என் இதயத்தின் அரசியே
என் இதயத்தின் அரசியே
அத்தியாயம் – 1
அதிகாலை நான்கு மணி, அந்த தெரு முழுவதும் இருட்டினில் மூழ்கி இருக்க, அங்கே அந்த தெருவின் முடிவில் இருந்த ஒரு ஓட்டு வீட்டில் மட்டும் சிறிதாக ஸீரோ வாட்ஸ் பல்பு ஒன்று எரிந்து கொண்டு இருந்தது.
உள்ளே அந்த வீட்டில் பாட்டியும், பேத்தியும் மட்டும் தான் வாழ்கின்றனர்.
காலை வேளையில், வேலைக்கு செல்ல சுறுசுறுப்பாக ஒவ்வொரு வேலையையும் எடுத்து செய்துக் கொண்டு இருந்தனர்.
“பாட்டி! அல்லாத்தையும் எடுத்து வச்சுட்டேன், நான் போய் ஆட்டோவை இங்க எடுத்துட்டு வாரேன்” என்று கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே வந்தாள் அரசி.
ஆம்! அரசி தான் அவள். அவளின் முழு பெயர் ஆழியரசி, தாய், தந்தை அவளின் சிறு வயதில் ஒரு விபத்தில் பலியான பின், தந்தையின் அன்னை மங்கம்மா தான், அவளை எடுத்து வளர்த்தார்.
அவளின் எட்டாம் வகுப்பில் பெரிய பெண்ணாகவும், படிப்பும் சரியாக வராததாலும், பாட்டிக்கு உதவியாக அவள் அவருடன் வேலைக்கு செல்ல தொடங்கினாள்.
அவர் செய்யும் வேலை, ரோட்டின் ஓரத்தில் இட்லி, தோசை விற்கும் வியாபாரம். அன்னபூரணியை நம்பி ஆரம்பித்த இந்த வியாபாரம், அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவியாக இருந்தது.
அது மட்டுமில்லாமல், அவர்கள் முதலில் இருந்த இடம் சற்று நெரிசல் உள்ள ஏரியா. இவள் பெரிய பெண்ணாக வந்ததுமே, அவளின் பாட்டி தெரிந்தவர் மூலமாக, ராயபுரத்தில் சிறிய ஓட்டு வீட்டிற்கு இடம் பெயர்ந்தார் பேத்தியுடன்.
ஆம்! அவர்கள் இருப்பது சென்னையில் தான் அதிலும், வட சென்னை. பாட்டிக்கு உதவியாக அரசி, தன்னுடைய இருபதாவது வயதில் இருந்தே ஆட்டோ ஓட்ட தொடங்கிவிட்டாள்.
“ஏய்! குமாரு என்னலேய் இதேன் வர நேரமோ?” என்று அங்கே ஆட்டோ எடுத்துக் கொண்டு வந்த அரசி, அவனை பார்த்து கேட்டாள்.
“ராவு முழுசும், நைனா ஒரே சண்டைக்கா என்னாண்ட. வேலைக்கு போய் சம்பாரிச்ச காசை எல்லாம், இந்த ஆளு பிடுங்கி குடிச்சே கரைக்கிறார்”.
“அதை என்னனு ஆத்தா கேட்டதுக்கு, என்னாண்ட வந்து போட்டு கொடுத்துட்டியா டா பேமானின்னு ஒரே சண்டை அக்கா. அதேன் எழும்பி வர லேட் ஆகிடுச்சு, மன்னிச்சுக்க அக்கா” என்றவனை பார்த்து சிரித்தாள் அரசி.
“சரி!சரி! அல்லாத்தையும் ஆட்டோவில் ஏத்து, இன்னைக்கு காசிமேடு கிட்ட எனக்கு வேலை இருக்கு. அதனால பாட்டி கூட கடையில் நீதேன் இருக்கணும், பார்த்து ஜாக்கிரதை” என்று கூறிவிட்டு அவள் பாட்டிக்கு உதவினாள்.
