என் இதயம் திருடிச் சென்றவனே – நிறைவு

என் இதயம் திருடிச் சென்றவனே – நிறைவு

அத்தியாயம் – 46

இரண்டு திருமணத்தை முடித்துவிட்டு வந்து அமர்ந்த மொத்த குடும்பமும் வீட்டின் மொட்டைமாடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அடுத்து சக்தி – ரக்சிதாவின் திருமணத்தை பற்றி என்று பேச்சு திசை மாறியது.

“அவன் இன்னும் படிப்பு முடிக்கல. சக்தி படிப்பை முடிச்சிட்டு இங்கே அபூர்வா கூட இருந்து படிப்பை வேலையைக் கத்துகிட்டும்” என்றார் ரோஹித்.

“எனக்கு எந்த பிரச்சனையும் இல்லப்பா. நம்ம மாமாவுக்குதான் இடைஞ்சல் அதிகமாகும்” என்று ஆதியை வம்பிற்கு இழுத்தான் சக்தி.

“என்ன மச்சான் இப்படி சொல்லிட்ட. நீ கூட இருந்த உங்க அக்காகிட்ட அடிவாங்காமல் தப்பிச்சிருக்கலாம்னு யோசிக்கிற நேரத்தில் இப்படி சொல்லிட்டியே” என்று வருத்தபட்டான் ஆதி.

அவன் சொன்னதை கேட்டு அபூர்வா அவனை முறைக்க, “மாமா அக்காவுக்கு அடிக்க எல்லாம் தெரியாது” என்று தமக்கைக்கு பரிந்து வந்தான் ராகவ்.

“அதை நீ கல்யாணம் பண்ணின பிறகு சொல்லுப்பா அப்போ நான் ஒத்துக்கறேன்” என்று அவன் சொல்ல சட்டென்று நிமிர்ந்து சஞ்சனாவைப் பார்த்தான் ராகவ்.

“இவ செய்வ மாமா” என்று சொல்ல, “ஏண்டா என்னை பார்த்த அடிக்கிற மாதிரியா இருக்கு” அவனுடன் சண்டைக்கு வந்தாள் சஞ்சனா. இருவரும் சண்டைப்போடுவதை சக்தி சுவாரசியமாக வேடிக்கைப் பார்த்தான்.

அதை கண்டுகொண்ட ரக்சிதா, “என் நண்பன் பாவம் அப்பாவி. நீ அதெல்லாம் செய்வன்னு எனக்கு தெரியும்” என்று ராகவிற்கு சப்போர்ட் போட்டவளை பார்த்து தலையிலடித்துக் கொண்டான் சக்தி.

அவர்கள் அடிக்கும் கூத்தைப் பார்த்த ஆதி, “ஏன் அத்தை இவங்க எல்லோரும் எப்பவும் இப்படிதானா?” என்று மதுமிதாவிடம் கேட்டான்.

“ஆமா மாப்பிள்ளை இந்த ஐஞ்சு பேரும் ஒருத்தரை ஒருத்தர் அவங்களே காலை வாரிக்குவாங்க. இவங்க சண்டையில் தலையைக் கொடுத்த கடைசியில் நம்ம தலைதான் உருளும்” என்று சிரித்தாள்.

எல்லோரும் சாதாரணமாக பேசி சிரிப்பதை பார்த்த மஞ்சுளாவின் கண்கள் மருமகளையே சுற்றி வந்தது. இவ்வளவு பெரிய குடும்பத்தில் தன் மகன் மருமகனாக சென்றதில் அவருக்கு அளவில்லாத மகிழ்ச்சி!

அவரின் பார்வையை கவனித்துவிட்ட ரோஹித், “என்ன சம்மந்தி அப்படி பார்க்கிறீங்க” என்று கேட்டார் சிரித்தபடி.

