காதல்போர் இறுதி அத்தியாயம்

eiOOLW357649-f4435afa

காதல்போர் இறுதி அத்தியாயம்

நரேந்திரனின் வார்த்தைகளில் ராவண் வேதாவை அதிர்ந்து நோக்க, அவளோ தன் தந்தையை அர்த்தத் பொதிந்த பார்வையோடு புன்னகையுடன் பார்த்திருந்தாள். அவளுடைய நினைவுகளோ அன்று நடந்த சில சம்பாஷனைகளை மீட்டின.

சுஜீப் வேதாவுடன் பேசிவிட்டு சென்றதும், கதவை அறைந்து சாத்தியவளுக்கு ஒரு அழைப்பு!

திரையில் தெரிந்த “சித்தார்த்” என்ற  பெயரைப் பார்த்தவளுக்கு ஒரே குழப்பம். பெங்ளூரிலிருக்கும் போது ஒரு இளைஞனுடன் பேசியதற்கு ராவண் பொங்கியெழுந்தானே! அவனே இவன்.

அன்று ராவண் பேசிய பேச்சில் கோபப்பட்டு உடைப்பெட்டியுடன் வெளியேறியவள், ஏதோ யோசனையில் வீதியில் வரும் வாகனங்களை கூட கண்டுக்கொள்ளாது வீதியில் இறங்க, அவளை இழுத்துப் பிடித்து, பிரச்சினை என்பதை உணர்ந்து, சென்னை செல்வதற்கான ரயிலில் பாதுகாப்பாக ஏற்றி விட்டதே அவன்தான்.

அன்று இருந்த மனநிலைக்கு அவளுக்கும் அவனுடைய உதவி தேவைப்பட்டது போலும்!

அவனே இன்று அழைத்திருக்க, அழைப்பை ஏற்றவள், “சொல்லுங்க மிஸ்டர்.சித்தார்த்” என்று தேய்ந்த குரலில் சொல்ல, “பரவாயில்லையே, நியாபகம் வச்சிருக்கீங்க. க்ரேட்! பட், ஐ ஹேவ் சம்திங் டூ டெல் யூ. அன்னைக்கு உங்க ஃபோன பிடுங்கி என் நம்பர சேவ் பண்ணி உங்க நம்பர வாங்கிக்கிட்டது ரொம்ப நல்லதாப் போச்சு” அவன் படபடவெனப் பேச, வேதாவுக்கோ ஒன்றும் புரியவில்லை.

“புரியல” அவள் விழிக்க, “இல்லைங்க, உங்க புருஷன் ரொம்ப மோசமான நிலைமையில இருக்காரு. அன்னைக்கு எதேர்ச்சையா உங்க  வீட்டுப் பக்கமா போகும் போது, அவர் என்னடான்னா வாசல்ல விழுந்து புலம்பிக்கிட்டு இருக்காரு. சரிடான்னு கஷ்டப்பட்டு தூக்கிட்டுப் போய் உள்ள படுக்க வைச்சா… மிர்ச்சி மிர்ச்சின்னு ஒரே புலம்பல். அந்த மிர்ச்சி நீங்கதானோ மிஸஸ்.வேதா?” கேலியாக கேட்டு, “பொதுவா பொண்டாட்டி ஊருக்கு போனா ‘என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா’ன்னு பாட்டு பாடுற புருஷனுங்கதான் அதிகம். ஆனா உங்கவருக்கு உங்க மேல எம்புட்டு லவ்வு!” அவன் சிரிக்க, யோசனையில் ஆழ்ந்தாள் அவள்.

‘நீதான் விலக்கி வைச்ச, ஆனா இப்போ…’ தனக்குத்தானே கேள்வி கேட்டவாறு யோசித்தவளுக்கு ஒன்று மட்டும் புரிந்தது. ஆனால், அதை உறுதிப்படுத்த அவள் போட்ட திட்டம்தான் திருமணம்.

அன்றே அனைவருக்கும் மத்தியில் திருமணத்திற்கு வேதா சம்மதம் சொல்ல, இரண்டு நாட்கள் யோசனையிலிருந்த நரேந்திரன் அன்று சங்கடத்தை விடுத்து தன் மகளை தனியாக சந்தித்து அவள் தனிப்பட்ட வாழ்வைப் பற்றி விசாரித்தார்.

