காதல் சதிராட்டம்-22a
காதல் சதிராட்டம்-22a
வெளீர் வானையே வெற்றுக் கண்களோடு வெறித்துக் கொண்டு இருந்த வினய்யின் தோள் மீது ஒரு கை விழுந்தது. திரும்பிப் பார்ததான் ப்ரணவ் தான் நின்றுக் கொண்டு இருந்தான். வினய் எந்த சலனமும் இல்லாமல் மீண்டும் வானத்தைப் பார்க்கத் துவங்கினான்.
“அண்ணா உங்க கிட்டே நான் ஒன்னு கேட்பேன்.. நீங்க உண்மையை சொல்லனும்… ” என்று அவன் பீடிகை போட வினய் உதட்டில் சின்ன சிரிப்பு.
“நான் நல்லவனா இல்லை கெட்டவனானு கேட்கப் போறீயா ப்ரணவ்.. ” என்று திரும்பிக் கேட்டான். அதைக் கேட்டு லேசாக ப்ரணவ் பதறினான்.
“ஐயோ அண்ணா எனக்கு நீங்க நல்லவங்கன்ற விஷயத்துல எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் எந்த சம்பவம் அண்ணி முன்னாடி உங்களைக் கெட்டவனாக்குச்சுன்ற விஷயத்தை நான் தெரிஞ்சுக்கணும் அண்ணா…. ” என்று ப்ரணவ் கேட்க வினய்யின் இதழ்களில் உதிர்த்த விரத்திப் புன்னகைக்கு பின்னால் கடந்து போன காட்சிகள் எல்லாம் விரிந்தது.
💐💐💐💐💐💐💐💐💐
பல வர்ண விளக்குகள் ஒளிர்ந்து அந்த மேடையே பளபளப்பாக மின்னிக் கொண்டு இருந்தது. அதை விட அதிகமாக மிளிர்ந்தாள் ஆதிரா.
அந்த மேடையை தன் குயில் குரலால் ஆசிர்வதித்துக் கொண்டு இருந்தாள். அவள் பாடுவதையே இமைக்காமல் கேட்டுக் கொண்டு இருந்தான் வினய். அவன் உள்ளத்தில் ஏதோ ஒரு சிலிர்ப்பு அதுவும் ஆதிரா அந்த வரிகளைப் பாடும் போது வினய்யின் வசம் அவனது உயிர் இல்லை. அது நேராக ஆதிராவை நோக்கி அவள் காலடியில் விழுந்ததுப் போல் ஒரு பிரம்மை.
சொக்குப் பொடி கொண்ட
சுடர் விழியா?
திக்கி திக்கி வந்த
சிறு மொழியா?
எது எது என்னை இழுத்தது
நீ சொல்லடி..
8 மில்லிமீட்டர்புன்னகையா
முத்து பற்கள்சிந்தும் முதல் ஒளியா எதுஎது என்னை இழுத்தது நீசொல்லடி..
முகத்தில் இருந்தபிள்ளை குறும்பா மூடிகிடந்த ஜோடி திமிரா
என்ன சொல்லஎப்படி சொல்ல எதுகைமோனை கை வசம் இல்ல
உன்னை எண்ணிகொண்டு
உள்ளே பற்றிகொண்டு
உள்ளம் நோகுதடி
என் உச்சி வேகுதடி
நீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா என்னை மெல்ல மெல்ல
கொல்ல வரும் மோகினியா?
என்று ஆதிரா அந்தப் பாட்டை பாடி முடித்துவிட்டு கண்களைத் திறந்துப் பார்க்க அந்த கருவிழியில் தன்னைத் தொலைத்துவிட்டான் வினய்.
அந்த காதல் என்னும் இரண்டு எழுத்துக்குள்ளே அவன் மனம் ஓடிப் போய் புகுந்துக் கொண்டது அவனே அறியாமல்.
அவன் மூச்சு தடதடவென துடிக்க ஆரம்பித்த சமயம் ஆதிரா அவனை நோக்கி வந்துக் கொண்டு இருந்தாள்..
