எல்லையில்லா இன்பம் நீதான் காதலா – 03

எல்லையில்லா இன்பம் நீதான் காதலா – 03
சித்தார்த் ஏற்கனவே திட்டமிட்டபடி அவனுடைய பழைய ப்ராஜெக்ட் வேலைகள் எல்லாவற்றையும் அந்த குறிப்பிட்ட வாரத்திற்குள் முடித்து விட்டு, அடுத்த புதிய வேலைக்கான எல்லாத் திட்டங்களையும் கிஷோரிடமும் தன் தந்தையிடமும் விலாவாரியாக விளக்கி விட்டு தன்னுடைய சிறு வயதுக் கனவை நிறைவேற்றப் போகும் அந்த நாளை எண்ணி வெகு ஆவலாய் காத்திருந்தான்.
சித்தார்த்திடம் சொல்லியிருந்தது போலவே சாவித்திரி, கௌசிக் மற்றும் கௌசல்யா ஊட்டி செல்வதற்காக தங்கள் பொருட்களை எல்லாம் எடுத்து வைக்கிறோம் என்கிற பெயரில் அவர்கள் வீட்டையே இரண்டாக்கியிருக்க, அவர்கள் செய்யும் சேட்டைகளைப் பார்த்து திகைத்துப்போய் அமர்ந்திருந்த வைத்தீஸ்வரன், “எனக்கு என்னவோ நீங்க எல்லோரும் ஊட்டி போய் வரும் போது ஏதோ ஒரு பெரிய பூகம்பத்தை இழுத்துட்டு வரப் போறீங்கன்னு தோணுது, ஃபோட்டோகிராப் காம்பெடிஸனுக்காக ஊட்டி போகப் பிளான் பண்ணது என்னவோ சித்தார்த் தான், ஆனா நீங்க அடிக்கடி லூட்டியைப் பார்த்தால் சித்தார்த் ஏதோ உங்க கூட வர்றது போல இருக்கு.
இங்கே இருந்து கிளம்புவதற்கே இவ்வளவு அலப்பறைன்னா அங்கே போய் என்னன்ன கொடுமை எல்லாம் நடக்கப் போகுதோ? நல்லவேளை நான் இந்த வானரங்களுக்கு நடுவில் வராமல் தப்பிச்சுட்டேன், இவ்வளவு பெரிய உதவி பண்ண மை சன் சித்தார்த், ரொம்ப ரொம்ப நன்றி” என்றவாறே தன் அருகில் அமர்ந்திருந்த சித்தார்த்தின் தோளில் தட்ட,
“அப்பா!” என்றவாறே அவரைத் திரும்பிப் பார்த்தவன்,
“நானே இவங்க பண்ணுற வேலை எல்லாம் பார்த்து தலை, கால் புரியாமல் இருக்கேன், இதில் நீங்க வேற எரியுற நெருப்பில் எண்ணெய் ஊற்றுறீங்களே! இதெல்லாம் அடுக்குமா?” என்று வினவ,
அவனைத் தன் தோளோடு அணைத்துக் கொண்டவர், “எரியுற நெருப்பில் எண்ணெய் ஊற்றினால் தானேடா கண்ணா நெருப்பு இன்னும் சூப்பராக எரியும், அணைந்து போன நெருப்பில் எண்ணெயை ஊற்றினால் என்ன? தண்ணீரை ஊற்றினால் என்ன?” என்று வினவ, சித்தார்த்தோ தன் தந்தையைப் பார்த்து தன் இரு கைகளையும் தலைக்கு மேல் வைத்து கும்பிட்டுக் கொண்டான்.
