என் விழியில் நீ இருந்தாய் 2

என் விழியில் நீ இருந்தாய் 2
உனக்கே உயிரானேன். 2
கண்டிப்புக்குப் பெயர் போன விடுதி அது. அன்று இறுதிநாள் கொண்டாட்டம் என்றே அவர்களுக்குத் தளர்வுகள் கொடுக்கப் பட்டிருக்க, மற்ற நேரங்களில் இரவு அறையை விட்டு வெளிவருவதற்குக் கூட தடைதான்.
தடையென்று ஒன்று இருந்தாலே அதை மீறுவதற்கும் சிலர் இருக்கத்தானே செய்வர். நம் மதுஜாவோ அந்த சிலரில் ஒருத்தி. விடுதி வாட்ச்மேனை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்துவிட்டு, வார்டன் கண்களிலும் மண்ணைத் தூவி விட்டு அவ்வப்போது வெளியே சென்று வருவது அவர்களுக்கு வழக்கம்தான்.
ஆனால் அவர்களைத் தேடி யாரும் வருவதெல்லாம் அவளுக்குப் புதிது. அதுவும் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில்…
விடுதி காரிடாரில் வேகவேகமாய் நடந்து கொண்டே,
“யாருடி அது இந்நேரத்துக்கு நம்மை தேடி வந்திருக்கறது? ஒத்தரோசா மட்டும் பார்த்துச்சு நாம தொலைஞ்சோம். இவ்வளவு நாள் அதுகிட்ட நல்ல பேர் எடுத்துட்டு, கடைசி நாள்ல இது நமக்குத் தேவையா?”
“எனக்கும் தெரியல மது. வாட்ச்மேன்தான் ஃபோன் பண்ணாரு யாரோ நம்மை பார்க்க வந்திருக்கறதா. ஒத்தரோசாவுக்கு நாம என்னைக்கு பயந்திருக்கோம்? விடுடி பார்த்துக்கலாம்.” மதுவின் தோழி திவ்யா கூற, நமுட்டுச் சிரிப்போடு ஹைஃபைவ் கொடுத்துக் கொண்டவர்கள் வேகநடையிட்டு விடுதி வாயிலை அடைந்திருந்தனர்.
விடுதி வாட்ச்மேன் அருகே வாலிபர்கள் இருவர் நின்றிருந்தனர். இந்நேரத்துக்கு நம்மைத் தேடி வந்திருப்பது யார் என்ற குழப்பத்தோடு நெருங்கியவர்களுக்கு அவ்வாலிபர்களை அடையாளம் தெரிந்தது.
கல்லூரி சீனியர் மாணவர்கள். இரண்டு வருடங்களுக்கு முன்பே கல்லூரியை முடித்துச் சென்றிருந்தவர்கள் அவர்கள்.
‘இவர்கள் எதற்காக இந்த நேரத்தில் நம்மைப் பார்க்க வரவேண்டும்’ என்ற குழப்பத்தோடு அவர்களைப் பார்த்த மது, “என்ன விஷயம்ண்ணா? எதுக்கு எங்களை வரச்சொன்னீங்க?” விடுதி வாட்ச்மேனிடம் வினவினாள்.
“சிஸ், நாங்கதான் உங்களைப் பார்க்கனும்னு வரச்சொன்னோம். எங்களுக்கு உங்க ஹெல்ப் தேவைப்படுது.” அவ்வாலிபர்களில் ஒருவன் கூற, தோழிகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“ஹெல்ப்பா? என்ன விஷயம்?”
“இளமாறனை நினைவிருக்கா?”
இளமாறன், மறக்கக்கூடிய பெயரா அது…? இப்போதும் கல்லூரியில் அவன் பெயர் பிரசித்தம்தான், கூடவே ரதிபூர்ணிமாவும். அவர்களது காதலும் கல்லூரி முழுக்க பிரசித்தம்தான்.
மாறன் வெளிநாட்டில் நல்ல பணியில் இருப்பதாய் கேள்வி. பூர்ணிமாவும் சென்னையில் நல்ல நிறுவனத்தில் பணிபுரிவதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும்கூட செய்திகள் வந்திருந்தன.
