கனவு 14
கனவு 14
அத்தியாயம்-14
நீலவேணியின் கோபம் சுத்தமாகப் புரியவில்லை கௌசிகாவிற்கு.. அவர்
தன்னை ஆத்திரமாக முறைப்பது அவளுக்குப் பயத்தைக் கொடுத்தது.
ஏற்கனவே பல அதிர்ச்சிகளைக் நான்கு
நாட்களில் கண்டவளுக்கு இனி என்ன என்று நெஞ்சம் படபடத்தது.
ஆம் அவளின் தலையில் மட்டும் இல்லை.. எல்லோரின் தலையிலும் இடி தான்
விழுந்தது.
“பாவி… நீ வந்த நேரம் எம் பையன் உயிரே போயிருச்சே டி” என்று கத்தி அழ கௌசிகா அப்படியே இறங்கி வந்த
படியிலேயே உறைந்து நின்று விட்டாள்.
“ராசி கெட்டவளே… உன் ஒன்னுமில்லாதக் குடும்பத்திலிருந்து பெண்
வேண்டாம்ன்னு சொன்னேன்.. கேட்டானா என் மகன்” என்று கௌசியைத் திட்டியபடி அழ தேவராஜ் தான் மனைவியை
அதட்டினார்.
“பார் வேணி.. குரு போய்ச் சேர்ந்ததுக்கு அந்தப் பொண்ணு என்ன பண்ணும்.. நம் பையன் விதி அவ்வளவு தான்..” என்று அவரும் அழ குருவின் பெற்றோர் இருவரும் அழுதனர்.
அப்படியே படியில் உட்கார்ந்த கௌசிகா தலையில் ஒரு கையை தலையில் வைத்தபடி அமைதியாகக் கண்ணீரை
உதிர்த்தாள். எதற்கு இந்த அழுகை என்று அவளுக்குச் சுத்தமாகப் புரியவில்லை..
ஆனால் குருவிற்காக மட்டும் அவள் கண்ணீர் இல்லை என்பது நிச்சயம்.. அதற்கென அவன் சாவட்டும் என்றும்
அவள் நினைக்கவில்லை..
அவளின் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது எல்லாம் அவளின் குடும்பம்..
இதை எப்படித் தாங்குவார்கள்.. சீரும் சிறப்புமாக அனுப்பி வைத்தவர்களை நினைக்கையில் நெஞ்சை யாரோ அடிப்பது போல இருந்தது. இந்தம்மா சொன்ன மாதிரி அவள் ஒன்றும்
ஒன்றுமில்லாதவள் இல்லை. குரு குடும்பத்தின் கோடிக்கணக்கான சொத்திற்கு யாரைப் பார்த்தாலும்
அவருக்கு அப்படித்தான் தோன்றும். கௌசியின் தந்தை நடுத்தர வர்க்கத்தினரின் செலவுகளை மீறி சிறப்பாகவே மகளுக்குச் செய்து
அனுப்பினார். ஆனால் என்ன
ப்ரயோஜனம்? அவருக்காகத் தானே குருவைப் பற்றித் தெரிந்தும் எல்லாவற்றையும் மறைத்து அவள் இருந்தது. அவளுக்கேத் தெரியும்
குருவின் டார்ச்சரில் தானாகவே சில
நாட்களில் செத்துவிடுவோம் என்று.
இல்லை என்றால் இன்னும் கொஞ்ச நாளில் இந்த பந்தத்தில் இருந்து வெளியே வந்துவிடுவோம் என்றும்
எண்ணினாள். அதற்கும் தயாராகவே இருந்தாள் அவள். இப்போதே அவள் போனால் அவளது அப்பாவிற்கு ஏதாவது அல்லது விக்னேஷ் திரும்பி வந்துவிடுவான் என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் தான் அவள் இருந்தது.
அவன் தொடுவது கம்பளிபூச்சி மேலே ஊருவதை விட அருவருப்பாக உணர்ந்திருந்தாள் அவள். தன் குடும்பம்.. அப்பா.. விக்னேஷை நினைத்து விக்கியது அவள் மனம்.. தன் வாழ்க்கை
கேள்விக்குறி ஆனதை மறந்து தன் குடும்பத்தாரைப் பற்றித் தான் நினைத்துக் கொண்டிருந்தாள் சுயநலமற்ற அந்தப் பாவை.