“அம்மாவுக்கும், உங்களுக்கும் எந்த விஷயத்தில் ஒத்துப் போகுதோ இல்லையோ, இப்படி நக்கல் பேச்சில் மட்டும் குறையே இருக்காது”
“அதுதான் டா காதல்! நீயும் ஒரு நாள் கல்யாணம் பண்ணிப்ப, அப்போ உன் பொண்டாட்டி கூட சேர்ந்து எங்களை நக்கல் பண்ணாமலேயா இருக்கப் போற? அப்போ தெரியும் டா கண்ணா உனக்கு இதெல்லாம்”
“ஐயோ! அப்பா, தயவுசெய்து இப்படி எல்லாம் சொல்லி பயம் காட்டாதீங்க. ஏற்கனவே உங்க வைஃப் பண்ணுற சேட்டை எல்லாம் பார்த்து தலை சுற்றிப் போய் நிற்கிறேன்” என்றவாறே தன் தந்தையுடன் சிரித்துப் பேசியபடி தாங்கள் கொண்டு செல்லத் தேவையான பொருட்களை எல்லாம் காரில் எடுத்து வைத்துக் கொண்டு நின்றவன்,
“அப்பா, எப்போதும் போல ஃபோனை யூஸ் பண்ணிட்டு சார்ஜ் போட மறந்து வீட்டிலேயே வைச்சுட்டுப் போயிடாதீங்க, அடிக்கடி அம்மாவோ, நானோ கால் பண்ணுவோம், ரொம்ப ஜாக்கிரதையாக இருங்கப்பா, அப்புறம் மறக்காமல் நேரத்திற்கு சாப்பிடுங்க. அப்புறம் நான் போற வேளை ஒருவேளை நேரத்திற்கே முடிந்தால் இரண்டு வாரம் வரை எல்லாம் அங்கே இருக்க மாட்டோம், நேரத்திற்கே வந்துடுவோம், சரியா? அப்புறம்…” என பேசிக் கொண்டே போக,
அவனது தோளில் தட்டி அவனை நிதானப்படுத்தியவர், “இது எல்லாம் உங்க அம்மா போன வாரத்தில் இருந்தே என் கிட்ட சொல்லிட்டு இருக்கா சித்தார்த், இதில் நீ மறுபடியும் அதையே சொல்லி என்னை ரொம்ப படுத்துறியேடா கண்ணா” என்றவாறே அவனைப் பார்த்து சோகமாக தன் முகத்தை வைத்துக் கொள்வது போல நின்று விட்டு,
பின் சட்டென்று அவனைப் பார்த்து சிரித்து விட்டு, “நீ என்னை நினைத்து எதுவும் ஃபீல் பண்ண வேண்டாம்டா கண்ணா, நான் இங்கே ரொம்ப சேஃபா இருப்பேன், வீட்டில் துணைக்கு பழனி இருப்பான், ஆஃபிஸில் கிஷோர் இருப்பான், அப்புறம் என்ன கவலை? ஆனா நான் சேஃபா இருப்பது போல நீங்களும் அங்கே சேஃபா இருக்கணும், முக்கியமா நீ கவனமாக இருக்கணும் சரியா? அதுவும் காட்டுக்குள்ளே போய் வரும் போது ரொம்ப ரொம்ப அவதானமாக இருக்கணும், சரியா?” என்று கேட்க, அவரைப் பார்த்து சரியென்று தலையசைத்தவன் அவரை ஒரு முறை இறுக அணைத்து விடுவித்தான்.
“அட! அட! அப்பாவும், பையனும் பாச மழையைப் பொழிந்து வீட்டையே மூழ்கடிச்சுடாதீங்கப்பா” சித்தார்த் மற்றும் வைத்தீஸ்வரன் மும்முரமாக பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்து புன்னகை செய்தபடியே அவர்கள் எதிரில் வந்து நின்ற சாவித்திரி,
“நான் பெற்ற செல்வமே! நீங்க அப்பா கூட உங்க பாசத்தைக் காண்பித்து முடித்திருந்தால் இப்போ நான் என் பாசத்தைக் காண்பிக்கலாமா?” என்று வினவ,
“ஐயோ! அம்மா! உங்க வீட்டுக்காரரை நீங்களே வைச்சுக்கோங்க” என்றவாறே வைத்தீஸ்வரனின் கையை சாவித்திரியின் கையில் வைத்து விட்டு சிரித்துக் கொண்டே சித்தார்த் அங்கிருந்து நகர்ந்து விட, அவனது தோளில் மெல்லத் தட்டியவாறே தனது கணவனின் புறம் திரும்பிய சாவித்திரி தன் கணவரின் கையை மெல்ல வருடிக் கொடுத்தபடியே அவரை நிமிர்ந்து பார்த்தார்.