“இல்ல சம்மந்தி நானும், என் பையனும் அவங்க அப்பா விட்டுட்டுப் போன நாளில் இருந்தே தனியாகத்தான் இருந்தோம். இப்படி எல்லாம் யாரோடும் பேசி சிரிச்சதே இல்ல. நம்மாளே வழிய பேச போனாலும் வாழ்க்கையில் நடந்ததை துக்கம் விசாரிக்கிற மாதிரி பேசும்போது மனசு ரணமாகும். இங்கே பாருங்க நீங்க எல்லோரும் எதைபற்றியும் கவலையில்லாமல் சிரிச்சிட்டே சந்தோசமாக இருப்பதை பார்க்க மனசுக்கு நிறைவா இருக்கு” என்றார் மஞ்சுளா.

அவரின் பேச்சிலிருந்த சோகத்தை ஒதுக்கிவிட்டு, “நம்மள பேசறவங்க எல்லோரும் ஒழுங்காவா இருக்காங்க சொல்லுங்க. நம்மதான் கண்டுக்காமல் அதை கடந்து போகணும்” என்றாள் கீர்த்தி புன்னகையோடு.

“ஆமா சம்மந்தி ஒருகாலத்தில் நாங்களும் இப்படிதான் இருந்தோம். இதோ இவளால் தான் இப்போ இங்கே எல்லோரும் சந்தோசமா இருக்கோம்” என்று ரோஹித் தன் மகளை அணைத்துக் கொண்டார்.

அவள் சிரிப்புடன் தந்தையின் தோள் சாய்ந்திட, “அவளுக்காக நாங்க எவ்வளவோ கஷ்டப்பட்டோம் மாப்பிள்ளை. இன்னைக்கு மண்டபத்தில் நீங்க செய்தது எல்லாம் தெரிஞ்சபோது அவளுக்கு ஏற்ற ஜோடியைத் தேர்ந்து எடுத்து இருக்கான்னு நினைச்சு சந்தோசமா இருந்தது” என்றார் ரஞ்சித்.

நேரம் செல்வதை அறியாமல் பேசிக்கொண்டிருந்த அனைவரும் எழுந்து தூங்கச் சென்றனர். அபூர்வா எழுந்து அவளின் அறையை நோக்கிச் செல்ல ஆதி அவளைப் பின் தொடர்ந்தான். அவன் அறைக்குள் நுழையும்போது அவன் வாங்கிக் கொடுத்த பொருட்களை எல்லாம் எடுத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஒவ்வொரு காபி கப், போட்டோ பிரேம், கோல்டன் சேயின் என்று ஒவ்வொரு பொருளிலும் அவர்கள் இருவரும் இணைந்திருந்தனர். அனைத்தையும் எடுத்துப் பார்த்தவளின் அருகே வந்து அமர்ந்தான் ஆதி.

அவள் சட்டென்று நிமிர்ந்து பார்க்க, “இதெல்லாம் நீ ஊருக்கு எடுத்துட்டு போகலயா?” என்ற கேள்விக்கு மறுப்பாக தலையசைத்தாள். இரவு நேரத்தில் வானில் நிலா உலா வர இருவரும் ஒருவரையொருவர் பார்த்தபடி அமைதியாக இருந்தனர். பேச்சு வார்த்தை இல்லாத மௌனம் அவர்களை ஆட்சி செய்தது.

“என்னிடம் நீ இதுபற்றி ஒரு வார்த்தைக்கூட சொல்லவே இல்லையே?” என்று கேட்டாள் அபூர்வா.

“என் மனைவிக்காக நான் செஞ்சேன். அதை உன்னிடம் சொல்லணும்னு நினைச்சு எதையும் செய்யல” அவன் வெளிப்படையாக பேசவே அவளின் மனம் லேசானது போல உணர்ந்தாள்.

“அதுக்காக ஏண்டா அவங்கள பழி வாங்க இவ்வளவு செஞ்ச?” என்று கேட்ட மனையாளை சட்டென்று நிமிர்ந்து பார்த்தான்.

“அபூர்வா உனக்கு தெரியாது நீ எனக்கு எவ்வளவு இம்பார்டன்னு. தனியாவே வளர்ந்த எனக்கு நிறைய பேர் பரிசாக கொடுத்தது எல்லாமே காயங்களை தான். வரமாக வந்த தேவதையை தொலைச்சிட்டு ஒவ்வொரு நாளும் நான் அனுபவிச்ச கஷ்டம் எனக்குதான் தெரியும்” என்றான் வருத்ததுடன்.

