காதல்போர் 07

eiOOLW357649-7ab2cfba

காதல்போர் 07

அந்த பள்ளிக்கூடத்திற்கு அருகிலிருந்த மைதானத்திற்குள் நுழைந்த வேதாவின் முகமோ மக்கள் அமரவென ஓரமாக அமைக்கப்பட்டிருந்த கூடாரத்திற்கு கீழே கிடந்த மதுப்போத்தல்களை பார்த்ததும் அருவருப்பில் அஷ்டகோணலாக மாறியது.

அதில் சில போத்தல்கள் தரையில் சிதறி, நொறுங்கிக் கிடக்க, அதனருகில் சென்றவளுக்கு கோபம் தாறுமாறாக எகிறியது.

‘ச்சீ… இவனுங்களுக்கெல்லாம் அறிவே இல்லை. சின்னபசங்க இதைப்பார்த்தா கெட்டுப் போயிர மாட்டாங்களா? இந்த ஊர் மக்களுக்கு எங்க போச்சு அறிவு? பார்த்துக்கிட்டு தானே இருக்காங்க! அதுசரி, போலிஸே பார்த்துக்கிட்டுதான் இருக்கு’ வாய்விட்டு திட்டியவாறே திரும்பியவள் சட்டென்று எதிலோ மோதி நின்றாள்.

“ஓ ஷீட்!” நெற்றியை நீவிவிட்டவாறு நிமிர்ந்த வேதா, தன்னெதிரே நரம்புகள் புடைத்து சிவந்த கண்களுடன் நின்றிருந்த ராவணைப் பார்த்து சற்றும் அதிரவில்லை. அவளுக்குதான் தெரியுமே!

அவனைப் பார்த்ததுமே அவளுக்கு கோபம் எகிற, “என்னடா நினைச்சிக்கிட்டு இருக்க நீ? உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட அறிவில்லையா? இப்படிதான் ஸ்கூல் பக்கத்துல பசங்க விளையாட வர்ற மைதானத்துல குடிச்சி கூத்தடிப்பீங்களா? அதானே, படிச்சிருந்தா இதெல்லாம் புரிய போகுது. படிப்பறிவு இல்லாததாலதான் இப்படி நடந்துக்குறீங்க. சேவேஜ் மாதிரி” மூச்சு கூட விடாது கத்திக்கொண்டே சென்ற வேதா சட்டென்று ராவண் செய்த செயலில் ஆடிப்போய்விட்டாள்.

ஏற்கனவே அவள் மேல் அத்தனை ஆத்திரத்துடன் இருந்தவன், அவளாக தானாக வந்து சிக்கினாள் சும்மாவா விடுவான்?

வேதா பேசிக்கொண்டே செல்ல, அவளே எதிர்ப்பார்க்காது சட்டென்று அவளைப் பிடித்து இழுத்தவன், அவளிள் தாடையை அழுந்தப்பற்றி அவள் மூக்கோடு மூக்கை உரசும் அளவிற்கு அவளை நெருங்கி நிற்க, முதலில் அதிர்ந்தாலும் பின் சுதாகரித்து அவன் பிடியிலிருந்து விலக முயன்றாள் அவள்.

ஆனால், அவளின் இருகைகளையும் தன் ஒற்றைகரத்தில் அடக்கி, அவள் திமிறலை எல்லாம் இலகுவாகவே முறியடித்தான் ராவண். 

“என்னை விடுடா! விடு” வேதா திமிற, அவனோ சிவந்த கண்களுடன் பற்களை கடித்துக்கொண்டு கோபமாக அவள் விழிகளையே நோக்கினான். அவளைப் பார்க்கும் போது சுனில் பேசிய வார்த்தைகள்தான் அவனுக்கு மீண்டும் மீண்டும் நியாபகத்திற்கு வந்தன.

கண்களை அழுந்த மூடித் திறந்தவன், தன் மொத்த கோபத்தையும் அவள் தாடையை பற்றியிருந்த தன் கரத்தில் காட்ட, வேதாவுக்கோ அந்த வலியை தாங்கவே முடியவில்லை.

