Poo16

இரண்டு நாட்கள் நுவரெலியாவைக் கணவனும் மனைவியும் ஒரு இடம் விடாமல் சுற்றிப் பார்த்தார்கள். நெற்றி வகிட்டில் குங்குமத்தோடு ஒசரி அணிந்திருந்த அந்தப் பெண்ணை அங்கு வாழ்ந்த மக்கள் விசித்திரமாகத்தான் பார்த்தார்கள்.

பல்லவி… சூப்பரா இருக்கு. இதை எப்பிடிக் கட்டின நீ?” மனைவியைச் சுற்றிச் சுற்றிப் பார்த்துச் சிரித்தான் மாதவன்.

நாட்கள் நொடிகளெனப் பறக்க மீண்டும் கண்டி வந்து சேர்ந்தார்கள். அதற்கு மேலும் தாமதிக்க மாதவன் பிரியப் படவில்லை.

கவிதாவிற்கு எப்படி நன்றி சொல்வதென்று புரியாமல் திணறியவர்கள் தங்கள் ஊரிற்கு அவள் கட்டாயம் வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துவிட்டுக் கிளம்பினார்கள்.

காலையிலேயே கண்டியிலிருந்து புறப்பட்டு கொழும்பு விமான நிலையம் வந்துவிட்டார்கள். சரியாக ஒன்பது மணிக்கு விமானம் புறப்பட்டு இரண்டு மணித்தியாலங்களில் தன் இலக்கை அடைந்துவிட்டது.

பல்லவியின் வீட்டிற்குத்தான் இருவரும் முதலில் வந்தார்கள். அழைப்பு மணியை அடித்துவிட்டு மாதவன் அமைதியாக நிற்க பல்லவியின் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை.

மனைவியின் முகத்தைத் திரும்பிப் பார்த்த மாதவன் அவள் கரத்தை லேசாக அழுத்திக் கொடுத்தான். ஒரு புன்னகை மட்டுமே பதிலாகக் கிடைத்தது. இந்தத் தருணத்தையும் கடந்துதான் செல்ல வேண்டும் என்பதால் இருவரும் அமைதியாக நின்றிருந்தார்கள்.

கதவைத் திறந்த சரோஜா மலைத்துப் போய் நின்றுவிட்டார். யார் வந்திருப்பது என்று பார்க்க வந்த துளசி அம்மாவையும் கவனித்தில் கொள்ளாது ஓடிவந்து பல்லவியைக் கட்டிக் கொண்டாள்.

பல்லவிக்கா!”

பல்லவி!” அந்தக் குரலில் நிமிர்ந்து பார்த்தாள் பல்லவி. ஜெயா நின்றிருந்தாள். எந்தச் சலனமும் இல்லாமல் ஒரு யோகி போல நின்றிருந்த பல்லவியைப் பார்த்து எல்லோர் கண்களிலும் நீர் நிறைந்தது.

வாங்க மாதவன்.” ஜெயாவின் கணவர் மனோகர் முன்னே வந்து வரவேற்றார்.

எப்பிடி இருக்கீங்க மனோகர்? வேலையெல்லாம் எப்பிடிப் போகுது?” எல்லாவற்றையும் மறந்துவிட்டு சாதாரணமாகப் பேசினான் மாதவன்.

ம்… நல்லாப் போகுது.” மாதவனை விடுவித்த கையோடு மனோகருக்கு ஏற்பட்டிருந்த சிக்கலையும் நிவர்த்தி பண்ணி இருந்தான் கௌதம். அதனால் வேலையில் எந்தப் பிரச்சனையும் எழவில்லை.

பல்லவி அமைதியாக ஹாலில் இருந்த சோஃபாவில் அமர்ந்தாள். ஏதோ மாதவன்தான் அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு சொந்தம் என்பது போலவும், பல்லவியை அன்றுதான் அவர்களுக்குத் தெரியும் என்பது போலவும் நிலைமை கனமாகிக் கொண்டு போனது.

பல்லவிக்கா… என்ன எதுவும் பேசமாட்டேங்கிறே? எங்க மேல கோபமா இருக்கியா?”

இல்லை துளசி.” சட்டென்று துளசியின் கேள்விக்குப் பதில் வந்தாலும் இவள் பழைய பல்லவி அல்ல என்று எல்லோருக்கும் புரிந்தது.

சாரி பல்லவி, என்னை மன்னிச்சிடு.” இது மனோகர்.

ஐயோ அத்தான். எதுக்கு நீங்க மன்னிப்புக் கேக்குறீங்க?”

இல்லை பல்லவி. நிலைமை என்னோட கழுத்தை நெரிச்சிருந்தாலும் உன்னை நாங்க விட்டுக் குடுத்திருக்கக் கூடாது.”

