எல்லையில்லா இன்பம் நீதான் காதலா – 11

IMG_20221031_134812

எல்லையில்லா இன்பம் நீதான் காதலா – 11

“நான் உங்களை என் மனதார விரும்ப ஆரம்பித்தேட்டேன் சீனியர் சித்தார்த் அண்ணா” மாயாவின் வெட்கம் கலந்த பேச்சில் ஒரு கணம் தன்னை மறந்து நின்று கொண்டிருந்த சித்தார்த் உடனை தன்னை சுதாரித்துக் கொண்டு,

“வாட்? லவ்வா? அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. என்னை உனக்கு எத்தனை நாளாகத் தெரியும்? என்னைப்பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா? நான் நல்லவனா? கெட்டவனா? ஏதாவது உனக்குத் தெரியுமா? நீ என்னை இந்த இரண்டு வாரமாகத் தான் இந்த ஊட்டியில் பார்த்திருக்க, அதுவும் ஒன்றோ, இரண்டு தடவை தான் நான் உன்கூட ஒழுங்காகப் பேசியே இருப்பேன், இதையெல்லாம் வைத்து நீ லவ் பண்ணுறேன்னு இப்படி வந்து நிற்கலாமா சொல்லு? உன்னைப் பார்த்தால் நீ நல்லா படிக்கிற பொண்ணு மாதிரி வேறு இருக்க, கிளாசில் நீ எத்தனையாவது வருவ?” என்று கேட்க,

முகம் முழுவதும் வாடிப்போனவளாக அவனை நிமிர்ந்து பார்த்தவள், “எப்போவுமே பர்ஸ்ட் ரேங்க் தான்” என்று கூற, அவனும் தான் சரியாக சொன்னேனே என்பது போல அவளைப் பார்த்துக் கொண்டு நின்றான்.

“இதே பாரும்மா, ஆக்சுவலா எனக்கு உன்னோட பேரு கூட தெரியாது…”

“என் பேரு…”

“ஒரு நிமிஷம், ஒரு நிமிஷம். நான் முதல்ல பேசி முடிச்சுடுறேன். இந்த வயதில் சின்ன சின்ன சலனம் எல்லாம் மனதில் வர்றது சகஜம் தான், ஆனா நம்ம அதை அவ்வளவு சீரியஸாக எடுத்துக்கக் கூடாதும்மா, இன்னும் சொல்லப்போனால் அப்படியான ஃபீலிங் வரலேன்னாதான் பிரச்சினை. நீ வேற ரொம்ப நல்லா படிக்கிற பொண்ணா இருக்க, ஆமா உன்னோட அம்பிஷன் என்ன?”

“பெரிய ஃபேஷன் டிசைனர் ஆகி ஒரு கம்பெனி ஆரம்பிக்கணும்”

“சூப்பர்! இவ்வளவு பெரிய இலட்சியத்தை மனதில் வைத்துட்டு இப்படி உன் மனசை நீ அலைபாய விடலாமா சொல்லு?”

“ஆனா நேற்று நீங்க உங்க பிரண்ட் கிட்ட என்னைப் பற்றி பேசுனீங்களே, அப்போ அதற்கு என்ன அர்த்தம்?” மாயாவின் கேள்வியில் ஒரு கணம் திக்குமுக்காடிப் போனவன் உடனே தன்னை சுதாரித்துக் கொண்டு,

“பசங்க அப்பப்போ மனதில் என்ன தோணுதோ அதைப் பேசிட்டு அதை அப்படியே மறந்தும் போயிடுவோம், நான் ஏதோ என் பிரண்ட் கிட்ட விளையாட்டாகப் பேசியதைக் கேட்டு நீ இந்தளவிற்கு வந்து நிப்பேன்னு நான் நினைக்கவே இல்லை” என்றவன் ஒரு சில நிமிடங்கள் அமைதியாக அவளது முகமாற்றத்தை அவதானித்துக் கொண்டு நின்றான்.