“ம்ம்… தெரியும். ரதிமாறன்தானே.”
“அவங்களேதான். ரதிக்கு நாளைக்குக் கல்யாணம்.” சன்னமான அதிர்ச்சி தென்பட்டது மது, திவ்யா முகத்தில்.
“அவளோட விருப்பத்துக்கு மாறா கட்டாய கல்யாணம் பண்றாங்க. மாறன் யுஎஸ்ல இருந்து வந்துகிட்டு இருக்கான். அவன் இந்தியா வர முழுசா ஒரு நாள் ஆகிடும்.
கடைசி நேரத்துல எங்களுக்கு விஷயம் தெரிய வந்ததால கல்யாணத்தைத் தடுக்க எதுவுமே பண்ண முடியல. அதுவுமில்லாம ரதியோட காலேஜ்ல படிச்ச ஃபிரெண்ட்ஸை கூட அவ கல்யாணத்துக்கு அவங்க அப்பா கூப்பிடல.
நாங்க யார் போனாலும் உள்ளகூட விட மாட்டேங்குறாங்க. ஃபோன்ல கூட அவளை கான்டாக்ட் பண்ண முடியல. முதல்ல ரதிய போய் பார்க்கனும். அவ சேஃபா இருக்காளானு தெரியனும். எப்படியாவது அவளை மண்டபத்தைவிட்டு வெளிய கூட்டி வரனும்.”
“ப்ளீஸ், இந்த உதவிய மட்டும் செய்ங்க. ரதிய நாங்க பெங்களூருல இருக்கற மாறனோட அக்கா வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுவோம். மாறன் வந்ததும் அவங்க ரெண்டு பேருக்கும் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிடுவோம். அதுக்கான ஏற்பாடெல்லாமே பக்காவா பண்ணியாச்சு. ரெண்டு பேருமே மேஜர். அதுக்கு அப்புறம் யாராலயும் அவங்களைப் பிரிக்க முடியாது.”
“ரதியோட படிச்ச ஃபிரெண்ட்ஸ் எல்லாரையுமே அவங்க அப்பாவுக்குத் தெரியும். யாரையும் உள்ளவே விட மாட்றாங்க. அதனாலதான் உங்ககிட்ட ஹெல்ப் கேக்கலாம்னு வந்தோம்.”
மாறி மாறி இருவரும் பேசவும் மதுவும் திவ்யாவும் பேஸ்தடித்தது போல அவர்களையே பார்த்திருந்தனர்.
‘ஏதே…! பொண்ணு தூக்கனுமா? அதுவும் கல்யாண மண்டபத்துல வச்சு. நம்மை வச்சு காமெடி கீமெடி பண்றானுங்களா இவனுங்க?’ இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு ஒரே நேரத்தில்,
“நாங்க எப்படி மண்டபத்துக்குள்ள போக முடியும்? எங்களயும்தான உள்ள விடமாட்டாங்க. அதுவுமில்லாம அவ்வளவு காவல் போட்ருக்கும்போது ரதியக்காவ நாங்க எப்படி வெளிய கூட்டிட்டு வரமுடியும்?”
“நீங்க ரதியோட காலேஜ் ப்ரெண்ட்ஸ்னு சொல்லாதீங்க. ஸ்கூல் ஃபிரெண்ட்ஸ்னு சொல்லுங்க. உங்களை அடையாளம் தெரியாததால நம்புவுங்க. உள்ளவும் விடுவாங்க. மண்டபத்துல எல்லாரும் அசந்த நேரம் பார்த்து எப்படியாவது ரதிய கூட்டிட்டு வந்துடுங்க.”
“வாயால சொல்றது ஈசி ப்ரோ. செய்யறதுதான் கஷ்டம். நாங்க மாட்டிக்கிட்டா என்ன பண்றது?”
