காதல் சதிராட்டம்-18a
காதல் சதிராட்டம்-18a
தேனை சுற்றி மொய்க்கும் வண்டுக்கூட்டங்களை போல அந்த ஹாட்சிப்ஸ் கடையை சுற்றி மக்கள் கூட்டம் மொய்த்துக் கொண்டு இருந்தது.
அந்த மக்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் பில் கவுண்டரில் நின்றுக் கொண்டு இருந்த ஆதிரா திணறிக் கொண்டு இருந்தாள்.
அவளுடன் பணியாற்றும் தோழி இன்று விடுமுறை எடுத்து இருக்க தனியாய் சமாளிக்க முடியாமல் போராடிக் கொண்டு இருந்த நேரம் அந்த கடையின் மேலாளர், கணேசன் அந்தப் பக்கமாக வந்தார்.
அவரைக் கண்டதும் ” சார்” என்று தயக்கத்துடன் அழைத்தாள். ஆதிராவின் முகத்தைக் கண்டவருக்கு அவளது கேள்வி எது என்று யூகிக்க முடிந்தது.
“அட்வான்ஸ் பத்தியே யோசிச்சு இப்போ வர கஸ்டமர்ஸை கவனிக்காம விட்டுடாதே… முதலிலே இப்போ வந்தவங்களை கவனி… அப்புறமா அதைப் பத்தி பார்த்துக்கலாம்… ” என்று கடுப்புடன் சொல்லிவிட்டு அவர் நகர்ந்துவிட்டார்.
கொடுக்க முடியும் அல்லது கொடுக்க முடியாது என்று இந்த இரண்டு வார்த்தையில் ஏதாவது ஒன்றை சொல்லி முடித்து இருந்தால் இப்படி முடிவு தெரியாமல் தவிக்க வேண்டிய அவசியம் இருக்காது அல்லவா?
இப்போது இங்கிருந்து செல்லும் வரை இவர் பதிலுக்காக காத்து இருக்க வேண்டுமா என்ற சலிப்பு தோன்ற அவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு ” வாட் இஸ் யுவர் ஆர்டர் சார்?” என்று கேட்டபடி நிமிர்ந்துப் பார்த்தாள்.
எதிரில் புன்னகையுடன் வினய் நின்று கொண்டு இருந்தான்.
அவனைக் கண்டவுடன் அதுவரை முகத்தில் இருந்த சிடுசிடுப்பு ஒரு நொடி மறைந்து புன்னகையை சூடிக் கொண்டது.
எதிரே இருந்த அந்த கடையின் ஓனர் அவளைப் பார்த்து முறைக்க மீண்டும் அந்த சிடுசிடுப்பு முகத்தில் வந்து ஒட்டிக் கொண்டது.
“சொல்லுங்க சார்.. உங்களோட ஆர்டர் என்ன?”என்று அவள் கேட்க அவன் பதில் சொல்லாமல் அவளையே சிரிப்புடன் பார்த்தபடி நின்றான்.
அந்த மேலாளரின் முறைப்பு அவளைப் பார்த்து இன்னும் அதிகமாவதை உணர்ந்தவள்
“சார் ப்ளீஸ் உங்க ஆர்டரை சொல்லுங்க… பின்னாடி கஸ்டமர்ஸ் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க… ” என்று லேசாக வினய்யைப் பார்த்து முறைத்தபடி சொன்னாள்.
அப்போதும் வினய்யிடம் எந்த மாற்றமும் இல்லை. உதட்டில் பூத்த முறுவலுடன் அவளைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தான். அதைப் பார்த்ததும் இந்த முறை ஆதிராவின் முகத்தினில் அப்பட்டமாக எரிச்சல் வெளிப்பட்டது கூடவே சேர்த்து குரலிலும்.
“வினய் நகருங்க.. ஏற்கனவே அந்த ஓனர் என்னை முறைச்சுக்கிட்டு இருக்காரு.. பின்னாடி கஸ்டமர் எல்வாம் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க… சீக்கிரமா ஆர்டர் சொல்லுங்க இல்லை மத்தவங்களுக்கு வழியாவது விடுங்க வினய்… ” என்று சொல்ல அவன் முகத்தில் லேசாக ஒரு மாற்றம்.