விஷயம் அறிந்து வினித்ரா அவளது கணவன் குழந்தையோடு முதலில் வந்து
சேர அவளும் அவள் அன்னையையும் தந்தையையும் கட்டிக்கொண்டு அழுதாள். கௌசி இருந்ததை அவளும் கவனிக்கவில்லை.. அன்னையோடு சேர்ந்து அண்ணனின் பிரிவை எண்ணி அழுது கரையவே அவளுக்கு நேரம் சரியாக இருந்தது. உதய்குமார்
(வினித்ராவின் கணவன்) தான் மேலே நடக்க வேண்டிய காரியங்களைப் பார்க்க ஜீ.எச் – இற்கு கிளம்பினான். ஆக்ஸிடென்ட் கேஸ் என்பதால் அங்கு கொண்டு சென்றனர் முதலில். மேற்கொண்டு நடந்த வேலையை உதய்குமார் எடுத்து நடத்தினான்.
குருவின் மரணச் செய்தியை அறிந்த கௌசியின் குடும்பமே ஆடிவிட்டது. முதலில் செய்தியை அறிந்தது ஜீவாதான். பெரியவர்களுக்கு முதலில் சொல்ல வேண்டாம் என்று நினைத்த உதய்குமார்
முதலில் ஜீவாவிற்கு செய்தியைத் தெரிவிக்க ஜீவா அப்படியே உறைந்து விட்டான். அவன் புதியாய் திறக்கப்
போகும் கம்பெனிக்காக கோயம்புத்தூர் கிளம்பிக் கொண்டிருந்தனர் ஜீவாவும்
மதியும்.
அந்தச் சமயத்தில் உதய்குமார் போன் செய்து செய்தியைத் தெரிவிக்க ஜீவா பாறை போல அப்படியே நின்றுவிட்டான்.
அவனைப் பார்த்த மதி “ஏன் ஜீவா.. என்ன ஆச்சு” என்று சற்றுப் பதட்டத்தோடு வினவ
“மதி.. குரு ஆக்ஸிடென்ட்டில்…”
என்றவனுக்குத் துக்கம் தொண்டையை அடைக்க அதற்கு மேல் அவனால் எதுவும்
பேச முடியாமல் கண்களில் நீர் கோர்த்தது. சின்ன வயதில் இருந்து கூடவே வளந்தவளுக்கு இப்படி ஒரு நிலையா என்று மருகினான் அவன்.
மதி என்ன என்று ஜீவாவிடம் விசாரிக்கும் போதே சமையல் அறை கதவிற்குப் பக்கத்தில் உள்ள ப்ரிட்ஜில் மாவை எடுக்க
வந்த ஜெயா… மருமகளின் குரல் கேட்டு என்ன என்று கவனித்தபடி மாவை எடுத்தார். ஜீவா சொன்ன செய்தியைக்
கேட்டு மதி உறைய ஜெயா அப்படியே மாவு டப்பாவைத் தவரவிட்டார். டப்பா விழுந்த சத்தத்தில் ஜீவாவும் மதியும்
சமையல் அறைக்கு விரைய தரையில் உட்கார்ந்த படி அழுக ஆரம்பித்து விட்டார் ஜெயா.
“அய்யோயோயோ…. என் தங்கத்துக்கு இப்படி நடக்கவா கட்டிக் குடுத்தோம்….” என்று அடித்துக் கொண்டு அழ… மதிக்கும் அடக்கமாட்டாமல் கண்களில் கரை புரண்டு வந்தது.
பத்து நிமிடம் அப்படியே நின்ற ஜீவா அடுத்து ஆக வேண்டிய வேலைகளைப் பார்த்தான். முதலில் தன் தந்தைக்கு சதாசிவத்திற்குப் போனைப் போட்டவன்அவருக்கு விஷயத்தைத் தெரிவித்தான்.
அடுத்து தன் சித்தப்பா
செந்தில்நாதனிற்குத் (விக்னேஷின் தந்தை) தெரிவித்தான்.