அத்தான் ப்ளீஸ்… நான் அதைப்பத்திப் பேச விரும்பலை, விட்டுருங்க.” மனைவியின் பேச்சில் மாதவன் சட்டென்று அவளைத் திரும்பிப் பார்த்தான். உணர்ச்சிகளையெல்லாம் துடைத்துவிட்டாற் போல இருந்தது அந்த முகம். மாதவனுக்கே அந்தக் கணம் மனைவி புதிதாகத் தெரிந்தாள்.

பல்லவி…” அப்போதுதான் குளியலை முடித்திருந்த தியாகராஜன் மாடியிலிருந்து அவசர அவசரமாக இறங்கி வந்தார்.

எப்போ வந்தீங்க மாப்பிள்ளை? பல்லவி எங்கடா போயிட்ட நீ?” கேள்விகளை நிதானமின்றிக் கொட்டிய அப்பாவை ஆச்சரியமாகப் பார்த்தாள் பல்லவி. மாதவனை அப்பா இதுவரை மாப்பிள்ளை என்று அழைத்ததே இல்லையே?!

இப்போதான் மாமா. ஃப்ளைட் கொஞ்ச நேரம் முன்னாடிதான் லேன்ட் ஆச்சுது.”

ஓ… சரோஜா, என்ன மலைச்சுப் போய் நிக்குற? குடிக்க ஏதாவது கொண்டு வா.” அந்த வார்த்தைகளின் பின்புதான் பெண்களுக்கு நடப்பு புரிய ஜெயா கிச்சனுக்குள் ஓடினாள்.

பல்லவி சோஃபாவை விட்டு எழுந்தவள் அவள் ரூமிற்குள் போக எத்தனிக்க, அதுவரை அமைதியாக இருந்த சரோஜா ஓவென்று சத்தம் போட்டு அழுதார்.

அந்த இடமே ஸ்தம்பித்துப் போனது. அப்படி ஒரு உணர்வுக் குமுறலை சரோஜாவிடமிருந்து யாரும் எதிர்பார்க்கவில்லை. உட்கார்ந்திருந்த மாதவனே எழுந்து விட்டான்.

அத்தை! என்ன இது? அதான் பல்லவி வந்துட்டா இல்லை?”

இல்லை மாப்பிள்ளை… பல்லவி என்னை மன்னிக்கலை. மன்னிக்கவும் மாட்டா. எம் பொண்ணு என்னை வெறுத்திட்டா.” அப்போதும் சரோஜா ஓவென்று அழ மாதவன் மனைவியைப் பார்த்தான்.

உன் அம்மாவை நீதான் சமாதானம் செய்ய வேண்டும்.என்ற அழைப்பு அவன் பார்வையில் இருந்தாலும் பல்லவி அதைக் கண்டு கொள்ளவில்லை. கசப்பாக ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு அவள் ரூமிற்குள் போய் விட்டாள். இப்போது மாதவன் கூடத் திகைத்துப் போனான்.

ஜெயா காஃபி ட்ரேயைக் கொண்டு வர அதை துளசிதான் தைரியமாக பல்லவியின் அறைக்குள் எடுத்துச் சென்றாள். மீதமிருந்த அத்தனைப் பேரும் ஹாலிலேயே உட்கார்ந்தார்கள். மாதவன் கூட மனைவியோடு உள்ளே போகாமல் அங்கேயே அமர்ந்துவிட்டான்.

தனது மாமனார் வீட்டிற்கே இதுதான் கதி என்றால் என் வீட்டின் நிலைமை என்னவாக இருக்கும்? தலை லேசாகக் கனப்பது போல இருந்தது மாதவனுக்கு.

சரோ! இப்ப எதுக்கு நீ அழுறே?” கண்ணீரைத் துடைத்தபடியே இருந்த மனைவியைப் பார்த்துக் கேட்டார் தியாகராஜன்.

இங்கப்பாரு சரோ, அன்னைக்கு இருந்த நிலைமை நம்மளைப் பதட்டப்பட வெச்சுடுச்சு. அதுமட்டுமில்லை… பல்லவிக்கு எதிராவும் இருந்துச்சு. இருந்திருந்தாலும் நாம அப்பிடி அன்னைக்கு நடந்திருக்கக் கூடாது. யாரு என்ன பேசியிருந்தாலும் நாம ரெண்டு பேரும் பல்லவி பக்கம் நின்னுருக்கணும்.”

எப்படிங்க? அன்னை…” எதையோ பேச வாயெடுத்த சரோஜா வார்த்தைகளை விழுங்கிக் கொண்டார். மருமகனின் முன்னால் இவற்றையெல்லாம் பேச முடியாது என்பதால் அவர் வாய் மூடிக்கொண்டது.

பவானி அன்றைக்கு பல்லவியைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி இருக்கும்போது அவர்களால் எப்படி அவளுக்குச் சாதகமாகப் பேச முடியும்? அதுவும் பல்லவி மேல் தவறு இருக்கும்போது.

