காதல் சதிராட்டம் -10

காதல் சதிராட்டம் -10

சூரியனின் கதிர்கள் மெல்ல மெல்ல தன்னை சுருக்கிக் கொண்டு பூமியில் இருந்து விடைப் பெற்றுக் கொண்டு இருந்தது.பறவைக் கூட்டங்கள் தன் இருப்பிடத்தை நோக்கிப் பறந்து கொண்டு இருந்தது.

அந்த பறவைக் கூட்டங்களையே ஆதிரா அண்ணாந்துப் பார்த்தபடி அமர்ந்து இருக்க வினய் தொண்டையைக் கணைத்து அவளது கவனத்தை கலைத்தான்.

“இதெல்லாம் தான் நம்ம விளையாடப் போற விளையாட்டு.இதுக்கு உனக்கு  சம்மதமா??” என்று அவன் கேட்க அவளது கோபப்பார்வை பதிலுக்கு அவனை சுட்டெறித்தது.

“வினய் இதுக்கு நீ  என்னை முப்பது நாள் கழிச்சு தான் அனுப்ப முடியும்னு நேராவே சொல்லி இருந்து இருக்கலாம். என்னை இப்படி நம்ப வைச்சு ஏமாத்திட்டே.இந்த விளையாட்டுக்கு என்னாலே ஒத்துக்க முடியாது. அந்த ஓடையிலே நான் தத்தளிச்சதை பார்த்துமா நீச்சல் போட்டி வெச்சுக்கலாம்னு சொல்ற??”

“அதைப் பார்த்ததாலே தான் நீச்சல் போட்டி வெச்சுக்கலாம்னு சொல்றேன். நான் உன்னை ஒன்னும் இப்போவே  போட்டிக்கு கூப்பிடல. நீ நீச்சல் முறையா கத்துக்கிட்ட அப்புறம் தான் உன்னை போட்டிக்கு கூப்பிடுறேன்.ப்ரணவ் உனக்கு எப்படி நீந்துறதுனு சொல்லித் தருவான்.அவன் கிட்டே கத்துக்கிட்டு நீ நீச்சல் போட்டிக்கு வா. “

“இரண்டு நாளிலே கத்துக்கிட்டு நான் நீச்சல் போட்டியிலே எப்படி ஜெயிக்க முடியும். நீ என்னை தோற்கடிக்க தான் இந்த போட்டியையே வெச்சு இருக்க. “

“நான் இந்த ஒரு போட்டியை மட்டும் சொல்லலேயே. மொத்தம் மூணு போட்டி. அதுல இந்த போட்டியும் ஒன்னு.
இதுல ஜெயிக்க முடியலைனா என்ன? மீதி இருக்கிற இரண்டு போட்டியிலே ஜெயிச்சு நீ  இங்கே இருந்து தப்பிச்சு போயிடு… ” என்று அவன் சொல்ல அவளது முகத்தில் சிந்தனை முடிச்சுக்கள்.

அவன் சொன்னது மொத்தம் மூன்று போட்டிகள். அதில் முதல் போட்டி சமையல் போட்டி. நமக்கு சமையல் கை வந்த கலை… அதில் எப்படியாவது ஜெயித்து விடலாம். இரண்டாவது ஒரு இரவு முழுவதும் தூங்காமல் இருக்க வேண்டும். இது தான் கொஞ்சம் கஷ்டமான போட்டி. ஏனென்றால் கும்பக் கர்ணி போல தூங்கும் தன்னால் ஓர் இரவு முழித்து இருப்பது கொஞ்சம் கடினமான காரியம் என்பதை அவளும் அறிந்தே அறிந்தாள்.

ஆனால் முயற்சித்து தூங்காமல் இருந்தால் இந்த இரண்டு போட்டிகளில் கண்டிப்பாக வெற்றி பெற்றுவிட்டு இவனிடம் இருந்து தப்பித்து விடலாம் என கணக்குப் போட்டவள் நிமிர்ந்து வினய்யைப் பார்த்தாள்.

“எனக்கு இந்த போட்டிக்கு சம்மதம்… ” என்று அவள் சொல்ல அவன் உதடுகளில் புன்னகை.

அவனது புன்னகையை இவள் கடுப்பாக பார்த்துக் கொண்டு  இருந்த நேரம் ” அண்ணி… ” என்ற கூக்குரலுடன் வந்து நின்றான் ப்ரணவ்.

