காதல் தீண்டவே-17
காதல் தீண்டவே-17
அடர்ந்த குறுங்காடு.
நெடிந்து உயர்ந்த மரங்கள்.
மெல்ல வீசும் தென்றல் காற்று.
மலைவாயில் இருந்து மெதுவாய் வெளிப்பட்டது பால் நிலா.
எப்போதும் காட்டில் தனியே காயும் அந்த நிலவுக்குத் துணையாய் இன்று மிதுராவும் தீரனும். அவர்களுக்கு இடையே பெயரிடப்படாத ஒரு குட்டி இடைவெளி.
அந்த இடைவெளியை இணைக்கும் அலைக்கோடாய் ஒலித்தது “ஆதன்” என்ற பெயர்.
தன்னிச்சையாய் திரும்பிப் பார்த்த தீரனின் விழிகள் கேள்வியாய் “ஆதன்?” எனக் கேட்டது.
“இல்லை… ஆதன் ஷோ முடியறதுக்குள்ளே ஃபோன் கிடைச்சுடணும்னு நினைச்சேன். நல்லவேளை கிடைச்சுடுச்சு. ” என்றாள் அவனை பார்வையால் அளந்தபடி.
“இன்னைக்கு ஆதனோட ஷோ வராது.” ஏற்கெனவே நிகழ்ச்சியை தவறவிட்ட பதற்றத்தில், தன்னையறியாமல் வெளிப்பட்டது தீரனிடம் இருந்து வந்த வார்த்தைகள்.
அதைக் கண்டு மௌனமாக சிரித்தவள் “எப்படி சொல்றீங்க?” என்றுக் கேட்டாள் கூர்மையாக.
அப்போது தான் உளறிவிட்டோம் என்ற உண்மையே தீரனுக்கு உரைத்தது.
“இல்லை சும்மா கெஸ் பண்ணேன். எனக்கு கொஞ்சம் ஜோசியம் தெரியும்” என அடித்துவிட்டான்.
“ஓஹோ அப்படியா! அப்போ உங்க ஜோசிய ஞானம் வெச்சு இந்த ஆதன் யாரா இருப்பாங்கனு கண்டுபிடிச்சு தர முடியுமா?” என்றுக் கேட்க அவன் யோசிப்பதுப் போல பாவனை செய்தான். பின்பு தன் நெற்றியில் கை வைத்து கண்ணை மூடியவன் ஏதோ ஞானம் உதித்ததைப் போல கண்ணைத் திறந்துப் பார்த்தான்.
“என் ஜோசிய ஞானம் என்ன சொல்லுதுனா, அந்த ஆதன் இங்கே எங்கேயோ கிட்டே தான் இருக்கிறதா சொல்லுது” என்றான் குறி சொல்லும் சாமி போல.
“பாருங்களேன்… எனக்கு இது தெரியாம போச்சு” என்றாள் உதட்டில் சிந்திய சிரிப்பை மென்று தின்றபடி.
“நீங்க ஏன் இவ்வளவு தீவிரமா அந்த ஆதனைத் தேடுறீங்கனு நான் தெரிஞ்சுக்கலாமா?” நடந்தபடி அவன் கேட்க மிதுராவின் நடையோ அப்படியே தடைப்பட்டு நின்றது.
அகலொளியின் சுடர் போல மஞ்சளும் சிவப்புமாய் கலந்து விகசித்த அவளது முகத்தையே ஊன்றிப் பார்த்தான். அவன் கண்களில் பதில் அறிந்து கொள்ளும் ஆர்வம்.
மிதுராவின் நினைவு முள், சரியாக பதினொரு மாதங்களுக்கு முன்பு ‘சில்லுனு ஒரு காதல்’ நிகழ்ச்சியில் பெயர் மாற்றி ஆதன் பகிர்ந்த அவனது வாழ்க்கைப்பதிவில் சென்று நின்றது.
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரத்தில் வசித்த இரு இளைஞர்களைப் பற்றிய கதை அது.
