காதல் தீண்டவே-13

காதல் தீண்டவே-13

பன்னீர் மரத்திற்கடியில் நின்றுக் கொண்டு இருந்த மிதுராவிற்கு லேசாக காலை பனியினால் உடல் உதறத் துவங்கியது.

துப்பட்டாவை இழுத்துத் தன் உடல் மீது சுற்றிக் கொண்டவள் சாலையின் திசையைப் பார்த்தாள்.

எப்போதும் அந்த நேரத்திற்கு சரியாக வரும் அலுவலகப் பேருந்து அவளின் முன்பு வந்து நின்றது.

ஏற முயன்றவளுக்கோ அந்த ஹை-ஹீல்ஸ் பெரும் சிரமத்தைக் கொடுத்தது.

இதுவரை அந்த செருப்பை அணிந்தே பழக்கப்படாதவள் விமல் சொன்னதற்காக பக்கத்துவீட்டுப் பெண்ணிடம் கடன் வாங்கி அணிந்து வந்து இருந்தாள்.

பேருந்தின் முதல் படிக்கட்டில் பாதம் வைக்கும் போதே கால் பிசங்கியது.

அடுத்தப் படிக்கட்டில் கால் வைக்கும் போது கால் எக்ஸ் வடிவத்திற்கு சென்றது.

மூன்றாவது படிக்கட்டில் ஏறியவள் விழாமல் இருந்ததே கடவுளின் கருணை.

எப்படியோ தத்தித் தாவி பேருந்துக்குள் வந்துவிட்டாள்.

உள்ளே நுழைந்தவளது கால்கள் நேராக ராஜ்ஜின் இருக்கையின் அருகே தான் கொண்டு சென்று நிறுத்தியது.

ஆனால் கண்கள் மட்டும் எப்போதும் தீரனுடன் தான் அமரும் இருக்கையை வெறித்தது.

சில நிமிடங்கள் தயங்கியவள் பின்பு என்ன நினைத்தாளோ எப்போதும் போல தான் வழக்கமாக அமரும் இருக்கைக்கே சென்று அமர்ந்தாள்.

அவள் அமர்ந்த அடுத்த நிமிடத்திலேயே இரண்டு கார்த்திக்கும் பேருந்திற்குள் பிரவேசித்தனர்.

இருவருடைய முகமும் சிநேகமாய் மிதுராவை நோக்கியது. ஆனால் மிதுராவின் பார்வை ராஜ்ஜை மட்டும் தான் சிநேகமாகப் பார்த்தது, தீரனின் மீது வெற்றுப் பார்வையை சிந்தியது.

தன் இருக்கையினில் வந்து அமர்ந்த தீரன் மூடிக் கிடந்த ஜன்னல் கதவைத் திறந்துவிட்டு வசதியாக சாய்ந்து அமர்ந்தான்.

எப்போதும் அமரும் இருக்கையில் அமர  போன ராஜ்ஜோ அமராமல் திரும்பி ஒரு முறை மிதுராவைப் பார்த்தான். மிதுராவும் அவனைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தாள் ஏதோ ஒரு வித எதிர்பார்ப்புடன்.

அந்த எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் மிதுராவுக்கு இடப்பக்கம் வந்து அமர்ந்தான் ராஜ். அவள் முகத்தினில் மெதுவாக மென்முறுவல் அரும்பியது.

ராஜ்ஜின் செயல் வியப்பாகவும் அதே சமயம் மகிழ்ச்சியாகவும் இருந்தது தீரனுக்கு.

யாருடனும் ஒட்டாமல் தனித்து வாழ்ந்து பழகிய அவன் மிதுராவிடமாவது ஒட்டுகிறானே என்று மனது நிம்மதி அடைந்தது.

ராஜ்ஜிடம் பேசுவதற்காக மிதுரா சைகைப் பாஷை கற்றுக் கொண்டதை பார்த்ததும் அவள் மீது இன்னும் மதிப்பு கூடியது, கூடவே வருத்தமும்.

இவளது நல்ல மனது புரியாமல் சட்டென்று கோபப்பட்டுவிட்டோமே என்றவன் வருந்தியபடி மன்னிப்புக் கேட்பதற்காக திரும்பினான்.

