கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன் – அத்தியாயம் 7(2)

கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன் – அத்தியாயம் 7(2)

 

கண்மணி 7(2)

 

“ஏட்டிக்குப் போட்டியாக சண்டை போட்டுகிட்டு இருந்த இளாவும் கிருஷ்ஷும் சேர்ந்ததே ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு…. முக்கியமா எனக்கும் கோந்துக்கும் (கோதண்டம்)..”

 

“ஆராவ ரெண்டு வருஷம் வீட்டுலயே வச்சி இருந்துட்டு, அவ சரியான உடனே,  ஏழு வயசுக்கு மேல தான் மறுபடியும் ஒண்ணாவது படிக்க சேர்த்தோம்… அவ கொஞ்சம் லேட் பிக் அப் அவ்வளோ தான்…மத்தபடி சாதாரண குழந்தை ஆயிட்டா… இவளுக்கு அம்மா அப்பா எல்லாமே இளான்னு நினைப்பா இருந்ததுல அவ கொஞ்சம் தேறிட்டா ஆனா , இளாதான் உள்ளுக்குள்ளேயே ரொம்ப முடங்கிட்டான்.. “

 

“ரொம்ப  அழுத்தகாரன்..என்ன வேணும்னாலும் வாய் விட்டு சொல்ல மாட்டான். நாமளே தான் தெரிஞ்சுக்கணும்.”

 

“இவனுங்க சேர்ந்த கதையை விட்டுட்டனே…!. ஆரா ரெண்டாம் வகுப்புக்கு வந்ததும் வழக்கம் போல லஞ்ச் ப்ரேக்ல  இளா ஊட்டி விட இவ சாப்பிட்டு இருக்கா.. இதை பார்த்ததும் மத்த பசங்க எல்லாம் , ஆராவ பார்த்து இதுதான் அஞ்சலி பாப்பா , கொஞ்சம் லூசு பாப்பான்னு ஏதோ கேலி பண்ணியிருக்குங்க.., இளாக்கு ஆராவ  பத்தி எதாவது சொல்லிட்டா சலங்கை கட்டி விட்டது போல தான் ஆடி தீர்த்துடுவான்.. “

 

“அதுங்க அவளை லூசுண்ணு சொல்லவும் அவனுங்க கூட ஒரே சண்டை.. மூணு பசங்கள ஒத்தையா போட்டு உருட்டி விளையாண்டுட்டான் . இதுல ஃபைனல் டச் ஆக மூணு பேர் மண்டையிலயும் டிஃபன் பாக்ஸ்சால கிழிச்சுட்டான்.”

 

“அதுக்குள்ள இந்த அம்மா ஆரா ஹெல்ப்புக்கு ஆள் கூட்டிட்டு வரேன்னு நம்ம கிருஷ்ஷை கூட்டிட்டு வந்திருக்கு. அவன் ஆல்ரெடி பினிஷ் பண்ண ஃபைட்டுல  நம்ம தலைவர் சப்பொர்ட் பண்ணவும், பிரின்சிபால் ரெண்டு பேரையும் கையும் களவுமாகப் பிடிச்சு  , அவர் ரூமில் கஸ்டோடி எடுத்து விசாரிச்சிருக்கார். “

 

“ ஒருத்தன் , நான் மட்டும் தான் அடிச்சென்னு சொல்ல, இன்னொருத்தன் நானும்தான் அடிச்சென்னு  மாத்தி ,மாத்தி சொல்லியிருக்காங்க. ஒருத்தனை ஒருத்தன் விட்டு கொடுக்கல…”

 

“ இதை பார்த்த பிரின்சிபால் , அடிப்பட்ட காயத்தை எல்லாம் ஆராய்ந்து பார்த்துட்டு ., விழுந்தது அடி இல்ல இடின்னு , முடிவு பண்ணி ரெண்டு பேருமே குற்றவாளிகள்ன்னு ஜட்ஜ்மெண்டு எழுதிப்புட்டாரு..இதுல சேர்ந்துபுட்டாங்க ரெண்டு பக்கிகளும்.”