“எப்படி இருந்தது வினய் நான் பாடுனது??… நாளைக்கு ஃபைனல்க்கு நான் செலக்ட் ஆகிடுவேனா… ” என கேட்க அவன் புன்னகையுடன் ஆமாம் என்று தலையசைத்தான்.
அதில் மகிழந்தவள் ” என் குரு நீங்களே சொல்லியாச்சு… கண்டிப்பா அப்போ நான் செலக்ட் ஆகிடுவேன்.. போடு ரகிடரகிட…”என்றாள் குதூகலத்துடன்.
அவளின் குறும்புத்தனத்தை சந்தோஷத்துடன் பார்த்துக் கொண்டு இருந்த வினய்யின் அருகே ஐஸ்வர்யா வந்து நின்றாள்.
“வினய் எனக்கு விஷ் பண்ணி அனுப்பேன்… நான் ஜெயிக்க… “என்று சொல்ல வினய் லேசான முறுவலுடன் ஆல் தி பெஸ்ட் சொல்லி அனுப்பினான்.
ஐஸ்வர்யாவும் மிக நன்றாக பாடிவிட இறுதிச் சுற்றிற்கு ஆதிராவும் ஐஸ்வர்யாவும் தேர்வாகிவிட்டனர்.
ஆனால் இறுதிச் சுற்று நாளைக்கு தான் என்பதால் ஆதிரா ஐஸ்வர்யா வினய் விமல் தாங்கள் ஏற்கெனவே முன்பதிவு செய்து இருந்த ஹோட்டலிற்கு வந்தனர்.
கட்டிலின் மேல் சோர்வாக அமர்ந்த ஆதிராவிற்கும் ஐஸ்வர்யாவிற்கும் வினய் தண்ணீர் எடுத்துக் கொடுக்க இருவரும் புன்முறுவலோடு வாங்கிக் கொண்டனர்.
” நீங்க ரெண்டு பேரும் நாளைக்கு கலந்துக்கப் போற போட்டியோட முடிவு எப்படி இருந்தாலும் நீங்க அதை ஸ்போர்ட்டிவா எடுத்துக்கணும்… ” என்று சொல்ல ஆதிரா புன்முறுவலோடு தலையாட்டினாள்.
அப்போது ஐஸ்வர்யாவிற்கு அழைப்பு வர அவள் அங்கிருந்து நகர்ந்து பால்கனிக்கு சென்று இருந்தாள். அழைத்தது அவளுடைய அம்மா தான்.
அழைப்பை ஏற்று காதில் வைத்தவள்
” சொல்லுங்க மா..”என்றாள்.
“ஹோட்டல்க்கு வந்துட்டியா??… இப்போ தனியா தான் இருக்கியா?”
“ஆமாம் மா தனியா தான் இருக்கேன் என்ன விஷயம் சொல்லுங்க… அம்மா நான் பாடுன பாட்டு எப்படி இருந்தது உங்களுக்கு பிடிச்சு இருந்துதா?” என்று ஆர்வமாக கேட்டாள் அவள்.
“உன்னை விட அந்த ஆதிரா பொண்ணு நல்லா பாடுனா. என்ன அழகான குரல் அந்த பொண்ணுக்கு. ஆனால் நீயும் தான் பாடுனீயே உன் கீச்சு குரலை வெச்சுக்கிட்டு. நீ என்ன பண்ணுவியோ இல்லை ஏது பண்ணுவியோனு எனக்கு தெரியாது… நாளைக்கு அந்த ஆதிரா பொண்ணை நீ ஜெயிச்சுக் காட்டணும்… என் பொண்ணு தான் ஜெயிப்பானு நான் எல்லார் கிட்டேயும் சொல்லி வைச்சு இருக்கேன். நாளைக்கு நீ ஜெயிச்சுட்டு தான் வீட்டுக்கு வரணும்… ” என்று பேசிக் கொண்டே சென்றவர் ஐஸ்வர்யாவின் பதில் மொழியைக் கேட்காமலேயே போனை வைத்துவிட்டார்.
