காதல் தீண்டவே-14b

காதல் தீண்டவே-14b

இயந்திரக்காற்றின் பிடியில் இருந்து நழுவி வந்த அந்த தொடர்வண்டியின் உடலைக் கவ்வியது, இளந்தென்றல் காற்று.

துருப்பிடித்துப் போன கண்களில் மெதுவாய் படர்ந்தது ஒரு பசுமைக் கொடி.

இதுவரை சென்னையின் சீதோஷண நிலைக்கு மட்டுமே பழகியிருந்த மிதுராவுக்கு இந்த சூழல் மனதை மயக்குவதாய்.

எதிர்வந்து மோதும் குளிர்க்காற்றை ரசித்தபடி அந்த இரயிலின் கதவருகே நின்றுக் கொண்டு இருந்தவளருகே காப்பி கப்பை நீட்டினான் ராஜ்.

புன்னகையோடு காப்பியை வாங்கியவள்  மீண்டும் திரும்பி அந்த மலை முகடுகளைப் பார்த்தாள்.

இயற்கையின் அழகு வஞ்சனையில்லாமல் சிதறிக் கிடந்தது அங்கே.

“அழகா இருக்கு இல்லை” என்று ராஜ்ஜைப் பார்த்து கேட்க அவனிடத்தில் புன்னகையுடன் கூடிய ஒரு ஆமோதிப்பு.

இருவரும் மௌனச்சிரிப்போடு  இயற்கையை ரசித்துக் கொண்டிருக்க, அவர்களையே சந்தேகக் கண்ணோடு கடந்துப் போனாள், புறம் பேசும் கூட்டத்தின் ஒருத்தியான ஐஸ்வர்யா. அதை மிதுராவின் கண்களும் கவனித்தது.

அந்த பார்வையை மொழிப் பெயர்க்க முயன்று தோற்றுப் போன மிதுரா, குழப்பத்துடன் திரும்பிய நேரம் ரயில் ஒரு குலுங்கி குலுங்கியது. அதில் அவளது கையில் இருந்த காப்பியிலும் குலுங்கல்.

மொத்த குளம்பியும் இப்போது ராஜ்ஜின் சட்டையை நனைத்திருந்தது.

“ஐயோ சாரி சாரி… தெரியாம கைத்தவறி கொட்டிடுச்சு. ரொம்ப சூடா இருக்கா? வலி இருக்கா? காப்பி கொட்டுன இடம் எரியுதா?” அவளிடமிருந்து கேள்விக் குதிரைகளின் பாய்ச்சல்.

அதுவரை வலியின் எரிச்சலில் இருந்தவனின் முகத்தில் அவளுடைய பதற்றம் ஒரு மென்முறுவலை கொண்டு வந்திருந்தது.

அவள் கேள்விகளை தலையசைத்து மறுத்தவன் “ஐ யம் ஓகே” என்று அழுத்தமாக இதழசைத்துவிட்டு கறை படிந்த சட்டையை சுத்தம் செய்வதற்காக  அங்கிருந்து நகர்ந்தான்.

அவன் நகர்ந்த இரண்டொரு நிமிடத்தில் அந்த இடத்தை ஆக்கிரமித்தது வேறொரு நிழல் உரு.

நிமிர்ந்துப் பார்த்தாள்.

எதிரே தீரன்.

முகம் முழுக்க கவலை மேகம் சூழ்ந்து நின்றவளை நோக்கி புன்முறுவல் பூத்தான்.

“டோன்ட் வொர்ரி மிதுரா. இப்போ தான் ராஜ்ஜைப் பார்த்துட்டு வரேன். காயம் பெருசாப்படல. சட்டையிலே மட்டும் தான் காப்பி அதிகம் பட்டு இருக்கு. ” என்று சொல்லி அவளது கவலை ரேகைகளை முகத்திலிருந்து துடைத்தெடுக்க முயன்றான்.

இருந்தாலும் அவள் மனது சமாதானப்படவில்லை.

“ஆர் யூ ஷ்யூர்” என்றாள் ஊர்ஜிதம் செய்துக் கொள்வதற்காக.