 

 “அப்புறம் எங்களையும் ,  இளாவுக்கு லீகல் கார்டியன் ஆக இருந்த என் அண்ணனையும் கூப்பிட்டுவிட்டாங்க..அங்க போன நானும் உன் மாமா கோந்தும்,  இவனுங்க சேர்ந்தத பார்த்து ஆனந்த கண்ணீர் வடிக்க, அந்த ஜட்ஜ், புள்ளைங்க தப்பு செஞ்சத நினைச்சு நாங்க கதறி அழரோம்னு , மறுபடியும் தப்பா ஜட்ஜ் பண்ணி விடுதலைன்னு தீர்ப்ப மாத்தி  எழுதிட்டாரு.”

 

“அதுலயிருந்து இவனுங்க ப்ரெண்ட்ஸ்… அதுவும் முஸ்தபா, முஸ்தபான்னு பாடிக்கிட்டு முத்தி பொகுற அளவுக்கு நெருக்கமா ஆகிட்டானுங்க.. இளா வும் இவனும் ஒரே காலேஜ் ல ஒண்ணா படிச்சாங்க.. படிப்பை முடிச்ச கையோட  இருபத்தி மூணு வயசுல இளா அவங்க ஃபேமிலி பிசினஸ் ஆன டெக்ஸ்டைல் பிசினஸை கையில எடுத்துகிட்டான். துணைக்கு கிருஷையும் சேர்த்துகிட்டான். அஞ்சு வருஷம் எப்ப சாப்பிட்டாங்க , எப்ப தூங்கினாங்கன்னு தெரியாமல் வேலை பார்த்தாங்க.. சுமாரா போய்ட்டு இருந்த டெக்ஸ்டைல்ஸ்ஐ பல கொடி டர்ன் ஓவர்க்கு கொண்டு வந்தானுங்க.”

 

“சரியா உங்க கல்யாணத்துக்கு நாலு மாசம் முன்னாடி, ஒரு நாள் இளா எங்களை வீட்டுக்கு விருந்துக்கு கூப்பிட்டு இருந்தான்.. எதுக்குன்னு தெரியாமலே சாப்பிட்டு முடிச்சோம்… பார்த்தா கையில  இன்விடேஷன் கொடுக்கிறான்.. “

 

“என்னடா உனக்கு கல்யாணமா… அப்படின்னு கேலி பண்ணிக்கிட்டே கார்டை பிரிச்சா…. அது

 புரசை வாக்கத்தில் புது உதயம் “ வேதா டெக்ஸ்டைல்ஸ்” 

நிறுவனர், கிருஷ்ணா கோதண்டம். “

 

“அப்படி படிச்சதும் எனக்கு மயக்கமே வந்துடுச்சி . அவன் புரசைவாக்கத்தில் அஞ்சு மாடியில புதுசா ஷோ ரூம் கட்டுறான்னு தெரியும்.. ஆனா அதை எங்களுக்காக பன்றான்னு சத்தியமா நினைக்கலை.”

 

“இந்த ஷோ ரூமை, தானமாவோ, அன்பளிப்பாகவோ,நன்றி கடனாகவோ, இல்லை பரிதாபபட்டோ தரல.. இது என் கூட தொள் கொடுத்து ஆசிர்வாத் டெக்ஸ்டைல்ஸ்ஐ வெற்றி பாதைக்கு அழைச்சிட்டு போன பார்ட்னரோட பங்குன்னு சொல்லி மறுக்க முடியாத அளவுல நம்ம குடும்பத்த ரொம்ப உயரத்துக்கு கொண்டு போய் விட்டான்.. “

 

“என் சொந்த அண்ணனே , புருஷன் செத்ததுக்கு அப்புறம் எங்க நாங்க அவர் வீட்டுக்கு சோத்துக்கு வந்துடுவோமுன்னு , வாடகை வீடு பார்த்து எங்களை தனியா வச்சிட்டார்.. நாளு, கிழமையில் கூட வீட்டுக்கும் கூப்பிட மாட்டார்.. திரும்பவும் சொந்த பந்தத்து கிட்ட எங்களுக்கு அங்கீகாரம் கிடைச்சது இந்த வேதா டெக்ஸ்டைல்ஸ் மூலம் தான்.”