“நான் சொல்லுவதை எல்லாம் கேட்கும் போது உனக்கு கஷ்டமாக இருக்கும்ன்னு எனக்குப் புரியுதும்மா, ஆனாலும் நிதர்சனம்ன்னு ஒண்ணு இருக்கே. ஆரம்பத்தில் இதைக் கடந்து போவது உனக்கு கஷ்டமாகத்தான் இருக்கும், அப்புறம் போகப் போக இதெல்லாம் மறந்துட்டு நீ சந்தோஷமாக உன்னோட இலட்சியத்தை தேடிப் போவ, இது கண்டிப்பாக நடக்கும் நீ வேணும்னா பாரு. அதனால இதைப்பற்றி எல்லாம் யோசிச்சு உன்னை நீயே கஷ்டப்படுத்திக்காமல் அடுத்து என்ன செய்யலாம்ன்னு யோசி, இந்த விஷயத்தை இந்த இடத்திலேயே நீயும், நானும் மறந்துட்டு போயிடலாம், ஓகே வா?” சித்தார்த் ஒவ்வொரு விடயமாகப் பேசிக் கொண்டே சென்று கொண்டிருக்க, மாயாவிற்கு அது எதையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலை வரவே இல்லை.

முதன்முதலாக அவள் மனதிற்குள் ஏற்பட்ட உணர்விற்கு கிடைத்த தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாமல் கண்கள் கலங்க நின்று கொண்டிருந்தவள் அங்கிருந்து சென்று விடலாம் என்கிற எண்ணத்துடன் திரும்பிச் செல்லப் பார்க்க, அவள் முற்றிலும் எதிர்பாராத விதமாக அவளது தந்தை அவளெதிரில் நின்று கொண்டிருந்தார்.

நாராயணனை அங்கே பார்த்ததும் மாயாவிற்கு ஒருபுறம் அதிர்ச்சியாகவும், மறுபுறம் பயமாகவும் இருக்க, சட்டென்று தன் முகத்தை துடைத்துக் கொண்டவள், “அப்பா! நீங்க இங்க எப்படி?” என்று கேட்க,

அவளை முறைத்துப் பார்த்துக் கொண்டு நின்றவர், “அது நான் உன்கிட்ட கேட்க வேண்டிய கேள்வி அம்மு, நீ இங்கே என்ன பண்ணிட்டு இருக்க? அதற்கு முதல்ல இந்தப் பையன் யாரு?” என்று கேட்க, சித்தார்த் அவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டு நின்றான்.

“அது வந்து ப்பா… இவங்க வந்து எனக்கு…”

“அங்கிள், அங்கிள் ஒரு நிமிஷம். நீங்களும், உங்க பொண்ணும் பேசிட்டு இருக்கும் போது நடுவில் பேசுவதற்கு முதல்ல மன்னிப்பு கேட்டுக்கிறேன். முதல்ல நான் என்னைப் பற்றி சொல்லிடுறேன். என்னோட பேரு சித்தார்த், சொந்த ஊர் கோயம்புத்தூர், ஊட்டிக்கு என் பிரண்ட்ஸ் கூட சுற்றிப் பார்க்க வந்தேன். ஆக்சுவலா என்ன நடந்ததுன்னா உங்க பொண்ணுக்கு ஒரு தடவை நான் உதவி பண்ணியிருக்கேன், அதே மாதிரி உங்க பொண்ணும் எனக்கு ஒரு தடவை உதவி பண்ணியிருக்காங்க, அவ்வளவுதான் அங்கிள். அந்தப் பழக்கத்தில் தான் அவங்க என் கூட நின்று பேசிட்டு இருந்தாங்க” சித்தார்த் நாராயணனைப் பார்த்து பயந்து போய் நின்று கொண்டிருந்த மாயாவுக்கு உதவி செய்யும் நோக்கில் அவரது கேள்விக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்க, அவரோ அவனைக் கவனியாதது போல மாயாவையே பார்த்துக் கொண்டு நின்றார்.