“அன்னைக்கு உன்னை பொண்ணுன்னு சாதாரணமா விட்டது தப்பா போச்சு. என் பாப்பா இதுவரைக்கும் இப்படி பேசினது கிடையாது. ஆனா, உன்னால என்னை ரொம்ப அசிங்கப்படுத்திட்டாரு. ச்சே! உன்னை அன்னைக்கே கொன்னிருக்கணும். உன்னை…” வார்த்தைகளை கடித்துத் துப்பியவாறு அவன் பேசிய விதத்தில் அவளுக்கோ உள்ளுக்குள் குளிர் பரவத்தான் செய்தது.

“யாருடி நீ? பொட்டச்சி உனக்கு ஏதுடி இவ்வளவு தைரியம்? எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்துக்குள்ள ஊரை விட்டு போயிரு. இல்லை…” ராவணிண் குரல் மிரட்டலாக ஒலிக்க, தாடையை பற்றியிருந்த அவனின் கரத்திலிருந்த நகங்கள் அவள் கன்னத்தில் பதிந்து காயத்தை உண்டாக்க, அதிலே அவன் கோபத்தின் அளவு வேதாவிற்கு நன்றாக புரிந்தது.

நகங்கள் பதிந்து உண்டான காயத்தில் அவளுக்கு விழிகள் கலங்கிவிட, சிவந்த கலங்கிய விழிகளுடன் அவனை நோக்கியவள், “ப்ளீ…ப்ளீஸ் என்னை வி…விடு” என்று தழுதழுத்த குரலில் திக்கித்திணறி சொன்னாள். அடுத்தகணம் அவள் விழிகளை கோபமாக பார்த்திருந்தவனுக்கு என்ன உணர்வென்றே தெரியவில்லை.

அவனுடைய விழிகள் சற்று தாழ்ந்து அவளிதழ்களை நோக்க, ஏனோ அவளின் அருகாமையில் கட்டுப்பாட்டை இழப்பது போல் அவனுக்கு தோன்றியது.

அவளின் இருகரங்களையும் பிடித்திருந்த ராவணின் கரம் அதை விடுத்து அவளின் இடையை வளைத்து தன்னுடன் அணைத்துக்கொள்ள, தாடையை பற்றியிருந்த கரத்தின் பிடியோ சற்று தளர்ந்தது.

தன்னையும் மறந்து அவன் அவளிதழை நெருங்க, அதை வேதா உணர்ந்தாளோ, இல்லையோ? அவனின் பிடி தளர்ந்ததை மட்டும் நன்றாகவே உணர்ந்தாள். அடுத்தநொடி அவன் மார்பில் கைவைத்து தள்ளிவிட்டவள், தரையில் உடைந்து கிடந்த கண்ணாடித்துண்டை வேகமாக எடுத்து அவன் கைகளில் கீறிவிட்டு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க நின்றிருந்தாள்.

“ஸ்ஸ் ஆஆ…” அவள் வெட்டிய இடத்தை மறுகரத்தால் அழுந்த பிடித்தவனுக்கு ஏனோ சிரிப்புதான் வந்தது. ஒற்றை புருவத்தை உயர்த்தி அவனிதழ்கள் கேலியாக வளைய, ஒரு அடி முன்னே வைத்தவனை பார்த்து, “பக்கத்துல வந்தன்னா அவ்வளவுதான். கொன்னுடுவேன். உன்னையெல்லாம் கொன்னாலும் பாவம் இல்லலை” என்று வேதா மிரட்ட, இடுப்பில் கைக்குற்றி வாய்விட்டு சிரித்தான் ராவண்.

வேதாவிற்கு எதுவுமே புரியவில்லை. அவனையே புரியாமல் பார்த்துக்கொண்டு அவள் நிற்க, “தப்பே பண்ணாலும் அவங்கள தண்டிக்க நீ யாரு மிர்ச்சி? இதை நான் சொல்லல்ல நீதான் சொன்ன” ராவண் சொல்லி புருவங்களை கேள்வியாக உயர்த்த, அதிர்ந்து விழித்தாள் அவள்.