மெதுவாக அவளை நோக்கி நகர்ந்து வந்தவன் அவள் பக்கத்தில் வந்து நின்று கொண்டான்.
அவனது செயலைக் கண்டவளுக்கு எதுவும் புரியவில்லை புரியாத பார்வையில் அவனைப் பார்த்தவள்
“வினய் என்ன பண்ற.. விளையாடாம ஆர்டரை சொல்லிட்டு போய் சாப்பிடு… ” என அவள் பேசிக் கொண்டே இருக்க அவனோ அவள் பேசுவதை காதினில் கூட வாங்கவில்லை.
அந்த கடையில் பணியாற்றும் ஊழியர்கள் அணியும் டீஷர்டை அணிந்து கொண்டு தலையில் தொப்பி போட்டுக் கொண்டு அவனும் கேஷ் கவுண்டருக்கு அருகில் வந்து நின்று கொண்டான்.
“யுவர் ஆர்டர் ப்ளீஸ் மேம்… ” என்று அடுத்து நின்று கொண்டு இருந்த பெண்ணிடம் அவன் ஆர்டரை எடுத்து கொண்டு இருக்க
“வினய்… ” என்றாள் அதிர்ந்துப் போய்.
” ஆதிரா இப்போ எதுக்கு இவ்வளவு ஷாக் ஆகுற… நானும் இந்த கடையில தான் வேலை செய்யப் போறேன்… இன்னைக்கு மதியமே எனக்கு வேலைக் கொடுத்துட்டாங்க… ” என அவன் சொல்ல அவள் மனதினிலோ ஏகப்பட்ட குழப்பங்கள்.
“நீங்க எதுக்கு வினய் வேலை செய்யணும்?” என்றாள் புரியாமல் அவனை பார்த்து.
“ஏன் நான் எல்லாம் வேலை செய்யக்கூடாதா ? ” என்று எதிர்க்கேள்வி கேட்டவன் “ஆதிரா இதைப் பத்தி அப்புறமா பேசிக்கலாம்.. அங்கே ஓனர் முறைக்கிறாரு பாரு.. முதலிலே கஸ்டமரை கவனிப்போம்… ” என்று அவன் சொல்ல அவளும் கேள்விகளை விடுத்து வேலையை கவனிப்பதில் கவனமானாள்.
இருவரும் ஆர்டர் எடுத்து முடித்த அடுத்த நொடியிலேயே எல்லோருக்கும் கொண்டு சென்று உணவைப் பரிமாறும்படி மேலாளரின் கண்கள் அவர்களை பார்த்து கட்டளையிட இருவரும் ஒரு நொடி கூட ஓய்வெடுக்காமல் அடுத்த வேலைக்கு ஓடினர்.
ஒரு நொடி கூட உட்காராமல் ஓடி ஓடிச் சென்று எல்லோருக்கும் பரிமாறும் போது சோர்வு தோன்றினாலும் அதை முகத்தில் காட்டாமல் மறைத்துக் கொண்டான்.
ஒரு நாள் இந்த வேலையை செய்யும் எனக்கே இவ்வளவு வலி இவ்வளவு சோர்வு என்றால் தினமும் செய்யும் அவளுக்கு எப்படி வலித்து இருக்கும் என்ற எண்ணம் தோன்ற அவளைத் திரும்பி பார்த்தான்.
ஆனால் அவளது முகமோ முகத்தில் துளிக் கூட சோர்வை சுமந்து இருக்கவில்லை. எல்லாரையும் இன்முகத்தோடயே அணுகிக் கொண்டு இருந்தாள். அவளது உற்சாகமான முகத்தைக் கண்டதும் அவனுக்குள் பெருமூச்சு மேல் எழும்பியது..
“இவளால் மட்டும் எப்படி முடிகிறது?” என்ற ஆச்சர்யத்தோடே அன்றைய வேலையை முடித்தவன் சோர்வாக நாற்காலியில் அமர அவனெதிரே ஒரு ஜீஸ் டம்ளரை வைத்துவிட்டு இவளும் அவனருகில் அமர்ந்தாள்.