“என்ன ஆச்சு ப்ரணவ்… ??”

“அண்ணி… அண்ணி… என்னைக் காப்பாத்துங்க… இன்னும் நான் கொஞ்சம் நேரத்துல சாகப் போறேன்… ” என்ற அவனது பதற்றக் குரல் ஆதிராவையும் பதற்றப்படுத்தியது.

“ஐயோ என்ன ஆச்சு ப்ரணவ்… உடம்பு ஏதாவது பண்ணுதா??…. “

“இல்லை அண்ணி இப்போ உடம்புக்கு ஆகல.ஆனால் இன்னும் கொஞ்சம் நேரத்துல நான் சாகப் போறேன். அதுக்கான எல்லா அறிகுறியும் தெரிய ஆரம்பிச்சுடுச்சு.”

“என்ன அறிகுறி இப்போ தெரியுது ப்ரணவ்??… வாந்தி வருதா.. மயக்கமா இருக்கா??…” என்று ஆதிரா கேட்டுக் கொண்டு இருந்த நேரம் ப்ரணவ்வின் உடல் லேசாக நடுங்கத் தொடங்கியது.

“என்ன ஆச்சு ப்ரணவ்… ஏன் உடம்பு எல்லாம் நடுங்குறா மாதிரி இருக்கா??… ஜீரம் வரா மாதிரி இருக்கா??… “

“அண்ணி ஜீரம் லாம் வரல… எமன் தான் வருது… “

“எனக்கு புரியல ப்ரணவ்… ” என்று ஆதிரா குழப்பமாக கேட்க ப்ரணவ்வின் விரல்கள் எதிர் திசையை சுட்டிக்காட்டியது.

அங்கே உத்ரா பத்ரகாளியாக மாறி நின்று கொண்டு இருந்தாள்.

“அண்ணி அந்த எருமைமாட்டை காப்பாத்தாதீங்க… ப்ளீஸ் அந்த ஜந்துவை பிடிச்சு என் கையிலே கொடுங்க… கடைசியா அவனை ஒரு முறை நல்லா பார்த்துக்கோங்க… இனி இவனை உயிரோட பார்க்க முடியாது. ” என்று சொன்ன உத்ரா கொலைவெறியுடன் ஆதிராவின் பின்னால் ஒளிந்து கொண்டு இருந்த ப்ரணவ்வை பிடிக்க முயன்றாள். அவன் உடனே ஓடிச் சென்று வினய்யின் பின்னால் மறைய முயன்றான்.

“ஆண்டவரே என்னைக் காப்பாற்றும்… காப்பாற்றும்… ” என்று வினய்யின் தோளில் பரிதாபமாக அவன் பிடிக்க வினய்யோ அவனை முன்னால் பிடித்து இழுத்து உத்ராவின் எதிரே நிறுத்தினான்.

“ஐயோ அண்ணா ஏன் அண்ணா… உங்க தம்பிக்கு நீங்களே குழி வெட்டுறீங்க… நான் பாவம் அண்ணா… “

“நீ பாவமா இல்லை… இல்லை உத்ரா பாவமானு முதலிலே தெரியட்டும் .. அப்புறம் வெச்சுக்கிறேன்…  ” என்று சொன்ன வினய், உத்ராவை நோக்கி பேசும் படி தலையசைத்தான்.

“நான் அவ்வளவு தூரம் ட்ராவல் பண்ணதுல என் ரூம்ல போய் டயர்ட்ல படுத்துட்டேன் அண்ணா.. ஆனால் இந்த எருமை என்ன பண்ணான் தெரியுமா??” என்று உதட்டைப் பிதுக்கினாள்.

“என்ன மா பண்ணான் ??” என்று அவளது தலையை வருடி வினய் மேலும் பேச ஊக்கினான்.

” ஆனால் இந்த நாய் எனக்கு போன் பண்ணி… ” என்று மேலும் பேச முடியாமல் மூச்சு வாங்கினாள்.

“போன் பண்ணி ப்ரணவ் எழுப்பி விட்டுட்டாண்ணு கோவம் வந்துடுச்சா??” என்று ஆதிரா இடைமறித்துக் கேட்க  இல்லையென்று வேகமாக தலையாட்டினாள்.

