எல்லையில்லா இன்பம் நீதான் காதலா – 10

IMG_20221031_134812

எல்லையில்லா இன்பம் நீதான் காதலா – 10

மாயா தன் மனதிற்குள் எடுத்திருந்த உறுதிமொழிகளை எல்லாம் முற்றிலும் மறந்து போனவளாக தன் நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த சித்தார்த்தை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க, அவளது தோழிகள் இருவரும் அவளது நடவடிக்கைகளைப் பார்த்து தங்கள் தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக நின்று கொண்டிருந்தனர்.

“ஏய் மாயா! என்னடி ஆச்சு உனக்கு? இப்படி முன்ன பின்ன தெரியாத ஒரு ஆளை எதற்காக இப்படி வெறிச்சுப் பார்க்குற? ஏதோ ஒரு தடவை அந்த ஆளு எதேச்சையாக உனக்கு உதவி பண்ணிருக்காரு, அதற்காக இப்படி எல்லாம் பண்ணுவது ரொம்ப தப்பு மாயா”

“நான் இப்போ என்ன தப்பு பண்ணிட்டேன்னு ஆளாளுக்கு ஓவரா பேசுறீங்க? ஏதோ எனக்கு ஒரு உதவி பண்ணாங்க, அதற்கு அன்னைக்கு நான் தாங்க்ஸ் கூட சொல்லல, அதுதான் இன்னைக்கு மறுபடியும் அவங்களைப் பார்த்ததும் ஒரு தாங்க்ஸ் சொல்லலாம்ன்னு நினைச்சா நீங்க என்னடான்னா இஷ்டத்துக்கு ஏதேதோ பேசுறீங்க” மாயா சிறு சலிப்புடன் தன் தோழிகளைப் பார்த்து அலுத்துக் கொள்ள,

அவர்கள் இருவருமோ அவளைப் பார்த்து மறுப்பாக தலையசைத்துக் கொண்டே, “இதெல்லாம் சின்னக் குழந்தை கிட்ட சொன்னால் கூட நம்பாது, எங்க கிட்டயே கதை சொல்லுறியா? நீ என்னமோ பண்ணு, ஆனா கடைசியில் பெரிதாக எதையாவது ஒரு வம்பை இழுத்து விடப் போற பாரு” என்று கூற, அவளோ அவர்கள் பேசியதை தன் காதிலேயே எடுத்துக் கொள்ளாதவள் போல தன் சைக்கிளை எடுத்துக்கொண்டு சித்தார்த் அமர்ந்திருந்த புறமாக தயங்கி தயங்கி செல்ல ஆரம்பித்தாள்.

சித்தார்த்தும் அவனது நண்பர்களும் ஏதேதோ கதைகள் பேசிக்கொண்டு சத்தமாக சிரித்துக் கொண்டு அமர்ந்திருக்க, அவனருகில் சென்று பேச தைரியம் இன்றி நின்று கொண்டிருந்த மாயாவுக்கு அங்கிருந்த ஒரு சிலர் சித்தார்த்தின் பெயர் சொல்லி அழைத்துப் பேசியது அத்தனை ஆனந்தமாக இருந்தது.

இத்தனை நாட்களாக பெயர் தெரியாத ஒரு நபராக அவனை எண்ணிக் கொண்டிருந்தவள் இப்போது அவனது பெயரைத் தெரிந்து கொண்ட சந்தோஷத்தில் மீண்டும் தன் தோழிகள் நின்று கொண்டிருந்த இடத்தை சென்று சேர, அவர்கள் இருவரும் அவளை விசித்திரமாகப் பார்த்துக் கொண்டு நின்றனர்.