“என்னங்க, பார்த்து பத்திரமாக இருந்துக்கோங்க சரியா? வேளா வேளைக்கு சாப்பிடுங்க, நேரத்திற்கு தூங்குங்க, வேலை வேலைன்னு ரொம்ப நேரம் எல்லாம் உடம்பைப் போட்டு வருத்திக்காதீங்க. அப்புறம் நான் நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்களுக்கு கால் பண்ணுவேன், அதேமாதிரி நீங்களும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கால் பண்ணுங்க. அப்புறம் உங்களுக்கு இங்கே வேலை அவ்வளவு அதிகமாக இல்லேன்னா நீங்களும் உடனே புறப்பட்டு ஊட்டி வந்துடுங்க சரியா? அப்புறம் நாங்கள் எவ்வளவு சீக்கிரமாக வர முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக வர ட்ரை பண்ணுறோம் சரியா? அப்புறம்…”
“அம்மா! போதும்மா, இப்படியே ஆளாளுக்கு அப்பாகிட்ட அதையும், இதையும் சொல்லி சும்மா இருக்கிற மனிஷனை ரொம்ப டென்ஷன் ஆக்கி விட்டுடாதீங்க, ஆல்ரெடி லேட் ஆச்சு, சீக்கிரம் வாங்கம்மா. அப்படி உங்களுக்கு உங்க ஆத்துக்காரரை விட்டு வர மனசு இல்லேன்னா சொல்லிடுங்க, நாங்க மூணு பேரும் அப்படியே ஊட்டியை ஜாலியாக சுற்றிப் பார்த்துட்டு வர்றோம்” காரிற்குள் அமர்ந்திருந்தபடியே கௌசிக் தன் அன்னையைப் பார்த்து கையசைத்து விட்டு காரின் கதவை அடைக்கப் போக,
அவசர அவசரமாக அவனது அருகில் ஓடிச் சென்று அமர்ந்து கொண்டவர், “உன்னை எல்லாம் நம்ப முடியாது, வேணும்னே கார் கதவை அடைச்சுட்டு கதவு லாக் ஆகிடுச்சு, நீங்க வர வேண்டாம்ன்னு சொல்லுவ” என்றவாறே அவனது தலையில் மெல்லக் கொட்டி விட்டு,
“சித்தார்த் கண்ணா! வண்டியை எடுப்பா” என்று கூற, சித்தார்த்தும் புன்னகை முகமாக தங்கள் பிரயாணத்தை ஆரம்பித்து வைத்தான்.
தன் மனைவி மற்றும் பிள்ளைகள் செல்லும் வாகனம் தன் கண்ணில் இருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டு நின்ற வைத்தீஸ்வரன் தன் மனைவியும், பிள்ளைகளும் எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் திருப்தியாக தங்கள் பயணத்தை முடித்து விட்டு வீடு வந்து சேர வேண்டும் என்று எண்ணியபடியே தன் வேலைகளை கவனிக்க ஆரம்பித்தார்.
ஊட்டி சென்று சேரும் வரை கௌசிக்கும், கௌசல்யாவும் தங்கள் அன்னையுடன் சேர்ந்து பல கதைகள் பேசி அந்தப் பிரயாணத்தையே முற்றிலும் கலகலப்பான ஒரு பயணமாக மாற்றியிருக்க, தங்கள் வீட்டிலிருந்து ஊட்டி வந்து சேர எடுத்த அந்த நான்கு மணிநேரமும் எப்படி போனது என்று கூட சித்தார்த்திற்குத் தெரியவில்லை.