“அஞ்சு வருஷமா யாருக்கும் தெரியாம இந்த காம்பௌண்டு சுவர் ஏறிக்குதிச்சு வெளிய போயிட்டு வர்றீங்களாம். உங்களால முடியலன்னா யாராலயும் முடியாது சிஸ்.” லேசாக நக்கல் தொனிக்கக் கூறியவனை மது முறைத்துக் கொண்டிருக்க,
“இதெல்லாம் உங்களுக்கு சொன்னது யாரு?” திவ்யா படபடத்தாள்.
“ஆமா, முதல்ல எங்ககிட்ட உதவி கேட்கச் சொல்லி உங்ககிட்ட சொன்னது யாரு?” மது வினவ,
“உங்க ஃபிரெண்டு அப்பாஸ்தான்.”
‘அப்புக்குட்டிடீடீ…’ கடுப்போடு பல்லைக் கடித்தவள், “எங்க அவன்?”
“நீங்க திட்டுவீங்களோங்கற பயத்துல அங்க நிக்கிறான்” என்று அவர்களது காரை காட்டியவர்கள், “ப்ரோ வாங்க. நீங்களும் வந்து உங்க ஃபிரெண்ட்ஸை கன்வின்ஸ் பண்ணுங்க.” அவனை அழைக்க,
இப்படி மாட்டி விட்டுட்டானுங்களே என்று நொந்தபடி, மதுவையும் திவ்யாவையும் பார்த்து லேசாக அசட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்துக்கொண்டே வந்து சேர்ந்தான் அப்பாஸ்.
அப்பாஸ் அவர்களது வகுப்புத் தோழன். ஐந்து வருட கால நட்பு அவர்களது. மது அவனை முறைக்க,
“மது, பாவம் மது இளாண்ணா. என்கிட்ட ஃபோன்ல பேசினாரு. அவ்வளவு டென்ஷன் அவருக்கு. ரதியக்கா நிலைமையே என்னன்னு தெரியல. அவங்களுக்கு பார்த்திருக்க மாப்பிள்ளை வேற பெரிய ரவுடியாம்.
ஜாதி வேற ஜாதிங்கற ஒரே காரணத்துக்காக ஒரு நல்ல காதல் பிரியலாமா? நமக்கு அவங்களை சேர்த்து வைக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு. எப்படியாவது கஷ்டப்பட்டு சேர்த்து வச்சிடலாம் மது.”
அப்பாஸ் சொல்வது போல இளமாறன் ரதிபூர்ணிமா அருமையான ஜோடிதான். ஜாதி வேறுபாடால் அவர்கள் பிரிய வேண்டுமா? இருவரின் காதலுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் நம்மால் முடியுமா? மாட்டிக் கொண்டால் என்ன செய்வது என்ற பயம் உள்ளூர இருந்தது மதுவுக்கு.
“எப்படிடா அப்பு? நம்மால என்ன பண்ண முடியும்? அவங்கப்பா ஆளுங்க இருப்பாங்க. மாப்பிள்ளை வேற ரவுடிங்கற. அவனுங்க ஆளுங்க இருப்பாங்க. எல்லாரையும் ஏமாத்தி ரதியக்காவ எப்படி வெளிய கூட்டி வர முடியும்?”
“அதெல்லாம் முடியும். எல்லாரும் அசந்த நேரம் எதாவது ஒரு வழி கிடைக்காதா?”
மூவரும் பேசிப் பேசி ஒருவழியாக மதுவையும் திவ்யாவையும் ஒத்துக்கொள்ள வைத்தனர்.
“ஆனா ஒரு கன்டிஷன், ஒருவேளை ரதியக்கா எங்ககூட வரமாட்டேன்னு சொன்னா நான் வற்புறுத்திலாம் கூட்டிட்டு வர மாட்டேன். ஆயிரம்தான் ரௌடியா இருந்தாலும் அந்த மாப்பிள்ளையும் பாவம்தான? கல்யாணத்துக்கு முந்தின நாள் பொண்ணு ஓடிப்போனா எவ்வளவு அவமானம் அவனுக்கு?”
கூறிய மதுவை விநோதமாக பார்த்த அப்பாஸ், “உன் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லாம போயிடுச்சு மது. அந்த ரௌடிதான் நமக்கு ரொம்ப முக்கியம் பாரு.
