காதலருழை

காதலருழை

இது என்ன மழை பொழியும் மாரி காலமும் இல்லை.மேகக்கூட்டங்களின் குவியலும் இல்லை. ஆனால் இந்த இடி சத்தம் மட்டும் இப்படி கேட்கிறதே என பறவைக்கூட்டங்கள் குழப்பத்துடன்  அந்த வீட்டை கடந்து சென்றது.

கொஞ்சம் அந்த இடி சப்தத்தை கூர்ந்து கவனித்தால் அதில் இரு பெண்களின் குரல் கலந்து இருந்தது.  ஒரு குரல் அதிகார குரல். மற்றொரு குரல் அதிகாரத்தால் அடக்கப்பட்டு போன தன் குரலை மீட்டெடுக்க போராடும் குரல்.

“ஹே நீ என்னடி சொல்றது… நான் அப்படி தான் பண்ணுவேன். டிவியை சவுண்டா தான் வைப்பேன். உன் அதிகாரத்துக்கு எல்லாம் என்னாலே பணிஞ்சு போக முடியாது. இந்த சத்தத்தை கேட்க பிடிக்கலைனா காதை இறுக்கமா மூடிக்கோ. ”

“என்ன டி விட்டா ரொம்ப ஒவரா பேசுற. ஒழுங்கா டிவியை நிறுத்தறியா. இல்லை உன்னை தூக்கி போட்டு மிதிக்கட்டுமா. ”

“மிதிப்ப மிதிப்ப.  நீ அடிக்கும் போதுலாம் இந்தாமானு கண்ணத்தை காட்டிட்டு இருந்த அந்த உமா இல்லை… இவள் இப்போ வேற உமா… புரியுதா… ” 

“ஓஹோ இவ்வளவு பேசுற அளவுக்கு வந்துட்டியா… இந்த டிவியை நிறுத்த வைக்கல நான் சரண்யா இல்லைடி…  ” என்று அவள் ரிமோட்டை பிடுங்க….  இவள் மறுக்க…. அவள் கரம் இவள் கன்னத்தில் இறங்க….. இவள் கரம் அவள் தலை முடியை வேகமாக பிடிக்க… இருவரும் தரையில் உருள துவங்க… அழகாய் அங்கே ஒரு குழாய் அடி சண்டை ஆரம்பமானது.

அந்த இரு தவப்புதல்விகளை பெற்ற அந்த தாயோ தனக்கும் அந்த சண்டைக்கும் சம்மந்தமே இல்லாதது போல் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார். அவருக்கு தெரியும் இடையில் சென்றால் மீண்டும் பிரச்சனை பெரிதாகும் என்று. அதனால் அவர்களே அடித்து ஓயட்டும் என  பார்வையாளராக மாறி வேடிக்கை பார்க்க துவங்கிவிட்டார்.

இந்த சண்டை காட்சியில் திடீரென ஒரு குரல் இடைப்பட்டு ஒலித்தது.  ” என்னடி இப்படி அடிச்சிக்கிட்டு  இருக்கீங்க… சண்டை போடுறதை நிறுத்துங்க முதலிலே ” என்று.

அந்த குரலிற்கு சொந்தக்காரரை பார்த்ததும் கீழே உருண்டு கொண்டு இருந்தவர்களுக்கும் அதிர்ச்சி.வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த அந்த அன்னைக்கும் அதிர்ச்சி.

ஏதோ ஒரு குடும்ப விழாவில் யாரோ ஒருவர் ஏதோ ஒரு வார்த்தை தவறாக விட்டுவிட  அதனால் விட்டுப் போன சொந்தம் இன்று மீண்டும் வந்து நிற்கிறது.

இத்தனை வருட பிரிவு, “எதனால் சண்டை” என்பதை கூட மறக்கவைத்துவிட்டது. ஆனால்  “ஏதோ ஒரு சண்டை” என்பதை மட்டும் மறக்கமால் மனதில் தைத்துக் கொண்டது.

ஏதோ ஒரு கோபம்.

காரணம் மறந்து போன பின்பும் நிலைத்து இருக்கும் ஒரு வீம்பு கோபம்.

இன்று இத்தனை காலத்திற்கு பிறகு அந்த காரணம் அறியா கோபம் காணாமல் பறந்து போனது.

வாசலில் நின்று கொண்டு இருந்த அந்த உறவை அப்படியே நிறுத்தி வைக்க மனம் தாங்கவில்லை அவருக்கு.

“வா செந்தாமரை…. ” என்று பல காலத்திற்கு பிறகு தன் நாத்தனாரை வீட்டிற்கு அழைத்தார் சசி. அவரும் நடந்ததை மறந்து வீட்டிற்குள் அடி எடுத்து வைத்தார்.

சில சமயங்களில் ஒரு சண்டையை முடிவுக்கு கொண்டு வர இன்னொரு சண்டை அவசியமாகிப் போகிறது தானே.

“ஏன்டி இப்படி அடிச்சிக்கிறீங்க? நீங்க போடுற சப்தம் கீழே வர கேட்குது…. என்ன ஆச்சோ ஏது ஆச்சோனு பதறி அடிச்சுட்டு ஓடி வரேன்… ”

“இல்லை அத்தை இவளாலே தான் எல்லாம்… ” என்று ஒருத்தி இவள் புறம் கை காட்ட மற்றொருத்தி ” நம்பாதீங்க அத்தை. இவளாலே தான் எல்லாம்… சரியான ஊமை குசும்பு… ” என்று இவளை கை காட்ட அவரோ தலையில் கை வைத்துக் கொண்டார்.

“போதும் டி… இப்போ தானே சண்டை முடிஞ்சது மறுபடியும் ஆரம்பிக்காதீங்க…. ” என்றவர் பேசி கொண்டு இருக்கும் போதே காப்பி டம்ளர் அவர் முன்பு நீட்டப்பட்டது, சிறு முறுவலுடன் வாங்கிக் கொண்டார்.

“எப்படி இருக்கீங்க அண்ணி… ”

“நல்லா இருக்கேன்.. நீ எப்படி இருக்க? கீழே இருக்கிற உன் அம்மாவை பார்த்துட்டு அப்படியே கிளம்பிடுவ.  இன்னைக்காவது எங்களை வந்து பார்க்கணும்னு தோணுச்சே…. ” என்று பேச ஆரம்பித்த இருவரும் இந்த பத்து வருட பிரிவில் பேச முடியாமல் விட்டுப் போன எல்லாவற்றையும் பேசி தீர்த்தனர்.

“ஓய் அக்கா பார்த்தியா…. என்னாலே தான் பிரிஞ்சு போன குடும்பம் ஒன்னா சேர்ந்துது… எல்லா புகழும் எனக்கே… இந்த உமாக்கே…. ”

“சீ கத்தி கூப்பாடு போட்டு , அத்தையை பதறி அடிச்சு மேலே ஓடி வர வெச்சதும் இல்லாம இதுக்கு பெருமை வேற படுறியா… போடி எருமை….. ” என்று உள் அறைக்குள் சென்றுவிட்டாள்.சென்ற தன் அக்காவையே முறைத்துவிட்டு திரும்பியவளின் காதுகளில் திடீரென அவன் பெயர் விழுந்தது.

“ஆமாம் ராஜு எப்படி இருக்கான் செந்தாமரை…. ”

“அவனுக்கு என்ன நல்லா தான் இருக்கான் அண்ணி.”

