கண்ட நாள் முதல்

கண்ட நாள் முதல்

அத்தியாயம் 19

 

அரவிந்த் கன்னத்தை பிடித்து கொண்டு மலங்க மலங்க முழிக்க.. 

 

“ஏன்டா வெண்ணா… உனக்கு எவ்ளோ திமிர் இருந்தா?? இன்னொரு பொண்ணை கட்டிப்பேன்னு, என்கிட்டயே சொல்லுவா? ஏன்டா என்னை லவ் பண்ற நீ இன்னொருத்தி கல்யாணம் பண்ணா, அத பாத்துட்டு நான் சும்மா இருப்பேன்னு நினைச்சியா? நா காதலிக்குற உன்னை வேற ஒருத்திக்கு விட்டுக்கொடுக்க நா என்ன இளிச்சவாய டா. நீ என்னை தவிர வேற எவளையும் பாரு அப்றம் தெரியும் இந்த தேனு யாருன்னு?” என்று அவன் சட்டை காலரை பிடித்து கொண்டு அவள் கத்த… அரவிந்த்திற்கு அவள் அவனை காதலிக்குறேன்னனு சொன்னதை தவிர வேற எதுவும் அவன் காதில் விழவே இல்லை. 

 

“நீயும் என்னை விரும்புறீயா தேனு?” என்று வந்த அவன் வார்த்தையில், பேசுவதை நிறுத்தி விட்டு அவன் விழிகளையே பார்க்க. அதில் தெரிந்த தன் மீதான அவன் காதலின் ஆழத்தை தாங்க முடியாமல் வெட்கத்தில் தலை கவிழ்ந்து கொண்டவள், நாடியை பிடித்து நிமிர்த்தியவன், “சொல்லுடி நீயும் என்னை விரும்புறீயா?” என்று மீண்டும் கேட்க, அவள் அழகாய் தன் தலையை மேலும் கீழும் ஆட்ட… அவளோடு சேர்த்து அவள் காதின் 

ஜிமிக்கியும் அவளுக்காக ஆடி, அவள் சம்மதத்தை சொல்ல, அந்த அழகில் தன்னை தொலைத்தவன்.

அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொள்ள. தேனுவிற்கு சந்தோஷத்தில் கண்கள் கண்ணீரால் நிறைந்து விட்டது. 

 

“ஏய் லூசு… இப்ப எதுக்குடி அழற நீ? ஓஓஓ ஒருவேள இவனை போய் லவ் பண்ணிட்டோமேன்னு அழறியா? அதுக்கு இப்ப ஃபீல் பண்ணி என்ன யூஸ். எல்லாம் உன் தலையெழுத்துடி செல்லம்?? என்ன செய்ய என்று அவளை சீண்ட…

 

“ஐயோ அப்டி ஒன்னும் இல்ல அரவிந்த்'” என்று பதறியவள். பின் அவன் தன்னை கேலி செய்வது புரிய, “டேய் உன்னை” என்று அவன் மார்பிற்கு வலிக்காத மாதிரி குத்தியவள், கைகளை தன் கைகளால் சிறை பிடித்தவன். “ரொம்ப தாங்ஸ்டி.. எங்க நீ என்னை புடிக்கலனு சொல்லிடுவியோன்னு ரொம்ப பயமா இருந்துச்சி” என்றவன் அவளை இன்னும் தன்னோடு சேர்த்து இறுக்கிக்கொள்ள.

 

“ஏன்.. என்ன பயம்.?? கொஞ்ச நேரம் முந்தி சொன்னீங்களே வீட்ல பாக்குற பொண்ணை கல்யாணம் பண்ணிக்குவேன்னு அப்றம் என்னவாம்.??” என்று முகத்தை திரும்பியவள் இதழ் பிரிக்காமல் சிரிக்க.