சரி சரி, வண்டியில ஏறு. பேசிக்கிட்டே போவோம்.”
ஒரு வழியாக கிளம்பி, வாட்ச்மேன் கைகளில் லஞ்சத்தைத் திணித்துவிட்டு ஹாஸ்டலை விட்டு வெளியேறி மண்டபத்திற்கு அருகாமையில் வந்து சேர்ந்தனர். மண்டபம் ஊரை விட்டுத் தள்ளி இருந்தது. மண்டபத்துக்கு சற்று தூரத்திலேயே வண்டியை நிறுத்திவிட்டு கண்காணித்தனர்.
மண்டபத்தின் முன் பகுதியில் ஆட்கள் நிறைய பேர் இருக்க பின்புறம் சற்று இருளாயிருந்தது.
“முன்னாடிதான் ஆளுங்க நிக்கிறாங்க. பின்னாடி அவ்வளவா ஆட்கள் இல்ல போல” அப்பாஸ் கூற,
“ஆமா, பின்னாடி ஏரி இருக்கு. ஏரி நிலத்த வளைச்சு கட்டின மண்டபம் போல… ஏரி ஓரம் முள்ளு செடிகளா இருக்கறதால அந்த பக்கம் காவலுக்கு ஆள் இல்ல. நாங்க இப்ப அந்த இடத்தை கொஞ்சமா நீங்க ஏறி குதிக்கிற அளவுக்கு க்ளீன் பண்ணி வைக்கிறோம்.
மண்டபத்துக்கு முன் பக்கமா போயிட்டு, எல்லாரும் அசந்த நேரம் ரதிய கூட்டிட்டு மண்டபத்துக்கு பின்பக்கம் வந்து ஏறி குதிச்சிடுங்க… நாம எஸ்கேப் ஆகிடலாம்.”
“பிளான் எல்லாம் நல்லாதான் இருக்கு. ஆனா இவ்வளவு பேர் இருக்கறப்ப யாருக்கும் தெரியாம எப்படி தப்பிக்கறது?” திவ்யா புலம்ப,
மதுவோ, “விடியற்காலை மூனு நாலு மணி போல ஆளுங்க கொஞ்சம் அசந்து தூங்குவாங்க… அந்த நேரம் தப்பிச்சிடலாம்.
நீங்க வண்டியோட ரெடியா இருங்க. நாங்க சரியா மூனு மணிக்கு மண்டபத்துக்கு பின்பக்கம் வந்துடறோம்.”
“சூப்பர் மது, ஆல் தி பெஸ்ட். கலக்கிட்டு வா.” அப்பாஸ் கை கொடுத்து வாழ்த்த, அவன் மண்டையில் நறுக்கென்று கொட்டியவள்,
“எங்களைத் தனியா உள்ள மாட்டி விடலாம்னு பாக்கறியா? கொன்னுடுவேன் உன்ன. மரியாதையா நீயும் கூட வா”
“நானா? நான் எதுக்கு மது?”
“அங்க பாரு? எவ்வளவு அடியாளுங்க நிக்கிறானுங்க? ஒவ்வொருத்தனும் ஹல்க் மாதிரி இருக்கானுங்க. எதாவது பிரச்சனைன்னா சமாளிக்க ஆம்பளப் பையன் நீ கூட இருந்தாதான் சரிவரும்.”
“ஆமா ப்ரோ, அவங்க சொல்றதும் சரிதான். நீங்க கூட போங்க” மாறனின் நண்பன் கூற,
“ப்ரோ, உங்களுக்கு இவங்களைப் பத்தி தெரியாது. எதாவது பிரச்சனைன்னா என்னை அடகு வைக்கிறதுதான் இவங்களுக்கு முதல் வேலையே…” அப்பாஸ் அலற,
“அதுவும் நல்லதுதான, நீங்க அந்த ரௌடிகளை சமாளிக்கிற நேரத்துல அவங்க தப்பிச்சிடுவாங்கல்ல?”
“எதே! ரௌடிங்களை நான் சமாளிக்கறதா?” மண்டபத்தின் முன் நின்றிருந்த ஆட்களை பயமாய் பார்த்து எச்சில் விழுங்கிக் கொண்டான் அப்பாஸ்.
