கண்ட நாள் முதல்

கண்ட நாள் முதல்

அத்தியாயம் 23

 

அழகிய காலை பொழுது அன்பானவளின் அணைப்பில் விடிந்த சந்தோஷத்தில் சூர்யா அன்றைய நாளை தொடங்கினான்.

 

நிலாவும் மற்ற வானரங்களும் கீழே வந்து மீண்டும் சமையல்கட்டு ரணகளம் ஆக்கி கொண்டிருக்க, சூர்யா தயாராகி கீழே வந்தான். வெள்ளை நிற சட்டையும், அதற்கு மேட்சாக கருப்பு நிற பேண்டும் அணிந்து, சொல்பேச்சு கேட்காத குழந்தை போல் அவன் பேச்சை கேட்காமல் காற்றில் அலைந்த தன் தலை மூடியை கைவிரலால் கோதிக்கொண்டே வர… அவனை பார்த்த நிலா ஒரு நிமிடம் அப்படியே விழிகள் இமைக்காமல் அவனை பார்ப்பது ஒன்றே தன் வேலை என்பது போல் அப்படியே நிறுவிட.. சூர்யா அவள் அருகில் வந்தவன் இமைக்காமல் தன்னையே பார்க்கும் தன்னவளின் அந்த பார்வையை ரசித்து, அவள் முன் தன் கைகளை கட்டி நின்றவன். “என்ன மை டியர் பொண்டாட்டி காலையில அவ்ளோ பக்கத்தில் பாத்தது பத்தாம இப்ப மறுபடி பாக்குறியா?” என்று கேட்க.. சுய உணர்வுக்கு வந்தவள்.

 

“ஹலோ யாரு உங்களை பாத்தது… நா ஒன்னும் உங்களை பாக்கல..?? அத்த வராங்களான்னு பாத்தேன். நீங்க அனாவசியமா எதையும் கற்பனை பண்ணாதீங்க” என்று சொல்லிவிட்டு திரும்ப. 

 

“அடிப்பாவி அநியாயத்திக்கு இப்படி புழுகிறீயேடி. ஹலோ பாசமலர்களே நீங்க பாத்தீங்கதானே? இவ என்னை பாத்து சைட் அடிச்சிட்டு தான் இருந்தா” என்று தங்கைகளை துணைக்கு அழைக்க.

 

தேவி, “ஆமா அண்ணா நாங்க கூட பாத்தோம். சந்தானம் ஒரு படத்துல சொல்வாரே நல்ல பாம்பு நாட்டு முட்டையை பாக்குற மாதிரி பாக்குறேன்னு. அது மாதிரி உங்களை உத்துப் பாத்துட்டு இருந்தா” என்று சொல்ல, மீதி ரெண்டும் அதற்கு ஆமாம் சாமி போட்டது.

 

தோழிகளையும், தங்கையையும் முறைத்த நிலா, கையில் காய் வெட்டும் கத்தியை வைத்துக் கொண்டு “இப்ப என்ன சொன்ன தேவி. சரியா என் காதுல விழல மறுபடியும் சொல்லு” என்று சொல்ல. தேவி திருதிருவென்று முழித்தவள். “அய்யோ அண்ணா காப்பாத்துங்க.. இந்த பிடாரி என்ன கொல்ல பாக்குற” என்று சூர்யா பின்னால் ஒளிய. 

 

“நிலானி இது நல்லா இல்ல. நீ என்னோட சாட்சிய பயமுறுத்துற… இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்”

 

“யாரு யாரைடா பயமுறுத்துறது?_ என்று கேட்டபடி தனம் அம்மா உள்ளே வர. சட்டென்று கத்தியை கீழே போட்ட நிலா, “பாருங்க அத்தே இவங்க எல்லாம் என்னை கிண்டல் பண்றாங்க” என்று இதழ் பிதிக்கி சிறுபிள்ளை போல் கண்களை கசக்கி சொல்ல… தனம் அம்மாவை தவிர மற்ற அனைவரும் “இது உலக நடிப்புடா சாமி” என்றனர் ஒரே கோரஸ்சில். 