அவரது வார்த்தைகளைக் கேட்ட ஐஸ்வர்யாவிற்கோ குழப்பத்துடன் கூடிய எரிச்சல் வந்தது.
“இந்த அம்மாவுக்கு வேற வேலையே இல்லை.. ” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள் வெளியே வரும் போது சரியாக வினய்யின் வார்த்தைகள் அவள் இதயத்தில் வந்து குத்தியது.
“டேய் விமல் கண்டிப்பா ஐஸ்வர்யா தோத்துடுவா டா… ஆதிராவோட வாய்ஸ்க்கு செட் ஆகுறா மாதிரி கண்டிப்பா ஐஸ்வர்யாவோட குரல்க்கு அது செட் ஆகாது… “என்ற வினய்யின் வார்த்தைகள் அவள் இதயத்தில் எரிதழலை பற்ற வைத்துவிட்டது.
ஐஸ்வர்யாவிற்கு அப்போது தான் தானும் ஆதிராவும் மட்டும் தான் தனித்து போட்டிக் கொள்ளப் போகிறோம் என்ற எண்ணமே விதிர்த்து எழுந்தது.
முதல் நாள் அவள் பட்ட அவமானம் ஏனோ இன்று அவளது கண்ணின் முன் விரிந்தது.
இந்த போட்டியில் தான் ஆதிராவை வென்றுக் காட்டி அவளுக்கு நான் சிறிதும் சளைத்தவள் இல்லை என்று நிரூபிக்க வேண்டும் என்ற எண்ணம் கிளர்ந்து எழுந்தது. சப்தம் இல்லாமல் அங்கிருந்து நகர்ந்தவள் தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் புகுந்துக் கொண்டாள்.
இங்கோ வினய் விமலிடம் புலம்பிக் கொண்டு இருந்தான்.
“ஏன்டா இந்த ஐஸ்வர்யா சொல் பேச்சுக் கேட்கவே மாட்டேங்குறா. நான் எத்தனையோ வாட்டி சொல்லிட்டேன் அந்த பாட்டு ஆதிரா வாய்ஸ்க்கு தான் செட் ஆகும். உனக்கு செட் ஆகாதுனு..
ஐஸ்வர்யாவோட குரல் நல்லா ஜில்லுனு இருக்கும்.. அந்த குரல் எல்லோரையும் ஆட்டம் போட வைக்கும்.. ஆனால் அவள் யமுனை ஆற்றிலே போட போறேனு சொல்றது எனக்கு ஷாக்கிங்கா இருக்கு.. இது அவளோட விருப்பம் நம்ம தலையிடக் கூடாதுனு நினைச்சாலும் அவள் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடக்கூடாதேன்ற நல்லெண்ணத்துக்காக ஒரு தடவை சொல்லிப் பார்த்தேன். ஆனால் அவள் கேட்கவே இல்லை… என்ன தான் நான் ஆதிராவுக்கு ட்ரைனிங் கொடுத்து இருந்தாலும் இவ்வளவு நாள் பழகின என் ப்ரெண்ட் ஐஸ்வர்யா தோற்கிறது விரும்பல.. இரண்டு பேரும் எனக்கு முக்கியம் விமல்… இரண்டு பேருக்குள்ளே நடக்கிற கம்பெடிஷன் ஹெல்தியா இருக்கணும்… ” என்ற வினய்யின் நியாயமான விளக்கத்தை ஐஸ்வர்யா கேட்காமலேயே சென்றுவிட்டாள்.
அவளுள் கோபம் கனலாய் கொதிக்கத் தொடங்கியது. அந்த கோபம் நேராக ஆதிராவின் மேல் திரும்பியது.