“லக்கி, உனக்கு என்ன பிரச்சினைன்னு எனக்கு தெரியல. உன் விஷயத்துல எனக்கு முழு உரிமை இருந்தும் உன் தனிப்பட்ட வாழ்க்கையில ஒரு அப்பாவா நான் தலையிட்டதில்லை. ஆனா, இப்போ அதுக்கான அவசியம் இருக்கோன்னு தோனுது. நிஜமாவே இந்த கல்யாணத்துக்கு முழு மனதோடதான் சம்மதிச்சியா?” நரேந்திரன் கூர்மையான பார்வையுடன் கேட்க, எங்கோ வெறித்தவாறு ‘ஆம்’ என தலையசைத்தாள் வேதா.

“அப்போ ராவண்?” சட்டென்று அவர் கேட்க, அவள் முகத்தில் கொஞ்சமும் அதிர்ச்சிக்கான சாயல் இல்லை. சிரிப்புடன், “மாப்பிள்ளையே அவன் தானே!” என்று வேதா சொல்ல, அவருக்கோ எதுவும் புரியவில்லை.

நடந்ததை இலை மறை காய் போல் சொல்லி முடித்தவள், “அப்பா, கல்யாணத்துக்கான டேட் ஃபிக்ஸ் பண்ணுங்க. எனக்கு நம்பிக்கை இருக்கு, அவன் கண்டிப்பா எனக்காக வருவான். அவனோட காதலை வெளிக்கொண்டு வர இதை விட்டா வேற யோசனை எனக்கு தோனல” அத்தனை உறுதியோடுச் சொல்ல, முதலில் அவள் சொன்னதைக் கேட்டு அதிர்ந்தாலும் பின், மெல்லியதாக புன்னகைத்தார் நரேந்திரன்.

“ரொம்ப ஆச்சரியமா இருக்குடா உன்னை நினைச்சி. நிஜமாவே இது என்னோட லக்கிதானா? காதல் எப்படிப்பட்டவங்களையும் மாத்தும், அப்படிங்குறதுக்கு நீங்க இரண்டு பேரும்தான் உதாரணமே! சரி, இப்போ சொல்லுடா, அப்பா என்ன பண்ணணும்?” சிரிப்புடனே அவர் கேட்க,

அவருடைய பேச்சில் வாய்விட்டுச் சிரித்தவாறு, “கல்யாணத்துக்கான ஏற்பாட்டை ஆரம்பிங்க. மாப்பிள்ளையோட பெயர் ராவண் மெஹ்ரா. ஆனா, ஒரே ஒரு கல்யாணப் பத்திரிகை நீங்க சொன்ன மினிஸ்டரோட பையன் பெயரு மாப்பிள்ளை பெயரா போட்டு எனக்கு வேணும். தட் இஸ் ஸ்பெஷல்லி மேட் ஃபோர் த க்ரேட் ராவண்” என்றாள் அவள்.

தான் போட்ட திட்டத்தை தன்னவனிடம் சொல்லி வேதா சிரிக்க, அப்போதும் அவனுக்கு அதிர்ச்சி குறைந்தபாடில்லை. ‘என்ன சொல்றா இவ?’ என்ற ரீதியில் புரியாது நரேந்திரனையும் வேதாவையும் மாறி மாறிப் பார்த்தவாறு அவன் நின்றிருக்க, வெளிப்படையாக நெற்றியில் அடித்துக்கொண்டவள், தன்னவனை இழுத்துச் சென்று ஜன்னல் வழியே வெளியே மண்டபத்தின் வாயிலிலிருந்த பேனரைக் காட்டினாள்.

அதைப் பார்த்தவனுக்கு அப்போதுதான் இருந்த கோபத்தில் அதைக் கூட பார்க்காது மண்டபத்திற்குள் நுழைந்தது நியாபகத்திற்கு வந்தது. அதில் மணமகன் பெயராக ராவணுடைய பெயரே இடப்பட்டிருக்க, ‘ச்சே! இதை முன்னாடி பார்த்திருந்தா இவக்கிட்ட கெஞ்சி, மிளகாய சாப்பிட்டிருக்க அவசியமே வந்திருக்காது’ கொஞ்சம் தாமதமாகவே புரிந்துக்கொண்டு தன்னைத் தானே கடிந்துக்கொண்டான் ராவண்.