“இந்த ஆளு சொல்லுறது உண்மையா அம்மு?” நாராயணனின் அதட்டலான கேள்விக்கு அவசரமாக ஆமென்று தலலயசைத்தவள்,

“ஆமாப்பா, அவங்க எனக்கு உதவி பண்ணாங்க, நானும் அவங்களுக்கு உதவி பண்ணேன், அவ்வளவுதான், நான் வீட்டுக்குப் போறேன்பா” என்றவாறே அங்கிருந்து நகர்ந்து செல்லப் பார்க்க,

அவளை நகர விடாமல் அவளது கையை இழுத்துப் பிடித்துக் கொண்டவர், “இந்தப் பையன் எப்போ உனக்கு உதவி பண்ணான்? இன்னைக்கா?” என்று கேட்க, அவளோ அவரைப் பார்த்து தயக்கத்துடன் தன் தலையை அசைத்தாள்.

“அப்போ எப்பவோ பண்ண உதவிக்கு இன்னைக்கு என்ன பேச்சு வேண்டி இருக்கு? அதுவும் ஆளு இல்லாத இடத்தில் தனியா ஒரு பையன் கூட நின்னு பேசும் அளவுக்கு அப்படி என்ன அவசியம் வந்தது உனக்கு? ஏதாவது பேசணும்னா துணைக்கு யாராவது பெரியவங்க ஒருத்தரைப் பக்கத்தில் வைச்சுட்டுத்தானே நீ பேசியிருக்கணும், இப்படி ரகசியம் பேசுவது போல் மறைந்து நின்னு எதற்காக பேசணும்? சொல்லு அம்மு, உன்னைத் தான் கேட்கிறேன், பதில் சொல்லு” நாராயணனின் அதட்டலில் திடுக்கிட்டு போய் அவரை நிமிர்ந்து பார்த்தவள், சிறு தயக்கத்துடன் சித்தார்த்தைத் திரும்பிப் பார்க்க அவனுக்கோ அவளைப் பார்க்க வெகு பரிதாபமாக இருந்தது.

“அங்கிள், மறுபடியும் உங்க பேச்சுக்கு நடுவில் டிஸ்டர்ப் பண்ணுவேன்னு தப்பாக நினைக்க வேண்டாம், அவங்க சின்னப் பொண்ணு தானே? இப்படி எல்லாம் அதட்டிப் பேசுனா அவங்க எப்படி உங்க கேள்விக்கு பதில் சொல்லுவாங்க, சொல்லுங்க?”

“இதோ பாருங்க தம்பி, இவ என் பொண்ணு, இவ கிட்ட எப்படி பேசணும்னு நீங்க ஒண்ணும் எனக்குச் சொல்லித் தர வேண்டியதில்லை, நான் என் பொண்ணு கிட்ட என்னமோ பேசுறேன், எப்படியோ பேசறேன், அதைப் பற்றி நீங்க கவலைப்பட வேண்டியதில்லை. முதல்ல நீங்க இங்கே இருந்து கிளம்புறீங்களா?” நாராயணன் சிறிது சலித்துக் கொண்டே சித்தார்த்தை அங்கிருந்து போகும் படி சைகை காட்ட,

அவனோ அவரது கோபத்தைப் பார்த்து சிறு தயக்கத்துடன், “அங்கிள் நீங்க ரொம்ப கோபமாக இருக்கீங்க, இந்த சமயத்தில் உங்க பொண்ணு சொல்லும் விஷயத்தை எப்படி நீங்க எடுத்துக் கொள்ளுவீங்கன்னு தெரியலை. அதனால் நானே என்ன நடந்ததுன்னு எல்லாவற்றையும் உங்களுக்குப் புரியும் மாதிரி நானே சொல்லுறேன், நீங்க உங்க பொண்ணை எதுவும் கேட்காதீங்க” என்றவன் மாயாவின் மறுப்பான தலையசைவை கவனியாமலேயே நாராயணனுடன் மேற்கொண்டுப் பேசத் தொடங்கினான்.

“அங்கிள் உங்க பொண்ணோட வயதைத் தாண்டித்தான் நீங்களும், நானும் இந்த இடத்தில் நின்னுட்டு இருக்கோம் இல்லையா? அந்த வயதில் சில சில எண்ணங்கள், சில சில ஈர்ப்புகள் வர்றது சகஜம் தானே? அதேபோலதான் உங்க அம்முவோட மனசிலேயும் நான் அவங்களுக்கு பண்ண உதவியைப் பார்த்து என் மேலே ஒரு சின்ன ஈர்ப்பு வந்துடுச்சு, அதில் அவங்க தப்பு ஒண்ணும் இல்லை.