அந்த நேரம் பார்த்து மிதுராவின் அலைப்பேசி ஒலித்தது.

எடுத்துக் காதில் வைத்தாள், விமல் தான் அழைத்து இருந்தான்.

“ஓய் கேடி டேரை ஸ்டார்ட் பண்ணிட்டியா இல்லையா?” என்றுக் கேட்க

“இதோ ஸ்டார்ட் பண்ணிட்டேன். ” என்று வேகமாக சொல்லியவள் அலைப்பேசியை அணைத்துவிட்டு ராஜ் பக்கம் திரும்பினாள்.

“ராஜ் எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்.” என்றாள் சிரித்துக் கொண்டே.

அதைக் கேட்டு ராஜ்ஜின் முகத்தில் கலவையான உணர்வு அதையும் மீறி இதழ்களில் புன்னகை மின்னல்.

அடுத்து தீரனிடம் திரும்பினாள்.

பிடிக்காதவனைப் போய் பிடிக்கும் என்று சொல்ல வேண்டிய கட்டாயம்.

அவள் முகம் முழுக்க இறுக்கம்.

இருந்தாலும் இதழ்களில் ஒரு சென்டி மீட்டர் புன்னகையை தைத்துக் கொண்டு அவனைப் பார்த்தாள்.

“எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் சார்.” என்றாள் பற்களை கடித்துக் கொண்டே

அவனுக்கு அதிர்ந்துப் போன நிலை. முகத்தை எப்படி வைக்க வேண்டும் என்று தெரியவில்லை. உள்ளம்  முழுக்க குழப்பம் ஆனால் மனதோரத்தில் மட்டும் ஏதோ ஒரு வெளிச்சம் ஊடாடத் துவங்கி இருந்தது.

“உண்மையாவே என்ன பிடிக்குமா? என் மேலே இருந்த கோபம் எல்லாம் போயிடுச்சா?” என்றான் ஆர்வமாக.

“நான் பிடிக்கும்னு மட்டும் தானே சொன்னேன். உங்க மேலே கோபம் போயிடுச்சுனு சொல்லலையே. ” என்றாள் அவனைப் பார்த்து தீர்க்கமாக.

அந்த வார்த்தையைக் கேட்டதும் மீண்டும் அவனது முகம் வாடியது. அதை அவளிடம் காட்டாமல் வேறு புறம் திரும்பிக் கொண்டான்.

பேருந்திற்குள்ளே வந்தாலும் மிதுராவிற்கு இன்னும் குளிர் குறைந்தபாடில்லை.

ஊசிப் போல் துளைக்கும் பனியை சமாளிக்க முடியாமல் தன் துப்பட்டாவை இன்னும் இறுக்கிக் கொண்டாள்.

அதைக் கண்டு  கொண்ட ராஜ், தீரனிடம் கண் பார்வையிலேயே ஜன்னலை அடைக்க சொல்லி சைகை காட்டினான்.

அதை உணர்ந்த தீரனும் சட்டென்று ஜன்னல் கண்ணாடியை கீழ் இறக்கினான்.

மிதுரா குளிருக்கு இதமாக தன் அன்னை கொடுத்துவிட்ட காப்பி ஃப்ளாஸ்க்கை கையில் எடுத்தாள்.

தனக்கு ஒரு கோப்பையிலும் ராஜ்ஜிற்கு ஒரு கோப்பையிலும் நிரப்ப தீரனோ ஏக்கமாக அந்த காப்பியையே பார்த்து கொண்டு இருந்தான்.

ஆனால் அவன் பார்க்கும் போதே இருவரும் தங்கள் நாவில் சுட சுட அந்த தேவாமிர்தத்தை பருகிக் கொண்டு இருந்தனர். அதைக் கண்டவனோ கோபத்தில் மீண்டும் ஜன்னல் பக்கம் திரும்பிக் கொண்டான்.

காப்பி பருகிய பிறகும் இருவரும் தீரனை கவனிப்பதாய் இல்லை. சைகை பாஷையில் சிரித்து சிரித்து பேசிக் கொண்டு இருந்தனர்.