 

“அது சும்மா ஒரு ஃப்லோ லா வந்துருச்சுடி, அதுக்கு ஏன்டி மூஞ்ச

திருப்பிக்கிற” என்று அவளை பின்னால் இருந்து அணைக்க, “போடா, நீ உங்க வீட்ல பாக்குற பொண்ணையே கல்யாணம் பண்ணிக்க.. நா நிலா பாக்குற பையனை கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்றவள் அவனிடம் இருந்து விலகி ஓட. அவள் இடையை பிடித்து தன்னோடு சேர்த்து அணைத்து அவள் விழிகளையே பார்த்தவன். “நீ என்னை லவ் பண்ணாம இருந்திருந்தாலே நா மனசு மாறுறது கஷ்டம். இப்ப நீ என்னை லவ் பண்றேன்னு சொன்ன பின்னாடி, உன்னை நிலா பாக்குற பையனுக்கு விட்டு கொடுக்க நா என்ன லூசா, நீ இல்லாம என்னால வாழ முடியாதுடி என் சொல்ல பிசாசே” என்றவன் வார்த்தையில் தேன்மொழி தன்னை மனதை முழுவதும் அவனிடம் தொலைக்க, 

 

“அண்ணா அது வெறும் பிசாசு இல்ல. கொள்ளிவாய் பிசாசு” என்று வந்த சத்தத்தில் இருவரும் நிகழ்வுலகிற்கு வந்தவர்கள், சத்தம் வந்த திசையை பார்க்க அங்கு தேவியும், சந்தியாவும் சிரித்துக் கொண்டே வந்தனர்.

 

“என்ன அண்ணா உங்க ரொமான்ஸ் சீன் எல்லாம் ஓவரா? இல்ல… சிவ பூஜையில கரடி மாதிரி நாங்க

வந்துட்டோமா?” என்று தேவியும் சந்தியாவும் Hi-fi அடித்துக்கொண்டு சிரிக்க.

 

“என்ன தேனு மேடம் இப்ப அரவிந்த் அண்ணா கூட டான்ஸ் ஆட சம்மதமா?” என்று தேவி கண்ணடிக்க.

 

“அடியேய் உங்களை” என்று இருவரையும் தேனு விரட்ட, ஒரு கட்டத்தில் தேவியை பிடித்தவள். அவளை தன்னோடு அணைத்து கொண்டு அழ ஆரம்பிக்க, “ஏய் லூசு எதுக்குடி இப்ப அழுகுற??” என்று தேவி அவள் கண்களை துடைத்து விட.

 

“இல்லடி.. இப்ப நாங்க இவ்ளோ சந்தோஷமா இருக்க நீ தான்டி காரணம். நீ மட்டும் இல்லேன்னா நாங்க ஒருத்தரை ஒருத்தர் விரும்புறது எங்களுக்கே தெரியாம போயிருக்கும்” என்று அவளை கட்டிக்கொள்ள.

 

“ஆமா தேவி, நீ மட்டும் இல்லன்னா இவ்ளோ சீக்கிரம் நாங்க சேர்த்து இருக்க முடியாதுடா.. ரொம்ப தாங்ஸ் மா”

 

“ஹலோ அண்ணா… நா ஒன்னும் உங்களுக்காக இதெல்லாம் செய்யல. இதுல என்னோட சுயநலமும் இருக்கு.” என்ற தேவியை புரியாமல் பார்த்த தேனு, “என்னடி சொல்ற? எனக்கு ஒன்னும் புரியல?? என்று தேனு குழம்ப. சந்தியாவும், “ஆமா தேவி அக்கா எனக்கும் நீங்க சொல்றது ஒன்னு புரியல” என்று தலை சொறிய…

 

“அதுடி சூனிய பொம்மை இந்த தேனுவுக்கும் உங்க அக்கா அந்த பிடாரிக்கும் காலேஜில் இருந்தே 

காதலெல்லாம் சுத்தமா புடிக்காது. யாராவது லவ்வுன்னு சொல்லிட்டு வந்த உங்கக்கா அவன் கைய ஒடைப்ப.. இவ செவுல போப்பா. அதனால ஒரு பய எங்ககிட்ட வரமாட்டான்.” என்று சொல்ல. அரவிந்த் தன் கன்னத்தை இரு கைகளால் மூடிக்கொள்ள, தேனு அவனை செல்லமாக முறைத்தாள்.  

 

“இதுங்க கூடவே இருந்ததால என்னால ஒழுங்கா லவ் பண்ணவே முடியல. சோ அப்பவே முடிவு பண்ணேன் இதுங்க ரெண்டையும் எப்படியாவது லவ்வுல கோத்து விடணும்னு. கடவுள் செயல் நிலாக்கு சூர்யா அண்ணா கிடைச்சாங்க.. இவளை தான் என்ன பண்றதுன்னு நா தீவிரமா யோசிக்கும் போது..?? அரவிந்த் அண்ணா வலிய வந்து வசமா சிக்குனாரு. விடுவேனா நானு… ரெண்டு பேத்தையும் கோத்து விட்டுட்டேன். இப்ப என்னோட ரூட் கிளியர்” என்று வில்லி போல் சிரிக்க..