இப்போது யோசித்துப் பார்த்தால் யாரந்த இரு இளைஞர்களாய் இருப்பார்கள் என்று அவளால் யூகிக்க முடிந்தது.
ஒருவன் கார்த்திக் தீரன், மற்றொருவன் கார்த்திக் ராஜ்.
தஞ்சையை பூர்வீகமாக கொண்ட நாகலிங்கத்திற்கு பிறந்த மகன் தான் கார்த்திக் தீரன். அவருடைய நெருங்கிய சிநேகிதன் முத்துராமனுக்கு பிறந்த மகன் கார்த்திக் ராஜ்.
முத்துராமனுக்கும் நாகலிங்கத்துக்கும் கணினியின் மேல் அவ்வளவு ஆர்வம். அந்த ஆர்வத்தை அறுவடை செய்ய இருவரும் அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரத்தை தேர்வு செய்தனர்.
அவர்களது பல கால உழைப்பு வித்துக்கு பலனாய் முளைத்த ‘வி.யூ டெக்னாலஜி ‘ கம்பெனி இப்போது பெரியதாய் வளர்ந்து நின்றது.
இருவருடைய தந்தையர்களும் பால்யகாலம் தொட்டே சிநேகிதர்கள். மூத்த தலைமுறையிடமிருந்த நட்பின் வேர் இளைய தலைமுறையிடமும் கிளை விரித்தது.
சிறுவயது முதலே தீரனும் ராஜ்ஜும் ஒட்டிப் பிறவாத இரட்டை சகோதரர்களைப் போல இருப்பர்.
அதுவும் தீரனுக்கு ஒன்று என்றால் தன் ஆளுமை குரலால் அனைவரையும் கட்டிப் போடும் ராஜ்ஜை அவனுக்கு அவ்வளவு பிடிக்கும்.
தீரனும் ராஜ்ஜூம் எல்லாவற்றிலும் ஒரே போல தேர்வு செய்வர். தீரன் மேற்படிப்பு முடித்துவிட்டு அடுத்து கணிணி துறையை எடுக்கலாம் என மனதினில் நினைத்தால் ராஜ்ஜோ இருவருக்கும் சேர்த்து அந்த துறையில் சேருவதற்கான விண்ணப்பத்தோடு வந்து நிற்பான்.
தீரன் தன் பிறந்தநாளுக்காக இந்த சட்டையை எடுக்க வேண்டும் என நினைத்தால் ராஜ் அதே சட்டையை பரிசாகக் கொடுத்து அவனுக்கு அதிர்ச்சி அளிப்பான். இருவருக்கும் ஒரே போல் ஆசை இருக்கும். ஒரே போல் தேர்வுகள் இருக்கும்.
அலைவரிசை ஒத்துப் போகும் நண்பர்களுடன் இருப்பது வரமல்லவா!
ஆனால் அந்த வரமே சாபமாகிவிடும் என்று இருவரும் அறியவில்லை.
தீரனும் ராஜ்ஜூம் கல்லூரியை முடித்த சமயம் அது.
அந்த நேரத்தில் தான் இருவரது தந்தையர்களும் சேர்ந்து “வி யூ டெக்னாலஜியின்” இன்னொரு கிளையை சென்னையில் நிர்மானிக்க முடிவெடுத்தார்கள். அதை நிர்வகிக்க ராஜ்ஜை தேர்ந்தெடுத்தனர்.
தீரன் அமெரிக்காவில் இருக்கும் கிளையின் பொறுப்பை பார்த்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது.
முதல் முறை இருவரின் நட்பிலும் பிரிவு என்ற சொல் வந்து விழுந்தது.
மனதைக் கல்லாக்கிக் கொண்டு தன் நண்பனை வழிஅனுப்பி வைத்த தீரனுக்கு தெரியாது, இனி ராஜ்ஜின் ஆளுமைக் குரலைக் கேட்கவே முடியாதென்பது.
