காதலின் விதியம்மா 17

காதலின் விதியம்மா 17
தன் கழுத்தில் தொங்கும் சங்கிலியை எடுக்க கையை வைக்க, சரியாக தேஜூவின் போன் ரீங்காரம் எழுப்பியது.
காதில் போனை வைக்க “என்ன சார் சொல்றீங்க…. இப்ப எங்க இருக்கீங்க……. வெளியவா….. இருங்க நான் வரேன்” என்று தன் அறையில் இருந்து வேகமாக ஓடினாள்.
வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டு இருக்க, தேஜூ கதவை திறந்து கொண்டு பைரவை தேட, அவனின் வெள்ளை சட்டை இரத்தம் கொண்டு சிவந்து இருந்தது.
“அச்சோ… சார் என்ன ஆச்சு……. இவ்வளவு இரத்தம் எங்க அடி பட்டுச்சு….” என்று பதறிக் கொண்டு கேட்க,
“கூல் தேஜ்…. நீ பதற அளவுக்கு ஒன்றும் நடக்கலை….. இப்படியே வீட்டுக்கு போனால் அங்க எல்லாரும் ரொம்ப பயந்து போய்டுவாங்க நான் இந்த சட்டையை க்ளீன் பண்ணிட்டு போகனும் அதான் உன் வீட்டுக்கு வந்தேன்” என்றான் தயக்கமாக. தயக்கத்திற்கு காரணம் அன்று ஒரு நாள் இவளை டிராப் செய்ய வந்தவனை ஒரு தெரு முன்னே நிறுத்த சொல்லிய தைரியமாக பெண் தானே இந்த தேஜூ என்று அவளின் பதிலுக்கு ஆவலாக பார்க்க,
“என்ன சார் யோசனை எவ்வளவு நேரமா நிற்பீங்க வாங்க உள்ள” அவனின் கையை பிடித்து இழுத்து கொண்டு அவளது அறைக்கு சென்றாள். ‘அட நம்ம தேஜா இது’ என்று அவளை ஆச்சரியமாக பார்த்தான்.
“எங்க சார் அடி பட்டுச்சு சட்டை எல்லாம் இரத்தமா இருக்கு…. முதல என்ன நடந்துச்சு” என்ற அவளின் அதிகாரமான குரலில் இவன் விழுந்து தான் போனான்.
“கேட்டதுக்கு இன்னும் பதில் வரல” என்ற அவளின் குரலில் நினைவுக்கு வந்தவன், “ரொம்ப மிரட்டாத….. வெர்அவூஸ்ல ஃபயர் ஆக்ஸிடன்ட்… என்னனு பார்த்தா எவனோ வேண்டுமென பண்ணியிருக்கான். நாளைக்கு போக வேண்டிய ஆடர் எல்லாம் போச்சு அதற்கு யார் காரணம்னு கண்டுபிடிச்சு அந்த டேஷ் எங்க இருக்கானு தெரிஞ்சு போயிட்டேன் பட் தனியா போய்டேன் அவன் ஒருத்தனா இருப்பானு பார்த்தா மலை மாடு மாதிரி பத்து பதினைந்து பேர் இருந்தாங்க…… கையில் கத்தி கடப்பாரை சப்பா…….. செம சண்டை அவங்களை போரட்டி போட்டதில் சில அடி எனக்கு விழுந்திருச்சு அவ்வளவு தான் ” என்று அவர்களை வீட்டில் விட்ட பின் நடந்த விசயத்தை சுருக்கமாக சொல்ல,
“எப்பவும் உங்க கூட பிறந்த மாதிரி நாலு பேரை வெச்சிருப்பீங்களே அவங்க எங்க போனாங்க….. சுத்தமா உங்க மண்டையில் அறிவே இல்லை. இருந்தா தனியா போய் இருப்பீங்களா…. எவ்வளவு நேரமா சட்டையை கிழட்டுவ” என்று அவனின் சட்டையை இழுக்க, அவள் கையோடு வந்தது அவனின் வெள்ளை சட்டை.