தியாகராஜன் இப்போது மனைவியைத் தீர்மானமாகப் பார்த்தார். அதில் அவசரப்பட்டு வார்த்தைகளை விட்டு விடாதே என்ற எச்சரிக்கை இருந்தது.

பல்லவியா இருக்கப்போக இந்த வாசப்படியை மிதிச்சிருக்கா. அதை நெனைச்சு சந்தோஷப்படு சரோ. மத்ததைக் காலத்தோட கையில விட்டுடு. ஆண்டவன் நம்மளை அந்த அளவுக்குச் சோதிக்க மாட்டான்.”

பல்லவிக்கா சட்டு சட்டுன்னு பேசுமே தவிர யாரையும் வெறுக்காது.” இதை துளசி சொல்ல ஜெயாவும் ஆமென்பது போலத் தலையை ஆட்டினாள்.

மாதவன்… உடனேயே ஊருக்குக் கிளம்புறீங்களா?”

ஆமா மனோகர். ஏன் கேக்குறீங்க?”

இல்லை… இங்க ரெண்டு நாள் தங்கிட்டுப் போனீங்கன்னா நல்லா இருக்கும். அத்தைக்கும் பல்லவியோட இருந்த மாதிரி இருக்கும்.”

இதற்கு என்ன பதில் சொல்வதென்று மாதவனுக்குத் தெரியவில்லை. இவர்கள் கேட்பதிலும் நியாயம் இருக்கிறது. இருந்தாலும் இன்னும் காலதாமதமாக ஊருக்குப் போவதை அவன் விரும்பவில்லை. தியாகராஜனுக்கு என்ன புரிந்ததோ,

பரவாயில்லை மாப்பிள்ளை. நீங்க இன்னைக்குக் கிளம்பி ஊருக்குப் போங்க. ஆனா கூடிய சீக்கிரம் பல்லவியை இங்க ரெண்டு நாள் தங்குற மாதிரி கூட்டிட்டு வர முடியுமான்னு பாருங்க.” என்றார்.

கண்டிப்பா மாமா. அப்பாவும் முடியாம இருக்கிற இந்த நிலைமையில இதுக்கு மேலயும் என்னால வீட்டுக்குப் போகாம இருக்க முடியாது.”

புரியுது மாப்பிள்ளை.”

ஆனா இந்த வாரமே பல்லவியைக் கண்டிப்பாக் கூட்டிட்டு வர்றேன்.”

அதுவே போதும் மாப்பிள்ளை. ஆனா… பல்லவியை உங்க வீட்டுல…” தியாகராஜன் லேசாகத் தயங்க இப்போது முழுக் குடும்பமுமே மாதவனைக் கவலையாகப் பார்த்தது.

நான் உயிரோட இருக்கிற வரைக்கும் பல்லவிதான் என்னோட சரி பாதி. அதுல எந்த மாற்றமும் இல்லை. நான் சொல்றதுதான் எங்க வீட்டுல கடைசி வார்த்தை. அதை யாரும் மீற மாட்டாங்க.” மாதவன் குரலில் அத்தனை உறுதி இருந்தது.

பல்லவி தன் ரூமிற்குள் இருந்தபடி வெளியே நடந்த அனைத்துச் சம்பாஷனையையும் கேட்டுக் கொண்டிருந்தாள். தன்னைச் சூழ்ந்திருக்கும் மனிதர்களோடு ஒட்டி உறவாட அவளால் முடியவில்லை. அதேநேரம் கணவனை விட்டு விலகவும் திராணி இருக்கவில்லை.

எந்தப் பக்கமும் அவளால் நிலையாக நிற்க முடியவில்லை. தன் வீட்டிலேயே தன் நிலை இப்படி இருக்கும்போது… மாதவன் வீட்டில் எப்படி இருக்கும்?!

உலகமே வெறுத்தாற் போல ஒரு உணர்வு தோன்றியது. சட்டென்று கதவு திறக்கவும் நிமிர்ந்து பார்த்தாள். மாதவன்தான் வந்து கொண்டிருந்தான். மனைவியின் கண்களில் தெரிந்த வெறுமையைக் கண்ட போது அவன் நடைத் தானாகத் தளர்ந்தது.

பல்லவி…” அவளுக்குப் பக்கத்தில் வந்து அமர்ந்தவன் அவள் கரத்தைப் பற்றிக் கொண்டான்.

வாழ்க்கையில ஒரு சில நேரங்களைப் பிடிக்குதோ பிடிக்கலையோ நாம கடந்துதான் ஆகணும். நம்ம வாழ்க்கையில அது எந்த நேரமா இருந்தாலும் உங்கூட நான் இருப்பேன். அதை எப்பவும் நீ மனசுல வெச்சுக்கணும்.” தீர்க்கமாகச் சொன்ன கணவனைப் பார்த்துச் சிரித்தாள் பல்லவி.