அந்தளவிற்கு தன் பேச்சினால் அந்தப் பிரயாணக் களைப்பை சாவித்திரி எதுவும் இல்லாமல் போகச் செய்திருந்தார்.
ஊட்டி வந்ததும் தங்குவதற்கென சித்தார்த் ஏற்கனவே ஒரு ரிசார்டை பதிவு செய்து வைத்திருக்க, அவர்கள் ஊட்டி வந்து சேர்ந்ததும் நேராக அந்த ரிசார்டை நோக்கிப் புறப்பட்டுச் சென்றனர்.
முற்றிலும் மரத்தினால் செய்யப்பட்டு இரண்டு மாடி வீட்டைப் போல அமைந்திருந்த அந்த ரிசார்டைப் பார்த்ததுமே கௌசிக் மற்றும் கௌசல்யா துள்ளிக்குதித்தபடியே உற்சாகமாக ஓடிச் செல்ல, அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டே தங்கள் உடைமைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு சென்ற சித்தார்த் அந்த வீட்டின் மாடியில் இருந்த ஒரு அறையை தான் தங்குவதற்கென எடுத்துக் கொண்டான்.
மொத்தமாக அந்த வீட்டில் ஒரு ஹால், சமையலறை மற்றும் நான்கு அறைகள் இருக்க, ஒவ்வொருவரும் தங்களுக்கென தனி அறையை எடுத்துக் கொண்டனர்.
தனக்கென எடுத்துக் கொண்ட அறைக்குள் வந்து அமர்ந்து கொண்டு அந்த அறை ஜன்னல் வழியே மலைகளின் ராணியான ஊட்டி நகரை ஒரு சில நொடிகள் வியப்பாக பார்த்துக் கொண்டு நின்றவன், சில நொடிகள் கழித்தே தன் உடல் அசதியை உணர ஆரம்பித்தான்.
வெகு நேரமாக வாகனம் ஓட்டிக் கொண்டு வந்ததனால் சிறு களைப்பாக இருக்க, தன் அசதி போக குளித்து விட்டு சிறிது நேரம் தூங்கி எழுந்திருந்த சித்தார்த் தன் அன்னையைக் காண எண்ணி அவரது அறையை நோக்கிச் செல்ல, அங்கே அவரது அறை வெறுமையாக காணப்பட்டது.
“அம்மா ரூமில் இல்லாமல் எங்கே போய் இருப்பாங்க?” சிறு யோசனையுடன் தன் தங்கையின் அறையையும், தன் தம்பியின் அறையையும் நோட்டம் விட்டவன் அவர்களும் அந்த அறையில் இல்லாமல் இருப்பதைப் பார்த்து விட்டு சற்று பதட்டமடைந்துதான் போனான்.
“இப்படி தெரியாத ஒரு ஊருக்கு வந்திருக்கோம்ன்னு கொஞ்சம் கூட பயம் இல்லாமல் மூணு பேரும் எங்கே போயிட்டாங்க, அப்படி வெளியே போவதாக இருந்தால் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு போகக்கூடாதா? இப்போ இவங்களை எங்கேன்னு போய்த் தேடுவேன்?” என்றவாறே தன் கையிலிருந்த போனை எடுத்து தன் அன்னைக்கு அவன் அழைப்பை மேற்கொள்ளப் பார்த்த தருணம் அந்த வீட்டிற்கு வெளியே பேச்சுக்குரல் கேட்க,
அவசர அவசரமாக சத்தம் கேட்ட பக்கமாக ஓடிச் சென்றவன் அங்கே தன் அன்னை மற்றும் தம்பி, தங்கையுடன் இன்னுமொரு பெண் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து, ‘யாரு இது? இந்த ஊரில் அம்மாவுக்கும் தெரிந்த ஆறு யாரும் இருக்க வாய்ப்பில்லையே?’ என்றெண்ணிக் கொண்டே தன் அன்னையின் அருகில் சென்று,
“அம்மா! இங்கே என்னம்மா பண்ணுறீங்க?” என்று வினவ, அவனது கேள்வியில் சாவித்திரி, கௌசிக் மற்றும் கௌசல்யா உட்பட அந்தப் புதிய பெண்ணும் அவனை சட்டென்று திரும்பிப் பார்த்தாள்.