“ஹேய்! எதற்காக என்னை இரண்டு பேரும் அப்படி பார்க்குறீங்க? நான் உண்மையிலேயே அவருக்கு தாங்க்ஸ் சொல்லலாம்ன்னு தான் போனேன், ஆனா அங்கே நிறைய பேர் இருக்காங்க, அதுதான் திரும்பி வந்துட்டேன், ஆனா எப்படியாவது சீனியர் சித்தார்த் அண்ணா கிட்ட தாங்க்ஸ் சொல்லிடுவேன்”

“எது அண்ணாவா?” மாயாவின் தோழிகளில் ஒருத்தியான சுமதி அவளை அதிர்ச்சியாகப் பார்த்துக் கொண்டு நிற்க,

அவளைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்தவள், “ஆமா, உங்க இரண்டு பேருக்கும் அண்ணா தானே?” என்று கூற, அவர்களோ அவளைப் பார்த்து தங்கள் தலையில் அடித்துக் கொண்டனர்.

“அடி யமுனா! இது முற்றிப் போச்சு, இனி நம்ம என்ன சொன்னாலும் செவிடன் காதில் ஊதிய சங்கு போலத்தான் இருக்கும், அதனால் நடப்பதை வேடிக்கை பார்த்துட்டு மட்டும் நம்ம இருப்போம், மாயா மேடம் என்ன நினைக்கிறாங்களோ அதைப் பண்ணட்டும்” என்று விட்டு மாயாவின் தோழிகள் இருவரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விட, மாயாவும் தான் மனதிற்குள் வளர்த்துக் கொள்ளும் எண்ணம் சரியா? தவறா? என்று புரிந்து கொள்ள முயற்சி செய்யாமலேயே ஏதேதோ ஆசை எண்ணங்களை வளர்த்துக் கொண்டு மனம் நிறைந்த சந்தோஷத்துடன் தன் வீட்டை நோக்கிப் புறப்பட்டுச் சென்றாள்.

அதன் பிறகு வந்த நாட்கள் ஒவ்வொன்றிலும் சித்தார்த் அறியாமலேயே அவனைப் பின் தொடர்ந்து செல்ல ஆரம்பித்தவள் அவனது ஒவ்வொரு அசைவுகளையும் தன் மனப்பெட்டகத்தில் பொக்கிஷமாக சேமித்து வைக்க ஆரம்பித்தாள்.

அந்த வயதில் தோன்றும் அந்த உணர்வு இனி எப்போதும் மாறப்போவதில்லை என்று அவள் தனக்குள்ளேயே உறுதியாக முடிவெடுத்திருக்க, காலமும், விதியும் அத்தனை சீக்கிரத்தில் அவள் நினைப்பதை நடத்தி வைத்து விடுமா என்ன?

மாயா சித்தார்த்தைப் பின் தொடர்ந்து செல்ல ஆரம்பித்ததில் அவனது சொந்த ஊர் கோயம்புத்தூர் என்பதும், அவன் இன்னும் ஒரு சில தினங்கள் மாத்திரமே ஊட்டியில் முக்கியமாக இந்த நாட்டில் இருப்பான் என்றும், அதன் பிறகு சில வருடங்கள் அவன் மேல் படிப்பிற்காக வெளிநாட்டுக்கு சென்று விடுவான் என்பதையும் அறிந்து கொண்ட மாயா எப்படியாவது அவன் இந்த ஊரை விட்டு செல்வதற்குள் அவனிடம் தன் மனதில் இருக்கும் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து கொண்டாள்.

ஒரு தடவை உதவி செய்ததற்காக அவன் மீது தான் இந்தளவிற்கு தான் பித்தாகிப் போய் விட்டோமா என்று கூட சில சமயங்களில் அவளுக்குத் தோன்றும், ஆனாலும் அந்த எண்ணங்களை எல்லாம் ஆராய்ந்து பார்க்க அவள் மனது அனுமதித்தில்லை.

அன்று எப்படியாவது சித்தார்த்திடம் சென்று பேசி விட வேண்டும் என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவன் சென்றிருந்த முருகன் கோவில் சந்நிதானத்தில் கண்மூடி நின்று கொண்டிருந்தவள், “கடவுளே முருகா! ஒவ்வொரு நாளும் உன் கோவிலைத் தேடி இவ்வளவு தூரம் வர்றேனே எதற்காக? நான் மனதில் நினைத்த விஷயத்தை நீ எப்படியாவது நிறைவேற்றி வைக்கணும்னு தானே? இவ்வளவு நாளும் நான் கேட்ட ஒவ்வொரு விஷயத்தையும் அச்சுப்பிசகாமல் அழகாக, நான் ஆசைப்பட்டபடியே நிறைவேற்றித் தந்திருக்க, அதேமாதிரி இப்போ நான் நினைத்திருக்கும் விஷயத்தையும் எந்தவொரு தடங்கலும் இல்லாமல் நிறைவேற்றித் தந்துடுப்பா. உன்னையே நம்பி வந்த சின்னப் பொண்ணை ஏமாற்றிடாதே!