 

“ஏய் இப்ப எல்லாரும் வாங்க போறீங்க பாரு. பாவம் என் மருமக அப்பாவி புள்ள, சும்மா அதை போய் கிண்டல் பண்ணி அழ வச்சிட்டு. எல்லாரும் சும்மா இருங்கா” என்றவர் நிலா கண்ணிலிருந்து வராத கண்ணீரை தன் கைகளால் துடைத்துவிட, “அம்மா இதெல்லாம் ஓவர்மா… அவ கண்ணுல தண்ணியே வர்ல.. நீ என்னமோ குத்தால அருவியே அவ கண்ணுல கொட்டுற மாதிரி இல்ல சீன் போடுறா”

 

“டேய் இப்ப நீ சும்மா இருக்க போறியா இல்லையா.? மரியாதையா வாயா மூடிட்டு எல்லாரும் சும்மா இருங்க. இல்ல இன்னைக்கு யாருக்கும் காலையில டிபன் கிடையாது” என்று மிரட்ட. நிலா கமுக்கமாக சிரித்துக்கொண்டே சூர்யாவை நோக்கி உதட்டை சுழித்து ஒழுங்கு காட்டி விட்டு, “எப்புடி” என்று புருவத்தை தூக்கிக் காட்ட. 

 

சூர்யா, “இருடி மகளே… என்கிட்ட தனியா மாட்டுவ இல்ல, அப்ப பாத்துக்குறேன்டி, அந்த சுளிக்கிற உதட்டை” என்று மனதில் மனைவியை செல்லமாக திட்ட…

 

தேவியோ, “அய்யோ அம்மா நான் ஒன்னும் செய்யலாம்மா. எல்லாம் இந்த அண்ணாவும், இந்த ரெண்டு பிசாசும் தான். நா அப்பாவிமா எனக்கு ஒன்னுமே தெரியாது.” என்று பிளேட்டை திருப்பி போட.

 

“தேவி அக்கா என்ன இது?? எதுக்கு மாமாவை இப்படி மாட்டி விடுறீங்க” என்ற சந்தியாவின் காதில், “அடியேய் குட்டி பிசாசு, இன்னைக்கு தனம்மா டிபனுக்கு பூரி, குருமா, வடை, பாயசம், கூடவே குலோப்ஜாம் எல்லாம் செஞ்சிருக்காங்க… இப்ப மட்டும் நம்ம சூர்யா அண்ணாக்கு சப்போர்ட் பண்ணோம்.. தனம்மா நமக்கு இது ஒன்னு கூட தரமாட்டாங்க… இப்ப சொல்லு உனக்கு உன் மாமா வேணுமா?? இல்ல சோறு வேணுமா? சாய்ஸ் ஸ் யூவர்ஸ்…”

 

“என்ன கேள்வி தேவிக்கா இது..?? பதில் தெரிஞ்சுட்டே இப்டி ஒரு கேள்வி கேட்டு போட்டிங்களே. இப்ப பாருங்க… ஆமா அத்தை நிலா சும்மா தான் இருந்தா. மாமா தான் வந்த சும்மா அவளை கிண்டல் பண்ணி அழுக வச்சுட்டாரு” என்று தன் சோறு தான் முக்கியம் என்று கொண்ட கொள்கையில் உறுதியாக நின்றாள் சந்தியா. (பாருங்க இந்த சின்ன வயசுல எவ்வளவு மன உறுதி சந்தியாக்கு..).. சூர்யா அதிர்ச்சியாக சந்தியாவை பார்த்தவன், “நீயுமா சந்தியா? யூ டூ ப்ரூட்டஸ்?” என்று கொலைவெறியுடன் தேவி, சந்தியா இருவரையும் பார்க்க. “எங்களுக்கு வேற வழி தெரியல… வீ ஆர் கார்னர்டு” என்று கண்களாலே பதில் சொல்ல, சூர்யா சிரித்து விட்டான். 

