காதல் தீண்டவே-11

காதல் தீண்டவே-11

அன்று முழுக்க ஒரு இயந்திரத்தைப் போல வேலை செய்துக் கொண்டு இருந்த மிதுராவை சிற்பிகா சீண்டி அழைத்தாள்.

“என்ன டி?”

“டைம் நாலு ஆச்சு! வா ப்ரேக் போகலாம்..”

“ஆனால் இந்த மெயில் நாலரைக்குள்ளே அனுப்பனுமே”

“பத்தே நிமிஷத்துலே, நம்ம கேண்டின்லே ஒரு முட்டை பப்ஸ் முழுங்கிட்டு வந்துடலாம் டி. செமயா பசிக்குது.”

“பத்து நிமிஷம் தான் உனக்கு டைம். அதுக்குள்ளே தின்னு முடிக்கலேனா நான் பாட்டுக்கு கிளம்பி வந்துடுவேன். ஓகே வா?”

“ஓகே ஓகே. இப்பவே 1 நிமிஷம் வேஸ்ட் ஆகிடுச்சு. ” என்றவளை இழுத்துக் கொண்டு கேன்டினிற்குள் சென்றாள்.

ஆனால் அவர்கள் நேரம், அங்கே கேன்டீன் கூட்டத்தால் நிரம்பி வழிந்து இருந்தது.

வரிசையில் சென்று நின்ற சிற்பிகா முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு  மிதுராவின் முகத்தைப் பார்த்தாள்.

“பத்து நிமிஷம் தான் உனக்கு டைம்” என்று கண்டிப்புடன் மிதுராவிடம் இருந்து பதில் வர சோகமாக முகத்தைத் திருப்பிக் கொண்டவளுக்கோ முட்டை பப்ஸ் கிடைப்பதில் தாமதமானது.

பதினைந்து நிமிடத்திற்கும் மேல் காத்துக் கொண்டு இருந்த மிதுரா, பொறுமை  இழந்தவளாக திரும்பிப் பார்க்க அங்கே அபி உள்ளே நுழைந்துக் கொண்டு இருந்தான்.

அவனைப் பார்த்து பெருமூச்சுவிட்டவள் “ஹே சிற்பி, நீ அபி கூட சேர்ந்து ப்ரேக் முடிச்சுட்டு வா. நான் மேலே ஆபிஸ் போறேன். ” என்று சொல்லிவிட்டு அவளுடைய பதிலை எதிர்பாராமல் லிஃப்ட்டை நோக்கி ஓடியவளை முறைத்துவிட்டு அபியிடம் திரும்பினாள், சிற்பிகா.

“அபி, உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க? நானே வாங்குறேன். “

“ஒரு முட்டை பஃப்ஸ்.”

“ஓகே. ” என்றவள் கடைக்காரரிடம் திரும்பி ஆர்டரை சொல்லிவிட்டு இவனிடம் திரும்பினாள்.

 “அபி உங்க கிட்டே ஒரு டவுட் கேட்கணும் கேட்கலாமா?” என்றாள் கேள்வியாக

“கேளுங்க சிற்பி. “

“இல்லை காலையிலே மட்டும் தான் புல்தரையிலே push-ups(தண்டால்) எடுப்பிங்களா? இல்லை சயாந்திரமும் எடுப்பிங்களா?” என்று சிரியாமல் கேட்டவளைப் பார்த்து பாவமாக முகத்தை வைத்துக் கொண்டான்.

“சிற்பி ப்ளீஸ் இந்த push-ups மேட்டரை யார் கிட்டேயும் சொல்லிடாதே. என் மானம் போயிடும். ” என்றவனின் குரலிலோ கெஞ்சல்.