 

“அப்புறம் புதுசா தொழில் ஆரம்பிச்சிருக்கானேன்னு கிருஷ் பய ஜாதகத்தை பார்க்க போனேன். அங்க ஜோசியர் இன்னும் ரெண்டு மாசத்துல கல்யாணம் நடக்கலன்னா, திருமண திசை முப்பத்தி அஞ்சு வயசுக்கு மேல தான்னு சொல்லிட்டார். அப்புறம்தான் அவசர அவசரமாக பொண்ணை தேடி ஒரு வழியா உன்னை கண்டுபிடிச்சி ட்டோம். “

 

“கிரிஷுக்கு கல்யாணம் பண்ணினதில் இருந்து, எனக்குள்ள ஒரே குற்ற உணர்ச்சி.. ஒரு புள்ளைக்கு பண்ணிட்டு, இன்னொரு புள்ளைய தனியா விட்டுட்டமேன்னு …”

 

“எனக்கு முன்னாடியே ஆரா பத்தின யோசனை இருந்தது.. ஆனா இந்த சீமா கழுதை எல்லா இடத்துலயும் போயி , இளாவும் நானும் லவ் பண்ணுறோம்ன்னு சொல்லிகிட்டு திரிஞ்சாளா..?? எனக்கு பக்க்குண்ணு  ஆயிடுச்சி….”

 

“அதான் கிரிஷை விட்டு பேச சொன்னேன்.. அவன் நேரம் வர்றப்ப பேசறேன்ன்னு சொன்னான்.. நேரம் கூடி வந்துடுச்சி ரோ…..இப்ப சீனியை போடு… கொஞ்சம் நெய்யை விடு டா…. ஒட்டாமல் வரும்… கை விடாமல் கிண்டு..”

பால்கோவா விற்கு ஃபினிஷிங் டச் கொடுத்து கொண்டிருந்தார்கள்…

 

“ஏன் மீ ஆண்டாள் அம்மாக்கு என்ன ஆச்சுன்னு சொல்லல…?” ரோஜா விற்கு டவுட் வர….

 

“என்ன ஆச்சா…?அந்த அம்மா எல்லாரையும் நல்லா ஆக்கி வச்சிட்டு தான் மேல போனா புண்ணியவதி…. ஏற்கனவே உறவை இழந்துட்டு நிராதரவா இருந்த புள்ளைகளை அந்த அம்மா அது பங்குக்கு படாப்படுத்தி வச்சிட்டு தான் கிளம்புனுச்சி… வயசில மூத்தவங்கன்னு பார்க்கிறேன்….இல்லைன்னா… நம்ம  லட்டை படுத்தன பாட்டுக்கு… அருவாமனையை எடுத்து அந்த அம்மாவ ஆஞ்சியிருப்பேன்….”

 

“அப்படி என்ன மீ பண்ணினாங்க….? நீங்களே கொலை வெறி ஆகுற அளவுக்கு…”

 

“புள்ளை வயசுக்கு வர்ற மாதிரி இருக்குன்னு, அவங்க வீட்டு ஆளுக பக்கத்தில வேணும்னு, துணைக்கு கொண்டு வந்து வச்சோம்… ஆனா அந்த அம்மா.., ஆராவ…, வேலைக்காரி போல நடத்துனுச்சி… நல்ல துணி உடுத்த கூடாது…, இளா கூட பேச கூடாது..,நல்ல சாப்பாட்டை திங்க கூடாதுன்னு…, ஏகப்பட்ட கண்டீஷன்… இளாவுக்கு நேரா அவகிட்ட அக்கறை காட்டுற மாதிரி நல்லபடியா நடந்துகிச்சி. “

 

“இதைப் பார்த்த அவனுக்கு.. , ஆராவ பார்த்துக்க நம்ம வீட்டுலயே ஒரு சொந்தம் இருக்குன்னு கொஞ்சம் மிதப்பு வந்துடுச்சு…. ஆனா இளாவுக்கு அப்ப ஒரு விஷயம்  மறந்திடுச்சு… ஆரா…, சந்தோஷம்,துக்கம், அழுகை , வலி எல்லாத்துக்கும் இவனை தான் தேடுவான்னு. “

 

“ஆரா அந்த நேரத்துல தான்…, பெரிய மனுஷி ஆயிட்டா….. ஸ்கூல்ல இருந்து கார்டியனான என் அண்ணனுக்கு சொல்லி விட்டாங்க…. என் அண்ணி கற்பகம், தலைவலின்னு குப்புற படுத்து கிட்டா…”

 

“என் பொண்ணுக்கு நீங்க என்னடி செய்யறதுண்ணு.., நானும் உங்க மாமாவும் அவளை பள்ளிக்கூடத்தில் இருந்து கூட்டிட்டு வந்து தலைக்கு தண்ணி ஊத்தி உக்காரவச்சோம்.. அதுக்கப்புறம் தான் இந்த அம்மாவோட ஆட்டம் ஜாஸ்தி ஆயிடுச்சு..”