 

“அண்ணா இதுங்களை போய் நம்புறீங்களே. சோற பாத்ததும்எப்டி உங்களை டீல்ல விட்டாளுங்க பாத்தீங்களா…”

 

“ஆமா தேனு இதுங்க ரெண்டையும் நம்பவே கூடாது எப்டி கோத்து விட்டு என் டிபனையும் சேத்து ஆட்டைய போட பாக்குதுங்க” என்று சொல்லி சிரிக்க… முதலில் அவன் சொன்னது புரியாமல் “ஆமா” என்று தலையாட்டிய தேனு. பின் அர்த்தம் புரிந்து “அண்ணா நீங்களுமா… அய்யோ கடவுளே” என்று தலையில் அடித்துக் கொண்டாள்.

 

இவர்கள் பேசிக்கொண்டிருக்க தனம் அம்மா, நிலாவிடம் முந்திரி பருப்பை வறுத்து பாயசத்தில் போட சொல்ல நிலா கண்ணும் கருத்துமாக மாமியார் சொன்ன வேலையை செய்து கொண்டிருக்க… சூர்யா, நிலா இடுப்பில் மெதுவாகக் கிள்ளி விட்டு ஒன்றும் தெரியாதது போல் நகர்ந்து நின்று விட. நிலா “அய்யோ.. அம்மா” என்று அலற… நம்ம வானரங்கள் மூனும் வாயை மூடி வந்த சிரிப்பை அடக்க முயல, நிலாவின் அலறல் சத்தம் கேட்ட தனம்மா, “நிலா என்னடா ஆச்ச.?? ஏன் கத்துனே.??” என்று பதட்டத்துடன் கேட்க, சூர்யா முந்தி கொண்டவன், “அது ஒன்னும் இல்லமா ஏதாவது எறும்பு கடிச்சிருக்கும்… வேற ஒன்னும் இருக்காது. இல்ல நிலானி” என்றவன், நிலா செய்தது போல் புருவத்தை உயர்த்தி கண்ணடிக்க…

நிலா அவனை முறைத்தவள். “அது ஒன்னு இல்ல அத்த ஒரு கெட்ட பயபுள்ள எறும்பு இடுப்புல கடிச்சிருச்சு. அவ்ளோ தான். இனி அது கடிக்க வந்த புடிச்சு ஒரே நசுக்க நசுக்கிடுறேன். நீங்க வேலையை பாருக்க அத்த” என்றவள் சைடில் திரும்பி சூர்யாவை பாக்க. அவனோ “அடிப்பாவி ஒரு கிள்ளுக்காடி என்ன புடிச்சு நசுக்குவ ராட்சசி” என்று புலம்ப, தனம் அப்பாவுக்கு புரிந்துவிட்டது, நிலாவை கடித்த எறும்பு எது என்று. 

 

அப்போது பார்த்து அரவிந்த் சமையல் அறையில் புகுந்தவன். “என்னம்மா வாசனை தூள் கிளப்புது என்ன ஸ்பெஷல்?? என்று கேட்டுக் கொண்டே வர. “நல்ல நேரத்தில் வந்த அரவிந்த். முதல்ல இந்த வானரங்களை வெளிய இழுத்துட்டு போ. இங்க வந்து சமைக்க விடாம இம்சை பண்ணுதுங்க…”

 

“உத்தரவு தாயே… ஆனா, ஒரு கண்டிஷன்.. எனக்கு மட்டும் எல்லாம் ஐயிட்டமும் ரெண்டு ரெண்டு வைக்கணும். அப்ப தான் நீங்க சொன்னதை செய்வேன். டீல் ஓகேவா ராஜாமாதா…”

 

“ரெண்டு என்னடா, நாலு வைக்கிறேன் இழுத்துட்டு போடா இதுங்கள” என்று சொல்ல.. சமையல் அறை காலி ஆனது.