ஆமாம் இந்த ராஜுன்றது என் அத்தை பையன் தானே. சின்ன வயசுல பார்த்தது…. இப்போ எப்படி இருப்பான்?

எப்படி இருந்தா நமக்கென எப்படியோ இருப்பான் என்றவாறு மீண்டும் தன் கவனத்தை தொலைக்காட்சி பக்கம்  திருப்பிக் கொண்டாள் உமா.

“சௌந்தர்யா எப்படி இருக்கா ?”

“அவளும் நல்லா இருக்கா அண்ணி. ஆனால் என்ன இப்போ அவளுக்கு ஒன்பதாம் மாசம். வயித்துப்பிள்ளைக்காரியை நல்லா கூட பார்த்துக்க முடியல…. உங்களுக்கே தெரியும்ல… என் புருஷனை பத்தி…. நைட்டு முழுக்க குடிச்சுட்டு பேசிக்கிட்டே இருப்பாருனு… குழந்தை பிறந்தா எப்படி சமாளிக்க முடியும்னு தெரியல அண்ணி. நாங்க கஷ்டப்படுறதும் இல்லாம அந்த குழந்தையும் எங்க வீட்டுல கஷ்டப்பட வேண்டியது வரும்… ”

“அட செந்தாமரை… இதுக்கு எதுக்கு கஷ்டப்படுற… இங்கே தான் நம்ம வீடு இருக்கு இல்லை… சௌந்தர்யாவுக்கு குழந்தை பிறந்ததும் இங்கே கூட்டிக்கிட்டு வா நம்ம பார்த்துக்கலாம்… ” என்று சொன்ன சசியைப் பார்த்ததும் கண்கள் பனித்தது…. லேசான முறுவலுடன் “அப்போ சரிங்க அண்ணி வீட்டுல அவள் தனியா இருக்க…. இப்போ பஸ்ஸை பிடிச்சு போன தான் அங்கே போய் சேர சரியா இருக்கும்..  நான் கிளம்புறேன்…” என்று கிளம்பிவிட்டார்.

அவர் கிளம்பிய இருபது நாட்களில் சௌந்தர்யா பிரசவித்துவிட்டாள்.

தன் அழகிய மகளை கையில் தாங்கியவாறு  தன் அத்தை வீட்டிற்கு நுழைந்தாள்.

அவளை வாசலிலேயே நிறுத்தி ஆரத்தி எடுத்து உள்ளே நுழைய அனுமதிக்க தூரத்தில் நின்று கொண்டு இருந்த உமாவிற்கோ ஆவல் தாங்கவில்லை.

அந்த குழந்தையை பார்க்கலாம் என அருகே போகும் போது அவள் அன்னை அவளை ஏதோ ஒரு வேலை சொல்ல மேலே தன் வீட்டிற்கு  சென்றுவிட்டாள்.

அவள் அதை முடித்துவிட்டு  கீழே இருக்கும் பாட்டி வீட்டிற்கு திரும்பி வரும் வேளையில் சௌந்தர்யா உறங்கிப் போய் இருந்தாள்.

ஆனால் அந்த குட்டி ரோஜாவோ தூங்காமல் கண்களை துருத்தி துருத்தி காற்றில் ஏதோ கதை பேசி கொண்டு இருந்தது. மண் படாத அந்த பாதத்தை மென்மையாய் தடவி பார்த்தாள். தோள் உதிரா அந்த பிஞ்சு விரல்களை தன் கையால் தொட்டு பார்த்தாள். ஏதோ புரியாத பாசம் அவளை சூழ்ந்துக் கொண்டது. ஒரு வேளை இது தான் இயல்பான அத்தைகளுக்கே உண்டான பாசம் போல.

அந்த குழந்தையின் அருகில் அமர்ந்து அதன் சிறு சிறு அசைவுகளை கவனித்துக் கொண்டு இருந்த போது பக்கத்தில் இன்னொருவன் வந்து அமர்ந்தான்.

அந்த இன்னொருவன் வேறு யாரும் இல்லை. அவளுடைய அத்தை மகன் தான்.

இவளை கவனிக்காமல் அந்த குழந்தையையே அவன் பார்க்க இவளுக்கு ஏனோ திடீரென கோபம் வந்தது.

விருட்டென எழுந்து தன் வீட்டிற்கு வந்துவிட்டாள். அதன் பிறகு கீழே செல்லவே இல்லை.

அவனுடைய பார்வை தன் மேல் பதியவே இல்லை என்பது அவளை ஏனோ பாதித்தது.

திடீரென  அவளிடம்  வந்து காதலை சொன்ன எல்லாரையும் நினைவுப்படுத்தி பார்த்தாள்.

அவர்களை எல்லாம் இவள் வேண்டாம் என தவிர்த்தது ஏனோ மூளையில் மின்னலிட்டது.

இதுவரை எல்லாரையும் தவிர்த்து வந்தவள் முதன் முறையாக தான் தவிர்க்கப்பட்டது போனதை எண்ணி அயர்ந்து போனாள்.

அவன் ஏன் என்னை கவனிக்கவே இல்லை என்பதையே திரும்ப திரும்ப யோசித்து உறங்கியும் போனாள்.அதன் பின்  இவள் அவன் முன்பு வருவதையே தவிர்த்தாள்.

சில நாட்களில் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடக்க இவள் ஓடியாடி வேலை செய்து கொண்டு இருந்தாள்.

அப்போது இவள் அத்தை அவளிடம் ” ராஜூவுக்கு நாளைக்கு public exam… கொஞ்சம் அவனுக்கு revise பண்ண help பண்றியா உமா ” என கேட்க அவளால் மறுக்க முடியவில்லை. சரியென தலையாட்டி வைத்தாள்.

இவளை விட அவன் இரண்டு வயது பெரியவன். இவள் இப்போது கல்லூரிக்கு செல்கிறாள். ஆனால் அவன் இப்போது தான் பன்னிரெண்டாவது படிக்கிறான். இடையே இரண்டு முறை பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அடையாமல் போனதால் ஏற்பட்ட கால இடைவெளி தான்  இது.

இவளோ நன்றாக படிப்பாள். பத்தாவதில் school first 484 மதிப்பெண்கள்.  இவனோ பத்தாவதையே இரண்டு முறை படித்தவன்.

அவனிடம் நேராக வந்து புத்தகத்தை வாங்கினாள்.

அவள் ஒவ்வொரு கேள்வியாய் கேட்க இவன் திக்கி திணறி விடையளித்தான். சிலது விடைகள் இல்லாத கேள்விகளாகவே தொக்கி நின்றது.

“இதுக்கு கூடவா பதில் தெரியாது. இத்தனைக்கும் கேள்வி ரொம்ப easyயா தான் கேட்டேன்…  ” என்று அவள் கேட்க

“இல்லை எனக்கு அதிகமா பாடத்தை நியாபகம் வெச்சுக்க முடியாது… டாக்டர் கிட்டே கூட கூட்டிட்டு போய் அம்மா காமிச்சாங்க… அவரே சொன்னாரு… இந்த பையனுக்கு படிப்பு ஏறாது அப்படினு ” என்று அவன் சொல்ல இவள் அப்படியா என சொல்லிவிட்டு  அவனைப் பற்றி வேறு கேள்வி கேட்க அவன் அதற்கு பதில் சொல்ல இருவரின் உரையாடலும்  பாடத்தை விட்டு நழுவி அவர்கள் வாழ்க்கைக்குள் சென்றது.