ராஜ் சென்ற பின்பு தீரன் முதன்முறை தனியாய் உணர்ந்தான்.
அவனை சுற்றி ஒரே வெறுமை.
அந்த வெறுமையை போக்கும் வண்ணமாய் ஒளிர்ந்தது அவன் அலைப்பேசி.
எடுத்துப் பார்த்தான்.
சிவாணி என்ற பெண் ஐடியில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது.
அவன் சிவாணியின் கவிதைகளுக்கு தீவிர ரசிகன்.
குளிர்காலத்தின் சுட சுட
தேநீர் கோப்பை நீ தானே…
உதிர்ந்த பூக்களுக்காக
மரம் விரித்த நிழலும் நீ தானே…
வெறுமையான வானத்திற்கு
வண்ணம் பூசிய ஓவியனும் நீ தானே…
அடைப்பட்ட பறவைக்கு
ஒரு பொட்டு வானம் நீ தானே…
இலையுதிர் காலத்தில்
மொட்டு விட்ட ஒரு மலரும் நீ தானே…
வறண்டு போன உதட்டில்
சிதறி விழுந்த ஒரு துளி
தேனும் நீ தானே…
பற்ற இடம் இல்லாமல் வீழ்ந்து கிடந்த
கொடிக்கு இடம் தந்த பந்தல் நீ தானே…
தனித்து கிடந்த ஆற்றுக்கு
துணையிருக்க வந்த பறவைக்கூட்டம்
நீ தானே…
வெறித்து கிடந்த விழிகளுக்கு
அழகிய பிம்பம் காட்டிய கண்ணாடி நீ தானே…
சிரிக்க மறந்த இதழ்களில்
புன்னகையை தீட்டிய தூரிகை நீ தானே…
இந்த கவிதை வரிகளில் தன்னை தொலைத்தவன் அவளுக்கு ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் அனுப்பியிருக்க அவளும் அக்செப்ட் செய்திருந்தாள். ஆனால் இவன் இதுவரை அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பியதில்லை வெறும் கவிதையை ரசிப்பதோடு தன்னை நிறுத்துக் கொண்டிருந்தவனுக்கு அவளே குறுஞ்செய்தி அனுப்பியிருக்கவும் மனதிற்குள் சந்தோஷ சாரல்.
முகம் தெரியாத அந்த மங்கையுடன் பேச ஆரம்பித்தான் அவன்.
அவனுக்கு அவளைப் பற்றி தெரிந்த விஷயம் எல்லாம் தமிழ்ப்பெண், நன்றாக கவிதை எழுதுவாள் அவ்வளவு தான்.
ஆனால் இளமையின் கனவு காலத்தில் மிதந்தவனுக்கு இந்த தகவலே போதுமாய் இருந்தது.
குறுஞ்செய்திகளில் நட்பை வளர்த்துக் கொண்டவர்களிடையே காதல் விஸ்தாரமெடுத்து வேரூன்றி நின்றது.
அவன் முகம் முழுக்க காதலின் மத்தாப்புக்கள், உள்ளம் முழுக்க சந்தோஷ சிதறல்கள்.
அதை தன் நண்பனோடு பகிர வேக வேகமாய் மடிக்கணினியின் வழியே வீடியோ கால் செய்தான்.
எதிர் முனையில் “ஹே மச்சான் எப்படி இருக்க?” ராஜ்ஜின் குரல் கம்பீரமாக ஒலித்தது.
“நல்லா இருக்கேன்டா. உன் கிட்டே ஒரு முக்கியமான விஷயம் சொல்ல போன் பண்ணேன்” என்றான் சந்தோஷமாய்.
“நானும் உன் கிட்டே ஒரு முக்கியமான விஷயம் பேசனும்னு நினைச்சேன்டா. நீயே பண்ணிட்ட. சரி நீ முதலிலே சொல்லு. என்ன விஷயம்?”