வேதாவை நெருங்கியவன் அவள் கையிலிருந்த கண்ணாடித்துண்டை பிடுங்கி தரையில் போட்டு, “தப்புக்கு தண்டனை கொடுக்க சட்டத்துக்கும் கடவுளுக்கும்தான் உரிமை இருக்குன்னு சொன்ன. ஆனா, இவங்க இரண்டுமே வேடிக்கை மட்டும்தான் பார்ப்பாங்க. ஆபத்துன்னு வரும் போது கடவுள் பார்த்துப்பாருன்னு கையில ஆயுதத்தை எடுக்காம இருந்தா நம்மள உயிரோட புதைச்சிட்டு போயிட்டே இருப்பாங்க” ராவண் சொல்ல, அவளோ இமை சிமிட்டாது அவனையே பார்த்திருந்தாள்.

அவனுடைய பார்வையோ அவளின் கன்னத்தில் பதிந்திருந்த தன் நகங்களினால் உண்டான காயத்தில் படிய, இதழ்களோ கேலியாக வளைந்தன.

அதை உணர்ந்துக்கொண்டவள், அதற்கு மேலும் அங்கு நிற்காது அவனை முறைத்தவாறு விறுவிறுவென அங்கிருந்து செல்ல, கேலியாக வளைந்திருந்த அவனிதழ்கள் சட்டென சுருங்க, இறுகிய முகமாக போகும் அவளையே வெறித்துப் பார்த்தான் ராவண்.

தோட்டத்திலிருந்த இருக்கையில் அமர்ந்திருந்த வேதாவிற்கு நிலைக்கொள்ளவே முடியவில்லை. ‘என்னதான் இருந்தாலும் நீ அப்படி பண்ணியிருக்க கூடாது’ மனம் அவளை கடிந்துக்கொள்ள, மூளையோ, ‘அதுக்காக அவன் அப்படி பண்ணும் போது பார்த்துக்கிட்டு இருக்க முடியுமா? எத்தனைபேரை இரக்கமில்லாம வெட்டியிருப்பான். இப்போ புரியும் அதோட வலி’ மனதிற்கு எதிராக வாதம் புரிந்தது.

சரியாக அவள் பக்கத்தில் வந்தமர்ந்த பத்மாவதியின் விழிகளுக்கு அவள் சிவந்த கன்னங்களிலிருந்த நகக்கீறல்கள் தென்பட, பதறிவிட்டார் அவர்.

“வேதா, என்னாச்சும்மா? இந்த காயம் எப்படி? அதுவும் வேணும்னு யாரோ உன்னை காயப்படுத்தின மாதிரி இருக்கு” பதறியபடி அந்த காயத்தை பத்மாவதி வருடிவிட, அவர் கையை தட்டிவிட்டவள், “ஆமா, இப்போ நான் யாருன்னு சொன்னா போய் கேட்டிருவீங்களா என்ன?” சற்று அடக்கப்பட்ட கோபத்துடனே கேட்டாள்.

அவளை கூர்ந்து நோக்கியவர், “அந்த மெஹ்ரா குடும்பத்து பையன்கூட பிரச்சினை பண்ணியா?” என்று கேட்க, கோபத்தில் பொங்கிவிட்டாள் வேதா.

“ஆமா, எனக்கு வேண்டுதல் பாருங்க, அவன்கூட பிரச்சினை பண்ண. பள்ளிகூடத்துக்கு பக்கத்துல குடிச்சி கூத்தடிக்கிறாங்க. அதை பார்க்கவே முடியல. ச்சீ… இதை சின்ன பசங்க பார்த்தா என்ன ஆகும்? ஒருத்தருக்கு கூடவா கேள்வி கேக்க தோனல?” வேதா பொறுமிக்கொள்ள, அவளின் மறுப்பையும் மீறி அவள் கன்னத்தை மெதுவாக வருடிவிட்டவர், “எதிர்த்து கேள்வி கேட்டா கொன்னுடுவாங்கன்னு ஆம்பிளைங்களே சும்மா இருக்கும் போது பொம்பளைங்க எங்களால என்னதான் பண்ண முடியும்?” என்று கேட்டார்.