அந்த போட்டியை எதை செய்தாவது வென்றுவிட வேண்டும் என்ற வெறி அவள் உள்மனதினுள் ஊற்றெடுக்கத் தொடங்கியது. ஒரு முடிவுடன் எழுந்து ஆதிராவின் அறைக்குள் சென்றவள் திரும்பி தன் அறைக்குள் வரும் போது அவள் முகத்தினுள் குற்றவுணர்வு கலந்து இருந்தது.
கடிகாரம் பத்து மணி ஆகிவிட்டதை அறிவிக்க மூன்று முறை ஒலித்து நின்றது.
இன்னும் அரை மணி நேரத்தில் இறுதிப் போட்டி தொடங்கவிருக்க ஆதிராவின் கதவு மட்டும் திறக்கப்படவே இல்லை.
வெளியே பதற்றத்துடன் வினய்யும் விமலும் கதவைத் தட்டிக் கொண்டு இருந்தனர்.
குற்றவுணர்வில் ஐஸ்வர்யாவின் தலைத் தொங்கிக் கொண்டு இருந்தது.
நேற்று வந்த முன்கோபத்தில் அவள் தான் ஆதிராவிற்கு தூக்க மாத்திரை கலந்த பழச்சாற்றைக் கொடுத்துவிட்டு இருந்தாள்.
அதன் வீரியத்தால் தான் ஆதிரா எந்த உணர்வுமின்றி நன்றாக உறங்கிக் கொண்டு இருந்தாள்.
அவளை எழுப்ப முயன்று தோற்றுப் போய் வினய் சோர்வாக ஐஸ்வர்யாவின் பக்கம் திரும்பினான்.
“ஐஸ்வர்யா நீ ஸ்டேஜ்க்கு போ… நான் ஆதிராவை எப்படியாவது எழுப்பிக் கூட்டிட்டு வரேன்… நீ எந்த பதற்றமும் இல்லாமல் நல்லா பாடு ஓகே… ஆல் தி வெரி பெஸ்ட்… ” என்று சொன்னவனை குழப்பமாகப் பார்த்தாள்.
“அப்போ உனக்கு ஆதிரா ஜெயிக்கணும்னு ஆசை இல்லையா வினய்?” என்றவளைக் கோபமாக முறைத்தான்.
“பைத்தியம் எனக்கு நீங்க ரெண்டு பேருமே முக்கியம்… பட் என்ன ஒரு வருத்தம்னா நீ தேர்ந்தெடுத்த பாட்டு உன் குரலுக்கு பொருத்தமா இருக்காது… அதுக்கு பதிலா நீ வேற ஒரு பாட்டு பாடி இருந்தா கண்டிப்பா ஆதிராவுக்கும் உனக்கும் டஃப் ஃபைட்டா இருந்து இருக்கும்” என்றவனின் வார்த்தைகளில் உண்மையே இழைந்து இருந்தது.
அதை உணர்ந்ததும் தன்னையுமறியாமல் ஐஸ்வர்யாவின் கண்களில் குளம் கட்டியது.
அவள் வருத்தப்பட்டு நிற்பதைக் கண்ட விமலோ அவளது கைகளைப் பற்றி இழுத்து கொண்டு போனான்.
“நீ எதைப் பத்தியும் யோசிக்காம பாடு ஐஸ். கண்டிப்பா வினய் ஆதிராவைக் கூட்டிட்டு வந்துடுவான். ஹோட்டலிலே ஸ்பேர் கீ இருக்கும். அதை வெச்சு எப்படியாவது டோரை ஓப்பன் பண்ணிடுவான்… ” என விமல் சொல்லி கொண்டு இருக்கும் போதே ஐஸ்வர்யா ஸ்தம்பித்துப் போனாள்.
நேற்று அவள் கோபத்தில் அந்த ஸ்பேர் கீ ஐ யாருக்கும் கிடைக்காதவாறு தூரே தூக்கிப் போட்டுவிட்டாள்.
