காதல் தீண்டவே-10

காதல் தீண்டவே-10

சில பெயர்கள் நம் உயிரையே உருக வைக்கும் வல்லமை கொண்டது. சில பெயர்கள் நம் பிரபஞ்சத்தையே ஸ்தம்பிக்க வைக்கும் ஆற்றல் கொண்டது. அப்படித் தான் அசோக் என்ற பெயர் சீமாவை ஸ்தம்பிக்க வைத்து இருந்தது.

கண்களில் அலை அலையாய்ப் பெருகியது கடந்துப் போன காலங்களின் நினைவுச் சுழல்.

அசோக் அறிமுகமான போது அவளுக்கு எட்டு வயது இருக்கும்.

பள்ளி வெளி வராண்டாவில் அமர்ந்து கொண்டே  சாமியாடியபடி தூங்கி வழிந்துக் கொண்டு இருந்தாள் அவள்.  கொஞ்சம் தடுமாறினாலும் கீழே இருக்கும் மண்தரையில் விழுந்து சில்லரை வாங்க வேண்டியது தான்.

ஆனால் அவள் விழாமல் இருப்பதற்காக கைகளையே  அரணாக்கி கீழே விழாமல்  பாதுகாத்துக் கொண்டு இருந்தான் ஒரு  பதினொரு வயது சிறுவன்.

உறக்கம்  கலைந்து கண் திறந்து பார்த்த சீமாவிற்குள்  நேசப் பூ படர ஆரம்பித்தது அவன் மீது.

அதன் பின்பு அவன் தான் அவளுக்கு எல்லாம்.

எங்கு சென்றாலும் அசோக்குடன் தான். எதைச் செய்தாலும் அசோக்குடன் தான். அவளுடைய உணவில் பாதி அவனுக்குத் தான். அவளுடைய சோகத்தில் பாதியும் சந்தோஷத்தில் மீதியும் கூட அவனுக்குத் தான்.

அவர்களுடைய பால்யக் காலத்து நட்பு வேர் விட்டு உறுதியாய் நின்ற நொடியில் மெல்ல அதன் கிளைகள் அதிரத் தொடங்கியது.

பருவத்தின் பொன்வனத்தினில் சீமா நின்றுக் கொண்டு இருந்த காலம் அது.
எப்போதும் பேசும் உதடுகள் பேச முடியாதபடி தயக்கத்தில்  தந்தியடித்தன. கண்கள் மட்டுமே பேசிக் கொண்டன.

தயக்கத்தோடு அவர்கள் இருவரின் மனதிற்குள் நுழைந்துக் கொண்டு இருந்தது காதலின் காலடிச் சுவடுகள்.

எதனால் என்று அறுதியிட்டு விளக்கி சொல்ல முடியாத நேசம் அரும்பி இருந்தது சீமாவின் உள்ளத்தினில்.

அசோக் கண்களைக் கண்டாலே மழையில் நனைந்த கோழிக்குஞ்சாய் வெடவெடத்து ஓடிவிடும் அவளை அசோக்கின் சிரிப்பு ரசனையாய்ப் பின் தொடரும்.

அசோக்கை எங்குக் கண்டாலும் ஒரு யூ திருப்பு முனையைப் போட்டு ஓடிவிடும் சீமாவை அன்று ஓட முடியாதபடி பிடித்து வைத்து இருந்தான் அசோக்.

“இன்னும் எத்தனை நாள் என் கிட்டே இருந்து இப்படி ஓடுறதா உத்தேசம் சீமா?”

“நீங்க என்னைத் துரத்திப் பிடிக்கிற வரைக்கும்… ” என்று சொல்லிவிட்டு ஓடிய சீமாவைத் துரத்திப் பிடித்தான் காதலெனும் ஓட்டப் பந்தயத்தில்.

இருவரது காதலும் மடமடவென வளரத் துவங்கி இருந்தது.

காதலின் மாயவுலகத்தில் மெய் மறந்து  நின்ற சீமாவின் முன்பு அசோக் வந்து நின்றான் பிரிவு என்னும் சொல்லைக் கையில் பிடித்தபடி.

“சீமா எனக்கு ஆர்மி ட்ரைனிங்லே சேர ஆர்டர் வந்து இருக்கு. பத்து மாசம் ட்ரைனிங் முடிச்சுட்டு தான் திரும்ப இங்கே வர முடியும்.” என்று சொல்ல கண்களில் உருண்டு திரண்ட நீரை உள்ளுக்குள் அடக்கியபடியே தன் காதலனின் ஆர்மி  கனவுப் பாதையைத் தடை செய்யாமல் மனதார வழியனுப்பி வைத்தாள்.