ஏதேதோ பேசினார்கள். திடீரென அவன் அவளிடம் இது தான் என் நம்பர் என்று அவளிடம் தர குறித்து வைத்துக் கொண்டாள்.

அவள் அத்தை நடுவில் வந்து தன் மகன் படிக்கிறானா என நோட்டம் விட மீண்டும் இருவரும் படிக்க துவங்கினார்கள்.

குழந்தையின் பெயர் சூட்டு விழா முடிந்ததும் அவன் அவனுடைய வீட்டிற்கு சென்றுவிட்டான்.

அடுத்த நாள் காலை அவன்  பரிட்சை எழுதி கொண்டு இருக்கும் போது  இவளுக்கு ஏனோ மனம் படபடத்தது.

நேத்து நாம கேட்ட கேள்வி ஏதாவது வந்து இருக்குமா? இந்த முறையாவது தேர்ச்சி ஆகிடுவானா என ஏதேதோ மனம் கேள்வி கேட்க  அதற்கு பதில் தேடும் வகையில் அவன் கொடுத்த எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பினாள்.

இரண்டு மணி நேரமாக அவனிடம் பதில் இல்லை. அலைபேசியின் திரை திடீரென ஒளிர்ந்தது. வேகமாய் எடுத்துப் பார்த்தாள். அவன் தான் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தான். இவள் வேகமாக அவனிற்கு பதில் அனுப்ப, அன்றிலிருந்து இருவரும் குறுஞ்செய்தியில் பேசிக் கொள்ள ஆரம்பித்தனர்.

இவள் அவளுடைய அம்மா அலைபேசியை தான் உபயோகித்துக் கொண்டு இருந்தாள்.

அதுவும் வாட்ஸ்அப் ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தப்படாத காலம் அது.

ஒரு நாளைக்கு நூறு குறுஞ்செய்திகள் தான். அந்த நூறு குறுஞ் செய்திகளுக்குள் உரையாடலை முடித்துவிட வேண்டும்.

ஆதலால் தேவையில்லாத ” ஹ்ஹ்ஹ்ம்”, ” அப்புறம்” , “ஓகே” என்ற வார்த்தைகளுக்கு எல்லாம் இடமே இல்லை.  நூறு குறுஞ்செய்திகளும் நூறாயிரம் உணர்வுகளை அடக்கி ஒரே வார்த்தையில்  வடிகட்டியதாய் இருக்கும்.

ஒருவர் நம் வாழ்வில் புதியதாய் அறிமுகமாகும் போது அவரைப் பற்றி அறிந்து கொள்ள மனம் ஆர்வப்படும். சுவராஸ்யம் கொள்ளும். மூடியிருக்கும் எல்லா திரைகளையும் தகர்த்தெறிந்து “இது தான் நீ…  நான் அறிந்த நீ” என கர்வம் கொள்ள ஆசைப்படும்…  அந்த அறிதலின் முயற்சியில் தான் இவள் இப்போது இறங்கி இருந்தாள்.

அவனுடைய ஒவ்வொரு பிடித்தங்களையும் கேட்டு மனதில் குறித்துக் கொண்டாள்.

அவன் பிறந்த நாளை மனப்பாடம் செய்து கொண்டாள்.

இவள் அனுப்பிய அதே நொடியில் அவனிடம் இருந்து திரும்ப வரும் குறுஞ்செய்தியில் அகமகிழ்ந்து போனாள்.

அவனுக்கு நான் முக்கியமானவள் என்பதில் மனம் கர்வப்பட்டது. அவனுடன் குறுஞ்செய்தியில் பேசுவது அவளுடைய அத்தியவாசிய வழக்கமாக மாறிப் போனது. ஏதோ கனவுலகத்தில் மிதந்துக் கொண்டு இருந்தாள்.

திடீரென அவனிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி. ” உன் அம்மாவுக்கு என்னை பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வாய்?” என்று அவனிடம் இருந்து வந்தது.

“அதெல்லாம் ஒன்னுமில்லை….  எங்க அம்மாவுக்கு பிடிக்கும்… ”

“ஒரு வேளை பிடிக்காம போயிடுச்சுனா? உனக்கு நான் முக்கியமா இல்லை…. உன் குடும்பம் முக்கியமா?”

“இது என்ன கேள்வி? எனக்கு என் குடும்பம் தான் முக்கியம்…. ”

“உமா எனக்கு இப்போ தெளிவா புரிஞ்சுடுச்சு…. உன்னை மாதிரி தான் எனக்கும் என் குடும்பம் தான் முக்கியம். நான் உன் கூட friendly ஆ தான் பேசுனேன். எங்க அம்மாவுக்கு இதெல்லாம் பிடிக்காது. அதனாலே இனி பேச வேண்டாம்…. bye “

என்று அவன் அனுப்பிய குறுஞ்செய்தியை படித்ததும் மனம் படபடத்தது.

ஐயோ! எனக்கு என் குடும்பம் தான் முக்கியம்னு சொன்னது அவனையும் என் குடும்பத்துல ஒருவனா நினைச்சு தானே சொன்னேன். ஆனால் இப்போ கோவப்பட்டுக்கிட்டு போயிட்டானே.

என்ன பண்றது? ஏன் நான் அனுப்புற எந்த மெசேஜ்க்கும் ரிப்ளை பண்ண மாட்டேங்குறான்?

ப்ளீஸ் ராஜு பேசு… நான் சொன்ன வார்த்தை அவனை இவ்வளவு பாதிக்கும்னு நினைச்சு பார்க்கல. 

ஐயோ தினமும் அவன் கூட மெசேஜ் பண்ணிட்டு இப்போ போனை பார்த்தாலே அவன் நியாபகம் தான் வருதே.. எல்லா தப்பும் என் மேலே தான். ப்ளீஸ் என் கூட பேசுடா…. நான் அப்படி பேசி இருக்கக்கூடாது…. ஐ அம் சாரி…. என இவள் மனதிடமும் குறுஞ்செய்தியில் அவனிடமும் புலம்பினாள்.

ஆனால் மூன்று மாதமாக அவனிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.  எல்லாம் தன்னால் தான் என்று நொந்து கொண்டு இருந்தவளின் முன்பு திடீரென அவன் வந்தான்.

அவன் வீட்டிற்கு வந்ததை அவளால் நம்பவே முடியவில்லை. அவனையே பார்த்துக் கொண்டு இருந்தவளின் அருகில் அமர்ந்தான்.

“சாரி நான் அப்படி பேசாம இருந்து இருக்கக்கூடாது… நீ இவ்வளவு தூரம் கெஞ்சியும்  நான் அமைதியா இருந்தது தப்பு தான்…. ஐ அம் சாரி…. ஐ லவ் யூ உமா… ” என்றான்.

மூன்று மாதமாக பேசாதவன் திடீரென அவள் முன்பு வந்து பேசிய அதிர்ச்சியில் இருந்து மீளாதவளின் கழுத்து தானாய் மேலும் கீழுமாய் ஆடி சம்மதம் என்று தெரிவித்தது.

காதலை தெரிவித்த பின்பு அவனிடம் நிறைய மாற்றங்கள். அது வரை அவனை நன்றாக தெரிந்து வைத்து இருப்பதாய் அவள் கொண்ட கர்வம் லேசாய் ஆட்டம் கண்டது.

இதற்கு முன்பு அவளிடம் கிரிக்கெட் பிடிக்காது என்றவன் இப்போது கிரிக்கெட்டை வெறித்தனமாக பார்த்துக் கொண்டு இருந்தான்.