“அது ராஜ், நான் ஒரு பொண்ணை லவ் பண்றேன்டா” என்றான் தீரன் வெட்கப்பட்டு கொண்டே.
நண்பனின் சந்தோஷம் ராஜ்ஜின் முகத்தில் புன்னகையை வரவழைத்திருந்தது.
“உன் முகத்திலே இந்தளவுக்கு பிரகாசத்தை வர வைச்ச பொண்ணு யாருடா?” என்று கேட்டான் ஆர்வமாய்.
“தமிழ்ப் பொண்ணு தான் டா. பேர் சிவாணி. இதுவரைக்கும் என் ஆளை நானே பார்த்தது இல்லை. கெஞ்சி கொஞ்சி இன்னைக்கு ஏழு மணிக்கு போட்டோ அனுப்ப சம்மதம் வாங்கியிருக்கேன். இன்னும் கொஞ்ச நேரத்திலே போட்டோ வந்துடும். வந்ததும் காட்டுறேன். ” என்று தன் காதலை சொல்லி முடித்தவன் ராஜ்ஜைப் பார்த்து “நீ என்ன விஷயம்டா சொல்ல வந்தே?” என்றான் கேள்வியாக.
“அது மச்சான் நானும் லவ்ல விழுந்துட்டேன்டா. இங்கே நம்ம சென்னை ப்ரான்ச்ல ட்ரைனியா சேர்ந்த பொண்ணு தான் கயல். ஃபர்ஸ்ட் ப்ரெண்ட்ஸா தான் பழகினோம். போக போக எங்களுக்குள்ளே லவ்வாகிடுச்சுடா.
இன்னும் மேடம், நான் நம்ம கம்பெனியிலே வேலை செய்யுற வொர்க்கர்னு தான் நினைச்சுட்டு இருக்கா. நம்ம தான் ஓனர்ஸ்ன்ற உண்மையை சொல்லிட்டு அவளுக்கு உன்னை இன்ட்ரோடியூஸ் பண்ணனும்னு நினைச்சு வீட்டுக்கு கூப்பிட்டேன். நீயே சரியா கால் பண்ணிட்ட” என்று ராஜ் பேசிக் கொண்டிருக்க அவன் அறை கதவு திறக்கப்பட்ட்டது.
அலைப்பேசியில் எதையோ தட்டியபடி உள்ளே வந்துக் கொண்டிருந்தாள் கயல்.
அதே சமயம் தீரனின் அலைப்பேசியில் சிவாணியின் புகைப்படம் வந்து விழுந்திருந்தது.
அந்த புகைப்படத்தைக் கண்களில் காதலனுடன் நிரப்பிக் கொண்டவன் “மச்சான் இதான் என் லவ்வர்” சொல்லியபடி அலைப்பேசியை ராஜ்ஜின் முன்பு காட்டிய நேரம் “மச்சான் இதுதான் டா என் லவ்வர்” என்று ராஜ்ஜூம் ஒரு பெண்ணைக் காட்டினான்.
இரு உருவமும் வேறு வேறல்ல இரண்டும் ஒன்றே.
தீரனின் புகைப்படத்தில் நிழலாக இருந்தவள் ராஜ்ஜின் அருகினில் நிஜமாக நின்றுக் கொண்டிருந்தாள்.
உண்மைக் குட்டுப்பட்ட உணர்வில் தலைக்குனிந்து நின்ற கயல் என்கிற சிவாணியைப் பார்த்து வெறுப்பை உமிழ்ந்தது இரு கண்களும்.
தனது ஆசை மோகத்திற்காக ராஜ்ஜைக் காதலித்தவள் தான் வசதியாக வாழ்வதற்காக அமெரிக்காவில் வசிக்கும் தீரனை முகப்புத்தகத்தின் மூலம் தேர்ந்தெடுத்திருந்தாள்.
ஆனால் அவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது அவளறியாத விஷயம்.