தோள் பட்டையில் சிறு வெட்டும் முதுகில் ஒரு வெட்டும் இருக்க, வேகமாக முதலுதவி பெட்டியை கொண்டு அவனின் காயத்தை சுத்தம் செய்தாள்.
“நாளைக்கு பக்கத்தில் இருக்கிற ஹாஸ்பிடல் போய் ஒரு டி டி போட்டுக்கோங்க. எனக்கு கட்டு போட எல்லாம் தெரியாது எதோ குத்து மதிப்பா கட்டி விடுறேன் நாளைக்கு டிரஸ்சிங் பண்ணிக்கோங்க” என்று இவள் பேசிக்கொண்டே செல்ல, எதிர் பக்கம் பதிலே இல்லை.
அவன் எங்கே இவள் பேசியதை கவனித்தான் தன்னை அதிகாரம் செய்யும் இவளின் புதிய நடவடிக்கையை கண் கொட்டாமல் ரசித்தான்.
“அவ்வளவு தான் முடிச்சிடுச்சு…. சரி சார் சாப்பிட்டிங்களா…. எங்க சாப்பிட்டு இருக்க போறீங்க மனசில் ஜாக்கி சான் தம்பினு நினைப்பு இருங்க சாப்பிட எதாவது இருக்கானு பார்க்கிறேன்” என்று அவளது அறையை விட்டு செல்ல,
‘சாப்பாட்டு க்கும் ஜாக்கி சான்னுக்கும் என்னயா சம்மந்தம் இருக்கு…… எல்லாம் என் நேரம்’ என்று புலம்பி கொண்டே அறையை சுற்றி பார்க்க, அவனை ஈர்த்தது தேஜூவின் புகைப்படம்.
அதன் அருகே சென்றவன் தன் கைபேசி கொண்டு பல அங்கிளில் போட்டோ எடுத்து வைக்க, கையில் தட்டுடன் தேஜூ உள்ளே வந்தாள்.
“இந்தாங்க சார் நைட் பண்ண புலாவ்” என்று தட்டை கொடுத்து விட்டு “இது அண்ணா சட்டை போட்டுக்கோங்க” என “போட்டு விட்டா இன்னும் நல்லா இருக்குமே” என்றவனை முறைத்து வைத்தாள்.
இதை ஜன்னலில் இருந்து பார்த்த தேவேஷ் ‘யாரு இவன் இவ்வளவு உரிமையா வீட்டுக்குள்ள அதுவும் அச்சு ரூமில் இருக்கான். இவளும் அவனுக்கு சாப்பிட கொடுத்துட்டு இருக்கா….. முன்ன இருந்த என் அச்சு இவ இல்லையே என் கிட்ட பேச வரும் போது கூட அவ கண்ணில் பயம் பதட்டம் தானே தெரியும் ஆனால் இப்ப எந்த பயமும் பதட்டமும் இல்லாமல் கண்ணில் தைரியம் தான் அதிகமா தெரியுதே…. இவனை எங்கவோ பார்த்த மாதிரி இருக்கே.
சட்டை எல்லாம் இரத்தாமா வந்து நிற்கிறான். பெரிய ரவுடி மாதிரி. இல்ல இவன் கூட என் அச்சு போக கூடாது. என் தங்கையை உன் கிட்ட இருந்து காப்பாற்ற வேண்டும்’ என்று தன் பிள்ளை தான் போன் செய்யும் போது எடுக்க வில்லை என்றால் நாடே தன் பிள்ளைக்கு கேடு செய்வது போல் பதறும் தாயின் மன நிலையில் இருந்தான் இந்த பாசமிகு தமையன்.
சிறிது நேரம் முன்பு, தன் காதலி ரம்யாவிடம் போனில் பேசிக்கொண்டு இருந்த போது கதவு திறக்கும் சத்தம் கேட்கவே, “ரம்ஸ்…. நான் அப்புறமா பேசறேன் டேக் கேர்” என்று கதவை திறந்து மாடியில் இருந்து எட்டி பார்க்க தேஜூ பைரவின் கையை இழுத்து வரும் காட்சியை கண்டு உறைந்து விட்டான். இவர்கள் பேசியது பாதிக்கு மேல் அவனுக்கு கேட்க வில்லை.