அதன்பிறகு அதிக நேரம் அவர்கள் அங்கே தங்கவில்லை. மதிய உணவை முடித்த கையோடு எல்லோரிடமும் விடைப் பெற்றுக்கொண்டு கிளம்பி விட்டார்கள். மாதவன் எல்லோரிடமும் பேசிய போதும் பல்லவி பொதுவான ஒரு தலையசைப்போடு காரில் ஏறி விட்டாள்.

குடும்பத்தினர் அனைவருக்கும் மனது நிரம்பக் கவலை இருந்தாலும் பொறுத்துக் கொண்டார்கள். பல்லவி தரப்பில் நியாயம் இருந்ததால் அவள் மனக்காயத்துக்குக் காலம்தான் மருந்து போட முடியும் என்பது அவர்களுக்கும் புரிந்திருந்தது.

******************

கௌதமின் வீட்டின் முன்பாகக் காரை நிறுத்திவிட்டு இறங்கினாள் தன்வி. சரியாக அந்த நேரம் பார்த்து அவள் ஃபோன் சிணுங்கியது. கவிதாதான் அழைத்துக் கொண்டிருந்தாள்.

ஹலோ கவி, எப்படியிருக்க?”

நான் நல்லா இருக்கிறன் தன்வி. நீ சுகமா இருக்கிறியோ? கல்யாண வேலையெல்லாம் எப்பிடிப் போகுது?”

அது சூப்பராப் போகுது கவி. அங்க இப்போ… சிட்டுவேஷன் என்ன?”

கிளம்பிட்டாங்க.”

ஓ… பிரச்சனை ஒன்னும் இல்லையே?”

பல்லவி ஆரம்பத்துல கொஞ்சம் முரண்டு பிடிச்சவாதான். ஆனா எப்பிடியோ தட்டிக் கொட்டி சரி பண்ணிட்டோம்.”

கிளம்பும்போது சந்தோஷமாத்தானே கிளம்பினாங்க?”

ஆமா. ரெண்டு பேரும் ரொம்ப நல்ல மாதிரியாத் தெரியுறாங்க தன்வி.”

ம்…”

நீ செஞ்ச காரியத்துக்கு உன்னை எப்பிடிப் பாராட்டுறதென்டே எனக்குத் தெரியலை தன்வி.”

எல்லாம் சுயநலம்தான் கவி. அதை விடு, இப்போ அரைவ் ஆகியிருப்பாங்க இல்லை?”

ஆகியிருப்பாங்க, டைம் சரிதான்.”

அது சரி, நீ எப்போ கிளம்பி வரப்போற? அங்கிள் கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னாடி கிளம்பி வர்றேன்னு சொன்னாங்க. நீயும் அப்போ வந்து நின்னேன்னா கொன்னுடுவேன்.”

இல்லை தன்வி, நான் நெக்ஸ்ட் வீக் வருவேன்.”

சூப்பர். நான் இன்னும் ஷாப்பிங் பண்ண ஆரம்பிக்கலை. நீ சீக்கிரமா வந்து சேரு கவி.”

ஓகேடா. வச்சிடட்டுமா?”

ம்… பை.” ஃபோனை அணைத்துக் கைப்பையில் போட்டவள் வீட்டிற்குள் போனாள். ஹாலில் கௌதமின் அம்மா டீவியில் மூழ்கிப் போயிருந்தார்.

ஹாய் ஆன்ட்டி. கௌதம் எங்க?”

ரூம்லதான் இருக்கான்டா.” பதில் சொல்லிவிட்டு மீண்டும் தன் பணியில் ஐக்கியமாகிவிட்டார் அந்தப் பெண்மணி. தன்வி கௌதமின் ரூம் கதவைத் திறந்தாள்.

கௌதம்! எங்கக் கிளம்பிட்டீங்க?” பெண் ஆச்சரியப்பட்டுப் போனாள். நீட்டாக ட்ரெஸ் பண்ணி கண்ணாடி முன்பு நின்று கொண்டிருந்தான்.

இன்னைக்கு நைட் க்ளையன்ட் மீட்டிங் ஒன்னு இருக்கு தனு.” சொல்லியபடியே அந்த சிவப்பு நிற டையைக் கட்ட முயற்சித்தான். அவனால் சரியாகக் கையை உயர்த்தி அந்த வேலையைச் செய்ய முடியவில்லை.

உங்களால இந்த டையைக் கூடக் கட்ட முடியலை கௌதம். எதுக்கு இந்தத் தேவையில்லாத வேலை? இப்போ மீட்டிங் ரொம்ப முக்கியமா?” அவனிடமிருந்து டையை வாங்கியவள் அவளே அதைக் கட்டியும் விட்டாள்.