“சரி நான் சொல்லைல. ஆனால் சொல்லாம இருக்கணும்னா ஏதாவது லஞ்சம் தரணுமே” என்று இழுத்தவளைப் பார்த்தவன் கடைக்காரரிடம் திரும்பி  “அண்ணை இரண்டு முட்டை பப்ஸையும் என் கணக்குலேயே எழுதிக்கோங்க” என்றான்.

“பரவாயில்லையே அபி,  நீங்க கொஞ்சம் புத்திசாலியா தான் இருக்கீங்க.”

“இல்லைனா பிழைக்க முடியாதே.” என்று சொல்லிவிட்டு அவன் முட்டை பஃப்ஸை முழுங்க ஆரம்பித்திருக்க இவளும் சாப்பிடத் துவங்கி இருந்தாள்.

இங்கோ தாமதாமகிறது என்று ஓடி வந்த மிதுராவிற்கு நேரம் இன்று சரியில்லை போல.

லிப்ட் நிற்கும் இடத்திலும் கூட்டம் அலைமோதியது.

கஷ்டப்பட்டு தாமதமாக கிடைத்த லிஃப்ட்டில் ஏறியவள்  முட்டி மோதி அலுவலக அறைக்கு வந்து பெருமூச்சோடு கணினியை உயிர்ப்பிக்க அதுவோ அப்போது பார்த்து ஆன் ஆக நேரம் எடுத்தது.

பதற்றமாக திருப்பிக் கைக்கடிகாரத்தைப் பார்த்தாள், மணி நாலரையைக் கடந்து நான்கு நிமிடம் ஆகி இருந்தது. ஆனால் அவள் அனுப்ப வேண்டிய மெயில் இன்னும் அனுப்பப்படவே இல்லே.

பதற்றத்துடன் கணினித் திரையை வெறித்துக் கொண்டு இருந்தவளின்  முன்பு ராஜ் பெருங்கோபமாக வந்து  நின்றான்.

“மெயில் எங்கே?” என்று அவன் கோபமாக சைகையில் கேட்க அவள் ஆன் ஆகாத சிஸ்டத்தைக் காண்பித்தாள்.

நாலு மணிக்கே உங்களுக்கான மெயில் டாக்குமெண்ட் கொடுத்தாச்சே ஏன் இன்னும் பண்ணல?” என்று டைப் செய்துக் காண்பிக்க பதில் பேச முடியாமல் தலைக்குனிந்தாள் மிதுரா.

“எவ்வளவு முக்கியமான மெயில் தெரியுமா?” என்ற ராஜ்ஜின் அந்த கேள்வியின் முன்பு மிதுராவிடம் இருந்து ஒரு தலைக்குனிவு தான் பதிலாகக் கிடைத்தது.

அதைப் பார்த்து தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு “Don’t repeat this again. ” என்று சைகயால்  சொன்னவன் அவளை முறைத்தபடியே தன் சிஸ்டத்தை ஆன் செய்து அவள் அனுப்ப வேண்டிய மெயிலை இவனே அனுப்பிவிட்டு மீண்டும் மீட்டிங் ஹாலிற்குள் சென்றான்.

கலங்கிய கண்களுடன் வருத்தமாய் நின்றவளின் அருகே  வரிசையாய் அங்கிருந்தவர்கள் வந்து ஆறுதல் படுத்த முயன்றனர்.

அவர்கள் வரிசையாய் சொன்ன ஆறுதல் மொழிகள் இவை தான்.

“மிதுரா நீங்க வருத்தப்படாதீங்க. ராஜ் சார் இப்படி தான்… எப்பவும் சிடுமூஞ்சி. “

“அவருக்கு எந்த சிட்டுவேஷனையும் பொறுமையாவே ஹேண்டில் பண்ணத் தெரியாது. இப்போ கூட பாருங்க எப்படி கத்திட்டு போறாரு. “

“நான் இந்த ஆபிஸ் சேர்ந்ததுல இருந்து இப்போ வரைக்கும் யார் முகத்தைப் பார்த்தும் அவர் சிரிச்சது இல்லை. அவர் கிட்டே இந்த மாதிரி behavior தானே எதிர்பார்க்க முடியும். அதனாலே நீங்க வருத்தப்படாதீங்க.” என்று சொன்னவர்களின் ஆறுதல் மொழியைக் கேட்டு மனது அமைதி அடையாமல் ஆத்திரமே கொண்டது.