பத்து மாதங்கள் என்பது பத்து யுகங்களாக கழிந்தது அவளுக்கு.

வாசல் பார்த்தே கவலையுடன்  அமர்ந்து இருந்தவளை உற்சாகப்படுத்த ஒலித்தது திருவிழா மேளங்கள்.

அன்று  திருவிழா பரபரப்பினில் ஊர் திணறிக் கொண்டு இருக்க இவள் மட்டும் வாடிய முகத்துடன் பூஜைத்தட்டை பவனி வரும் சாமிச் சிலைப் பார்த்து நீட்டினாள்.

நிமிர்ந்துப் பார்த்த கண்களில் சட்டென ஒரு மின்னலுடன் கூடிய ஒரு பொட்டு மழை.

“அசோக்” என்று காதலில் கரைந்து முணுமுணுத்தது உதடுகள்.

அவளைப் பார்த்துக் கண்ணடித்தவன் மெதுவாக தன் பக்க சாமி சுமையை வேறு ஒருவரிடம் கொடுத்துவிட்டு வேக வேகமாக அவளருகில் வந்து நின்றான்.

கண்டதும் காதல் பிரிவு தாங்காமல் மூர்க்கமாக அணைத்து தழுவ வேண்டும் என நினைத்து இருந்த மனம் இப்போது சூழலைக் கருதி அவளது உள்ளங்கையை மட்டும் இளங்கீற்றாய்த் தீண்டியது.

அந்த ஒற்றைத் தீண்டலில் உயிர்ப்பூவையே தொட்ட சிலிர்ப்பு அவனிடம்.

மெல்ல அந்த கூட்டத்தினில் இருந்து அவிழ்ந்தனர் இருவரும். யாரும் இல்லாத அந்த இடிந்த பழைய சத்திரத்திற்கு வந்தனர்.

இந்த பத்து மாத பிரிவு அவளது கண்களில் நீர்ப்பூக்களைப் பூக்க செய்து இருந்தது.

மெய்க்காதலில் தேம்பி அழுதவளின் மெய்த் தீண்டி சமாதானம் செய்தான் அசோக்.

“ஐயோ அழாதே  சீமா. எனக்கும் இந்த பிரிவு நரகமா தான் இருந்தது. அடுத்து இன்னும் ஒரே ஒரு ட்ரைனிங் மட்டும் தான். அதை முடிச்சுட்டு நான் அப்பா கிட்டே  நம்ம விஷயம் பத்தி பேசுறேன். நான் நல்ல நிலைமையிலே நல்ல வேலையிலே  வரும் போது எங்க அப்பாவும் சரி உங்க வீட்டுலேயும் சரி யாராலேயும் நம்மை எதிர்க்க முடியாது.” என்று சொன்னவன் அவளது உள்ளங்கையை இறுகப் பற்றிக் கொண்டு மேலும் தொடர்ந்தான்.

“ஹே சீமா அங்கே முழுக்க உன் நியாபகம் தான். நான் உன் மேலே வெச்சே  காதலை முழுசா எனக்கு இந்த பிரிவு உணர்த்திடுச்சு. நீ இல்லாம செத்துட்டேன்டி.” என்று சொல்லியவன் அவளை இறுக அணைத்து இருந்தான்.

அவளும் பதிலுக்கு அணைக்க மெல்ல மெல்ல அவனது கைகள் அத்துமீறத் தொடங்கியது.

அதைப் பெண்ணவள் உணர்ந்தே இருந்தாலும் தடுக்கத் தோன்றாமல் அவனை அனுமதித்து இருந்தாள்.

அவளுக்கு இந்த இரு உடல்கள் என்பது பெரும் தூரமாக இருந்தது. இப்போதே அவனை அள்ளி எடுத்து தன் உயிருக்குள் காலம் முழுக்கப் பொத்தி வைக்க முயல அவனும் அவளுக்குள் அடங்கிப் போய் இருந்தான்.

இரு உடல்களும் காதலின் காவியத்தை காமத்தின் மைத் தொட்டு எழுதி முடித்து இருந்தது.

💐💐💐💐💐💐

“சீமா ஏன் டி உன் நாள்கணக்கு இவ்வளவு நாள் தள்ளிப் போய் இருக்கு?” என்றத் தாயின்  கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறியவள் மெல்ல தன் அறைக்குள் புகுந்துக் கொண்டாள்.