அந்த கேள்வியில், “ஏன் முடியாது?” என்ற கேள்விக்கலந்த பதிலோடு வேதா அவரை மூக்குவிடைக்க முறைக்க, பெருமூச்சுவிட்ட அந்த பெரியவருக்கு இவளை எப்படி சமாளிப்பதென சுத்தமாக தெரியவில்லை.

“கோபத்தை கட்டுப்படுத்திக்க வேதஷ்வினி! கோபம் உன்னையே அழிச்சிரும்” பத்மாவதி அழுத்தமாக சொல்ல, “உயிரோட இருந்தும் பொணமா இருக்குறதுக்கு சமம் நீங்க வாழுற வாழ்க்கை” பதிலுக்கு வேதாவும் அதை விட அழுத்தத்தோடு சொல்ல, மென்மையாக விரிந்தன அவரிதழ்கள்.

“நாளைக்கு ஊருக்கு பெரிய ஆஃபீஸர் வர்றாராம். ஊருல இருக்குற முக்கியமான சில பேரு கோவிலுக்கு பக்கத்துல இருக்குற மண்டபத்துல ஊர் மக்களுக்கு இருக்குற தேவைகள பத்தி பேசுவாங்க. இது ஆறுமாசத்துக்கு ஒருதடவை நடக்கும். உன் பாஷையில சொல்லணும்னா பஞ்சாயத்து மாதிரி. ஊர் மக்களுக்கு என்னெல்லாம் தேவையோ அதை கேட்டுப்பாங்க. நாலு மாசத்துக்கு முன்னாடிதான் பாதைய கூட சரி பண்ணாங்க” பத்மாவதி நாளைக்கு நடக்கவிருப்பதை பற்றி பேசிக்கொண்டே செல்ல, வேதாவின் இதழ்களோ விஷமமாக புன்னகைத்தன.

அவள்தான் ஒரு திட்டத்தை தீட்டிவிட்டாள் அல்லவா!

அடுத்தநாள்,

அந்த கிராமத்திற்கு பொறுப்பான அதிகாரி வந்திருக்க, மண்டபத்தில் சுனில், சுஜீப் உட்பட சில முக்கிய ஆண்களோடு ஊர் தேவைகள் பற்றி பேச்சுவார்த்தை நடந்துக்கொண்டிருந்தது.

மண்டபத்தின் ஓரத்தில் ராவண் மற்றும் அவனுடைய நண்பர்கள் நின்றிருக்க, ஆண்கள் மாத்திரமே அந்த இடத்தை சூழ நின்றிருந்தனர்.

“நாங்களும் ஒவ்வொரு தடவையும் மருத்துவமனை கட்டுறதை பத்தி சொல்றோம். ஆனா, நீங்க ஏற்பாடு பண்ற மாதிரி எங்களுக்கு தெரியல” சுனில் சலிப்பாக சொல்ல, “இது ஒன்னு மட்டும் எங்க பார்வையில இல்லை. இது போல பல கிராமங்கள் இருக்கு. பொறுமையாதான் ஒவ்வொன்னா பண்ண முடியும். உங்க அவசரத்துக்கு அரசாங்கத்தால வேலை பார்க்க முடியாது” பதிலடி கொடுத்தார் அந்த அதிகாரி.

“இல்லைன்னா மட்டும் பண்ணி கிழிச்சிருவானுங்க. அன்னைக்கு பள்ளிகூடத்துல படிச்சி கொடுக்க டீச்சர்ஸ் இல்லைன்னு சொன்னப்போ உங்க ஊர் பொண்ணுங்கள படிக்க வைங்க, அவங்க படிச்சி மத்த பசங்களுக்கு கத்து கொடுப்பாங்கன்னு சொல்றான் லூசுப்பயல். பொண்ணுங்கள வேலைக்கு அனுப்பி சம்பாதிக்க வைக்கிற அளவுக்கு ஆம்பிளைங்க நாங்க என்ன இளக்காரமா போயிட்டோமா?” என்று அருகிலிருந்த தன் நண்பர்களிடம் பொறுமிக்கொண்டான் ராவண்.

