காதல் சதிராட்டம்💜15💜

காதல் சதிராட்டம்💜15💜

தண்ணீரில் அழும் மீனின் கண்ணீர்த்துளிகள் எப்படி வெளியே தெரியாதோ அதே போல தான் வினய்யின் கண்களும் யாருக்கும் அறியாமல் கண்ணீர் சிந்திக் கொண்டு இருந்தது. முகம் பாறையாக இறுகிப் போய் இருந்தது.  நீரினில் இருந்து வெளியே வந்தவன் ஆதிராவின் முகத்தையே இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான்.

இனிமேல் அவளை இவ்வளவு அருகில் பார்க்க முடியுமோ? என்னமோ?

அதனால்  ஒரு நொடி கூட இமைக்காமல் அவள் முகத்தை விழுங்கிக் கொண்டு இருந்தான்.

அவள் தன்னை விட்டு செல்வதில் கூட அவனுக்கு பெரியதளவு வருத்தமில்லை. ஆனால் கடைசி வரை தன்னையும் தன் காதலையும் புரிந்து கொள்ளாமல் செல்கிறாளே என்பது தான் அவனை அதிகமாய் பாதித்தது.

வினய்யின் வெறுமையான பார்வையை ஆதிரா பார்த்ததும் அவளுக்குள் ஏதோ ஒரு மாதிரி இருந்தது. அவனை இதுவரை  இப்படி உடைந்துப் போய் பார்த்ததில்லை.

அதுவும் அந்த முகம் உலகத்தின் வருத்தத்தை எல்லாம் மொத்தமாய் பிரதிபலிப்பது போல் வாடிப் போய் கிடந்தது.

அவன் பார்வையை மேலும் எதிர் கொள்ள முடியாமல் முகத்தைத் திரும்பிக் கொண்டவள் அங்கிருந்து செல்ல முயற்சித்தாள்.

ஆனால் ஏற்கெனவே காலில் ஏற்பட்ட காயத்தால் அவளால் நடக்க முடியாமல் தடுமாறி தடுமாறி நடந்தாள். அதைக் கவனித்த வினய் உத்ராவிடம் திரும்பினான்.

“ஆதிராவை கையைப் பிடிச்சு கூட்டிட்டு போய் உள்ளே விடு உத்ரா. கிச்சன்க்கு பக்கத்துல இருக்கிற கபோர்ட்ல மருந்து இருக்கு.. அதை எடுத்து ஆதிராவோட காலிலே போடு… ” என்று வினய் வேகமாக உத்ராவிடம் சொல்லிவிட்டு தன் அறைக்குள் புகுந்து கொண்டான்.

செல்லும் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள் ஆதிரா. அவனது முகத்தைக் காணும் போது  இனம்பிரிக்க முடியாத ஒரு உணர்வில் அவள் இதயம் தகித்துக் கொண்டு இருந்தது.

என்ன தான் அவன் மீது வெறுப்பு இருந்தாலும் அவளையும் அறியாமல் அவனுக்காக வருத்தப்படுவது அவளுக்கே புதியதாக இருந்தது.. புதிராகவும் இருந்தது.

இது என்ன?

என் வெற்றியை நானே கொண்டாட முடியாமல் இப்படி  இதயம் திண்டாடுகிறதே..

முட்டாள் மனமே இந்த சிறையில் இருந்து நீ இனி விடுபட போகிறாய்.  உனக்கே உனக்கான காதல் வானில் பறக்கப் போகிறாய், அதுவும் வைபவ்வுடன்.

அதை நினைத்து சந்தோஷப்படாமல் இப்படி கவலைப்பட்டுக் கொண்டு இருக்காதே என மூளை சொல்ல  தலையை உலுக்கி தன் நினைவை அவனிடம் இருந்து மீட்டுக் கொண்டாள் ஆதிரா.

உத்ராவின் கைகளை பிடிமானமாக பற்றிக் கொண்டு தன் அறைக்குள் வந்தவள் கட்டிலின் மீது அமர உத்ரா மருந்தை எடுத்து ஆதிராவின் கால்களில் தடவிவிட்டபடி

“அண்ணி நல்லா படுத்து ரெஸ்ட் எடுங்க… சீக்கிரமா வலி போயிடும்… ”  என்றாள்.