 

வெளியே ஹாலில் உட்கார்ந்து ஐந்தும் அரட்டை அடித்துக் கொண்டிருக்க, அரவிந்த், “என்னடா சூர்யா நேத்து நைட் அடி பலமா?” என்று வம்பிழுக்க…

 

“ச்சே.. ச்சே அப்படி எல்லாம் ஒன்னும் இல்லடா… யார் கிட்ட இந்த சூர்யா கிட்டயா அதெல்லாம் நடக்கும். அவ உள்ள வந்ததும் என் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கி. நீங்க எனக்கு புருஷனா கிடைக்க நா ரொம்ப குடுத்து வச்சிருக்கணும்னு சொல்லி ஒரே ஆனந்த கண்ணீர்டா மச்சி” என்று சொல்ல.. அரவிந்த் திரும்பி தேவி, சந்தியாவை பார்க்க… அதுங்க ரெண்டும் உதட்டை கடித்து வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டிருக்க.. 

 

“டேய் பொய் சொல்லுடா… அதுக்குன்னு இப்டி நடக்கவே முடியாத விஷயத்தை எல்லாம் சொல்லாதடா”

 

“டேய் நா ஏன்டா பொய் சொல்லணும். அதெல்லாம் ஒன்னும் இல்ல.. நா நேத்து நடந்ததை தான் சொல்றேன்” என்று சூர்யா மிடுக்காய் சொல்ல,

 

சந்தியா, “அய்யோ மாமஸ் ப்ளீஸ் போதும் மாமஸ் ரீல் அந்து போச்சு. இனி ஒன்னுமே பண்ண முடியாது” என்று விழுந்து விழுந்து சிரிக்க.. தேவியும் கூட சேர்ந்து சிரத்தவள். “அண்ணா சும்மா சொல்ல கூடாது. சூப்பரா கதை விடுறீங்க, செம்ம போங்க” என்று அவள் பங்கிற்கு அவளும் சூர்யா காலை வார.. அரவிந்த்தும் தேனுவும் அதை கேட்டு வந்த சிரிப்பை அடக்க முடியாமல் அவர்களுக்கு சூர்யாவை பார்த்து சிரிக்க… “டென்ஷன்னான சூர்யா. “ஏய் எதுக்கு இப்ப இப்டி சிரிக்கிறீங்க..??” என்று ஒன்றும் புரியாமல் கேட்க. அவனை விட்டு ரெண்டு அடி தள்ளி சென்ற தேவியும்‌ சந்தியாவும், “மாம்ஸ் நேத்து நைட் அக்கா கிட்ட நீங்க அடி வாங்குற அந்த கண்கொள்ளா காட்சிய… ச்சே இல்ல, இல்ல காது கொள்ளா சத்தத்தை கேக்க., நாங்க ரெண்டு பேரும் உங்க ரூம் வெளிய தான் நின்னுட்டு இருந்தோம்’ என்று சிரித்துக் கொண்டே சொல்ல.

 

“அடச்ச…!! இது தெரியாம இதுங்க கிட்ட தேவையில்லாம பேசி மாட்டிக்கிட்டேனே” என்று தலையில் அடித்துக் கொண்டவன். அசடு வழியும் முகத்துடன் அரவிந்தை பார்க்க, “த்து… த்த்து…” என்று துப்பியவன் “இந்த அவமானம் தேவையாடா உனக்கு” 

 

“ஏய் குட்டி பிசாசுகளா… அறிவு இல்ல உங்களுக்கு இப்டியா ஒட்டு கேக்குறது” என்று சூர்யா இருவர் காதையும் பிடித்து திருக… தேவியும் சந்தியாவும் “அய்யோ ப்ளீஸ் மாமஸ் சாரி சாரி” என்று குதிக்க, தேவியும் “அண்ணா சாரிண்ணா, சும்மா விளையாட்டுக்கு பண்ணிட்டோம்” என்று சூர்யாவிடம் இருந்து காதை காப்பாற்ற முயல… 

 