இந்த வயதில் இதெல்லாம் சகஜம் தான், இன்னும் சொல்லப்போனால் இந்த வயதில் அப்படியான எண்ணங்கள் வரலேன்னா தான் தப்பு, வந்தால் தப்பே இல்லை. அதை எல்லாம் பெரிதாக எடுத்துக்க வேண்டாம்ன்னு சொல்லி அம்முவுக்கு நான் எல்லாவற்றையும் புரிய வைச்சுட்டேன் அங்கிள். அவங்களும் அதை எல்லாம் புரிஞ்சுக்கிட்டு திரும்பி போகலாம்ன்னு இருக்கும் போது தான் நீங்க வந்தீங்க அங்கிள், மற்றபடி வேறு எந்தப் பிரச்சினையும் இல்லை, வேறு எந்த தப்பான விஷயமும் இங்கே நடக்கல” என்று கூறிய சித்தார்த்தை கோபம் தாளாமல் முறைத்துப் பார்த்துக் கொண்டு நின்றவர், ஒரு வார்த்தை கூட பதில் பேசாமல் மாயாவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அங்கிருந்து வேகமாக சென்று விட, அவனோ அவர்கள் சென்ற வழியையே தவிப்போடு பார்த்துக் கொண்டு நின்றான்.

சித்தார்த்தும், மாயாவும் பேசிக்கொண்டு நிற்பதை சற்று தள்ளி அவதானித்துக் கொண்டு நின்ற அவனது தோழன் லோகேஷ் அவனருகில் வந்து, “என்னாச்சுடா சித்தார்த்? ஏதாவது பிரச்சினையா?” என்று கேட்க, கனவில் இருந்து விழிப்பதைப் போல அவனைத் திரும்பிப் பார்த்தவன் மறுப்பாக தலையசைத்து விட்டு அங்கே நடந்த விடயத்தைப் பற்றிக் கூற லோகேஷ் சிறு அதிர்ச்சியோடு அவனைப் பார்த்துக் கொண்டு நின்றான்.

“என்னடா சித்தார்த்? இப்படி பண்ணிட்ட? அந்தப் பொண்ணோட அப்பாகிட்ட இப்படி அந்தப் பொண்ணை மாட்டிக் கொடுத்துட்டியே”

“நான் என்னடா மாட்டிக் கொடுத்தேன்? அவருதான் என்ன நடந்தது, என்ன நடந்ததுன்னு அந்தப் பொண்ணை அப்படியே மிரட்டிக் கேட்டுட்டு இருந்தாங்க, அதனாலதான் நடந்ததை அவருக்கு எடுத்துச் சொன்னேன். அதோடு இங்கே நடந்த விடயத்தைப் பார்க்கும் அந்தப் பொண்ணு மேலேயோ, என் மேலேயோ தப்பு இல்லையே, அப்புறம் எதற்காக உண்மையை மறைக்கணும்? அதோடு அவரு வயதிலும், அனுபவத்திலும் ரொம்ப பெரியவரு, நான் சொன்ன விஷயத்தை அவரு ரொம்ப நல்லா புரிஞ்சுட்டு இருப்பாரு”

“என்னம்மோ சொல்லுற, ஆனா நாளைக்கு ஏதாவது ஒரு பிரச்சனை வந்ததுன்னு வை, அந்தப் பொண்ணு மறுபடியும் உன்னை சந்தித்தால் உன்னை அப்படியே உயிரோடு புதைத்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை”

“அந்தப் பொண்ணு அப்படி எல்லாம் யோசிக்க மாட்டாடா, அவ ரொம்ப ஸ்மார்ட். இப்போ கூட நான் எடுத்துச் சொன்ன விஷயத்தை அமைதியாக ஏற்றுக்கிட்டாளே, எந்த ஆர்ப்பாட்டமோ, தகராறோ பண்ணல, அவ ரொம்ப நல்லவ”

“நீ என்ன அந்தப் பொண்ணுக்கு இவ்வளவு சப்போர்ட் பண்ணுற? ஒரு வேளை நீயும், அந்தப் பொண்ணை?”