“யெஸ் மிதுரா. உண்மையா தான் சொல்றேன். அது மட்டுமில்லாம உங்களுக்கு இன்னொரு விஷயம் தெரியுமா? ராஜ்க்கு மட்டும் இல்லை அவனோட சட்டைக்கு கூட காப்பினா ரொம்ப பிடிக்கும் மிதுரா. அதான்  காப்பியை குடிச்சுடுச்சு.”  சொல்லிவிட்டு அவன் கண்ணடிக்க இவளது உதடுகளில் புன்னகை வெடிப்பு.

“ஹா ஹா தீரன். யூ ஆர் சோ மீன்.” என்று சிரிக்க தீரனிடத்திலும் புன்னகை.

இருவரிடத்திலும் பரவிய அந்த சிரிப்பலையை சந்தேகமாக கடந்துப் போனாள் இஷிதா.

யோசனை தின்ற முகத்துடன்  இருக்கையில் வந்தமர்ந்த இஷிதாவை, ஐஸ்வர்யாவும் ஷாலினியும் கேள்விக் கண்ணோடு பார்த்தனர்.

“எனக்கு என்னமோ இந்த மிதுரா தீரனை லவ் பண்றானு தோணுது.ரெண்டு பேரும் அப்படி சிரிச்சு சிரிச்சு பேசிக்கிறாங்க”

இஷிதா சொன்னதைக் கேட்டதும் ஐஸ்வர்யா முகத்தினில் பலத்த மறுப்பு.

“இல்லை. மிதுரா ராஜ்ஜை தான் லவ் பண்றா. நான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் அவங்க ரெண்டு பேர் ரொமாண்டிக் லுக் விடுறதைப் பார்த்துட்டு வந்தேன். ” என்ற ஐஸ்வர்யாவின் பதிலை இஷிதா ஏற்றுக் கொள்ளாமல் பார்த்தாள்.

ஷாலினியோ அவர்கள் இருவரிடமும் மிதுரா நின்று இருந்த வாயிலோரத்தை சுட்டிக் காண்பித்தாள்.

அங்கே இப்போது இரண்டு கார்த்திக்கிற்கு இடையில் அவள் நின்றுக் கொண்டிருந்தாள்.

“எனக்கு என்னமோ இவள் ஒரே நேரத்திலே ரெண்டு கார்த்திக்கை மெயின்டெயின் பண்றானு தோணுது.” என்றாள் வாய் கூசாமல்.

மூவரின் வஞ்சப் பேச்சை கவனியாமல் அங்கே அபியும் சிற்பியும் சண்டையிட்டபடி  வந்து அமர்ந்தனர்.

“அபி நீங்க என்னை ஏமாத்திட்டீங்க. நான் காப்பி கேட்டா டீ வாங்கிக் கொடுத்துட்டிங்க.” குற்றப்பத்திரிக்கை வாசிப்பு அவளிடம்.

“இங்க டீ தான் இருந்தது சிற்பி. நான் இறங்குன உடனே உனக்கு காப்பி வாங்கி  தரேன். டீல்?” என அவன் கேட்க அவளும் கட்டை விரலை உயர்த்தி டீல் என்றாள்.

இருவருடைய சம்பாஷனைகளையும் கண்டு மீண்டும் அந்த மூன்று ஜோடி கண்களும் வஞ்சமாய்ப் பார்த்துக் கொண்டன.

“என்ன டீல் எங்களுக்கு எல்லாம் தெரியாம?” என்ற கேள்வியுடன் அங்கே வந்து நின்றான் தீரன், அவனருகே மிதுரா மற்றும் ராஜ்.

“அது ஒன்னுமில்லை தீரன், அது ஒரு புஷ்-அப்ஸ் டீல்” என்று சிற்பி சொல்ல அபி பல்லைக் கடித்தான்.

“அது என்ன புஷ்-அப்ஸ் டீல்” யோசனையுடன் தீரன் கேட்க

“அட அதை விடு தீரா, ரொம்ப போர் அடிக்குது. ஏதாவது கேம் விளையாடலாமா?” என்று திசை திருப்ப முயன்றான் அபி.

“விளையாடலாமே. என்ன கேம்?” தீரன் கேட்க

“ட்ரூத் ஆர் டேர்” என சிற்பியிடம் பதில் வந்தது.