 

“இளா அவளை பார்க்க கூடாது தோஷம் பட்டுடும்ன்னு சொல்லி ரெண்டு நாள் தனியா வச்சிருந்தது நம்ம லட்டை.., பாதி ராத்திரியில் வயிறு வலிக்கவும், படுக்கையை சுருட்டிக்கிட்டு இவ  இளா ரூமுக்கு போயிட்டா போல…”

 

“அவனுக்கும் மனசு தாங்கல… சரி இங்கேயே படுத்துக்கோ ஆரா ,ஆனா ஆண்டாள் பாட்டிகிட்ட சொல்லாதன்னு… டெய்லி நைட் அவன் கூடவே தூங்க வச்சிருக்கான்… அப்புறம் சடங்கு சுத்தின்னோம்… மறு மாசம் திரும்புறப்ப தான் உன் மாமா என்னை தவிக்க விட்டு போயிட்டார்..”

 

“அப்புறம் எங்க நான் மத்தவங்களை பார்க்க…? என்னை கண்ணுக்குள்ள வச்சி பார்த்துக்க தெரிஞ்ச அவருக்கு, அவரை கண்ணுல பார்க்காமல் எவ்வளவு துக்க படுவேன்னு தெரியாமல் போய்டுச்சு ரோ…. ஆண்டவன் ஒரு வேளை…, அருமை ,பெருமையா பெத்த புள்ளை ஒன்னு இருக்குது…, அதுக்கு மேல  உசிரா நினைக்கிற ரெண்டு ஜீவனும் இருக்க இவளுக்கு எதுக்கு இத்தனை சந்தோஷமின்னு…, கோந்தை கூப்பிட்டு கிட்டான் போல….”

 

கண்ணீர் ஆறாய் பெருக்கெடுத்தது வேதா விற்கு…

 

மற்ற விஷயங்களுக்கு எல்லாம் ஆறுதல் கூற முடிந்தவளுக்கு. ., கணவனை நினைத்து வேதா அழும்போது தேற்ற முடியாமல் திகைத்து நின்றாள் ரோஜா… இன்று  பார்க்கும் வேதாவே புதிது அவளுக்கு . எப்போதும் கலகலப்பாக இருப்பவளை கண்ணீருடன் இன்று தான் பார்க்கிறாள்.. தண்ணீரை கொடுத்து உட்கார வைத்தாள் வேதாவை..

 

சிறிது நேரம் அணைத்து இருந்தவள்…, 

“மீ   …..  நீங்க வேணுமின்னா பாருங்க…., மாம்ஸ் என் வயித்துல மகனா பிறந்து வந்து உங்களை பாடாபடுத்தி எடுக்க பொறார்……..அப்புறம் இத்தனை நாளாக மிஸ் பண்ணினதை எல்லாம் சேர்த்து வச்சு… நிறைய முத்தம் கொடுக்க போறார் என் பையன் ரூபத்தில்…., அப்புறம் எங்கயிருந்து   உங்களுக்கு எங்க நினைப்பு வரும்…மீ ன்னு நான் கூப்பிட்டா யாரும்மா நீ ன்னு கேக்க போறீங்க…நீங்க…”

 

 வெக்கத்துடன் சிரிப்பும் வந்தது.. வேதாவின் முகத்தில்…… ஆராவின் நினைவு வந்தவராக..,

 

“லட்டு தூங்கினாளே.., எழுந்துட்டாளா ரோ… பால்கோவா க்கு இந்நேரம் மோப்பம் புடிச்சிட்டு வந்து இருப்பாளே….? “

 

“மீ அவ இந்த வார செல்ஃபி டிரஸ்சை டிசைன் பண்ணிக்கிட்டு இருக்கா…நாலு குலாப் ஜாமூன், முறுக்குண்ணு நல்ல நொறுகிட்டு தான் உட்கார்ந்து இருக்கு லட்டு….. நான் கூட இவ்வளவு குலாப் ஜாமூனை ஒரே நாள்ல சாப்பிட்டா உன்னை எறும்பு தூக்கிட்டு போய்ட போகுதுடின்னு கேட்டா…”

 

“அதுக்கு அவ , அப்படி ஈசியா தூக்கிட்டு போயிட கூடாதுன்னு தான் ,  வெயிட்டுக்காக , அப்பப்ப நொறுக்கு தீனி சாப்புடரேன் அண்ணி… அப்புறம் என்னை தூக்க டிரை பண்ணி, தூக்க முடியலன்னு மூச்சு வாங்கி, அம்புட்டு எறும்பும் அப்படியே என்னை விட்டுட்டு போயிடும்ன்னு சொல்லுறா என் வாயாடி நாத்தனா…… எப்படி தான் மீ இவளை சமாளிச்சீங்க நீங்க…?”