சித்தார்த்தைப் பார்த்ததும் அந்தப் பெண்ணின் முகத்தில் தெரிந்த ஒரு சிறு புன்னகையும் துடைத்து விட்டாற் போல் மறைந்து போய் விட, அவளது அந்த முக மாற்றத்தைப் பார்த்து சற்று குழப்பம் கொண்டவன், “அம்மா, இவங்க?” என்றவாறே தன் அன்னையைத் திரும்பிப் பார்க்க,
அவனைப் பார்த்து புன்னகை செய்தபடியே அவனைத் தன்னருகே அமரச் செய்தவர், “இதுதான்மா என்னோட மூத்த மகன் சித்தார்த், நான் சொன்னேனே ஆர்கிடெக் படித்து முடிச்சுட்டு எங்க பிசினஸைப் பார்த்துக்கிறான்னு” என தன்னெதிரே அமர்ந்திருந்த அந்தப் பெண்ணிடம் அவனைப் பற்றி அறிமுகம் செய்து வைக்க, அவனோ தன் அன்னையின் கையை பிடித்து மெல்ல சுரண்டியபடி அமர்ந்திருந்தான்.
“அம்மா, உங்க பையன் இவங்க யாருன்னு தெரியாமல் பேயறைந்தது மாதிரி உட்கார்ந்து இருக்கான், முதல்ல இவங்க யாருன்னு சொல்லுங்க” கௌசல்யாவும், கௌசிக்கும் தங்கள் அண்ணனது முக பாவனைகளைப் பார்த்து சிரித்துக் கொண்டபடியே சாவித்திரியைப் பார்க்க,
அவரோ சிறு புன்னகையுடன் தன் தலையில் தட்டிக் கொண்டு, “அட! மறந்தே போயிட்டேன் பாரேன்” என்று விட்டு,
சித்தார்த்தின் புறம் திரும்பி, “இவங்க தான் மாயா, இந்த இரண்டு வாரமும் எங்களுக்கு ஊட்டியை சுற்றிக் காட்டப் போறாங்க, நம்ம கௌசல்யா ஏற்பாடு பண்ணியிருக்கும் டூரிஸ்ட் கைட்” என்று கூற,
அவனோ, “என்னது கைடா?”என்றவாறே தன் எதிரே அமர்ந்திருந்தவளை மேலிருந்து கீழாக அளவிடுவது போல நோட்டம் விட்டான்.
“ஆமா, இவங்களை உங்களுக்கு எப்படி தெரியும்?”
“என் பிரண்டோட ரிலேட்டிவ் தான் இவங்க, நான் ஊட்டி போறேன்னு சொன்னதும் அவ தான் மாயாவோட டீடெயில்ஸைக் கொடுத்தா, அதேபோல மாயா கிட்டேயும் நம்ம இங்கே வர்றது பற்றி இன்பார்ம் பண்ணுனா” சித்தார்த்தின் கேள்விக்கு கௌசல்யா தன் அன்னைக்கு முன்பாக பதிலளித்திருக்க,
மாயாவை ஒரு முறை அழுத்தமாக நோட்டம் விட்டு விட்டு தன் அன்னையின் கையைப் பிடித்து இழுக்காத குறையாக அங்கிருந்து சற்று தள்ளி அழைத்துக் கொண்டு சென்றவன், “ஏம்மா உங்களுக்கு பேச்சுத் துணைக்கு ஆள் வேணும்னா யாரு என்னன்னு கூட விசாரிக்காமல் எல்லாவற்றையும் பேசணுமா? அந்தப் பொண்ணு ஒரு கைடு, உங்களுக்கு இந்த ஊரைச் சுற்றிக் காட்டப் போறா, அவ்வளவுதான். அப்படியிருக்கும் போது இன்னைக்கே எதற்காக இங்கே அந்தப் பொண்ணு வரணும்? கைடுன்னா ஊரை மட்டும் சுற்றிக் காட்டுனா போதும், நம்ம தங்கியிருக்கும் இடத்தை ஒண்ணும் அவங்களுக்கு சுற்றிக் காட்டத் தேவையில்லை, எனக்கு என்னவோ இந்தப் பொண்ணு ஏதோ ஒரு தப்பான எண்ணத்தோடு தான் இன்னைக்கே இங்கே வந்திருக்கணும்னு தோணுது, இல்லேன்னா கைடுக்கு இன்னைக்கு இங்கே என்ன வேலை?