வீட்டிலேயே உக்கார்ந்து போர் அடிக்குது தனு. மீட்டிங் போனாலாவது ஒரு சேன்ஞ்சா இருக்கும்.”

கௌதம் ப்ளீஸ்… சொன்னாக் கேளுங்க. ரெஸ்ட் எடுங்க.”

முடியலை தனு. ஜஸ்ட் ஒரு டூ அவர்ஸ்தான். அதுக்கப்புறம் வீட்டுக்கு வந்துருவேன்.”

அப்ப நானும் கூட வர்றேன். நாம ரெண்டு பேரும் போகலாம்.”

ஓகே, நோ ப்ராப்ளம்.” இயல்பாக அவன் அனுமதிக்க அந்த ப்ளாக் ஆடியின் கீயை வாங்கிக் கொண்டாள்.

நான் ட்ரைவ் பண்ணுறேன் கௌதம்.” சொன்னவள் அவனுக்காகக் கதவைத் திறந்து விட்டாள். கௌதம் ஏறிக் கொண்டதும் கார் புறப்பட்டது.

இரண்டொரு ஃபோன் கால்களில் கௌதம் பிஸியாக இருக்க அமைதியாகக் காரை ஓட்டிக் கொண்டிருந்த தன்வி அவன் பேசி முடித்ததும் பேச்சை ஆரம்பித்தாள்.

கௌதம்…”

ம்…”

இன்னமும் இந்த வேலையைக் கன்டினியூ பண்ணணுமா?”

ஏன் தனு? என்னாச்சு? எதுக்கு இப்பிடித் திடீர்னு கேக்குறே?”

திடீர்னு இல்லை. ரொம்ப நாளா கேக்க நினைச்சதுதான். அப்போ உரிமையில்லை… அதால தைரியமாக் கேக்க முடியலை.”

நல்ல வேலைதானே தனு, அதுல உனக்கென்ன பிரச்சனை?”

பிரச்சனை இல்லை கௌதம். நல்ல வேலைதான்… இருந்தாலும், எதுக்கு இன்னொருத்தங்க கீழ வேலைப் பார்க்கணும்?”

இதுல என்ன இருக்கு?”

உங்களுக்கு இந்த ஃபீல்ட் பிடிச்சிருந்தா நீங்களே ஒரு கம்பெனி ஆம்பிக்கலாமே?” தன்வி கேட்டவுடன் கௌதம் மௌனமாகி விட்டான்.

அவன் தந்தை நிறைய சம்பாதித்து வைத்திருக்கிறார், உண்மைதான். இருந்தாலும் அந்தப் பணத்தில் அவனுக்கு அவ்வளவு நாட்டம் வரலில்லை.

தனக்குப் பிடித்த இடத்தில் தனக்குப் பிடித்த துறையில் எந்த அழுத்தங்களும் இல்லாமல் சுதந்திரமாக வேலைச் செய்ய வேண்டும் என்பது அவன் எண்ணம். அவன் பார்க்கும் வேலைக்கு அவன் மூளை அதிக சூடேறாமல் இருக்க வேண்டும்.

சொந்தமாக ஒன்றை ஆரம்பித்து, சுதந்திரத்தையும் தொலைத்துவிட்டு, சுமைகளையும் அள்ளித் தோளில் போட அவன் தயாரில்லை.

நான் என்னோட அபிப்ராயத்தைச் சொன்னேன் கௌதம். அதை நீங்க ஏத்துக்கணும்னு நான் சொல்லலை.” அருகில் இருந்தவனின் அமைதி சுருக்கென்று தைக்க அவசரமாகச் சொன்னாள் தன்வி.

இப்போதும் கௌதம் அமைதியாகச் சிரித்தான். கைவிரல் நகங்களைக் கொஞ்சம் அதிகமாகவே அவன் பார்வையிட்டது போல இருந்தது பெண்ணிற்கு.

தனு… என்னைத் தப்பா எடுத்துக்காதே. எனக்கு என்னமோ இது பிடிச்சிருக்கு. நான் ரொம்ப ஃப்ரீயா ஃபீல் பண்ணுறேன். யோசிக்கலாம், என்ன அவசரம்?”

உங்க இஷ்டம் கௌதம். நான் எம் மனசுல பட்டதைச் சொன்னேன், அவ்வளவுதான்.”

காரை அதற்குரிய இடத்தில் பார்க் பண்ண கௌதம் இறங்கிக் கொண்டான்.

உள்ள வா தனு.”

இல்லை கௌதம், நான் கொஞ்சம் ஷாப்பிங் பண்ணுறேன். நீங்க மீட்டிங் முடிஞ்சதும் கால் பண்ணுங்க. நான் வந்தர்றேன்.”

ஓகே டா, கவனம்.”

எது? நானா? உங்க ப்ளாக் ஆடியா?”

ரெண்டுந்தான்.”

