Uyir Vangum Rojave–EPI 7

ROSE-106f51a4

அத்தியாயம் 7

இந்த நிமிடம் நீ என்னைக் காண துடித்தால்

உன் இமைகளை மெதுவாக மூடு

உன் இதயம் துடிக்கும் தூரத்தில்

நான் வந்து நிற்பேன்

(ஷாலினிபிரியாத வரம் வேண்டும்)

 

தலையில் அளைந்து விளையாடிய விரல்களின் ஸ்பரிசத்தில் பட்டென எழுந்த லாவண்யா, முடியை விலக்கிவிட்டு கார்த்திக்கை ஏறிட்டுப் பார்த்தாள். கண்ணில் மின்னல் தெறித்தது. சத்தம் போட்டு மற்றவரை கூப்பிடாமல் தானே அவனை சமாளிக்க ரெடியானாள் அவள்.

“என்னடா பண்ணுற?”

“வந்து லட்டு..” என திக்கினான் கார்த்திக்.

“லட்டுன்னு கூப்பிடாதன்னு சொன்னா உன் மண்டைக்கு ஏறாதா? நான் எங்க அண்ணான்னு நினைச்சி தலை துவட்ட சொல்லிட்டேன். நீ என்ன செஞ்சிருக்கணும்?”

“என்ன செஞ்சிருக்கணும்?”

“நான் உங்க அண்ணன் இல்ல. கார்த்திக் மங்குஸ் மண்டையன் அப்படின்னு சொல்லியிருக்கனும். ஆமாவா இல்லலையா?”

‘மங்குஸ் மண்டையா? அப்படின்னா என்னாது? சேர்ச் பண்ணி பாக்கனும். இன்னும் என்னமோ பேசுறாளே, கவனிப்போம்’

“ஆனா நீ, இதான் சாக்குன்னு என் தலையில்ல கைய விட்டு புதையல் எடுத்துகிட்டு இருக்க. இங்க பாரு கார்த்திக், பார்க்க தான் நான் சாதுவா இருப்பேன். என்னை சீண்டுன அப்புறம் சங்கை கடிச்சு வச்சிருவேன். இருக்கற வரைக்கும் உன் வாலை சுருட்டிகிட்டு இரு. “ கை நீட்டி மிரட்டிவிட்டு உள்ளே சென்று விட்டாள்.

‘சங்க கடிச்சிருவாளா? இவ என்ன மனுஷியா இல்ல மாய மோகினியா? எதுவா இருந்தாலும் அவ தா என் மனசுக்கேத்த மனைவி. வாவ். காதல் வந்தவுடனே நல்லா ரைமிங்கா பேச வருதே. அப்படியே ஒரு காதல் கவிதைய எழுதி அவ கிட்ட கொடுத்துற வேண்டிதான்’  தலை துவட்டியதற்கு யாரிடமும் அவள் போட்டு கொடுக்காத தைரியத்தில் அடுத்த ஸ்டெப் எடுக்க ஆயத்தமானான் கார்த்திக்.

இரவு உணவு சாப்பிட்டுவிட்டு அனைவரும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் லயித்திருந்தார்கள். வேந்தன் வாங்கி வந்திருந்த சுடிதார்களை தங்கைகளுக்குக் கொடுத்தான். சாதாரண அந்த உடைகளுக்கே அவன் தங்கைகள் ஆரவாரப்படுத்திவிட்டனர். வாங்கி கொடுத்த அண்ணனின் பாசம் தான் கண்ணுக்கு தெரிந்ததே தவிர துணியின் தரம் அங்கே இரண்டாம் பட்சமாக தான் இருந்தது.

“அம்மா, தங்கச்சிங்களுக்கு வாங்க தான்மா கையில பணம் இருந்தது. சேலை வாங்க பணம் பத்தலமா. தீபாவளிக்கு உனக்கு எடுத்து குடுக்கறேன்மா” என்றான் வேந்தன்.