எதுவும் பேசாமல் மௌனமாய் அங்கிருந்து நழுவியவளை தடுக்கக்கூட தோன்றாமல் ஸ்தம்பித்து நின்றனர் இரண்டு கார்த்திக்கும்.
துரோகத்தின் குருதி வாள் இருவரின் முதுகிலும் ஆழமாய் காயத்தை ஏற்படுத்தி இருந்தது. அந்த வலியில் இரு நெஞ்சங்களும் கதறிக் கொண்டு இருந்தன.
அதிலும் அதிகம் காயப்பட்டவன் ராஜ்.
தீரனையாவது பின்னால் இருந்து தான் முதுகில் குத்தினாள். ஆனால் ராஜ் நெஞ்சுக்கு நேராக குத்துப்பட்டவன்.
அவனை இந்த முதல் காதல் முழுவதும் தன்னை இழக்க செய்திருந்தது. கம்பீர முகம் தொய்ந்துப் போனதை வீடியோ காலில் பார்த்த தீரனுக்கு மனம் முழுக்க வலி.
“மச்சான் உடைஞ்சுப் போய் இருக்கிற உன்னை பார்க்க முடியல. நான் அங்கே வரட்டுமா” என மனம் தாங்காமல் தீரன் கேட்க “இல்லை மச்சான் நான் சமாளிச்சுடுவேன். நீ பார்த்துக்கோடா. ஐ யம் சாரி. உன் காதலையும் சேர்த்து அழிச்சுட்டேன்.” என்று அவசரமாக பேசிவிட்டு வைத்துவிட்டான்.
அதன் பிறகு ராஜ்ஜின் குரலை தீரனால் கேட்கவே முடியவில்லை. மனக்கலக்கத்தில் வண்டியை ஒட்டிய ராஜ்ஜின் குரலை ஒரு விபத்து பறித்து இருந்தது.
தன் நண்பனின் குரல் இழப்பிற்கு தானும் ஒரு காரணமென குற்றவுணர்வு கொண்ட தீரன் அதன் பின்பு அவனிருக்குமிடத்திற்கே வந்துவிட்டான்.
காதல் என்ற பெயரில் தவறாக ஏமாற்றுபவர்களுக்கும் காதல் என்றால் என்னவென்றே தெரியாமல் காதலிப்பவர்களுக்கும் காதலினால் உடைந்தவர்களுக்கும் ஆறுதலாய் மாற முடிவெடுத்து துவங்கிய நிகழ்ச்சி தான் “சில்லுனு ஒரு காதல்”.
அதில் ஆதனாய் மாறி இன்றுவரை எல்லாருடைய காதலுக்கும் மனதுக்கும் மருந்திட்டுக் கொண்டிருப்பதாக அந்த பதிவில் சொன்ன ஆதனை நினைத்து கலங்கிப் போனாள் அவள். கூடவே ஆச்சர்யமும்பட்டுப் போனாள்.
காதலை தவறாக பயன்படுத்திய அந்த பெண்ணின் மீது மட்டுமே ஆதனுக்கு கோபம் இருந்தது. சராசரி ஆணைப் போல இந்த ஒட்டுமொத்த பெண் இனத்தையே “இந்த பொண்ணுங்களே இப்படி தான்” என்று அவன் ஒரே கோட்டுக்குள் நிறுத்தவில்லை. அதனால் ஆதனை நேரில் பார்த்தவுடன் முதலில் “க்ரேட்” என்று சொல்ல வேண்டுமென நினைத்திருந்தாள்.
அது வேறு இல்லாமல் ஆதன் முதன் முதலாய் மயங்கிப் போன அந்த கவிதை தன்னுடையது என்ற உண்மையையும் சொல்ல ஆசைப்பட்டாள்.
