அனல் 12

அனல் 12

அனல் 12

 

அப்படி இப்படி என ஒரு வாரம் சென்று விட்டிருந்தது. விவேகனை முதல் இரண்டு நாட்கள் எப்படியோ சமாளிக்க முடிந்தவர்களால் அதற்கு மேல் முடியாமல் போய்விட்டது.

 

இவன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் சொன்னதை பார்த்த பிறகு நடந்தவற்றை சொல்லிவிட்டனர்.

 

அதன் பிறகு அங்கிருந்த யாரிடமும் அவன் பேச தயாராக இருக்கவில்லை. அவனை அவனே வெறுத்து போன மாதிரியான மனநிலையில் இறுகி போயிருந்தான்.

தென்றல் இருக்கும் அறைக்கு சென்று பார்க்கக் கூட அவன் மனம் ஒத்துழைக்கவில்லை. அவள் உயிருக்கு ஆபத்தில்லை என்பது மட்டுமே இவன் உயிருடன் இருப்பதற்கு ஒரே காரணமாக இருந்தது.

 

ஒரு வாரமாக மனத்திற்குள் எப்படி எப்படியோ போராடி ஒரு வழியாக இன்று அவளை பார்க்க தயாராகி இருந்தான். கால் எலும்புகளில் பாதிப்பு இல்லாத போதிலும் தசைகள் அதிகளவில் சேதமாகி இருந்ததால் நடக்க மிகவும் சிரமமாக இருந்தது.

 

எனினும் பல்லைக் கடித்துக் கொண்டு எப்படியோ நடந்து அவள் இருந்த அறைக்கு சென்று விட்டான்.

தர்மராஜ் மற்றும் மித்துமாவை தவிர அனைவரும் அங்கு தான் இருந்தனர்.

 

சங்கரன் மறைவிற்கு பிறகு மித்துமாவிற்கு மருத்துவ சூழல் ஒரு வித அழுத்தத்தை கொடுக்க அவரை வீட்டிற்கு அனுப்பிவிட்டனர். தர்மராஜிற்கு தொழிலைப் பார்த்தாக வேண்டிய‌ கட்டாயம்.

 

தென்றலின் அறை வரைக்கும் வந்து விட்ட விவேகனைக் கண்ட மித்ரன் அவனை தாங்கி பிடித்து தென்றலின் படுக்கை வரை அழைத்து சென்றான்.

தமிழ் அவன் அருகில் ‌ஒரு இருக்கையை எடுத்து போடவும், அதில் அமர்ந்த விவேகன், தென்றலின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். 

 

அவன் முகத்தில் அத்தனை வேதனை யாரால் அவனுக்கு இப்படி ஒரு குடும்பம், சந்தோஷம் கிடைத்ததோ அவளின் இந்த நிலைக்கு தானே காரணமாக கூடும் என‌ அவன் கனவிலும் நினைக்கவில்லை.

 

மிகவும் வேதனை சுமந்த‌ முகத்துடன் அவன் அமர்ந்திருப்பதைப் பார்த்த தேவகி அவர் கண்களைத் துடைத்துக் கொண்டு அவன் அருகில் வந்தவர்.

 

“நாங்க எல்லாம் அவள கெஞ்சி‌ மிரட்டி அழுது எப்புடியோ கூப்டு பார்த்துட்டோம் அவ எழுந்துக்கற மாதிரி தெரிலடா நீ கூப்டா தான் எழுந்துக்கணும்னு வைராக்கியமா படுத்துக் கெடக்கா கூப்புடுடா நீயே கூப்புடு உன் கண்ணாம்மாவ.” எனக் கூறியவர் கதறியப்படி அவன் தோள் சாய அவரை அணைத்து கொண்டு தானும் கதறி அழுதுவிட்டான் விவேகன்.