“பரவாயில்ல விடுடா. இப்பா நான் என்ன வயசு குமரியா

‘சிங்குச்சா சிங்குச்சா

 செகப்பு கலரு சிங்குச்சா
பச்சை கலரு சிங்குச்சா
மஞ்சள் கலரு சிங்குச்சா’ ன்னு சேலைய கட்டிக்கிட்டு பாட்டுப் பாட?  அடுப்புல கிடந்து வேகுற எனக்கு எதுக்கு புது புடவை? எல்லாம் இருக்கறது போதும்” என சாதாரணமாக சொன்னார்.

உள்ளே எழுந்து சென்ற கார்த்திக் கையில் ஒரு பாக்கேட்டுடன் வந்தான்.

“இந்தாங்கம்மா. பொங்கலுக்கு வரோம், வெறும் கையோட வர கூடாதுன்னு உங்களுக்கு வாங்கி வந்தேன்” என இந்துவிடம் அந்த கவரைக் கொடுத்தான்.

“இந்த சம்பிரதாயமெல்லாம் எதுக்குப்பா? “ என வாங்க தயங்கினார் இந்து.

“எங்க அம்மாவுக்கு குடுக்க முடியலை. அதனால என் மன திருப்த்திக்கு உங்களுக்கு குடுக்குறேன். மறுக்காம வாங்கிக்கங்கம்மா” என வற்புறுத்தினான்.

வாங்கி கொண்ட இந்து, கவரைப் பிரித்துப் பார்த்தார். அதில் வெங்காய கலரில் அழகான காட்டன் சாரி இருந்தது. புடவையைத் தடவி பார்த்த பொழுதே தெரிந்தது விலையான புடவை என்று. அனுவும் லாவண்யாவும் அந்த புடவையைப் பிரித்து அவர்கள் மேல் போட்டுப் பார்த்துக் கொண்டார்கள்.

“குடுங்கடி அந்த புடவைய. தம்பி எனக்கு வாங்கி வந்துருக்கு. அதுக்கும் போட்டிக்கு வந்துருவீங்க. நான் முதல்ல கட்டிக்கிறேன். அப்புறமா நீங்க ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு நாளைக்குக் கட்டிக்கிங்க. எவ்வளவு துணி வச்சிருந்தாலும் இந்த பொம்பள புள்ளைங்களுக்கு அம்மாவோட துணிய ஆட்டய போடுறதுல ஒரு தனி சந்தோஷம்.”

சின்ன சின்ன விஷயங்களிலே அவர்கள் சந்தோசம் அடைவதை ஒரு ஆச்சரியத்துடன் பார்த்தான் கார்த்திக். எவ்வளவு பணம் இருந்தும் ஒரு திருப்தி இல்லாமல் இன்னும் பணம், பணம் என் ஓடும் தன் தந்தையை நினைத்துக் கொண்டான். வாயிலிருந்து உதடு வரை கசந்து வழிந்தது அவனுக்கு.

“என் கூட தானடா வந்தே. எப்ப இந்த சேலைய வாங்குன?” என நண்பனைப் பார்த்து கேட்டான் வேந்தன்.

“நீ கூட்டிட்டு போறேன்னு சொன்ன அன்னிக்கு சாயந்திரமே போய் வாங்கி வந்துட்டேன். உன் கிட்ட சொன்னா எதுக்குடா இந்த செலவுன்னு தடுத்துருவ. அதான் சொல்லலை.”

“ஒரு சேலை வாங்கி குடுத்து எங்க அம்மாவோட நன்மதிப்ப வாங்கிட்டடா”

‘அட போடா. மதிக்க வேண்டியவ என்னை லூசு, மங்குஸ் மண்டையான்னு கூப்புடறா. இத நான் எங்க போய் சொல்ல. உன் கிட்ட சொன்னா வீட்டை விட்டே, இல்ல இல்ல நாட்ட விட்டே துரத்திருவ.’ என புலம்பிக் கொண்டே ஹோலில் விரித்து வைத்திருந்த பாயில் போய் படுத்தான். ஹாலில் மாட்டியிருந்த வேந்தன் மாமாவின் குடும்ப படத்தில் அவன் பார்வை நிலைத்தது. ஒல்லியாக அவன் மாமாவும், பூசணிக்காய் என் தங்கச்சிதான் என சொல்லும் அளவுக்கு பெரியதாக அவன் அத்தையும் அவர்கள் நடுவில் மாநிறத்தில் அழகாக அவர்கள் மகனும் நின்றிருந்தனர்.