நண்பர்களே கிடையாது என்றவன் இப்போது அவள் எப்போது அழைத்தாலும் நண்பர்களுடன் இருக்கிறேன் அப்புறமாக பேசுகிறேன் என்று சொல்லி அழைப்பை துண்டித்தான்.

அவளுக்கு அவன் கிரிக்கெட் பார்ப்பதோ நண்பர்களுடன் பேசுவதோ தவறாக தெரியவில்லை.

ஆனால் இதுவரை அவள் அறிந்த அவன் இப்போது வேறு ஒருவனாய் மாறி தெரிகிறான் இது தான் தவறு. எங்கே அவனை அறிவதில் தவறு செய்தேன்?  என்று அவள் யோசித்து யோசித்து களைத்துப் போனாள்.

அவனுடைய கண்களில் காதலை நான் கண்டதே இல்லையே. அவனுடைய செய்கையில் நான் காதலை உணர்ந்ததே இல்லையே. ஆனால் என்னை காதலிக்கிறேன் என்றானே எதனால்?

எதனால் அவனுக்கு என் மீது காதல் வந்தது என்ற கேள்விக்கு அவனிடம் பதிலை கேட்டாள்.

அவன் பதிலை கேட்டதும் இந்த கேள்வியை கேட்காமலேயே இருந்து இருக்கலாமே என்று நொந்தும் போனாள்.

அந்த மூன்று மாத கால பிரிவில் இவள் அவனிடம் கெஞ்சினாள் அல்லவா அதனால் பரிதாபப்பட்டு காதலித்து இருக்கிறான். எங்கே இவளுடைய படிப்பு வீணாய் போய் விடுமோ என்ற கவலையில் சொல்லி இருக்கிறான் என்று அறிந்ததும் நொடிந்து போனாள்.

பரிதாபம் பார்த்து வரும் காதல் இதயத்தை பரிதாப நிலைக்கு கொண்டு சென்றுவிடும் தானே..

கலங்கிய தன் கண்களை துடைத்துக் கொண்டு அவன் இதுவரை காதலிக்காவிட்டால் என்ன இனி வரும் காலங்களில் அவனுக்கு என் மீது காதல் ஏற்பட்டு விடாதா என்ன என்று அதற்கான முயற்சியில் இறங்கினாள்.

அவனிடம் நன்றாக பேசினாள். அவன் கொடுக்கும் காயங்களை ஏற்க பழகி கொண்டாள். அவன் பிறந்தநாளிற்கு பரிசு வாங்கி வைத்து அவனை வீட்டிற்கு அழைக்க அவன் நண்பர்களுடன் கொண்டாடப் போவதாய் சொல்லும் போதும் வருத்தப்படவில்லை.

அவளை அவன் இன்னும் நீ கொஞ்சம் நிறமாகு அழகாகு என்று சொல்லும் போதும் கலங்கவில்லை.  நீ இப்போது என்னை வேண்டாம் என்று சொன்னால் கூட நான் கவலைப்பட மாட்டேன் என்று சொல்லும் போதும் கூட கதறவில்லை.

இதற்கு முன்பு வேறு ஒரு பெண்ணை காதலித்து இருக்கிறேன் என்று அவன் சொல்லும் போதும் கத்தி அழவில்லை.

வெளிப்படையாக இருக்கிறேன் என்ற பெயரில் அவன் சொன்ன எல்லா உண்மைகளையும் கேட்டு கோபப்படவில்லை. 

எல்லாவற்றையும் பொறுமையாக ஏற்றுக் கொண்டாள்.

காதலை சொல்லிவிட்டாளே! அதனால் ஏற்றுக் கொண்டு தானே ஆக வேண்டும்.

காதலை சொல்லுபவர்களுக்கு தானே அதை காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் இருக்கிறது. அவர்கள் தானே காலம் முழுக்க இன்னொருவர் செய்யும் தவறை மன்னித்துக் கொண்டு இருக்க வேண்டும்.

மன்னித்தாள் தன் மனதால் எவ்வளவு அளவிற்கு தாங்க முடியுமோ அந்த அளவிற்கு மன்னித்தாள். அவள் காதலால் அவனை மாற்ற முடியும் என நம்பினாள்.

ஆனால் பதிலுக்கு  அவனிடம் இருந்து சிறு காதலாவது இருந்தால் தானே இந்த மாற்றம் என்பது சாத்தியம்.

தாக்குப்பிடித்தாள் தன்னால் முடிந்த அளவிற்கு தாக்குப்பிடித்தாள்.காதலை சொல்லிவிட்ட குற்றத்திற்தாக தாக்குப்பிடித்தாள். இந்த சமூகத்தின் கேள்விகளை எதிர்கொள்ள துணுவில்லாத கோழையாய் எல்வாவற்றையும் தாக்குப்பிடித்தாள். ஆனால் சகிப்புத்தன்மைக்கும் ஒரு எல்லை உண்டு தானே. அந்த எல்லையை கடக்கும் அளவிற்கு அவன் சில செயல்கள் செய்தான்.

முகநூல் அறிமுகம் ஆகி நன்றாக புழக்கத்தில் இருந்த காலம் அது. அவளுடைய மடிக்கணிணியில் முகநூலை பார்த்துவிட்டு அவன் மூடாமல் சென்று விட ஏதேச்சையாக அதை அவள் பார்க்க நேரிட்டது.

அதில் அவன் யாரோ ஒரு பெண்ணிடம் மிகத் தவறாக பேசி இருந்தான்.

அதைக் கண்டதும் தானாய் கண்களில் இருந்து கோடாய் தண்ணீர் விழுந்தது.. அது கண்ணீர் தான்.

அவளறியாமல் கண்களில் இருந்து விடுபட்டுக் கொண்டு இருந்தது. அவளால் நம்பமுடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

இதைப் பற்றி அவனிடம் கேட்க அது தான் இல்லை… தனக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்று அடித்து சொன்னான்.

அவனுடைய நண்பர்கள் தான் பெரும்பாலும் அவனுடைய முகப்புத்தகத்தை உபயோகிப்பார்களாம். இது அவர்கள் செய்த வேலையாம். அவனுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை  என்று அவன் சொல்ல இவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

“சரி நம்புறேன்… ஆனால் இது மட்டும் பொய்னு தெரிஞ்சது… அப்புறம் அவ்வளவு தான்”  என்று அந்த பேச்சை அதோடு நிறுத்திக் கொண்டாள்.

ஆனால் அதைப் பற்றி எண்ணுவதை மட்டும் இவளால் நிறுத்த முடியவில்லை. அவன் எப்படி அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்புவானோ அதே மாதிரி தான் அந்த குறுஞ்செய்தி இருந்தது.

ena pandra என்று கேட்பதற்கு பதிலாய் aana pandra என்று தான் கேட்பான். அதே வார்த்தை தான் அந்த பெண்ணிடமும் உபயோகப்படுத்தப்பட்டு இருந்தது.

ஆனால் ஆதாரம் இல்லாமல் அவன் தான் செய்தான் என்பதை அவளால் நம்பமுடியவில்லை. ஆதலால் அதை அப்படியே விட்டுவிட்டாள்.

இவள் குறுஞ்செய்தி அனுப்புவது அவனுக்கு சுத்தமாக பிடிக்காமல் போனது. அவளது குறுஞ்செய்திகளை இடைஞ்சலாக பார்த்தான்.

ஆதலால் அவளை அலைபேசியில் இனி பேச வேண்டாம் என்று சொல்லி சண்டை போட்டான்.  சரி என்று இவளும் பேசவில்லை.

