காதல் சதிராட்டம்21b

காதல் சதிராட்டம்21b

கன்னிக்காற்றோடு ஏதோ ஒரு வாசம் கூடல் கொண்டு அதை நறுமணம் ஆக்கியது. அந்த காற்றை முகர்ந்தபடி வினய் வந்து டைனிங் டேபிளில் அமர்ந்தான். அவனருகே வந்து ப்ரணவ்வும் உத்ராவும் அமர அவர்களுக்கும் அந்த வாசனை கவனத்தை ஈர்த்தது.

அந்த வாசனையை நுரையீரல் வரை இழுத்து முகர்ந்த ப்ரணவ் ” என்ன கமலா அக்கா இன்னைக்கு வாசனையே பிரமாதமா இருக்கு?” என்று உரக்க சொன்னான்.

ஆனால் உள்ளிருந்து எதிர்ப்பட்டது சமையல் செய்யும் கமலா அக்கா இல்லை, ஆதிரா.

வியப்பின் சாயல் மூவரது முகத்தில் சட்டென்று வெளிப்பட்டது.

“அண்ணி நீங்களா சமைச்சீங்க??… ” என்றான் ப்ரணவ் வியப்பாக.

“ஆமாம் ப்ரணவ்… வீட்டிலேயே சும்மா இருக்க ஏனோ போர் அடிச்சது அதான் சமையல் பண்ண இறங்கிட்டேன்… ” என்றபடி சமைத்த உணவுகளை எல்லாம் கொண்டு வந்து டேபிளின் மீது கொண்டு வந்து அடுக்கினாள்.

அங்கே வைக்கப்பட்ட உணவுப் பொருட்களை எல்லாம் கண்டதும் வினய்யின் கண்கள் விரிந்தது… குறிப்பாக ஒரே ஒரு உணவின் மீது மட்டும் அவனது கவனம் எல்லாம் குவிந்தது.

அது அவனுக்கு மட்டுமே செய்யத் தெரிந்த உணவு. கல்லூரியில் படிக்கும் போது ஆதிராவிற்கு எப்படி செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து இருந்தான். இன்று அதே உணவை அவள் செய்ததைப் பார்த்ததும் கண்களில் புன்னகை மின்னல்.அதைக் கவனித்த ஆதிராவும் பதிலுக்கு புன்முறுவல் பூத்தாள்.

ப்ரணவ்விற்கு அவர்கள் இருவருக்கும் இடையில் நடந்த மௌன முறுவல் லேசாகப் புரிந்தது.

அவனுக்கும் தெரியும் அந்த உணவு வினய்யிற்கு மட்டுமே செய்யத் தெரியும் என்று.

லேசாக குரலைக் கணைத்து உத்ராவின் பக்கம் திரும்பியவன் “ஹே உத்ரா எனக்கு என்னமோ  அண்ணி கொஞ்சம் கொஞ்சமா அண்ணா பக்கம் சாயுறாங்கனு தோணுது… உனக்கு என்ன தோணுது ” என்று கேட்க உத்ராவிடம் இருந்து பதில் மொழியே வரவில்லை.

திரும்பி அவளைப் பார்த்தான். அவளோ மும்முரமாக அலைப் பேசியில் மூழ்கி இருந்தாள். அதைப் பார்த்ததும் ப்ரணவ்விற்கு கோபம் சுறுசுறுவென்று ஏறியது. அவள் கைகளில் இருந்து போனை வேகமாக பிடிங்கினான்.  உடனே உத்ராவின் கவனம் கலைந்துப் போய் அவனைப் பார்த்து முறைத்தாள்.

“ஏன்டா எருமை மாடு என் போனை பிடுங்குன…”

” நான் பேசுறதை மதிக்காம போனையே பார்த்துட்டு இருந்தா அப்புறம் எனக்கு என்ன மரியாதை…” என்றான் கோபமாக.

“ஓஹோ சார் இதே மரியாதையை எனக்கு கொடுத்தீங்களா? நான் பேசும் போது நீ கவனிக்காம போனை பார்த்து சிரிச்சு எத்தனை முறை என்னை அசிங்கப்படுத்தி இருப்ப… இப்போ நான் பண்ணா மட்டும் உனக்கு உறுத்துதாக்கும்… ” என்று உத்ரா கேட்க அவனிடத்தில் இப்போது எந்த பதிலும் இல்லை. அமைதியாகிவிட்டான்.

தான் காயப்படும் போது தான் அவனுக்கு புரிந்தது அவளை எவ்வளவு காயப்படுத்தி இருக்கிறோம் என்று.