மிதுரா சில வார்த்தைகளை அலைபேசியில் டைப் செய்து ராஜ்ஜிடம் காண்பிக்க அதற்கு சைகை மொழியில் எப்படி சொல்ல வேண்டும் என்று விளக்கிக் கொண்டு இருந்தான் அவன்.

தன்னை விட்டுவிட்டு இருவர் மட்டும் பேசிக் கொள்வது இவனுக்குள் பொறாமை புகையை கிளப்பி விட்டது.

இருவரையும் கலைப்பதற்காக ராஜ்ஜை அழைத்துப் பார்த்தான். ஆனால் அவனோ மிதுராவிடம் பேசும் ஆர்வத்தில் இவனைக் கண்டு கொள்ளவே இல்லை.

அடுத்து மிதுராவை நோக்கி தனது ஹெட் செட்டை நீட்டினான். எப்போதும் கேட்கும் ஆதனின் நிகழ்ச்சியை இணைந்து கேட்பதற்காக.

ஆனால் அவளோ தனது கைப்பையில் இருந்து ஹெட் செட்டை எடுத்து காண்பித்துவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள்.

அவ்வளவு தான் தீரனும் கோபத்தில் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

காலையில் காப்பியும் இல்லை அவனை சில நாட்களாக புத்துணர்வாக்கிய ஆதனின் குரலும் இல்லை. சலித்துப் போனவனாக ஜன்னல் கண்ணாடியில் சாய்ந்து கொண்டான்.

அங்கே படர்ந்து இருந்த பனியின் மீது  கைகள் தன் போக்கில் சாரி என்று எழுதி, அந்த எழுத்துக்களை வருடியபடி இருந்தது.

சில நாட்கள் தான் அறிமுகமான உறவாக மிதுரா இருந்தாலும் இப்படி சட்டென யாரோவாக மாறி இருப்பது ஏனோ மனதிற்கு நெருடலாக இருந்தது.

எல்லோரிடமும் சுமூகமான தோழமையான உரிமையோடு பழகுபவன் மிதுராவிடம் மட்டும் எதிரியாய் மாறி நிற்பது வலித்தது.

அதுவும் தவறு முழுக்க முழுக்க தன்னுடைய அவசர புத்தியால் என்னும் போது குற்றவுணர்வு குளம் போல நிறைந்து இருந்தது.

அந்த குற்றவுணர்வோடு பேருந்து நின்ற அடுத்த நொடியே அவர்கள் இருவருக்கும் காத்திராமல் வேக வேகமாக இறங்கி நடந்துவிட்டான்.

அவன் இறங்கி செல்வதைப் பார்த்த பிறகு தான் ராஜ்ஜிற்கு அவனை கண்டு கொள்ளவே இல்லை என்ற உண்மை தாமதமாக புரிந்தது. 

உணர்ந்தவுடன் அவசர அவசரமாக தீரனின் பின்னால் ஓடினான். 

சென்ற இருவரையும் பார்த்தபடியே எழுந்து கொள்ள முயன்ற போது அவளது கண்கள் அன்னிச்சையாக ஜன்னல் கண்ணாடியை நோக்கியது.

அங்கே தீரன் எழுதி இருந்த சாரி என்ற வார்த்தையைப் பார்த்ததும் இதழ்களில் புன்னகை தொற்று.

ஆனால் அதை மறைத்தபடி பேருந்தில் இருந்து அவசரமாக கீழே இறங்கினாள்.

அங்கே ராஜ் அவளுக்காக காத்திருந்தான். அவள் தீரனை விழிகளால் தேட அவன் எப்போதோ அந்த இடம் விட்டு வெகு தூரம் சென்று இருந்தான்.

“நான் கூப்பிட கூப்பிட அவன் நிற்கவே இல்லை” என்று சைகை மொழியில் ராஜ் சொல்ல அதை பார்த்து சங்கடமாக தலையாட்டியவள் அடுத்த அடி எடுத்து வைக்க அவளது கால்கள் வழுக்கிக் கொண்டு போனது.