வேதாவோ ஒற்றைப் புருவத்தை ஏற்றி இருக்க அவனை கெத்தாக ஒரு பார்வைப் பார்க்க, “மாப்பிள்ளை, இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே இருக்க போறீங்க? வாங்க வாங்க… உங்களுக்கான அறைக்கு அழைச்சிட்டு போறேன். தலைக்கு மேல வேலை கிடக்குது” நரேந்திரன் படபடவென பேசி அவனை இழுத்துச் செல்லாதக் குறையாக அழைத்துக்கொண்டுச் சென்றார்.

அவனோ திரும்பி தன்னவளை காதலாக பார்த்தவாறு ஒற்றை கண்ணை சிமிட்டிவிட்டு நரேந்திரனின் பின்னால் செல்ல, வெட்கப்பட்டுச் சிரித்துக்கொண்டாள் அவள்.

அடுத்த சில நிமிடங்களில் மணமேடையில் வேதா முழு மணப்பெண் கோலத்தில் அமர்ந்திருக்க, “ஹ்ர்ம் ஹ்ர்ம்…” என்று பக்கத்திலிருந்த தீப்தி தொண்டையைச் செறுமி வேதாவின் பார்வை தன் மீது படிந்ததுமே ஒரு திசையை கண்ணால் காட்ட, அங்கே பார்த்தவளுக்கோ விழிகள் ஆச்சரியமாக விரிந்துக் கொண்டன.

அங்கு பட்டு வேட்டி சட்டையில் கழுத்தில் மாலையுடன் சட்டை கையை மடித்து விட்டவாறு ஆணழகனாக வம்சியோடு மணமேடையை நோக்கி வந்துக்கொண்டிருந்தான் ராவண். அவனுடைய பார்வையோ ஹோமகுண்டத்தின் முன்னிருந்த தன்னவள் மீதுதான் ரசனையாகப் படிந்திருந்தது.

அவளும் அவனையே இமை மூடாது பார்த்திருக்க, சரியாக வேட்டி காலை தடுக்கி விழப்போன தன்னவனின் முகபாவனையில் ரசனை மறைந்து வாய்விட்டுச் சிரித்துவிட்டாள் வேதா.

“ஓ கோட்! ஏய் வம்சி, இதைதான் போட்டாகணுமா? பேன்ட் போட்டு தாலி கட்ட முடியாதா?” வேட்டி காலை தடுக்கிவிட்ட கடுப்பில் கடுகடுவென ராவண் பேச, “அய்யோ பையா, அவங்களோட கல்ச்சர்படி இப்படிதான் ட்ரெஸ் பண்ணணும். அதான் முறையும் கூட. இன்னைக்கு ஒருநாள்தானே? கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க” என்றான் வம்சி பதறியபடி.

அவன் சொன்னதில் சலிப்பாக தலையாட்டியவாறு வேதாவின் பக்கத்தில் ராவண் அமர, அவளோ அப்போதும் வாயைப் பொத்தி சிரித்துக்கொண்டிருந்தாள். அதில் அவளை முறைக்க முயன்று முடியாமல் “ஹிஹிஹி…” என்று அசடுவழிய அவன்  சிரித்து வைக்க, இதுவரை பார்த்திராத இப்போது அவன் வெளிக்காட்டும் முகபாவனைகளில் தன்னை தொலைத்தாள் வேதா என்றுதான் சொல்ல வேண்டும்.

சரியாக அவன் தோளை சுரண்டிய தீப்தி, “அத்தான், உங்களை நினைச்சா ரொம்ப பாவமா இருக்கு. இந்த ஜான்சி ராணிய கல்யாணம் பண்ணி தினமும் புதுசா புதுசா வம்பை விலைக்கு வாங்க போறீங்க. சோ, இன்னும் நேரமிருக்கு. நான் வேணா…” கேலியாகச் சொல்லிச் சிரிக்க, ‘துரோகி’ என்று சட்டெனத் திரும்பி தன் தங்கையை முறைத்துப் பார்த்தாள் அவள்.

