காதல்போர் 03

காதல்போர் 03
“வேதா, நீ ரொம்ப தைரியமான பொண்ணுதான். ஆனா, இதுக்கு முன்னாடி வாழ்ந்த சூழல் மாதிரி கிடையாது இது. இங்க நடக்குற பல தப்புகளுக்கு அந்த மெஹ்ரா குடும்பத்தை சேர்ந்தவங்கதான் காரணமே. சுஜீப் சொன்ன மாதிரி இங்க இருக்குற வரைக்கும் இந்த ஊரோட கட்டுப்பாடுகளுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கம்மா!” என்றுவிட்டு பத்மாவதி நகர்ந்திருக்க, யோசனையுடன் அவர் பின்னாலே சென்றாள் அம்ரிதா.
இங்கு விக்ரமும் வேதாவும்தான் புரியாது ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.
“பத்து சொல்ற மாதிரி இதை இதோட நீ விட்டுறலன்னா நான் மினிஸ்டர் அங்கிள்கிட்ட…” என்று ஆரம்பித்த விக்ரம், வேதாவின் முறைப்பில் கப்சிப் என்றாகிவிட்டான்.
‘உன் பெயர சொன்னதுமே இப்படி பதறுராங்க’ தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டு, ‘ராவண் மெஹ்ரா’ என்ற அவன் பெயரை அழுத்தமாக உச்சரித்துப் பார்த்தவளுக்கு ஒற்றை புருவத்தை தூக்கி இதழ்கள் வளைந்து புரியும் அவனின் அக்மார்க் புன்னகைதான் மனக்கண்முன் மீண்டும் மீண்டும் தோன்றியது.
அடுத்தநாள்,
தனதறையிலிருந்து அலைப்பேசியை நோண்டியவாறு வெளியேறிய வேதா, சரியாக ஒருவனின் மார்பிலே மோதி நிற்க, “சோரி சோரி…” என்று அவள் சொல்லி முடிக்கவில்லை, “அரே! கண்ணை என்ன பின்னாடி வச்சிருக்கியா? இடியட்!” என்ற குரலில் சட்டென நிமிர்ந்துப் பார்த்தாள்.
அவளெதிரே இடுப்பில் கைக்குற்றி முறைத்தவாறு அந்த இளைஞன் நின்றிருக்க, அவனைப் பார்த்ததுமே வேதாவிற்கு ‘உனக்கு உன் அம்மா ஒரு மாப்பிள்ளை பார்த்திருக்கா லக்கி. பேரு வம்சி. ஆனா, எனக்கு பிடிக்கல. மாவுகுளி மூஞ்சி, நல்லாவே இல்லை’ என்ற தன் தந்தையின் வார்த்தைகளும், அவர் காட்டிய புகைப்படத்திலிருந்த முகமும்தான் நியாபகத்திற்கு வந்தது.
அடுத்தநொடி வேதா வாய்விட்டு சிரிக்க, வம்சிக்கோ மேலும் கோபம் எகிறியது.
“ஷட் அப்!” அவன் கத்த, முயன்று சிரிப்பை அடக்கியவள், “யூ வம்சி ரைட்? ஐ அம் வேதா. வேதஷ்வினி நரேந்திரன். கேள்விப்பட்டிருப்பியே?” இருபுருவங்களை உயர்த்தி கேலியாக கேட்க, ஏற்கனவே அவள் மறுத்த கோபம் மனதிற்குள் இருக்க, எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போலான வேதாவின் கேலியில் அவனுக்கு பிபி எகிறிக்கொண்டுத்தான் சென்றது.
மூக்கு சிவக்க அவளை முறைத்துவிட்டு விறுவிறுவென மாடியிலிருந்து இறங்கி வம்சி செல்ல, சாதாரணமாக தோளை குலுக்கிவிட்டு குறட்டைவிட்டு உறங்கிக்கொண்டிருந்த தன் தோழனை அடித்து, எழுப்பி, ஹோலுக்கு இழுத்துக்கொண்டு சென்றாள் வேதா.
சீதாவோ அவள் வந்ததை கண்டும் காணாததும் போலிருக்க, வாசலில் காரை துடைத்துக்கொண்டிருந்த சந்தீப்பை கவனித்த வேதா, “சந்தீப், ஸ்டேஷன் போகணும். சீக்கிரம் வண்டிய எடு!” என்று சொல்ல, அவனோ சோஃபாவில் பத்திரிகையை கையில் வைத்து வேதாவையே புரியாது பார்த்திருந்த சுஜீப்பைத்தான் நோக்கினான்.