 

“அடிப்பாவி உன் போதைக்கு எங்கள ஊறுகாய் ஆகிட்ட இல்ல நீ? என்ன ஒரு வில்லத்தனம்.?” என்று தேனு அவள் முதுகில் மொத்த,

 

“அப்ப நீ யாரையும் லவ் பண்ண போறீயா தேவிமா…?” என்ற‌ அரவிந்தை சலிப்பாக பார்த்த தேவி

 

“அடபோங்க அண்ணா… அதெல்லாம் எப்பவோ லவ் பண்ண ஆரம்பிச்சு அது டாப் கியர்ல போய்கிட்டு இருக்கு.”

 

“அடிப்பாவி… எப்டி டி?? எங்க கிட்ட சொல்லவே இல்ல..??” என்று தேனு வாய்பிளக்க, 

 

“எதுக்கு இல்ல எதுக்குன்னு கேக்குறேன். என் லவ்வுல ஒரு லாரி மண்ணை அள்ளி கொட்டவா… நடக்காது மகளே.. நானெல்லாம் விவரமான ஆளாக்கும்.” 

 

“அக்கா நீங்க எங்கயோ போட்டீங்க கா.. சூப்பர்” என்று சந்தியா புகழ..

 

“அடியேய் மரியாதையா சொல்லு… யாருடி அது?” என்று தேனு, தேவியின் காதை பிடித்து திருக..

 

“ஆஆஆ அய்யோ… ஏய் எரும வலிக்குது விடுடி.. அண்ணா காப்பாத்துங்க” என்று கத்த,

 

“சாரிடா உடன்பிறப்பே, என் தேனுக்கு எதிர நா எதுவும் செய்ய முடியாது” என்று கை விரிக்க, “துரோகி அண்ணா. பிகர் கிடைச்சதும் தங்கச்சிய கட் பண்ணி விடுறீங்க இல்ல?” என்று முறைக்க…

 

“அடியேய் அங்க என்ன பேச்சு… நா கேட்டதுக்கு பதில் சொல்லுடி, யாருடி அவன்??” 

 

 “அவன் இவன் என்ற ஏக வசனமெல்லாம் வேணாம்… எல்லாம் உங்களுக்கு தெரிஞ்ச ஆளு தான்” என்க..

 

” ஏய் யாருடி அது?? எங்களுக்கு தெரிஞ்ச ஆளு??”

 

“நல்ல யோசி தேனு.. அறிவை யூஸ் பண்ணு. உனக்கு அது கஷ்டம் தான் இருந்தாலும் பரவாயில்லை யோசி” என்க..

 

“அடியேய்… இப்ப நீ மீதி வாங்க போற பாரு ஒழுங்க சொல்லுடி..??” என்ற‌ தேனுவை பார்த்து தேவி வெட்கப்பட. 

 

சந்தியா, “அக்கா ப்ளீஸ் கா… தயவுசெஞ்சு இந்த மாதிரி எல்லாம் பண்ணாதீங்க. எனக்கு பயந்து பயந்து வருது… ப்ளீஸ் கா யாருன்னு சொல்லுக்கா” 

 

தேனு சற்று யோசித்தவள், “ஏய் ஒருவேளை? நீ அந்த கருவாயன்… உன் மாமா பையனை லவ் பண்றீயா?” என்று கேட்க.

 

தேவி “ஆமாம்” என்று தலை ஆட்டியவள். பின் தேனு சொன்னது புரிய, “அடியேய் பிசாசு எவ்ளோ தைரியம் இருந்தா, என் மாமாவ கருவாயன்னு சொல்லுவா? என்று அவளை அடிக்க துறத்த. இவர்களின் பிள்ளை விளையாட்டை அரவிந்த் சிரித்துக் கொண்டே வேடிக்கை பார்க்க.. 

 

“அய்யோ அக்காஸ்… ப்ளீஸ் உங்க சண்டைய கொஞ்சம் நிறுத்துங்க. கீழ எல்லாரும் நமக்காக வெயிட்டிங்.‌ உங்க சண்டைய அப்றம் போடுங்க. இப்ப வாங்க போகலாம்” என்று சந்தியா சொல்ல.

 

வரும்போது சோகமாக வந்த தேனு இப்போது அரவிந்தின் காதலி என்ற மகிழ்ச்சியில். முகம் முழுவதும் சிரிப்புடன் கீழே சொல்ல, அனைவரும் கீழே சென்றனார். 