“எனக்கு வலி எல்லாம் அவ்வளவா இல்லை உத்ரா. இப்பவே என்னோட  எல்லா பொருளையும் எடுத்து வைச்சா தான் சயாந்திரம் சீக்கிரமா கிளம்ப முடியும்.. இல்லைனா நாளைக்கு காலையிலே கிளம்ப வேண்டியதாகிடும்… அதனாலே நான் இப்பவே pack பண்ண ஆரம்பிக்கிறேன்.. எனக்கு அந்த சூட்கேஸ் எடுத்துத் தரீயா?” என்று ஆதிரா பரபரப்பாக பேசிக்  கொண்டு இருக்க உத்ராவோ சூட்கேஸை எடுத்து ஆதிராவின் அருகில் வைத்துவிட்டு வெறுமையாக அவளைப் பார்த்தாள்.

அவளது முக மாற்றத்தைப் பார்த்த ஆதிரா துணியை மடித்துக் கொண்டே உத்ராவைப் பார்த்து புருவத்தை உயர்த்தி என்னவென்று சைகையாலேயே கேட்டாள்.

“எங்களை விட்டு போறதுல உங்களுக்கு அவ்வளவு சந்தோஷமா அண்ணி… உண்மையை சொல்லணும்னா நீங்க ரொம்ப பயப்படுறீங்க…
எங்க இங்கேயே இருந்தா வினய் அண்ணா பக்கம் மனசு சாய்ஞ்சுடுமோனு பயப்படுறீங்க அண்ணி…
இல்லைனா இங்கே இருந்து தப்பிச்சு ஓட நீங்க முயற்சி பண்ண மாட்டிங்க…  அண்ணாவை நேருக்கு நேரா face பண்ணி இருப்பீங்க… எப்படியோ அண்ணி நீங்க சந்தோஷமா இருந்தா எங்களுக்கு போதும்.. ஆனால் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவோம் அண்ணி… ” என்று உத்ரா மடமடவென்று பேச அதுவரை எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டு இருந்த ஆதிரா அப்படியே சிலையாகிப் போனாள்.

அவளின் கைகளில் இருந்த துணி பிடிமானமின்றி சட்டென கீழே விழுந்தது அவளது மனதைப் போல.

உத்ரா சொல்லிவிட்டு சென்ற வார்த்தைகள் திரும்ப திரும்ப அவள் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

நான் வினய்யை நேருக்கு நேர் எதிர்க்க முடியாமல் தான் இப்படி வேக வேகமாக இங்கிருந்து  ஓடுகிறேனா? எங்கே அவனை என்னிடம் பேச அனுமதித்தால் என் மனம் அவன் பக்கம் சாய்ந்துவிடுமோ என பயந்து போலி வேலி போட்டுக் கொள்கிறேனா? என்று மனம் கேட்க மூளையோ இல்லை இல்லை என்று அவளை சமாதானம் செய்ய முயன்றது.

அவனிடம் நான் பேசாமல் இருப்பதற்கு,  இல்லை அவன் என்னிடம் பேச வந்தால் நான் தவிர்ப்பதற்கு எல்லாம் ஒரே  ஒரு காரணம் தான். அவன் மீது நான் கொண்ட அந்த வெறுப்பு மட்டும் தான்.

கேவலமான அந்த செயலை செய்த அவனிடம் என்னால் எப்படி பேச முடியும்?

அவனை எப்படி நேருக்கு நேர் சந்திக்க முடியும்?

முன்பு செய்ததைப் போல இப்போதும் அதே போல கேவலமான அந்த காரியத்தை அவன் எங்கே செய்துவிடப் போகிறானோ என்ற பயத்தினால் தானே  அவனை விட்டு இப்படி ஓடுகிறேன் என்று மூளை சமாதானம் செய்ய மனது மீண்டூம் குறுக்கிட்டது.

இங்கே தங்கியிருந்த இத்தனை நாட்களில் அவனது சுண்டு விரல் கூட என் மீது படவில்லையே என்னை ஆபத்து காலத்தில் இருந்து காப்பாற்றியதை தவிர. அவன் என்னை பாதுகாப்பாக தானே உணர செய்தான். அப்படி இருந்தும் நான் ஏன் இங்கே இருந்து தப்பித்து ஓட காரணம் தேடிக் கொண்டு இருக்கிறேன்?

ஒருவேளை உத்ரா சொன்னது போல் எங்கே என் மனம் அவன் பக்கம் சாயந்துவிடப் போகிறதோ என்ற காரணத்தினால் தானா  என்று மனது மீண்டும் கேட்க மூளை பதில் சொல்ல முடியாமல் திண்டாடிய அந்த நேரத்தில் தொலைபேசி அலறியது.