பதறிப் போனவரிடம் “சித்தப்பா.. இப்போ எது பேசவும் டைம் இல்ல.. அங்க அவள் என்ன நிலைமைல இருக்காளோ.. நீங்க சித்தியைக் கூட்டிட்டு இங்க வாங்க சித்தப்பா.. உங்க எல்லாருக்கும் கேப் புக் பண்ணித் தரேன் போயிருங்க..
நான் மாமா கிட்ட எதாவது சொல்லிக் கூட்டிட்டு வரேன்… வரும்போதே சொன்னால் தாங்க மாட்டார்” என்ற ஜீவாவின் குரல் கரகரத்தது.
அவன் பேசுவதிலும் சரிதான் என்று ஒத்துக் கொண்ட செந்தில்நாதன் மனைவியிடம் அப்படி இப்படி என்று சொல்லி அவரின் அக்கா வீட்டிற்கு
அழைத்து வந்தார். வீட்டிற்கு வந்தவர் தன் அக்காவின் தோற்றத்தைக் கண்டு
அக்காவின் கணவருக்குத் தான் என்னவோ என்று நினைக்க சதாசிவம் சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்தார்.
சுமதிக்கு என்ன என்றே புரியவில்லை.
“ஏன்…” என்று கேட்டவருக்கு வார்த்தையே அதற்கு மேல் வரவில்லை. தன் மனைவி
சுமதியின் தோளைப் பற்றிய
செந்தில்நாதன் அனைத்தையும் கூற சுமதியும் அழுக ஆரம்பிக்க.. ஜீவா கேப்
வந்தவுடன் அவர்களை ஏற்றிவிட்டு தன் மாமா வரதராஜனைப் பார்க்கச்
சென்றான்.
“வா ஜீவா.. என்ன நீ மட்டும் வந்திருக்க மதி வரலையா?” என்று கேட்டவரின் குரலில் இருந்த சிறிய சோகத்தை அவன் அறிந்தான். ஆமாம் அவரும் அவரின் செல்லப் பெண்ணிடம் பேசி நான்கு
நாட்கள் ஆன வருத்தத்தில் இருந்தார். ஆனால் மகள் மகிழ்ச்சியாக இருக்கிறாள்
என்று.. குருவிடம் இரண்டு நாட்களுக்கு முன்னால் அவனுக்கு போன் செய்த
போது அவன் சொன்னது அவருக்கு நிம்மதியாகவே இருந்தது.
“மாமா…” என்று ஜீவா ஆரம்பிக்க.. “இருப்பா சுகர் டேப்ளட் மறந்திட்டேன்..
கௌசி பாப்பா இருந்திருந்தால் நியாபகப்
படுத்தியிருப்பா” என்று பெருமூச்சு விட்டபடி அவர் எழுந்து சென்று மாத்திரையைப் போட ஜீவாவிற்கு மனதில் தோன்றிய வலியை பல்லைக்
கடித்து கட்டுப்படுத்தினான்.
“இம்.. மதி வரலையா ஜீவா.. இரண்டு பேரும் தானே வரதா சொன்னீங்க.. கிளம்பியாச்சா?” என்றபடி வந்து ஜீவாவிற்கு எதிரில் உடகார்ந்தார்.
“இல்லை மாமா.. அடுத்த வாரம்
ஆயிருச்சு நாங்க கிளம்பற டேட்” என்றவன் கரகரத்தத் தொண்டையை சரி செய்து கொண்டு “மாமா கௌசிக்கு
காய்ச்சலாம்.. உங்களைப் பார்க்கனுமாம்.. வாங்க நம்ம இரண்டு பேரும் போயிட்டு
வந்திடலாம்” என்று தன்னால் முடிந்த அளவு குரலை நிதனமாக வைத்துப் பேசினான்.
“அச்சச்சோ… என்ன ஆச்சு.. யார் சொன்னா?” என்று கேட்க ஜீவா தடுமாறிக் குரு சொன்னதாக சொல்லி அவரைக் கூட்டிக் கொண்டு கிளம்பினான்.
செல்லும் வழியில் கௌசியைப் பற்றியே பேசிக் கொண்டு வந்த வரதராஜனின்
சொல் எதுவும் ஜீவாவின் செவியை எட்டவில்லை.. மாறாக கௌசியின் சிரித்த கபடமற்ற முகமே நியாபகம்
வந்தது.