அவளுக்கு தன் காதலனின் உயிர்த்துளியை சுமப்பதில் எந்தக் குற்றவுணர்வும் இல்லை ஆனால் அவள் பயம் எல்லாம் அவள் அம்மாவை நினைத்துத் தான்.

அம்மாவுக்கு தெரிந்து விட்டால் என் சிசுவை நிலம் காண செய்ய முடியாதபடி கருவிலே  கலைத்துவிடுவார்களே.

எப்படி காப்பேன் இந்த சிசுவை ?

நெற்றி இடுங்கிப் போய் அந்த சுவற்றில் சாய்ந்தவளது உள்ளத்தில் இருந்த ஒரே விஷயம்

“எந்த சூழ்நிலை வந்தாலும் இந்த குழந்தையைப் பெற்றெடுத்து தன் உயிரினில் நிறைந்தவனின் கைகளில் கொடுத்துவிட வேண்டும் என்பதே.”

கண்களைத் துடைத்துக் கொண்டவள் ஒரு முடிவுடன் கதவைத் திறந்தாள்.

உண்மையை உடைத்துக் கூறினாள்.

அவளை உடைத்துப் போட்டனர் வீட்டினில் உள்ளவர்கள்.

இயல்பு தானே!

தாலியில்லாமல் பிள்ளைப்பேறு என்பதை எந்த குடும்பத்தால் தான் ஏற்றுக் கொள்ள முடியும்?

அவளது வயிற்றினில் உள்ளக் கருவை அழிக்கப் பார்த்தனர். ஆனால் அவள் அதற்கு இடம் தரவில்லை.

அவளுக்கு அவசர அவசரமாக ஒரே வாரத்தில் திருமணம் செய்யப் பார்த்தனர்.

இரண்டாவது தாரமாக இருந்தால் கூட ஏதாவது மாப்பிள்ளை அகப்பட்டுவிடமாட்டானா என தேடிக் கொண்டு இருந்தனர்.

இவளுக்கோ உலகம் வெறுத்து சூன்யமாய்ப் போனது.

தன் காதலனுக்குப் போட்ட கடிதத்திற்கு மறுமொழியும் வரவில்லை. சென்று சேர்ந்ததா என்றும் தெரியவில்லை.

அவனை மட்டுமே மனதினில் வரித்து இருந்தவள் வேறு ஒருவனுக்கு கழுத்தை நீட்டுவதற்கு பதில் இறப்பதே மேல் என்று உயிரை கிணறுக்குத் தாரை வார்க்கத் துணிந்த சமயம் அவளைப் பிடித்து கீழே இழுத்துப் போட்டது ஒரு ஆடவனின் கரம்.

“என்னை விடுங்க. நானும் என் குழந்தையும் சாகணும். என்னாலே என் அசோக்கைத் தவிர்த்து வேற யார் கூடேயும் வாழ முடியாது.” என்று பைத்தியக்காரி போல் மூர்க்கமாக கத்தியபடி மீண்டும் கிணற்றில் விழப் போனவளை தடுத்துப் பிடித்தான் அந்த புதியவன்.

“முதலிலே உங்களை நிதானப்படுத்திக்கோங்க. தற்கொலை எல்லாத்துக்கும் தீர்வு இல்லை. எல்லா பிரச்சனைக்கும் வழி உண்டு.”என்று அவளை ஆற்றுப்படுத்த முயன்றான்.

அவளும் இதுவரை வீட்டிலும் வெளியிலும் சொல்ல முடியாத உள்ளக் குமுறல்களை எல்லாம் உடைத்து சொன்னாள் இவனிடம்.

“இல்லை என் ப்ரச்சனைக்கு அப்படித் தீர்வுக் காண முடியாது. என்னையும் என் குழந்தையும் உயிரோட புதைக்கப் பார்க்கிறாங்க. அசோக் வர ஐந்து மாசம் ஆகும். அதுக்குள்ளே என்னை வேற யாருக்காவது கல்யாணம் பண்ணிடனும்னு மாப்பிள்ளையை வலைவீசித் தேடிட்டு இருக்காங்க. என்னாலே வேற ஒருத்தனுக்கு மனைவியா வாழ முடியாது. ” என்றவள் வரிசையாக நடந்ததை சொல்லி முடித்துவிட்டு கண்ணீருடன் மீண்டும் அந்த கிணற்றையே வெறித்தாள், தன் உயிரை மாய்க்கும் பொருட்டு.

அவளது முகத்தையே கண்டவன் ஒரு முடிவோடு அவள் பக்கம் திரும்பினான்.