அதில் கவனம் கலைந்தவள் எடுத்து காதில் வைக்க வைபவ்வின் குரல் எதிர் முனையில் ஒலித்தது.

அதுவரை மூளைக்கும் மனதுக்கும் இடையில் தத்தளித்துக் கொண்டு இருந்தவளுக்கு வைபவ்வின் குரல் ஆறுதலாக இருந்தது.

“ஹலோ ” என்றாள் கமறிய தொண்டையில்.

ஆனால் அவனோ இவளது குரலை உற்றுக் கவனிக்கவில்லை அவளின் மீது குறை சொல்வதில் தான் முனைப்பாக இருந்தான்.

“ஆதிரா உனக்கு கொஞ்சம் கூட பாசம் இல்லையா?  எனக்கு போன் பண்ணணும்னு கூட தோணலையா? அங்கே போனதும் எல்லாமே மறந்து போயிடுச்சா? என்னையும் என் காதலையும் கூட மறந்துட்டியா? அவன் எல்லாத்தையும் மறக்க வைச்சுட்டானா? நான் இப்போ என்ன நிலைமையிலே இருக்கேன் தெரியுமா? என்னைப் பத்தி கொஞ்சமாவது கவலைப்பட்டியா?” என்ற வைபவ்வின் கேள்விகள் அவளை மூச்சுக் கூட விட முடியாத படி நெறித்து தள்ளியது.

நான் தண்ணீரில் விழுந்து உயிருக்கு போரடியது தெரியாது… இங்கிருந்து தப்பிப்பதற்காக நான் செய்த போராட்டங்கள் பற்றி எதுவும் தெரியாது… ஆனால் நான் பேசாதது மட்டும் அவனுக்கு தெரிகிறது என்று மனம் சலித்துப் போனது.

ஆனால் மூளையோ அவன் உன்னைக் காதலிப்பதால் தானே உன்னிடம் பேசாததைப் பற்றி கவலைப்படுகிறான் என ஆறுதல் சொல்ல அதில் ஆதிராவின் முகம் கொஞ்சம் தெளிவடைந்தது.

எதிர் முனையில் இருந்த வைபவ்விற்கோ ஆதிராவின் மனதினில் நடக்கும் போராட்டத்தைப் பற்றிக் கவலையில்லை. அவன் கவலை எல்லாம் அவள் அவனை சமாதானப்படுத்துவதற்காக கூட மறுத்து எதுவும் பேசவில்லையே என்பது மட்டும் தான்.

“என்ன ஆதிரா பேச்சையே காணோம்… உனக்கு என் கூட பேச பிடிக்கலைனா நான் இப்பவே போனை வெச்சுடுறேன்… ” என்று வைபவ் சொல்ல சட்டென துடித்தாள் ஆதிரா.

“வைபவ் ப்ளீஸ் இப்படி எல்லாம் பேசாதே… இங்கே வரிசையா தொடர்ந்து பிரச்சனை அதான் உன் கிட்டே சரியா பேச முடியலை சாரி… உன் கிட்டே பேசலைன்ற காரணத்துக்காக காதல் இல்லைனு ஒன்னும் அர்த்தம் இல்லை… ப்ளீஸ் வைபவ் என்னை புரிஞ்சுக்கோங்க.. அப்புறம் வைபவ் நான் உன் கிட்டே ஒரு சந்தோஷமான விஷயம் சொல்ல போறேன்… “

“நீ சொல்றதுக்கு முன்னாடி நான் சொல்றேன் ஆதிரா… இனி நீ அங்கே தங்கியிருக்க வேண்டாம்…  நீ கிளம்பி வந்துடு… ” என்று வைபவ் சொல்ல ஆதிரா தயங்கினாள்.

நான் போட்டியில் வென்ற காரணத்தால்  அங்கே திரும்ப  வரப் போகிறேன் என்று வைபவ்விற்கு தெரியாது. பிறகு எப்படி என்னை கிளம்பி வர சொல்கிறான்? ஒரு வேளை அவனுக்கு தேவையான ஐம்பது லட்சத்தை வைப்வ்வே தயார்  செய்துவிட்டானா? அதனால் தான் வர சொல்கிறானா? என்ற கேள்வி எழ அதை அவனிடமே கேட்டுவிட்டாள்.

“வைபவ் நீ ஐந்து லட்சத்தை ரெடி பண்ணிட்டியா? அதனாலே தான் என்னை வர சொல்றீயா… அப்போ  வினய் தர வேண்டிய பணத்தை நீயே வெச்சுக்கோடானு சொல்லிட்டு நான் திரும்ப வந்துடட்டுமா?.” என்று அவள் மனதினில் தோன்றிய யூகங்களைப் படபடவென கேட்க வைபவ் இடைமறித்தான்.