“எங்க கிளம்புற?” சுஜீப் கேட்க, “ஒரு முக்கியமான கம்ப்ளைன்ட் கொடுக்க இருக்கு” என்று வேதா சொல்லும் போதே அவருக்கு விடயம் புரிந்துப் போனது.
“நீ இங்க வர்றதுக்கு முன்னாடி வைஷாலி உன்னை பத்தி சொன்னா. அரசியல்வாதி மகளா இருந்துக்கிட்டு அதே அரசியல பத்தி பேசின உன்னால இதை மட்டும் எப்படி பார்த்துக்கிட்டு இருக்க முடியும்?” என்ற சுஜீப்பின் வார்த்தைகளில் ஏகத்துக்கும் ஏளனம் தாண்டவமாட, சந்தீப்பை பார்த்து தலையசைத்தவர் தனக்குள்ளேயே விஷமமாக சிரித்துக்கொண்டார்.
அவரை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு வேதா காரில் ஏறிக்கொள்ள, “ஏய் வேதா! நிஜமாவே கம்ப்ளைன்ட் கொடுக்கத்தான் போறோமா? எனக்கு என்னவோ சரியா தோனல. நான் அங்கிள்கிட்ட…” என்று சொன்னவாறு தன் காற்சட்டை பாக்கெட்டை விக்ரம் துளாவ, அதில் அவனுடைய அலைப்பேசி இருந்தால் தானே!
அவளுக்குத் தெரியாதா தன் தோழனைப் பற்றி? அதனால்தான் அலைப்பேசியை கூட எடுக்க விடாது அவனை தரதரவென இழுத்து வந்துவிட்டாள் அவள்.
இங்கு வீட்டில் சீதாவோ, “இவள மறுபடியும் அவ வீட்டுக்கே அனுப்பி விடுறதுதான் சரின்னு தோனுது. இவளால நம்ம ஊர் கலாச்சாரமும் கெட்டுப்போயிருமோன்னு பயமா இருக்கு. அதுவும், வந்த அடுத்தநாளே மெஹ்ரா குடும்பத்தோட பிரச்சினைய ஆரம்பிச்சிட்டா. இது நம்ம குடும்பத்துக்கும் பிரச்சினை ஆகிருமோன்னுதான்” தன் எண்ணத்தை மெதுவாக சொல்ல, “அரைமணிநேரம்தான் சீதா. ராவண் யாருன்னு அவளுக்கு தெரிய வரும். அப்றம் அவளே போயிடுவா” என்று வாய்விட்டு சிரித்தார் சுஜீப்.
சுற்றியிருந்தவர்களுக்கு கூட ‘தேவையில்லாத பிரச்சினையில் தலையிட்டு வம்பை விலைக்கு வாங்குகிறாளே இந்த பெண்’ என்ற பரிதாபம் அவள் மேல் தோன்ற, ஆனால், இந்த எண்ணத்திற்கு மாறானவள் வேதா என்று அப்போது யாரும் அறியவில்லை.
காவல்நிலையத்தில்,
மார்புக்கு குறுக்கே கைகளை கட்டியவாறு இறுகிய முகமாக இருக்கையில் வேதா அமர்ந்திருக்க, அவள் எழுதி கொடுத்த குற்றச்சாட்டையும் அவளையும் மாறி மாறி பார்த்தவாறு அவளெதிரே அமர்ந்திருந்தார் அந்த கிராமத்திற்கு பொறுப்பான காவல்நிலையத்தின் மேலதிகாரி.
ஆனால், பக்கத்திலமர்ந்திருந்த விக்ரமிற்கும் வெளியில் நின்றிருந்த சந்தீப்பிற்கும்தான் பயத்தில் கைகால்கள் உதற ஆரம்பித்தன.
‘யோவ் மினிஸ்டர் மாமா! நான் பாட்டுக்கு சிவனேன்னு தமிழ்நாட்டு பொண்ணுங்கள சைட் அடிச்சிக்கிட்டு திரிஞ்சிக்கிட்டு இருந்தேன். என் மனச கலைச்சி, இவ பின்னாடி வர வச்சி அந்த கொலைக்காரன்கிட்ட சிக்க வச்சிட்டல்ல. என் உயிருக்கு மட்டும் ஏதாச்சும் ஆச்சுன்னா ஆவியா வந்தாச்சும் உன் பொண்ண போட்டு தள்ளுவேன் ஆமா’ விக்ரமின் மனதின் புலம்பல் இவ்வாறு இருக்க,
‘இதுவரைக்கும் ஒரு பொண்ண சரி நிமிர்ந்து பார்த்ததில்லை நானு. நாம கன்னி கலையாமலே ஆவியாகிருவோம் போலயே…’ என்று கதறிய வண்ணம் இருந்தது சந்தீப்பின் மனம்.