“நானும் ரொம்பநாளா உங்ககிட்ட இதைப்பத்தி பேசுறேன். உங்க ஊர் தேவைகள பூர்த்தி செய்ய இவ்வளவு பேசுற நீங்க ஏன் உங்க ஊர் பொம்பளைங்களோட தேவைய பூர்த்தி செய்ய இவ்வளவு யோசிக்கிறீங்க? எழுத படிக்க தெரிஞ்சா மட்டும் போதுமா என்ன?” அந்த அதிகாரியின் வார்த்தைகள் அடக்கப்பட்ட கோபத்தோடு வர, அவரை அலட்சியமாக ஏறிட்டனர் மற்றவர்கள்.

“இங்க பாருங்க ஐயா, எங்க வீட்டு பொம்பளைங்களுக்கு என்ன தேவைன்னு எங்களுக்கு தெரியும். அதுல நீங்க தலையிடாதீங்க. ஊருக்கு என்ன தேவையோ அதை மட்டும் செஞ்சி கொடுங்க போதும்” சுஜீப் சொல்ல, சுனிலோடு சேர்த்து மற்ற ஊர் தலைவர்களும் ஆமோதிப்பதாக தலையசைக்க, இருபக்கமும் சலிப்பாக தலையாட்டினார் அந்த அதிகாரி.

அவரும் ஒவ்வொரு தடவையும் இந்த ஊர் ஆண்களிடம் பெண்களுக்கான கல்வியை பற்றி பேசி சோர்ந்துத்தான் போகிறார்.

அதற்குமேல் வாதிட விரும்பாது அவர்களுக்கான தேவைகளை பேசிவிட்டு, “அப்போ இவ்வளவுதானே உங்க கோரிக்கைகள்? எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் உங்க கோரிக்கள அரசாங்கம் நிறைவேற்றும்” என்றுவிட்டு எழப்போனவர், “ஆப்ஜெக்ஷன் சார்” என்ற பெண்ணின் குரலில் அப்படியே நின்றுவிட்டார்.

குரல் வந்த திசையை எல்லோருமே ஒருசேர திரும்பிப் பார்க்க, “இங்கேயும் வந்துட்டாளா இந்த தமிழ் மிர்ச்சி!” என்று வாய்விட்டே சொல்லியவாறு அவளை புருவத்தை நீவிவிட்டவாறு எரிச்சலாக நோக்கினான் ராவண்.

சுனிலோ சட்டென்று திரும்பி சுஜீப்பை பார்க்க, அவருக்கோ அத்தனை சங்கடம்!

‘இவ அடங்கவே மாட்டாளா? என் மானமே போகுது’ மனதிற்குள் புலம்பியவாறு அவர் தலைகுனிந்து அமர்ந்திருக்க, தன்னையே அதிர்ந்து பார்த்துக்கொண்டிருந்த அந்த அதிகாரியின் முன் வந்து நின்றாள் வேதா.

அவருக்கோ ஆச்சரியம்! இந்த ஊரைப்பற்றி அவருக்கும் தெரியுமல்லவா? சாதாரணமாக நிமிர்ந்து பார்க்காத பெண்கள் வாழும் ஊரில் இத்தனை ஆண்கள் மத்தியில் தைரியமாக பேசும் ஒரு பெண்ணை இப்போதுதான் பார்க்கிறார் அவர்.

வேதாவோ அவரின் அதிர்ந்த பாவனையெல்லாம் கண்டுக்கொள்ளாது, “ஹெலோ சார், ஐ அம் வேதஷ்வினி நரேந்திரன். சென்னையில ***** பத்திரிகை நிறுவனத்துல ரிபோர்ட்டரா வர்க் பண்றேன். என்னோட கோரிக்கையையும் நான் சொல்லலாமா?” என்று நேராக விஷயத்திற்கே வர, அதிர்ச்சியிலிருந்து தன்னை மீட்டி புன்னகையுடன் தலையசைத்தார் அவர்.

ஆனால், வேதா பேசுவதற்குள், “ஹ்ர்ம் ஹ்ர்ம்… வேதஷ்வினி, இங்க இத்தனை பேர் இருக்கோம். உங்களுக்கான கோரிக்கைகளையும் நாங்களே சொல்லிருக்கோம். நீ இதுல தனியா எதுவும் சொல்ல அவசியம் இல்லை. வீட்டுக்கு போ!” சுனில் இடைவெட்டி பேச, அவரை மேலிருந்து கீழ் ஒரு பார்வை பார்த்தவள் சற்றும் அவர் பேச்சை கண்டுக்கொள்ளவில்லை.