‘இவன்தான் அத்தை பெத்த சொத்தையோ? பார்க்க நல்லா தான் இருக்கான். லட்டுக்கு வேற அத்தான் முறை. இவ மனசு அவன் கிட்ட சாஞ்சுருமோ. பக்குன்னு இருக்கே. நல்ல வேளை ஹோஸ்டல்ல தங்கி படிக்கிறா. இங்கயே இருந்தான்னா நான் வயித்துல நெருப்ப கட்டிக்கிட்டு இருக்கனும். போகிறதுகுள்ள அவ மனசுல சின்ன சலனத்தையாவது விதைச்சுட்டு போயிறனும்’ என நினைத்துக் கொண்டே படுத்திருந்தான்.

முகத்தில் எதுவோ பறந்து வந்து விழுந்ததில் பதறி போய் எழுந்து அமர்ந்தான். அவன் மடியில் போர்வை விழுந்து கிடந்தது. நிமிர்ந்து பார்த்தவன் கண்களுக்கு சிரித்தபடி நின்று கொண்டிருந்த லாவண்யா தெரிந்தாள்.

“உனக்குத்தான் போர்வை. ராத்திரியில குளிரும், போர்த்திக்கோ.” என்றவள் தோளில் முகவாயை இடித்துக் கொண்டே நகர்ந்துவிட்டாள்.

அவள் செய்கையில் அப்படியே சொக்கி போய் அமர்ந்திருந்தான் கார்த்திக். பக்கத்தில் கணைக்கும் சத்தம் கேட்டது.

“நம்ப தங்கச்சிய எவ்வளவு நேரமா உத்துப் பார்ப்ப? படுடா.” என பக்கத்தில் படுத்திருந்த வேந்தனின் குரலில் மீண்டும் படுத்துக் கொண்டான் கார்த்திக்.

‘இவன் ஒருத்தன். தங்கச்சி தங்கச்சின்னு சொல்லியே கொல்லுறான்.’

மறுநாள் அழகாக விடிந்தது. மாவிலை தோரணம் கட்டி வேந்தனின் குடும்பம் பொங்கலை கொண்டாட ஆயத்தமாகியது. புத்தாடை உடுத்தி புது சட்டியில் பொங்கலை பொங்கினார் இந்து. கை வேலையை செய்தாலும் வாய்,

“தைப்பொங்கலும் வந்தது பாலும் பொங்குது
பாட்டு சொல்லடியோ
வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியில் போற்றி சொல்லடியோ
இந்த பொன்னி என்பவள்
தென் நாட்டவருக்கு அன்பின் அன்னையடி
இவள் தண்ணீர் என்ற ஆடை கட்டிடும்
தெய்வ மங்கையடி’

என பாடினார்.

பொங்கலோ பொங்கல் என கத்தி சந்தோசமாக தைப்பாவையை வரவேற்றார்கள். காஸ் அடுப்பில் மட்டுமே பொங்கல் பொங்கியதை பார்த்திருக்கும் கார்த்திக்குக்கு இவையெல்லாம் அதிசயமாக இருந்தது. சூரியனை வணங்கி விட்டு , வீட்டிலுள்ள தெய்வங்களையும் வணங்கியவர்கள், இந்துவின் பாதத்தைப் பணிந்து ஆசிர்வாதம் வாங்கி கொண்டனர். கார்த்திக்கும் எந்த வித கூச்சமும் இன்றி இந்துவின் பாதம் தொட்டு வணங்கினான்.

“சகல பாக்கியங்களும் பெற்று நல்லா இருப்பா” என வாழ்த்தினார் அவர்.