ஆனால், வேதாவுக்கோ ‘தவறு செய்தவன் தண்டனை அனுபவிக்க வேண்டும்’ என்ற ஒரே நோக்கம்தான்.
அவள் எழுதி கொடுத்த குற்றச்சாட்டை வாசித்த காவலதிகாரி, “பார்க்க நம்ம ஊர் பொண்ணாட்டம் இருக்க. ஆனாலும், நீ இந்த ஊர் கிடையாது ரைட், எந்த ஊரு?” என்று கேட்க, “தமிழ்நாடு” என்றவாறு பேன்ட் பாக்கெட்டிலிருந்த தான் வேலைப்பார்த்த பத்திரிகை நிறுவனத்தின் அடையாள அட்டையை காட்டினாள் வேதா.
“ஓஹோ! ரிபோர்ட்டர். அதான் இவ்வளவு தைரியமா? ம்ம்… நான் இங்க ட்ரான்ஸ்ஃபர் ஆகி வந்ததுக்கு அப்றம் முதல்தடவை என் கண்ணை நேருக்கு நேர் பார்த்து நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு பேசுற ஒரு பொண்ண பார்க்குறேன். அச்சா(நல்லா இருக்கு)” அவர் சொல்ல, வேதாவின் முகபாவனையில் எந்த மாற்றமும் இல்லை. அழுத்தமாக இருந்தது அவளுடைய பார்வை வீச்சு.
ஆனால், விக்ரமிற்குதான் கண்ணை கட்டி காட்டில் விட்டது போலான உணர்வு!
கதிரையில் நன்றாக சாய்ந்தமர்ந்தவாறு, “எவனுக்கும் வராத தைரியம் ஒரு பொண்ணுக்கு. ஐ திங், இந்த ஊரை பத்தி உங்களுக்கு இன்னும் சரியா தெரியல மிஸ்.வேதா. ஓகே அதெல்லாம் விடுங்க. நீங்க கம்ப்ளைன்ட் எழுதி தரணும்னு இப்போ எந்த அவசியமும் இல்லை. அந்த பையன் கைய வெட்டினவனவே எங்ககிட்ட சரண்டர் ஆகிட்டான்” காவலதிகாரி சொன்னதுமே விழிவிரித்தாள் வேதா.
“ரியலி?” அவளுடைய வார்த்தைகள் ஆச்சரியத்தில் வெளிவர, “யாஹ்! அதோ பாருங்க” என்று கம்பிகளுக்கு பின்னாலிருந்த ஒருவனை அவர் காட்ட, வேகமாக திரும்பிப் பார்த்தவளுக்கு ஏமாற்றம்தான். காரணம், அங்கு நின்றிருந்தது வேதா இதுவரை பார்த்திராத ஒருவன்.
“இது… இவன் கிடையாது. அவன் பார்க்க… ஆங் எப்படி சொல்றது? கண்டிப்பா இந்த ஆள் கிடையாது. விக்ரம் உனக்கு தெரியும் தானே? நீங்க தப்பான ஆள…” வேதாவின் வார்த்தைகள் அவசரமாக வர, “பாதிக்கப்பட்டவன் கொடுத்த வாக்குமூலம்தான் மேடம். அவனேதான் இவன அடையாளமும் காட்டினான். சோ, இன்வெஸ்டிகேஷன் க்ளோஸ்ட். நீங்க கிளம்பலாம்” என்றார் அவர் சாதாரணமாக.
வேதாவுக்கு எதுவுமே புரியவில்லை. எவனோ ஒருவன் செய்த காரியத்திற்கு அதற்கு சற்றும் சம்மந்தமில்லாத ஒருவனுக்கு தண்டனை என்பதை அவளால் ஜீரணிக்க முடியுமா என்ன?
வேதா அப்போதும் ஏதோ பேச வர, சரியாக “ஹெலோ இன்ஸ்பெக்டர் சார்ர்…” என்ற கம்பீரக்குரல் அந்த இடத்தையே சற்று அதிரத்தான் வைத்தது.
வேதா திடுக்கிட்டுத் திரும்பிப்பார்க்க, வாசலை தன் ஆஜானுபாகுவான உடலால் முழுதாக மறைத்து சிகரெட் புகையை ஊதியவாறு நின்றிருந்தான் ராவண். அவனைப் பார்த்ததும் அங்கிருந்த காவல் அதிகாரிகள் கூட எழுந்துத்தான் நின்றனர். அதை மெஹ்ரா குடும்பத்தின் மேலுள்ள பயம் என்று கூட சொல்லலாம்.