“அடிங்க…” என்றவாறு வேதா ஏதோ சொல்ல வர, அதற்குள் “ஹ்ர்ம் ஹ்ர்ம்… இன்னும் ஒரு வாரத்துல மேடமுக்கு என் கூட கல்யாணம். தலைல டப்பா விழுந்து மறந்து போயிட்டீங்களா என்ன?” வம்சி பொறாமை கலந்த கோபத்தோடு கேட்க, “ஹிஹிஹி… சும்மா லுல்லுல்லாய்க்கு!” என்று அசடுவழிந்த தீப்தி, “ஆமா… விக்கி, வர்ஷாவ பார்த்தியா என்ன?” என்ற
தன்னவனின் கேள்வியில் கொதித்தெழுந்துவிட்டாள்.

இங்கு மாஹியோ, “பையா, உங்களுக்கொன்னு தெரியுமா? இவங்க முறைப்படி தாலி கட்டும் போது மூனாவது முடிச்சு மாப்பிள்ளையோட தங்கச்சிதான் போடணுமாம். நல்லா இருக்குல்ல” அரிசிப்பற்கள் தெரிய அவள் உற்சாகமாக சொல்லிச் சிரிக்க, “நம்ம கல்யாணம் கூட இப்படிதான் நடக்க போகுது ஜானு”
அவள் பின்னாலிருந்து அவளை ரசித்தவாறு விக்ரம் சொன்ன வார்த்தைகளில், சிவந்த அவளின் முகமோ வெட்கத்தால் மேலும் சிவந்துதான் போனது.

வெட்கத்தில் சிவந்திருந்த அவளுடைய கன்னங்கள் அவனுக்கு கிறக்கத்தை உண்டாக்க, தன்னையும் மீறி அவள் கன்னத்தை ஆர்வமாகத் தொட வந்தவன், “ஹ்ர்ம் ஹ்ர்ம்…” என்ற ராவணின் செறுமலில் அவன் புறம் திரும்பியும் பார்க்காது விசிலடித்தவாறு எங்கேயோ பார்ப்பது போலான பாவனையுடன் அங்கிருந்து ஓடியேவிட்டேன்.

அடுத்த சில நிமிடங்கள் கழிந்து தாலியை ராவணிடம் நீட்டிய ஐயர், “கெட்டிமேளம் கெட்டிமேளம்” என்று சொல்ல, நாதஸ்வர மேலதாளங்களுக்கு மத்தியில் தாலியை கைகளில் ஏந்திக்கொண்டு தன்னவளிடம் ‘சம்மதமா?’ என்ற ரீதியில் விழிகளாலே கேட்க, “ரொம்ப முக்கியம்!” என்ற ரீதியில் அவனை ஒரு பார்வைப் பார்த்தவள், பின் சிரித்தவாறு தலை குனிந்து அனுமதியளித்தாள்.

புன்னகையுடன் அவளை நெருங்கி அவளின் சங்கு கழுத்தில் தாலியை கட்டி இரண்டு முடிச்சிடுகள் ராவண் இட, மூன்றாம் முடிச்சை ஆர்வமாக போட்டாள் மாஹி. தன்னவளைச் சுற்றி கையைப் போட்டு அவளின் நெற்றி வகுட்டில் ராவண் குங்குமத்தை வைக்க, விழிகளை அழுந்த மூடித் திறந்தவளின் விழிநீர் அவனின் கரத்தில் பட்டுத் தெறித்தது. கலங்கிய விழிகளுடன் அவள் தன்னவனை நோக்க, அவளவனின் விழிகளும் கலங்கித்தான் போயிருந்தன.

“லவ் யூ மிர்ச்சி” ஆழ்ந்த குரலில் காதலாக சொன்னவாறு அவள் நெற்றியில் ராவண் அழுந்த முத்தமிட, விழிகளை மூடி புன்னகைத்தாள் அவள். அர்ச்சதை தூவி இந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த நரேந்திரனின் விழிகளும் தன் மகளின் வாழ்வை நினைத்து ஆனந்த கண்ணீரை வடித்தன.