மிதுராவிற்கு சிறுவயதில் இருந்தே கவிதை எழுதுவதில் ஆர்வம் உண்டு. அவளது கவிதைகளை கல்லூரி விடுதியில் ஒரே அறையில் தங்கியிருந்த கயல், ஆர்வமாக படித்துவிட்டு பாராட்டுவாள். தன்னை விட மூன்று வயது மூத்தவள் தன் கவிதையை படித்துப் பாராட்டுவதை எண்ணி அவளுக்குப் பெருமையாய் இருக்க எல்லா கவிதையையும் கயலிடம் தான் வாசிக்க கொடுப்பாள்.
ஆனால் இந்த கயலோ மிதுராவிற்கு தெரியாமல் முகப்புத்தகத்தில் பகிர்ந்தது அவளே அறியாத ஒன்று. அதைப் படித்து ஆதன் ஈர்க்கப்பட்டது அவள் எதிர்பாராத மற்றொன்று.
ஆதனின் மனக்காயத்திற்கு வித்தாய் அமைந்தவள் நான் தானே!
என் கவிதையால் தானே கயல் என்கிற சிவாணியை காதலித்து இன்று வேதனைப்பட்டும் நிற்கின்றான் என்ற குற்றவுணர்வில் அவள் கவிதை எழுதுவதையே நிறுத்திவிட்டாள்.
அதனால் தான் முன்பொரு நாளில் ராஜ் கவிதை எழுத தெரியுமா என கேட்டபோது கூட “கொஞ்சமாய் தெரியும்” என சொல்லி கவிதை எழுதாமல் தயங்கி நின்றாள்.
கிட்டத்தட்ட பதினொரு மாத தேடலுக்குப் பிறகு ஆதனின் முன்பு நிற்கின்றாள்.
அவனை நேரில் பார்த்ததும் “ஐ யம் சாரி ஆதன். நீங்க காதலிச்சது என்னோட கவிதைகளை. இப்போ நானும் உங்களை நேசிக்க தொடங்கிட்டேன்” என்று சொல்ல வேண்டுமென நினைத்திருந்தவளோ இப்போது மௌனத்தின் குடையைப் பிடித்துக் கொண்டு சொற்களின் அடைமழையை தவிர்த்திருந்தாள்.
அவள் மனதினில் புதியதாய் ஒரு முடிவு.
இந்த ஆதனாகிய தீரன், தான் யாரென்றே தெரியாமல் இந்த ஒரு மாதத்திற்குள் தன்னை காதலிக்க வேண்டும். அதன் பின்னரே அவனிடம் உண்மையை சொல்ல வேண்டும் என நினைத்துக் கொண்டவளின் முகம் இப்போது அமைதியில் எரியும் விளக்கானது.
ஆனால் பாவம் இந்த மிதுராவிற்கு தெரியவில்லை, இந்த தீரன் அவ்வளவு சீக்கிரம் காதலை ஏற்றுக் கொள்ளமாட்டான் என்று.
எதுவும் பேசாமல் மௌனத்தைக் கையாண்டுக் கொண்டிருந்த மிதுராவை தீரன் ஆழ்ந்துப் பார்த்து “ஏன் ஆதனை தேடுறீங்கனு கேட்டதுக்கா இவ்வளவு யோசனை மிதுரா?” என்று மீண்டும் கேட்டான்.
அதில் தன்னை மீட்டுக் கொண்டவள் அவனிடம் உண்மையை வெளிப்படையாக சொல்லாமல் “எனக்கு ஆதனோட குரல் ரொம்ப பிடிக்கும். அதான் அவரை நேர்ல பார்த்து குரல் நல்லா இருக்குனு சொல்ல நினைச்சேன்” என்று பொய்யுரைத்தாள்.
அந்த பதிலைக் கேட்டு அவனது முகத்தில் லேசாக ஒரு மாறுதல்.
“ஓ குரலை மட்டும் தான் பிடிக்குமா!” என்று தனக்குள் தானே கேட்டுக் கொண்டவனின் மீது ஏதோ ஒரு சிலந்தி வருத்த வலையைப் பின்னியது
ஒரு வேளை அது காதல் சிலந்தியாக இருக்குமோ!