அந்த பதிலைக் கேட்டதும் மிதுரா முகம் சலிப்பைக் காட்டியது.

‘இந்த கேம் விளையாடி நான் விமல் கிட்டே படுற பாடு பத்தாதுனு இவள் வேற கோத்துவிடுறாளே’ என எண்ணி மறுத்துப் பேச முயல்வதற்குள் மீதி மூன்று தலையும் விளையாட்டிற்கு சம்மதமென தலையாட்டிவிட்டது. இனி இவள் சம்மதித்து  என்னவாகப் போகிறது?

விதியே என இருக்கையில் அமர்ந்து நடக்கப் போவதை வேடிக்கை பார்த்தாள்.

“எல்லாம் ஓகே தான் சிற்பி. ஆனால் ட்ரையின்லே எந்த இடத்திலே வெச்சு பாட்டிலை சுத்த முடியும்?” என்று அப்போது தான் நினைவு வந்தவனாக அபி கேட்டான்.

“அதுக்கெல்லாம் என் கிட்டே ஐடியா இருக்கு” என்றவள் தன் கைப்பையை துழாவி பேப்பரையும் பேனாவையும் எடுத்தாள்.

“ஏது இந்த ஆதி காலத்து குடவோலை டெக்னிக் தான் உன் ஐடியாவா?” நக்கலாகக் கேட்டவனை திரும்பி முறைத்துவிட்டு மீண்டும் தன் பணியை செய்தாள்.

தீரன் திரும்பி அந்த ட்ரெயின் கம்பார்ட்மெண்ட்டைப் பார்த்தான். அவர்களது டீம்மில் இருந்து ஐஸ்வர்யா, இஷிதா மற்றும் ஷாலினி மட்டுமே அங்கு இருந்தனர். மீதி பேருக்கு அடுத்த காம்பார்ட்மெண்ட் ஒதுக்கப்பட்டிருந்தது.

“ஐஸ்வர்யா,இஷிதா,ஷாலினி நீங்களும் வர்ரீங்களா?” என்று தீரன் அழைக்க மூவரிடத்திலும் இருந்து ஒரு சேர பதில் வந்தது.

“இல்லை சார். நாங்க வரலை… ஐஸ்வர்யா கல்யாணத்துக்கு ஆன்லைன்ல ஷாப்பிங் பண்ணிட்டு இருக்கோம்.  நீங்க விளையாடுங்க. ” என்றவர்களைப் பார்த்து புன்னகைத்தவன்

“ஓகே நீங்க பர்சேஸ் பண்ணுங்க. அப்புறம் ஒரு சின்ன ரிக்வெஸ்ட் ஆஃபிஸ்லே கூப்பிடுறா மாதிரி சார் னு வேண்டாமே. தீரன்னே கூப்பிடுங்க. ஆஃபிஸ் விட்டு வெளியே வந்த அப்புறம் நாம எல்லாரும் ஃப்ரெண்ட்ஸ் தான். ” என்றவனது வார்த்தைகளைக் கேட்ட மிதுரா மனதினில் ஏதோ சொல்ல முடியாத ஒரு நெருடல், விளக்க முடியாத  ஒரு வெற்றிடம்.

திடீரென்று காற்றில் ஒரு குலுக்கல்…

காற்றை உரசி கீழே விழுந்தன பெயர் எழுதிய துண்டு சீட்டுகள்.

முதல் சீட்டை சிற்பி எடுத்தாள். அவளுக்கு தீரனின் பெயர் வந்து இருந்தது.

“தீரன், என் கிட்டே மாட்டிக்கிட்டிங்க” என்று அவள் சிரிப்புடன் சொல்ல அவனும் பதிலுக்கு சிரித்தான்.

“ட்ரூத் ஆர் டேர். ” சிற்பி கேட்க தீரனிடம் பட்டென்று பதில் “டேர்” என்று.

“ஓகே உங்க ஃப்ரெண்ட் யாருக்காவது கால் பண்ணி ஐ லவ் யூ சொல்லணும். ” என்றவுடன் தீரன் வேகமாக தன் அலைபேசியை எடுத்தான்.