அதோடு நம்மைப் பற்றி சரியாக தெரியாதவங்க நம்மைப் பற்றிக் கேட்டால் எல்லாத் தகவல்களையும் விலாவரியாக அவங்க கிட்ட சொல்லக் கூடாது ம்மா, அவங்க இப்படித்தான் துருவித் துருவி நம்மைப் பற்றி விசாரிப்பாங்க, அதற்காக எல்லாவற்றையும் அப்படியே சொல்லிடணும்னு ஒண்ணும் அவசியம் இல்லை, அதோடு இந்தக் காலத்தில் யாரையுமே அவ்வளவு சுலபமாக நம்பக் கூடாதும்மா. இப்படி நிறைய விஷயம் உங்களுக்கே தெரியாமல் இருக்கும் போது எதற்கும்மா உங்களுக்கு இந்த தேவையில்லாத வேலை?” மாயாவுக்கு கேட்க வேண்டும் என்பது போலவே சிறு சத்தமாக பேசி விட்டு, சித்தார்த் மீண்டும் அவளை உற்றுப் பார்க்க, அவளோ அவனது பேச்சைக் கேட்டு முகம் சுழித்தவளாக சட்டென்று தன் முகத்தை வேறு புறமாகத் திருப்பிக் கொண்டாள்.
“இப்போ எதற்காக நீ இவ்வளவு கோபப்படுற சித்தார்த்? அந்தப் பொண்ணு ஒண்ணும் நீ நினைக்கிற மாதிரி ஆள் இல்லை, அவ இங்கே வந்து ஒரு மணி நேரம் இருக்கும், அவ வாயில் இருந்து இதுவரைக்கும் ஒரு வார்த்தை கூட நீ சொல்லுவது மாதிரியான மனநிலையில் இருந்து வரல, அதை என்னால அடிச்சு சொல்ல முடியும். இன்னும் சொல்லப்போனால் அவகிட்ட துருவித் துருவி கேள்வி கேட்டு நம்மைப் பற்றி சொன்னது எல்லாமே நான் தான், அது மட்டுமில்லாமல் அந்தப் பொண்ணை இப்போ இங்கே வர சொன்னதே நான் தான்.
