காதல் சதிராட்டம்26

காதல் சதிராட்டம்26

கார் மெல்ல மெல்ல கொடைக்கானலை நெருங்க, ஆதிராவின் உள்ளத்தில் கலக்கம் கூடியது.

இந்த குற்றமுள்ள நெஞ்சுடன் வினய்யை எப்படி எதிர் கொள்வது? என மனம் அவளை நிரடியது. முகம் முழுக்க கவலைக் கப்பி கிடந்து.

விமல் அவளின் முகத்தை வைத்தே அவளின் மனதை தெரிந்துக் கொண்டான்.

“ஆதிரா இதுவரை வினய் கஷ்டப்பட்டதை விட இன்னைக்கு உன்னோட முகத்தை பார்த்தா தான் அதிகமா கஷ்டப்படுவான். ப்ளீஸ் இப்படி சோகமா இருந்து அவனை சோகமாக்காதே.”

“இல்லை விமல் நானும் இப்படி இருக்கக்கூடாதுனு தான் நினைக்கிறேன். ஆனால் என்னாலே முடியல. அந்த வார்டன் நாயை கொன்னுப் போட்டு இருந்தா தான் எனக்கு ஆத்திரம் அடங்கி இருக்கும். ஆனால் நீ தான் வேண்டாம்னு சொல்லிட்டே. “

“எதைக் கொடுத்து உங்க ரெண்டு பேரையும் அந்த வார்டன் நாய் பிரிச்சானோ, அது அவனுக்குக் கொஞ்சமும் உபயோகமேப்படாதபடி அவனோட ஆண்மையையே வெட்டி எடுத்துட்டான், வினய். அந்த வார்டனை உயிரோட விட்டு வெச்சதே தாய் இல்லாத  அவனோட ரெண்டு பொண்ணுங்களுக்காக தான். அதுல ஒரு பொண்ணுக்கு மூளை வளர்ச்சிக் கிடையாது. இன்னொரு பொண்ணு வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டதாலே இந்த வார்டன் வேலைக்கு போலைனாலும் இப்போ பிரச்சனை இல்லை அதான் நீ ப்ரின்சிபால் கிட்டே கம்ப்ளெய்ன்ட் பண்ணும் போது நான் தடுக்கல. “

“தனக்கு கெட்டது செய்தவங்களுக்குக் கூட வினய் நல்லது தான் பண்றான். ஆனால் அவனுக்கு ஏன் கடவுள் எந்த நல்லதும் பண்ணல? எதுக்காக இப்படி வரிசையா பல வேதனையை கொடுக்கணும்?  இது எல்லாத்தையும் விட நான் ஏன் அவனைத் தேள் மாதிரி வார்த்தையாலே கொட்டணும்? இது எதுவுமே நடக்காம இருந்து இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும் விமல். “

“விதியை யாராலும் மாத்த முடியாது ஆதிரா. ஆனால் இனி நடக்கப் போறதை நம்மளாலே சரியா மாத்த முடியும்.  சரியா மாத்திடுவ தானே?” என விமல் கேட்க ஆதிராவிடம் மறுமொழி இல்லை.

ஆழ்ந்த யோசனையில் சிக்கி இருந்தது அவளது புருவ முடிச்சுகள்.

💐💐💐💐💐💐💐

உத்ரா தூரத்தில் தெரிந்த ப்ரணவ்வையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தாள். இன்று ஏனோ ப்ரணவ்வை வேறு ஒருவனாக காட்டியது அவள்  விழிகள். அவனது வார்த்தைகள் அவளுடைய இதயத்தை குழப்பிவிட்டு இருந்தது.

ஏன் ப்ரணவ் வைஷாலியிடம் பேசும் போது எல்லாம் தன் உள்ளம் உடைந்தது என அவளுக்கு இப்போது புரிவதுப் போல் இருந்தது.

ப்ரணவ்வை இழக்கப் போகிறோம் என்ற போது அவளது இதயத்தில் தோன்றிய வலிக்கான ஆதிப்புள்ளியைக் கண்டுக் கொண்டாள். அது காதல் புள்ளி.

புள்ளி புள்ளியாக வைத்து பெரிய காதல் கோலத்தையே ப்ரணவ்வின் மீது அவள் வரைந்து வைத்து இருந்தால் அவளையே அறியாமல்.