மிதுராவின் கண்கள் ஆர்வமாய் அவனை மேய்ந்தது. யாருக்கு அழைப்பான். அவனுக்கு காதலி யாராவது இருப்பார்களோ? அவளுக்கு அழைப்பானோ? யோசனைகளின் பிடியில் இருந்த நேரம் அவளை கலைத்தது ஒரு  ஒலி.

      பாசம் வைக்க நேசம் வைக்க
தோழன் உண்டு வாழ வைக்க
    அவனை தவிற உறவுக்காரன்
யாரும் இங்கில்லே… உள்ள மட்டும்
     நானே உசிரை கூடத்தானே
  என் நண்பன் கேட்டால்
     வாங்கிக்கன்னு சொல்லுவேன்

ரிங்டோன் வெகு அருகிலேயே கேட்டது. நிமிர்ந்துப் பார்த்தாள்.

ராஜ்ஜின் ரிங்க்டோன் அது.

அப்படியானால் அழைப்பு விடுத்தது தீரனோ? கேள்வியுடன் நிமிர்ந்துப் பார்க்க தீரனே தான்.

“மச்சான் ஐ வ் யூ. உன்னை ரொம்ப பிடிக்கும். என் உயிரு நீ தான் டா ராஜ். என் மனசை நான் உன் கிட்டே பறிகொடுத்துட்டேன் டா. உன்னை ரொம்ப லவ் பண்றேன் டா” என தீரன் சொல்ல சிற்பிகா “போங்கு போங்கு” என்று கத்தினாள்.

“நான் என்ன சிற்பி போங்கு பண்ணேன்? நீங்க ப்ரெண்ட்னு சொன்னீங்களே தவிர, கேர்ள் ப்ரெண்ட்னு சொல்லலையே… சோ
நான் எனக்கு இருக்கிற ஒரே ஒரு ப்ரெண்ட்க்கு கால் பண்ணேன். அவனை நான் ரொம்பவும் லவ்வும் பண்றேன்.சோ டேர் கம்ப்ளீட்டட். ” என்ற தீரனின் வார்த்தைகளைக் கேட்டு புன்னகை பளீரட பார்த்துக் கொண்டிருந்தாள் மிதுரா.

சிற்பிகா மீண்டும் குலுக்கிப் போட இந்த முறை அபி எடுத்தான். அவனுக்கு மிதுராவின் பெயர் வந்திருந்தது.

“உங்களுக்கு ஒரே நாள் தான் வாழ்க்கை இருக்குனு வைச்சுக்கோங்க. அப்போ அந்த  கடைசி நாளிலே யாரை நீங்க  மீட் பண்ணனும் ஆசைப்படுவீங்க?” என்று அபிக் கேட்க “ஆதன்” என்றாள் மிதுரா.

அந்த பதிலைக் கேட்டதும் இரண்டு கார்த்திக்கும் திகைத்து நிமிர்ந்தனர். இருவரது விழிகளும் அர்த்தத்துடன் ஒன்றுக்கொன்று பார்த்துக் கொண்டது.

“எதுக்காக மிதுரா ஆதனை சந்திக்கணும்னு ஆசைப்படுற?” என்றாள் சிற்பிகா பதில் அறிந்துக் கொள்ளும் ஆர்வத்தோடு.

“நான் ஆதன் கிட்டே ஒரு முக்கியமான விஷயம் கேட்கணும் சிற்பி. என் வாழ்க்கையை மாத்தப் போற பதில் அவர் கிட்டே தான் இருக்கு. அவரை நான் கிட்டத்தட்ட பதினொரு மாசமா தேடிட்டு இருக்கேன். அவர் க்ரீன் கார்ட் ஹோல்டர்னு கண்டுப்பிடிச்சாச்சு… சீக்கிரமா ஆள் யாருனும் கண்டுபிடிச்சுடுவேன். ”  என்று மிதுரா சொல்ல திருதிருவென முழித்தனர் இரண்டு கார்த்திக்கும். இருவரது முகத்திலும் மொழிப் பெயர்க்க முடியாத பாவனைகள்.

அவர்கள் இருவரின் பாவனையை கலைக்கும் விதமாய் மீண்டும் சீட்டைக் குலுக்கிப் போட்டாள் சிற்பிகா. இந்த முறை மிதுரா எடுத்தாள். அவளுக்கு ராஜ்ஜின் பெயர் வந்து இருந்தது. ட்ரூத் ஆர் டேர் என்ற கேள்விக்கு அவனிடம் ட்ரூத் என்ற பதில்.