 

இப்படி ஒரு அழுகையை யாருமே எதிர்ப்பார்த்திருக்கவில்லை. அனைவரும் அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தனர். முதலில் சுதாரித்த

தமிழ் விவேகனை அமைதிப் படுத்த சிறிது நேரத்தில் சிறு தேம்பலாக அழுகை குறைந்திருந்தது. பிறகு அவன் தென்றலுடன் பேசட்டும் என அவன் விலகிக் கொள்ள,

 

படுக்கையில் கிடந்த தென்றலின் கையைப் பற்றி அவன் கண்ணோடு ஒற்றிக் கொண்டவன். அப்படியே அமைதியாக அமர்ந்திருக்க அனைவரும் அவனை தான் கவலையாக பார்த்து ‌கொண்டிருந்தனர்.

 

உடல் குலுங்க குலுங்க மீண்டும் அவன் அழுது கொண்டிருந்தான். அதனைக் கண்டு மேலும் வருத்தம் அடைந்தவர்கள் அவனை தேற்ற முயற்சிக்க அது பலனளிக்கவில்லை. பொறுத்துப் பார்த்த மித்ரன், “டேய் உன்ன அவ கிட்ட பேசி அவள கண் விழிக்க வைக்க சொன்னா நீ என்னடா மேல மேல அழுது அவள இன்னும் கஷ்டப்படுத்திட்டுருக்க. பேசுடா அவ கிட்ட நீ பேசினால் நம்மகிட்ட அவ வந்துடுவாடா ப்ளீஸ் புரிஞ்சுக்கோ சின்னப்பிள்ளை மாதிரி நடந்துக்காத.” என இப்பொழுது விவேகனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான் மித்ரன்.

 

ஒருவகையில் அவன் கூறுவதும் சரி என தோன்றியதோ என்னவோ, உடனே நிதானத்திற்கு வந்தவன் கண்களை அழுந்தத் துடைத்துக் கொண்டு ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டு அவளிடம் பேச தயாரானான்.

 

அவள் முகத்தை காண காண கலங்க துடிக்கும் கண்களை கட்டுப் படுத்தியவாறு, “கண்ணம்மா உன் கண்ணா வந்திருக்கேன் பாருடா தயவு செய்து என்ன ஏமாத்திடாம கண்ண தெறந்து என்ன பாருடா உன்னை கெஞ்சிக் கேட்டுக்குறேன்.

 

உனக்கு ஞாபகம் இருக்கா அன்னைக்கு ஒரு நாள் ஆசிரமத்துக்கு நீ உன் பிறந்த நாளுக்காக வந்து இருந்தப்போ, நான் மட்டும் தனியா ஒரு மரத்தடில உக்காந்து இருந்தேன். அந்த இடத்துல அத்தனை பேர் இருந்தும் நீ மட்டும் தான் என்ன கவனிச்சு என்கிட்ட வந்த. பெத்தவளே என்ன தூக்கி எறிந்துட்டுப் போயிருக்க. அனாதை நாயா நான் நின்னப்போ நீ மட்டும் தான், நான் இருக்கேன்டா உனக்கு அப்படின்னு உன் மடி கொடுத்த, ஆறுதல் சொன்ன, உனக்குனு இருந்த குடும்பத்தையே எனக்காக விட்டுக்கொடுத்த.

 

உனக்கு தெரியுமா அன்னைக்கி நம்ம நாடகத்துக்கு அப்புறம், அந்த யசோதா மாதிரி நமக்கு ஏன் அம்மா இல்லாம போனா? அப்ப நம்ம இந்த உலகத்திலேயே இருக்க வேண்டாம் அப்படி என்ற எண்ணத்தோட நான் அந்த ஆசிரமம் மரத்துக்கு பின்னாடி இருந்த கிணத்துல குதிச்சு செத்துடலாம்ன்ற முடிவுல தான் அங்க உட்கார்ந்து இருந்தேன்.

 

நீ மட்டும் அந்த நிமிஷம் அந்த இடத்துக்கு வராமல் போயிருந்தால் இன்னைக்கு நான் இல்லடா. என்னோட இத்தனை சந்தோஷத்துக்கும் இந்த வாழ்க்கைக்கும் காரணமானவளே நீதான் இப்போ நீயும் இல்லாம போய்ட்டா எனக்குனு யாருடா இருக்கா தயவு செய்து என்னை மறுபடியும் அனாதையாக்கி விட்டுப் போய்டாதமா வந்துட்டுடா கண்ணம்மா என் கிட்டே வந்துடு.