ஒவ்வொருத்தனும் ஆறு ஆறரை அடி உயரத்தில் ரெண்டு அடி அகலத்தில் ஒன்று போல சபாரி அணிந்து நின்றிருக்க, ஐந்தடி உயரத்தையே தொடாத தன்னை ஒருமுறை பாவமாய் பார்த்துக் கொண்டான்.
‘இவளுகளை நம்பி போனா இன்னைக்கு நம்மை பலி குடுத்துடுவாளுகளே!’ உள்ளுக்குள் புலம்பியபடி வேறு வழியில்லாமல் மது இழுத்த இழுப்புக்கு அவர்களோடு சென்றான்.
வேகத்தைக் காட்டும் முள் அலைபாய்ந்து கொண்டிருக்க, காற்றைக் கிழிக்கும் வேகத்தோடு பாய்ந்து கொண்டிருந்தது அந்த கருப்பு நிற பொலீரோ. சூழ்நிலையும் அந்தகாரமாய் இருக்க, காரின் ஹெட்லைட் வெளிச்சம் மட்டுமே வாகனத்தை அடையாளம் காட்டியது.
அந்த காரின் பின்னே சற்று தூரத்தில் போலீஸ் ஜீப் ஒன்று துரத்தி வர, அதன் தலையிலோ சைரன் அலறிக் கொண்டிருந்தது.
அந்த தேசிய நெடுஞ்சாலை கறுப்பு ரிப்பனாய் நீண்டிருக்க, காரின் உள்ளே ஸ்டியரிங்கைப் பிடித்திருந்தவனோ ஒற்றைக் கையால் அதனை லாவகமாக கையாண்டவாறு மறுகையால் சுவிங்க டப்பாவைத் திறந்து சுவிங்கம் ஒன்றை வாயில் போட்டுக் கொண்டான்.
அவன் ஆதித்யன். ஆரோக்கியமான ஆண்மகனுக்குண்டான உயரமும் உடற்கட்டும் அவனை கம்பீரமாய் காட்டிக் கொண்டிருக்க, அடங்க மறுத்து நெற்றியில் புரண்ட சிகையும் லேசாய் முறுக்கிய மீசையும் ட்ரிம் செய்யப்பட்ட தாடியும் சற்று முரட்டுத்தனமாக காட்டியது.
தீட்சண்யமான விழிகளில் லேசாய் கலந்திருந்த அலட்சியம் அவன் குணத்தை விளக்க, அழுத்தமான அதே நேரத்தில் ஆரோக்கியமான இதழ்கள் பழக்க வழக்கத்தில் அவன் படுசுத்தம் என்பதை பறைசாற்றியது.
நினைத்ததை நினைத்தபடி சாதிக்கும் சாதூர்யம் அவன் இரத்தத்தில் ஊறியதோ என்னவோ அவன் எடுத்த காரியம் அது சரியாக இருந்தாலும் தவறாக இருந்தாலும் வெற்றி அவனுக்கே. அது கொடுக்கும் கர்வம் அவன் உடல்மொழியிலேயே தெரியும்.
சுவிங்கம் எடுத்த கணத்தில் வண்டி லேசாகத் தடுமாற,
“டேய் ஆதி, ஒழுங்கா ரோட்டைப் பார்த்து வண்டிய ஓட்டு. மாட்னோம் தொலைஞ்சோம்.”
ஆதியின் அருகே அமர்ந்திருந்தவனோ, பின்னால் வரும் வாகனத்தை சைடு மிரர் வழியாக பார்த்தவாறே பதட்டமாகக் கூறினான்.
“கூல், கூல் நிதீஷ், சுவிங்கம் வேணுமா?”
மற்றவனுக்கும் நீட்ட,
“எப்படிதான் உன்னால இவ்வளவு கூலா இருக்க முடியுதோ? நம்மள துரத்திக்கிட்டு இருக்கானுங்கடா. சரியான நேரத்துக்கு சரக்கைக் கொண்டு போயிட முடியுமா ஆதி? அவனுங்க நம்மை புடிச்சிட்டா…?” நிதீஷ் பதற,
“என்னைப் பிடிக்க இன்னோருத்தன் பொறந்து வரனும்டா.” வெகு திமிராகக் கூறியவனின் கரங்களில் அந்த பொலீரோ பறந்தது.