“உங்களோட முதல் காதல் அனுபவத்தைப் பத்தி சொல்லுங்க ராஜ் ஜி… ” என்று மிதுரா கேட்க ராஜ்ஜின் முகம் சோகத்தில் கசங்கியது. தீரனின் முகத்தில் கோபத்தின் அனல் திரிகள். இருந்தாலும் உண்மையை சொல்லி ஆக வேண்டிய கட்டாயம்.

ராஜ் தீரனைப் பார்த்தான். தீரனும் அதைப் புரிந்துக் கொண்டு ராஜ்ஜின் குரலாய் அவன் பேசத் தொடங்கினான்.

எங்க காதலோட அனுபவம்…” என்று ஆரம்பித்த முதல் வார்த்தையிலேயே அவனிடம் பெரும் தடுமாற்றம்.

“சாரி சாரி…  அவனோட காதலோட அனுபவம் ஒரே வரி தான். அது துரோகத்தோட வேர்ல முளைச்ச விஷ விருட்சம். அந்த செடியை வேரோட வெட்டிப் போட்டாச்சு. அதைப் பத்தி பேச வேற எதுவும் இல்லை.” என்று கண்கள் இடுங்க சொன்னவன் சட்டென்று அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டான்.

ராஜ்ஜுடைய காதல் கதையை சொல்லும் போது ஏன் தீரனிடத்தில் இப்படி ஒரு கோபமும் துடிப்பும் நடுக்கமும் இவ்வளவு பாதிப்பும். அந்தளவுக்கா தன் நண்பனை இவன் நேசிக்கின்றான்?

யோசனையுடன் மிதுராவின் பார்வை தீரன் சென்ற பாதையைப் பின் தொடர இங்கோ ராஜ் அவசரமாக தன் இருக்கையினில் இருந்து எழுந்துக் கொண்டவன் தீரன் சென்ற பாதைக்கு எதிர் திசையில் நடக்க ஆரம்பித்தான்.

அவன் முகம் முழுக்க வருத்தத்தின் வேதனை ரேகைகள்.

தான் இந்த கேள்வி கேட்டு இருக்கக் கூடாதா என தன்னைத் தானே நொந்துக் கொண்ட மிதுரா இரண்டு பேர் போன பாதையையும் மாறி மாறிப் பார்த்தாள்.

எந்தப் பக்கம் செல்வது என்று குழப்பம்? யாருடைய வருத்தத்தை முதலில் போக்குவது என்ற சஞ்சலம்?

அவள் இதய காம்ப்பஸ்ஸின் முள்ளோ,  ராஜ் சென்ற திசையை சுட்டிக் காட்டியது.

வேகமாக அவன் பின்னால் போனாள் அவள்.

சோகமாக சென்ற மூவரையும் பார்த்தபடி அபியும் சிற்பியும் அமர்ந்துக் கொண்டிருந்தனர்.

“சே சந்தோஷமா ஆரம்பிச்ச விளையாட்டு இப்படி ஆகிடுச்சே…” என்று சிற்பிகா வருத்தப்பட “அவங்களாவது கேம் விளையாடுனதாலே சோகமானாங்க. ஆனால் கேம் விளையாடததாலே சோகமா இருக்கேன்…” என்றான் அபி.

“அதுக்கெதுக்கு சோகம். நாம விளையாடிட்டா போச்சு. ட்ரூத் ஆர் டேர்?” என்று சிற்பிகா கேட்க “ட்ரூத்” என்றான் அவன்.

“உங்க லைஃப்ல உங்களுக்கு ரொம்ப பிடிச்ச நபர் யார் அபி?” என்றுக் கேட்க யோசிக்காமல் வார்த்தைகள் வந்தது அபியிடம்.

“என் அக்காவைத் தான் ரொம்ப பிடிக்கும். ஐ லவ் ஹெர் சோ மச்.” என்றான்.