 

 உனக்குனு நான் இருக்கேன், அம்மா,அப்பா, தங்கச்சி, மித்ரன், இந்த லக்ஷ்மி, மித்துமா எல்லாரும் இருக்காங்க ஆனா எனக்குனு நீ மட்டும்தானடாமா இருக்க நீ குடுத்த உயிர மறுபடியும் நீயே எடுத்துடாதம்மா தயவுசெய்து வந்துவிட ம்மா ப்ளீஸ் வந்துடு ம்மா ப்ளீஸ் அம்மா என்கிட்டே வந்துடும்மா…” என இத்தனை வருடங்களில் அவன் கட்டுப்படுத்திக் கொண்டிருந்த அனைத்து கண்ணீரையும் அவனின் கண்ணம்மாவிற்காக கரையுடைத்து கரைந்து கொண்டிருந்தான் விவேகன்.

 

அம்மா என்ற வார்த்தையே மறந்தது போல் திரிந்து கொண்டிருந்தவன் இப்பொழுது மூச்சுக்கு மூச்சு அம்மா அம்மா என அரற்றி கொண்டிருக்க அந்த வார்த்தைக்கு சொந்தக்காரியவளோ ஆழ்ந்த நித்திரையில் உறங்கி கொண்டிருந்தாள்.

 

ஜபத்தை சொல்வதுபோல் அம்மா அம்மா என்று அரற்றிக் கொண்டிருந்தவன் அவள் கை மீது சாய்ந்தபடி உறங்கி விட்டிருந்தான். இத்தனை நேரம் அழுது கறைந்தவன் உறங்கட்டும் என அங்கிருந்தவர்களும் அவனை தொந்தரவு செய்யாமல் விலகிக் கொண்டனர்.

 

சிறிது நேரத்திற்குப் பிறகு விவேகனின் தலையை யாரோ கோதுவது போல் இருக்க அவன் கண் விழித்துப் பார்த்தப்போது அவனின் கண்ணம்மா கண் விழித்து கலங்கிய கண்களுடன் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

அவனும் சிறிது நேரம் வரை அதை கனவு என்பது போல் தான் நினைத்துக் கொண்டிருந்தான். ஒரு சில நொடிகள் கடந்து இருந்த வேளையில் செவிலி ஒருவர், “யாராச்சும் போய் டாக்டர கூப்புடுங்க கூப்பிடுங்களேன் அவங்களுக்கு நினைவு திரும்பிடுச்சு சீக்கிரம்.” எனக் கூறிவிட்டு தென்றலின் பல்ஸ் போன்றவற்றை அவள் கண்காணித்துக் கொண்டிருக்க,

 

அப்போதுதான் விளங்கியது விவேகனுக்கும் அவனின் கண்ணம்மா அவனிடமே வந்து சேர்ந்துவிட்டாள் என. அவள் மீது விழுந்து புரண்டு இவன் கதற போகிறான் என அனைவரும் பயந்து அவன் அருகில் வர அவன் நிதானமாக எழுந்து அவள் காலடியில் சென்று அவள் காலை கட்டிக் கொண்டு கதறி விட்டான்.

 

அவனை சமாதானம் செய்ய முயன்ற தென்றலால் பேசக்கூட முடியவில்லை‌. வாயைத் திறந்தால் வெறும் காற்றுதான் வந்தது, மித்ரனிடம் சைகை காமிக்க அவன் வந்து விவேகனை தேற்றி சமாதானம் செய்து கொண்டிருந்த வேளையில்,

 

மருத்துவர் வந்து தென்றலை பரிசோதித்துவிட்டு இனி பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஒரு நாள் முழுவதும் மருத்துவமனையில் இருந்து விட்டு நாளை வீடு செல்லலாம் என கூறி சென்றுவிட்டார். மருத்துவர் செல்லும் முன்பு அவர்களிடம் தென்றலை அதிக மன அழுத்தத்திற்கு ஆளாக்க வேண்டாம் என கூறி சென்றிருக்க விவேகன் குழப்பத்துடன் அவர்களை பார்த்தான்.