“ஒழுங்கா ஜூஸ்ஸை குடிங்க வினய்…பாருங்க எவ்வளவு சோர்ந்துப் போயிட்டே.. ஒழுங்கா நாளையிலே இருந்து இந்த வேலைக்குவராதே சரியா… “என்றுக் கண்டிப்பான குரலில் சொன்னவள் ” ஆமாம் எதுக்கு நீ இந்த வேலையிலே சேர்ந்த? ” என்ற கேள்வியோடு முடித்தாள்.
“எனக்கு இந்த ஃபைனல் இயர்ல அதிகமா க்ளாசஸ் எதுவும் இல்லை.. ப்ரீ டைம்ல ஏதாவது வேலை பார்க்கலாம்னு தோணுச்சு.. அதான் வந்து சேர்ந்தேன்.. இதுக்கு மேலே ஏன் வேலைக்கு வந்தேன் வந்தேனு கேள்வி கேட்காதே ஆதிரா ப்ளீஸ்… ” என அவன் கெஞ்சுவதைப் போல் முகத்தை வைக்க அவள் அதற்கு மேலும் எந்தக் கேள்வியைக் கேட்டும் அவனைக் குடைத்து எடுக்கவில்லை.
அமைதியாக அவனை ஒருப் பார்வை பார்த்துவிட்டு அவன் குடித்த ட்ம்ளரை எடுத்துக் கொண்டு நகர்ந்த நேரம் அந்த கடையின் ஓனர் செல்வம் உள்ளே நுழைந்தார்.
அவருக்கு இந்த கடையோடு சேர்த்து அதே ஊரில் மொத்தம் இருபதிற்கும் மேற்பட்ட கடைகள் இருந்தது. மாதத்திற்கு ஒரு முறை வருபவர் அன்று அதிசயமாக அதே மாதத்தில் இரண்டாவது முறையாக அந்த ஹாட் சிப்ஸ் கடையிற்கு வந்து இருந்தார்.
அவரைக் கண்டதும் மரியாதை கலந்த புன்னகையுடன் வரவேற்றாள் ஆதிரா. அவளைப் பார்த்து பதிலுக்கு முறுவலித்தவர்
“எப்படி இருக்க மா?” என்று கேட்க பதிலுக்கு அவள் “நன்றாக இருக்கிறேன் சார்” என்றாள் மரியாதையாக.
அவளைப் பார்த்து புன்னகைத்தவர் நேராக கணேசனிடம் திரும்பினார்.
“கணேசா ஆதிராவுக்கு கொடுக்க வேண்டிய அட்வான்ஸ் ஐயாயிரம் கொடுக்க வேண்டாம்… ” என்று அவர் ஒரு குண்டைத் தூக்கிப் போட ஆதிரா திகைப்புடன் அவரைப் பார்த்தாள்.
அவள் திகைப்பைப் புன்னகையுடன் பார்த்தவர் ” ஐயாயிரத்துக்கு பதிலா ஆதிராவுக்கு இருபத்தைஞ்சாயிரம் கொடுத்துடலாம்… ” என சொல்ல இப்போது அவளது திகைப்பு இருமடங்காகியது, கணேசத்திற்கும்…
கணேசன் ஆதிரா ஐயாயிரம் அட்வான்ஸாக கேட்டதை இன்னும் அவர் செல்வத்திடம் சொல்லவே இல்லை.
ஆனால் எப்படி இந்த விஷயம் அவருக்கு தெரிந்தது?
அதுவும் ஐயாயிரத்திற்கு பதிலாக இருபத்தைந்தாயிரம் தருகிறேன் என்கின்றாரே இவருக்கு என்ன ஆயிற்று என்று அவரையே விளங்காத பார்வையில் கணேசன் பார்த்துக் கொண்டு இருந்தார்.
ஆதிராவிற்கோ அவர் இருபத்தைந்தாயிரம் தருகிறேன் என்று சொன்னதும் ஒரு புறம் மகிழ்ச்சியாகவும் இருந்தது. மறுபுறம் வருத்தமாகவும் இருந்தது. அந்த இருபத்தைந்தாயிரம் கடனை அடைக்க வேறு தினமும் போராட வேண்டுமே என்ற அவளுடைய எண்ணவோட்டம் அந்த முகத்திலேயே தெரிய அதைக் கண்டு கொண்டவரோ மென்மையாக புன்னகைத்தார்.