“நான் நீங்க அம்மா சொல்வீங்கனு எதிர்பார்த்தேன். பட் ஐ யம் சப்ரைஸ்ட். “

“எனக்கு அம்மா இருந்தும் இல்லாத நிலை தான்  சிற்பி. அவங்க மனசுல ஏதோ ஒரு வருத்தம். அதனாலே அதிகம் யார் கூடேயும்  பேச மாட்டாங்க,  நெருங்க மாட்டாங்க. என் அக்கா தான் எனக்கு அம்மாவா இருந்தா. பட் இப்போ என்னை விட்டு அவள் ரொம்ப தூரம் போயிட்டா. எல்லாரும் இருந்தும் இப்போ நான் ஒரு அநாதை மாதிரி தான்.” என்று அபி சொல்ல பட்டென்று சிற்பியிடம் இருந்து வார்த்தைகள் வந்தது.

“ஏன் நான் இல்லையா உங்களுக்கு? இனி இப்படி பேசாதீங்க…”

அபியின் முகத்தில்  சந்தோஷ வெளிச்சம்.

“நிஜமாவே எனக்காக இருப்பியா சிற்பி?” என்றான் அவளை ஆர்வமாகப் பார்த்தபடி.

“இருப்பேன் அபி. கடைசி வரை உங்களுக்கு நான் நல்ல எனிமியா இருப்பேன். இனி ஒவ்வொரு வருஷ எனிமி டேவை நாம சேர்ந்து செலிபிரேட் பண்ணலாம் ஓகே. ” என்றவள் சொல்ல இப்போது அபி அவளை போலியாய் முறைத்து திரும்பிக் கொண்டான், முகம் முழுக்க சிதறும் புன்னகையை அவளிடம் காட்ட முடியாமல்…

“அபி சார் நீங்க அந்த பக்கம் சிரிக்கிறது. இந்த பக்கம் இருக்கிற எனக்கு தெரியுது.”

“தெரிஞ்சா சரி தான்…புரிஞ்சா நல்லது தான்” என்றவன் சொல்ல அவள் உதடுகளில் மௌனக் குடியேற்றம்.

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

ரயில் கம்பியைப் பற்றிக் கொண்டு உடைந்துப் போய்  நின்று இருந்தான் ராஜ்.

அவன் உள்ளம் இப்போது எரிமலை வெடிப்பில் சிதறிய லாவாத் துகள்களின் குவியலாய்.

யாரையாவது பிடித்துக் கொண்டு கத்தி அழ வேண்டும் போல அவனது கைகள் பரபரத்தது. ஆனால் அருகில் யாருமே இல்லையே என தவித்துக் கொண்டிருந்த நேரம்  சாரி என்ற வார்த்தையோடு அங்கே வந்து நின்றாள் மிதுரா.

அவனோ அவளது முகத்தைப் பார்த்துவிட்டு தூரத்தில் எதையோ வெறித்தான்.

“உங்களை ஹர்ட் பண்ணனும்னு நினைக்கல ராஜ். நான் உங்க வேதனையை கிளறிட்டேனு புரியுது… என்னை” என்று அவள் ஏதோ பேச வர சட்டென்று ராஜ் அவளது கையைப் பிடித்தான். அந்த கைகள் முழுக்க நடுக்கம். பிடிமானத்திற்காக தவித்து நின்ற கைகளை உதறிவிட முடியவில்லை அவளால்.

துணை தேடும் போது தவிக்கவிட்டுப் போவது நல்ல நட்பு இல்லையே. 

பதிலுக்கு அவன் கையைப் பிடித்துக் கொண்டாள். 

அதுவரை  உள்ளடக்கி வைத்திருந்த கண்ணீர் எல்லாம் கோடுகளாய் அவன் கண்களில் வழியத் துவங்க, அவள் கையை இன்னும் அழுத்தமாகப் பற்றிக் கொண்டான் அவன்.

தன் மனதை சமாதானப்படுத்திக் கொண்டு ராஜ்ஜை சமாதானப்படுத்த தேடி வந்த தீரன், அவர்கள் இருவரின் கைப்பிணைப்பை பார்த்துவிட்டு அப்படியே ஸ்தம்பித்து நின்றான். அவனுக்குள் ஏதோ ஒரு இனம்புரியா உணர்ச்சி.

ஒருவேளை உள்ளுக்குள் ஏதோ உடைப்படும் உணர்வோ?

Leave a Reply

error: Content is protected !!