 

பிறகு இப்பொழுது எதுவும் பேச வேண்டாம் வீட்டிற்கு சென்று பேசிக் கொள்ளலாம் என முடிவெடுத்து அவன் தென்றலின் அருகே சென்று அமைதியாக அவள் கைகளை பற்றியபடி அமர்ந்துகொண்டான்.

 

முழுதாக பத்து நாட்கள் போராட்டத்திற்கு பிறகு அவர்களின் குடும்பம் வீடு வந்து சேர்ந்திருந்தது. ஹப்பாடா என்றிருந்தது வீட்டில் இருந்த அனைவருக்கும்.

 

இன்ப  சுற்றுலா என்று இவர்கள் சென்றுவந்த பிறகிலிருந்நது, தென்றல் அடிக்கடி மயங்கி விழுவதையே வாடிக்கையாக்கி வைத்திருந்தாள்.

 

பள்ளி பருவத்திற்கு பிறகு இப்போதுதான் இந்த மாதிரி நடக்கிறது மருத்துவரிடம் கேட்டால் அவள் எதையோ மனதில் நினைத்து தன்னை வருத்திக் கொள்கிறாள், அதை முதலில் கண்டறியுங்கள் மற்றபடி வேறு எந்த குறையும் இல்லை என்று கூறியிருந்தார். 

 

ஆனால், அவளுக்கு சிறு வயதிலிருந்தே இந்த பிரச்சினைகள் இருக்கின்றது. எதனால் என்பதனை மட்டும் அவர்களால் கண்டறிய முடியவில்லை இவளிடம் கேட்டாலும் கூட சில நேரங்களில் யோசித்துப் பார்த்து ‘தெரியவில்லை’ என்பாள். சில நேரங்களில், நேரங்களில் யோசனைக்கு இடமே இன்றி. ‘எனக்கு தெரியல விவு ஆன பயமா இருக்கு.’ இது தான் எத்தனை முறை எப்படி கேட்டாலும் கிடைக்கும் பதில்‌.

 

பிறகு காரணத்தை கண்டறிய திரும்பத் திரும்ப ஏன் அதனை தோண்டவேண்டும் துருவ வேண்டும். பயத்தை மாற்றுவோம் என்று படிப்படியாக செயல்படுத்திக் கொண்டிருந்த சமயத்தில்தான் பாலாவினால் பெரிய சருக்கல் ஆகி போனது.

 

மீண்டும் விவேகனும், அந்த குடும்பமும் ஓட வேண்டும் இவளின் பின்னால், சில நாட்களாக இவளால் ஹாஸ்பிடல், ட்ரீட்மென்ட், வீடு. ஹாஸ்பிடல், ட்ரீட்மென்ட், வீடு. என ரிப்பீட்டிங் மோடில் தான் சென்று கொண்டிருந்தது திரும்பவும் அதே சுழற்சி முறை என்றால்வீட்டில் யாருக்கும் உடலளவிலும் சரி மனதளவிலும் சரி‌ தெம்பிருக்கவில்லை.

 

அனைவரும் உண்டு முடித்து சிறிது நேரம் உறங்கி எழுந்தனர். சிறிது நேர உறக்கம் ஆயினும் நீண்ட நாட்களுக்குப் பிறகான நிம்மதியான உறக்கம். முன் இரவு ஒரு ஏழு மணி போல ஒவ்வொருவராக எழுந்து வர இரவு நேரத்திற்கான சமையல் வேலைகள் நடந்து கொண்டிருந்தது தேவகியும் மித்துமாவும் சமையலறையில் உணவு வகைகளுடன் கைகலப்பில் இருக்க வீட்டின் மற்ற உறுப்பினர்கள் எல்லாம் வீட்டின் வரவேற்பறையில் குழுமியிருந்தனர்.