அமைதியாக அவளிடம் போனை தந்துவிட உத்ராவிற்கு ஏனோ அவனது அமைதி மனதை நிரடியது.

“ஹே ப்ரணவ் ஏன் மூஞ்சு டொய்ங்குனு ஆகிடுச்சு?”

“சாரி… ” என்று ஒற்றை வார்த்தை சொன்னவன் அதன் பிறகு உத்ராவின் பக்கம் திரும்பவே இல்லை. வேக வேகமாக சாப்பிட்டு எழுந்துக் கொண்டான். உத்ராவும் அவனை சமாதானப்படுத்துவதற்காக சாப்பிடாமலேயே பாதியிலேயே எழுந்துப் போய்விட்டாள்.

அவர்கள் இருவரும் சரியாக சாப்பிடாததை கவனித்த ஆதிராவின் முகம் சோர்வாகிவிட்டது. பிடிக்காமல் எழுந்துவிட்டார்களோ சரியாக வயிறு கூட நிரம்பி இருக்காதே நான் சமைத்ததற்கு பதிலாக கமலா அக்கா சமைத்து இருந்தால் இருவரது வயிறாவது நிரம்பி இருக்குமோ என்று ஏதோ ஏதோ யோசனைகள் முகத்தில் படர வினய் அதைப் படித்துவிட்டான்.

மெல்லிய சிரிப்போடு அவளைப் பார்த்து சொன்னான்.

” மறுபடியும் இரண்டு பேரும் சண்டை போட்டு இருக்காங்க… அதான் ப்ரணவ் கோவமா எழுந்துப் போய் இருக்கான்… உத்ரா அவனை சமாதானப்படுத்துறதுக்காக பின்னாடியே போய் இருக்கா.. நீ எதுவும் கவலைப்படாதே ஆதிரா… ரெண்டு பேரும் பேசி சமாதானம் ஆகிட்டு பாத்திரத்தை ஒன்னா சேர்ந்து உருட்டி எல்லாத்தையும் காலி தான் பண்ண போறாங்க… நீ எதுவும் ஃபீல் பண்ணாம உட்கார்ந்து சாப்பிடு… ” என வினய் சொல்ல சின்னப் புன்னகையை உதட்டில் ஒட்டிக் கொண்டு அவனுக்கு எதிரே சாப்பிட அமர்ந்தவள் மனதினிலோ சிறியதாக ஒரு கேள்வி தோன்றியது. அதை அவனிடமே கேட்டுவிட்டாள்.

“ஆமாம் வினய் அவங்க ரெண்டு பேர் சண்டைப் போட்டதை நான் கவனிக்கவே இல்லை.. நீங்க எப்போ கவனிச்சீங்க?”

“நானும் கவனிக்கலை.. ஆனால்  ரெண்டு பேர் எழுந்துப் போகும் போது அவங்களோட முகத்தைப் பார்த்தேன்.. அதுலயே எனக்கு சண்டை தான் போட்டு இருக்காங்கனு கன்ஃபார்ம் ஆகிடுச்சு… ப்ரணவ்வை யாராலயும் அவ்வளவு சீக்கிரமா கோவப்படுத்த முடியாது… ஆனால் உத்ராவாலே மட்டும் தான் முடியும்..” என்று அவன் சொல்லிவிட்டு சாப்பிடுவதில் கவனமானான்.

“வினய் தப்பா எடுத்துக்காதே… எனக்கு மனசுல தோணுன ஒன்னை சொல்றேன்… ப்ரணவ்வும் உத்ராவும் நல்ல ஜோடினு என் மனசு சொல்லுது… ” என சொல்ல வினய்யோ அவளைப் பார்த்தான்.

“அது நம்ம கையிலே இல்லையே ஆதிரா… அது அவங்க ரெண்டு பேர் கையிலே தானே இருக்கு… ப்ரணவ் வேற ஒரு பொண்ணை காதலிக்கிறான்… உத்ரா இப்போலாம் அதிகமா போன் யூஸ் பண்றா… என்னவோ நடக்குது… ஆனால் என்னனு தெரியல.. நான் கவனிக்கலைனு ரெண்டு பேரும் நினைச்சுட்டு இருக்காங்க… ஆனால் நான் எல்லாத்தையும் பார்த்துக்கிட்டு தான் இருக்கேன்… ஆனால் ஒன்னு ஆதிரா…  இவன் அவனோட லவ்வர் கிட்டே சண்டை போட்டுட்டு பேசாம இருக்கான்… அவன் மனசுல அந்த வருத்தம் இருந்தாலும் அவன் வெளியே காமிச்சுக்கல… அவன் மனசோட சமநிலை கொஞ்சம் கூட குலையவே இல்லை.. ஆனால் உத்ரா கிட்டே சண்டை போட்டா அவன் முகமே வருத்தத்தைக் காட்டிக் கொடுத்துடும்… அவனாலே ஒரு நாள் கூட அவள் கிட்டே பேசாம இருக்க முடியாது… ” என்று வினய் சொல்ல ஆதிரா ஆமோதிப்பாக சிரித்தாள். 