“அவர் மேலே எந்தத் தப்பும் இல்லை. எல்லாத் தப்பும் என் மேலே தான். காரணமே இல்லாமல் அவரை குறை சொல்ல வேண்டாம். ” என்று அவர்களைப் பார்த்து சொன்னவள் கோபமாக தன் இருக்கையின் மீது அமர்ந்தாள்.

அவள் மூளையில் அவர்கள் ராஜ்ஜைப் பற்றிய தப்பான பேச்சுக்களே ஓடிக் கொண்டிருந்தது.

இவர்களுக்கு ஏன் ராஜ்ஜின் மேல் இவ்வளவு தப்பு அபிப்பிராயம்?

நான் மேலிடத்தில் இருந்து  வாங்க வேண்டிய வசவு மொழிகளிடம்  இருந்து இவன் என்னைக் காப்பாற்றி இருக்கின்றான் என்று இவர்களுக்கு ஏன் புரியவில்லை?

அந்த மெயிலை அவன் அனுப்புவதுப் போல அனுப்பி என் மீது விழ வேண்டிய பழிகளை அவனே ஏற்றுக் கொண்டுவிட்டானே அது ஏன் இவர்களுக்கு விளங்கவில்லை?

அவனுடைய கோபத்தை மட்டுமே பார்ப்பவர்களுக்கு ஏன் அவனுடைய கோபத்தின் பின்னால் இருக்கும் நியாயமும் நேர்மையும் உணரமுடியவில்லை என்று நினைத்தவளால் பெருமூச்சுத் தான் விட முடிந்தது.

“என்ன மேடம் பலமா மூச்சு விடுறீங்க. ” என்றபடி வயிறு முட்ட  தின்றுவிட்டு அமர்ந்த சிற்பிகாவைத் திரும்பி முறைத்தன அவளது கோப விழிகள்.

“ஒரு முட்டை பஃப்ஸ்  என் வாழ்க்கையிலே இன்னைக்கு எப்படி விளையாடிடுச்சு தெரியுமா? நான் அந்த மெயில் கரெக்ட் டைம்க்கு அனுப்ப முடியாம போயிடுச்சு சிற்பி.”

“ஐயோ என்ன டி சொல்ற.” என்றுப் பதற்றமாகக் கேட்ட சிற்பிகா பின்பு ஏதோ முடிவெடுத்துவிட்டு பேசத் தொடங்கினாள்.

“நீ எதுக்கும் கவலைப்படாதே சிற்பி.   ராஜ் சார் வரட்டும் நான் பேசிக்குறேன். மிதுரா சிஸ்டம் ஆன் ஆகலை  என்னை மெயில் அனுப்ப சொன்னா நான் தான் அனுப்ப மறந்துட்டேனு சொல்லிடுறேன். நீ எதுவும் நடுவுல பேசாதே சரியா?” என்று பழியைத் தன் மேல் தூக்கிப் போட்டுக் கொள்ள பார்க்கும் சிற்பிகாவை நினைத்து நெகிழ்ந்துப் போனது மிதுராவின் உள்ளம்.  ஆனாலும் அதை முகத்தில் காட்டாமல் கோபத்தையே காட்டினாள்.

“என்ன சொன்னாலும் நான் உன் மேலே கோவமா இருக்கேன் சிற்பி.” என்ற  மிதுராவை சோகமாக நோக்கினாள்.