‘யாரோ ஒரு பாக்கியம் வேண்டாம் எனக்கு. உங்க மக லாவண்யா தான் வேணும்’ மைன்ட் வாய்ஸ் தான். நேரா சொன்னா பொங்கல் அவன் முதுகுல பொங்கிருமே.

பின்பு ஒன்றாக அமர்ந்து காலை உணவை உண்டார்கள் அவர்கள். ஒருத்தரை ஒருத்தர் கிண்டல் அடித்துக் கொண்டும் பாடிக் கொண்டும் அவர்கள் ஒன்றாக இருக்கப் போகும் நேரத்தை பொக்கிஷமாக கொண்டாடினார்கள்.

மாலை நெருங்கும் நேரத்தில் தன் நச்சரிப்பை ஆரம்பித்து விட்டாள் லாவண்யா.

“அம்மா, பொங்கல் ரிலீஸ் படம் பார்க்க போகலாம்மா. ப்ளீஸ்”

“சொன்னா கேளுடி. வெளிய போனா வீண் செலவு தான். டீவியில தான் நல்ல படம் போடுறாங்களே பார்க்க வேண்டி தானே.”

“போம்மா, லீவ் முடிஞ்சு வர என் கூட்டாளிங்க எல்லாம் புது படத்த பத்தி கதை கதையா எடுத்து விடுவாளுங்க. நான் மட்டும் பேன்னு முழிக்கனும். ப்ளீஸ் மா. நான் கொஞ்சம் ஸ்கோலர்ஷிப் காசுல மிச்சம் பிடிச்சு வச்சிருக்கேன்.” என கெஞ்சினாள்.

அனுவும் தான் சேர்த்து வைத்திருந்த பணத்தை எடுத்து வந்து கொடுத்தாள். பிள்ளைகளின் சந்தோசத்துக்காக இந்துவும் உளுந்து டப்பாவில் போட்டு வைத்திருந்த பணத்தை எடுத்து வந்து கொடுத்தார்.