“ஆதிரா நீ எப்படி கடனை அடைக்கணும்னு யோசிச்சு வருத்தப்படலாம் வேண்டாம்… உனக்கு எவ்வளவு டைம் வேணுமோ அவ்வளவு டைம் எடுத்துக்கோ.. எந்த அவசரமும் இல்லை… ” என்று சொல்லி முடித்தவர் கணேசனை ஒரு முறை அழுத்தமாகப் பார்த்துவிட்டு மேலும் தொடர்ந்தார்.
“உனக்கு ஏதாவது உதவினா நேரடியா என் கிட்டேயே கேளு மா.. கணேசன் கிட்டே கேட்டு தான் என் கிட்டே கேட்கணும்னு எந்த அவசியமும் இல்லை… ” என்று சொன்னவர் கணேசனை அவரது தனியறைக்கு வர சொல்லிவிட்டு சென்றுவிட அவரையே புன்னகையுடன் பார்த்து கொண்டு இருந்தாள் ஆதிரா.
அவள் மகிழ்ச்சியை இன்னும் புன்னகையுடன் பார்த்து கொண்டு இருந்தான் வினய்.
“வினய் நான் என் முடிவை சொல்றேன்… நான் singing competition லே கண்டிப்பாக கலந்துக்கிறேன்… ” என்று சொல்ல புன்னகையுடன் சரியென்று தலையாட்டியவன் ” சூப்பர் ஆதிரா.. இந்த முடிவைத் தான் நான் உன் கிட்டே எதிர் பார்த்தேன்.. சரியான முடிவை எடுத்து இருக்கே… “என்று உளமார சொன்னவன் “கிளம்பலாமா” என்றான் மணிக்கட்டை சுட்டிக் காட்டியபடி.
“ஆமாம் வா வா வினய்… காலேஜ்க்கு டைம் ஆச்சு… ” என்று சொல்லியபடி அவன் பைக்கில் ஏறி அமர வண்டி பறந்து சென்றது… நாட்களைப் போல….
ஒரு மாதம் எப்படி கடந்ததே என்று தெரியாமல் வேகமாக ஓடியது.
காலையில் பாட்டு பாட பயிற்சி செய்துக் கொண்டு மதியத்தில் பர பரவென வேலை செய்துவிட்டு மாலையில் வகுப்பில் பாடம் கவனித்துக் கொண்டு என எந்த அச்சும் பிசாகமால் அப்படியே நாட்கள் அதன் போக்கில் உருண்டு சென்றது.
என்றும் போல அன்றும் அந்த மேலாளர் ஆதிராவையும் வினய்யையும் முறைத்தபடியே வேலை வாங்கிக் கொண்டு இருக்க இருவரும் அதைக் கண்டுக் கொள்ளாமல் வேலைப் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
ஆதிரா சூடான காப்பியை எடுத்துக் கொண்டு திரும்ப அங்கே கப்பை எடுக்க வந்த வினய்யின் மீது மொத்தமாக சிதறி விட்டது.
அவன் வலியில் அலறினானோ இல்லையோ ஆனால் ஆதிரா தான் பல மடங்கு வலியில் அலறினாள்.
“சாரி வினய்.. நான் தெரியா பண்ணிட்டேன்… நீங்க பின்னாடி வந்ததை நான் பார்க்கவே இல்லை… ப்ளீஸ் என்னை மன்னிச்சுடுங்க… ” என்று சொல்லியபடி முதலுதவி பெட்டியில் இருந்த ஆயில்மென்ட்டை எடுத்து அவனது காயத்தில் பூசியபடி கெஞ்சிக் கொண்டே இருக்க அவளையே எந்த சலனமும் இல்லாமல் பார்த்துக் கொண்டு இருந்தான் வினய்.
அவனது சலனமில்லாத பார்வை அவளை மேலும் பயமுறுத்தியது. ஒரு வேளை கோபத்தில் இருக்கிறானோ என்று எண்ணி அலைப்புற்றது அவள் உள்ளம்.