அதானே பார்த்தேன்…” காரில் அழகிற்காக வைத்திருந்த சின்ன பொம்மை ஒன்று கௌதமை நோக்கிப் பறந்தது. எட்டி அதைப் பிடித்தவன் சிரித்தபடி உள்ளே போய்விட்டான்.

தன்வியும் சிரித்துக் கொண்டாள். அந்த ப்ளாக் ஆடி மேல் எத்தனைக் காதல் கௌதமிற்கு என்று அறியாதவளா அவள்?!

******************

மாதவனும் பல்லவியும் வந்த டாக்ஸி அவர்கள் வீட்டின் முன்பாக நின்றது. உரிய பணத்தைக் கொடுத்துவிட்டு தங்கள் உடமைகளை எடுத்துக் கொண்டான் மாதவன். டாக்ஸி சென்றுவிட்டது.

மாதவன் மனைவியைத் திரும்பிப் பார்த்தான். அவள் கண்கள் இமைக்காமல் வீட்டையே அளவெடுத்தபடி இருந்தது.

பல்லவி.” கணவனின் அழைப்பில் திரும்பிப் பார்த்தாள். அவன் கண்கள் அவளை உறுதியாகப் பார்த்தது. அவளும் ஏதோ ஓர் முடிவிற்கு வந்தவள் போல திடமாக உள்ளே போனாள்.

ஜானவிதான் இவர்களை முதலில் பார்த்தாள். ஓடிவந்த பெண் அவள் அத்தையை அணைத்துக் கொண்டாள்.

அத்தை!” ஜானவியின் சத்தத்தில் அப்பாவின் அறையில் இருந்த அற்புதா சட்டென்று வெளியே வந்தாள்.

அண்ணீ! எங்க போயிட்ட நீ? என்னதான் நடக்குது இந்த வீட்டுல?” அக்காவின் குரலில் இருந்த தவிப்பை மாதவன் கவனிக்கத் தவறவில்லை. அவள் காதுவரை இன்னும் எதுவும் போகவில்லை என்று எண்ணிக் கொண்டான்.

அதான் வந்துட்டோம் இல்லை. விடு அற்புதா.” அக்காவை ஒரு அதட்டு அதட்டியவன்,

பல்லவி… மேல போய் குளிச்சிட்டு சீக்கிரமா வா. அப்பாவைப் பார்க்கணும்.” என்று மனைவிக்கும் ஆணைகள் பிறப்பித்தான். அற்புதாவைப் பார்த்து எப்படியோ சிரித்த பல்லவி மெதுவாகப் படியேறினாள்.

கிச்சனில் பவானி நிற்பது தெரிந்தது. தன் பார்வை வட்டத்திற்குள் அவர் விழுந்த போது பெண்ணின் நடை லேசாகத் தளர்ந்தது. இருந்தாலும் தாமதிக்காது மேலேறிப் போய்விட்டாள்.

கை அதன் பாட்டில் துணிகளை எடுத்துக் கொள்ள பாத்ரூமிற்குள் சென்றாலும் மனம் என்னமோ பவானியிடம்தான் இருந்தது.

சோமசுந்தரத்தின் காதிற்கு விஷயம் கண்டிப்பாகப் போயிருக்காது. ஏனென்றால் அவர் உடல்நிலை அப்படி. ஆனால், அற்புதாவின் கேள்வியைப் பார்க்கும்போது அவருக்கும் எதுவும் தெரியாதது போல இருக்கின்றதே!

பவானி! அவரை நினைத்தபோது பல்லவியின் மனம் லேசாகக் கனத்தது. இனி அவரோடான தன் உறவு எப்படி இருக்கும்? ஒரே வீட்டில் இருந்து கொண்டு இரு துருவங்களாக வாழ முடியாது. அத்தோடு… இன்று வரைப் பிரியத்தை மட்டுமே காட்டிய அத்தை.

மகன் என்று வந்த போது அந்தப் பிரியம் மாயமானது என்னவோ உண்மைதான். இருந்தாலும் அவள் அநாதரவாக உணர்ந்த போது அணைத்துக் கொண்ட கரம் அல்லவா? அதை அத்தனைச் சுலபத்தில் தட்டிவிட அவளுக்கு மனம் வரவில்லை.

பல்லவி!” மாதவனின் குரல் வெளியே கேட்டது.

இதோ வர்றேங்க.” அவசரமாகக் குளியலை முடித்தவள் அவசர அவசரமாக சேலையைக் கட்டிக்கொண்டு வெளியே வந்தாள்.

புடவையை ஒழுங்கா கட்டிக்கோ. நானும் குளிச்சிட்டு வந்தர்றேன்.”