பைரவ் “நான் கிளம்பறேன் நீயும் கேர்பூல்லா இரு. வெளியே தனியா எங்கவும் போகாதே. எதோ தப்பா நடக்க போறா மாதிரியே இருக்கு. உன்னை தனியா விடவே மனசில்லை. என் கூடவே வந்திடேன்” என்று உருகும் குரலில் சொல்ல,
“சார் என்ன ஆச்சு ஏன் இப்படி எல்லாம் பேசறீங்க….. எதுவும் தப்பா நடக்காது நான் நடக்கவும் விட மாட்டேன். அதே மாதிரி உங்களுக்கும் எதுவும் ஆகாது. நான் இருக்கும் போது உங்க கிட்ட யாராலும் நெருங்க முடியாது” அவன் மார்பில் கை வைத்து “இங்க துடிக்கிற இதயம் என் மூச்சு காற்றில் கலந்து இருக்கு. என் மூச்சு இருக்கிற வரை இந்த இதய துடிப்புக்கு எதுவும் ஆகாது” என்று அவனின் கண்களை ஊடுருவி கொண்டு சொல்ல,
எதோ சொல்ல முடியாத தவிப்பு தோன்ற காற்று கூட போக முடியாதபடி அவளை இறுக்கி அணைத்து கொண்டான். என்ன தான் அவளை தன் கையடக்க வைத்து இருந்தாலும் நாளை இதே வேளையில் தன்னவளின் உயிருக்காக இது வரை யாரிடமும் கெஞ்சாத கர்வம் கொண்ட பைரவ் கை கூப்பி கண்ணீரில் கரைய போவது.
பைரவ் சென்று வெகு நேரம் ஆன பின்னும் தேவ் தன் இயல்புக்கு திரும்ப முடியாமல் தவித்தான். தன்னை விட்டு தேஜூ ரொம்ப தூரம் சென்றது போல் உணர்ந்தான். நேரத்தை கூட பார்க்காமல் ஆர்யாவிற்கு போன் செய்ய,
அவன் எடுத்ததும் “டேய் சீக்கிரமா உனக்கும் அச்சுக்கும் கல்யாணம் பண்ணனும் டா” என ஆர்யா “டேய் தூங்கிட்டு இருக்கும் போது என்ன லூசு மாதிரி பேசிட்டு நாளை போன் பண்ணுடா” என்று தூங்கி வழியும் குரலில் சொல்ல, அப்பொழுது தான் நேரத்தை பார்த்து “சாரிடா” என்று வைக்கும் போது சூர்யாவின் குரல் கேட்க திகைத்து போனான்.
சூர்யா “ஏன் ண்ணா தூங்கிடேன்னு பொய் சொல்ற என்ன ஆச்சு” என்று இருவரும் ஒன்றாக இருப்பது அதிசயம் என்பதால் பல நாள் கதையை பேசி கொண்டு இருக்கும் போது தான் தேவ் போன் செய்தது.
கால் கட்டாகிவிட்டதாக நினைத்த ஆர்யா “தேவ் கிட்ட எப்படி டா சொல்ல முடியும் உன் தங்கச்சியை என்னால் கல்யாணம் பண்ணிக்க முடியாது னு. அச்சுவை எனக்கு பிடிக்கும் தான் ஆனால் அவ மேல லவ் வரலை டா. இன்றைக்கு ஒரு பொண்ணை பார்த்தியே கௌசி அவளை பார்க்கும் போது வர ஒரு விதமான ஃபில் இவ மேல வரலை. தேவ் கிட்ட சொல்ல கஷ்டமா இருக்குடா” என்னும் போதே போனை கட் செய்து விட்டான் தேவேஷ். ஒரு வேளை அவர்கள் பேசியதை முழுமையாக கேட்டு இருந்தால் நாளை நடக்கவிருந்த அசம்பாவிதம் தவிர்த்து இருக்கலாம். விதி யாரை விட்டது.
தேவேஷ் யார் யாருக்கோ போன் செய்து அந்த அர்த்த ராத்திரியில் தன் தங்கைக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து விட்டு தான் ஓய்ந்தான்.