அவளே நினைத்தாலும் அதன் ஊடே புகுந்து வெளியே வர முடியாத படி இறுக்கமாய் இழுந்து வைத்து இருந்தது தன்னுள், அந்த காதல் கோலம் இப்போது.

இனி ப்ரணவ்வை எப்படி எதிர்க் கொள்வது? உத்ராவிற்கு தயக்கமாக இருந்தது.

ஒரு வேளை அவன் தன் மீது உள்ள அன்பினால் அப்படி சொல்லி இருப்பானோ? நான் தான் காதல் என்று மாற்றிப் புரிந்துக் கொண்டேனோ? என அவள் குழம்பிக் கொண்டு இருந்த நேரம் அவளைக் குழப்பிவிட்டவனோ அவளின் முன்பு வந்து நின்றான்.

அவன் முகத்திலும் ஏகப்பட்ட தயக்கம் வழிந்தோடிக் கிடந்தது.

தான் அப்படி சொன்னதற்கு அவள் தன்னை தவறாக எடுத்துக் கொண்டாளோ சஞ்சலம் கொண்டபடி அவளைப் பார்த்தான். அவளும் அவனைத் தான் பார்த்தாள்.

இருவரது பார்வையும் அங்கே ஒரு புதுக் கவிதை எழுதிக் கொண்டு இருந்தது.

அது காதல் கவிதையாக இருக்கக்கூடாதா என்று இருவரது உள்ளமும் ஏக்க மூச்சைப் பெருமூச்சை ஏகமாய்விட்டது.

“உத்ரா. ” என்றவனது குரலில் என்றுமில்லாதா மென்மை இழையோடி இருந்தது.

“ப்ரணவ்” என்று பதிலுக்கு அழைத்தவளது குரலிலோ வெட்கக் கதிர் ஒளிர்ந்தது.

“நான்… எனக்கு… அது வந்து…  எப்படி ஆரம்பிக்கிறது” என அவன் மொத்த தைரியத்தையும் வரவழைத்து தன் காதலை தயங்கி தயங்கி சொல்லத் துவங்கிய நேரம் உத்ராவின் அலைபேசி இடையில் புகுந்து அலறியது.

அவ்வளவு தான் ப்ரணவ் உட்சபட்ட கோபத்திற்கு சென்றுவிட்டான்.

“அந்த வைபவ் எருமைமாடு தானே கால்  பண்றான். போடி போ. அவன் கிட்டேயே பேசு போ. நான் எதுக்கு உனக்கு இதுக்கு மேலே?” என்று அவன் கத்த உத்ராவின் முகத்தினிலோ புன்னகை விரிந்தது.

இவனுக்குள் இத்தனை பொறாமையா?

அவனது அந்த பொறாமைத் தீயை இன்னும் எரிய விட முடிவெடுத்துவிட்டாள்.

“இல்லை  ப்ரணவ் , நான் இப்போ வைபவ் கிட்டே பேசப் போறது இல்லை. முதலிலே வைபவ்க்கு என்னோட போட்டாவை அனுப்பிட்டு அப்புறம் தான் அவன் கிட்டே பேசப் போறேன். ” என்று உத்ரா சொல்ல இங்கோ ப்ரணவ்வின் முகத்தில் எரிச்சல் மண்டியிட்டது.

வைபவ்விற்கு கால்கள் ஓரிடத்தில் நிற்கவில்லை.

தனக்கு இத்தனை நாட்களாக குறுஞ்செய்தி அனுப்பி தன்னை குழம்ப வைத்துக் கொண்டு இருந்தவள் இன்று போட்டாவை அனுப்புகிறேன் என்றாளே ஏன் இன்னும் அனுப்பவில்லை.

எதற்காக என்னை காக்க வைத்துக் கொண்டு இருக்கிறாள்?

ஆமாம் நான் ஏன் அவள் நிழற்படத்திற்காக இப்படி காத்துக் கொண்டு இருக்க வேண்டும்?

வேறு ஒருவளை காதலிக்கும் நான் இன்னொருத்தியின் புகைப்படத்திற்காக காத்துக் கொண்டு இருப்பது சரியா?