 

அங்கு இருந்த ஒற்றை நீல சோஃபாவில் தென்றலின் தந்தை தர்மராஜ், மித்ரன், அக்ஷா அமர்ந்திருக்க, விவேகனும் தென்றலும் சுவற்றில் சாய்ந்த வண்ணம் கால்களை நீட்டி அமர்ந்திருந்தனர் லக்ஷ்மி சமையலறைக்கு செல்வதும் திரும்ப வரவேற்பறையை எட்டிப் பார்ப்பதும் என நடந்து கொண்டிருந்தாள்.

 

ஒரு நான்கு மாதங்களுக்கு முன்பு யாரேனும் இவர்கள் வீடு இப்படி அமைதியாக இருக்கும் எனக் கூறியிருந்தால் அந்த வீடே அதிரும் வண்ணம் அனைவரும் சிரித்திருந்திருப்பார்கள் அப்படி எந்நேரமும் கலகலவென இருந்த வீடு இப்போது அத்தனை அமைதியாக.

 

அந்த அமைதியை கலைப்பது யார்?

 

அத்தனை நிசப்தமான இடத்தில் மித்திரனின் தொலைபேசி ‘ஜாலியோ ஜும்கானா’ என கத்த வீட்டில் முதலில் அனைவருக்கும் தூக்கிவாரிபோட்டது கிச்சனில் மித்துமா கையில் வைத்திருந்த பாத்திரத்தை கீழே போட்டிருந்தார், கிச்சனிலிருந்து வெளியே வந்த தேவகி அவனை முறைக்க அவன் அலைபேசியை அள்ளிக் கொண்டு மாடிக்கு ஓடிப்போனான்.

 

அனைவரின் இதழ்களிலும் சிறிதாய் ஒரு முறுவல் அவ்வளவுதான் மீண்டும் அதே அமைதி. யார் யாரிடம் என்ன பேசுவது? எப்படி ஆரம்பிப்பது? ஒன்றும் புரியாத நிலை.

 

மீண்டு வருவார்களா என்றும் தெரியவில்லை. வீட்டின் அமைதி விவேகனை ஏதோ செய்தது. எல்லாம் தன்னால்தானோ எனும் பெரிய தவிப்பு அவனுக்குள்ளே இருந்தாலும், இப்போது அதை விட தென்றலை இயல்பு நிலைக்கு திருப்ப வேண்டும் என்பதே முக்கியமாக இருக்க, பொறுமையாக பேச்சு கொடுத்தான் அவளிடம்.

 

“மாடிக்கு போலாம் வரியாடா?”

தன் வலது புறமாய் அமர்ந்து அடிப்பட்ட இடங்களை எல்லாம் பாவமாய் பார்த்திருந்தவளின் தலையை வருடியவாறு விவேகன் கேட்க. தென்றல் மறுப்பாய் தலை‌ அசைத்தவள், 

 

“இல்ல விவு நீ போயிட்டு வா.” என்று அவன் அழைக்க அழைக்க இவள் மறுக்க என அந்த காட்சியை பார்த்து கொண்டிருந்த அக்ஷா கொதித்தெழுந்துவிட்டாள்.

 

அவள் ஆக்ரோஷமாக எழுந்து வருவதை பார்த்த விவேகனே ஒரு நிமிடம் அரண்டு விட்டான். அவன் என்ன ஏதுயென்று உணரும் முன்பே அவன் கைவளைவில் இருந்த தென்றலை முழு வேகத்துடன் இழுத்து நிறுத்தியவள் தன் இத்தனை வருட ஆதங்கத்தை எல்லாம் கொட்டி தீர்த்து விட்டாள். 

 

தென்றல் அவளின் பயம், வெகுளித்தனம் அதிலிருந்து அவளை வெளிக்கொண்டு வர அவளை தைரியமாக தன்னம்பிக்கை உடையவளாக மாற்ற நினைத்து கவனம் முழுவதையும் அவள் மீது வைத்திருந்த அனைவருக்கும் அக்ஷா பேசுவதை கேட்க கேட்க ஒரு பக்கம் அதிர்ச்சி என்றால் மற்றொரு பக்கம் குற்றம் செய்து விட்ட நெஞ்சங்கள் எல்லாம் குற்றவுணர்வினால் துடித்துவிட்டது.

தென்றல் பேசும்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!