அவள் அமைதியாக இருக்கவே, “நீ என்னைப் பிரிஞ்சு எவ்வளவு கஷ்டப்பட்டயோ அதே அளவு நானும் அனுபவிச்சு இருக்கேன். அதனால் தான் அப்படி பண்ணேன். பழிக்கு பழின்னு சொல்லல. ஆனால் அவங்க மட்டும் நம்மள பிரிக்க நினைக்காமல் இருந்திருந்தா இந்நேரம் நல்ல இருந்திருக்கும் இல்லன்னு தோணுச்சு” அவன் வலியோடு கூறினான். தனக்காக அவன் செய்தான் என்ற போதும் அவளின் மனதில் நிம்மதி நிலையாக குடிக்கொண்டது.

இருவரின் இடையே இருந்த காதல் அவர்களை இணைத்து இருக்கிறதேன்ற உண்மையை உணர்ந்தவள் அவனை காதலோடு நிமிர்ந்து பார்த்தாள். அதே நேரத்தில் அவளை இழுத்து அணைத்துக்கொண்டான் ஆதி.

“அபூர்வா அன்னைக்கு உன்னை சந்தேகபட்டதாக உங்க தாத்தாவும், பாட்டியும் சொன்னாங்க.எந்த தப்புமே செய்யாமல் உன்னை அவங்க எப்படி அப்படி நினைச்சாங்கன்னு எனக்கு புரியலடி. ஆனால் அதுக்கு பின்னாடி மேனகாதான் இருந்தாங்கன்னு தெரிஞ்சப்போ என்னால என்னை கன்ரோல் பண்ணிக்க முடியல” என்று தன் மனதில் இருக்கும் விஷயத்தை வெளிப்படையாக கூறினான்.

அவனின் நெஞ்சில் வாயாக சாய்ந்து, “மேனகாவுக்கு எந்த பிரச்சனையும் இல்லையே” என்று கேட்டாள். இப்போது கூட தனக்காக யோசிக்காத அவளின் குணம் அவனைக் கவர்ந்தது.

“அவங்களுக்கு சொந்தவீடும், வாழ்க்கை முழுக்க உட்கார்ந்து சாப்பிட பணமும் டெபாசிட் பண்ணிருக்கா சாரு. இப்போதைக்கு கொஞ்சம் கஷ்டபடட்டும்னு சிந்துதான் உண்மையை சொல்ல வேண்டான்னு சொல்லி இருக்கிற” என்று சிரித்தான்.

அவனோடு சேர்ந்து சிரித்தவளிடம், “மேடம்க்கு இப்போ பயம் போயிடுச்சா?” என்று கேட்டான்.

அவள் புரியாமல் அவனை கேள்வியாக நோக்கிட, “அதுதான் மத்தவங்க பேச்சைக் கேட்டுட்டு உன்னைவிட்டுப் போயிருவேனோ..” என்று கேள்வியாக புருவம் உயர்த்தி பார்த்தான்.

அவள் மறுப்பாக தலையசைக்க, “ஆதி இந்த பொண்டாட்டிங்க மனசுல இடம் புடிக்கிறதுக்கு என்னவெல்லாம் பண்ண வேண்டி இருக்கு” தனியாக புலம்பிட வாய்விட்டு சிரித்தாள்.

“என்ன ஆதி என்னை டேமேஜ் பண்ற மாதிரியே பேசற” என்று அவள் அவனோடு சண்டைக்கு வரவே,

“ஆமா என் பொண்டாட்டி நான் டேமேஜ் பண்ணுவேன், அப்புறம் அவளுக்கு நிறைய தொல்லை கொடுப்பேன். ஆனா அவளுக்கு ஏதாவதுன்னா மத்தவங்களை சும்மா விடமட்டேன்” என்று எழுந்தவன் அவளை நோக்கி இரு கரங்களையும் நீட்டினான்.

“என்ன?” அவள் புரியாமல் கேட்டாள்.

“வா நம்ம வசந்த மாளிகைக்கு போலாம்” என்று குறும்புடன் கண்சிமிட்டினான்.