இது அவளுக்கு நான் செய்யும் துரோகம் இல்லையா என்று எண்ணியவன் அந்த அலைபேசியை சோஃபாவில் போட்டுவிட்டு தன் வேலையில் கவனம் செலுத்தத் துவங்கினான்.

இங்கோ கைகளில் அகப்படாமல் ஓடிக் கொண்டு இருந்த உத்ராவைப் பிடிக்க முடியாமல் ப்ரணவ் மூச்சு வாங்கியபடி நின்றான்.

“ஹேய் உத்ரா அந்த எருமைமாடுக்கு மட்டும் உன் போட்டாவை அனுப்புன நாளைக்கு உனக்கு இறுதி ஊர்வலம் கன்ஃபார்ம். ஒழுங்கா அவன் நம்பரை போன்ல இருந்து டெலீட் பண்ணு ” என்று ப்ரணவ் சொல்லிக் கொண்டு இருக்கவும் “யாரு நம்பரை டெலீட் பண்ணனும்?” என்றுக் கேட்டபடி ஆதிரா உள்ளே வரவும் சரியாக இருந்தது.

ப்ரணவ்வும் உத்ராவும் அதிர்ச்சியில் சிலையாகிவிட்டார்கள்.  இருவரது விழிகளும் தெறித்து விழும் அளவிற்குப் பிதுங்கி இருந்தது.

“கேட்குறேன்ல யாரு நம்பர்?” என ஆதிரா மீண்டும் கேட்க ப்ரணவ் தட்டுத் தடுமாறி சொன்னான்.

“அது எங்க காலேஜ்ல படிக்கிற பையனோட நம்பர் அண்ணி. இவன் என் போன்ல இருந்து எனக்கு தெரியாம எடுத்து அந்த பையன் கிட்டே வம்பு இழுத்துட்டா.  அதனாலே தான் நம்பரை டெலீட் பண்ண சொன்னேன்.” என்று ஒருவாறு சமாளித்து வைத்தான்.

“ஓ சரி சரி.” என்று சொன்ன ஆதிராவின் விழியோ அந்த அறையையே அலசிக் கொண்டு இருந்தது.

“அண்ணாவைத் தேடுறீங்களா அண்ணி?” என உத்ரா கேட்க ஆதிரா ஆம் என தலையசைத்தாள்.

“அண்ணா தோட்டத்திலே இருக்காரு.” என உத்ரா சொல்ல ஆதிராவின் கால்கள் தோட்டத்தை நோக்கி நகர்த்தி சென்றது.

அங்கே அவனும் அவளும் சேர்ந்து நட்ட செடிக்கு அவன் தண்ணீர் ஊற்றிக் கொண்டு இருக்க தூரத்தில் அதைப் பார்த்தவளது விழிகளிலோ லேசான புன்னகை.

வினய்யின் மீது நான் இனி வைக்கப் போகும் நம்பிக்கையைப் போல இந்த அன்பின் விருட்சம் வளர்ந்து விஸ்தாரமாகப் போகிறது என எண்ணிக் கொண்டவள் அவனைப் பார்த்தபடி அங்கேயே நின்றுவிட்டாள்.

அவனை நோக்கி அடுத்த அடி எடுத்து வைக்கும் அளவிற்கு அவளுக்கு திராணி இல்லை.

கால்கள் பின்னியபடி அங்கேயே தயங்கி நின்று இருந்தவளை தண்ணீர் ஊற்றியபடி ஏதேச்சையாக திரும்பிப் பார்த்தான் வினய்.

எப்போதும் ஆதிராவின் கண்களில் இருக்கும் அனல் அன்று இல்லை.

அவன் மீது வெறுப்பை சுமந்து இருந்த அவளது பார்வையில் இன்று அன்பு நிறைந்து இருந்தது.

குற்றவுணர்வில் தத்தளித்தபடி அவனை நெருக்க முடியாமல் தயங்கி நின்றுக் கொண்டு இருந்தாள் அவள்.

எந்த நிலையில் அவளை நிறுத்தி வைக்கக்கூடாது என்று இத்தனை காலம் உண்மையை உள்ளுக்குள் புதைத்து வைத்து கஷ்டப்பட்டுக் கொண்டு இருந்தானோ  இன்று அந்த நிலையில் அவளை நிற்க வைத்துவிட்டது இந்த விதி.