சண்டி “அந்த ஆர்யாவை தேஜஸ்வினிற்கு விவாகம் செய்தால் பைரவின் சக்தி பாதியாகி விடும் என்று தானே பொருந்தாத இருவர் ஜாதகத்தையும் பொருந்தும் ஜாதகம் போல் சொல்ல வைத்தேன். என்ன பயன் ஆர்யா விவாகம் புரிய மாட்டேன் என்று விட்டானே…. உமக்கு கொடுத்த சிறிய வேலை அதை கூட சரியாக உம்மால் முடியாதா” என்று தன் தம்பியிடம் கத்த,
“சாரி அண்ணா நான் முடிஞ்ச அளவு நெருங்க பார்த்தேன் ஆனால் முடியலை” என்று தலையை குனிந்து சொல்ல,
“இன்று நாம் கொளுத்திய தீ அவனது பொருட்களை தான் சேதம் படுத்தியது கூடிய விரைவில் அவனை பஸ்மம் ஆக்கும்…. நானே இனி நேரடியாக களத்தில் இறங்க உள்ளேன்” என்ற இருந்த இருவருக்கும் அடுத்ததாக கிடைத்த செய்தி இவர்களின் வேலையை இன்னும் சுலபமாகியது.
மறுநாள் காலை அழகாக புலர்ந்தது. பறவைகள் கீச் குரலில் கண்களை மெதுவாக திறந்த பைரவின் இதயம் தாறுமாறாக துடிக்க ஆரம்பித்தது. ஏன் என்றே புரியாமல் தவித்தவன் சற்று நேரத்தில் மட்டுப்பட இன்று இருக்கும் வேலையை மனதில் ஒரு முறை நினைவு படுத்தி கொண்டு குளிக்க சென்றான்.
மாளவிகா “அண்ணா அங்க போனோமா வேலையை பார்த்துமா வந்தோமானு இருக்கனும்… அண்ணிய வேற கூப்பிட்டு போறீங்க பத்திரமா இருக்கனும்…… இந்த வேலைக்கு எல்லாம் நீங்க போகனுமா” என்று அதிகாலையே எழுந்து கிளம்ப தயாராக இருக்கும் நாராயணன் பூமகள் இருவரையும் பார்த்து ஆயிரத்தி பத்தாவது முறையாக கேட்க,
பார்த்திபன் “அவங்க போறதே வேலை விசயமா…. அந்த இடத்தை பார்த்தா தானே தெரியும் பைரவ் சொன்ன மாதிரி அங்கவே கம்பெனியை ஆரம்பிக்கலாமா இல்ல வேற இடம் பார்க்கனுமானு தெரியும்” என்று நாராயணன் பூமகளை வழி அனுப்பி வைத்தனர்.
அவர்கள் கிளம்பியதும் பார்த்திபன் “என்ன ஆச்சு மா ஒரு மாதிரி பதட்டமா இருக்க உடம்புக்கு எதாவது பண்ணுதா” என்று கனிவுடன் கேட்க,
“என்னன்னு சொல்ல தெரியலை ஆனா எதோ ஒன்று நடக்க போது அது நல்லதா கெட்டதானு தெரியலை” என்றவளை அணைத்து “நல்லதே நடக்கும் மாளுமா…. நம்ம யாருக்குமே கெடுதல் நினைத்தது இல்ல….. நமக்கு நல்லதே தான் நடக்கும் என்ன எல்லாமே லேட் அவ்வளவு தான்” என்று அவரின் கன்னத்தை கிள்ளி கொண்டு சொல்ல,
பைரவ் “என்ன மாமா நடு ஹாலில் ரொமான்ஸா…. சின்ன பையம் வரேன் கொஞ்சம் தள்ளுங்க” என்று இருவரையும் இடித்து கொண்டு டைனிங் டேபிளில் அமர்ந்தான். பின் “அப்பா கிளம்பிடாங்களா அம்மா எங்க ஆளை காணோம்” என