இரண்டு வாரம் இங்கே இருக்கப் போறோம், எப்பப்போ எந்த இடத்திற்கு போனால் சரியாக இருக்கும்ன்னு இன்னைக்கே முடிவு பண்ணி வைக்கலாம், நாளைக்கு காலையில பிரஷ்ஷாக எல்லா இடங்களையும் போய்ப் பார்க்கலாம்ன்னூ நான் தான் கௌசி கிட்ட சொல்லி மாயாவை இங்கே வர வைத்தேன், நீ என்னடான்னா ஏதேதோ உளறிட்டு இருக்க. ஒருத்தரைப் பார்த்தாலே அவங்க எப்படியானவங்கன்னு என்னால கண்டுபிடிக்க முடியாதா என்ன? அவ நம்ம கௌசி வயதை ஒத்த பொண்ணு, அவ இங்கே வர்றதுக்கு அவ்வளவு தயங்கித் தயங்கி நின்னா தெரியுமா? நான் தான் அந்தப் பொண்ணை வலுக்கட்டாயமாக இழுக்காத குறையாக இங்கே அழைச்சுட்டு வந்தேன்,
அப்போவும் அவ வீட்டுக்குள்ள வர மாட்டேன்னு ஒரே முடிவாக சொல்லிட்டா, அதனால தான் இங்கே வெளியே உட்கார்ந்து பேசிட்டு இருந்தோம், அது மட்டுமில்லாமல் அவ இங்கே வந்து இவ்வளவு நேரத்திற்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூட அவ தொண்டையில் இறங்கல, அப்படியிருக்கும் போது நீ இப்படி எல்லாம் அவ மேலே அபாண்டமாக பழி போடுற, இதெல்லாம் ரொம்ப தப்பு சித்தார்த்” சாவித்திரி சிறு கண்டிப்புடன் சித்தார்த்தை முறைத்துப் பார்த்துக் கொண்டு நிற்க, அவனோ தன் அன்னையின் பேச்சைக் கேட்ட பின்னர் தான் செய்த தவற்றை உணர்ந்தவனாக தன் நெற்றியை நீவி விட்டபடி அமைதியாக நின்று கொண்டிருந்தான்.
“இப்போ அமைதியாக இருந்து என்ன பலன்? அந்தப் பொண்ணுக்கு நீ பேசுன எல்லாமே கேட்டு இருக்கும், முதல்ல அவ கிட்ட சாரி கேளு”
“அம்மா, இதெல்லாம் ரொம்ப அதிகம்மா, நான் ஏதோ நடந்த விஷயம் தெரியாமல் பேசிட்டேன், அதற்காக சாரி எல்லாம் கேட்கிறது… அதெல்லாம் முடியாது”
“இப்போ நீ சாரி சொல்லுறியா, இல்லை நீ பேசுன பேச்சுக்கு உன் கன்னத்திலேயே ஒண்ணு வைக்கவா?” சாவித்திரி தன் இரு கைகளையும் தேய்த்து விட்டபடியே சித்தார்த்தைப் பார்க்க,
தன் தலையில் கை வைத்துக்கொண்டு நின்றவன், “வர வர நீங்க அடிக்கடி வன்முறைகளை கையில் எடுத்துக்குறீங்க ம்மா, இதெல்லாம் ரொம்ப தப்பு. சரி, நான் பேசனது தப்புன்னு சாரி கேட்கணும் அவ்வளவுதானே? சரி, வாங்க” என்றவாறே மாயா நின்று கொண்டிருந்த இடத்தை நோக்கி செல்ல,
சாவித்திரி அங்கே வரும் வரை காத்திருந்தது போல அமைதியாக அமர்ந்திருந்தவள் அவர் அங்கே வருவதைப் பார்த்ததுமே சட்டென்று தன் இருக்கையில் இருந்து எழுந்து கொண்டு, “ஓகே மேடம், நாளைக்கு காலையில் சார்ப்பா எட்டு மணிக்கு நான் வந்துடுவேன், நீங்க போட்ட பிளான் படி நாளைக்கு முதல்ல கார்டனுக்கு போகலாம், நீங்க எல்லோரும் ரெடி ஆகிட்டு வெளியே வந்துடுங்க, ஏன்னா நான் ஒரு டூரிஸ்ட் கைட், விசிட்டர்ஸ் வீட்டுக்கு எல்லாம் போக மாட்டேன், நான் வர்றேன்” என்று விட்டு அங்கிருந்த யாரின் பதிலையும் எதிர்பாராமல் விருவிருவென அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விட, சித்தார்த்தோ அவள் காட்டிய பாராமுகத்தை எண்ணி அதிர்ச்சியானவனாக திகைத்துப்போய் நின்று கொண்டிருந்தான்…..