 

“வெள்ளந்தி டீ ரோ என் பொண்ணு…, உன் புருஷனுக்கு இவன்னா உசுரு….. அப்பா செத்து அஞ்சு நாள்ல,இவ ஆஸ்பத்திரியில் இருக்கான்னு தெரிஞ்ச உடனே.., என்கிட்ட வந்து அம்மா , லட்டு பாப்பாவுக்கு உடம்பு முடியாமல் ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்காங்க… நான் போயி பார்த்திட்டு உடனே வந்திடறேண்ணு சொல்லிட்டு கிளம்பிட்டான். அவ்வளோ பாசம்… “

 

“லட்டுக்கு என்னாச்சு மீ… ஹாஸ்பிடல்ல சேர்க்குற அளவுக்கு…?”

 

“உங்க மாமாவுக்கு ஹார்ட் அட்டாக்கில திடீர்னு இப்படி ஆகிடவும், இளாதான் எங்களையும் தேத்தி எல்லா ஏற்பாடையும் பார்த்துகிட்டான்… அப்ப உங்க மாமாவுக்கு  , அவர் ஆசைப்படி ,சொந்த ஊரான பட்டுகொட்டையில் தகனம் பண்ணுறதுக்கு கிளம்பினோம்… “

 

“என்னைய கட்டிகிட்டு தான் அழுதுகிட்டு இருந்தா லட்டு…. இங்கயிருந்து கிளம்பும் போது நான் இருந்த துக்கத்தில் ,என் பொண்ணை கவனிக்காமல் விட்டு விட்டேன்… இதுக்கு இடையில அந்த ஆண்டாள் அம்மா, வயசுக்கு வந்த ஒரு மாசத்துல  வெளியூருக்கு போக கூடாது…. நீ இங்கேயே இருன்னு அழைச்சிட்டு போயிடுச்சு போல….”

 

“பாவம் அவ இளாவை புடிச்சிட்டு கதறி அழுதிருக்கா என்னையும் கூட்டிட்டு போன்னு…,  இவன்தான் ஆண்டாள் பாட்டி ,நம்ம நல்லதுக்கு தான் எல்லாம் பண்ணுவாங்க… துக்க வீட்டில் உன்னை யாரும் பார்த்துக்க முடியாது. நீ வீட்டுல இரு நான் எல்லாத்தையும் முடிச்சிட்டு வந்துடறேன் என்று சொல்லிட்டு எங்களை பார்க்க வந்துட்டான்…”

 

“வீட்டுக்கு போனதில இருந்து இளா இல்லாமல் , இந்தம்மாவுக்கு ரொம்ப வசதியாயிடுச்சு….. அவளை வழக்கம் போல பாடாப்படுத்தி எடுத்திருக்குது.. நாங்க போயி ரெண்டாவது நாளு.., லட்டு மறு மாசம் ஒதுங்கியிருக்கா…..  வயிறு வலிக்கவும் , அவளுக்கு இளா நினைப்பு வந்துடுச்சு… நேரா அவன் ரூமுக்கு போய், அவன் இல்லைன்னு, அவன் சட்டைய போட்டுகிட்டு, அவன் பெட்லயே தூங்கிட்டா போல..”

 

“காலையில  அதே சட்டையை போட்டுகிட்டு வெளியில வந்திருக்கா… ராத்திரி அவன் ரூமில எதுக்குடி தூங்கினனு இந்த அம்மா கேட்டு இருக்கு.. இவ மனசுல கள்ளம் இல்லாம, போன தடவை போல, இளா கூட இருந்தால் வயிறு வலிக்காதுன்னு தூங்க போனேன் பாட்டி… அவன் இல்லாததுனால் அவன் சட்டய போட்டுகிட்டென்னு சொல்லியிருக்கா…”

 

“அவ்வளுதான் அந்த ஆங்காரம் புடிச்ச ஆண்டாள் அசிங்கமா கற்பனை பண்ணிக்கிட்டு, வடை சுடுற கம்பிய அடுப்பில் பழுக்க காய்ச்சி , அவ தொடையிலேயே சுட்டுட்டா… என் பொண்ணு மாதிரி வலியில்  கதறிட்டு ஓடி வந்தவதான், தடுமாறி படியில இருந்து உருண்டுட்டா….”