“நான் ஒரு யோசனை சொல்வேன்.
உனக்கு சம்மதம்னா அது படி பண்ணலாம்.” என்றவன் சொல்ல குழப்ப பாவனை சீமாவின் முகத்தினில்.

“இந்த சிக்கலிலே இருந்து நீ தப்பிக்கிறதுக்கு ஒரே வழி. நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறது மட்டும் தான்.” என்று சொல்லிவிட்டு அவளைப் பார்க்க  அவளது கைகளோ ஆத்திரமாய் அவனை நோக்கி உயர்ந்தது.

“எவ்வளவு திமிர் இருந்தா இப்படி கேட்ப!” என்றவள் அடிக்க வர மெல்ல அவளது கையை இறக்கியவன் “நான் சொல்றதைக் கேட்டு முழுசா கேட்டு நீயே  முடிவு பண்ணு” என்று தன் கதையை சொல்லத் துவங்கினான்.

அவன் சொல்ல சொல்ல அந்த கதையைக் கேட்டு சீமாவின் விழிகள் கலங்கியது.

என்னை விட  எவ்வளவு துயரம் அனுபவித்து இருக்கின்றான் இவன்? என்ற பச்சாதாபம் அவன் மீது எழுந்தது

அவன் சொன்ன காரணங்களும் விளக்கங்களும் ஏற்றுக் கொள்ளும் படி இருக்க, அவளுக்கு வேறு வழியும் இல்லாமலும் போ,க அவனை கல்யாணம் செய்துக் கொள்ள சம்மதித்தாள்.

அடுத்த நாள் காலை அவன் வீட்டிற்கு வந்து சம்மந்தம் பேச அவசர மாப்பிள்ளைத் தேடிக் கொண்டு இருந்த அந்த குடும்பத்திற்கு பெரும் நிம்மதி.

அவசர அவசரமாய் ஒரே வாரத்தில் சீமாவை அவனுக்குத் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு பெரு மூச்சு விட்டது அந்த குடும்பம்.

அது வரை சீமா தேவியாக இருந்தவள் சீமாதேவி விஸ்வம் ஆனாள் ஊரளவில்.

ஆனால் மனதளவில் அவள் சீமா தேவி அசோக் காக தான் இருந்தாள்.

சென்னைக்கு குடிப்பெயர்ந்த அடுத்த நாளே அவளுக்குக் கொடுத்த உறுதிமொழியின் படி ஒரு அலுவலகத்தில் வேலை வாங்கிக் கொடுத்தான்.

தனியாய்த் தங்குவதற்கு அவளுக்கு வீடுப் பார்த்துக் கொடுத்தான்.

சீமா தினமும் அசோக்கிற்கு கடிதம் போடுவாள். அவன் இன்னும் அதே இடத்தில் தான் இருக்கின்றானா? அது அவன் கைகளைச் சென்று சேருமா என்றெல்லாம் அவளுக்குத் தெரியாது. இருந்தாலும் அவன் பதில் கடிதத்திற்காக  தினமும் காத்து இருந்தாள்.

காத்து இருக்கின்றாள் இருபது வருடமாக.

இன்று தான் அவளது தேடலின் முடிவிலிக்கு முடிவுப் போல.

கண்களில் துளிர்த்த ஆனந்த நீரை துடைத்துக் கொண்ட சீமா,
“எங்கே பார்த்தீங்க அசோக்கை?” என்று தவிப்புடன் கேட்டாள்.

“நம்ம சுபம் சூப்பர் மார்க்கெட்ல தான் அவரைப் பார்த்தேன். மளிகைப் பொருள் வாங்க வந்திருந்தார். அதுல அவர் கேட்ட பொருள் ஸ்டாக் இல்லை ஈவ்னிங் வந்து வாங்கிக்க சொன்னாங்க. அசோக்கும் கண்டிப்பா ஈவினிங் வந்து வாங்கிக்கிறேனு சொல்லிட்டுப் போயிட்டார்.  நீ ரெடியா இரு சீமா. நாம ஈவினிங் போகலாம்.” என்று சொல்ல சந்தோஷத்துடன் தலையசைத்து தன்னறைக்குள் ஓடினார்.

பல நாட்கள் கழித்து கண்ணாடி முன்பு சென்று நின்றார்.

முகத்தில் புதுக்காதலனை சந்திக்கப் போகும் வெட்கம் அரும்பியிருந்தது.

இதுவரை பெயருக்கு வாரிக் கொண்டு இருந்த தலையை இன்று கவனமெடுத்து வாறினார்.