வேதாவோ ‘புகைப்பிடித்தல் தடை’ என்று சுவற்றில் மாட்டியிருந்த தடைக்குறியீடு பலகையை பார்த்துவிட்டு அவனை முறைத்துப்பார்க்க, அந்த பலகைக்கு அருகிலே சென்று சிகரெட்டை கீழே போட்டு காலால் மிதித்தான் அவன்.
விக்ரமோ பயந்து வேதாவின் அருகில் வந்து நிற்க, வேதாவையே தன் பூனை விழிகளால் பார்த்தவாறு அழுத்தமான அடிகளுடன் வந்தவன் அவள் அமர்ந்திருந்த இருக்கையை இழுத்துப்போட்டு அமர்ந்து அவளை மேலிருந்து கீழ் பார்க்க, நேருக்கு நேராக அவனைப் பார்த்தவாறு இருந்தன வேதாவின் விழிகள்.
“பாய், இந்த பொண்ணு தான்…” அந்த காவலதிகாரி தயக்கமாக இழுக்க, அவளை அமர சொல்லி ஹிந்தியில் சொல்ல வந்து, “அமருங்கோ மேடம்” என்று கொஞ்சும் தமிழில் சொல்லி, “இதுவும் நல்லாதான் இருக்கு. ஒரு பொண்ணு என் மேல கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கா. வாவ்!” வேதா கொடுத்த குற்றச்சாட்டுக் கடிதத்தை கைக்குள் கசக்கியவாறு கூறினான் ராவண்.
வேதாவோ அதிர்த்துப்போய் அவனையே பார்த்தவாறு நின்றிருக்க, “வேதா, இங்கியிருந்து போகலாம். பயமா இருக்கு” என்று தன் தோழியின் காதை பயத்தில் கடித்தான் விக்ரம்.
வேதா எந்தளவுக்கு மனதளவில் துணிந்தவளோ, அதை விட அதிகமாக பயந்த சுபாவம் உடையவன்தான் விக்ரம். உள்ளுக்குள் பயம் இருந்தாலும் ‘எங்கு வேதா பிரச்சினைகளில் சிக்கிவிடுவாளோ?’ என்ற பயத்திலேயே அவள் பின்னால் திரிபவன், வேதா அவளுடைய துறையில் எடுக்கும் ஒவ்வொரு ஆபத்துக்களிலும் அலறித்தான் போவான்.
“ஹேய்…” என்ற ராவணின் அழைப்பில் விக்ரம் அவனை எச்சிலை விழுங்கியவாறு நோக்க, “கேர்ள் ஃப்ரென்ட் ஆ?” என்று ராவண் வேதாவை கண்களால் காட்டிக் கேட்கவும், மொழி புரியாவிடினும் கேட்ட கேள்வி விக்ரமிற்கு புரிந்தது என்பது அவனின் அவசரமான பதட்டத்துடன் கூடிய ‘இல்லை’ என்ற தலையாட்டலிலே தெரிந்தது.
வேதாவை தலையை சரித்துப் பார்த்தவனுக்கு அவளின் சிவந்த முகத்துடனான முறைப்பு சிரிப்பைத்தான் வரவழைத்தது. இதுவரை எந்த பெண்ணும் அவனுடன் நேருக்கு நேர் நின்று பேசியது கூட இல்லை. ஏதோ ஒரு சுவாரஸ்யம் அவள்மேல். கூடவே, கோபமும்.
மேசையில் இருகைகளையும் அடித்து பெரிய சத்தத்துடன் எழுந்தவன், மூச்சுக்காற்று படும் தூரத்திற்கு மின்னல்வேகத்தில் வேதாவை நெருங்கி நிற்க, அவள் கண்களிலோ கொஞ்சமும் பயம் தெரியவில்லை. அப்போதும் விழிகளை கூட சிமிட்டாது ராவணையே அவள் பார்த்திருக்க, அவளை ஆழ்ந்து நோக்கினான் ராவண்.