இப்போது ஆதிராவை எழுப்புவதற்கு எந்த வழியும் இல்லை. அவளே எழுந்து வந்தால் மட்டும் தான் உண்டு என்று அவள் நினைத்த மாத்திரத்தில் மீண்டும் கண்களில் ஆறாக நீர் பெருகியது.
அந்த போட்டியில் பாடாமல் விலகிவிடலாமா என நினைக்கும் போது மேடைக்கு வருமாறு அவளது பெயர் அழைக்கப்பட்டது.
வேறு வழியின்றி கண்களைத் துடைத்துக் கொண்டவள் மேடைக்கு சென்று பாடி முடிக்க சுற்றி இருந்தவர்களின் கரகோஷம் அவளது காதை நிறைத்தது.
ஆனால் அதைக் கண்டு அவளது கண்களில் சந்தோஷம் தோன்றவில்லை. நம்பிக்கைத் துரோகம் செய்தவளுக்கு எப்படி புன்னகை வரும்?
நன்றாக பாடியதற்காக அவளுக்கு கொடுக்கப்பட்ட அந்த வெற்றிக் கோப்பை கூட அவளது இதயத்தை குளிர்விக்கவில்லை. நேராக அந்த பரிசுக் கோப்பையை வாங்கிக் கொண்டு ஆதிராவின் அறையை நோக்கி ஓடி வந்தாள்.
எதிரே வினய் கவலையாக குறுக்கும் நெடுக்குமாய் நடந்துக் கொண்டு இருந்தான். அவனருகே பதட்டமாக சென்ற விமல் இன்னுமா ஆதிரா எழுந்துக்கலை என்றான் கவலையாக.அவன் சோகமாக தலையசைத்து ஆமோதித்தான்.
“நான் தப்பு பண்ணிட்டேன் டா.. ஆதிரா தூங்கினா எழுந்துக்க மாட்டானு எனக்கு தெரியும்.. நான் ஐஸ்வர்யாவை அவள் கூடவே இருக்க சொல்லி இருந்தா இந்த பிரச்சனை வந்து இருக்காது.. எழுப்ப யாரும் இல்லைனா அவள் தூங்கிக்கிட்டே இருப்பா டா… ” என்று வினய் கலங்கிய குரலில் சொல்ல கதவு இடிபடும் ஓசை கேட்டு மூவரும் திரும்பிப் பார்த்தனர்.
எதிரே ஆதிரா தூக்கக்கலக்கத்துடன் நின்றுக் கொண்டு இருந்தாள்.
“குட் மார்னிங்… “வினய் என்று சோம்பல் முறித்து சொன்னவளுக்கு திடீரென இன்று இருக்கும் போட்டி நியாபகம் வர சட்டென்று பதற்றமானாள்.
“ஐயையோ நான் இன்னும் ரெடியே ஆகலையே… ஐஸ்வர்யா ஒரு டூ மினிட்ஸ் இதோ கிளம்பி வந்துடுறேன்.. ” என்று சொல்லித் திரும்பியவள் கண்களுக்கு அப்போது தான் அந்த கடிகாரம் பட்டது. இதயம் தடுக்கென்றது அவளுக்கு.
கலவரமாக திரும்பிப் பார்த்தவளுக்கு அப்போது தான் ஐஸ்வர்யாவின் கைகளில் இருந்த கோப்பை கண்களில் தட்டுப்பட்டது, நண்பர்களின் பரிதாபமான முகமும்..
அதைக் கண்டதும் என்ன நடந்து இருக்கும் என்று மனது ஒரு நொடியில் ஊகித்துவிட்டது.
ஏமாந்து போன குரலில் ” எல்லாமே முடிஞ்சுடுச்சா?” என்று வெறுமையாக கேட்டு திகைத்துப் போய் நின்றவளை சட்டென்று இறுக அணைத்துக் கொண்டான் வினய்.
புயல் ஒன்று புரட்டினாலும்
புதையாத மனமடி..
உன் ஒற்றைத் துளி
கண்ணீரிலே என் மனம்
உந்தன் சிரத்தின் அடியிலடி..