“சேச்சே! ஏன்டா இப்படி எல்லாம் பேசுற? அவ சின்னப் பொண்ணு, அவளுக்கு அவ வாழ்க்கையில் இன்னும் சாதிக்க வேண்டிய விடயங்கள் நிறையவே இருக்கு, அப்படி இருக்கும் போது என்னால் அந்தப் பொண்ணு வாழ்க்கை அழிஞ்சுடக்கூடாது அவ்வளவு தான். சரி, வா நம்ம பார்ட்டியை முடிச்சுட்டு ஊருக்கு கிளம்பலாம், அம்மா வேற எப்போ வர்ற, எப்போ வர்றன்னு கேட்டு காலையில் இருந்து ஆயிரம் தடவை கால் பண்ணிட்டாங்க, வா போகலாம்” என்றவாறே சித்தார்த் ஏதோ தன்னால் முடிந்த அளவுக்கு மாயாவுக்கு பிரச்சினை ஏற்படலாம் தடுத்து விட்டோம் என்கிற நினைப்பில் சந்தோஷமாக ஊருக்குப் புறப்பட்டுச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தவன் அதன் பிறகு அந்த நிகழ்வுகளைப் பற்றி முற்றாக மறந்தே போயிருந்தான்.

எப்போதாவது அவ்வப்போது அந்த சிறிய பெண்ணின் முகம் ஞாபகம் வரும் போதெல்லாம் தன்னையும் அறியாமல் புன்னகைத்துக் கொள்பவன் இப்போது அவள் ஏதாவது ஒரு நல்ல நிலையில் இருப்பாள் என்று தனக்குத்தானே கூறி விட்டு தன் கவனத்தை தனது வேலையில் திருப்பிக் கொள்ளுவான்.

ஆனால் இத்தனை வருடங்களுக்குப் பின்னர் இப்படியான ஒரு நிலையில் அவளை சந்திக்கக்கூடும் என்று அவன் கனவில் கூட நினைத்திருக்கவில்லை.

அதுவும் அவளது வாழ்க்கை முற்றிலும் மாறிப் போக தான் தான் காரணம் என்று அவள் சொன்னது அவனுக்கு இன்னமும் அதிர்ச்சியை அள்ளி வழங்கியிருந்தது.

அப்படி அவள் வாழ்க்கை முற்றிலும் மாறிப் போகும் அளவிற்கு தான் என்ன செய்து விட்டோம் என்கிற யோசனையுடன் குழப்பம் சூழ்ந்தவனாக‌ சித்தார்த் தன்னறைக்குள் அமர்ந்திருக்க, மறுபுறம் மாயா அன்றைய நாள் தனக்கு கொடுத்த அதிர்ச்சிகளை எண்ணிக் கண்கள் கலங்க வானில் தெரிந்த நிலவை வெறித்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

சித்தார்த் பேசியதைக் கேட்ட அடுத்த நொடியே கோபமாக மாயாவின் கைய்ப பிடித்து இழுத்துக் கொண்டு அவர்கள் வீட்டை வந்து சேர்ந்திருந்த நாராயணன், “பத்மா! பத்மா!” அந்த வீடே அதிரும் படி சத்தம் போட, அவர் போட்ட சத்தத்தில் பதட்டத்துடன் சமையலறையில் இருந்து வெளியேறி வந்த பத்மாவதி முகம்‌ சிவக்க ருத்ரமூர்த்தியாக நின்று கொண்டிருந்த தன் கணவரையும், அவரருகில் பயந்து நடுங்கியபடி அழுதழுது சிவந்து போன முகத்துடன் நின்று கொண்டிருந்த மாயாவையும் பார்த்து சற்று குழப்பமடைந்து தான் போனார்.