“சார், இங்க ஒரு வயசு வரைக்கும்தான் பொண்ணுங்கள பள்ளிக்கூடத்துக்கு அனுப்புறாங்க. கல்வியில கூட இங்க ஆண், பெண்ன்னு  பாகுபாடுதான். பொண்ணுங்களும் படிக்கணும். இந்த நிலைமைய சரிபண்ண சரியான நடவடிக்கைய நீங்கதான் எடுக்கணும்” வேதா சொல்ல, கேலியாக சிரித்தவர், “இந்த கோரிக்கை தேவையே இல்லை. இதை பத்தி நானே பலதடவை பேசியிருக்கேன். ஆனா, உங்க ஊர்மக்கள் அதுக்கு ஒத்துக்கணுமே! முக்கியமா பொண்ணுங்களே தங்களோட தேவைகள கேட்டு முறையிடாம இருக்குறப்போ எங்களாலேயும் எதுவும் பண்ண முடியாது” என்று சொல்லி முடிக்க, வேதாவின் புருவங்கள் யோசனையில் சுருங்கின.

“ஏய் மிர்ச்சி, எங்கள மீறி எந்த பொம்பளைங்களும் எதுவும் பேச மாட்டாங்க. இதுல வாய திறந்து எதிர்ந்து பேசிட்டாலும்… சோ, ஊர் சுத்தி பார்க்கதானே வந்த? அந்த வேலைய மட்டும் பாரு!” ராவண் கேலியாக சொல்லி சிரிக்க, சுற்றியிருந்தவர்களும் அவளை ஏளனச்சிரிப்புடன் நோக்கினர்.

கீழுதட்டை கடித்து கோபத்தை அடக்கியவளை பார்த்த அந்த அதிகாரி, “ஒன்னு பண்ணலாம் மிஸ்.வேதஷ்வினி. இங்க இருக்குற பொண்ணுங்ககிட்ட கல்வியோட அவசியத்தை புரிய வைங்க. ஆரம்பத்துல புரிஞ்சிக்க மாட்டாங்கதான். ஆனா, நீங்க சொல்றதை புரிஞ்சிக்கிட்டு ஒரு பொண்ணு தைரியமா முன்னாடி வந்து நின்னாலும் அதுவே உங்களுக்கான வெற்றிதான். ஒருத்தர் வந்தா போதும். பின்னாடி ஒரு கூட்டமே வர வாய்ப்பிருக்கு. ஆல் த பெஸ்ட்” என்று ஆங்கிலத்தில் உரைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறியிருக்க, தரையையே வெறித்தவாறு நின்றிருந்தாள் வேதா.

“அந்த பெரிய மனுசன் இங்லீசுல பேசினா எங்களுக்கு புரியாதா என்ன? பெருசா என்ன சொல்லியிருக்க போறாரு. போராடி காரியத்தை சாதிக்க பாருன்னு சொல்லியிருப்பாரு. இவ பேச்சை கேட்டு எங்க ஊர் பொண்ணுங்க எங்கள எதிர்த்து நிப்பாங்களா என்ன? இல்லை, அப்படி நிக்க நாங்களும்தான் விட்டுருவோமா?” சுனிலின் வார்த்தைகளில் அத்தனை கேலி!

சுஜீப்போ அவளை முறைத்துவிட்டு சுனிலின் பின்னே விறுவிறுவென செல்ல, வேதாவின் முன்வந்து நின்ற ராவணோ ஒற்றை புருவத்தை உயர்த்தி தன் அக்மார்க் புன்னகை புரிந்தவாறு, “இதெல்லாம் பகல் கனவுதான் மேரா தமிழ் மிர்ச்சி” என்றுவிட்டு உச்சுக்கொட்டியவாறு நகர, கோபமாக தரையை உதைத்தாள் வேதா.

Leave a Reply

error: Content is protected !!