 

கீழே வந்த தேனுவின் முகம் பழையடி மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்த நிலாவின் மனது நிறைய, சூர்யா, அரவிந்தை கேள்வியாய் பார்க்க, அரவிந்த் அவனை பார்த்து சிரித்துக் கொண்டே கண்ணடிக்க, சூர்யா தேனு முகத்தை பார்த்தவன், நடந்ததை புரிந்துகொண்டு, தன் கட்டை விரலை உயர்த்தி காட்டி வாழ்த்து சொல்ல. தேனு வெட்கத்தில் அங்கிருந்து ஓடி விட, நம்ம தலைவரும் பின்னாடியே போய்டாரு. எப்டியோ போய் தொலைங்கடா. 

 

மறுநாள் காலையில் அனைவரும் கல்யாண வேலைகளை பார்க்க.. சூர்யா வாயில் வராத மந்திரங்களை சொல்லி… இல்ல இல்ல சொல்வது போல் நடித்துக்கொண்டே, நிலாவின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்க… 

 

நிலா… அழகான கூரை பட்டுடுத்தி பால்நிலவு முகத்தில் மஞ்சள் பூசி, நடு நெற்றியில் பொட்டு வைத்து. தலைநிறைய மல்லிகை மலர் சூடி, மருதாணி இட்ட இரு கைகளிலும் தங்க வளையல் இடையே கண்ணாடி வளையல் குலுங்க.. வெள்ளி கொலுசு ஓசை இசை பாட, தேவதை போல் மெதுவாக நடந்து வந்தவளை கண்ட அவள் உள்ளம் கவர்ந்த கள்வனின் பார்வையோ உலகம் மறந்து அவள் முகத்திலேயே மையமிட்டது.

 

“டேய்… டேய் சூர்யா. டேய் மச்சி… அய்யோ இவன் வேற அடிக்கடி இப்படி பிரீஸ் ஆகிடுறனே.?? டேய் பூமிக்கு வாடா… ஊரே வேடிக்கை பாக்குதுடா, மானம் போகுது” என்று அரவிந்த், சூர்யா காதில் கத்த. அதில் உணர்வு வந்தவன்.. என்னடா என்ன ஆச்சு.?? எதுக்கு இப்டி கத்ற?”

 

“ம்ம்ம்… என்ன ஆச்ச.?? மானம் போச்சு… திரும்பி பாருடா அங்க, வந்தவாங்க எல்லாரும் நீ விட்ட ஜொள்ளுல முழ்கி கெடக்குறத..?? ஏன்டா இப்டிய ஓப்பனா சைட் அடிப்ப?” என்று திட்ட. சூர்யா அழகாய் அசடு வழிய… “அடச்சீ” என்று தலையில் அடித்து கொண்ட அரவிந்த் நிமிர்ந்து பார்க்க, அங்கு நிலா பக்கத்தில் பட்டு சேலையில் அழகு பதுமையாய் வந்த தேனுவை பார்த்தவன். வாயில் இப்போது வாட்டர் பால்ஸ் வழிய. இப்போது கலாய்ப்பது சூர்யா முறையானது.

 

நிலா மணமேடையில் சூர்யா அருகில் அமர்ந்தவள், தவறி கூட அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை.. (பி.கு. நிலாவுக்கு வெக்கம் எல்லாம் இல்லைங்க.. எங்க அவனை நிமிர்ந்து பார்த்த பயபுள்ள எதாவது சில்மிஷம் பண்ணுவனோன்னு பயம் தான் வேற ஒன்னும் இல்ல…)

 

சூர்யா ஒரு முறையாவது நிலா தன்னை நிமிர்ந்து பார்க்க மாட்டாளா என்று ஏங்கி தவிக்க, அவள் பார்ப்பதாய் இல்லை. பொறுத்து பொறுத்து பார்த்தவன், அவள் இடுப்பை கிள்ள, பதறி திரும்பியவள். அவன் முகம் பார்க்க… பட்டு வேட்டி, சட்டையில் ஆண்மையின் கம்பீரத்தோடு தன் அருகில் அமர்ந்திருந்தவன் தோற்றத்தில் தன்னை முழுவதும் தொலைத்து இமைக்காமல் அவனையே பார்த்திருக்க, “கடவுளே இதுங்க ரெண்டையும் வச்சிட்டு என்ன தான் பண்றது? அடியேய் பிடாரி சைட் அடிச்சது போது, ஒழுங்க தலையை குனிடி” என்று வந்த தேவியின் வார்த்தையில் தன்நிலை அறிந்தவள். ‘அய்யோ” என்று இரு கண்களையும் மூடிக் கொள்ள.. 