எப்போதும் காதல், கல்யாணத்தில் ஆர்வமின்றி, பிரச்சினைகளுடன் வலம் வரும் தன் மகளை நினைத்து அவர் கவலைப்படாத நாளில்லை. இன்று அவள் விருப்பப்பட்ட வாழ்வு கிடைத்து அவள் மனநிறைவோடு புன்னகைக்கும் காட்சியைப் பார்த்தவருக்கும் மனம் நிறைந்துப் போனது.

இவ்வாறு தமிழ் கலாசாரத்தின்படி மங்களநாண் பூட்டி ராவண், வேதாவின் திருமணம் நல்லபடியாக முடிய, அடுத்த ஒருவாரத்தில் தீப்தி, வம்சியின் திருமணத்திற்கான ஏற்பாடுகள் அந்த கிராமத்தில் விறுவிறுப்பாக நடைப்பெற்றுக்கொண்டிருந்தது.

அங்கு பெண்வீட்டார் தங்குவதற்கென ஒதுக்கப்பட்ட வீட்டில் தலையை துவட்டியவாறு அறைக்குள் நுழைந்த வேதா, அங்கிருந்த அம்ரியைப் பார்த்ததுமே, “இப்போதான் எங்க நியாபகம் வந்திச்சா மேடமுக்கு? மாப்பிள்ளை வீட்டாளுங்கன்னா ரொம்பதான் பிகூ பண்றீங்க. எனிவேய், கம்படீஷன்ல வின் பண்ணதுக்கு என்னோட வாழ்த்துக்கள்” முதலில் பொய்க்கோபத்தோடு ஆரம்பித்து இறுதியில் வாழ்த்தோடு முடிக்க, ஓடி வந்து வேதாவை அணைத்துக்கொண்டாள் அவள்.

“தீ, உங்க கல்யாணத்துக்கு வரலன்னு கோபமா? அத்தனை தூரம் பாட்டியால வர முடியல. அதான் அவங்களுக்கு துணையா இங்கேயே நான் இருக்க வேண்டியதா போச்சு. ஆனா ஒன்னு தீ, நீங்க த க்ரேட் ராவண் பையாவதான் கல்யாணம் பண்ணுவீங்கன்னு நாங்க நினைச்சே பார்க்கல” அம்ரி ஆச்சரியக்குரலில் நீட்டி முழக்கிச் சொல்ல,

“க்கும்! உன் பையாவாலதான் என் தங்கச்சி கல்யாணத்துக்கு காலையில வர வேண்டியதா போச்சு! பெரிய ஊர் உலகத்துல இல்லாத வேலை. கல்யாணமாகி அடுத்தநாளே ஃபர்ஸ்ட் நைட்ட கேன்சல் பண்ண கடுப்புல என்னை தனியா விட்டுட்டு, பெங்ளூருக்கு போய் வேலைக்கும் கிளம்பியாச்சு. என் நேரம்!” நொடிந்துக்கொண்டாள் வேதா.

சரியாக, “ஹ்ர்ம் ஹ்ர்ம்…” என்றொரு செறுமல். செறுமல் வந்த திசையை நோக்கியவள், அங்கு நின்றிருந்த தன்னவனைப் பார்த்ததும் திருதிருவென முழிக்க, வாயைப் பொத்திச் சிரித்த அம்ரிதா, “அப்போ நான் வர்றேன் தீ” என்றுவிட்டு செல்லப் போக, “அம்ரி…” அவளை சட்டென்று அழைத்து நிறுத்தினாள் வேதா.

அவள் கேள்வியாக நோக்க, “ஆதேஷ் என்ன சொல்றாரு?” குறும்புச் சிரிப்புடன் வேதா கேட்க, “நிறைய சொல்றாரு, உங்களுக்கு என்ன சொல்லணும்?” என்றுவிட்டு வெட்கப்பட்டுச் சிரித்தவாறு வெளியில் ஓடிவிட்டாள் அம்ரிதா.

