காதல் தீண்டவே-15

காதல் தீண்டவே-15

சென்னையில் காலை பதினொரு மணிக்கு  பயணத்தைத் துவங்கிய அந்த ஏற்காடு எக்ஸ்ப்ரஸ் சரியாக ஆறு மணிக்கு தன் வழித்தடத்திற்கு வந்து நின்றது.

உள்ளே இருந்து இறங்கிய அனைவரின் முகத்திலும் பயணத்தின் அப்பட்டமான சோர்வு.

அதை உணர்ந்த தீரன் “கேய்ஸ். நாம நாளைக்கு ஏற்காட்டை சுத்தி பார்க்கலாம். இப்போ புக் பண்ண ரிசார்ட்க்கு போய் ரெஸ்ட் எடுக்கலாம். ” என்று சொல்ல எல்லோரிடத்திலும் ஆமோதிப்பு.

கிட்டத்தட்ட பதினைந்து பேர் கொண்ட அந்த குழுவிற்கு தாரளமாகவே அமைந்தது அந்த விஸ்தாரமான ரிசார்ட்.

இருவருக்கு ஒரு அறை என ஒதுக்கிக் கொண்டு எல்லாரும் அவரவர் அறைக்குப்  போய் விழுந்தனர்.

மிதுரா சிற்பிகாவுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு அடுத்து ராஜ்ஜீம் தீரனும் தங்கியிருந்தனர். அதற்கு அடுத்த அறையில் அபி இன்னொரு நண்பனுடன் தங்கியிருந்தான்.

மணி இரவு ஒன்பதை நெருங்கும் வரை எந்த அறையின் கதவும் திறக்கப்படவில்லை. அந்தளவுக்கு உடலில் சோர்வு.

பசி என்ற ஒன்று உணர்வு உள்ளுக்குள் வந்துவிட சிற்பிகா விழித்துவிட்டாள்.

ஆனால் மிதுராவோ அசைவே இல்லாமல் உறங்கிக் கொண்டு இருந்தாள்.

அவளுடைய தூக்கத்தைக் கலைக்காமல் மெதுவாக சிற்பிகா எழுந்து உணவு மேஜைக்கு வந்தாள்.

அங்கே ராஜ்ஜும் அபியும் உணவருந்திக் கொண்டு இருந்தனர்.

“எங்கே தீரன்?” என்றாள் நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தபடி.

“நல்லா தூங்கிட்டு இருக்கான். அதான் எழுப்பல. ஆமாம் மிதுரா எங்கே?” என்று கேட்டபடி அபி அவளுக்கு உணவு அடங்கிய பாத்திரத்தை தள்ளி வைத்தான்.

“அவளும் தூங்குறா அதான் எழுப்பல. ” சொல்லியபடியே உண்டு முடித்தவள் மிதுராவிற்காக சாப்பாட்டைக் கொண்டு சென்று அறையில் வைத்துவிட்டு மீண்டும் வெளியே வந்தாள்.

அங்கே இருந்த தோட்டம் தன் பசுமையைக் காட்டி அவளை வா வா வென்று அழைத்தது, மெல்ல அங்கு சென்று அமர்ந்தாள்.

அவள் அமர்ந்த கொஞ்ச நேரத்திலேயே பக்கத்தில் இன்னொரு ஒரு பிம்பம் அருகில் விழுந்தது.

திரும்பிப் பார்க்காமலேயே “அபி” என்றாள்.

“யெஸ் மேடம்.” என்றான் கபடற்ற சிரிப்பில்.

அவன் சிரிப்பில் கரைந்தவள் வருத்தமான குரலில் சொன்னாள் “இனி யாரும் இல்லைனு பேசாதீங்க அபி.” என்று.

அவன் பார்வை அவள் மீது சோர்வாக விழுந்தது அது காலம் அவனுக்கு கொடுத்த சோர்வு.

மெல்ல தன் மனதை அவளிடம் திறந்தான்.