என்ன சின்னப் பொண்ணு பண்ணுற காரியமா இதுன்னு நீ மைண்ட் வாய்ஸில் நினைக்கலாம், ஆனாலும் இந்த சின்ன மனசுக்குள்ளேயும் ஃபீலிங்ஸ் இருக்கத் தானே செய்யும்? அதனால இந்தப் புள்ளை மனசை உடைச்சிடாதே! சரியா?” என கடவுளிடம் மனம் விட்டுப் பேசிக் கொண்டிருந்த தருணம் சித்தார்த் அவனது நண்பர்களுடன் அந்த சந்நிதானத்தை தாண்டி நடந்து செல்வதைக் கண்டு கொண்டவள்,

“கடவுளே! உன்னை நம்பித் தான் போறேன், காப்பாற்றிடுப்பா” என்றவாறே அவன் சென்று கொண்டிருந்த புறம் ஓடிச் செல்ல, அவனோ அவனது நண்பர்களுடன் பேசிக் கொண்டே படியிறங்கிச் சென்று கொண்டிருந்தான்.

“கொஞ்சம் மெதுவாகத் தான் நடங்களேன் பா, எந்தப் பஸ்ஸைப் பிடிக்க இவ்வளவு வேகமாக போறாங்களோ தெரியலையே” சித்தார்த்தின் நடையின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் அவசர அவசரமாக இரண்டிரண்டு படிகளாக தாவி இறங்கிக் கொண்டிருந்த மாயா ஒருவழியாக சித்தார்த்தை அண்மித்து சென்றிருக்க, அவள் முற்றிலும் எதிர்பாராத தருணத்தில் தன் முன்னால் இருந்த படியைக் கவனியாமல் கால் வைத்திருந்த சித்தார்த் தடுமாறி விழப் பார்க்க, கண்ணிமைக்கும் நொடிக்குள் மாயா அவனது சட்டையைப் பற்றிப் பிடித்து அவனை விழுந்து விடாமல் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள்.

ஒரு நிமிடம் சித்தார்த் அங்கே நடந்த சம்பவத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் திகைத்துப்போய் நிற்க, அவன் மீதிருந்த தன் கையை விலக்கி எடுத்துக் கொண்டு அவனெதிரே வந்து நின்ற மாயா, “உங்களுக்கு அடி எதுவும் படல தானே? எதற்காக இவ்வளவு அவசரமாக படியிறங்கிப் போறீங்க? நல்லவேளை பின்னாடி நான் வந்ததால் உங்களை விழ விடாமல் பிடிச்சுட்டேன், ஒரு வேளை யாரும் இல்லாமல் இருந்திருந்தால் உங்க நிலைமை என்னன்னு யோசிச்சுப் பார்த்தீங்களா? உங்க முகம் அப்படியே கார்டூனில் வர்ற மாதிரி ஒரே பிளாட்டா மாறி இருக்கும், அது எப்படி இருக்கும்ன்னு கொஞ்சம் யோசிச்சு பாருங்களேன்” என்று விட்டு அதை நினைத்துப் பார்த்தபடி வாய்விட்டு சிரிக்க, சித்தார்த்தின் நண்பர்களும் தங்களை மறந்து சிரிக்க ஆரம்பித்தனர்.