அவள் சென்றதுமே கதவை தாழிட்டு கதவின் மேல் சாய்ந்து நின்றவாறு தன்னவளை ரசனையாக ராவண் நோக்க, அவனை முறைத்தவள் கண்டும் காணாதது போல் கண்ணாடியின் முன் நின்று தலையை துவட்ட ஆரம்பித்தாள்.

அவளின் அலட்சியத்தில், “அட!” என்றவாறு அவளை நெருங்கி, “உங்கப்பனுக்கு அறிவே இல்லை. கல்யாணமாகியும் ஃபர்ஸ்ட் நைட்டுக்கு ஒரு வாரம் வெயிட் பண்ண வச்சிட்டாரு. ஆனா, அவருக்கு தெரியாதுல்ல, இது நம்மளோட செகன்ட் நைட்டுன்னு” குறும்பாகச் சொல்லிக்கொண்டே அவளிடையை வளைத்து அவள் கழுத்தில் முகம் புதைத்தவன், முத்தத்தை பதித்து வாசம் பிடித்தான்.

அதில் நெளிந்தவாறு, “அப்பாவ திட்டலன்னா தூக்கம் வராதே உனக்கு! ஏற்கனவே நாம லேட். இதுல இது வேற! எல்லாரும் மண்டபத்துக்கு கிளம்பிட்டாங்க. யாராச்சும் நம்மள ஒன்னா பார்த்தா அவ்வளவுதான்!” என்று பொரிந்துக்கொண்டேச் சென்றவளின் பேச்சு சட்டென தடைப்பட்டது.

தன் முன் தன்னவன் நீட்டியிருந்த அரக்குநிற மணப்பெண் சேலையை மெதுவாக வருடியவள், “வாவ்! நல்லாயிருக்கு” என்று ரசனையோடுச் சொல்ல, “அம்மாவோட கல்யாண சேலை மிர்ச்சி, இன்னைக்கு இதை கட்டிக்கோ!” அவள் காதுமடலில் இதழ் உரச சொன்னான் ராவண்.

அதில் பக்கவாட்டாகத் திரும்பி விழி விரித்து அவனை நோக்கிய வேதா, “ரியலி? பட், இன்னைக்கு எதுக்கு? இன்னைக்கு என்ன நமக்கா கல்யாணம்?” சிரிப்போடு கேட்க, அவனோ அடக்கப்பட்ட புன்னகையோடு அவளையேப் பார்த்திருந்தான். அதில் அவள் எதை உணர்ந்தாளோ?

“ரியலி?” அதிர்ந்துப்போய் அவள் குரல் வெளிவர, அவளை விட்டு விலகி நின்று, வெளியில் நின்றிருந்த பத்மாவதியை அழைத்த ராவண், “அவளை தயார்படுத்தி அழைச்சிட்டு வாங்க” என்று அந்த சேலையை அவர் கையில் கொடுத்து, தன்னவளைப் பார்த்து ஒற்றை கண்ணைச் சிமிட்டிவிட்டுச் செல்ல, வேதாவுக்குதான் அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை.

அடுத்த சில நிமிடங்களில் அந்த கோவில் மண்டபத்தில் இரு ஹோம குண்டங்களுக்கு முன் வம்சியும் ராவணும் மந்திரங்களை உச்சரித்தவாறு அமர்ந்திருக்க, மணப்பெண் கோலத்தில் வந்த தம் மங்கைகளை பார்த்த இருவருக்கும் விழிகளை அங்குமிங்கும் அசைக்கவே முடியவில்லை. அதுவும், தன் அம்மாவின் திருமண சேலையில் தேவதைப்போல் வரும் வேதாவைப் பார்த்த ராவணுக்கு தன் அம்மாவே தன்னவளை அழைத்து வருவது போன்ற பிரம்மை!

இரு மணப்பெண்களும் தன்னவர்களின் பக்கத்தில் அமர, சுற்றியிருந்தவர்களுக்கோ ராவண் வேதாவின் திருமணம்தான் அத்தனை ஆச்சரியத்தைக் கொடுத்தது. எலியும் பூனையுமாக நடுத்தெருவில் சண்டைப் போட்டவர்களை அவர்களும் பார்க்கத்தானே செய்தார்கள்!