“இல்லை ஆதிரா.. ஒரு மாசத்துக்கு அப்புறமா போட வேண்டிய பணத்தை வினய் நீ அங்கே போன முதல் நாளே என் அக்கவுண்ட்க்கு transfer பண்ணி இருக்கான்.. நான் அன்னைக்கு இருந்த சோகத்துல அதை கவனிக்கல இன்னைக்கு தான் என் அக்கவுண்ட்டை பார்த்தேன்… நமக்கு கிடைக்க வேண்டிய பணம் நமக்கு கிடைச்சுடுச்சு… இனியும் நீ அங்கே தங்கியிருக்க வேண்டிய அவசியம் இல்லை ஆதிரா… நீ கிளம்பி வா.. ” என்று கேட்க ஆதிராவின் கண்கள் கூர்மையானது.  வார்த்தைகளும் கூர்மையாக வந்து விழுந்தது.

“அப்போ வினய் அக்ரிமென்ட் படி பணத்தை கொடுத்ததாலே என்னை திரும்ப வர சொல்ற கரெக்டா வைபவ்?”

“ஆமாம் ஆதிரா அதனாலே தான் சொல்றேன் நீ வந்துடு… இனி நீ அங்கே இருக்க வேண்டாம்… “

“அவன் அந்த அக்ரிமென்ட் சொன்னபடி நடந்துக்கிட்டான் வைபவ். ஆனால் நம்ம அப்படி எல்லாம்  நடந்துக்க  வேண்டாம், பணம் கையிலே கிடைச்ச உடனே இங்கே இருந்து ஓடி வந்துடலாம்.. நமக்கு பணம் தான் முக்கியம்… கொடுத்த வாக்கு எல்லாம்  முக்கியம் இல்லை அப்படி தானே வைபவ்?”

“ஏன் ஆதிரா நீ இவ்வளவு எல்லாம் யோசிக்கிறே? எதைப் பத்தியும் யோசிக்காம அங்கே இருந்து கிளம்பிடு.. எனக்கு இப்போவே உன்னை பார்க்கணும் போல இருக்கு… வா ஆதிரா ப்ளீஸ்… “
என்று வைபவ் பேசிக் கொண்டே இருக்க பட்டென போனை வைத்துவிட்டாள்.

அவளது உள்ளம் எரிமலையாய் கொதித்துக் கொண்டு இருந்தது.
அந்த கொதிப்பு அவளது கண்களில்  கனலாய் பரபரவென பரவியது. அடிப்பட்ட தன் காலின் வலியோடு அறையில் இருந்து வெளியே வந்தவள் படியினில் இறங்கி வந்து கொண்டு இருந்தாள்.

அவள் கீழே வருவதற்கும் வினய் கைகளில் மீன் தொட்டியோடு உள்ளே வருவதற்கும் சரியாக இருந்தது. அவன் கைகளில் இருந்த அந்த மீன் தொட்டியைப் பார்த்ததும் அதுவரை நெருப்பாய் எரிந்து கொண்டு இருந்த கண்கள் சட்டென குளிர்ந்தது.

“ஏஞ்சல்… ” என்று ஓடிச் சென்றவள் சட்டென்று வினய்யின் கைகளில் இருந்த மீன்தொட்டியை தன் கைகளில் வாங்கிக் கொண்டாள்.

“ஏஞ்சல் எப்படி இருக்க… உன்னை இவ்வளவு நாளா எவ்வளவு மிஸ் பண்ணேன் தெரியுமா? ஒழுங்ஙா சாப்பிட்டியா? ஏன் ஏஞ்சல் சரியா நீந்தவே மாட்டேங்குறே?  உடம்பு சரியில்லையா?” என்று ஆதிரா ஏஞ்சல் என்று பெயரிடப்பட்ட மீனோடு பேசிக் கொண்டு இருக்க அவளது சந்தோஷத்தையே இமைக்க மறந்து பார்த்துக் கொண்டு இருந்தான் வினய்.

“அண்ணி அண்ணி.. பார்த்து கொஞ்சம் பொறுமையா ஏஞ்சலை நலம் விசாரிங்க… இப்படி  விடாம பேசி எப்படி மூச்சு வாங்குது பாருங்க… ” என்று ப்ரணவ் சொல்ல ஆதிரா அவன் பக்கம் புன்னகையோடு திரும்பினாள்.