வினய் ஒவ்வொரு உணவையும் ரசித்து ரசித்து சாப்பிட்டான். அவனுடைய தட்டில் இருந்த மொத்த உணவும் சட்டென்று காலியாகியது. வயிறு முட்ட சாப்பிட்டவன் நன்றாக நாற்காலியின் பின்னால் சாய்ந்துக் கொண்டு ஆதிராவைப் பார்த்தான்.

“உண்மையாவே எல்லாமே சூப்பரா இருந்தது ஆதிரா.. தேங்க் யூ சோ மச்… ” என்று சொல்ல பதிலுக்கு முறுவளித்தவள் தயக்கமாக சொன்னாள்.

” ரியலி தேங்க்ஸ் வினய்.. நீ இல்லைனா கண்டிப்பா என் ஏஞ்சலை நான் இழந்து இருப்பேன்… ” என்றவளது உதடுகள் தந்தியடித்தது.

“பரவாயில்லை ஆதிரா.. எனக்கு உன் சந்தோஷம் தான் முக்கியம்.. உன் சந்தோஷத்துக்காக நான் என்ன வேணும்னாலும் பண்ணுவேன்… ” என்றான் பதிலுக்கு.

அந்த பதிலைக் கேட்டதும் ஆதிராவின் இதழ்களில் விரக்தி புன்னகை சிந்தியது. இவ்வளவு நாள் அவனைப் பார்த்ததும் கொட்டித் தீர்த்திட வேண்டும் என்று அவள் வருடக்கணக்காக மனதில் சுமந்து இருந்த வலிகள் எல்லாம் வார்த்தையாய் வெளிப்படத் துவங்கியது.

“வினய் அப்போ என்  சந்தோஷத்துக்காக தான் அன்னைக்கு நீ அந்த காரியத்தை பண்ணியா? சத்தியமா நான் நீயா இருப்பேனு நம்பல வினய். ஆனால் என் நம்பிக்கையை நீ பொய் ஆக்கிட்ட… ” என்றவளது வார்த்தைகளில் ஏமாற்றத்தின் வலி ஊறி இருந்தது.

“இப்போ கூட நீ அது எதுவும் நடக்காத மாதிரி ரொம்ப கேஷீவால நடந்துக்கிறது எனக்கு கஷ்டமா இருக்கு வினய்… நீ என் கிட்டே ஒரு சாரி கூட கேட்கல… உன்னோட இன்டென்ஷன்லாம் என்னை அடையுறது மட்டும் தான் வினய் அதுக்காக இப்போ காதல்ன்ற வார்த்தையை பயன்படுத்துற.. முன்னாடி வேற முறையிலே என்னை நெருங்க நினைச்ச. ப்ளீஸ் இப்படி இரட்டை வேஷம் போட்டு என்னை மறுபடியும் ஏமாத்தாதே.  எனக்கு மறுபடியும் ஏமாந்து மீண்டு எழற சக்தி இல்லை… ப்ளீஸ் எனக்கு நீ நல்லவன் தான்ற நம்பிக்கை கொடுத்து மறுபடியும் நீ கெட்டவன் தான்னு நிரூபிக்காதே… ” என்று ஆதிரா உடைந்து அழ அவளை ஆறுதல் படுத்த எழும்பிய வார்த்தைகளை தொண்டைக்குள்ளேயே அடக்கிக் கொண்டு வேக வேகமாக அவளை விட்டு சென்றவன் தன் அறைக்குள் முடங்கிக் கொண்டான்.

ஆதிராவும் அதற்கு மேல் அங்கே அமராமல் தன் அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டாள்.

இங்கோ சமாதானம் ஆகிவிட்டு சாப்பிட வந்த ப்ரணவ்வும் உத்ராவும் அவர்கள் இருவருக்குள்ளும் நடந்த அந்த கடைசி சம்பாஷனையைக் கேட்டு அப்படியே உறைந்துப் போய் நின்றனர்.

அதை விட வினய் எந்த பதிலும் சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்து சென்றது தான் இருவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. அப்படி என்றால் வினய் தான் குற்றம் புரிந்தவனா?

Leave a Reply

error: Content is protected !!