“அப்பா இங்கே இல்லை சிற்பி, வெளியூர்ல வேலையிலே இருக்கார். அம்மாவுக்கும் உடம்பு முடியல. ஹாஸ்பிட்டலிலே அட்மிட் பண்ணி இருக்கேன். அக்கா பெங்களூர்ல இருக்கா அவள் ரொம்ப மனக்கஷ்டத்துல இருக்கா…  எப்பவாவது தான் என் கிட்டே பேசுவா.இப்போ என் கூட பேச இப்போ யாருமே இல்லை சிற்பி. ஐ யம் ஃபீலீங்க் சோ லோன்லி” என்று அபி சொல்ல சட்டென்று திரும்பிப் பார்த்தாள் அவள்.

“ஏன் நான் இல்லையா?” பட்டென அவளிடம் இருந்து விழுந்தது வார்த்தைகள்.

“கண்டிப்பா சிற்பி, நீ இருக்க இப்போ எனக்கு. வெளியே எவ்வளவு தான் நான் சிரிச்சு பேசுனாலும் மனசுல ஒரு வெறுமை இருக்கும், ஆனால்  அந்த வெறுமை உன்னைப் பார்த்த உன் கூட பேசும் போது மட்டும் தான் இல்லை.”
என்றான் மனதார…

“அப்புறம் என்ன அபி சாரே. நான் உங்கள் லைஃப் லாங் முழுக்க துணையா இருப்பேன். நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து எல்லா எனிமி டேய்ஸ்ஸையும் ஒன்னா கொண்டாடுவோம் ஓகே” என்றவள் சிரித்துக் கொண்டே சொல்ல “வாலு” என்று சொன்னவனின் முகம் முழுக்க சிரிப்பு.

அந்த சிரிப்பின் சுழலில் சிக்கி அவனுக்குள் அமிழ்ந்தாள் அவள்.

இரவு பத்தரை மணிக்கு முழிப்பு தட்டியது மிதுராவிற்கு.  இத்தனை மணி நேர உறக்கம் அவளுக்கு தலை பாரத்தை கொடுத்திருந்தது.

வயிறு வேறு விடாமல் சப்தம் போட அறையை சுற்றி முற்றும் பார்த்தாள்.

அங்கே சிற்பிகா வைத்துவிட்டுப் போன உணவைப் பாத்திரம் கண்களில் மின்னியது.

‘என் நண்பேன்டி’ என்று மனதிற்குள் சொன்னவள் மொத்த உணவையும் காலி செய்துவிட்டு வெளியே வந்தாள்.

எதிரே ராஜ்!

“குட் மார்னிங்” என்று வாயசைத்தவனைப் பார்த்து அசட்டுப் புன்னகை பூத்தாள் அவள்.

“லைட்டா தூங்கிட்டேன் ராஜ். அதுக்காக இப்படி கலாய்க்கக்கூடாது” என்றவள் “எங்கே தீரன்?” என்றுக் கேட்டாள்.

இப்போதெல்லாம் ராஜ்ஜின் உதட்டசைவை வைத்தே அவன் பேசுவதை அறியத் துவங்கி இருந்தாள் அவள்.

“அவனுக்கு இன்னும் குட் மார்னிங் ஆகல. நல்லா தூங்கிட்டு இருக்கான்…” என்று சொல்லிப் புன்னகை பூத்தவனின் முகத்தை உற்றுக் கவனித்தாள்.

அவன் முகத்தில் இப்போது காலையில் இருந்த கவலை ரேகைகள் இல்லை தெளிந்த நீரோடையாய் இருந்தது.

அதைப் பார்த்ததும் இதுவரை அவள் இதயத்தை அழுத்தியிருந்த பாரம் விலக, நிம்மதியாய்  பெருமூச்சவிட்டு மெதுவாக ராஜ்ஜோடு நடக்கத் துவங்கினாள்.

“சிற்பியைப் பார்த்தீங்களா ராஜ்” என்றவள் கேட்க அவன் வெளியே இருக்கும் தோட்டத்தை சுட்டிக் காட்டிவிட்டு அவளோடு அங்கே சென்றான்.