“அண்ணி இந்த சப்பை விஷயத்துக்கு எல்லாம் யாராவது கோபப்படுவாங்களா??.. என் கோபத்துக்கான காரணம் பெருசு அண்ணி… ” என்று உத்ரா சொல்ல ஆதிரா மிக தீவிரமானாள். ஆனால் வினய்யோ ஏதோ புரிந்ததைப் போல தலையை உலுக்கிக் கொண்டு உத்ராவைப் பார்த்தான்.

“அப்படி என்ன  தான் ஆச்சு உத்ரா??” என்று ஆதிரா வேகமாக கேட்டாள்.

“இந்த ப்ரணவ் எருமை எனக்கு போன் பண்ணி… உனக்கு black current ice cream னா ரொம்ப பிடிக்கும்ல.. ஆனால் நீ இப்போ தூங்கப் போயிட்டட… உன்னை தனியா விட்டு சாப்பிட எனக்கும் பிடிக்கல…. அதனாலே உனக்கும் சேர்த்து  அந்த ரெண்டு black current ஐஸ்க்ரீமையும் நானே சாப்பிட்டுட்டேன்னு சொல்றான் அண்ணி… இவனுக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கும்… இவனை நான் இன்னைக்கு சும்மா விட மாட்டேன்… ” என்று சொல்ல அதுவரை பரபரப்பாக கேட்டுக் கொண்டு இருந்த ஆதிராவின் முகம் சட்டென மாறியது.

“ஏது இது தான் அந்த முக்கியமான விஷயமா??” என்று கேட்டபடி சோர்வுடன் சோபாவில் அமர்ந்துக் கொண்டாள்.

“நல்லா கேளுங்க அண்ணி… தம்மாத்தூண்டு ஐஸ்க்ரீம் சாப்பிட்டதுக்கு என்னை கொல்ல வரது எல்லாம் அக்கிரமம்… அநியாயம்… அத்துமீறல்… “

“அடேய் என் ஐஸ்க்ரீமை தின்னது மட்டும் இல்லாம இப்படி கேவலமா டயலாக் வேற பேசுறீயா… ” என்று மீண்டும் ப்ரணவ்வை அடிக்கத் துரத்தினாள்.

இவர்களது களேபாரத்தை தாங்க முடியாமல் வினய் ” ஷட் அப்… ” என்று கத்த இருவரும் கப்சிப் என்று அமைதி பிள்ளைகளைப் போல முகத்தை வைத்துக் கொண்டனர்.

“அண்ணா இந்த ப்ரணவ் பண்ண அநியாயத்துக்கு சரியான தண்டனை அவனுக்கு கிடைக்காம நான் யார் கிட்டேயும் பேச மாட்டேன்.. இது இந்த பச்சைப்பிள்ளை உத்ரா மீது ஆணை… ” என்று உத்ரா தன் தலையில் தானே சத்தியம் செய்து கொண்டு வாயின் மீது கை வைத்து நின்று கொண்டாள்.

“உத்ரா உனக்கு அஞ்சு ஐஸ்க்ரீம்  வாங்கித் தரேன்… அப்புறம் இந்த ப்ரணவ்க்கு இரண்டு வாரத்துக்கு இந்த ஐஸ்க்ரீமையே தொடக்கூடாது… ” என்று சொல்ல

“வாரே வா..செம தீர்ப்பு அண்ணா… ” என்று உத்ரா கைத்தட்டி விசிலடித்தாள்… ப்ரணவ் உத்ராவின் துப்பட்டா விளிம்பை எடுத்து தலையில் முக்காடு போட்டு அமர்ந்து கொண்டான்.

“என் துப்பட்டாவை விடுறா எருமை… ” என்று மீண்டும் உத்ராவும் ப்ரணவ்வும் சண்டை போடத் துவங்க வினய் இடையில் புகுந்து மீண்டும் இடை மறித்தான்.