ஆனால் சில நாட்களுக்கு பிறகு “நீ ஏன் எனக்கு மெசேஜ் பண்றதே இல்லை… உனக்கு என் மேலே அக்கறையே இல்லைல…. என்னை ஒரு பொண்ணு காதலிக்கிறேனு சொன்னா… ஆனால் நான் அந்த பொண்ணை வேணாம்னு சொல்லிட்டேன்….  என் அத்தைப் பொண்ணை தான் கல்யாணம் பண்ணிப்பேனு சொல்லிட்டேன்… அந்த பொண்ணு தினமும் எனக்கு மெசேஜ் பண்ணுவா…. சாப்பிட்டியா என்ன பண்றேனு கேட்பா… ஆனால் நீ எனக்கு ஒரு  மெசேஜ் கூட பண்ணல… என் மேலே உனக்கு அக்கறையே இல்லைல…. ” என்று அவன் அவள் மீது குற்றம் சொல்ல உதட்டோரம் துளிர்த்த ஒரு விரக்தி சிரிப்போடு எல்லாவற்றையும் அமைதியாக கேட்டுக் கொண்டாள்.

அவனிடம் காதலிப்பதாய் சொல்லிவிட்டாளே அதனால் கேட்டு தானே ஆக வேண்டும். கேட்டு கொண்டாள், ஏற்றுக் கொண்டாள்,எல்லா தவறும் தன் மீது தான் என்று.

அவன் குற்ற உணர்வில் தவிக்கக்கூடாது என்று அவன் அவள் மீது போட்ட குற்றங்களை எல்லாம்  ஒப்புக் கொண்டாள்.

என்ன செய்தாலும் அமைதியாய்

   இருப்பதாய் நினையாதே…

மௌனித்து இருக்கும் அதே கடல்

     தான் சுழன்றடிக்கும் சூறாவளியையும்

கொண்டு இருக்கும்…..

முன்பை போல அவனிடம் பேசத் தொடங்கினாள். ஒரே வாரத்தில் மீண்டும் அவனிடம் இருந்து அதே குறுஞ்செய்தி ” இனி எனக்கு மெசேஜ் பண்ணாதே.. எனக்கு பிடிக்கல ” என்று.

இவன் psycho வா இல்லை… என்னை psycho வாக்க முயற்சிக்கிறானா? இவனுக்கு என்ன தான் பிரச்சனை… என்று யோசித்துக் கொண்டு இருக்கும் போதே நாளை சந்திக்கலாம் என்று அவனிடம் இருந்து இன்னொரு குறுஞ்செய்தி.

இருவரும் கடற்கரையில் சந்தித்தார்கள். அந்த ஈரக்காற்றையும் அலையையும் ரசித்துக் கொண்டு இருந்த நேரம் , அவன் பேசத் தொடங்கினான்.

ஏதேதோ பேசினான். திடீரென பேச்சுவாக்கில் ” நான் நிறைய பெண்களிடம் பேசுவேன்… அவர்கள் காதலை சொல்ல வரும் போது நான் உன்னிடம் தோழமையாக தான் பழகினேன்… என் அம்மாவுக்கு இதெல்லாம் பிடிக்காது… என்று சொல்லி பேச்சை நிறுத்திவிடுவேன் என்று சொல்ல இவளது மூச்சு நின்று போனது.

அவளிடம் சொன்ன இதே வார்த்தையை தான் மற்ற பெண்களிடமும் சொல்லி இருக்கிறான்.

என்னை விலக்குவதற்காக தான் அப்படி சொல்லி இருந்து இருக்கிறான். இதை அறியாமல் நான் அவனிடம் பேச சொல்லி கெஞ்சி இருந்து இருக்கிறேன். அதனால் அவன் என்னை பரிதாபப்பட்டு காதலித்து இருக்கிறான். எல்லாம் புரிந்து போனது. கண்களில் இருந்து மீண்டும் கோடாய் தண்ணீர்.

ஐயோ கண்ணுக்குள் நுழைந்த நீ கண்ணீராய் மாறுவாய் என்று தெரிந்து இருந்தால் இமைகளை திறந்து இருக்கவே மாட்டேனே என்று உள்ளம் கதறியது. கண்கள் கண்ணீர் உகுத்தது.

அவளுடைய கண்ணீரை கண்ட அவனோ ” ஹே என்ன ஆச்சு? எதுக்கு அழற… நான் உன்னை கல்யாணம் பண்ணிப்பேன்… ஆனால் காதலிக்க மாட்டேன்…. ” என்று சொல்லி மீண்டும் இதயத்தை கிழித்துப் போட்டான்.

அவன் ஏன் திடீர் என்று இப்படி சொன்னான் என்று சுத்தமாக அவளுக்கு புரியவில்லை.

அமைதியாக வீடு வந்து சேர்ந்தாள்…” நானும் உன்னை கல்யாணம் பண்ணிப்பேன் ராஜூ… ஆனால் காதலிக்கவே மாட்டேன்…. ” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

சில நாட்களுக்கு பிறகு அவனிடம் இருந்து மீண்டும் ஒரு குறுஞ்செய்தி ” நான் சண்டை கோழி வாங்க போறேன்… என் கிட்டே காசு இல்லை…. அதனாலே போனை விக்க போறேன்…. ” என்று தகவல் சொல்லி விட்டு சென்றான்.

என்னிடம் பேசிவிட்டு விற்க வேண்டும் என்று கூடவா அவனுக்கு தோன்றவில்லை. அப்படி அவன் விற்றால் என்னிடம் பேச முடியாதே என்ற தவிப்பு துளி கூட எழவில்லையா அவனுக்கு.

அவனே  முடிவெடுத்துவிட்டு ஒரு தகவலாய் மட்டும் என்னிடம்  சொல்லிவிட்டு போகிறானே.  சரி போகட்டும். என்று விட்டுவிட்டாள்.

ஆனால் அவனிடம் பேசாத அந்த ஒரு மாதத்தில் முழு சுதந்திரம் என்ன என்பதை இவள் உணர்ந்தாள்.

இதுவரை அவனை சுற்றியே குறுகிப் போய் இருந்த உலகம் இப்போது விஸ்தாரமாய் தெரிந்தது.

அவனுடைய குறுஞ்செய்திக்காக காத்து கிடக்க வேண்டிய அவசியமில்லை. அவன் பேசும் வார்த்தைகளுக்காக வருத்தப்பட வேண்டியதில்லை. அவனில்லாத உலகம் இவ்வளவு நிம்மதியானதா?

ஒரு மாதம் கழித்து அவன் அலைபேசி வாங்கினான். இவளிடம் பேசினான்.

ஆனால் இவள் முன்பை போல அவனிடம் பேசவில்லை.  அவனைப் போல இரண்டு வார்த்தையில் பதில். வேலை இருக்கிறது என்று அழைப்பு துண்டிப்பு. அவனிடம்  பேசுவதையே தவிர்த்தாள்.

தான் கண்டு கொண்ட அந்த சுதந்திர உலகின் இருப்பிடத்தை விட்டு மீண்டும் சிறைக்கு செல்ல ஆசைப்படாத கிளியாய்.

முதல் முறையாய் அவளின் நிராகாரிப்பை எதிர் கொள்கிறான் அவன்.அவளை பேச சொல்லி கெஞ்சினான்.

இவளோ குறுஞ்செய்தி அனுப்பாதே என்று முகத்தில் அடித்தாற் போல் சொன்னாள்.