அவளைக் கீழே விழாதபடி பத்திரமாக தாங்கி இருந்தான் ராஜ்,  “எப்பவும் இப்படி தான் விழுந்து தொலைப்பியா?” என்ற கேள்வியை கண்களில் தாங்கியபடி.

அதை உணர்ந்தவள் “எப்பவும் விழ மாட்டேன். எப்பவாவது விழுவேன். அப்ப தாங்குறதுக்கு தாங்கு மரம் நீங்க இருக்கீங்க. ” என்று சொல்லிவிட்டு அசட்டு சிரிப்பு சிரித்தவள் அலுவலகத்திற்கு புகுந்தாள்.

எதிரே அபி!

அவனைப் பார்த்து உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் அபி என்றாள் சிரித்துக் கொண்டே.

இரண்டு கார்த்திக்கின் பார்வையும் அவளை குழப்பமாக ஏறிட்டது. வாட்ச்மேனிடம் இதே டயலாக் தான் சொன்னாள். எதிர்ப்படும் அனைவரிடமும் அதே வார்த்தையை தான் சொன்னாள்.

இதோ இப்போது உள்ளே நுழைந்த சிற்பிகாவை நோக்கியும் அவள் இதே வசனம் பேசுகிறாள்.

‘ஆஹா இன்னைக்கு இதே டயலாக்கை நூறு தடவை சொல்லணும்னு விரதம் எடுத்து இருக்கா போலயே. இது தெரியாம அவள் கிட்டே கோவம் போயிடுச்சானு கேட்டு பல்ப் வாங்கிட்டேனே’ என்று எண்ணியபடி இருக்கையில் விழுந்தான் தீரன்.

அவளது எண்ணப் போக்கை படித்த ராஜ் அவன் தோளில் மெதுவாக தட்டிக் கொடுத்தான்.

“மச்சான் ஃபீல் பண்ணாதே. அவள் கண்டிப்பா இதே வார்த்தையை முழு மனசா உன் கிட்டே சொல்லுவா” என்றான் ஆற்றுப்படுத்தும் விதமாக.

தன் இருக்கையில் அமர்ந்த மிதுராவின் பார்வை ராஜ்ஜின் முகத்தை நோக்கியது.

அதைப் பார்த்து புரிந்துக் கொண்டவன் “கண்டிப்பா இன்னைக்கு நான் எல்லார் கூடேயும் சிரிச்சு பேசுறேன் மிதுரா” என்று குறுஞ்செய்தி தட்டிவிட்டு தான் சொன்னதுப் போல எல்லாரிடமும் சிநேக பாவம் காட்டினான். முகத்தினில் இப்போது ப்ளாஸ்டிக் புன்னகை இல்லை. கண்களில் இப்போது கடுமை இல்லை அதற்கு மாறாய் கனிவு.

ராஜ்ஜின் இந்த புதிய மாற்றம் எல்லாரையும் வியப்படைய செய்தது தீரன் உட்பட.

தன் நண்பனை மாற்றிய மிதுராவை சிநேகமாய் ஒரு பார்வை பார்த்தவன் கணினிப் பக்கம் திரும்பிக் கொண்டான். அதன் பின்பு அவள் பக்கம் திரும்பவே இல்லை.

அலுவலகத்திற்குள்ளே எந்த உணர்வுக்கும் இடம் இல்லை. வேலைக்கு மட்டுமே இடம் உண்டு.

அதை உணர்ந்தவள் தீரனின் மீதுள்ள கோபத்தை வேலையில் காண்பிக்கவில்லை.

தீரனும் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவளை நோக்கி சமாதான கொடியைப் பறக்கவிடவில்லை.

ராஜ்ஜும் இவர்கள் இருவருக்கும் இடையில் பிரச்சனையை மேற்கோடிட்டு காட்டாமல் இருவரிடமும் தனக்கு தேவையான வேலையை வாங்கிக் கொண்டு இருந்தான்.

உழைத்துக் கொண்டு  இருந்தவர்களுக்கு பசி என்ற உணர்வு சரியாக மதியம் ஒரு மணிக்கு எழுந்துவிட ஐவரும் சாப்பிட கணேஷ் கடைக்கு சென்றனர்.