 

“இங்க ரெண்டாவது நாள் ராத்திரி, இளாவுக்கு ஏதோ மனசில பட்டுடுச்சி போல, நான் போய் ஆராவ பார்த்துட்டு வரேன்… அவளை பார்க்கணும் போல இருக்குன்னு கிளம்பிட்டான்.. அவன் காலையில வந்து நிக்கவும், எல்லாம் மாடியில நடக்கவும் சரியா இருந்திருக்கு…இவன் பதறிக்கிட்டு படியேறதுக்குள்ள எல்லாம் நடந்து முடிஞ்சுது…..”

 

“பாதிப் படியிலே உருண்ட ஆராவை கையில வாரி எடுத்துகிட்டு வந்து ஹாஸ்பிடல் ல சேர்த்திருக்கான்… அங்க டாக்டர் ஐ சி யூ ல வச்சி பார்த்திருக்காங்க…. பீரியட்ஸ்சோட படியில விழவும் வயித்தில்  அடிப்பட்டு, கர்ப்பப்பையில் பாதிப்பு ஆகி அதிகமா ரத்த போக்காயிடுச்சு…”

 

“முழுசா ரெண்டு நாள்.., ராப் பகலா கண்ணு முழிச்சு ஆராவை காவந்து பண்ணிட்டான்.. அவளை பாத்ரூம் கூட்டிட்டு போறதுல இருந்து , நாப்கின் மாத்தறது வரை எல்லாத்தையும் ,தாய்க்கு தாயாக இருந்து இவனே பார்த்துகிட்டான்… யாரையும் பக்கத்துல நெருங்கவே விடலையாம்…அப்புறம் அவளுக்கு சரியாகவும் தான் கிருஷ் கிட்டவே சொல்லியிருக்கான்.” 

 

“ரொம்ப மோசமான நிலைமையில் ஆராவை பார்த்திட்டு , வீட்டுக்கு போயி ரெய்டு கட்டிட்டான் அந்த கிழவிக்கு…. கழுத்த பிடிச்சு வெளியில தள்ளுறதுக்கு முன்னாடி போயிரு… என் அப்பாவுக்காக பார்க்கிறேன்… இல்லைன்னா வெட்டி பொலி போட்டு இருப்பேன்னு திட்டிருக்கான்…சின்னசாமி கிட்ட சொல்லி அன்னைக்கே ஆண்டாள சுகந்தி வீட்டுக்கு பேக் பண்ணி அனுப்பிட்டான்…”

 

“சுகந்தி க்கு ஃபோனில் விஷயத்தை சொல்லவும், அவ அதுக்கு, ஆரா ஒரு தரங் கெட்டவ, உன்னை மயக்க பார்த்திருக்கா.., எல்லா விஷயத்தையும் எங்கம்மா முன்னாடியே என்கிட்ட சொல்லிட்டாங்க…. நான்தான் அவளை நம்ம இளா கிட்ட இருந்து தள்ளி வையின்னு சொன்னேன். அவங்க பண்ணுணதில் என்ன தப்பு…? எவளோ ஒருத்தி சொத்துக்காக உன்னை அப்படியே மயக்கி வச்சிருக்கா… அந்த அனாதை நாய்க்காக, உன்னை காப்பாத்த நினைச்ச என் அம்மாவையே வெளியில் அனுப்பிட்டியான்னு சண்டை போட்டு இருக்கா…”

 

“அவ்வளவுதான், இளா, நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து கிட்டுதான் என் ஆராவை கொல்ல பார்த்தீங்களாடி…? அப்படின்னு சொல்லிட்டு , இனிமே உங்க கூட ஒட்டு உறவே கிடையாது, அந்த சூனியகார கிழவி செத்தா கூட என் கிட்ட சொல்லாதிங்கன்னு சொல்லிட்டு ஃபோன் ஐ வச்சிட்டான்… அதுக்கப்புறம் அவங்கள அடியோட ஒதுக்கிட்டான்… “

 

“அப்புறம் ஆண்டாள் அம்மாவ பத்தி எந்த செய்தியும் வரலயா மீ..?”