ம்…” மாதவன் நகர்ந்து விட புடவையைச் சீர்செய்து கொண்டவள் தலையையும் நன்றாகத் துவட்டிக் கொண்டாள். கணவன் அதிக நேரம் எடுக்கவில்லை. சீக்கிரமே குளியலை முடித்து வந்துவிட பல்லவி அவனைப் பார்த்தாள்.

பல்லவி… இது நம்ம வீடு. இங்க என்னைத் தாண்டி உன்னை யாரும் ஒரு வார்த்தைப் பேச முடியாது. பேசவும் தைரியம் வராது. யாருக்கிட்ட என்ன சொல்லணும்னு எனக்குத் தெரியும். புரியுதா?”

ம்…”

அப்பாவைப் பார்த்துட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. தோட்டத்துக்குப் போகலாம். அம்மணி டிஸைன் பண்ணின தோட்டத்தை இன்னும் பார்க்கலைல்ல. அங்கப் போகலாம்.” சூழ்நிலையை இலகுவாக்க முயன்றான் கணவன்.

சரிங்க.”

இரண்டு பேரும் கீழே இறங்கி வந்தார்கள். அப்பாவின் அறையில்தான் அற்புதாவும் நின்றிருந்தார். சோமசுந்தரம் ஏதோ சொல்லச் சொல்ல எழுதிக் கொண்டிருந்தார் அற்புதா. இவர்களைக் கண்டதும் வேலைத் தடைப்பட்டது.

பல்லவி… எப்பிடிம்மா இருக்க? அம்மா எப்பிடி இருக்காங்க? இப்போப் பரவாயில்லையா?” மாமாவின் கேள்வியில் பல்லவி லேசாகத் தடுமாறினாள். கணவன் ஏதோ சொல்லிச் சமாளித்திருக்கிறான் என்று புரிந்தது.

நல்லா இருக்காங்க மாமா.”

ம்… நல்லது. பல்லவிம்மா, அம்மாக்கு உடம்புக்கு முடியாது எங்கிறப்போ அவசரமாக் கிளம்புறது நியாயந்தான். இருந்தாலும் இனி எங்கப் போறதா இருந்தாலும் எங்கிட்டயும் ஒரு வார்த்தைச் சொல்லிட்டுப் போகணும் என்ன?”

சரி மாமா.”

தம்பீ… நீயுந்தான். நீங்க உங்க பாட்டுல கிளம்பிப் போயிடுறீங்க. நீங்கெல்லாம் இல்லாம மனசு கிடந்து தவிச்சுப் போகுது. என்ன ஆச்சுதோ ஏதாச்சுதோன்னு.” பெரியவரின் கண்கள் கலங்க பல்லவி ஓடிப்போய் அவர் கைகளைப் பற்றிக் கொண்டாள்.

நீ நான் பார்க்க வளர்ந்த பொண்ணு பல்லவி. நீ இந்த வீட்டு மருமகளா இல்லைன்னாலும் கூட தியாகராஜன் பொண்ணுங்க மேல எனக்கு நிறைய அக்கறை உண்டு.” மனிதர் பேசப்பேச பல்லவி விசும்ப ஆரம்பித்தாள்.

அற்புதா தம்பியைப் பார்த்தாள். அவன் முகத்திலிருந்து எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுவரைக் கல்லுப் போல இருந்த அந்த முகம் இப்போது லேசாக நெகிழ்ந்திருந்தது, அவ்வளவுதான்.

பவானி வீடு திரும்பிய பிறகு அற்புதா அம்மாவிடம் இரண்டொரு முறைக் குடைந்து பார்த்தாள். ஆனால் பவானி அசைந்து கொடுக்கவில்லை. எது கேட்பதாக இருந்தாலும் உன் தம்பியிடம் கேட்டுக்கொள் என்று முடித்து விட்டார்.

மாதவன் காணாமற்போனது, அதே மாதவன் திரும்ப வந்த போது பல்லவி இல்லாமல் தனித்து வந்தது, சத்தம் போட்டது, என எல்லாமே கண்முன் ஓடியது. ஏதோ நடந்திருக்கிறது. ஆனால் சொல்ல மறுக்கிறார்கள். சொல்லப் பிரியப்பட்டால் சொல்லட்டும் என்று நகர்ந்து விட்டாள். ஜானவிக்குப் பள்ளிக்கூட விடுமுறைக் காலம் என்பதால் அம்மா வீட்டிலேயே தங்குவது அத்தனைச் சிரமமாக இருக்கவில்லை அற்புதாவிற்கு.

தொடர்ந்து அப்பாவுடன் வியாபாரப் பேச்சுவார்த்தைகளில் மாதவன் ஈடுபட பல்லவி ஹாலுக்கு வந்தாள். கிச்சனில் பவானி நிற்பது தெரிந்தது. நேராக அங்கே போனாள் இளையவள்.