மதி, சுமதி, ஜெயா, சதாசிவம், செந்தில்நாதன் சென்று பார்க்கையிலும் கௌசி அதே படியில் தான் உட்கார்ந்திருந்தாள். உள்ளே சென்று அத்தைகள் கட்டிக் கொண்டு அழ அவளின் கண்களில் கண்ணீரே இல்லை.. முகம் இறுகி
கண்ணில் கருவளையங்கள் வந்து இருந்தவளைப் பார்க்க ஜெயா தவறவில்லை. தலையில் கை வைத்து இறுக அமர்ந்து இருந்தவளைப் பார்த்து அனைவருக்கும் பயமாகி விட்டது. மதி, அத்தை, மாமா என அனைவரும் அவளை உலுக்க அப்படியே அமர்ந்திருந்தாள். கடைசியில் குருவின் அப்பா தேவராஜ்
வந்து அழைத்துப் பார்த்தும் வெறித்த பார்வையுடன் அப்படியே அமர்ந்திருந்தாள்.
“பாப்பா…” என்று கடைசியாக ஒலித்த தந்தையின் குரல் அவளை சுயநினைவிற்குத் திருப்பியது. வீட்டிற்குள் நுழையும் போதே ஜீவா
விஷயத்தைச் சொல்ல தன் மகளை நோக்கி விரைந்தார்.
தன் தந்தையைக் கண்டவள் அடக்கி நான்கு நாட்களாக அடக்கி வைத்திருந்த
மொத்தத்தையும் வெளிப்படுத்தினாள்.
“அப்பாபாபாபா…” என்று ஓவென பெருங்குரல் எடுத்து கதறியவள் தன் தந்தையைக் கட்டிக் கொண்டு அவரின்
மார்பில் மேல் சாய்ந்து கட்டிக் கொண்டு அழ அங்கிருந்த அனைவருக்கும் கௌசியைப் பார்த்து நெஞ்சில் சொல்ல
முடியாத துயரம் எழுந்தது.
அழுதாள்.. அழுதாள்.. மூச்சை இழுத்து இழுத்து தந்தையின் மார்பின் மீது சாய்ந்து ஆக்ரோசத்துடன் அழுதவளைப்
பார்க்க அனைவரும் பயந்துவிட்டனர். அவளின் நிலையை உணர்ந்த வரதராஜனும் “பாப்பா பாப்பா..” என்று அழைத்து விலக்கப் பார்க்க அவள் கையோ தந்தையின் சட்டையை இறுகப் பற்றி இருந்தது.
“இங்க பாரு.. கௌசிமா” என்று அவளை வழுக்கட்டாயமாகத் தன் மேல் இருந்து விலக்கினார்.
“என்னால முடியலப்பா” என்று மூச்சை இழுத்துக் தொய்ந்த குரலில் கூறியவள்
அப்படியே மயங்கிச் சரிந்தாள். மயங்கிச் சரிந்து விழுகையில் அவளது மாங்கல்யமும் ” வரதராஜன் சட்டை பட்டனில் சிக்கித் தரையில் அறுந்து
விழந்தது.
“கௌசி…..” என்று கூவி விட்டார் வரதராஜன். ஜெயா மதியைத் தவிர “என்னால முடியலப்பா” என்று கௌசி
சொன்ன வாக்கியத்தைக் குருவின் மறைவில் என்று நினைத்தனர்.
அவள் மயங்கி விழுந்ததில் அனைவரும் திடுக்கிட அதற்குள் குருவின் விஷயம்
கேள்விப்பட்டு துக்கம் தெரிவிக்க வந்த அவனுடைய சைக்காட்ரி டாக்டர் அனைவரையும் விலக்கி அவளைச் சோதித்தார். நல்ல வேளை ஹாஸ்பிடலில்
இருந்து அவர் வந்திருந்ததால் அவரிடம் சில தேவையான மருந்துகள் இருந்தது. பிறகு அவர் சொல்ல அங்கு பக்கத்தில் இருந்த அறையில் அவளைக் கிடத்தினர்.
