, இருவரும் வாங்கிக் கொண்டு கிளம்பவும், நிர்மலா அவர்களை அனுப்பி வைத்தார்.
“மாணிக்கம்.. டிபன் எடுத்து வை.. அவங்களுக்கு கிளம்ப நேரமாகிடும்..” என்றவர், தலையில் அடித்துக் கொண்டு,
“மறந்தே போயிட்டேன் பாரு.. இந்தா மாணிக்கம்.. இந்த சக்கரைப் பொங்கல் கொண்டு போய் அவங்ககிட்ட கொடுத்துட்டு வந்துடேன்.. நான் மறந்தே போயிட்டேன்..” என்று ஒரு டப்பாவில் சக்கரைப் பொங்கலைப் போட்டு கொடுக்க, அங்கு வந்த வினய், அவர் சொல்வதைக் கேட்டு,
“நான் போய் என் தங்கைக்கு கொடுத்துட்டு வரேன்ம்மா.. அவன் இங்க டிபன் எடுத்து வைக்கட்டும்.. அர்ஜுனுக்கு லேட் ஆச்சு.. ஷூட்டிங்க்கு லேட் ஆச்சுன்னா அவன் கத்துவான்..” என்று சொல்லிவிட்டு, அந்த டப்பாவை வாங்கிக் கொண்டு, இரு வீட்டிற்கு நடுவில் இருந்த கேட்டின் வழியாக சென்றவன்,
“சிவாம்மா.. சிவா…” என்று அழைக்கவும், அந்தக் குரலில் தனது பெயரை.. அதுவும் இப்படி ஒரு விளிப்பைக் கேட்டவள், திகைப்புடன் வேகமாக படிகளில் ஓடி வந்து, வினயின் முன்பு மூச்சு வாங்க நிற்க, அவளது கண்களிளிலோ கண்ணீர் இப்பவோ அப்போவோ என்று தளும்பிக் கொண்டிருந்தது..
“என்ன சிவாம்மா.. எதுக்கு புடவையை கட்டிட்டு இப்படி ஓடி வர? தடுக்கிவிட்டா என்ன ஆகறது?” அன்பாக வினய் கேட்கவும், விழிகள் விரிய கண்களில் துளிர்த்திருந்த கண்ணீருடன் அவனைப் பார்க்க, அவளது நிலைப் புரிந்தவன் போல வினய் இதமாகப் புன்னகைத்தான்.
“பாசமலரேன்னு உன்னை சும்மா கூப்பிட்டேன்னு நினைச்சியா? மனசு நிறைஞ்சு தான் கூப்பிட்டேன்.. இந்தா.. அம்மா சூடா சக்கரைப் பொங்கல கொடுத்து விட்டாங்க.. நல்லா சாப்பிட்டு ஷூட்டுக்கு வா.. அங்க மீட் பண்ணலாம்.. எதுக்கும் நாளைக்கு டிரஸ்சும் சேர்த்து எடுத்துட்டு வா.. அப்போ தான் ப்ரான்க்னாலும் நீ பதிலுக்கு ப்ரான்க் பண்ணலாம்..
அதோட நீ அந்த ஹீரோயின் அம்மாவுக்கு ஏதாவது செம டிசைன் செய்திருந்தா.. கொஞ்சம் எக்ஸ்ட்ரா பிட்டிங்கை அவனுக்கும் எடுத்துட்டு வா.. கடைசி நிமிஷத்துல என்னால ஓட முடியாது.. என் பாடி தாங்காது..” என்றவன், அவள் பேச்சற்று நிற்கும்பொழுதே, அவளது கையில் அந்த டப்பாவை வைத்துவிட்டு நகர்ந்துச் செல்ல, அதைப் பார்த்துக் கொண்டிருந்த ராதாவிற்கு, வினய்யின் வார்த்தையில் இருந்த பாசத்தில் இருந்த உண்மை புரிந்தது..
அதை விட, சிவாத்மிகா பேச்சற்று நிற்பது எதனால் என்று புரிந்தவள், கண்களில் துளிர்த்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, அவள் கையிலிருந்த டப்பாவை வாங்கி அவசரமாக டேபிளில் வைத்துவிட்டு,
“வா.. சாப்பிட்டு நேரத்துக்கு வேலைக்கு கிளம்பு.. அங்க போய் உங்க அண்ணனை கொஞ்சிப்பியாம்..” என்று அவளை அமர வைத்தவள், அவளுக்கு உணவை போட்டுவிட்டு, வேகமாக வினயின் பின்னோடு ஓடினாள்.