இப்பொழுது மாதிரி கிஎஸ்டி, புக்கிங் பீ எல்லாம் இல்லாததால் அவர்களால் படம் பார்க்க பணத்தைப் புரட்ட முடிந்தது. ஷேர் ஆட்டோவில் தொற்றி கொண்டு குடும்பமாக தியேட்டருக்கு சென்றார்கள் அவர்கள். பெண்கள் அனைவரையும் உள்ளே விட்டு ஆண்கள் இருவரும் இடமும் வலமும் அமர்ந்து கொண்டார்கள். கார்த்திக் பக்கத்தில் இந்து தான் அமர்ந்தார். முன்னிருக்கையில் உள்ளவர் வளர்த்தியாக இருப்பதால் படம் தெரியவில்லை என்று இந்துவிடம் இருக்கையை மாற்றிக் கொண்டாள் லாவண்யா. கார்த்திக் சிறகில்லாமல் வானத்தில் பறந்தான். படம் தொடங்கியதும், விசிலடித்து கத்தி கைத்தட்டி ஆர்ப்பாட்டம் செய்தாள் லாவண்யா. அவள் அலப்பறையை அணுஅணுவாய் ரசித்தான் அவன். எல்லோர் கண்களும் ஸ்கிரினில் இருக்க இவன் பார்வை மட்டும் அவள் மேலேயே இருந்தது.
திடீரேன தொடையில் யாரோ வலிக்க கிள்ளியதில் கத்துவதற்கு வாயைத் திறந்த கார்த்திக் லாவண்யாவின் முறைப்பில் வாயைக் கப்பென மூடிக் கொண்டான்.
“கண்ணை ஸ்கிரின்ல வை. இதுக்கு மேல என்னை முறைச்சு பார்த்த இன்னும் அழுந்த கிள்ளி கால் கிலோ சதைய எடுத்துருவேன்” என அவன் காதோரம் குனிந்து மிரட்டினாள்.
அவளது மூச்சுக் காற்று காதோரம் மீட்டிய ராகத்தில் மெய் மறந்து போனான் அவன். அந்த புது அனுபவத்தைக் கொண்டாடியே தீர வேண்டுமென , இடைவேளையின் போது பாப்கார்ன், கோக், காப்பி, சமோசா, ஐஸ்கிரிம் என அவர்களுக்கு வாங்கி தள்ளிவிட்டான் கார்த்திக்.
வீட்டிற்கு வந்தும் அவனுக்கு உற்சாகம் அடங்கவில்லை. எல்லோரும் களைப்பில் உறங்கி விட்ட போதும் இவன் மட்டும் கொட்ட கொட்ட விழித்திருந்தான். பாதி ராத்திரியில் கொலுசொலி கேட்டு எழுந்து அமர்ந்தான் கார்த்திக். கால் கொலுசின் ஒலியிலே அது லாவண்யா தான் என கண்டு கொண்டான். பாத் ரூம் சென்றவள் வருவதற்காக வெளியே காத்து நின்றான் அவன். அவள் வெளியே வரவும் மெல்ல லாவண்யா என அழைத்தான்.
திடீரென குரல் கேட்ட பயத்தில் கத்த முற்பட்டவள் வாயில் கை வைத்துப் பொத்தியவன்,
“ கத்தாதே, நான் தான் கார்த்திக்” என்றவன் அவள் வாயிலிருந்து கையை விலக்கினான்.
“பேய் நடமாடுற நேரத்துல இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க?” என சிடுசிடுத்தாள் அவள்.
“ தூக்கம் வரல. உன்னை பார்த்ததும் பேசலாம்னு வந்தேன்”
“என்ன பேசனும்?”
“ அது வந்து லாவ், ஐ லவ் யூ” என பட்டென சொன்னவன் அவள் கையில் ஒரு காகிதத்தை திணித்தான்.
எப்பொழுதும் பட பட பட்டாசென பொரியும் லாவண்யா இப்பொழுது வாயடைத்துப் போனாள்.
சட்டென தன்னை மீட்டெடுத்துக் கொண்டவள்,
“ பாத்ரூம் வாசல்ல நின்னு ரொமண்டிக்கா ஐ லவ் யூ சொன்ன முத ஆளு நீயாதான் இருப்ப. கர்மம்” என கடிந்து கொண்டாள்.
“ஏண்டா, இப்படி ஒள்ளிக்குச்சி மாதிரி இருக்கற உனக்கெல்லாம் காதல் ஒரு கேடா? உன் முகத்த ஒரு தடவையாவது கண்ணாடில நல்லா உத்துப் பார்த்திருக்கியா? நீயும் உன் சோடா புட்டி கண்ணாடியும். கலர் மட்டும் வெள்ளையா இருந்துட்டா போதுமா? மூஞ்சில ஒரு களை வேணா? இரு, லெட்டருல என்ன எழுதியிருக்கன்னு பார்க்குறேன். ஓ கவிதையா?
“என் செல்லக்குட்டி லட்டு