“அதெல்லாம் முடியாது. நீ முதலில் என்கிட்ட இருந்து திருடிட்டுப் போன இதயத்தை ஒழுங்கா திருப்பிக்கொடு” என்று வலது கையை அவனை நோக்கி நீட்டினாள்.

பக்கத்தில் இருந்த பேனாவை எடுத்து அவளின் கையில் ‘இதயத்தை கொடுத்துவிட்டேன்’ என்று எழுதுவிட்டு அவளை பார்த்து தன் அக்மார்க் புன்னகையை வீசினான்.

“இது சீட்டிங் ஆதி” என்று அவள் அவனிடம் சண்டைக்கு வரவே, “அதெல்லாம் திரும்ப தர முடியாது” என்று கறாராக நின்றான்.

“என் காது கேட்காது”  வீம்புடன் சொன்னவளை இரண்டு கரங்களில் தூக்கிக்கொண்டு அறையைவிட்டு வெளியே சென்றான்.

அவன் சட்டென்று கையில் தூக்கி அதிர்ச்சியில், “ஏய் ஆதி இந்நேரத்துக்கு என்னை எங்க தூக்கிப் போயிட்டு இருக்கிற? அப்பா அம்மா எல்லாம் கீழே இருப்பாங்க ப்ளீஸ் என்னை கீழே இறக்கிவிடுடா”  மெல்லியகுரலில் அவனிடம் கூறினாள்.

“என் காது கேட்காது” அவளைப் போலவே பிடிவாதத்துடன்.

“கடன்காரன் எடுத்த இதயத்தை திரும்ப தரவும் மாட்டேன்கிறான். நடு ராத்திறியில் பேய் பிசாசு பயமிட்டாமல் என்னை எங்கயோ தூக்கிட்டு போறான்” என்று முணுமுணுத்துவிட்டு அவனின் கழுத்தில் கைபோட்டு வளைத்துக்கொண்டாள்.

“யாரு நான் கடன்காரனா? எனக்கு இது தேவைதான். மேடம்க்கு பார்த்து பார்த்து எல்லாம் செஞ்சாலும் புருஷனை மட்டும் டீலில் விடுற” என்று கடுப்புடன் மாடியிலிருந்து இறங்கினான்.

அந்தநேரம் தண்ணீர் குடிக்க வந்த மஞ்சுளா இருவரையும் பார்த்துவிட்டு, “டேய் இவளை எங்கே தூக்கிட்டுப் போற” என்று பதட்டத்துடன் கேட்க திருதிருவென்று விழித்தாள் அபூர்வா.

தாயிடம் இந்த பதிலை எதிர்பார்த்த ஆதி அசராமல், “அம்மா உங்க மருமகள் மாடி ஏறும்போது காலில் நல்ல நங்குன்னு இடிச்சிகிட்ட. அதுக்குதான் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயிட்டு இருக்கேன்” என்றவன் நீளமாக பொய் சொல்வதை திகைப்புடன் பார்த்தவள், ‘நான் எப்போடா இடிச்சேன்’ என்றவள் தீவிரமாக சிந்தித்தாள்.

அவனின் மனநிலை அறியாத மஞ்சுளா, “அப்படியாப்பா. சரி நானும் உங்க கூட வரட்டுமா?” என்று கேட்டார்.

அவரின் கேள்வியில் திடுக்கிட்டு மீண்டும் கணவனின் முகத்தையே பார்த்த அபூர்வா, ‘ஏன்டா அர்த்த ராத்திரியில் என்னை இப்படி அத்தைகிட்ட மாட்டி விடுற’ என்று மனதிற்குள் புலம்பினாள்.

“சரிம்மா” என்றவனை அவள் கோபத்தில் முறைக்க, “பாருங்க வலி தாங்க முடியாமல் என்னை முறைக்கிற” என்று தாயிடம் அவளை மாட்டிவிட்டான்.

மகன் சிரிப்பதையும், மருமகள் முறைப்பதையும் மாறி மாறி பார்த்த மஞ்சுளாவிற்கு ஏதோ புரிவதுபோல இருக்கவே, “நான் எதுக்கு நந்தி மாதிரி உங்ககூட இடைஞ்சலா வரணும். நீயே கூட்டிட்டுப் போடா மகனே!” என்றவர் தலையிலடித்துகொண்டு செல்வதை கவனித்த ஆதிக்கு சிரிப்பு வந்தது.