ஆரம்பத்தில் அங்கே நடந்த விடயத்தை உள்வாங்கிக் கொள்ள முடியாமல் திகைத்துப்போய் நின்று கொண்டிருந்தவன் இப்போது தன்னை அந்த சிறு பெண் கேலிப் பொருள் போல ஆக்கியது மட்டுமின்றி, தன் நண்பர்களையும் அதில் கூட்டுச் சேர்த்திருப்பதை பார்த்து கோபமாக அவர்கள் அனைவரையும் முறைத்துப் பார்த்துக் கொண்டு நிற்க, மாயா அவனது கோபத்தை உணர்ந்து கொண்ட அடுத்து நொடியே தன் வாயை இறுக மூடிக் கொண்டாள்.

‘அச்சச்சோ! உன் வாயாலேயே எல்லாவற்றையும் கெடுத்துட்ட போல இருக்கே மாயா, இப்போ எப்படி நீ சொல்ல வந்த விஷயத்தை சொல்லப் போற?’ என மாயா தனக்குள்ளேயே வினா விடை நடத்திக் கொண்டிருக்க,

ஒருசில நொடிகள் அவளது முகத்தை உற்று நோக்கிய சித்தார்த், “ஹேய்! நீ அந்த சைக்கிள் பார்ட்டி தானே? அன்னைக்கு நாலைந்து பொடிப் பசங்க உன்னை வம்பிழுத்துட்டு இருந்தாங்கன்னு அமைதியாக நின்னுட்டு இருந்தவ தானே நீ?” என்று கேட்க, அவளும் ஆர்வமாக ஆமோதிப்பாக தலையசைத்தாள்.

“அன்னைக்கு அந்தப் பொடிப் பசங்களை ஒரு வழி பண்ணாமல் அமைதியாக நின்னுட்டு உனக்கு உதவி பண்ண என்னையே இன்னைக்கு கலாய்க்குறியா?”

“அய்யய்யோ! அப்படி எல்லாம் எதுவும் இல்லைங்க, ஒரு ப்ளோவில் அப்படி பேசிட்டேன் சாரி”

“சரி, சரி. போனால் போகட்டும்ன்னு மன்னிச்சு விடுறேன், ஓடிப்போயிடு”

“ஆனா நான் உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணுமே”

“அப்படியா? அப்படி என்ன விஷயம்?”

“அது வந்து, அது அன்னைக்கு நீங்க… இல்லை நான் வந்து… இல்லை உங்க கிட்ட அது வந்து” அத்தனை நேரம் வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருந்த மாயா சரியான தருணம் பார்த்து வார்த்தைகள் வராமல் தடுமாறிக் கொண்டு நிற்க,

அவளை ஏற இறங்கப் பார்த்தவன், “நீ என்னம்மா நான் ஸ்டாப்பா பேசிட்டு இருக்கும் போதே இப்படி புரியாத பாஷை பேசுற ஷோன்க்கு போயிட்ட. சரி, பரவாயில்லை. நீ என்ன சொல்லணுமோ அதை யோசிச்சு அப்புறமா சொல்லு” என்று விட்டு தன் நண்பர்களுடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விட, மாயாவோ தன் தடுமாற்றத்தை எண்ணி தன்னைத்தானே கடிந்து கொண்டு நின்றாள்.

“சே! இப்படி சொதப்பிட்டியே மாயா. நல்ல ஒரு வாய்ப்பு கிடைச்சும் இப்படி கோட்டை விட்டுட்டியே. இப்போ மறுபடியும் அவரை எப்படி பார்க்கிறது?” மாயா சிறு கவலையுடன் தன் சைக்கிள் நின்று கொண்டிருந்த இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த தருணம்,

சித்தார்த்தின் நண்பர்களில் ஒருவன் அவனது தோளில் தட்டி, “என்னடா சித்தார்த், எங்களுக்கு தெரியாமல் எதாவது ரகசியமாக பண்ணுறியா?” என்று கேட்க, அவனோ அவனது நண்பன் கேட்ட கேள்வியை புரிந்து கொள்ள முடியாதவனாக அவனைக் குழப்பாமாகப் பார்த்துக் கொண்டு நின்றான்.