நீ ஒரு அழகு பட்டு
இம்முன்னு சொல்லு சிட்டு
உன் நெத்தியில வைப்பேன் பொட்டு”
படித்தவள் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தாள். பின் கஸ்டப்பட்டு வாயைத் தன் கையால் பொத்திக் கொண்டாள் எங்கே சத்தம் கேட்டு மற்றவர்கள் வந்து விடுவார்களோ என்ற பயத்தில். அப்படியும் கண்ணில் சிரிப்பினால் நீர் வழிந்தது.
“ உன் கவிதையும் உன்னை மாதிரியே மொக்கையா இருக்கு “ என அவனைக் கடுப்பேற்றினாள்.
பாவமாக நின்றிருந்தான் கார்த்திக்.
“ இரு இரு . இப்பவே உனக்கு பதில் கவிதை குடுக்குறேன்” என்றவள் டெலிபோன் பக்கத்தில் இருந்த நோட்டைக் கிழித்து மட மடவென கிறுக்கினாள். பின் அவன் கையில் திணித்து,
“ இது தான் என் பதில். இனிமே லவ்வு கிவ்வுன்னு என் பின்னால சுத்தாதே” என கை நீட்டி மிரட்டினாள்.
அவள் கொடுத்ததை படித்தவனுக்கு அவ்வளவு கோபம் வந்தது. அவள் கைப்பற்றி தன் புறம் இழுத்தவன், தன் இரு கரங்களாலும் அவள் கன்னங்களை அசையாமல் பிடித்துக் கொண்டான். பயத்தில் உதடு நடுங்க நின்றிருந்தவளை நோக்கி குனிந்தவன், அவள் விழிகளில் தெரிந்த அச்சத்தில் சற்று நிதானித்தான். உதட்டை நோக்கி குனிந்தவன் தன் முடிவை மாற்றி அவள் இரு கன்னத்திளிலும் மாறி மாறி அழுந்த முத்தமிட்டான்.
பின் தானாகவே அவளை விடுவித்தவன்,
“ லட்டு, இப்படி நடந்துக்கனும்னு நான் நினைக்கவே இல்லை. நீ என்னை ரொம்ப கேவலமா பேசவும் கோபம் வந்துருச்சு.நான் இப்படி செஞ்சது தப்புதான். இருந்தாலும் நான் சாரி கேட்க போறதில்லே. என்னிக்கு இருந்தாலும் நீ தான் என்னோன வைப். நான் தான் உன்னோட ஹஸ்பண்ட். எங்க இருந்தாலும் உன்னை வாட்ச் பண்ணிகிட்டே இருப்பேன். அதனால ஆளை மாத்தனும்னு மட்டும் நினைக்காதே. உன் படிப்பு முடிஞ்சதும் கண்டிப்பா உன்னை தேடி வருவேன். அதை யாரும் தடுக்க முடியாது. லாஸ்டா சொல்லுறேன், யூ ஆர் மைன்” மெல்லிய குரலில் ஆனால் உறுதியாக சொன்னான் கார்த்திக்.
எங்கிருந்து தான் அவ்வளவு கோபம் வந்ததோ அவளுக்கு, பளாரென ஒன்று விட்டாள் அவனுக்கு.
“நீயும் நல்லா கேட்டுக்கடா, ‘ஐ ஹேட் யூ’. ஆனா என்னுக்கி இருந்தாலும் நீ தான் என் ஹஸ்பண்ட். அதுக்கு அப்புறம் நான் குடுக்கிற டாச்சருல நீ சாமியாரா போகல, என் பேர கோவண்யான்னு மாத்தி வச்சிக்கிறேன்” என சவால் விட்டாள் அந்த மினி சைஸ் கண்ணகி.
“என் கிட்ட மயங்கி அத்தான் பொத்தன்னு என் பின்னால உன்னை சுத்த வைக்கல கார்த்திக்கின்ற பேர கோர்த்திக்னு மாத்தி வச்சிக்கிறேன்” என அவனும் சிலிர்த்துக் கொண்டான்.
அதோடு அவன் புறப்படும் வரை அவன் முன்னே வரவேயில்லை லாவண்யா. மனதில்
ஒரு வலியோடு அங்கிருந்து ஹாஸ்டலுக்கு கிளம்பி சென்றான். அதன் பிறகு அவன் வாழ்க்கையிலும் ஆயிரத்தெட்டு பிரச்சனைகள். அவள் முகத்தை நினைத்து கொண்டே  அத்தனையையும் கடந்து வந்தான்.
பிளாஸ்பேக்கிலிருந்து வெளியே வந்தவன் அவள் எழுதிய கவிதையை மீண்டும் ஒரு முறை சலிக்காமல் படித்தான்.
“அடே கண்ராவி டிக்கேட்டு
நீ ஒரு விளங்காத ஸ்டுப்பிட்டு
என் கிட்ட இனிமே வாலை ஆட்டு
போட்டுருவேன்டா அருவா வெட்டு”

 

உயிரை வாங்குவாள்….