“வினய் ப்ளீஸ் வினய்.. என்னை மன்னிச்சுட்டேன்னு சொல்லுங்களேன்…. ” என்று அவள் அவனைப் பார்த்து கெஞ்சும் குரலில் கேட்க அவளை ஒருமுறை தீர்க்கமாய்ப் பார்த்தான்.
“ஓகே ஆதிரா. நான் உன்னை மன்னிக்கிறேன். ஆனால் ஒரு கன்டிஷனோட… ” என்றான் அவளைப் பார்த்து.
அவள் குழப்பத்துடன் என்ன கன்டிஷன் என்று கேட்க ” நான் ஒரு கேள்வி கேட்பேன்.. அதுக்கு எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் உன் மனசுல என்ன இருக்கோ அதே பதிலை மட்டும் சொல்லணும்… ” என்று கேட்க அவள் சரியென்று தலையாட்டினாள்.
அவன் கேள்வியைக் கேட்க வருவதற்குள் மேலாளாரின் கர்ண கொடூரமான குரல் மீண்டும் ஒலித்தது.
“காபி தானே கொட்டுச்சு… என்னமோ ஆசிட்டே கொட்டுனா மாதிரி பில்ட் அப் தரீங்க.. போங்க போய் வேலையை பாருங்க… “என்று அவர் சொல்ல கடுப்புடன் எழுந்த வினய் வேண்டுமென்றே அவர் மேல் சூடான காபியை கொட்டிவிட்டு அவரைப் பார்த்து முறைத்தான்.
அந்த குளம்பியின் வெம்மை தாங்காமல் உஸ் உஸ் என்று வலியால் கத்திய அவரை அமர்த்தலாக பார்த்தவன் ” மேலாளர் ஐயா காபி தானே கொட்டுச்சு… அதுக்கு எதுக்கு ஆசிட் கொட்டுனா மாதிரி கத்துறீங்க… ” என்று அவர் சொன்ன மாதிரியே சொல்லிவிட்டு அவரைப் பார்க்க அவரோ அவனை எரிப்பது போல் முறைத்தார்.
வினய்யும் பதிலுக்கு முறைக்க இடையில் வந்த ஆதிரா ” சார் எங்களோட டுயூட்டி டைம் முடிஞ்சுடுச்சு நாங்க கிளம்புறோம்..” என்று சொல்லிவிட்டு வினய்யை கிட்டத்தட்ட இழுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.
அவனை முறைத்துப் பார்த்தபடி ” இதெல்லாம் சரியில்லை வினய்… அவர் பாவம்…எதுக்கு அவர் மேலே காப்பியை ஊத்துன?” என்றாள் கோபமாக
“எது அவன் பாவமா? அவன் வாயை ஆசிட் ஊத்தி பொசுக்குற அளவுக்கு அவன் மேலே கோவம் இருக்கு… ப்ளீஸ் ஆதிரா அவனுக்கு வக்காலத்து வாங்காதே… ” என்று கோபமாக சொன்னவன் காயம்பட்ட கை உடன் வண்டியை ஸ்டார்ட் செய்துவிட்டு அவள் ஏறுவதற்காக காத்து இருந்தான்.
ஆனால் அவளோ ஏறாமல் அவனையே கோபமாக பார்த்து முறைத்தபடி நின்றாள்.
“வினய் உங்களுக்கு அதிகமா கோபம் வருது… இது எல்லாம் சரியே இல்லை…. முதலிலே அவர் கிட்டே போய் சாரி கேளுங்க… ” என்று அவள் சொல்ல அவனது பைக்கின் ஆக்சிலேட்டரை இன்னும் வேகமாக திருகினான். அதில் அவனது கோபத்தின் அளவு அப்பட்டமாக தெரிந்தது.