“நீ என்னடா கேட்குற? எனக்கு எதுவுமே புரியலையே”

“டேய், டேய்! நடிக்காதடா. யாருடா அந்தப் பொண்ணு? உன்னைப் பார்த்ததும் அவ முகத்தைப் பார்க்கணுமே, அப்படியே ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரியுது. அது மட்டுமில்ல நம்ம ஊட்டிக்கு வந்த கொஞ்ச நாளாகவே அவ தினமும் நம்மளை பாலோ பண்ணிட்டு வர்றா. எதுவுமே இல்லாம ஒரு பொண்ணு இதெல்லாம் பண்ணுவாளா? உண்மையை சொல்லுடா, என்ன நடக்குது?”

“என்னது பாலோ பண்ணாளா? இது எப்போ?”

“அடேங்கப்பா! உங்களுக்கு எதுவுமே தெரியாது இல்லை. சும்மா இந்த சிவாஜி கணேசன் ஆக்டிங் எல்லாம் பண்ணாதீங்க சார், உங்க குட்டு எப்பவோ உடைஞ்சிடுச்சு. அந்தப் பொண்ணு நம்மை பாலோ பண்ணுறதே நீ நொடிக்கு ஒரு தடவை அந்தப் பொண்ணு வர்றாளா இல்லையான்னு பார்த்த இல்லை, அப்போதான் எங்களுக்கே தெரியும், உண்மையைச் சொல்லு எத்தனை நாளாக இது நடக்குது?”

“சரி, சரி. நீ இவ்வளவு தீவிரமாக டிடெக்டிவ் வேலை பண்ணதற்கு அப்புறம் எதையும் மறைத்து வேலை இல்லை” என்ற சித்தார்த் ஊட்டி வந்த முதல் நாள் அவளுக்கு உதவி செய்ததில் இருந்து, அதன் பிறகு அடிக்கடி அவள் தங்களைப் பின் தொடர்ந்து வருவதைக் கண்டு கொண்டதையும், அதைத் தான் அறியாதது போல தனக்குள்ளேயே அதை விரும்பி ஏற்றுக் கொண்டதையும் கூற சித்தார்த்தின் நண்பன் மட்டுமின்றி அவர்கள் பேசுவதை மறைந்து நின்று கேட்டுக் கொண்டிருந்த மாயா கூட அதிர்ச்சியடைந்து தான் போனாள்.

‘அப்போ? அப்போ அவருக்கும் என் மனதில் இருக்கும் அதே எண்ணம் தான் இருக்கா?’ சித்தார்த் பேசுவதைக் கேட்டு தன்னை மறந்து நின்று கொண்டிருந்த மாயா,

சித்தார்த்தின் இன்னொரு நண்பன் தனது தொலைபேசியில், “ஆமாடா கிஷோர், நாளைக்கு பார்க்குக்கு போறோம், அங்கே வைச்சுத்தான் சித்தார்த்திற்கு ஒரு சின்ன சர்ப்ரைஸ் பார்ட்டி செய்யப் போறோம், அடுத்த வாரம் அவன் லண்டன் போனால் அப்புறம் அவன் வர்றதுக்கு இரண்டு, மூணு வருஷம் ஆகிடுமே அதுதான்”

“…….”

“நாளைக்கு காலையில் தான்டா போறோம், எல்லாம் முடிச்சுட்டு அப்படியே ஈவ்னிங் கோயம்புத்தூர் வர்ற பிளான் தான், நீ எப்படியாவது காலையில் 10 மணிக்கு ஊட்டி வர்ற மாதிரி வந்துடு. நம்ம கேங்கில் நீ மட்டும்தான் மிஸ்ஸிங், என்ன புரிஞ்சுதா?” என்றவாறே அவளைக் கடந்து செல்ல, தான் கேட்ட அந்த விடயத்தை விட வேறு எந்த விடயம் அவளுக்கு சந்தோஷத்தைக் கொடுக்க முடியும்?

நாளை மாத்திரம் தான் சித்தார்த் ஊட்டியில் இருக்கப் போகிறான் என்கிற உண்மை ஒருபுறம் அவளுக்கு கவலையாக இருந்தாலும் நாளை ஒருநாள் எப்படியாவது தன் மனம் திறந்து அவனிடம் பேசி விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டவள் அதே உற்சாகமான மனநிலையுடன் அடுத்த நாள் விடியலை எண்ணி எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.

வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை காலை விடியல் அவள் எதிர்பாராத தருணத்தில் சட்டென்று கடந்து செல்வது போல இருந்தாலும், அன்றைய காலை விடியலானது ஆமை வேகத்தில் கடந்து செல்வது போலத்தான் அவளுக்கு இருந்தது.

அன்றைய நாள் தான் அவள் தன் வாழ்வில் சந்தோஷமாக இருக்கப் போகும் கடைசி நாள் என்பதை அறியாமலேயே மிக உற்சாகமாக தயாராகி வந்தவள் இளஞ்சிவப்பு நிறத்தில் வெள்ளை நிற வேலைப்பாடுகள் நிறைந்த சுடிதாரை அணிந்து அதற்கேற்றாற்போல் எளிமையான ஒப்பனையுடன் தன் மனம் கவர்ந்தவனைக் காண விரைந்து செல்ல ஆரம்பித்தாள்.

மாயா தான் போகும் வழி முழுவதும் தன் மனதில் உள்ள விடயங்களை சித்தார்த்திடம் சொன்னதும் அவன் எப்படியும் சம்மதம் தான் சொல்லக்கூடும் ஆனாலும் அவன் எப்படியாக தனது சம்மதத்தை தனக்கு சொல்லுவானோ என்கிற யோசனையுடனேயே சென்று கொண்டிருக்க, மறுபுறம் சித்தார்த் தன் நண்பர்களுடன் சிரித்துப் பேசியபடி அமர்ந்திருந்தான்.

சித்தார்த் தன் நண்பர்களுடன் செல்வதாக கூறியிருந்த பார்க்கை வந்து சேர்ந்திருந்தவள் தன் இதயம் கவர்ந்தவனைத் தேடி தன் பார்வையாலேயே வலை வீச, ஒரு சில கணங்களிலேயே அவளது வலை வீச்சுக்குள் சித்தார்த் அகப்பட்டுக் கொண்டான்.

காலத்தின் விளையாட்டோ என்னவோ அவனும் அவள் அணிந்திருந்தது போல இளஞ்சிவப்பு நிற சட்டை அணிந்திருக்க, அதைப் பார்த்தே பெருமளவு தனக்குள் குதூகலித்துக் கொண்டவள் சித்தார்த் அமர்ந்திருந்த இடத்தை நோக்கி நகர்ந்து சென்றாள்.

அவள் தங்களை நோக்கி வருவதைப் பார்த்ததுமே சித்தார்த்தின் நண்பர்கள் ஒருவிதமான கேலிச் சிரிப்புடன் அங்கிருந்து நகர்ந்து சென்று விட, மாயாவும் சித்தார்த்தும் என்ன பேசுவது என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்து தடுமாற்றத்துடன் நின்று கொண்டிருந்தனர்.

அந்த வழியாக அவர்களைக் கடந்து செல்வோர் அனைவரும் அவர்கள் இருவரையும் விசித்திரமாகப் பார்த்துக் கொண்டே செல்ல, அது மாயாவுக்கு என்னவோ போல் இருக்கவே சித்தார்த்தை நிமிர்ந்து பார்த்தவள், “உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும், அப்படி போய் பேசலாமா?” என்று அமைதியான ஒரு இடத்தைக் காட்ட அவளைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்தவன்,

அவள் காட்டிய இடத்தில் சென்று நின்று கொண்டு, “சொல்லுங்க என்ன விஷயம்?” என்று கேட்க, ஒரு சில நொடிகள் தன் கண்களை மூடி ஆழ்ந்த மூச்சுக்களை எடுத்து விட்டுக் கொண்டவள் பின்னர் கண்களைத் திறந்து கொண்டு தைரியமாக தன் மனதிற்குள் இருந்த விடயத்தை அவனிடம் மடைதிறந்த வெள்ளமென சொல்ல ஆரம்பித்தாள்……..

 

error: Content is protected !!