அவன் சொன்ன வார்த்தையை அவனே கேட்கும் போது அமிலத்தை கரைத்து காதில் ஊற்றியது போல் இருந்தது அவனுக்கு.

அவனுடைய ஆட்டம் எல்லாம் முடிந்து போனது. இனி இவளுடைய ஆட்டம் மட்டும் தான்.

அவளை கவர இவன் பல முயற்சிகள் செய்தான். ஆனால் அவள் எதையும் கண்டு கொள்ளவில்லை.

வேண்டாம் என்று சொல்லி எங்கே பெண் புறக்கணிக்க தொடங்குகிறாளோ அங்கே தான் ஆண் வேண்டும் என்று கெஞ்சி கேட்க தொடங்குவான்.

அவனும் கெஞ்சினான் இவள் கொஞ்சமும் மனம் இறங்கவில்லை. சகிப்புத்தன்மையின் எல்லையை கொஞ்சம் கொஞ்சமாக கடந்து கொண்டு இருந்தாள். அந்த எல்லையை முழுதாய் கடக்கும் நாளும் வந்தது.

அவளுடைய கல்லூரி தோழன் இவளிடம் தவறாக பேசிவிட்டான். அதை அவனிடம் சொல்ல இவன் அவன் யார் என்று கேட்டான். இவள் சொல்லவில்லை.

இவள் எண்ணம் எல்லாம் அவன் முகப்புத்தகத்தில் ஒரு பெண்ணிடம் தவறாக பேசி இருந்தார்களே அதிலேயே நிலைத்து இருந்தது.

என்னை போல் தானே அந்த பெண்ணும் வருத்தப்பட்டு இருப்பாள்? என்னைப் போல் தானே அந்த பெண்ணும் துடித்து இருப்பாள்?  இவன் அந்த குறுஞ்செய்தியை அனுப்பினானோ இல்லையோ தெரியாது.

ஆனால் அவன் நண்பர்கள் அப்படி அனுப்பும் போது தடுத்து இருந்து இருக்கலாமே. தடுக்கவில்லையே இவன்.

இவனுக்கு சொந்தமான பெண்கள் என்றால் மட்டும் தான் இவனுக்கு ரத்தம் துடிக்குமா?

இவனிடம் நான் ஏன் அந்த பெயரை சொல்ல வேண்டும். இவனுக்கு அவனை கண்டிக்க எந்த அருகதையும் இல்லை.
என்று அவனிடம் பெயர் சொல்ல மறுத்தாள்.

ஆனால் அவனோ ” போ நீ அவன் கூடயோ போய் பேசு ” என்று கோபமாக சொல்ல இவளது பொறுமையின் எல்லை தகர்ந்தெறிந்தது.

“i hate u ” என்று முதன்முறையாக சொல்லிவிட்டு அலைபேசியை துண்டித்தாள்.

அவள் சொன்ன வார்த்தைகளின் வீரியத்தை அவன் முதலில் உணரவே இல்லை.

எப்படி இருந்தாலும் அவள் சமாதானமாகி விடுவாள் தானே என்று சாவகாசமாய் ஒரு வாரம் கழித்து வந்து அவளிடம் பேசினான். அவள் அவனிடம் பேச மறுத்தாள். அவன் எவ்வளவு கெஞ்சியும் இவள் பேசவில்லை. முதல் முறையாய் பயம் அவன் இதயத்தில் தொற்றிக் கொண்டது.

அப்போ நான் உனக்கு வேண்டாமா… “என்று அவன் கேட்க,

“வேண்டாம்… i hate u ” என்று சொன்னாள் இவள். 

“ஏன் திடீர்னு என்னை வேண்டாம்னு சொல்ற “

அவனுடைய திடீர் என்ற வார்த்தைக்கு அவள் இதழ்களில் சிரிப்பு தான் துளிர்த்தது.

இது ஒன்றும் திடீர் கோபம் அல்ல முந்தைய ஆற்றாமைகளின் முழுத்தொகுப்பு.

வெளிப்படுத்த முடியாமல் உள்ளுக்குள்ளேயே தேங்கிக் கிடந்த கோபம் இது.

அதை எப்படி அவன் உணர்வான்?  என்னை காதலித்து இருந்தால் தானே என்னை உணர்ந்து இருப்பான்.

“வேண்டாம் ராஜூ.. இதை இதோட முடிச்சுக்கலாம்… நீ என்னை காதலிக்கவே இல்லை…. “

“அப்போ நான் காதலிக்கலணு தெரிஞ்சும் நீ ஏன் டி என்னை காதலிச்சே… நீ வெறும் டைம் பாஸ்க்கு தான் என்னை லவ் பண்ண…. வேற ஒரு பையனை லவ் பண்ணி இப்படி சாகடிக்காதே… கல்யாணம் பண்ணிக்கிட்டு இதே மாதிரி அவனை பிடிக்கலனு சொல்லிட்டு வந்துராதே ” என்று கோபத்தில் வார்த்தைகளை உமிழ்ந்து விட்டு போனான்.

அவன் சொன்ன எல்லா குற்றச்சாட்டுகளையும் கேட்டு அமைதியாக நின்றாள்.

எங்கே பதில் மொழி பேசினாள் மீண்டும் அவன் குரலை கேட்க நேரிடுமோ என்று அமைதியாக நின்றாள்.

போகட்டும் என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டு போகட்டும்.  அவன் போனால் மட்டும் தான் என் வாழ்வில் நிம்மதி.

அவனை நல்லவனாக காட்டுவதற்காக என் மீது எல்லா பழியையும் சுமத்தி விட்டு போகட்டும். அவன் போனால் மட்டும் தான் என் வாழ்வில்  நிம்மதி.

இதுவரை காதலை காட்டாதவன் இன்று காதலை காட்டுவதாய் நினைத்து கோபத்தில் என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டு போகட்டும். இது காதலால் அல்ல அவனின் குற்ற உணர்வால் வந்த வார்த்தை என்று அவனுக்கு தெரியாமலேயே கூட போகட்டும். அவன் போனால் மட்டும் தான் என் வாழ்வில் நிம்மதி.

அவனை போகவிட்டாள். எல்லா பழியையும் அவள் மேல் போட்டுவிட்டு எந்த வித குற்றவுணர்வும் இல்லாத தன் நெஞ்சை எடுத்துக் கொண்டு அவன் முன்னேறி போய்விட்டான். இவள் அதே இடத்தில் நின்றுவிட்டாள்.

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

மூன்று வருடங்களுக்கு பின்பு.

இது என்ன மழை பொழியும் மாரி காலமும் இல்லை. மேகக்கூட்டங்களின் குவியலும் இல்லை. ஆனால் இந்த இடி சத்தம் மட்டும் இப்படி கேட்கிறதே என பறவைக்கூட்டங்கள் குழப்பத்துடன்  அந்த வீட்டை கடந்து சென்றது.

“சாவியைக் கொடு சசி… ”

“நேத்து ராத்திரியில இருந்து எங்களை உள்ளேயே வெச்சு பூட்டி கொடுமைப்படுத்திக்கிட்டு இருக்க. பாவம் உமாவை பாரு… குழந்தையை பல் துலக்கவாது வெளியே அனுப்பு…. இந்த பைத்தியத்துக்கிட்டே மாட்டிக்கிட்டு நான் முழிக்கிறது பத்தாதுனு என் பொண்ணும் கஷ்டப்படணுமா…. கதவை துறந்துவிடுங்க… ”

“ஐயோ சசி… கதவை திறக்காதே…. வெளியே நம்மளை கொல்ல கத்தியோட ஆளுங்க இருக்காங்க… அவங்க நம்மளை கொன்னுடுவாங்க… கதவை மட்டும்  திறந்த,  நான் உன்னை கத்தியாலயே குத்திடுவேன்…. ” என்று மனநலம் பிறழ்ந்து பேசிக் கொண்டு இருந்த தந்தையையே திகிலோடு பார்த்துக் கொண்டு இருந்தாள் உமா.