“ஆதிரா உனக்கு அவனோட உண்மையான முகம் தெரியாது.. தெரிஞ்சா கஷ்டப்படுவ… அதனாலே தான் உன் கிட்டே சொல்லாம இருக்கேன்… நான் பண்ணதுல எந்த தப்பும் இல்லை… நீயும் நான் எந்த தப்பும் பண்ணலனு நம்புனா இந்த பைக்ல ஏறி உட்காரு… ” என்று அவன் சொல்ல இரண்டு நொடி தயங்கியவள் பின் வேகமாக நடந்து சென்று வினய்யின் பைக்கில் ஏறிக் கொண்டாள்.
“நான் எதையும் சொல்லாமயே என் மேலே நம்பிக்கை வைச்சதுக்கு தேங்க்ஸ் ஆதிரா… ” என்ற மனதார சொல்லியவன் மெதுவாக வண்டியை நெடுஞ்சாலையில் செலுத்தினான்.
பின்னால் அமர்ந்து இருந்த ஆதிரா
“வினய் நீங்க எதுவோ என் கிட்டே கேட்கணும்னு சொன்னீங்களே.. அப்போ தான் என்னை மன்னிப்பேனு வேற சொன்னீங்களே… ” என்று அவனுக்கு நினைவூட்ட மெதுவாக வண்டியை ஓரங்கட்டினான்.
ஆதிரா கீழிறங்கி அவனைப் பார்க்க அவனும் நேராக அவளைப் பார்த்து ” ஆதிரா நான் கேட்கப் போற இந்த கேள்விக்கு எந்த தயக்கமும் இல்லாம பதில் சொல்லணும்… ” என்று மீண்டும் அவளிடம் சொல்ல சரியென்று அவளும் தலையாட்டினாள்.
“ஆதிரா நீ எந்தெந்த விஷயத்துல எல்லாம் உனக்கு யாருமே இல்லைனு ஃபீல் பண்ணி இருக்க… எப்போ எல்லாம் உன் தனிமையை நினைச்சு உனக்கே கஷ்டமா இருக்கும்? எப்போ எல்லாம் உன் பக்கத்துல யாராவது இருந்தா நல்லா இருந்து இருக்கும்னு ஃபீல் பண்ணி இருக்கே… ” என்று ஒரே கேள்வியையே பல கேள்விகளாய் அவளைப் பார்த்துக் கேட்டான்.
அந்த கேள்விகள் அவள் முகத்தில் ஒரு சோக முறுவலை வர வைத்து இருந்தது.
அந்த முறுவலோடே அவனைப் பார்த்தவள்
“வினய் நம்ம காய்ச்சலுக்கு நாமளே மெடிக்கல் ஷாப் வரைப் போய் மாத்திரை வாங்கிறது எவ்வளவு கொடுமை தெரியுமா? நலம் விசாரிக்காம யாருமே இல்லைனு காய்ச்சல் கூட என் கிட்டே இருந்து வேகமாக போயிடும்.
கண்ணு பட்டுடுச்சேனு சுத்தி போட கற்பூரம் எலுமிச்சம்பழம் இருந்தாலும் சுத்தி போடுறதுக்குனு அம்மா இருக்க மாட்டாங்க. காத்து கருப்பு அண்டிட கூடாதுனு கையில இதுவரை யாரும் கயிறு கட்டுனதே இல்லை.
இந்த காலத்துல காத்து கருப்பு எதுவும் இல்லை எல்லாம் மூட நம்பிக்கை தானு மூளைக்கு புரிஞ்சாலும் ஏதாவது தப்பி தவறி பிள்ளைக்கு ஆகிடப் போதுன்ற அந்த பரிதவிப்பும் அன்பும் சுமந்து இருக்கிற அந்த கயிறு இதுவரை என் கையிலே சுமந்ததே இல்லை.
எப்போவாது தான் புடவை கட்டுவேன்.. அந்த டைம்ல ப்ளீட்ஸை எடுத்து விட தங்கச்சியோ இல்லை அம்மாவோ இல்லையேனு நிறைய முறை ஃபீல் பண்ணி இருக்கேன்.
ரொம்ப வருத்தமா இருக்கும் போது என்னை யாராவது அவங்க தோளிலே சாய்ச்சுக்க மாட்டாங்களானு கஷ்டமா இருக்கும்.