அவளை தூக்கி வந்து வாசலில் இறக்கிவிட்ட ஆதி தோட்டத்தை நோக்கி சென்றவனிடம், “ஆதி நீ என்னடா லூசா?” என்று கத்தியவளிடம் அவனின் பின்னோடு வேகமாக நடந்தாள்.

“உன்னை பார்த்ததில் இருந்து அப்படிதான்டி இருக்கேன்” என்றவன் வேகமாக பின்பக்க கதவை திறந்துகொண்டு ஓடிவிட்டான். அதன்பிறகு அவளுக்கு தன் மர வீட்டின் நினைவு வந்தது.

‘ஐயோ இவனுக்கு சப்ரைஸ் கொடுக்க நினைச்சு ஏற்பாடு பண்ணினேன் இப்போ எல்லாத்தையும் வீண் பண்ண பார்க்கிறானே?’ என்றவளின் கண்களில் விழுந்தது அந்த சைக்கிள்.

‘ம்ம் மிட் நைட்டில் என்னை இப்படி ஓட வைக்கிறேன்’ என்று சைக்கிளை எடுத்துகொண்டு வேகமாக சென்றாள்.

ஆதி நிற்காமல் முன்னாடி வேகமாக ஓடிட, “படுபாவி நாடு ராத்திரியில் பைத்தியகாரி மாதிரி ஓட விடுகிறானே” என்று அவனை திட்டித் தீர்த்தபடி அவனை சைக்கிள் பின்தொடர்ந்து வேகமாக சென்றாள்.

சற்றுநேரத்தில் எங்கோ அருவி கொட்டும் சத்தம்கேட்டது. அந்த செங்கொன்றை மரத்தின் அருகே சைக்கிளை நிறுத்துவிட்டு இருள் படர்ந்த இடத்தில் ஆதியைத் தேடினாள்.

“ஆதி” என்ற அழைப்புடன் சட்டென்று அங்கிருந்த விளக்குகளை போட்டாள். அவர்கள் காதலுக்கு சாட்சியாக நின்ற மரத்தின் அருகில் அழகாக வடிவமைக்கப்பட்ட மர வீட்டின் வாசலில் ஆதி அமர்ந்திருந்தான். அந்த செங்கொன்றை மரத்தை தவிர மற்ற இடங்கள் நன்றாக சுத்தம் செய்யப்பட்டு தோட்டம் அமைக்கபட்டிருந்தது.

அத்தோடு அந்த மரத்தின் அருகே இரும்பு ஊஞ்சல் இருவரும் அமருவதற்கு ஏற்றார்போல் அமைக்கபட்டு இருந்தது. மர வீட்டின் முன்னோடு காபி சாப்பிட டேபிள் அமைக்கபட்டு அழகாக இருந்தது.

ஆதி அவளை பார்த்து கேள்வியாக புருவம் உயர்த்திட, “ஏன் ஆதி ஒரு சப்ரைஸ் கூட என்னை கொடுக்க விடமாட்டியா? நமக்காக நான் டேக்ரேசன் பண்ணிய வீட்டுக்கு எனக்கு முன்னாடி வந்து நிற்கிற பிராடு” என்று செல்லமாக திட்டினாள்.

அவன் அமைதியாக நின்று அவளையே பார்க்க, “ஆதி இது உனக்கே உனக்குத்தான். நம்ம காதல் தொடங்கிய இடத்தில் உனக்கும், எனக்குமான வசந்தமாளிகை எப்படி இருக்கு” என்று கேட்டு காதலோடு அவனை நோக்கியவளை இரு கரம்விரித்து கண்ணால் அழைத்தான் ஆதி.

அவள் ஓடிச்சென்று அவனை கட்டியணைத்துக் கொண்டு, “உனக்கு பிடிச்சிருக்கா ஆதி” என்று கேட்டாள்.

அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல், “நான் திருடிய இதயம் உனக்கு திரும்ப வேணுமா?” என்றான் மெல்லிய குரலில்.