அதுவரை இயந்திர பாங்கை கடைப்பிடித்து இருந்த தீரனின் முகத்தில் மீண்டும் சமாதான கொடி பறந்தது.

எந்த இடத்தில் வைத்து அவளை  அவமானப்படுத்தினானோ அதே இடத்தில் இப்போது அவளின் முன்பு நின்றான்.

சுற்றி சாப்பிட்டுக் கொண்டு இருந்தவர்களின் கவனத்தை கைத்தட்டி கலைத்தான். எல்லாருடைய பார்வையும் இப்போது அவனின் மீது.

“ஹாய் ப்ரெண்ட்ஸ் இதே இடத்திலேதான் என் முன்னாடி நிற்கிற மிஸ் மிதுராவை நான் காயப்படுத்திட்டேன்.
தப்பு முழுக்க முழுக்க என்னோடது.
நான் செய்த தப்பிற்கு இந்த குட்டி வார்த்தை ஈடாகாதுதான். ஆனாலும் இந்த வார்த்தையை தவிர வேற எந்த வார்த்தையும் இல்லாததாலே இதையே சொல்றேன்…” என்று தீரன் பேசிக் கொண்டு இருக்க அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதை ஊகித்த அபி வேகமாய் தீரனிடம் திரும்பினான்.

“தீரா நம்ம ஆஃபிஸோட higher officials எல்லாம் இங்கே தான் இருக்காங்க. நீ இங்கே சாரி கேட்க வேண்டாமே. யாரும் இல்லாத இடத்துல கேளு. ” என்று அபி சொல்ல அவனை நோக்கி கூர்மையாய் விழுந்தது தீரனின் பார்வை, கூடவே வார்த்தைகளும்.

“நான் அவளை இங்கே தானே எல்லார் முன்னாடியும் வைச்சு காயப்படுத்தினேன். அப்போ மன்னிப்பும் இங்கே தான் எல்லோர் முன்னாடியும் வெச்சு கேட்பேன். ” என்றவனின் வார்த்தைகள் அதுவரை சுவாரஸ்யமின்றி நின்றுக் கொண்டு இருந்த மிதுராவை நிமிரச் செய்தது.

இவன் செய்த தவறை முழு மனதாக உணர்ந்து இருக்கின்றான். கூடவே உயர் அதிகாரி என்ற போர்வையை போர்த்தி அதட்டி உருட்டி இவளை சமாதானம் செய்யவும் முற்படவில்லை. தன் குற்றவுணர்வை எல்லாம் பரிசுப்பொருட்களில் நிரப்பி  தாஜா செய்யவும் இல்லை.

முழு மனதோடு மன்னிப்பு கேட்கின்றான் இவன்.

இவன் மீது இன்னும் கோபத்தை இழுத்து பிடித்து வைப்பது நியாயமில்லை என மிதுராவின் மனது உணர்ந்த நேரம்

“ஹயம் சாரி மிதுரா.. ப்ளீஸ் என்னை மன்னிப்பியா?  ” என்றான் தீரன் வருத்தத்தை தேக்கியபடி.

அந்த வருத்தத்தை கண்டுகொண்டவளோ “இப்படி honest ஆ சாரி கேட்கும் போது எப்படி மன்னிக்காம இருக்க முடியும்?” என்று தனது விழிகளை சுருக்கி அழகாக கேட்டாள்.

அவளது மன்னிப்பை உணர்ந்தவனுக்குள் பெரும் நிம்மதி. அதுவரை விடாமல் இழுத்துப் பிடித்த மூச்சை இப்போது இலகுவாக விட்டான்.

மனதை அழுத்திக் கொண்டு இருந்த வருத்தம் எல்லாம் மேகமாய் விலகிக் கொண்டு இருந்தது.

இப்போது தெளிந்த வானமாய் அவன்.

இருந்த நெருடல்கள் எல்லாம் விலகிட நாளைக்கு செல்லப் போகும் டீம் டூரை பற்றி விவாதித்தபடி ஐவரும் மகிழ்ச்சியாக உண்டுவிட்டு மீண்டும் வேலையைத் தொடர்ந்தனர்.