“இதுவரைக்கும் எந்த பொண்ணு முன்னாடியும் நான் இப்படி நின்னு பேசியது கிடையாது. ஆம்பிளைங்கள நிமிர்ந்து பார்க்க கூட இங்க பொண்ணுங்க யோசிப்பாங்க. ஆனா நீ… உன் தைரியம் நல்லாதான் இருக்கு. அது எங்களுக்கு பொருத்தமில்லாதது. புது இடத்துக்கு வந்தோமா, ஊர் சுத்தி பார்த்தோமான்னு போயிக்கிட்டே இரு. எங்க விஷயத்துல தலையிடாத! புரியுதா? ஒரு பொண்ணு அப்படிங்குறதாலதான் பேசுறேன். இல்லைன்னா…”
ராவண் ஒற்றைவிரலை நீட்டி மிரட்டிவிட்டு விறுவிறுவென வெளியேற, கோபமாக ஒரு அடி அவனை நோக்கி வைக்கப்போனவளின் நடை விக்ரமின் இறுக்கமான பிடியில் அப்படியே நின்றது.
“ப்ளீஸ், பயமா இருக்கு” விக்ரம் பயந்த குரலில் சொல்ல, கைமுஷ்டியை இறுக்கி கோபத்தை கட்டுப்படுத்தியவள், காவலதிகாரியை முறைத்துவிட்டு வேகமாக வெளியேறி கார்க்கதவை திறந்து பின்சீட்டில் ஏறப்போக, சரியாக அவள் காதில் விழுந்தது, “அரே தமிழ் மிர்ச்சி…” என்ற ராவணின் அழைப்பு.
வேதாவின் உக்கிரமான பார்வை தன் மேல் படிந்ததுமே ஜீப்பின் பொனட்டில் அமர்ந்திருந்த ராவண் சிகரெட்டை பற்ற வைத்தவாறு, “என்கிட்ட ஜாக்கிரதையாவே இரு!” சற்று மிரட்டலாகவே சொல்ல, “சேவேஜ்” பற்களை கடித்து முணுமுணுத்தவாறு காரில் அமர்ந்தாள் வேதா.
அவளின் இதழசைவு அவனுக்கும் புரிய, ஒற்றை புருவத்தை உயர்த்தி தன் அக்மார்க் புன்னகை புரிந்தான் ராவண்.
வீட்டிற்குள் நுழைந்ததுமே அவளையே எதிர்ப்பார்த்து காத்திருந்த சுஜீப்பிற்கு காவல்நிலையத்தில் நடந்தது தன் ஆட்கள் மூலமாக உடனே தெரிய வந்திருந்தது.
யாரையும் பார்க்காது வேதா தனதறைக்குச் செல்லப்போக, “வேதஷ்வினி” என்ற சுஜீப்பின் அழைப்பில் நின்றவள், “இது ஒன்னும் உன் தமிழ்நாடு கிடையாது. எங்க கிராமம். கிளம்புற வரைக்கும் உன் தைரியத்தை உனக்குள்ள வச்சிக்குறது உன் உயிருக்கு நல்லது” என்ற அவரின் வார்த்தைகளில் கோபத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டாள்.
எதுவும் பேசாது அறைக்குள் சென்று அவள் கதவடைத்துக்கொள்ள, தன் மனைவியை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவளிருந்த அறையை விஷம புன்னகையுடன் பார்த்தார் சுஜீப்.
மெஹ்ராவின் வீட்டில்,
“அந்த பொண்ணு யாரு பேட்டா? உன் மேலயே கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கா. உயிரோடவா விட்டு வச்சிருக்க?” வீட்டின் நடுவிலிருந்த பெரிய சோஃபாவில் அமர்ந்தவாறு ராவணின் தந்தை சுனில் மெஹ்ரா அத்தனை கோபத்தோடு தன் மகனிடம் கத்த, “அது பாப்பா, அந்த பொண்ணு ஊருக்கு புதுசு. நம்மள பத்தி தெரியல. இப்போ வார்ன் பண்ணிட்டேன். இனி கண்டிப்பா வர மாட்டா” என்றான் தலைகுனிந்தபடி ராவண்.
வெளியில் சிங்கமாக கர்ஜிப்பவனுக்கு தன் தந்தையிடம் எப்போதும் ஒரு மரியாதையும் பயமும் இருக்கும்.
“ஆனா, ஒரு பொண்ணு அவ நம்மள பத்தி கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கான்னா எவ்வளவு தைரியம் இருக்கணும் அவளுக்கு? இதைப்பத்தி சுஜீப்கிட்ட நான் பேசிக்கிறேன். எதுக்கும் நீயும் அவமேல ஒரு கண்ணு வச்சிக்க” அவர் சொல்ல, தலையசைத்துவிட்டு வெளியே வந்தவனின் இதழ்கள் தன் அடியாள் கொடுத்த வேதா பற்றிய தகவல்கள் அடங்கிய கோப்பிலிருந்த அவளின் புகைப்படத்தை வருடி, “வேதஷ்வினி” என்று முணுமுணுத்தன.