அத்தை…” அந்தக் குரலில் திடுக்கிட்டுத் திரும்பினார் பவானி. மகனும் மருமகளும் வீடு வந்தது முதல் அங்கு நடந்தது அத்தனையையும் அவர் கவனிக்கத் தவறவில்லை. இருந்தும் அவர் பக்கம் குற்றம் இருந்ததால் வாளாவிருந்தார்.

மனது நிறையவே கனத்துப் போனது. பல்லவியோடு தனக்கென்று எந்தவித உறவும் இனிமேல் இருக்காது என்று அவர் நினைத்திருக்க, அதே பல்லவி அவரை அணுகி இருந்தாள்.

வாம்மா…” வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கிக் கொண்டன. எதிரிலிருக்கும் பெண்ணை நிமிர்ந்து பார்க்கக் கூட அவருக்குச் சக்தி இருக்கவில்லை.

காஃபி போடுறேன் அத்தை.”

நான் போட்டுக் குடுக்கிறேம்மா.”

பரவாயில்லை… நானே போட்டுக்கிறேன்.” ஏதோ பேசவேண்டும் என்பதற்காக இருவரும் பேசிக் கொண்டார்கள். பல்லவி தனக்கும் கணவனுக்குமாக இரண்டு காஃபியைப் போட்டுக்கொண்டு ஹாலுக்குச் சென்று விட்டாள்.

மாமனும் மருமகளும் ஆஃபீஸ் அறையில் இருந்தபடி அரட்டை அடித்துக் கொண்டிருக்க மாதவன் பக்கத்தில் அற்புதா அமர்ந்திருந்தார்.

காஃபியைக் கணவனிடம் நீட்டியவள் தன் கையில் இருந்த மற்றொன்றை அற்புதாவிடம் நீட்டினாள்.

அண்ணி உங்களுக்கு…” பல்லவி சொன்ன மாத்திரத்தில் அற்புதா முகத்தை வெடுக்கென்று அந்தப் பக்கம் திரும்பிக் கொண்டார். பல்லவி கணவனைத் திரும்பிப் பார்த்தாள். மாதவன் எதையும் கவனியாதது போல ஜானவியுடன் பேச்சைத் தொடர்ந்தான்.

அண்ணீ…” இது பல்லவி.

பேசாத அண்ணி. உனக்கு உன்னோட மாமியாக்காரிதான் பெருசாப் போயிட்டா இல்லை. நானெல்லாம் உனக்கு உறவாத் தெரியலை இல்லை?”

அப்பிடியி…”

பேசாதேன்னு சொல்றேனில்லை. உனக்கும் இவனுக்கும் நடுவுல ஆயிரம் இருக்கட்டும் இல்லை பத்தாயிரம் இருக்கட்டும். எனக்கு அதைப்பத்திக் கவலை இல்லை. வீட்டுல ஏதோ பிரச்சனை நடக்குதுன்னு தெரியுது. ஆனா என்னன்னு புரியலை. சரி பரவாயில்லை, அதைக்கூட நீங்க என்னன்னு சொல்ல வேணாம். அட்லீஸ்ட் ஒரு ஃபோனைப் போட்டு அண்ணி நான் நல்லா இருக்கேன்னு சொல்லக் கூடவா உன்னால முடியலை?” அற்புதாவின் குமுறலில் வாயடைத்துப் போனாள் பல்லவி. மாதவன் எதுவுமே பேசவில்லை.

என்னைத்தான் நீங்க கண்டுக்கலை. இந்த வீட்டுக்கு வந்த மாப்பிள்ளைன்னு ஒருத்தர் இருக்காரில்லை? அவர் எவ்வளவு நல்லவரா இருந்தாலும் இந்தமாதிரி ஒரு சந்தர்ப்பத்துல உங்க வீட்டுல என்னதான் நடக்குதுன்னு கேக்க மாட்டாரா? அவருக்கு நான் என்ன பதில் சொல்றது?”

அக்கா.” இப்போது மாதவன் வாயைத் திறந்தான்.

நீ பேசாதடா ராஸ்கல். அன்னைக்கு வந்து பெரிய இவனாட்டம் சத்தம் போடுற. எம் பொண்டாட்டி இல்லாம நான் இந்த வீட்டுக்குள்ள வரமாட்டேன்னு.”

அக்கா, ப்ளீஸ்… கொஞ்சம் அமைதியா இரு.” தன் மேல் பாய்ந்து விட்டு பொரிந்து தள்ளிய அக்காவை அமைதிப் படுத்தினான் மாதவன். ஆனாலும், உங்களைச் சும்மா விடுவேனா என்று ஒரு மூச்சு சண்டைப் போட்டுவிட்டுத்தான் ஓய்ந்தார் அற்புதா.

கணவன் மனைவி இருவருமே மௌனமாக அந்தக் கோபத்தை வாங்கிக் கொண்டார்கள். மேலும் மறுத்து எதுவுமே பேசவில்லை.