அபி சிற்பியிடையே அங்கே பலமான விவாதம். கூடிய சீக்கிரம் குடுமி பிடி சண்டை வரப் போவதற்கான அறிகுறியும் பிரகாசமாக தெரிந்தது.

“ஹே சிற்பி, ஏன்டி அபியை மிரட்டிட்டு இருக்கே…” என்றுக் கேட்டபடி வந்து அபி அருகில் அமர்ந்தாள்.

“ஓய் மிது, நீ என் ப்ரெண்ட். எதுக்காக அபிக்கு சப்போர்ட் பண்ற?”

“பிரியாணி சாப்பிட்ட கையை ஸ்மெல் பண்ணா தெரியாதா? நீ தான் டி ஏதாவது பண்ணி இருப்ப… அதான் நான் அபிக்கு சப்போர்ட் பண்றேன். அது மட்டுமில்லாம அபி எனக்கு அண்ணன் மாதிரி. ” என்று சொல்ல அபியின் உள்ளம் லேசாக நெகிழ்ந்தது.

யாருமே அக்கறை செலுத்தவில்லையென வருத்தப்பட்ட மனதிற்கு மிதுராவின் இந்த அண்ணன் என்ற  வார்த்தை மயிலிறகால் மனதை வருடுவதாய்.

“சிற்பி, எனக்கு இப்போ என் தங்கச்சி சப்போர்ட்க்கு இருக்கா… இனி என்னை சும்மா சும்மா மிரட்ட முடியாது பார்த்துக்கோ” காலரை தூக்கிவிட்டப்படி பேசினான்.

“என்ன அபி சாரே புஷ்-அப்ஸ் பயம் விட்டுப்போயிடுச்சா. அப்போ பயம் காட்டிட வேண்டியது தான். ” என்று அவனிடம் சொன்னவள் மிதுராவின் பக்கம் திரும்பினாள்.

“மிது அன்னைக்கு அபி ஷர்ட் அழுக்கா இருந்தது இல்லை… ஏன் தெரியுமா?” என்றவள் துவங்க  அபியின் வார்த்தை இடையில் வந்து இடறி விழுந்தது.

“சரி சரி, நீ கேட்டா மாதிரி நான் உனக்கு சாக்லேட் வாங்கித் தரேன். ஆனால் ஃபாரின் சாக்லேட்க்கு நான் எங்கே போவேன். லோக்கல் சாக்லேட் வேணா ஒத்துக்கோயேன். “

“நோ நோ எனக்கு பெட்டர் மேக்ஸ் லைட்டே தான் வேணும். எனக்கு ஃபாரின் சாக்லேட்டே தான் வேணும். ” என்று சிற்பிகா அடம்பிடிக்க அபி சலித்துப் போனான்.

“நான் என்ன ராஜ் மாதிரி க்ரீன் கார்ட் ஹோல்டரா? ஃபாரின் சாக்லேட்டை  ப்ளைட் புடிச்சுட்டு போய் வாங்கிட்டு வரதுக்கு?” என்று அபி கேட்க மிதுரா சட்டென்று நிமிர்ந்தாள்.

விமல் சொன்ன வார்த்தைப் புள்ளியும், அபி சொன்ன வார்த்தையுப் புள்ளியும் இணைத்துப் பார்த்தால்,  அதில் ராஜ் என்னும் ஒரு நேர்க்கோடு.

அவள் மூளையில் வெகுநாளாக ஒரு உள்ளுணர்வு. அவளுடைய ஆதன் அவளுக்கு மிக அருகிலேயே இருப்பதுப் போல் ஒரு பிரம்மை.

அந்த பிரம்மை ஒரு வேளை உண்மையோ?

இந்த ராஜ் தான் ஒரு வேளை ஆதனோ?

ஆனால் இது எப்படி சாத்தியம்?