“சாரி மிது. “

“சாரி லாம் ஏத்துக்க முடியாது. நீ மட்டும் தனியா முட்டை பஃப்ஸை முழுங்கிட்டு வந்தே இல்லை. எனக்கும் வாங்கிக் கொடு. அப்போ தான் என் கோவம் குறையும். “

“அட ஒன்னு என்ன பத்துக் கூட வாங்கி சாப்பிடுடி. என் கை வசம்  தான் ஸ்பான்சர் இருக்காங்களே. ” என்றவள் திரும்பி “அபி சார் ” என்று அழைத்தாள்.

‘வசமா சிக்கிட்டேடா அபி. ‘என்று முணுமுணுத்தபடி அபி எழுந்துக் கொள்ளவும்  மீட்டிங் முடித்துவிட்டு ராஜ் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.

“ராஜ் சார் வாங்க ப்ரேக் போயிட்டு வரலாம். ” என்று அவனையும் இழுத்துக் கொண்டு வெளியே வந்தான் அபி.

“அப்புறம் ராஜ் மீட்டிங் எப்படி போச்சு?” என்று அபி  கேட்க புன்னகையுடன்  கட்டைவிரலை உயர்த்தி வெற்றி என்றுக் காண்பித்த ராஜ்ஜின் பார்வை மிதுராவை நோக்கி சென்றது.

சாரி என்றான் சைகை மொழியில்.

அதை  உறுதியுடன் மறுத்தவள் ” நீங்க நடந்துக்கிட்டது கரெக்ட் ராஜ். நான் தான் சாரி சொல்லணும். ஐ யம் சாரி ” என்று சொல்ல அவனிடத்தில் லேசாக ஒரு புன்னகை.

💐💐💐💐💐💐💐💐💐

மாலை நேர இளங்காற்று மிதுராவின் முகத்தைத் தழுவிச் சென்றது. தீரன் இல்லாததால் அவன் எப்போதும் அபகரித்து இருக்கும் அந்த ஜன்னலோர இருக்கை அவள் வசம் வந்து இருந்தது.

முகத்தில் பூத்த புன்னகையுடன் ஜன்னல் கம்பியைப் பற்றிக் கொண்டு வேடிக்கைப் பார்த்தவளை கண்டு இளநகைப் பூத்தான் ராஜ்.

தன் கைப்பேசியை எடுத்தவன் “தீரன் இல்லாததாலே window seat ல நல்லா என்ஜாய் பண்றீங்க போல. ”
குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு அவளைப் பார்த்தான்.

சட்டென்று சிணுங்கிய செல்போனைத்
தேடி எடுத்தவள் ராஜ்ஜின் குறுஞ்செய்தியைப் படிக்க இதழோரம்  புன்னகை துளிர்.

“ஆமாம் குமுதா ஹேப்பி அண்ணாச்சி” என்று பதிலுக்கு அனுப்பியவள் மனதிலோ, மதியம் ராஜ்ஜைப் பற்றி சக அலுவலக ஊழியர்கள் பேசிய தவறான வார்த்தைகள் நினைவிற்கு வந்தது.

இதைப் பற்றி அவனிடம் பேச வேண்டும் என்றுத் தோன்ற  தனக்கு பக்கத்தில் காலியாக இருந்த இருக்கையை சுட்டிக் காட்டி கண்களால் அழைத்தாள்.

ராஜ்ஜும் மறுப்பு எதுவும் சொல்லாமல் அவளுக்கு அருகில் வந்து அமர்ந்தான்.

” நான் உங்க கிட்டே பர்செனலா பேசலாமா?ஒரு ப்ரெண்ட் மாதிரி…” என்று சொன்னவள் சட்டென நிறுத்திவிட்டு அவனைப் பார்த்து கேள்வியாக “நான் உங்க ப்ரெண்ட் தானே? என்னை உங்க ப்ரெண்டா ஏத்துக்கிட்டிங்க தானே?” என்று சந்தேகமாக கேட்டாள்.

அவன் தலையசைப்பில் ஆலமர உறுதி.