“இங்க என்ன கார் ரேசா நடக்குது? முன்னாடி போற வண்டி டயரை பார்த்து ஷூட் பண்ணு மேன்.” போலீஸ் ஜீப்பில் இருந்த ஒருவன் கடுப்போடு கூற, மற்றவனோ துப்பாக்கியை எடுத்து முன்னால் செல்லும் கறுப்பு பொலீரோவை நோக்கி சரமாறியாக சுட ஆரம்பித்தான்.
புல்லட்களின் ஓசையில் மேலும் பதட்டமான நிதீஷ், “டேய் ஆதி ஷூட் பண்றானுங்கடா. நாம மட்டும்னா கூட எப்படியாவது சமாளிச்சிடலாம் ஆனா…” என்றபடி திரும்பி வாகனத்தின் பின் இருக்கையைப் பார்க்க, அங்கே இரண்டு இளம் பெண்கள் மயங்கி சுயநினைவின்றிக் கிடந்தனர்.
பார்வையில் வெகு அலட்சியத்தோடு நிதீஷை திரும்பிப் பார்த்த ஆதித்யன், “இப்ப மட்டும் என்ன? இன்னும் ரெண்டே நிமிஷத்துல பின்னாடி எவனும் வர மாட்டான் பாரு.”
“எப்படிடா?”
“வெயிட் அண்ட் வாட்ச் மேன்.”
அலட்சியமாய் கூறியவனின் கைகளில் ஸ்டியரிங் சுழன்றது. சீறிப் பாய்ந்து கொண்டிருந்த பொலீரோவின் வேகத்துக்கு இணையான வேகத்தோடு எதிர்ப்புறத்தில் அதிவேக ரயில் ஒன்று வந்துகொண்டிருக்க, ரயிலைப் பார்த்ததும் பதறிய நிதீஷ்,
“டேய் ஆதி டிரெயின் கிராஸ் ஆகப் போகுது வண்டியை ஸ்லோ பண்ணுடா!” உச்சபட்ச பயத்தில் அலற, அந்த ஆளில்லா ரெயில்வே கிராசிங்கை புயல் வேகத்தில் பொலீரோ கடக்கவும் டிரெயின் அந்த கிராசிங்கை கடக்கவும் சரியாக இருந்தது.
நொடி பிசகி இருந்தாலும் பொலீரோ தூக்கி எறியப்பட்டிருக்கும். நூலிழையில் தப்பித்த பயத்திலிருந்து நிதீஷ் வெளிவராமலிருக்க, புகைவண்டியின் சப்தம் அவனது வயிற்றுக்குள்,
“நிதீஷ், இப்ப பின்னாடி எவனும் வரலல்ல. இனி ஃபிரியா இரு.”
“போடாங்… எனக்கு வயித்துல இருக்கற உறுப்பெல்லாம் வாய்க்கு வந்திடும் போல. கொஞ்சம் விட்ருந்தாலும் நாம பரலோகம் போயிருப்போம். இவ்வளவு ரிஸ்க் இந்த தொழில்ல இருக்கும்னு தெரிஞ்சிருந்தா நான் உன்கூட வந்திருக்கவே மாட்டேன்.”
“ஹாஹாஹா…” நகைத்துக் கொண்டவனோ, “வாழ்க்கைனா கொஞ்சமாவது த்ரில் இருக்கனும் மச்சி. இதுல இருக்க ரிஸ்க்குக்காக மட்டும்தான் நான் இந்த லைனை தேர்ந்தெடுத்ததே.”
“அது சரி,” அலுத்துக் கொண்ட நிதீஷ், “ரிச்சர்ட் எங்க வரச் சொன்னாரு?” வினவ,
“இன்னும் சரியா இருபதே நிமிஷம். ரீச் ஆகிடலாம்.” என்றபடி நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்த கிளைச்சாலை ஒன்றில் வண்டியைத் திருப்பினான்.