தேம்பி அழுதா கூட பக்கத்துல உட்கார்ந்து முதுகை தடவி கொடுத்து ஆறுதல் சொல்ல யாரும் இருக்க மாட்டாங்க.
நம்மளை நாம தான் பார்த்துக்கணும்.
என்ன தான் நான் ஸ்ட்ராங் எனக்கு யாரும் வேண்டாம்னு எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கிட்டாலும் யாராவது எனக்குனு இருந்தா நல்லா இருக்குமேன்ற ஏக்கம் ஒரு பக்கம் இருக்க தான் செய்யுது… ” என்று ஆதிரா சொல்லி முடிக்க வினய்யின் கண்களோ லேசாக கலங்கி இருந்தது.
இதை சொல்லும் போது அவளது குரலில் ஒரு சொட்டு வருத்தம் கூட இல்லை. அவளது முகத்தில் சோகம் இல்லை. கண்களில் கலக்கம் இல்லை. ஆனால் அவளது உணர்வுகளை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.
சட்டென்று அவளது கைகளைப் பிடித்தான். ஆதிரா திகைத்துப் போய் அவனைப் பார்க்க அவனோ மறுகையால் தன் சட்டைப் பாக்கெட்டை துழாவி அதில் இருந்து ப்ரேஸ்லெட் போல் இருக்கும் ஒரு கயிறை எடுத்தான்.
“ஆதிரா இந்த கயிறு சாமி கயிறு… எங்க அம்மா நாங்க வெறும் மஞ்சளாவோ இல்லை சிவப்பாவோ இருந்தா போட மாட்டோம்னு இதை ப்ரேஸ்லெட் மாதிரி செய்து எங்க கிட்டே கொடுத்தாங்க… இது எப்போவும் என் கிட்டே பத்திரமா இருக்கும்.. இனி இது உன் கிட்டே பத்திரமா இருக்கட்டும்… ” என்று சொன்னவன் அவளது கைகளில் அந்த சாமிக் கயிறுப் போல் இருக்கும் ப்ரேஸ்லெட்டை அவள் கையில் அணிவித்தான்.
அவளோ அவன் அணிவித்த கயிறை திரும்ப கழற்றிக் கொடுக்க முடியாத தர்ம சங்கடத்தில் தவித்து நின்றாள்.
“இந்த கயிறு உனக்கு ஒன்னும் ஆகிடக் கூடாதேன்ற என்னோட பரிதவிப்பையும் என்னோட அன்பையும் தான் சுமந்துக்கிட்டு இருக்கு… என் மேலே அன்பு இருக்கிற வரை இந்த கயிறு உன் கையிலே இருக்கணும்… ” என்று அவன் சொல்ல
அவளோ ” அப்போ நான் சாகுற வரைக்கும் இந்த கயிறு என் கையிலே தான் இருக்கும்… ” என்றாள் நம்பிக்கையாக..
அன்று அவள் நம்பிக்கையாக சொன்ன வார்த்தைகள் இப்போதும் அவள் கண் முன்னால் நிழலாடியது.
அவள் கையில் இப்போது இடமும் வலமும் பெண்டுலம் போல் ஆடிக் கொண்டு இருந்த அந்த கயிறையே இப்போது வெறுமையாய்ப் பார்த்துக் கொண்டு இருந்தாள் ஆதிரா.
பாசத்துடன் கட்டிக் கொண்ட இதேக் கயிற்றை அவன் முகத்திற்கு நேராக விசிறியடித்து வந்ததும் அவள் நியாபகத்தில் நிழலாட சட்டென தீயில் பட்ட விரலைப் போல அந்த கயிறை சட்டென்று உதறித் தள்ளினாள்.
என் நம்பிக்கையை உடைச்ச உன்னை எப்பவும் நான் நம்ப மாட்டேன் வினய். நீ எவ்வளவு தான் நல்லவன் போல நடிச்சாலும் உன் நல்லவன் முகத்திரைய நான் நிஜம்னு நம்பி இந்த முறையும் ஏமாற மாட்டேன் வினய் என்று உறுதி எடுத்துக் கொண்ட ஆதிராவின் மனது இந்த முறை சலனமில்லாமல் அந்த பறவைக் கூட்டத்தைப் பார்த்தது.