 

“ இல்ல ரோ…,அதுக்கு அப்புறம் ஒரு ஒண்ணரை வருஷம் கழிச்சு .., உடம்பு சரியல்லைன்னு அந்த அம்மாவுக்குன்னு அவ அத்தை போன்ல அழுதா… இவன்தான் உன் வீட்டு புள்ளையா இருந்திருந்தா இப்படி தான் சந்தேகப்பட்டு கொடுமை படுத்தியிருப்பீங்களான்னு கேட்டுட்டு போகல…சின்னசாமி கிட்ட பணம் கொடுத்து விட்டான். அவங்க அப்பா பேருல இருந்த சொத்துல பாதியயும் அவன் அத்தை பேருல எழுதி பத்திரத்தையும் எங்க மூலமா கொடுத்து விட்டான்.  ”

 

“ரெண்டு வருஷம் கழிச்சு…,ஆண்டாள் அம்மா செத்ததுக்கு  சேதி சொல்லி விட்டாங்க…… நானும் கிரிஷ்ஷும் வற்புறுத்தி இவனை  அழைச்சிட்டு போனோம்.. நானும் வரேன்னு சொன்ன லட்டுவ அவ்ளோ திட்டு திட்டி, அதட்டி வீட்டுலயே உட்கார வச்சிட்டான்.”

 

“இவன்  அப்பா இல்லாததுனால இவன் தான் கொள்ளி வைக்கணும்… இவனை அந்த அம்மாவுக்கு காரியம் செய்ய வைக்கிறதுக்குள்ள படாதபாடு பட்டுட்டோம்.. பிடிவாதக்காரன்… இவனுக்கு யாரையாவது பிடிக்காமல் போயிட்டுதுன்னால் அவங்க மூஞ்சில முழிக்க மாட்டான். இவன் அத்தைகாரி துக்கத்துல வந்து இவனை கட்டி பிடிச்சுக்கிட்டு அழுவுறா…. ஒரு வார்த்தை பேசல அவகிட்ட இந்த பய…”

அழுத்தகாரன்.. சொல்லும்போதே பெருமிதம்.

“அதே அழுத்ததோட தான், ஊத்தி மூடுற நிலைமையில் இருந்துச்சு அவுங்கப்பா மாமா ஆரம்பிச்ச தொழிலும், சாகறதுக்கு முன்னை அவுங்க வாங்கிப்போட்ட மில்லும். அவனுக்கு இருந்த திறமைக்கு அவன் தனியா தொழில் நடத்தியே இந்த நிலைக்கு அவுங்க தொழிலை கொண்டு வந்திருக்கலாம். ஆனா கிரிஷை சேர்த்துக்கிட்டான். அதுவும் வேலைக்காரனா இல்ல, பார்ட்னரா. இந்த படிப்புதான் கிருஷும் படிக்கணும்னு தான் கூடவே சேர்த்து படிக்கவும் வச்சான். அவன் எங்களுக்கு செஞ்சு எதையாவது நாங்க வேணாம்னு மறுப்பு சொல்லிட்டா, சரின்னு சொல்றவரை மூஞ்சிலயெ முழிக்க மாட்டான்.” 

 

“நானும் நினைச்சேன் இருக்கிற அழகுக்கும் அறிவுக்கும் , எவளாவது மயங்கி மயக்கி லவ் பண்ணிடுவாணொண்ணு.. எந்த பொண்ணாவது, காதல் சொல்ல வந்தா அடிச்சு விரட்டி விடுவானான் இளா. கிருஷ் பய காலேஜ் படிக்குறப்ப கதை கதையா சொல்லி ,சிரிச்சுட்டு கிடப்பான்.”

 

“இப்பதான் நிம்மதி, ஆராதான் இவன் வாழ்கைன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம், எனக்கு கல்யாணமே பண்ணி வச்சா போல சந்தோஷம்.”  வேதா பூரித்து சொல்ல,

ரோஜா சென்று பூஜையறையில் விளக்கேற்றி, இளா ஆரா வாழ்வில் வசந்தம் பெருகனும்ன்னு கை கூப்பி வேண்டிக்கொண்டாள்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!