“அதிர்ச்சி தான்.. இன்ஜக்ஷன்
போட்டிருக்கேன்.. டோன்ட் டிஸ்டர்ப் ஹெர்.. அவங்களே எந்திருப்பாங்க” என்று விட்டு
அவர் துக்கம் தெரிவித்து விட்டு
சென்றுவிட்டார். சந்தியாவையும் அழைத்து வந்தான் ஜீவா கல்லூரிக்குச்
சென்று.
கௌசி மறுபடியும் கண்களைத்
திறக்கையில் குருவின் உடல் வீட்டிற்கு எடுத்து வரப்பட்டிருந்தது. கௌசிக்குச்
செய்தப் பாவத்திற்கு ஒரு பக்க உடல் நசுங்கி இருந்தான். முகத்தைக் கூட உடல் கூறு செய்து தரும் போது மூடிவிட்டனர். ஆனால் எதை உணரும் நிலையில் அவள்
இல்லை.. ஏதோ ஒரு வெற்றிடம் அவளின் மனதை ஆக்கிரமித்தது. எல்லா
சடங்குகளும் முடிந்த பின்னர் அவனின் உடல் எடுத்துச் செல்லப்பட நாட்களும்
இரண்டு நாட்கள் ஓடின.
கௌசி ஜெயாவின் மடியில் படுத்தபடி இருந்தாள். நீலவேணி வந்து அவளின்
முன்னால் ஒரு ஜூஸ் டம்ளரை நங்கென வைத்தார். வைத்ததில் கண்ணாடி
டம்ளராக இருந்திருந்தால் கண்டிப்பாக உடைந்திருக்கும். தன் கணவரின் வற்புறுத்தலில் தான் கொண்டு வந்தது
நீலவேணி..இல்லையென்றால்
கௌசியை திரும்பிக் கூட பார்த்திருக்க மாட்டார்.
“ஒன்னுமில்லாம வந்தவளுக்கு இனி வாழ்வு தான்” என்று அனைவருக்கும் கேட்கும்படியே முணுமுணுக்க ஜெயாவிற்கு கோபம் வந்துவிட்டது.
“கொஞ்சம் நில்லுங்கமா.. இந்த மாதிரி நீங்க எங்க பெண்ணை பேசற வேலை எல்லாம் வச்சுக்காதீங்க” என்றார்
முறைப்பாக.
“அப்புறம் இந்த வீட்டைக் கெடுத்த மூதேவியை ஆரத்தி எடுக்க முடியுமா?” என்று சொல்ல சுமதியும் வெகுண்டு
எழுந்தார்.
“என்னமா பேசுற நீ.. கொஞ்சம்
வார்த்தையை அளந்து பேசு.. இல்லைனா நடக்கறதே வேற” – சுமதி எகிறினார். விட்டார் அடித்திருப்பார் ஆனால்
அண்ணன் என்ன சொல்லுவாரோ என்று
கோபத்தை அடக்கினார்.
“என்ன.. என் வீட்டுல இருந்துட்டு என்னையே அதிகாரமா.. நான் என்ன
இல்லாததையா சொன்னேன்.. இவள் ராசி கெட்டவ தான்.. இவ பொறந்த நேரம் இவ அம்மாகாரியும் செத்துட்டா.. இவ வந்த நேரம் தான் எம் புள்ள போயி சேர்ந்துட்டான். இவள கூட்டிட்டுக் கிளம்புங்க.. இங்கையே இருந்து சொத்த
அமுக்கலாம்னு பாக்கறீக்களா?” என்று கத்த அதை விட ஆங்காரமும் ஆத்திரமாய் ஒலித்தது வரதராஜனின் குரல்.
“யாரைப் பாத்து ராசி கெட்டவன்னு சொன்ன.. அவ எங்க வீட்டு மகாலட்சுமி..