யோசனையின் பிடியினில் அவள் முகம் சிக்கித் தவித்த போது ராஜ் அவளது தோளைத் தொட்டு என்ன என்று பாவனையால் கேட்டான்.

ஒன்றுமில்லை என்று தலையசைத்தவள் அவர்களுடைய பேச்சில் ஒன்ற முடியாமல் தவித்தபடி நேரத்தைப் பார்த்தாள்.

மணி பத்தே முக்கால் ஆகியிருந்தது.

இன்னும் கால் மணி நேரத்தில் ஆதனின் நிகழ்ச்சி துவங்கிவிடும்.

அவள் பரபரப்பாக எழுந்த சமயம் அதே வேகத்துடன் ராஜ்ஜும் எழுந்தான்.

சந்தேகமாக ஏறிட்டது மிதுராவின் விழிகள்.

“சீக்கிரமா தூங்கிடுவேன் மிதுரா அதான்…” என்றவனது வாய் அசைவைப் படித்தவளுக்கு தீரன் சொன்ன விஷயம் நியாபகம் வந்தது.

‘நாங்க ரெண்டு பேரும் சீக்கிரமா தூங்கிடுவோம். அதனாலே ஆதன் ஷோவைக் கேட்க முடியல” என்று முன்பொரு நாள் சொன்ன வார்த்தை மீண்டும் அவள் செவிப்பறையை மோதியது.

ஒரு வேளை இதற்குப் பின்பும் ஏதாவது காரணம் இருக்குமோ…

இன்று எல்லா சம்பவங்களும் அவள் மனதிற்கு மிக நெருடலாக…

போடப்பட்ட முடிச்சுகள் மெது மெதுவாக அவிழ்வது போல இருந்தது. ஆனால் முழுவதாய் அவிழ்க்க முடியுமா?

யோசனையுடன் அவள் அறைக்குள் புகுந்து ரேடியோவை ஆன் செய்தாள். ஆனால் இன்னும் ஆதனின் நிகழ்ச்சி ஒளிபரப்பும் நேரம் நெருங்கவில்லை.

ஆவலாக அலைபேசியைத் தாங்கி காத்துக் கொண்டு இருந்தவளின் காதுகளில் விழுந்தது ஒரு பறவையின் சப்தம்.

ஜன்னலுக்கு அருகே வந்துப் பார்த்தாள்.

மினியேச்சர் மயில் போல ஒரு குட்டிப் பறவை. அதன் பெயர் யாழ்ப்பறவை.

அது தான் இப்போது யாழைப் போல மயக்கும் ஒரு ஒலியை  எழுப்பிக் கொண்டு இருந்தது. அதன் குரலில் லயித்துப் போய் இருந்த நேரம் சரியாக ஒலித்தது ஆதனின் குரல்.

“ஹாய் மக்களே இன்னைக்கு நான் எந்த டாப்பிக்கோட உங்களை சந்திக்க வந்து இருக்கேனா காயங்களைப் பற்றி…

காயம்னு நாம நினைக்கும் போதே மனசுக்குள்ளே ஒரு பய அலை பரவும். காயம் நம்ம கிட்ட வரக்கூடாதுன்றதுக்காக நாம பல மைல் தூரம் ஓடுவோம்.

ஆனால் பயப்படாதீங்க. ஓடாதீங்க.  காயம் நல்லதுக்கு தான்.  மனசார அந்த காயத்துக்கிட்டே உங்களை ஒப்படைங்க.  அது புது ஆளா வடிவமைச்சு உங்களை உங்க கிட்டேயே கொடுக்கும்.

உதாரணத்துக்கு முதல் காதலை எடுத்துக்கோங்க. அதைப் பத்தி சில சமயம் யோசிக்க பயப்படுவோம். அது கிட்டே இருந்து ஓடுவோம்.

ஆனால் ஒரு தடவை நிதானமா உட்கார்ந்து யோசிச்சுப் பார்த்தா அந்த காதல் நம்மளோட காயத்துக்கு அருகதையானதா இல்லையான்றது தெரிஞ்சுடும். சோ ஹேப்பியா காயப்படுங்க மக்களே. காயங்கள் நிறைய பாடங்களை கத்துத் தரும்.