பார்த்திபன் “மச்சான் இப்ப தான் கிளம்பினார் என்ன அவரோட உன் அம்மாவும் போய் இருக்காங்க” என்று கிண்டலாக சொல்ல,
“வர வர யார் வயசு பையனே தெரியலை நீங்க என்னனா நடு வீட்டில் ரொமான்ஸ் பண்ணீங்க என் அப்பா என்னனா நேத்து தான் கல்யாணம் ஆனா மாதிரி ஜோடியா வேலை பார்க்க போறாரு…. குடும்பமா இது” என்று சலித்து கொள்ள,
“அதுக்கு ஏன்டா சலித்துக்கிற இப்ப ஓகே சொல்லு மாமா உனக்காக நூறு பொண்ணு பார்க்கிறேன்” என்ற பார்த்திபனை பார்த்து மாளவிகா சிரிக்க பின் “சொல்லுடா தங்கம் உனக்கு எப்படி பட்ட பொண்ணு வேண்டும்” என்க,
பைரவ் “பெருசா எல்லாம் எதுவும் இல்லை உங்க பொண்ணு போதும்” என இருவரும் ஒருவரையொருவர் அதிர்ந்து பார்க்க,
பார்த்திபன் “எனக்கும் ஆசை தான் டா….. ஆனால் அது தான் முடியாதே நம்ம என்ன பண்ண முடியும்” என மாளவிகா கலங்கும் கண்களை மறைத்து கொண்டு “தங்கத்துக்கு பொண்ணு கொடுக்கிற பாக்கியத்தை அந்த கடவுள் எனக்கு கொடுக்கலை” என
அவரின் முகத்தை பற்றி தன் பக்கம் திருப்பிய பைரவ் “நல்லதே நடக்கும் அத்தமா” என்று அவரின் தலையை தடவிக் கொடுத்து விட்டு சென்றவன் நேராக வந்தது பக்கத்தில் இருக்கும் பெரிய மல்டி ஹாஸ்பிடல் தான்.
நேற்று வெட்டு பட்ட காயத்துக்கு டிரஸ்சிங் செய்து விட்டு ஒரர டி டி போட்டு விட்டு சில முக்கியமான வேலை பார்த்து விட்டு டாக்டரிடம் “ரிப்போர்ட் எப்ப கிடைக்கும்” என
“ஈவினிங் கிடைச்சிடும் சார் உங்க மெயில் க்கே அனுப்பிடுறோம். நீங்க திரும்ப வர வேண்டிய அவசியம் இல்லை” என்றதும் மாலை வர போகும் ரிப்போர்ட் காக இப்பவே காத்கிருந்தான். பின் அங்க தற்காலிகமாக அமைந்துள்ள அவனது ஆபீஸ் க்கு சென்றான் பல கனவுகளுடன்.
தேஜஸ்வினி வீட்டில்,
பொன்னி “என்னப்பா இப்ப வந்து சொல்ற அச்சுக்கு வேற வரன் பார்த்து இருக்கனு அதுவும் இன்றைக்கே நிச்சயம்னா ஏன் பா எதுக்கு இவ்வளவு அவசரம் பையன் யார் என்னனு விராரிக்க வேண்டாமா” என அதே கேள்வியுடன் அவன் அப்பாவும் அவனை பார்க்க,
“எதுக்கு ஏன் எல்லாம் கேட்காதீங்க நான் நம்ம அச்சு நல்லது க்கு தான் சொல்றேன் என்னை நம்புங்க அப்புறம் இந்த விசயம் ஈவினிங் வரை அச்சுக்கு தெரிய வேண்டாம்” என அவன் என்ன பண்றான் என்பது புரியாமலே இருவரும் தலையை ஆட்டினர்.
தேஜூ என்றும் இல்லாத மகிழ்வுடன் கௌசி யிடம் பேசிக்கொண்டு இருந்தாள். அவள் சொன்னது நேற்று பைரவ் வந்த விசயத்தை தான்.