அவ பொறந்த அன்றே என் மனைவி போயிட்டாதான்.. உண்மை தான்.. இல்லைனு சொல்லல.. ஆனா அவ
கர்ப்பம் ஆன காலத்திலேயே மருத்துவர் ஒரு எலும்பு இடுப்பில் அதிகப்படி
வளர்ந்ததாகவும்.. ஆபத்து தான் என்றும் சொன்னார்.. அது அவள் விதி.. ஆனால் அவள் போன பிறகும் என் மகள்
அனைவருக்கும் ராசி ஆகிப்போனாள். உம் புள்ள போனது அவன் விதி. இதே
நான் சொல்லட்டா உம் புள்ளைய கட்டுனதால தான் எம் மகள் இப்போது தாலி இல்லாம நிக்கறானு..” என்று
நீளமாகப் பேசி நீலவேணியின்
வாயை அடைத்தவர் “சொத்தா.. அது யாருக்கு வேணும்.. தேவராஜ் அவர் கேட்டுக் கொண்டதுக்கு ஆகத்தான் என்
பெண்ணை இங்கே இரண்டு நாள் விட்டுவிட்டு சென்றேன். நீங்க தான் வந்து என் பொண்ணக் கேட்டிங்களே தவிர நாங்களா உங்களிடம் வந்து நிற்கவில்லை.. என் மகள் இப்போதும் என் மகள் தான்” என்றவர் தன் மகளிடம்
திரும்பினார்.
“கௌசி.. நீ போய் உன்னுடைய எல்லா உடமைகளை எடுத்துட்டு வாம்மா.. நாம
கிளம்பலாம்” என்று வரதராஜன் அழுத்தமாகச் சொல்ல தேவராஜ் அவரை
சமாதானம் செய்ய முயன்றார். ஆனால் அவரின் மனைவி பேசியது தன் மகளை
அல்லவா.. அதனால் அவர் எதையும் கேட்டவில்லை. அண்ணன் பேசிய பேச்சு
சரியென்று படவே ஜெயாவும் சுமதியும் அமைதியாய் நின்றனர்.
வீட்டிற்கு அழைத்து வர மதி.. ஜீவா.. சதாசிவம்.. செந்தில்நாதன்.. எல்லோரும்
வரதராஜனின் வீட்டில் தான் இருந்தனர். கௌசியை வீட்டிற்கு கூட்டி வரும்போதே
போனில் விஷயத்தைத் தெரிவிக்க மதி , ஜீவா, செந்தில் நாதன், சதாசிவம்
ஏற்கனவே வரதராஜன் வீட்டிற்கு வந்தனர். போன வாரம் கல்யாணம் ஆகிச்
சென்றவள் போன வேகத்திலேயே சுவற்றில் அடித்தப் பந்தைப் போல
வீட்டிற்கு வந்தது எல்லோருக்கும் தாங்க
முடியாத துயரத்தைத் தந்தது.
அவர்களைப் பொருத்த வரை குருவுடன் அவள் காதல் மனைவியாக வாழ்ந்திருக்கிறாள் இந்த நான்கு நாட்களில் என்று நினைத்துக் கொண்டு
இருந்தனர். ஜெயா மதியைத் தவிர.. ஜெயாவிற்கு கௌசியின் தோற்றமே
எதையோ சொல்ல அவர் அவளிடம் எதையும் கேட்க மனம் வராமல் இருந்தார்.
மதிக்கும் அவள் இஷ்டப்பட்ட கல்யாணம் இல்லை என்று தெரியும்.. இருந்தாலும்
இந்த நிலைமை அவளை மிகவும் பாதித்திருக்கும் என்று
நினைத்திருந்தாள்.
ஒரு வாரம்.. இரண்டு வாரம்.. மூன்று வாரம்.. என் நாட்கள் கடந்து குருவின் இழப்பு முடிந்து ஒரு மாதம் ஆயிற்று.
தேவராஜ் கௌசியின் எதிர்காலத்திற்கு குடுத்த அதாவது அவளுக்கு முறைப்படி குடுத்தத் தொகைகளை வேண்டவே
வேண்டாம் என்று ஒன்றாகச் சொல்லி விட்டனர் கௌசியும் வரதராஜனும்.
கௌசிக்கு கடந்த ஒரு மாத காலமாக நாட்களைக் கடத்துவது அவளது
அறையில் மட்டும் தான். அந்த கொடூர நினைவுகளிலேயே அவள் மனம் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. கண்களை
மூடினால் கண் வரும் கோர
சம்பவங்களை அவளால் மறக்கவேமுடியவில்லை. அவளைக் கொஞ்சம்
கொஞ்சமாய் அரித்துக் கொண்டிருந்தது எல்லா சம்பவங்களும். அவளை மாற்ற
எவ்வளவு முயற்சி செய்தும் தோற்றனர் அனைவரும். ஜெயாவும் சுமதியும் மாறி
மாறி கௌசியுடன் இரவில் இருந்தனர்.