கடந்த பத்து வருடங்களாக மனநலபாதிப்பால் தூக்க மாத்திரை எடுத்து கொண்டு இருந்தார் அவர்.

இந்த ஒரு வாரம் அவர் ஒரு பொட்டு கூட தூங்காமல் இருந்ததும் தூக்க மாத்திரையின் பலன் தராமல்  இந்த நிலைமைக்கு அவரை ஆளாக்கி இருப்பதையும்  நினைத்து வருத்தப்பட்டு கொண்டு இருந்தவளை  அன்னை அழைத்து சாவியை அவளிடம் தூக்கி வீசி கதவை திறக்க சொன்னார்.

அவள் கதவை திறக்க திரும்பிய நேரம் திடீரென்று உமா என்று அவள் அன்னை அலறினார். திரும்பி பார்த்தவளின் கண்கள் உறைந்து போனது.

கத்தியால் குத்தப்பட்டு அவள் அன்னை கீழே கிடந்தார்.

அவள் வீட்டிற்கு இரண்டு கதவு. முதல் கதவை திறந்தவள் இரண்டாவது இருக்கும் grill gate ஐ திறக்க செல்வதற்குள் இந்த காட்சியை காண அப்படியே உறைந்து போய் நின்று விட்டாள்.

அதற்குள் அவள் தந்தை அவள் அன்னையின் வயிற்றில் குத்த போக grill gate ன் பின்னால் இருந்து “கதவை திற உமா” என்று கீழே இருந்து சப்தம் கேட்டு மேலே ஓடி வந்த ராஜூவின் குரல் ஒலித்தது.

அதில் தன்னிலை பெற்றவள் அடுத்த கேட்டையும் திறக்க வெளியே நின்று கொண்டு இருந்த அவன் உள்ளே வந்து அவள் தந்தையை கயிற்றில் கட்டிப் போட்டுவிட்டு தாயை மருத்துவமனைக்கு அழைத்து சென்றான்.

ஆனால் இது எதுவும் அவள் கருத்தை நிறைக்கவில்லை.

அவள் எண்ணம் எல்லாம் சுவர் முழுக்க சிந்திய ரத்தக் கறையிலும் கடைசியாக வலியில் அவள் அம்மா கத்த இவள் திரும்பி பார்த்த அந்த நொடியிலும் தான் உறைந்து போய் இருந்தது.

திடுமென தோன்றும் துயரங்களில் அழவே தோன்றாது. அப்படி தான் அவளும் உணர்வற்று இருந்தாள். பின்னே இருந்து யாரோ அவள் பெயர் சொல்லி அழைக்கிறார்கள்.  உள்ளம் எல்லாம் நடுநடுங்க திரும்பி பார்க்கிறாள்.  மீண்டும் அந்த ரத்தம் சிதறிய காட்சியை பார்க்க திராணி இல்லாத கோழையாய்.

அங்கே தொடங்கிய பயம் தான் பின்னிருந்து யார் அழைத்தாலும் பதறிக் கொண்டு திரும்பும் பழக்கம்.

அழைத்தவர் கேட்கிறார் “ஏன் பாப்பா பைத்தியத்தை வெச்சுக்கிட்டு இப்படி அம்மாவும் பொண்ணும் தனியா இருக்கலாமா? இப்போ பாரு உன் அம்மாவுக்கு என்ன ஆச்சுனு…  தப்பு பண்ணிட்டீங்களே மா…  ” என்றார்.

அவள் வலி கலந்த குரலில் சொன்னாள்.

“ஆமாம் தப்பு தான் பண்ணிட்டோம்.
உங்க எல்லாருக்கும் பைத்தியமா தெரிஞ்சவர் என் கண்ணுக்கு அப்பாவும்… என் அம்மா கண்ணுக்கு புருஷனாவும் தெரிஞ்சாரே…. தப்பு தான் பண்ணிட்டோம்…  ” என்று குமுறி குமுறி அழத் தொடங்கினாள்.

அவள் மனம் ஏனோ பெங்களூரில் இப்போது வேலை செய்து கொண்டு இருக்கும் அவளுடைய அக்காவின் அருகாமைக்காக ஏங்கியது.  ஏதோ தனியாக இருப்பதை போல் உணர்ந்தாள். அவளுக்கு என்று உதவி செய்ய இப்போது இங்கே ராஜூ மட்டும் தான் இருக்கிறான்.

அடிப்பட்ட இடங்களில் தையல் போடப்பட்டு அவள் அன்னையை வீட்டிற்கு அழைத்து வந்தான் ராஜூ.

வாசலிலியே நின்று கொண்டு இருந்த அவனை இவள் வீட்டிற்குள் அழைத்தாள்.

இத்தனை வருட கோவம் அவன் இன்று செய்த செயலில் மறந்துப் போனது.

அவன் மீது வெறுப்பை சுமந்து கொண்டு இருந்த இதயம் இன்று அந்த வெறுப்பை தூக்கிப் போட்டது.

அவன் மீது இப்போது அன்பும் இல்லை. வெறுப்பும் இல்லை. ஏதுமற்ற நிலையில் இருந்தாள்.

பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து நடந்ததைப் பற்றி பேசிக் கொண்டு இருக்கும் போது ” பாவம் ராஜூ… அவங்க அப்பாவை கட்டிப் போடும் போது திடீர்னு இவன் கையை லேசா கிழிச்சிட்டார்…. ” என்று சொல்ல அவள் அப்போது தான் நிமிர்ந்து அவன் கையை பார்த்தாள்.

காயம் கொஞ்சம் ஆழமாகவே பட்டு இருந்தது. இவள் பார்ப்பதை அவன் பார்க்க வேகமாக பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.

அவள் முன்பு பார்த்த ராஜூ அல்ல இவன்.

பொறுப்பற்று சுற்றி திரிந்தவன் இன்று கொஞ்சம் பொறுப்பாய் இருப்பது போல் தெரிந்தது.

அடிக்கடி இவளை பார்க்கும் போது எல்லாம் கண்களில் காதல் கசிந்தது.

அவள் அன்னையை இவன் தான் மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொண்டு வருவான்.

இவன் மீது ஏனோ லேசாக நன்மதிப்பு தோன்றியது. அவனைப் பார்க்கும் போது தோழமையாக சிரித்தாள்.

அவனும் பதிலுக்கு சிரித்தான்.

அடிக்கடி காதலை உணர்த்துவது போல் அவள் கண்களை பார்த்தான். இவளும் பார்த்தாள். இந்த பார்வை உண்மை தானா என்பதை ஆராய்வது போல்.

இதை அவள் அன்னையும் பார்த்துக் கொண்டு தான் இருந்தார்.

முடிந்த அளவு தன் மகளை அவனிடம் நெருங்கவிடாமல் பார்த்துக் கொண்டு இருந்தார். அவருக்கு நடந்தது எல்லாம் தெரியும். அவள் எல்லாவற்றையும் மறைக்காமல் அவரிடம் சொல்லி இருந்தாள். ஆதலால் தன் மகளை முடிந்த அளவுக்கு விலக்கி வைக்க பார்த்தார்.