💐💐💐💐💐💐💐💐💐💐💐

மணி ஏழை நெருங்கத் துவங்கிய சமயம் அது.

எப்போதும் இந்த நேரத்தில் தான் கண்ணாடி சிறையில் அடைப்பட்டு இருந்த ஐடி ஊழியர்கள் என்னும் பறவைக்கூட்டம் தன் கூடு நோக்கி வேக வேகமாய் பறக்கத் துவங்கும்.

ஆனால் தீரன்,மிதுரா, ராஜ் இந்த மூவரிடத்தில் மட்டும் ஒரு இளைப்பாறலான நடை, பேருந்தை நோக்கி.

எவ்வளவு தான் மெதுவாக நடந்தாலும் மீண்டும் கால் இடறியது ஆதிராவுக்கு.

இப்போது தீரன் அவளைக் கீழே விழாமல் தாங்கிப் பிடித்து இருந்தான். அவன் கைவளைவுக்குள் வாகாய் பொருந்திக் கொண்டவளின் மூளையில் திடீரென உதித்த சிந்தனை தன்னையும் அறியாமல் அவளை  சிரிக்க வைத்தது.

அந்த காரணமில்லா புன்னகைக்கு காரணம் தேடி இரண்டு கார்த்திக்கின் பார்வையும் அவளை நோக்கி விழுந்தது.

“காலையிலே என்னை ராஜ் கீழே விழாம பிடிச்சாங்க. இப்போ நீங்க என்னை பிடிச்சுட்டிங்க. ஆக மொத்தம் நான் விழுந்தா என்னை தாங்கிக்க ரெண்டு பேர் இருக்கிங்க .இரண்டு கார்த்திக் இருக்கீங்க. நினைச்சேன் சிரிச்சேன்..  ” என்று அவள் சொல்ல இருவரும் அவளைப் பார்த்து புன்னகைத்தபடி பேருந்தில் அவரவர் இருக்கையில் அமர்ந்தனர்.

உட்கார்ந்ததும் மிதுராவின் மீது அவன் பார்வை விழுந்தது. அவள் என்னவென்று புருவம் உயர்த்தி கேட்க,

“ஏன் காலையிலே நீ எனக்கு காப்பி கொடுக்கவேயில்லை மிதுரா? என் மேலே அந்தளவுக்கா கோவம்?” என்றான் வருத்தம் ஊறிய குரலில்.

“பின்னே இருக்காதா? செய்த தப்புக்கு நீங்க சாரினு ஒரு வார்த்தை கூட கேட்கவே இல்லையே… அதான் உங்க பக்கம் திரும்பவே இல்லை. “

“ஹலோ மேடம் நீங்க எங்க சாரி கேட்கவிட்டிங்க. நான் போன் பண்ணா அட்டென்ட் பண்றது இல்லை, மெசேஜ் போட்டா ரிப்ளை பண்றது இல்லை, உன் முன்னாடி வந்தா முகத்தை திருப்பிக்கிற… அப்போ நான் சுவத்து முன்னாடியா சாரி கேட்க முடியும்?” என்றான் காரம் குறையாமலேயே.

“ஆமா இல்லை” என்றாள் இவள் தலையில் தட்டிக் கொண்டே.

“ஆமாம் ஆமாம். ” என்று சொன்ன  தீரனின் இதழ்களில் புன்னகை மொட்டு. அதை ஆழ்ந்துப் பார்த்தவள் அவனை நோக்கி புன்னகையுடன் பேச ஆரம்பித்தாள்.

“தீரன் காலையிலே மனசுல ஒட்டாம அந்த வார்த்தையை சொன்னேன். இப்போ மனசார சொல்றேன். உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். ” என்றவளின் வார்த்தையைக் கேட்டு தீரனை விட ராஜ் தான் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டான்.

தன் நண்பனின் வருத்த முகத்தை இனி காண நேரிடாது என நினைத்த ராஜ்ஜுக்குள் மகிழ்ச்சி மத்தாப்புக்கள்.

தீரனும் அவனை சந்தோஷத்துடன் பார்த்து கண்ணசைத்தான்.