ஆகையால் காயங்களைக் கண்டு நடுங்காதே மனதே.

காயம் கொள்!

மூங்கில் காயப்பட்டதால் தானே
   புல்லாங்குழல் ஆனது,
நல்லிசையின் போதை தர…

சுவர் காயப்பட்டதால் தானே
   சாளரம் ஆனது,
இளங்காற்றின் குளிர்ச்சி தர…

நிலம் காயப்பட்டதால் தானே
   விளைநிலம் ஆனது,
நெற்கதிரின் மணியை தர…

வானம் காயப்பட்டதால் தானே
    நிலாத்தட்டு ஆனது,
இரவின் குளிர்ச்சியை பரிமாற..

ஆகையால் காயங்களைக் கண்டு
   நடுங்காதே மனமே..
காயம் கொள்.

என்ற ஆதனின் வார்த்தைகளைக் கேட்டவளின் முகத்தில் யோசனை அலையாடியது.

முதல் காதலைப் பற்றி சில நேரங்களுக்கு முன்பு தான் ராஜ்ஜிடம் கேட்டு அவனை காயப்படுத்தினோம். ஆனால் இப்போது அதைப் பற்றியே ஆதனும் பேசுகின்றான்.

இது நிச்சயம் அவளுக்கு தற்செயலாக தோன்றவில்லை.

சிறிது நேரத்திற்கு முன்பு மனதினில் தவறி விழுந்த சந்தேகம் இப்போது மிகப் பெரிய விருட்சமாய்.

குழப்பத்துடன் ஜன்னல் கம்பியைப் பற்றிக் கொண்டு எதிரே வெறித்தாள்.

முன்பு மரக்கிளையில் அமர்ந்திருந்த அந்த யாழ்ப்பறவை இப்போது அங்கில்லை.

இப்போது அந்த இடமே பெரும் நிசப்தமாய்.

ஆனால் அவள் மனதினில் மட்டும் பல சந்தேக சப்தங்கள்.

ராஜ்ஜூக்கும் ஆதனுக்கும் இடையே ஏதோ ஒரு சம்பந்தம் இருப்பதாய் அவள் உள்மனது உறுதியாக நம்பியது.

அந்த சந்தேகத்திற்கு விடைக் காண்பதற்காக மீண்டும் தான் ரெக்கார்ட் செய்த அந்த நிகழ்ச்சியை உன்னிப்பாக கேட்கத் துவங்கினாள்.

அதுவரை கவனமாய் கேட்டுக் கொண்டு வந்திருந்த மிதுராவின் முகத்தினில் இப்போது மிகப் பெரிய மாற்றம். முகம் முழுக்க சலனத்தின் அதிர்வுகள்.

அந்த அதிர்வுக்குக் காரணம் சிறிது நேரத்திற்கு முன்பொலித்த அந்த யாழ்ப்பறவையின் குரல் இப்போது அவள் ரெக்கார்ட் செய்த அலைபேசியிலும் ஒலித்திருந்தது.

வேகமாக அந்த நிகழ்ச்சியை நிறுத்திவிட்டு செவிகளை கூர்த்தீட்டி கவனித்தாள் ஆனால் அந்த சப்தம் கேட்கவில்லை. மீண்டும் நிறுத்திய இடத்தில் இருந்து ரெக்கார்ட் செய்த நிகழ்ச்சியை ஒளிபரப்பினாள் , இப்போதோ அந்த சப்தம் மிகத் தெளிவாகக் கேட்டது.

ஆக அவள் சந்தேகம் சரி தான். இந்த ஆதன் அவளுக்கு வெகு அருகிலேயே தான் இருக்கின்றான்.

ஒரு வேளை அடுத்த அறையில் தங்கியிருக்கும் ராஜ் தான் அவனோ?

Leave a Reply

error: Content is protected !!