வைஷாலிக்கோ சந்தோஷம் தாளவில்லை. தன் மகளை தன் அண்ணன் மகனுக்கு திருமணம் செய்துக்கொடுக்க நினைத்த அவரின் ஆசையும் நடந்தாயிற்று, பல வருடங்கள் கழித்து அவர் பிறந்த ஊருக்கும் வந்தாயிற்று. 

இங்கு மாஹியோ மணமகன்களின் தங்கை என்ற பெயரில் சுழன்று சுழன்று வேலைப் பார்த்துக்கொண்டிருந்தாள். சுனிலின் மரணத்தைப் பற்றி ராவணின் மிரட்டலை அறிந்தே எவரும் அவளிடம் வாய் திறந்து கேட்டுச் சங்கடப்படுத்தவில்லை. ஆனால், விக்ரம்தான் ‘அய்யோ ஒரு இடத்துல நில்லுடி! மேரா ஜான்’ என்று அவள் பின்னாலே திரிந்துக்கொண்டிருந்தான்.

சரியாக முகூர்த்த நேரத்தில், அந்த கிராம மக்களின் வழக்கப்படி கருப்பு மணிகள் கோர்க்கப்பட்ட மாலையை மணமகன்கள் கையில் புரோகிதர் கொடுக்க, அதை வாங்கிக்கொண்ட வம்சி, “யூ ஆர் ப்ரோமோடட் டூ மிஸஸ்.வம்சி எம்.பி.பி.எஸ்” குறும்பாகச் சொன்னவாறு தாலியை அவள் கழுத்தில் அணிவித்தான்.

அதில் ஓரக்கண்ணால் அவனை முறைத்தவள், “ஆமாடா, நான் கஷ்டப்பட்டு ராவு, பகலா படிச்சி டிகிரி வாங்குவேன். இவரு நோகாம அவர் பேரு பின்னாடி சொருகிக்குவாரு” என்று நொடிந்துக்கொள்ள, தன்னவள் சொன்ன விதத்தில் முட்டிக்கொண்டு வந்த சிரிப்பை அடக்க படாத பாடுபட்டான் வம்சி.

இங்கு ராவணோ மாலையை அணிவித்து அக்னியைச் சுற்றி தன்னவளின் விரலோடு விரல் கோர்த்து வந்துக்கொண்டிருக்க, வேதாவோ நறுக்கென்று அவனின் உள்ளங்கையிலே கிள்ளி வைத்தாள். அதில் “ஸ்ஸ் ஆ…” என்று முணங்கியவன், “மிர்ச்சி! ராட்சசி!” என்று பற்களைக் கடிக்க, வாய்விட்டு சிரித்தவளைப் பார்த்தவனுக்கு அவளை ரசிக்கும் மனதை தடுக்கத்தான் முடியவில்லை.

இவ்வாறு அடுத்த மூன்று நாட்களில் மோகனின் குல தெய்வக் கோவிலில் வைத்து மாஹியின் கழுத்தில் விக்ரம் மங்கள நாணை அணிவிக்க, தன் மார்பில் முட்டி மோதிய தாலியை கைகளில் ஏந்திய மாஹியின் விழிகளில் விடாது விழிநீர் கொட்டியது. ‘தன்னை விட்டு தொலைதூரமாகச் சென்றுவிட்டான்’ என்று தான் நினைத்த தன்னவன் இன்று நிஜத்தில் அவளை கரம் பிடித்திருக்க, அந்த சந்தோஷத்தை வார்த்தைகளால் வடிக்க முடியுமா என்ன?

விழிநீரோடு அவள் தன்னவனை நோக்க, அவனோ கொஞ்சமும் அதை உணராமல் தன் பக்கத்தில் நின்றிருந்த பெண்ணிடம் அல்லவா வழிந்துக்கொண்டிருந்தான்! அதைப் பார்த்தவளுக்கே கோபம் புசுபுசுவென எகிறியது.

இடம், பொருள் பார்க்காது அவன் மண்டையில் மாஹி ஓங்கி கொட்டிருக்க, “ஆஆ…” என்று கத்தியவன், மாஹியின் முறைப்பை பார்த்து பயந்தானோ, இல்லையோ? பக்கத்தில் மார்புக்கு குறுக்கே கைகளை கட்டியவாறு தன்னையே ஒற்றை புருவத்தை தூக்கிய தோரணையில் முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்த ராவணின் முறைப்பில் பதறியேவிட்டான்.