எல்லாவற்றையும் ஆட்டோவில் எடுத்து வைத்துவிட்டு, வீட்டை பூட்டிவிட்டு அங்கு இருந்து கிளம்பி நேராக கவர்மென்ட் ஹாஸ்பிடல் எதிர் வரிசையில் வண்டியை நிறுத்தினாள்.
இங்கு தான் கடை போட்டு இருந்தனர், ஹாஸ்பிடல் வரும் நோயாளிகளுக்கு சுத்தமான வீட்டு சாப்பாடு கொடுக்க எண்ணி, அரசியின் திட்டம் தான் இது.
“குமாரு! கொஞ்ச நேரத்துல பார்வதி அக்கா வந்துடும், அதை ஒழுங்கா வாய் பேசாம வேலையை பார்க்க சொல்லு. போன தடவை மாதிரி, யார்கிட்டயாவது அது ஒராண்டை இழுத்துச்சு, அப்புறம் அதுக்கு இங்கின வேலை கிடையாதுன்னு சொல்லிபுடு ஆமா”.
“பாட்டி! நான் காசிமேடு போய்ட்டு, அப்படியே மீனு வாங்கிட்டு வரேன். மதிய சாப்பாட்டுக்கு செஞ்சு கொடு எனக்கு, வர்ட்டா” என்று கூறிவிட்டு உடனே ஆட்டோவில் பறந்தாள் காசிமேடுக்கு.
காலை ஆறு மணி:
போயஸ் கார்டன் வீடு, இல்லை இல்லை பரந்த மாளிகை. இரண்டாவது மாடியில் உள்ள ஒரு அறையில், ட்ரட்மிலில் வியர்க்க வியர்க்க ஓடிக் கொண்டு இருந்தான் ஆதி.
ஆதி டெக்ஸ்டைல்ஸ், ஆதி சாப்ட்வேர் கம்பனி, ஆதி இன்டீரியர் டெகரேஷன்ஸ், ஆதி புட் பிளாசா என்று அவன் குடும்ப தொழில் ஏராளம்.
வீட்டின் கடைக்குட்டி இவன், தாத்தா முதல் இவனின் தந்தை வரை வீட்டின் எல்லோரும் இவன் சொல்லுக்கு கட்டுபடுவர். அந்த அளவுக்கு இவன் வந்து தொழிலை வளர்த்து, இன்று சிறந்த தொழிலதிபர் என்ற விருதும் வாங்கியதும் ஒரு காரணம்.
வீட்டின் கடைக்குட்டி என்ற செல்லம் ஒரு பக்கம் என்றால், தொழிலின் முடிசூடா மன்னனாக வலம் வந்து இன்று அந்த வீட்டின் ராஜாவாக திகழ்ந்து வருகிறான்.
அவனின் அந்த ஓட்டத்தை முடித்து வைக்க, அவனின் அலைபேசி என்னை எடு என்றது. எடுத்து பேசியவன், அந்த பக்கம் சொல்லப்பட்ட செய்தியில் கோபத்தில் செல்லை தூக்கி எறிந்தான்.
“கிரி!” என்று அந்த வீட்டின் முதல் மாடியில் உள்ள ஹாலில் இருந்து கத்தினான்.
அவன் கத்திய கத்துக்கு, அந்த வீட்டின் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லாம் அங்கே ஆஜார். கிரி அவனின் பெரிய அண்ணன், போன மாதம் தான் திருமணம் முடிந்து இருந்தது சிறப்பாக.
இப்பொழுது அவன் தான் ஆதியின் வலது கை, அவனின் காரியதரசி எல்லாம்.
“சொல்லு ஆதி! எதுவும் பிரச்சனையா?” என்று தன் அறையில் இருந்து வெளியே வந்து கேட்டான் கிரி.
“ஹ்ம்ம்!! உடனே காசிமேடு போகனும், நம்ம பசங்களை அங்க உடனே வர சொல்லு. இன்னைக்கு எல்லா வேலையும், சுதாகரனை பார்த்துக்க சொல்லு” என்று கூறிவிட்டு அவனின் அறைக்கு சென்று தயாராக தொடங்கினான்.