“நா அப்பாவே வேணாம்னு சொன்னேன், கேட்டீங்களா? இப்ப அனுபவிங்க” என்றவனை தேவியும் சந்தியாவும் கோவமாய் பார்க்க,

 

“ஏன்டா டேய் அதுங்க தான் சின்ன புள்ளைங்க, நீ இவ்ளோ பெருசா வளர்த்திருக்க இல்ல. நீ அவங்குக்கு இது தப்புன்னு சொல்லாம கூட சேந்து சிரிச்சிட்டு இருக்க, அறிவு கெட்டவனே” என்று திட்ட, தேவி, சந்தியாவை பார்க்க… அவளின் பார்வையின் அர்த்தம் புரிந்தவள். தேவியை பார்த்து கண்ணடித்து விட்டு, “ஆமா மாமா நான் கூட சொன்னேன்.. நிலா என்னோட அக்கா. அவர் என்னோட மாமா… அவங்க ரூம்ல ஒட்டு கேக்குறது தப்புன்னு. ஆனா, அரவிந்த் மாமா தான் கேக்கல, எங்களுக்கு ஒட்டு கேக்க பிளான் போட்டு கொடுத்ததே இவரு தான் மாமா… ஆமா, தானா தேவிக்கா” என்று தேவியையும் துணைக்கு அழைக்க. தேவியும், “ஆமாண்ணா” என்று ஒத்து ஊத… சூர்யா, அரவிந்தை முறைக்க.

 

அரவிந்த் மொத்தமாக அதிர்ந்தவன். “ஏய் பிசாசுகளா… ஏன் இப்டி பொய் சொல்றீங்க, நா எப்ப அப்படி சொன்னேன். நா வேணாம்னு தானா சொன்னேன். இப்ப பழிய தூக்கி என் மேல போடுறீங்களா.?”

 

“அப்ப இவங்க போட்ட பிளான் உனக்கு தெரியும். தெரிஞ்சும் நீ என்கிட்ட சொல்லல, அதோட நேத்து என்ன ஆச்சுன்னு கேட்டு என்னை வெறுப்பு ஏத்திட்டு வேற இருக்க இல்ல.. உன்னை” என்று சூர்யா அவனை அடிக்க துறத்த,

 

“அடிப்பாவிகளா… ஏன்டி அவரை மாட்டி விட்டிங்க?” என்று தேனு அரவிந்துக்கு சப்போர்ட்க்கு வர.

 

“பின்ன என்னடி… நாங்க மாட்டிக்கிட்ட வந்து காப்பாத்தமா… எங்களுக்கு அட்வைஸ் பண்ணிட்டு இருக்காரு. அதான் எங்களை நோக்கி பாய்ந்த 

தோட்டவை அண்ணா பக்கம் அப்டியே திருப்பி விட்டோம். கரெக்ட்‌ தானா சந்தியா” என்று சந்தியாவும்‌ தேவியும் hi-fi அடித்துக்கொண்டனார்.

 

தனம் அம்மா “டிபன் ரெடி, எல்லாரும் சாப்பிட வாங்க” என்று சொல்லவும். ஒருவழியாக இவர்கள் சண்டையை முடிந்தது.. எல்லோரும் டைனிங் டேபிளில் ஆஜராகினார்.

 

“அப்றம் சூர்யா எப்ப ஆபீஸ் கிளம்புற, என்று குமரேசன் கேட்க, அவர் கேட்ட கேள்வியில் வாயிலில் வைத்த பூரி தொண்டையில் சிக்கிக் கொள்ள, தன் தலையில் தட்டிக்கொண்டவன். “ஹலோ தகப்பா என்ன இது? இல்ல என்ன இதுன்னு கேக்குறேன். நேத்து தான் எனக்கு கல்யாணம் முடிஞ்சுது. அடுத்து ஹனிமூன் எங்க போறேன்னு கேக்காம… ஆபீஸ் எப்ப போறேன்னு கேக்குறீங்க, இது உங்களுக்கே அநியாயமா இல்ல” என்று ஆதங்கத்துடன் கேட்க‍… மற்ற அனைவரும் அவனை பார்த்து சிரிக்க, நிலா மட்டும் “என்ன ஹனிமூனா!! இது என்ன புது பிரச்சனை. எல்லாரும் இருக்கும் போதே இவர் சேட்டை தாங்கள. இதுல இவர் கூட தனியா இருந்த. அய்யோ சாமி, என் நிலைமை அவ்ளோ தான்” என்று கையை பிசைந்து கொண்டு இருக்க.. அவள் முகத்தை வைத்து அவள் மனதை அறிந்த சூர்யா, அவளை பார்த்து விஷமாக சிரித்தான்.