முகத்தினில் பல நாள் கழித்து சந்தோஷத்தின் பொலிவு.

உடைகளில் தேர்ந்த நேர்த்தி.

சீமாவின் இந்த மாற்றங்களைக் கண்டு விஸ்வத்தின் இதழோரத்தில் கற்றைப் புன்னகை.

எப்போதும் மோனலிசா ஓவியம் போல இருப்பவளின் முகத்தில் இன்று தான் புன்னகை கண்ணை எட்டிப் பார்க்கின்றது.

இந்த சந்தோஷம் எப்போதும் நிலைத்து இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டபடி சீமாவை அழைத்துக் கொண்டு அந்த சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்தார்.

சீமாவின் கண்கள் அந்த சூப்பர் மார்க்கெட்டையே அலசிப் பார்க்க, இறுதியாக அவர் கண் விட்டத்திற்குள் விழுந்தது அசோக்கின் உருவம்.

கண்களில் திரண்டு உருண்டது கண்ணீர் முத்துக்கள்.

ஆண்டாடு காலமாய் தாகித்து கிடந்த விழிகளுக்கு அமுதமாய் அகப்பட்டது அவன் உரு.

அவனுள் காலம் நிகழ்த்தி இருக்கும் மாற்றங்களை உற்றுக் கவனித்தாள்.

கரு மீசை நரை மீசையாய் உருமாறியிருந்தது.  தசை தொந்தியில்லாத உடல்வாகு சிறிது தொப்பை பிடித்து போய் இருந்தது.

சிரிக்கும் போது மட்டுமே அவன் கண்களில் விழும் சுருக்கங்கள் இப்போது இயல்பாகவே விழுந்து இருந்தது.

இன்னும் இன்னும் ஏகப்பட்ட மாற்றங்களை காலம் அவனுள் நிகழ்த்து இருந்தது.

அதை எல்லாம் உதட்டில் பூத்த புன்னகையோடு ரசித்தபடி அவனை நோக்கி முன்னேறிக் கொண்டு இருந்த நேரம் அவனுடைய பார்வையும் இவளை ஏதேச்சையாக பார்த்து திரும்பிக் கொண்டது.

பின்பு ஏதோ நினைவு வந்தவனாக சட்டென்று திரும்பி அவளை உறுத்துப் பார்த்தான்.

அடையாளம் கண்டு கொண்டு விட்டான் போல,.அவனது விழிகள் வியப்பில் விரிந்து அதிர்ச்சியில் அதிர்ந்துப் போய் இருந்தது.

அவனருகே சென்ற சீமா “அசோக். ” என்று உயிரைக் கடைந்தெடுத்து கூப்பிட  வெகு பக்கத்தில் கேட்டது இன்னொரு பெண்மணியின் குரல்.

“என்னங்க உங்களுக்கு இவங்களைத் தெரியுமா?” என்று அதிகாரமாக வார்த்தைகள் வந்தது, அசோக்கின் பக்கத்தில் நின்றுக் கொண்டு இருந்த பெண்ணிடம்.

பட்டென அதிர்ச்சியில் இருந்து மீண்ட அசோக் வெகு வேகமாய்
“இல்லை விமலா. எனக்கு  இவங்க யாருனே தெரியாது. யாரையோ கற்பனைக்கிட்டு என்னைக் கூப்பிடுறாங்க போல. சரி நீ எல்லாத்தையும் வாங்கியாச்சுல. வா பில் போட்டுட்டு கிளம்பலாம்” என்றந்த பெண்மணியை அவசரமாக  அழைத்துக் கொண்டு போன அசோக்கையே ஸ்தம்பித்து போய் பார்த்தாள், சீமா.

‘யாரென்றே தெரியாது’ என அவன் சொல்லிய வார்த்தையே திரும்ப திரும்ப  செவிப்பறையில் மோதி சீமாவை தரைமட்டமாக்கிக் கொண்டு இருந்த நேரம்  விஸ்வத்தின் கைகள் ஆதரவாய் சீமாவைப் பற்றிக் கொண்டது.

திரும்பிப் பார்த்த கண்களில் உடைந்துப் போன கண்ணாடியின்  மௌன கீறல்கள்.

அவள் நாசியின் மீது விழுந்து உடையும் கண்ணீர்த்துளியை எதைக் கொண்டு துடைப்பதென தெரியாமல் திகைத்து தகித்தார் விஸ்வம்.

Leave a Reply

error: Content is protected !!