“ஆதிரா ப்ளீஸ் நீ கஷ்டப்படாதே. எனக்கு இப்போ இந்த வருத்தமும் இல்லை. நான் நல்லா இருக்கணும்னா அதுக்கு முதலிலே நீ நல்லா இருக்கணும், சந்தோஷமா இருக்கணும்… அதனாலே சிரியேன்.” என அவன் கெஞ்சும் குரலில் சொல்ல அவளோ உதடுகளை வலிய முறுவலித்து சிரித்தாள்.

ஆனால் அந்த சிரிப்பு கண்களோடு சிறிதளவும் ஒட்டவில்லை.

அதைக் கண்டவனது முகத்திலோ கடளலவு ஆற்றாமை.

“சே எதுக்காக இத்தனை வருஷம் கஷ்டப்பட்டேனோ அது இன்னைக்கு மொத்தமா சிதறிப் போயிடுச்சு. உன் சந்தோஷத்தை நானே அழிச்சுட்டேன். உனக்கு எதுவும் தெரியாம உன்னைக் காயப்படுத்தாம என் மேலே நம்பிக்கை வர வைக்கணும் தான் நினைச்சேன். ஆனால் நான் தோத்துப் போயிட்டேன். ” என்று வினய் ஆற்றாமையோடு சொல்லிவிட்டு அருகில் போடப்பட்டு இருந்த நாற்காலியில் பட்டென்று அமர அவனருகில் வந்து ஆதிராவும் அமர்ந்தாள்.

வினய் நிமிர்ந்து ஆதிராவைப் பார்த்தான்.

“வினய் இந்த உண்மை எல்லாம் தெரியுறதுக்கு முன்னாடியே எனக்கு உன் மேலே நம்பிக்கை வந்துடுச்சு. அது தான் நிஜம். ” என்று சொல்லியவளை அதிர்ச்சியோடு பார்த்தான்.

“உண்மை தான் வினய். உன் கண்ணு அந்த பார்க்ல என்னைத் தவிர வேற எந்த பொண்ணு மேலேயும் போகல. அதனாலே நீ என்னை மட்டும் தான் அடைய நினைச்சேனு முதலிலே தப்பா தான் புரிஞ்சுக்கிட்டேன். ஆனால் தீக்காயம் பட்ட அப்போ என் மேலே உன் பார்வை தவறிக் கூட தப்பா விழல. அப்போ தான் நான் தப்பு பண்ணி இருக்கேனு எனக்கு புரிய ஆரம்பிச்சது. உன் மேலே எனக்கு முழுசா நம்பிக்கை வந்துடுச்சு வினய். நான் அங்கே போனது நீ நல்லவனான்ற உண்மையைத் தெரிஞ்சுக்கிறதுக்காக இல்லை. அந்த ரெண்டு நாய்களையும் பொளக்குறதுக்காக தான் போய் இருந்தேன். ” என்று அவள் சொல்ல அவன் விழிகளில் வியப்பின் விரிவு. அவனது முகத்தைப் பார்த்து பேச முடியாமல்,  கீழே குனிந்து மீண்டும தொடர்ந்தாள்.

“இத்தனை நாள் நீ பட்ட கஷ்டத்துக்கு அர்த்தமே இல்லாம போயிடும்னு தான் எல்லா விஷயம் தெரிஞ்ச அப்புறம் கூட நான் கண்ணீர் விடல.  ஆனால் நான் பெரிய  தப்பு பண்ணி இருக்கேன் வினய். அந்த தப்புக்கு நீ தண்டனை கொடுத்தா மட்டும் தான் என் குற்றவுணர்ச்சி போகும்.
ப்ளீஸ் வினய் என் மேலே கோபப்படு. என்னை திட்டு. இல்லை எனக்கு தண்டனை கொடு. இதுல ஏதாவது ஒன்னு பண்ணி என்னை இந்த குற்றவுணர்ச்சியிலே இருந்து வெளியே கொண்டு வந்துடேன். ” என ஆதிரா சொல்ல அவனோ அதிர்ச்சியின் பிடியில் இருந்தான்.