தன் பிடியில் இருந்த மாயாவின் கையைப் பிடித்து பத்மாவதியின் புறம் தள்ளி விட்ட நாராயணன், “உன் புள்ளை எங்கே போறா, எங்கே வர்றா, யார் கூட‌ பழகுறான்னு எதையும் நீ பார்க்க மாட்டியா? இப்படியே அவங்களை அவங்க இஷ்டத்திற்கு விட்டால் நமக்கு அவமானம் மட்டும் தான் மிஞ்சும், இதையெல்லாம் பார்க்க நேரமில்லாமல் உனக்கு அப்படி என்ன வேலை வேண்டி இருக்கு?” என்று வினவ, அவர் தள்ளி விட்ட வேகத்தில் தடுமாறி விழப் போன மாயாவை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவர் அவர் என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்து கொள்ள முடியாமல் திகைத்துப் போய்‌ நின்று கொண்டிருந்தார்.

“நீங்க என்னங்க சொல்றீங்க? நம்ம பசங்க அப்படி என்னங்க தப்பு பண்ணிட்டாங்க? நம்ம பிள்ளைங்க இரண்டு பேரும் சின்னக் குழந்தைங்க மாதிரி” பத்மாவதியின்‌ பேச்சைக் கேட்டு நக்கலாக சிரித்தவர்,

“அடடா! நீதான் உன் பிள்ளையை மெச்சிக்கணும். இதோ நிற்குதே உன் வளர்ந்த குழந்தை அது என்ன பண்ணியிருக்குன்னு அது வாயாலேயே கேட்டுத் தெரிஞ்சுக்கோ” என்று கூற, தன்‌ கணவர் இதற்கு முன் ஒரு தடவை கூட இந்தளவுக்கு கோபப்பட்டதில்லை இப்போது இவ்வளவு தூரம் கோபப்படுகிறார் என்றால் நிச்சயமாக அதில் ஏதோ இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட பத்மாவதி மாயாவின் முகத்தை வலுக்கட்டாயமாக நிமிர்த்தி என்ன நடந்தது என்று வினவ, அவளும்‌ சிறு தயக்கத்துடன் சித்தார்த்தை சந்தித்தது முதல் சிறிது நேரத்திற்கு முன் அவன் தன்னிடம் பேசியது வரை ஒன்று விடாமல் சொல்லி முடித்திருந்தாள்.

மாயா எல்லாவற்றையும் சொல்லி முடித்த அடுத்த கணம்‌ பத்மாவதியின் கரம் அவளது கன்னத்தில் இடியென இறங்கியிருக்க, அவளோ தன் அன்னை அடித்த அதிர்ச்சியில் கண்களால் தாரை தாரையாக கண்ணீர் வடிந்தது கொண்டிருந்ததைக் கூட உணர முடியாதவளாக விக்கித்துப் போய் நின்று கொண்டிருந்தாள்.

“சின்னப் பொண்ணு தானேன்னு உனக்கு செல்லம் கொடுத்து வளர்த்தால் நீ என்ன காரியம் பண்ணி வைத்திருக்க?”

“அம்மா!”

“பேசாதேடி! இன்னொரு தடவை என்னை அம்மான்னு கூப்பிட்ட உன்னை என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. உங்க அப்பாவும், நானும் ராப்பகலாக கஷ்டப்பட்டு உழைத்து உனக்குத் தேவையானது எல்லாம் பார்த்து பார்த்து செய்து தர்றோம் இல்லையா? அதுதான் உனக்கு இந்தளவுக்கு தைரியம் வந்துடுச்சு. நீ பண்ணியிருக்கும் காரியத்துக்கு உன்னை அப்படியே கொன்னு போட்டுடலாம் போல இருக்கு, தயவுசெய்து என் கண்ணு முன்னாடி நிற்காமல் போயிடு, போயிடு” பத்மாவதி தன் எதிரில் நின்று கொண்டிருந்த மாயாவின் முகத்தை நிமிர்ந்தும் பாராமல் அவளை அங்கிருந்து போகச் சொல்லிக்‌ கட்டளையிட, அடுத்தடுத்து பல அதிர்ச்சிகளைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மொத்தமாக துவண்டு போயிருந்த மாயா அவரது அதட்டலான குரலைக் கேட்ட அடுத்த கணமே அந்த‌ இடத்தில் மயங்கி வீழ்ந்திருந்தாள்……

error: Content is protected !!