ஒரு நாளும் இல்லாத திருநாளாக, இன்று இவ்வளவு சீக்கிரம் பிரச்சினை வந்ததை நினைத்து அவனுக்கு ஆயாசமாக இருந்தது.
நேற்று தான் ஹனிமூன் முடிந்து வந்து இருந்தனர், அதற்குள் காலையில் இவ்வளவு சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்று நினைத்தாலே அவனுக்கு சலிப்பாக இருந்தது.
இருந்தாலும், தம்பி காரணம் இல்லாமல் எதுவும் சொல்ல மாட்டான் என்பதால் உடனே அவனும் கிளம்ப தொடங்கினான்.
அந்த ரோல்ஸ் ராய்ஸ் வண்டி, காசிமேடு நோக்கி வேகமாக சென்று கொண்டு இருந்தது. இறுகிய முகத்துடன், அதை அவ்வளவு வேகமாக இயக்கிக் கொண்டு இருந்தான் ஆதி.
கிரிக்கு அவனிடம் விஷயம் என்னவென்று கேட்கவே, அவ்வளவு பயமாக இருந்தது. அந்த அளவு அவன் இறுகி போய் இருந்தான்.
மீன் மார்கெட்டில் வண்டி நின்ற பிறகு, அங்கு இருந்து குதித்து இறங்கி ஓடினான். கிரிக்கும், அவனின் இந்த ஓட்டம் எதற்கு என்று தெரியாமல் அவனும் ஓடினான் பின்னே.
அங்கே கண்ட காட்சியில், கிரி சிலையாகி விட்டான். அங்கே அவர்களின் வீட்டின் மற்றொரு வாரிசு நித்தின், சடலமாக கிடந்தான்.
“நித்தின்!” என்று கத்தி அழுது அவனை அணைக்க ஓட துடித்த கிரியை, ஆதி தடுத்து நிறுத்தினான்.
“போலீஸ் பார்த்துகிட்டு இருக்காங்க, இப்போ போக கூடாது கிரி. நாம தான் இருந்து அவங்க வேலை முடிஞ்ச பிறகு, அவனோட உடலை வாங்கிட்டு போகனும்”.
“கண்ட்ரோல் பண்ணிக்க, இப்போ அழ வேண்டிய நேரம் இல்லை. இவனை இப்படி இந்த நிலமைக்கு கொண்டு வந்தவனை, நாம பிடிக்கணும்”.
“போலீஸ் ஒரு பக்கம் தேடட்டும், நீ நம்ம ஆட்களை விட்டு இங்க என்ன நடந்துச்சுன்னு முழுசா விசாரிக்க சொல்லு புரியுதா?” என்று கட்டளை கொடுத்துவிட்டு, அங்கே இன்ஸ்பெக்டர் அழைத்ததின் பெயரில் அங்கே சென்றான்.
“சார்! நாங்க இங்க விசாரிச்ச வரைக்கும், யாருக்கும் எதுவும் தெரியல. அண்ட் இவங்க தான் கடலில் மீன் பிடிக்க போன இடத்தில், இவர் மிதந்துகிட்டு இருக்கிறதை பார்த்திட்டு, இங்க தூக்கிட்டு வந்தார்” என்று இன்ஸ்பெக்டர் ஒரு கும்பலை காட்டினார்.
ஆதி, அவர்களை பார்த்துவிட்டு அவர்களிடம் தான் விசாரிக்க வேண்டும் என்று இன்ஸ்பெக்டரிடம் கூறினான்.
அதன் படி அவர்கள் அருகே சென்று விசாரிக்க தொடங்கினான்.
“கடலில் இவன் மிதந்துகிட்டு இருக்கான் சொன்னீங்க, எப்படி?” என்று விசாரித்தான்.