அதைக் கண்டதும் இவளிடத்தில் ஒரு சிநேகப் புன்னகை.

“நீங்க ஆபிஸ்ல யார் கிட்டேயும் சிரிச்சு பேசி நான் பார்த்ததே இல்லை. ஏன் தீரனையும் அபியையும்  தவிர்த்து யாரையும் கிட்டே நெருங்க விட மாட்டேங்கிறிங்க? நீங்க உங்க குரலைத் தான் இழந்தீங்களேத் தவிர உங்க உணர்வுகளை இழக்கல. சோ நீங்க நார்மலா எல்லார் கிட்டேயும் ப்ரெண்ட்லியா இருக்கலாமே.” என்று கேட்டுவிட்டு பார்க்க அவன் முகமோ லேசாக சுணங்கி இருந்தது.

அதைப் பார்த்ததும் எல்லையைத் தாண்டி பேசிவிட்டோமோ என்று தவிப்பாக இருந்தது மிதுராவுக்கு.
ஆனால் அவளால் கேட்காமலும் இருக்க முடியவில்லை. 

எப்போதும் இறுக்கமான முகத்தோடு வலம் வருபவனைக் காணும் போது எல்லாம் இவன் சிரிக்கக்கூட மாட்டானா என்று அவளுக்குத் தோன்றாமல் இல்லை.

அவனால் உதடுகளால் தான் பேச முடியாது. ஆனால் உணர்வுகளால் பேச முடியுமே!

வார்த்தைகளால் தான் அவன் மகிழ்ச்சியை வெளிப்படுத்த முடியாது. ஆனால் புன்னகையால் வெளிப்படுத்த முடியுமே! என்று பலவாறு யோசித்தப்படி அமர்ந்து இருக்க அவளுடைய அலைப்பேசி மடியில் சிணுங்கியது.

எடுத்துப் பார்த்தாள்.

ராஜ் தான் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தான்.

“எனக்கு அபி தீரனைத் தவிர்த்து ஆபிஸ்ல யார் கூடேயும் பேசப் பிடிக்காது. ஏன்னா மத்தவங்க என்னை வித்தியாசமா பார்ப்பாங்க. குரல் இல்லாததாலே என் மேலே பரிதாபப்பட்டாங்க. எனக்கு அந்த பரிதாபப் பார்வை பிடிக்காது. அதனாலே பதிலுக்கு கோவப் பார்வை பார்த்தேன். அந்த பார்வையே பழகிப் போயிடுச்சு. ” என்று அனுப்பி இருக்க அவனுடைய உணர்வுகளை அவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது.

ஆனாலும் அவனை அப்படியே விட்டுவிட முடியாதே.

“நீங்க அந்த பார்வையை மாத்தினா அதுக் காட்டுற காட்சிகளும் மாறிடுமே. ஒரே ஒரு தடவை பார்வையை மாற்ற முயற்சி பண்ணிப் பாருங்களேன்.”.என்றவளது குறுஞ்செய்திக்கு அவனிடம் இருந்து வெகுநேரமாக பதில் மொழி இல்லை.

சரியாக வண்டி நிற்கும் போது “ஓகே ஒரே ஒரு முறை முயற்சிப் பண்ணி பார்க்கிறேன். ” என ஆமோதிப்பு பதில் மொழி வந்திருந்தது அவனிடம்.

இவள் ஆச்சர்யமாகத் திரும்பிப் பார்க்க  அவளைப் பார்த்து புன்னகைத்தபடியே கீழே இறங்கினான்.

ராஜ்ஜை சம்மதிக்க வைத்த சந்தோஷத் துள்ளலில் இவள் பஸ்ஸை விட்டு கீழே இறங்க, முகத்தில் இருந்த மொத்த சந்தோஷமும் அனல் பட்ட பனியாய் சுருண்டுப் போனது.

எதிரே தீரன்!

Leave a Reply

error: Content is protected !!