ஜீவாவிற்கும் தொழிலில் சில
குளறுபடிகள் ஏற்பட அவன் கோவை செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் மதி.. தான் கௌசியுடன் சில
நாட்கள் இருந்து வருவதாக சொல்லி ஜீவாவை அனுப்பி வைத்தாள். தன் மனைவிக்கு தன் குடும்பத்து மேல் உள்ள
அக்கறையில் நெகிழ்ந்த ஜீவா.. அவளை முழு மனதுடன் சென்னையில் விட்டுவிட்டு கோவை சென்றான்.
காலையில் சீக்கிரம் எழும் கௌசி இப்போதெல்லாம் பதினொறு மணிக்கே
எழுந்தாள். கண்களைச் சுற்றிய
கருவலையமும் எப்போதும் பரட்டை முடியுமாக பார்க்க எல்லோரும் அவளிடம்
பேச்சைக் கொடுத்து பேச முயன்றனர். எல்லாம் குளத்தில் இருந்த கல்லைப்
போல உள்ளே சென்றதே தவிர கௌசி எதையும் வாயைத் திறந்து சொல்லவில்லை. ப்ரௌனியுடன் உட்கார்ந்து அதன் தலையை நீவி
விடுவாளே தவிர வேறு எதுவும் அவள் செய்யவில்லை.
ஒருநாள் கோயிலிற்குச் சென்று தன் பாரத்தையும் சோகத்தையும் கடவுளிடம்
வைத்து விட்டு வந்த ஜெயா அண்ணனின் வீட்டிற்குச் சென்றாள். அண்ணன்
வீட்டிற்கு வந்தவர் அண்ணன்
இல்லாததைக் கண்டார். சரி எங்காவது ஏதாவது வாங்கச் சென்றிருப்பார் என்று
நினைத்தவர் கௌசிக்கு விபூதியை வைக்க எண்ணி அவளது அறைக்குள்
சென்றவர் அவள் நின்றிருந்தக்
காட்சியைக் கண்டு “கௌசிசி………” என்று
அதிர்ச்சியில் கத்திவிட்டார்.
அத்தையைக் கண்டவள் கையில் இருந்ததைப் பின்னால் மறைக்க கையில்
சூடு தாங்காமல் எரிந்து கொண்டிருந்த நியூஸ் பேப்பரைக் கீழே விட்டார். அவள் பக்கத்தில் சென்ற ஜெயா ‘பளார்’ ‘பளார்’
என்று இரண்டு அறைகள் விட்டுத் தானும் அழ ஆரம்பித்து விட்டார்.
“பாவி… இப்படி எல்லாத்தையும் விட்டுட்டு போகவா உன்னை எல்லோரும் வளத்தோம்” என்று அவளைப் பிடித்து
உலுக்கி அழ கௌசி தந்த பதில் அவர் இன்னும் அதிர்ந்தார்.
“நான் ஒன்னும் சாகறக்கு இதப் பத்தல அத்தை.. எனக்கு இந்த மூஞ்சி வேண்டாம்-ன்னு தான் தீ வைக்கப் போனேன்” என்று
அசராமல் சொன்னவளை ஜெயா ‘ஆஆ’வெனப் பார்த்தார்.
“என்னடி.. என்னப் பேச்சு பேசறே நீ.. நீ வாழ்ந்த அந்த நாலு நாள் வாழ்க்கைக்காக
இப்படி எல்லாத்தையும் வெறுத்து ஒதுக்கனுமா.. நீ புடிக்காம கல்யாணம்
பண்ணாலும் அந்தப் பையன் குரு இறந்தது உனக்கு கஷ்டமாகத் தான் இருக்கும்.. அதுக்குன்னு இப்படிப்
பண்ணுவியா” என்று கண்ணீருடன் அதட்டினார்.