“ஸ்டாப் இட்.. முதலிலே சண்டை போடுறதை நிறுத்துங்க… உங்க ரெண்டு பேருக்கும் ஒரு வேலை தரப் போறேன்… ஒரு நல்ல டீம்மா ரெண்டு பேரும் சேர்ந்து அதை அழகா ஏற்பாடு பண்ணனும்… ” என்று வினய் சொல்ல இருவரும் “கண்டிப்பா செய்வோம் அண்ணா… ” என்று உற்சாகமாக சொல்லி ஆமோதித்தனர்.அவர்களிடம் தான் போட்ட பந்தயத்தை விளக்கிவிட்டு ப்ரணவ் பக்கம் திரும்பினான்.

“டேய் ப்ரணவ் நீ ஆதிராவுக்கு மூணு நாளிலே ஸ்விம்மிங் சொல்லித் தரணும்… ” என்று சொல்ல ப்ரணவ் வேகமாக சரியென்று தலையாட்டினான்…

“உத்ரா நீ ஆதிரா கிட்டே நாளைக்கு சமையல் போட்டிக்கு என்ன என்ன பொருள் எல்லாம் தேவைப்படுதுனு லிஸ்ட் வாங்கி வெச்சுக்கோ… ” என்று சொல்ல அவளும் தனது கட்டைவிரலை உயர்த்தி சரியென்றாள்.

“ஆதிரா மணி இப்போ நாலு… இரண்டு மணி நேரம் நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோ… கரெக்டா ஆறு மணிக்கு தூங்காம இருக்கிற போட்டியை தொடங்கப் போறோம்… Get ready…  All the very best… ” என்று சொல்ல ஆதிரா சரியென்று சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.ஆனால் தூங்க மட்டும் செய்யவில்லை. அவளுக்கு தூரம் தூங்க ஆரம்பித்தால் கும்பகர்ணியைப் போல உறங்கிவிடுவோம் என்று. ஆதலால் எப்போது ஆறு மணி ஆகும் என்று கடிகாரத்தைப் பார்க்கத் துவங்கினாள்.

💐💐💐💐💐💐💐💐💐💐💐

சுழலும் பூமியைப் போல நிற்காமல் சுழன்று கொண்டு இருந்த அந்த கடிகாரத்தின் சிறிய முள் சரியாக ஆறின் அருகே நெருங்கே ஒரே நிமிடம் தான் இருந்தது.

அந்த கடிகாரத்தையே உறுத்துப் பார்த்துக் கொண்டு இருந்தது எட்டு கண்கள்.

3…. 2…. 1…… ஸ்டார்ட் என்று ப்ரணவ் சொல்ல ஆதிராவும் வினய்யும் நிமிர்ந்து உட்கார்ந்தனர்.

“அண்ணா அண்ணி… All the very best… தூங்காம இந்த போட்டியை எப்படியாவது ஜெயிச்சுடுங்க…”

“ஆமாம் யாரை ஜெயிக்க சொல்ற… ” என்று வினய்யும் ஆதிராவும் ஒரு சேர கேட்டனர்.  அந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் ப்ரணவ் திணறினான். அவனது உள்மனது ” அடேய் ப்ரணவ் வசமா மாட்டிக்கிட்டே டா… ” என்று அவனுக்கு ரெட் அலர்ட் கொடுத்தது.

இரண்டு பேரில் யாரவது ஒருவர் பெயர் சொன்னாலும் இன்னொருவர் மனம் புண்படும்… வருந்தும்…. இப்போது எந்த பெயர் சொல்லி தப்பிப்பது என்று யோசித்தவனுக்கு உதவியாக உத்ரா வந்தாள்.

“அண்ணா ப்ரணவ் ஜெயிக்கப் போறவங்களுக்கு all the best சொன்னான்… ”

“அதான் யார் ஜெயிக்கப் போறோம்னு கேட்டோம்… ” என்று ஆதிரா விடாமல் கேட்டாள்.

“யாரையோ… ” என்று பொதுப் படையாக பதிலளித்தான் ப்ரணவ்…

“இல்லை நான் தான் ஜெயிக்கப் போறேன்… நீங்க பாருங்க… ” என்று ஆதிரா சொல்ல வினய் உதட்டினில் ஒரு குறுஞ்சிரிப்பு. அதைக் கண்ட ஆதிராவின் இதழ்களோ கோபத்தில் துடித்தது.

“இப்போ எதுக்கு நக்கலா சிரிக்கிற வினய்???”