எல்லா உண்மையும் தெரிவதற்கு முன்பே ஆதிரா தன்னை நம்பி இருக்கிறாள் என்பது அவனின் இத்தனை வருட தவத்திற்கு கிடைத்த சாகாவரம் போல் அவனை சந்தோஷத்தின் உச்சத்தில் கொண்டு சென்று நிறுத்தி இருந்தது.

தனக்காக அவள் தன் கண்ணீரை சிந்தாமல் சிறைப்பிடித்து வைத்து இருப்பது அவனை நெகிழ்ச்சியில் தள்ளியது.

இறுதியில் அவனிடம் தண்டனைக் கேட்டு இரைந்து நிற்கும் விழிகளைக் கண்டு பாசம் சுரந்தது.

“தண்டனை தானே கொடுத்துடலாம் ஆதிரா. ஆனால் நான் என்ன சொன்னாலும் செய்வீயா?” என்றான் அவளை ஆழம் பார்க்கும் விதமாய்.

“கண்டிப்பா செய்வேன்.. ” என்றாள் எவ்வித தயக்கமும் இல்லாமல்.

“அவ்வளவு நம்பிக்கையா என் மேலே ஆதிரா?”

“ஒரு முறை தான் தப்பு பண்ணுவேன் வினய். மறுபடியும் அதே தப்பை நான் பண்ண மாட்டேன். எனக்கு உன் மேலே பரிபூரண நம்பிக்கை வந்தாச்சு.” என்றவளது வார்த்தைகளின் வீச்சம் அவன் முகத்தில் புன்னகையை விதைத்தது.

💐💐💐💐💐💐

இங்கே ஹாலில் கபடி விளையாடிக் கொண்டு இருந்தனர் ப்ரணவ்வும் உத்ராவும்.

“ஹே உத்ரா அண்ணி இடையிலே வந்ததாலே தான் டி, நான் உன்னை சும்மா விட்டேன். இப்போ மட்டும் நீ கையிலே கிடைச்ச கைமா தான். ” என ப்ரணவ் அவளைத் துரத்தியபடியே மாடிப்படியில் ஓட அவளோ கால் இடறி கீழே தடுமாறி விழப் பார்த்தாள்.

ப்ரணவ் அவளை தரையின் மீது விழாதபடி கைகளில் தாங்கிக் கொண்டான்.

மருண்டுப் போய் அவனுக்குள் சுருண்டபடி அவனது விழிகளையே உற்றுப் பார்த்துக் கொண்டு இருக்க ப்ரணவ்வும் அவளைத் தான் விழுங்கிக் கொண்டு இருந்தான்.

அவனது கவனத்தை சிதறடிக்கும் படி இடையில் உத்ராவின் அலைபேசி மிளிர்ந்து மறைய சட்டென அவளைப் பார்ப்பதை விட்டுவிட்டு அவள் கைகளில் இருந்த அலைபேசியை பிடிங்கியவன் அவளுக்கு சிக்காமல் மீண்டும் ஓட ஆரம்பித்தான்.

மீண்டும் அலைபேசியில் மிளிர்ந்த திரையைக் கண்டு திறந்துப் பார்க்க, அதில் இருந்த புகைப்படத்தைக் கண்டு ஓடாமல் அப்படியே அதிர்ந்துப் போய் அப்படியே நின்றுவிட்டான் அவன்.

இங்கோ வைபவ்விற்கு எந்த வேலையிலும் கவனம் சிறிதளவு கூட மனம் ஒட்டவில்லை.

என்ன தான் அவளைப் புறக்கணிப்பதுப் போல் நடித்தாலும் அவளது புகைப்படத்தைக் காண துடிக்கும் தன் மனதை அவனால் கடிவாளம் இட முடியவில்லை.

அந்த புகைப்படத்தை உடனடியாக பார்த்துவிட வேண்டும் என்று மனம் கட்டளையிட அந்த கட்டளைக்கு கீழ்ப்பணிந்து சோபாவில் வீசி சென்ற அந்த அலைபேசியை கைகளில் எடுத்தான்.

எடுத்துப் பார்த்தவனது விழிகள் அந்த புகைப்படத்தைக் கண்டு பன்மடங்கு விரிந்தது.

Leave a Reply

error: Content is protected !!