“சாரு! எதோ அவர் உடம்புல இருந்து நாத்தம் வேற குப்புண்ணு அடிச்சுசு. அவர் உடம்பை சுத்தி, பெரிய பெரிய பாட்டிலா கட்டி இருந்துச்சு”.
“பாட்டிலை எடுக்க தான் அந்தாண்ட போனோம், ஆனா பார்த்தாக்க இவர் மிதந்துகிட்டு இருந்தாப்ல. உயிர் இருக்கா, இல்லையான்னு தெர்ல அதான் படகுல போட்டு இங்க இட்டாண்டு வந்தோம்” என்றனர்.
அப்போ, இவன் பாடி கண்டிப்பா கிடைக்கணும் நினைச்சு தான் இதை எல்லாம் பண்ணி இருக்காங்க. இவனை கொலை பண்ணுற அளவுக்கு, அப்படி என்ன மோட்டிவ் இருக்கும்? என்று ஆழ்ந்து யோசிக்க தொடங்கினான்.
“சார்! பாடியை போஸ்ட்மார்டம் பண்ண எடுத்துட்டு போறோம், அப்புறம் ஆம்புலன்ஸ்ல நாங்களே கொண்டு வந்துடுறோம் சார் உங்க வீட்டுக்கு” என்றார் இன்ஸ்பெக்டர்.
“நோ! வெயிட் நான் என் பேமிலி டாக்டரை வர சொல்லுறேன். அவர் போஸ்ட்மார்டம் பண்ணி ரிசல்ட் சொல்லட்டும். அப்புறம் என்ன செய்றது அப்படினு நான் சொல்லுறேன்” என்று கூறிவிட்டு அவனின் குடும்ப நண்பர் தியாகராஜனுக்கு அழைத்தான்.
அந்த பக்கம் அவர் எடுத்து ஹலோ சொல்லிய மறுநிமிஷம், இவன் எல்லாவற்றையும் கூறிவிட்டான். அதிர்ந்த அவர் உடனே , வருவதாக கூறிவிட்டார்.
வண்டி இப்பொழுது நேராக நித்தின் உடம்புடன், சென்று நின்றது ராயபுரம் அரசு மருத்துவமனைக்கு தான். அங்கே உடனே வந்துவிட்டார், இவர்களின் குடும்ப டாக்டர்.
உள்ளே போஸ்ட்மார்டம் நடக்க, இவன் வெளியே இறுக்கத்துடன் நின்று இருந்தான். கிரிக்கு, அடுத்து அடுத்து அவன் சொன்ன வேலைகள் எல்லாம், போன் மூலம் செய்து முடிக்கவே சரியாக இருந்தது.
இரண்டு மணி நேரத்திற்கு பிறகு வெளியே வந்தவர், ஆதியை பார்த்து தனியே பேச வேண்டும் என்றார். இன்ஸ்பெக்டரிடம், கிரியிடம் பார்மலிடீஸ் எல்லாம் முடித்து வைக்குமாறு கூறிவிட்டு, அவருடன் வெளியே தன் காருக்கு வந்தான்.
“ஆதி! இது மர்டர் தான், ஆனா எப்படி இந்த மர்டர் அப்படினு புரியல. பாய்சன் இல்லை, கத்திக்குத்து இல்லை, உடம்புல கீறல் கூட இல்லை”.
“ஆனா உடம்பு அழுகி போகாம இருக்க, நிறைய கெமிக்கல்ஸ் பயன்படுத்தி இருக்கணும். இது கண்டிப்பா நடந்து ஒரு த்ரீ டூ பைவ் days குள்ள தான் இருக்கணும்” என்றவரை பார்த்து நன்றி உரைத்துவிட்டு நித்தினின் உடம்புடன் சென்றனர்.
இதை எல்லாம் கூர்மையுடன் பார்த்துக் கொண்டு இருந்தது, ஒரு உருவம். அவை இதான் ஆரம்பம் என்பது போல், ஒரு குரூர சிரிப்புடன் அங்கு இருந்து சென்றது.
தொடரும்..