“நினைச்சேன்… சிரிச்சேன்… ” என்ற வினய்யின் பதில் அவளை அடுத்த வார்த்தை பேசவிடவில்லை. சட்டென்று உதடுகளை அழுந்தப் பற்றிக் கொண்டாள். லேசான அசட்டு சிரிப்புடன் தலையை சொறிந்தவள் வினய்யின் முகத்தைப் பார்க்காமல் எதிர் திசையில் திரும்பிக் கொண்டாள்.ஒரு முடிவுடன் ப்ரணவ்வை திரும்பிப் பார்த்தாள்.

“ப்ரணவ் எனக்கு இப்போ நீச்சல் சொல்லித் தரீயா??”

“இந்த நேரத்திலயா அண்ணி??.. நைட்டுக்கு மேலே குளிருமே பரவாயில்லையா??”

“பரவாயில்லை ப்ரணவ்… ப்ளீஸ் எனக்கு நீச்சல் சொல்லி தா… ” என்று ஆதிரா கேட்க மறுக்க முடியாமல் சரி என்று தலையசைத்தான் ப்ரணவ்.

வினய்யின் முகத்திலோ லேசான புன்முறுவல் பரவியது.

செல்லும் அவளையே புன்னகையுடன் பார்த்துக் கொண்டு இருந்தான்.

வினய்யின் புன்னகையையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டு இருந்தாள், உத்ரா.  பல வருடங்கள் கழித்து அவனின் அகமகிழந்த சிரிப்பைப் பார்க்கின்றாள்.

“அண்ணா நீங்க பலவருஷம் கழிச்சு இப்போ தான் மனசார சிரிச்சு பார்க்கிறேன்… ” என்றாள் உத்ரா ஆச்சர்யமாக.

” எல்லாத்துக்கும் காரணம் ஆதிரா தான்..” என்றவனின் பார்வை செல்லும் ஆதிராவையே தொடர்ந்துக் கொண்டு இருந்தது. வினய் கொண்ட  காதலின் அளவை அவனது கண்களே படம்பிடித்துக் காட்டியது. அதைக் கூர்மையாக கவனித்த உத்ராவின் மனதினிலோ பெரிய கேள்வி எழுந்தது.

“அண்ணா நீங்க அண்ணியை இந்தளவுக்கு காதலிக்க என்ன காரணம்??”

“காரணமே தெரியல உத்ரா அதான் நான் ஆதிராவை இந்த அளவுக்கு காதலிக்க காரணம்… ”

“அண்ணா புரியலைனா… காதலிக்க கண்டிப்பா காரணம்னு ஒன்னு இருக்கணும்ல… ”

“இல்லை உத்ரா…. உண்மையான காதலுக்கு காரணமே தெரியாது… எப்போ வந்தது ஏன் வந்ததுனு நமக்கு புரியாது…. காலடி சத்தம் கூட கேட்காம உள்ளே வந்து மனசுல கூரா நங்கூரம் போட்டுடும்… காதல்க்கு காரணம் சொல்றவங்க எல்லாம் தான் ஏன் காதலிக்கிறோம்ன்ற கேள்விக்கு பதில் தேடி தன் மனசை சமாதானப்படுத்திக்கிறவங்களே தவிர உண்மையா காதலிக்கிறவங்க கிடையாது… ” என்ற வினய்யின் வார்த்தைகள் நீச்சல் உடையை எடுக்க வந்த ஆதிராவின் காதுகளில் சரியாக விழுந்தது.

அந்த கடைசி வார்த்தைகள் மட்டும் அவளது காதுகளில் திரும்ப திரும்ப ஒலித்துக் கொண்டு இருந்தது.” காதலுக்கு காரணம் தேடுறவங்க எல்லாம் தன் மனசை இது காதல் தானு சமாதானப்படுத்த காரணம் தேடுறவங்க ” என்ற அவனது வார்த்தைகளில் உண்மை இருப்பதாகவே ஆதிராவுக்கு தோன்றியது.

வைபவ்வின் மீது காதல் வந்ததற்கு தான் சொன்ன காரணங்கள் எல்லாம் வரிசையாக நினைவிற்கு வந்தது. அதற்கு வினய் சொன்ன விளக்கங்களும் அடுக்கு அடுக்காக தோன்றி மறைந்தது. அதற்கு பதில் சொல்ல முடியாமல் அவள் திணறியதும் நினைவிற்கு வந்தது.