இங்கோ மிதுரா தன் கைப்பையினில் இருந்து ஹெட்செட்டை எடுத்து அதன் ஒரு பக்கத்தை தீரனிடம் கொடுத்தாள். அதை வாங்கிக் கொண்டவன் “I missed” என்றான்.

“என்னையா? ஆதனோட குரலையா? ” என்று மிதுரா கேட்க அவனிடம் ஒரு மௌனச் சிரிப்பு.

இந்த சிரிப்பிற்கு என்ன அர்த்தம்?

இரண்டையும் என்று அர்த்தம் கொள்ளலாமோ?

ஹெட்ஃபோனை காதில் மாட்டியதும் சுகமாக வந்து தழுவியது ஆதன் குரல்.

“ஹாய் மக்களே. இன்னைக்கு நாம எதைப் பற்றி பேசப் போறோம்னா தேடலைப் பற்றி…

பிறக்கும் போது தாயின் கதகதப்பை தேடுவோம். வளரும் போது நண்பர்களோட தோளை தேடுவோம். பருவம் வரும் போது காதலை தேடுவோம். காதல் கைக்கூடும் போது கல்யாணத்தை தேடுவோம். கல்யாணம் ஆனதும்  மழலைத் தேடல். மறுபடியும் மழலையில் இருந்து தாயின் கதகதப்பை தேடுவோம். இப்படியே தேடல் தொடர்ந்துட்டே இருக்கும்.

ஒரு தேடல்க்கு முடிவுன்றது இல்லைவே இல்லை. ஒரு முடிவில் இருந்து இன்னொன்னு ஆரம்பிக்கும். அந்த ஆரம்பத்தில் இருந்து இன்னொரு முடிவு இருக்கும்.

என்ன உங்களை ரொம்ப குழப்புறேனோ? அதிகமா குழம்ப வேண்டாம்.

இப்போ நீங்க தேடி கண்டுபிடிச்ச விஷயத்தில் இருந்து தான் உங்களுக்கான அடுத்த தேடல் துவங்கப் போகுது.

தேடுங்க உங்களோட ஒவ்வொரு முடிச்சும் அவிழப் போகுது. இந்த வாழ்க்கைன்றதே வினோத முடிச்சு தானே.

புரியுது புரியுது என்ன ஆதா இப்படி தத்துவ மழையா பொழியுறேனு நீங்க ஃபீல் பண்றது இங்கே வரை எனக்கு கேட்குது.  அதனாலே என் வால்யூமைக் குறைச்சுட்டு பாட்டோட வால்யூமைக் கூட்டுறேன். தொடர்ந்து கேளுங்கள் நண்பர்களே. ஸ்டே ட்யூண்ட் ” என்று ஆதன் பேசி முடித்த அடுத்த நொடி பாட்டு ஒலிக்கவும் அவளது அலைபேசி ஒளிரவும் சரியாக இருந்தது.

விமலிடம் இருந்து குறுஞ்செய்தி.

“உன் ஆளு ஆதன். இப்போ இந்தியாவுலே இல்லை. he is Green card holder. இது தான் நான் கண்டுபிடிச்சது. ” என்றனுப்பி இருந்தான்.

அதைப் படித்ததும் ஆதனைக் குறித்த அவளது குறுகிய தேடல் இப்போது விஸ்தாரமாக விரிந்தது.

‘உள்ளூர்ல இருந்தே கண்டுபிடிக்க வக்கு இல்லை. இதுல எப்படி வெளியூர்ல இருக்கிறவனை கண்டுபிடிக்க போறேன்’ என்று அவள் யோசித்த நேரம் அவளது செவியை வந்து மோதியது அந்த பாடல் வரிகள்..

தேடிக் கிடைப்பதில்லை
   என்று தெரிந்த ஒரு பொருளை
தேடிப் பார்ப்பது என்று
   மெய்த்தேடல் தொடங்கியதே..

தேடி தேடி தேடி தேடி தீர்ப்போமா?
தேடி தேடி தேடி தேடி தீர்ப்போமா?

Leave a Reply

error: Content is protected !!