 

சூர்யா, “என்ன மேடம்.?? புருஷன் அழகுல மயங்கிட்ட போல?” என்று அவளை சீண்ட, “டேய் உன்னை” என்று நிலா முறைக்க..

 

 தேவி அவள் தலையில் நங்கென்று கொட்டு வைத்து, “அடியோ கொஞ்சம் வெக்கபடுற மாதிரி நடிக்கவாது செய்டி… நீ கல்யாண பொண்ணுடி” என்றதும் நிலா அமைதியாகி விட்டாள்.

 

குறித்த நேரத்தில் அனைவரும் அட்சதை தூவ, நிலாவின் சங்கு கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தன்னில் பாதியாக அவளை ஏற்றுக் கொண்டான் சூர்யா.

 

திருமண சடங்கில் விளையாட்டுகள் இருக்க. அதில் குடத்தில் மோதிரம் போட்டு அதை மணமக்களை எடுக்க சொல்ல, குடத்தில் கையை விட்ட சூர்யா, நிலாவின் கைகளை பிடித்துக் கொண்டான். நிலா என்ன செய்தும் அவனிடம் இருந்து கைகளை விடுவிக்க முடியாமல் போக, அவள் கெண்டை மீன் கண்கள் ரெண்டும் தவியாய் தவிக்க. அந்த அழகை கொஞ்ச நேரம் ரசித்தவன். மோதிரத்தை அவள் கைகளுக்குள் திணித்து விட்டு, அவளை பார்த்து சிரித்தபடியே அவள் கைகளை விட, நிலா அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு மோதிரத்தை வெளியே எடுத்தாள். பெண்கள் அனைவரும் மகிழ்ச்சியில் துள்ள. 

 

அரவிந்த், “என்னடா சூர்யா இப்டி பண்ணிட்டியே போடா, இனி நீ வாழ்க்கை முழுசும் நிலா சொல்படி தான் நடக்கணும். அவ்ளோ தான் நல்லா மாட்டி கிட்ட” என்று சொல்ல. 

 

அவளை முதல் முதல்ல பாத்த அன்னைக்கே நா அவகிட்ட மாட்டிகிட்டேன்டா. அதுல இருந்து வெளிய வராம ஆயுசுக்கும் இருக்கணும்னு தான்டா என் ஆசை” என்று சொல்ல, அது நிலா காதிலும் விழ… அவள் இதழ்கள் புன்னகை மலர் சூடிக் கொண்டது.

 

அனைத்தும் முடிந்து அனைவரும் சாப்பிட போக. சூர்யா அங்கேயும் தன் சேட்டையை தொடர்ந்தன். சாப்பிட்டு போது நிலாவின் கையை அவன் பிடித்துக் கொள்ள, சூர்யாவின் அம்மா நிலாவை சாப்பிட சொல்ல, “அய்யோ அத்த… நீங்க பெத்த இந்த பிசாசு, என் கைய புடிச்சுட்டுருக்கு. நா எப்டி சாப்புடுறது?” என்று உள்ளுக்குள் புலம்ப. 

 

சந்தியா, “அத்த… மாம்ஸ் அக்கா கையை விட்ட தானே, அவளால சாப்பிட முடியும். மாமஸ் நிலா கைய கொஞ்ச நேரம் விடுங்க, சாப்ட அப்றம் மறுபடியும் புடிச்சிகலாம்” என்று சொல்ல. அங்கு சிரிப்பலை பரவியது. 

 

கல்யாணம் நல்லபடியாக முடிந்து மணமக்கள் சூர்யா வீட்டுக்கு கிளம்பினார்..

 

சூர்யா வீட்டில் தனலட்சுமி மணமக்களை ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் வரவேற்க.! நிலா தான் கணவனுடன் தான் வாழப்போகும் வாழ்க்கையின் முதல் நாளில் அடியெடுத்து வைத்தாள். பூஜை அறையில் விளக்கேற்றி விட்டு வெளியே வந்த நிலாவை தனலட்சுமி அவர் அறையில் ஒய்வெடுக்க அனுப்பி விட்டு சந்தியாவை அவளுடன் இருக்க சொல்லிவிட்டு மற்ற வேலைகளை கவனிக்க சென்றனர்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!