வினய்யிடம் அவள் சொல்லாமல் மறைத்த சில காதல் காரணங்களும் நினைவிற்கு வந்தது. அதை சொன்னால் வினய் நிச்சயமாக இல்லை என்று வேறு சில காரணங்கள் சொல்லி அவளை எள்ளி நகையாடுவான் என்று தான் மனதுக்குள் அதை சொல்லாமல் மறைத்தது எல்லாம் நினைவிற்கு வந்து அவள் கால்கள் அப்படியே வேரூன்றி நின்றது.

சிலைப் போல் நின்று கொண்டு இருக்கும் ஆதிராவை உத்ரா கவனித்துவிட்டாள்.

“என்ன அண்ணி ஆச்சு அப்படியே நின்னுட்டீங்க….”

என்ற உத்ராவின் கேள்விக்கு சிறு புன்னகையை மட்டும் பதிலாக தந்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து நீச்சல் குளத்திற்கு வந்து நின்றாள். நீரில் நீச்சலடித்து கொண்டு இருந்த ப்ரணவ் ஆதிராவைப் பார்த்ததும் அப்படியே நிறுத்தினான்.

“அண்ணி அப்படியே அந்த டவலை அங்கே வெச்சுட்டு மெதுவா தண்ணியிலே  இறங்குங்க… ” என்ற ப்ரணவ்வின் வார்த்தைக்கிணங்க மெதுவாக நீரினில் இறங்கினாள்.

அவளுக்கு மெதுவாக நீச்சலை சொல்லிக் கொடுக்கத் துவங்கினான் ப்ரணவ்.

இங்கோ உத்ரா கன்னங்களில் தன் கைகளை தாங்கிய படி வினய்யின் காதல் கதையை கேட்கத் துவங்கினாள்.

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

அந்த அரங்கையே தன்  தேன் குரலால் கட்டிப்பட்ட  ஆதிராவையே இமைக்க மறந்து பார்த்துக் கொண்டு இருந்தான் வினய்.

கையில் வைத்து இருந்த கிட்டாரையும் அவளையும் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டு இருந்த வினய் மெதுவாக திரும்பி தன் தோழனான விமலைப் பார்த்தான்.

“டேய் மச்சான் விமல்லு… இந்த குரலிலே ஏதோ இருக்கு டா… என் கிட்டார் ஒலியும் இந்த குரல் ஒலியும் கண்டிப்பா பொருந்தி போகும்… ” என்று வினய் சொல்ல விமலும் அதை ஆமோதித்தான்.  ஆனால் அருகில் இருந்த ஐஸ்வர்யாவுக்கோ இவர்களது சம்பாஷனை கோபத்தை தந்தது.

இத்தனை வருடங்களாக அவர்களுடைய குழுவில் இணைந்து பாடிய தன்னை மதிக்காமல் யாரோ புதிய ஒருத்தியை அவர்கள் உயர்த்தி பேசுவது அவள் மனதினில் பொறாமையை விதைத்தது.

“அப்போ என் குரல் நல்லா இல்லைனு சொல்றீங்களா ரெண்டு பேரும்??…. இனி நான் உங்க  musical band  ல பாடப் போறதா இல்லை…. ” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள் அவள்.

“ஓய் ஐஸ்வர்யா நீ நல்லா பாடலைனு யார் இங்கே சொன்னது.. அந்த பொண்ணு நல்லா பாடுறானு தானே சொன்னோம்… ” என்று விமல் அவளை சமாதானப்படுத்த முயன்றான். ஆனால் அவளோ சமாதானம் ஆகவில்லை.

“இரண்டுக்கும் ஒரே அர்த்தம் தான்… ” என்று சொன்னவள் ” இன்னைக்கு நான் உங்க பேன்ட்ல பாடப் போறதா இல்லை… ” என்று சொல்லிவிட்டு வேக வேகமாக அங்கிருந்து சென்றுவிட்டாள்.

அவள் பின்னாலேயே ஓடி விமலும் வினய்யும் சமாதனப்படுத்த முயன்ற நேரம் மைக்கில் ” early bird musical band ஐ மேடைக்கு அழைக்கிறோம்… ” என்ற அறிவிப்பு சொல்லப்பட்டது.