கௌசி “அடிபாவி…. நான் சார் தான் லவ் பண்றதா நினைச்சேன் ஆனா நீ ஊம குசும்பு டி…. சரி ரொம்ப லேட் பண்ணாத சீக்கிரமா கமிட் ஆகிடு” என “சொல்லனும் டி நம்ம லவ் சொல்ற மொமென்ட் நம்ம வாழ்கையில் மறக்காத நாளா இருக்கனும் மறக்க முடியாத இது வரை நான் போகாத இடத்தில் சொல்லனும். சரி டி நான் கிளம்பலாம் பைரவ் சார் வெயிட் பண்ணுவார். நீ ஏன் டி இப்பவே கிளம்பற” என
“அம்மா உடனே வர சொல்றாங்க டி ஏன்னு தெரியலை போனாதா தெரியும்… இங்க இருந்து இரண்டு மணி நேர பயணம் தானே சீக்கிரமா போன வேலை முடிந்ததும் வந்திடுறேன்” என்று தன் உடமைகளுடன் இருவரும் ஹாலுக்கு வர,
தேவேஷ் “அச்சு இன்றைக்கு முக்கியமான வேலை இருக்கு டா ஸோ வேலைக்கு போகாத…. கௌசியை அப்பா இப்ப வெளியே போகும் போது கூப்பிட்டு போவார்” என
மனதில் தோன்றிய தயக்கத்துடன் அப்பா அழைத்து செல்லும் கௌசிக்கு பை சொல்லி விட்டு பைரவிற்கு போன் செய்ய போனை எடுக்க எதிரே வேகமாக வந்த தேவேஷ் இவள் மேல் மோதியதில் அந்த போன் கீழே விழுந்து தன் உயிரை விட்டது.
“சாரி டா பார்க்கலை” என்றதுக்கு “பரவாயில்லை ண்ணா….. சாருக்கு இப்ப எப்படி சொல்ல எனக்கு அவர் நம்பர் தெரியாதே” என அதற்குள் உள்ளே இருந்து பொன்னி அழைக்க அந்த விசயத்தை மறந்து விட்டாள்.
நான்கு மணி அளவில் பொன்னி தாமரை வண்ண பட்டை தேஜூ விடம் கொடுத்து “இதை போய் கட்டிட்டு ரெடி ஆகுடா நேரம் ஆகுது பார்” என,
‘அதுக்கு சேலை என்ன நேரம் ஆகுது’ என்று குழப்பமாக தன் தாயை பார்க்க, தேவேஷ் “குட்டிமா இந்த அண்ணா மேல நம்பிக்கை இருந்தா போய் கட்டிட்டு வா” என
என்ன ஆனது எல்லாருக்கும் என்று யோசனையுடன் தயாராகி வெளியே வந்தவள் தன் தமையன் அடுத்து சொன்ன செய்தியில் சிலையானாள்.
“என்ன அண்ணா இப்ப சொன்ன” என தேவேஷ் மறுபடியும் “இப்ப உன்னை பொண்ணு பார்க்க எனக்கு தெரிஞ்சவங்க வராங்க. மாப்பிள்ளை பெயர் மந்தீப்” என
“யாரை கேட்டு எனக்கு மாப்பிள்ளை பார்த்த…. எனக்கு மாப்பிள்ளை பார்க்கும் அதிகாரத்தை யார் உனக்கு கொடுத்தா” என்று வீடே ஆதிரும் படி கேட்க,
இதுவரை அதிர்ந்து சிரிக்காத தன் மகளது கோபத்தை பார்த்து பெற்றோர்கள் இருவரும் மூச்சு விட கூட மறந்து தன் மகளை ‘பே’ வென பார்க்க,
“உனக்கு மாப்பிள்ளை பார்க்க எனக்கு உரிமை இல்லையா” என்று கேட்கும் போதே வாசலில் கார் சக்தம் கேட்க,
ரகுபதி “அவங்க வந்துட்டாங்க” என தேவேஷ் “இப்ப எதுவும் பேசாதே அவங்க எல்லாம் கிளம்பட்டும்” என்பவனுக்கு தெரியவில்லை வந்தவனை பார்த்தால் அவள் ருத்திர தாண்டவம் ஆட போவது. தேஜூவின் கோபத்துக்கு காரணமான நபர் யார்??
விதிகள் தொடரும்
நிலா