மரங்கள் அடர்ந்த வனப்பகுதி போலிருந்த பாதையில் சிறிது தூரம் சென்றதும் தன்னந்தனியாக நின்றிருந்த ஒரு கார் முன்பு வண்டி நின்றது.
ஹெட்லைட்டை மூன்று முறை அணைத்து ஒளிர விட்டதும் எதிர்புறம் இருந்த வண்டியிலும் அதுபோலவே சிக்னல் வரவும் வண்டியை விட்டு இறங்கினர் ஆதித்யாவும் நிதீஷூம்.
எதிர்ப்புறம் இருந்த வண்டியில் இருந்தும் இருவர் இறங்கி வர, ஒருவருக்கொருவர் கை குலுக்கிக் கொண்டதும் ஆதித்யாவின் வாகனத்தை நெருங்கி டார்ச் வெளிச்சத்தில் பின் சீட்டில் மயங்கிக் கிடந்த இளம் பெண்களைப் பார்த்தனர் இருவரும்.
“ஃபெண்டாஸ்டிக் ஜாப். வெல்டன் ஆதி. உங்களுக்கான பேமெண்ட் உங்களுக்கு வந்து சேரும். தேங்க்யூ.” மீண்டும் ஒருமுறை கை குலுக்கிவிட்டு,
“நெக்ஸ்ட் சரக்கு மாட்றப்ப உங்களுக்கு தகவல் தரோம். இதேமாதிரி கொண்டு வந்துடுங்க.”
ஆதித்யாவுக்கும் நிதீஷ்க்கும் விடைகொடுத்துவிட்டு பொலீரோவை அவர்கள் ஓட்டிச் செல்ல, அவர்கள் நிறுத்தி வைத்திருந்த வாகனத்தில் ஏறி இவர்கள் வந்தவழியே திரும்பினர்.
நெடுஞ்சாலையில் வாகனச் சோதனையில் பொலீரோ வண்டிகளாகப் பார்த்து சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாரைப் பார்த்து நகைத்துக் கொண்டான் ஆதி.
“டேய், இவனுங்க நம்மைதான தேடறானுங்க?” நிதீஷூம் நக்கலாய் வினவ,
“அப்படிதான் நினைக்கிறேன்.” படு நக்கலாய் பதில் தந்தான் ஆதி.
“நேரா கல்யாண மண்டபத்துக்குதான போறோம் ஆதி? இனி உனக்கு மாப்பிள்ளை ரோலா?” நிதீஷிடம் உற்சாகம் வந்திருக்க, ஆதியின் உதடுகளோ அலட்சியமாய் வளைந்தது.
“நாளைக்கு விடிஞ்சா கல்யாணம். ஆனா நீ இன்னும் மண்டபத்துக்கு போகல. பொண்ண இதுவரை பார்த்ததில்ல. இந்த நேரத்துல இவ்வளவு ரிஸ்க்கான வேலை. உன்னால மட்டும்தான்டா இப்படி இருக்க முடியும்?”
“எனக்கெல்லாம் கல்யாணம் குடும்பம் இதெல்லாம் செட்டே ஆகாது நிதீஷ். எனக்கு அதுல விருப்பமும் இல்ல. தாத்தா பாட்டி கம்பெல்ஷனுக்காகதான் ஒத்துக்கிட்டேன்.” விட்டேத்தியாக கூறியவனின் நினைவுகள் வேறெங்கோ நிலைத்திருந்தது.
சில நினைவுகளை நினைக்கவே அவன் விரும்புவதில்லை. ஆனால் அவனை விட்டு அந்த நினைவுகள் நீங்குவதுமில்லை. இவ்வளவு நேரம் இருந்த எனர்ஜி குறைந்தது போலத் தோன்றவும் நிதீஷின் கரங்களில் வண்டியைக் கொடுத்தவன், வாகனத்தின் சீட்டை நன்றாக சாய்த்து வைத்து சரிந்து கொண்டான்.
எண்ணங்கள் முழுவதும் நினைவுகளின் ஊர்வலம்.
___ தொடரும்