தன்னவனை முட்டியால் தட்டி, “எப்போ பாரு அவனை முறைச்சே பயமுறுத்த வேண்டியது! சேவேஜ்…” என்று திட்டிக்கொண்டே சென்றவளுக்கு தலை ஒருமாதிரி சுற்ற ராவணின் தோளிலே சாய்ந்துக்கொண்டாள்.

“வேத்…”

“வேதா…”

“லக்கிம்மா…”

ஒவ்வொருத்தரும் பதட்டப்பட, ராவணோ, “மிர்ச்சி…” என்று பதறவே ஆரம்பித்துவிட்டான்.

உடனே தன்னை சுதாகரித்து அவளை பரிசோதித்த தீப்திக்கோ ஒருநிமிடம் ஒன்றும் புரியவில்லை. அதிர்ந்த முகத்தோடு வேதாவையே இமைக்காது பார்த்தவாறு ‘இது எப்படி சாத்தியம்?’ என்ற ரீதியில் குழம்பிப்போய் நின்றிருந்தாள்.

“என்னாச்சு தீப்தி, என்னன்னுதான் சொல்லேன்” ராவண் அவசரப்படுத்த, “ஷீ இஸ் ப்ரெக்னென்ட்” தீப்தி சட்டென்று சொன்னதும், ராவணுக்கோ இறக்கை இல்லாமல் பறப்பது போன்ற உணர்வு!

“மேரா ஜான்” திரும்பத் திரும்ப சொன்னவாறு அரை மயக்கத்திலிருந்த தன் மனைவியை அவன் கொஞ்ச, ஆனால் சுற்றிலும் அமைதி!

“ஹவ் இஸ் திஸ் போஸிபள்! மருத்துவ சாம்ராஜ்யத்துல முதல்முறையாக மூனே நாள்ல முழுகாம இருக்காளா?” விக்ரம் நீட்டி முழக்கிக் கேட்க, ‘உங்க கூடதானேடா எனக்கும் ஆச்சு! அதுக்குள்ளயேவா?’ உள்ளுக்குள் நினைத்தவாறு வம்சி திகைத்துப் பார்த்திருந்தான்.

அப்போதுதான் தன் மனைவியிடமிருந்து பார்வையைத் திருப்பி சுற்றியிருந்தவர்களை கவனித்தான் ராவண்.

எல்லோரின் சந்தேகப் பார்வைகளை கவனித்ததும் அவனுக்கோ பக்கென்றானது. அதுவும், நரேந்திரனின் பார்வை. விழிகளைச் சுருக்கி, ‘இது எப்படி மாப்பிள்ளை?’ என்ற ரீதியல் அல்லவா கழுகுப்பார்வை பார்த்திருந்தார்!

தன்னவளை ராவண், “எழுந்திருடி! நான் மட்டும் திட்டு வாங்கினா போதுமா? எழுந்திரு மிர்ச்சி!” தட்டி எழுப்ப முயற்சிக்க, ‘தூங்குபவளை எழுப்பலாம். தூங்குவது போல் நடிப்பவளை எழுப்பவா முடியும்?’ என்ற ரீதியில் அவளோ சுற்றி நடப்பதை உணர்ந்து இல்லாத மயக்கத்தை வரவழைத்து அவன் தோளில் சாய்ந்திருந்தாள்.

இத்தனை சந்தேகப் பார்வைகளுக்கும் காரணம், தீப்தியின் திருமணம் முடிந்து அவர்களின் சாந்தி முகூர்த்தத்தோடல்லவா இவர்களுக்கும் சாந்தி முகூர்த்தம் ஏற்பாடு செய்தது!

மொத்தப் பேரும் உண்மைப் புரிந்து முறைக்க, ராவண் திருதிருவென விழித்தான் என்றால், ஒற்றை கண்ணை மட்டும் திறந்து குறும்பாகச் சிரித்தாள் வேதா.

*****சுபம்*****

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!