இதைக் கண்டு அவளோ “அம்மா இப்போ எதுக்கு நீங்க என்னை அவன் கிட்டே பேசக்கூட விட மாட்டேங்குறீங்க…. ”

“அவன் வேண்டாம் உமா… அவனுக்கு இந்த மார்ச் மாசம் கல்யாணம் நடக்கப் போகுது…. அதுவும் காதல் கல்யாணம்… ”

“என்னது காதல் கல்யாணமா?”

“ஆமாம்… அவனை ஒரு பொண்ணு லவ் பண்றேனு சொல்லுச்சாம். நான் என் அத்தைப் பொண்ணை தான் கல்யாணம் பண்ணிப்பேன் அப்படினு சொல்லி அந்த பொண்ணை வேண்டாம்னு சொல்லிட்டானாம்….   நீங்க ரெண்டு பேரும் பிரிஞ்சு போன அப்புறம் மறுபடியும் அந்த பொண்ணு வந்து அதான் உன் அத்தைப் பொண்ணு விட்டுட்டு போயிட்டா இல்லை, என்னை கல்யாணம் பண்ணிக்கோனு கேட்டுச்சாம்…. இவனும் சரினு சொல்லிட்டானாம்… ”

இவளுக்கு அப்போது விளங்காமல் இருந்த எல்லா கேள்வி முடிச்சுகளும் இப்போது தெளிவாய் விளங்கிவிட்டது.

அவன் ஏன் திடீர் என்று ” நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்… ஆனால் காதலிக்க மாட்டேன் ” என்று சொன்னான் என்பது புரிந்தது.

அந்த பொண்ணை அவனுக்கு பிடித்து இருந்து இருக்கிறது ஆனால் இடையில் நான் இருந்து இருக்கிறேன்.

என்னை விலக்கவும் முடியாது. காதலிக்கவும் முடியாது. ஆதலால் தான் அப்படி சொல்லி இருக்கிறான்.

நல்ல வேளை கடவுளே நான் அவனை பிரிந்து வந்து விட்டேன் என்று ஆனந்தமாய் கண்ணீர் விட அவள் அன்னையோ  அவள் வேதனையில் கண்ணீர் விடுகிறாள் என்று தவறாக புரிந்துக் கொண்டார்.

“நீ ஏன் உமா வீணா கண்ணீர் விடற. அவன் வேண்டாம் அவன் சரி இல்லை. அவன் எப்பவும் அழகு கலர்னு தான் பேசிட்டு இருப்பான்…. தான் அழகுன்றதுல அவனுக்கு ஒரு கர்வம். ஆனால் அவன் கர்வத்தை ஒடுக்கிறா மாதிரி அவனை வேண்டாம்னு தூக்கிப் போட்டு வந்த பார்த்தியா… செருப்பால அடிச்சா மாதிரி சூப்பர். அந்த குடும்பமே அப்படி தான்…”

“அம்மா நான் கஷ்டப்பட்டு ஒன்னும் அழல… இது ஆனந்த கண்ணீர். நல்லவேளை அவனை விட்டு வந்தேன்… இல்லைனா காதலை சொல்லிட்டோமேன்ற கடமைக்காக என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு காலம் முழுக்க வருத்தப்பட வெச்சு இருந்து இருப்பான்.
அம்மா எனக்கு அவன் மேலே இருந்த கோபம் எல்லாம் போயிடுச்சு. இப்போ அவன் மேலே கோவமும் இல்லை. வெறுப்பும் இல்லை. அன்பும் இல்லை. நான் அவனோட நினைவுல இருந்து முழுசா விடுதலை ஆகிட்டேன்.
இப்போ அவன் பண்ண உதவியை எல்லாம் பார்த்துட்டு எனக்கு அவன் மேலே நல்லா அபிப்ராயம் தான் வந்துச்சே தவிர காதல் வரல.  நான் என்ன முட்டாளா?  அவனை மாதிரியே பரிதாபப்பட்டு காதலிக்க.
இப்போ நான் உண்மையா ரொம்ப சந்தோஷமா இருக்கேன்… ” என்று மனதார பேச அவள் அன்னை வாரி அணைத்து அவளை அணைத்துக் கொண்டார்.

இந்த அணைப்பு இந்த அணைப்பில் தான் அவள் இப்போது முழுக்காதலையும் உணர்கிறாள்.

நம் பிள்ளை கலங்கிவிடக்கூடாதே  என பரிதவிக்கும் இந்த தாயின் அன்பில் காணாததையா புதிதாய் தேடப் போகும் உறவில் அவள் காணப் போகிறாள்.

சுற்றி காதல் இருந்தும் இல்லாத ஓன்றிற்காக ஏங்கி சாவதேன் என்று கண்களை துடைத்துக் கொண்டாள்.

💐💐💐💐💐💐💐💐

அவனுடைய கல்யாணத்திற்கு செல்வதாக கிளம்பி கொண்டு இருந்தவளை சுற்றி சுற்றி அவள் அன்னை வந்து கொண்டு இருந்தார்.

“இந்தா இன்னும் கொஞ்சம் மை போட்டுக்கோ. பாரு சேலை நிறத்துக்கு ஏத்தா மாதிரி வளையல் இல்லை… ” என்று அவளை சுற்றியே வட்டமடித்துக் கொண்டு இருந்தவரைப் பார்த்ததும் கண்கள் பனித்தது.

தன் பெண்ணை அழகு இல்லை என்று சொன்னவனின் முன்பு அழகு பதுமையாய் இவளை நிறுத்தி இவளையா அழகு இல்லையென நீ சொன்னாய்? என்று  கண்களாலேயே குற்றம் சாட்டி அவனை குற்ற உணர்வில் தள்ளுவதற்கான முயற்சி இது.

“அம்மா போதும் மா…. வா போகலாம்” என்று  கல்யாண மண்டபத்திற்குள் நுழைந்தாள்.

உள்ளே நுழைந்ததும் குட்டிப் பாவடை போட்டுக் கொண்டு சௌந்தர்யாவின் குழந்தை அங்கும் இங்குமாய் ஓடி விளையாடி கொண்டு இருந்தது.

அந்த குழந்தையை கண்டதும் அப்படியே வாரி அணைத்துக் கொள்ள வேண்டும் போல தோன்றியது.

ஒரு வேளை இது தான் அத்தைகளுக்கே உண்டான பாசம் போல.

அந்த குழந்தையை கண்டு விட்டு நேராக நிமிர்ந்து பார்க்க

அங்கே மேடையில் ராஜூ அவளுடைய காதலியுடன் நின்று கொண்டு இருந்தான்.

அவனைக் கண்டதும் இவள் இதழ்களில் விரக்தி புன்னகை உதிர்த்தது.

வேறு ஒருவனை காதலித்துவிடாதே என்று அவளை சபித்த அதே முன்னாள் காதலன் தான் இன்று இந்நாள் காதலியுடன் மேடையில் நிற்கின்றான்.

அவர்களை இவள் மனதார ஆசிர்வாதித்துவிட்டு மேடையில் இருந்து கீழே இறங்கினாள் பெரும் நிம்மதியுடன்.

ஆக சிறந்த பழி வாங்கல் நம்மை சபித்தவர்களை மனதார வாழ்த்திவிட்டு வருவது.

பழி வாங்கிவிட்டாள்.

Leave a Reply

error: Content is protected !!