அவனின் நெஞ்சில் சாய்ந்தவள் மெளனமாக இருக்கவே, “நீ கேட்டதும் என் காதலி இதயத்தை திரும்ப  கொடுக்க முடியாது. அது எனக்கு அபூர்வா கொடுத்த கிப்ட். சோ திருடிய இதயத்தை திரும்ப கேட்காமல் நீயே வேறொரு இதயத்தை எனக்காக ரெடி பண்ணி கொடுத்திடு” என்றான் ஆதி காதலோடு.

சட்டென்று நிமிர்ந்து காதல் வழியும் அவன் கண்களை பார்த்தவள், “இதயத்தை எப்படிடா ரெடி பண்ணி கொடுக்க முடியும்” என்று புரியாமல் கேட்டாள்.

“பேபியாவே இருக்க பேபி” என்று கள்ளத்தனத்துடன் கண்சிமிட்ட அர்த்தம் புரிந்து வெக்கத்தில் முகம் சிவந்தாள் அபூர்வா.

அவளின் தாமரை முகத்தை இரண்டு கரங்களில் ஏந்தியவன், “எனக்காக இவ்வளவு செய்யும் உன்னை ரொம்ப பிடிச்சிருக்குடி” என்று சொல்லி அவளின் நெற்றியில் காதலோடு முத்திரை பதித்தான்.

சட்டென்று அவளிடமிருந்து விலகி அவளின் கண்களை கட்டியவன், “உனக்கு ஒரு சப்ரைஸ் வெச்சிருக்கேன்” என்று அவளை வீட்டிற்குள் அழைத்துச் சென்றவன் கண்ணில் கட்டியிருந்த துணியை எடுத்தான்.

அன்று அவர்கள் இருவரும் ஷாப்பிங் காம்பிளக்ஸில் கண்ணாடி முன் நின்று எடுத்தபடம் அவர்களின் படுக்கை அறையில் மாட்டபட்டிருந்தது. அதை ரசித்து பார்த்த அபூர்வா அவனின் தோள் சாய்ந்து, “ரொம்ப அழகாக இருக்கு” என்று சொன்னாள்.

“அபூர்வா உன்னிடம் நான் ஒன்னு மட்டும் தெளிவா புரிஞ்சிகிட்டேன்” என்றவனை அவள் கேள்வியாக நோக்கினாள்.

“ஒரு சூழ்நிலை மற்றவங்கள நமக்கு தவற காட்டுனா அதை தப்ப புரிந்துகிட்டு பல வருஷம் பிரிஞ்சிருந்து வாழ்க்கையை வீண் பண்றாங்க. ஒரு நிமிஷம் அதுக்கு பின்னாடி மறைந்திருக்கும் மர்மம் என்னன்னு கேள்வி வந்தால் போதும் அவங்க நமக்காக என்னவெல்லாம்  செஞ்சிட்டு இப்படியொரு பழியை சுமந்துட்டு நிற்கிறாங்கன்னு புரிஞ்சிரும்” என்றவனின் நெஞ்சில் தன் முத்திரையை காதலோடு பதித்தாள் அபூர்வா.

அவளின் செயலை கண்டு திகைத்தவனின் தோளில் கரம்போட்டு வளைத்து அருகே இழுத்தவள், “உன்னை மாதிரியே எல்லோரும் இருக்க மாட்டாங்க ஆதி. பிகாஸ் நீ என்னை உண்மையா நேசிச்ச. மத்தவங்க இப்படி இருக்கிறது கஷ்டம்தான். ஆனா நீ சொன்ன மாதிரி எல்லோரும் யோசிச்ச வாழ்க்கையில் பிரிவு என்ற வார்த்தைக்கே இடமில்லாமல் போயிரும்” அவளை இழுத்து அணைத்து இதழில் இதழ் பதித்து நிமிர அவளின் முகம் செவ்வானமாக சிவந்தது.

இருவரும் இன்றுபோல என்றும் காதலோடு வாழ்வார்கள் என்ற நம்பிக்கையோடு நாமும் விடைபெறுவோம்.

  

Leave a Reply

error: Content is protected !!