“ஏஞ்சல் இல்லாம நான் ஒரு நாள்  கூட இருந்தது இல்லை.. அவ்வளவு பிடிக்கும் ஏஞ்சலை.. இந்த கொஞ்சம் நாள் ஏஞ்சலை பார்க்காம இருந்து திடீர்னு பார்த்ததாலே ரொம்ப சந்தோஷமாகிட்டேன் ப்ரணவ்… அதான் இப்படி மூச்சுவிடாம பேசுறேன்…  ” என்று ப்ரணவ்விடய் சொன்னவள் மீண்டும் திரும்பி ஏஞ்சலிடம்” உன்னை ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணேன் ஏஞ்சல் உண்மையா ..” என்றாள்

“எனக்கு தெரியும் ஆதிரா.. நீ ஏஞ்சலை அதிகமா மிஸ் பண்ணி இருப்பேனு அதான் நீ கிளம்பி வந்த அன்னைக்கே ஏஞ்சலை கொரியர் பண்ண சொல்லிட்டேன்.. ஆனால் ஏஞ்சலுக்கு எதுவும் ஆகாம பார்த்து பொறுமையா கொண்டு வரதுக்கு  இவ்வளவு நாள் ஆகிடுச்சு… பாவம் ஏஞ்சல் இப்போ தான் இவ்வளவு தூரம் ட்ராவல் பண்ணி இங்கே வந்தது…கொஞ்சம் கூட ரெஸ்ட் எடுக்காம திரும்பவும் இங்கே இருந்து இப்போவே கிளம்ப போகுது… ” என்று கடைசி வார்த்தையை வினய் சொல்லி முடிக்கும் போது அவன் குரலில் வெறுமை பரவி இருந்தது.

அவனது முகத்தையே பார்த்த ஆதிரா உறுதியான குரலில் ” ஏஞ்சலும் சரி இல்லை நானும் சரி இந்த முப்பது நாள் முடியற வரைக்கும் எங்கேயும் போகப் போறதில்லை.  இங்கே தான் இருக்கப் போகிறோம்… ” என்று  ஆதிரா சொல்லி முடிக்க மூவரின் முகத்திலும் திடீரென்று இன்ப அதிர்ச்சி பரவியது.

“அண்ணி அண்ணி.. உண்மையா எங்கே கூட தான் இருக்க போறீங்களா.. நீங்க நிஜமா தான் சொன்னீங்களா அண்ணி??” என்று ப்ரணவ்வும் உத்ராவும் மாறி மாறி கேட்டுக் கொண்டு இருக்க ஆதிராவோ எதுவும் பேசாமல் அப்படியே உறைந்துப் போய் நின்று கொண்டு இருந்த வினய்யைப் பார்த்தாள்.

அவன் கண்களாலேயே உண்மையா என கேட்க இவளும் புன்னகையுடன் தலையை மேலும் கீழுமாக ஆட்டி ஆமாம் என்றாள்.

அதைப் பார்த்த ப்ரணவ்வும் உத்ராவும் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தனர்.

“ஐயாயா அண்ணி.. நம்ம கூட தான் இருக்கப் போறாங்க… இந்த சந்தோஷத்தை நம்ம இனிப்பு சாப்பிட்டு கொண்டாடியே ஆகணும்… ” என்று சொல்லி சின்ன குழந்தைகளாய் துள்ளி குதித்த ப்ரணவ்வும் உத்ராவும் ப்ரிட்ஜில் இருந்து சாக்லேட் எடுப்பதற்காக சென்றனர்.

வினய் ஆதிராவின் அருகில் வந்தான்.

அவளையே கேள்வியோடு பார்த்தான்.

“இங்கே இருந்து போகணும்னு தவிச்சுக்கிட்டு இருந்த நீ.. இன்னைக்கு அதுக்கான வாய்ப்பு வந்தும் ஏன் போகல ஆதிரா?”

“நீ எந்த நம்பிக்கையிலே அக்ரிமென்ட் முடியாம பணம் கொடுத்தேனு தெரிஞ்சுக்கலாமா வினய்?”

“உன் மேலே இருந்த நம்பிக்கையாலே தான் ஆதிரா கொடுத்தேன்.”

“அந்த நம்பிக்கையை உடைக்கக்கூடாதுன்ற ஒரே காரணத்துக்காக தான் நான் இங்கே இருக்கேன் வினய்… ” என்று சொல்லிவிட்டு ஆதிரா புன்னகைக்க வினய்யும் அவளை புன்னகையோடு பார்த்தான்.

Leave a Reply

error: Content is protected !!