இப்போது ஐஸ்வர்யாவை சமாதானப்படுத்தி அழைத்து வருவதற்கு போதிய நேரம் இல்லை.

என்ன செய்வது என்று அவர்கள் தவித்துக் கொண்டு இருந்த நேரம் மேடையில் பாடி முடித்த ஆதிரா அவர்களை கடந்து சென்று கொண்டு இருந்தாள்.

சட்டென்று வினய் அவள் செல்லவிடாமல் கையை நீட்டி இடை மறித்தான். அவளோ நிமிர்ந்து யார் என்று பார்த்தாள். பார்த்தவளுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை.

அன்று அவள் ஹாட் சிப்ஸ் கடையில் பார்த்த அவன் இன்று அவள் எதிரில் நின்று கொண்டு இருந்தான். புன்னகையுடன் என்ன என்று தலையசைத்து கேட்டாள் அவள்.

“ஒரு ஹெல்ப்… எங்க leading singer க்கு உடம்பு முடியல… உங்களுக்கு ஆட்சேபனை இல்லைனா  எங்க கூட சேர்ந்து பாட முடியுமா… ” என்று கேட்ட வினய்யின் கேள்விற்கு இல்லை என்று மறுத்து  பதில் சொல்ல முடியவில்லை அவளால்.

அன்று தன் கண்ணீருக்கு மதிப்பு கொடுத்து தன்னை சமாதானப்படுத்தியவன் இன்று இக்கட்டில் இருக்கும் போது பாராமுகமாய் சொல்ல முடியவில்லை அவளால். சரி என்று தலையசைத்து சம்மதம் தெரிவித்தாள் அவள்.

அவள் கையில் அவர்கள் எழுதிய பாடல் வரிகளையும் இசை சுருதியையும் அளிக்க அதை படித்தபடியே அந்த மேடையில் வந்து நின்றாள்.

வினய் கைகளில் வைத்து இருந்த கிட்டாரோடு மைக்கின் முன்பு நிற்க ஆதிரா அந்த பாடல் வரிகளை கைகளில் தாங்கியபடி மைக்கின் முன்பு நின்றாள்.

கிட்டாரின் அதிர் கம்பிகளை வினய் மீட்ட ஆதிரா சிலிர்த்துப் போய் அவனை திரும்பிப் பார்த்தாள். சுற்றி இருந்த கூட்டமும் சிலிர்த்துப் போய் கூச்சலிட ஆரம்பித்தது.

மெதுவாக ஆதிரா தன் குயில் குரலில் பாடத் துவங்கினாள்.

நீ வா நீ வா

  எந்தன் மனதின்

சுவரை உடைக்க…

நீ வா நீ வா

  எந்தன் உயிரின்

கொடியில் பூ பறிக்க…

நீ வா நீ வா

   எந்தன் வானில்

வண்ணம் தீட்ட…

நீ வா நீ வா

    எந்தன் பயணத்தின்

பாதையாய் நீள..

தொலைதூரம் போகாதே

  உயிர் தடுமாற… 

தொடும் தூரம் நிற்காதே

   உடல் தடம் மாற…

காதல் பிடிக்குளே

  காற்றும் திணறுது…

மௌனப் பிடிக்குள்ளே

  வார்த்தை நிரம்புது…

சொல்ல வந்து சொல்லோ

   செல்லரிச்சு போச்சு…

உன் ஒத்தை விழிப் பார்வையிலே

    உயிர் மொத்தமா உன் ஆட்சி…

கனவுப் பெண்ணே அருகில் வந்து 

    தொலைவில் போனாயே..

என்னை தொலைத்துப் போனாயே…

    யார் வழியைத் தொடரா

என் பாதைகள் உன் வழியே வருது..

    உன்னையே தொடருது…

முடிவு காதலாகுமா??

    இல்லை என் காலமாகுமா??

என்ற ஆதிராவின் குரலும் வினய்யின் இசையும் அந்த கூட்டத்தையே ஆர்ப்பரிக்க வைத்தது. கூடி இருந்த மொத்த கூட்டமும் early bird early bird என்று உற்சாகத்தில் கத்தத் துவங்க வினய் நன்றியுடன் ஆதிராவைப் பார்த்தான். அவள் புன்முறுவலோடு வினய்யைப் பார்த்தாள்.

Leave a Reply

error: Content is protected !!