 

“டேய் நீ எங்க வேணாலும் போ… ஆனா, ஒரு ஒரு மாசம் கழிச்சு போ என்க. சூர்யாவிற்கு அவர் எதற்கு சொல்கிறார் என்று புரிந்து. “ஓகேபா நீங்க சொல்றது புரியுது. புது 

பிராஜக்ட் முடிச்சிட்டு, அப்றம் நாங்க ஹனிமூன் கிளம்புறோம்’ என்று சொல்ல, அதை கேட்ட பின் தான் நிலாவிற்கு மூச்சே வந்தது. “அப்பாடி தப்பிச்சேன்டா சாமி” என்று கடவுளுக்கு நன்றி சொல்ல, சூர்யா அப்பாவிடம் பேசி முடித்து தாயை பார்க்க, அவர் நிலாவிற்கு பூரியை ஊட்டிக்கொண்டிருந்தார். 

 

“அம்மா இங்க நீ பெத்த புள்ள என் தட்டு காலியா இருக்கு. நீ அதை கவனிக்காம, அவளுக்கு ஊட்டி விட்டுட்டு இருக்க” என்று சண்டைக்கு வர.

 

“டேய்… அதான் எல்லாம் டேபிள் மேல இருக்கு இல்ல.. எடுத்து போட்டு திங்க வேண்டியது தானா..”

 

“அம்மா இதெல்லாம் ஓவர்மா. என்ன இருந்தாலும் நா நீ பெத்த புள்ள ஞாபகம் இருக்கட்டும்.”

 

“சரிடா ஞாபகம் வச்சுக்கிறேன். இப்ப நீ என்னை டிஸ்டப் பண்ணாத, சும்மா இரு.”

 

“அவமானம் பெருத்த அவமானம்.. எனக்கு டிபன் வேணாம். நா இப்போதே இங்கிருந்து வெளிநடப்பு செய்கிறேன்” என்று எழுந்து கொள்ள யாரும் அவனை கவனிக்கவில்லை.

 

“அட துரோகிகளா எல்லா தட்டுல வச்ச கண்ணை அசைக்க கூட இல்லாம தின்னுட்டு இருக்கீங்க. இங்க ஒருத்தன் கத்திட்டு இருக்கேனே, உங்க காதுல விழுதா இல்லயா…?”

 

“டேய் சும்மா கத்தாத.. டிபன் வேணாம்னா, எந்திரிச்சு போடா. சும்மா தொந்தரவு பண்ணிட்டு. பாவம் நிலா நைட் கூட சரியா சாப்பிடாம பசியோட இருக்கு” என்றவர் தன் ஊட்டும் வேலையை தொடர… நிலா அவனை ஓரக்கண்ணால் பார்த்து சிரிக்க. “ஒருத்தரும் நம்ம கவனிக்க போறது இல்ல என்பது சூர்யாவுக்கு நன்கு புரிந்து, உட்கார்ந்து சாப்பிட ஆரம்பிக்க. 

 

“மாம்ஸ் நீங்க எங்க இனம் மாம்ஸ்… சோறு தான் முதல்ல.. அப்றம் தான் எல்லாம்” என்று சந்தியாவின் வார்த்தையில் அனைவரின் சிரிப்புடன் அன்றைய காலை உணவு முடிந்தது.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!