“என்ன அத்தை சொன்னீங்க.. நான் வாழ்ந்த வாழ்க்கையா.. நான் சந்தோஷமா இல்லைனாலும் நிம்மதியா
இருந்திருப்பேனு நினைச்சீங்களா..” என்று ஏளனப் புன்னகை உதிர்த்தவள் “இதான் அத்தை நான் வாழ்ந்த வாழ்க்கை” என்று தன் நைட்டியின் மேல்
மூன்று பட்டனைக் கழட்டிச் சொல்ல அவளின் கழுத்திலும் கழுத்திற்குக் கீழ் இருந்த பகுதியையும் பார்த்தவர்
அப்படியே சிலையென நின்றுவிட்டார்.
அவர் கண்ட இடத்தில் இருந்த
காயங்களின் தடயத்தைக் கண்ட ஜெயாவிற்கு அந்த வயதிலும் என்ன நடந்திருக்கும் என்பதை ஊகித்து உதறியது உடம்பு. இப்பவே இப்படி
என்றால் ஒரு மாதத்திற்கு முன்பு காயம் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்த்தவருக்கு ஈரக்குலையே ஆடிவிட்டது.
“இது மட்டும் இல்லை அத்தை.. இன்னும் உடம்பு பூராவும் இருக்கு.. அதை பாத்தா
தாங்க மாட்டிங்க” என்று நைட்டியை நெஞ்சோடு சேர்த்துப் பிடித்து அழுதாள்.
“அவன் ஏன்டி உன்னைய இப்படிப் பண்ணினான்” என்று கேட்டவரிடம் அனைத்தையும் கொட்டினாள் கௌசி.
ஸ்கூலில் அவன் தன்னை கவனித்தது.. மறுபடியும் ஹோட்டல் தக்சினில் பார்த்து..
அப்புறம் ஃபாலோ செய்தது..
கல்யாணத்தன்று இரவு நடந்த பேச்சு வார்த்தைகள்.. அவளையும் விக்னேஷையும் சேர்த்து வைத்துப் பேசியது.. தொடர்ந்து மூன்று நாட்கள்
செய்த டார்ச்சர்கள் என்று ஒன்று விடாமல் அனைத்தையும் சொல்லியவள்
விக்காவைத் தான் காதலித்ததை மட்டும்
சொல்லவில்லை.
நிமிர்ந்து தன் அத்தையைப் பார்த்தவள் “அத்தை.. அவன் என்னை… என்னை..” என்று சொன்னவளுக்கு அதற்கு மேல்
சொல்ல வரவில்லை.. எப்படி சொல்ல என்று தெரியவில்லை..
“அத்தை அவன் என்னை… செக்ஸ் டார்ச்சர் பண்ணான் அத்தை..” என்று அத்தையைக் கட்டிப்பிடித்தவள் கதறி அழுக ஆரம்பித்தாள். “அவன் என் அழகு.. உடம்புன்னு.. காதுலையே கேக்க முடியாத
வார்த்தைகள் எல்லாம் சொன்னான் அத்தை.. அதான் எனக்கே என் மூஞ்சியை
இப்போதெல்லாம் பிடிக்கலை அத்தை.. பாக்கவே அருவருப்பா இருக்கு.. அதனால தான் மூஞ்சிக்குத் தீ வச்சிக்கலாம்ன்னு” என்று சொல்ல வந்தவளை ஜெயா தன் கை கொண்டு மூடினார்.
“வேணான்டி.. எதுவும் சொல்லாத இதுக்கு மேல.. கேக்கற எனக்கே உயிர் போற
மாதிரி இருக்கு.. பாவி பைய.. நாசமா போறவன்.. உனக்கு பண்ணப் பாவத்துக்குத் தான் நாய் சீக்கிரம் செத்து ஒழிஞ்சிட்டான்..” என்றவர் கௌசியின் அழுகை இன்னும் குறையாததைக் கண்டு
அவளைச் சமாதானம் செய்தார்.
“நீ எதுக்கும் கவலைப்படாத தங்கம்.. நாங்க எல்லாம் இருக்கோம் உனக்கு” என்று சமாதானம் செய்து அழுகையில் அரற்றிக் கொண்டிருந்தவளைத் தூங்க
வைத்தார்.
இங்கு இப்படி என்றால் அங்கு
கனடாவில் ஒருத்தன் இவளை விட இரண்டு மடங்குத் துன்பத்தில் இருந்தான். ஆனால் அதை யாரும் அறியவில்லை.