காதல் தீண்டவே – 19

காதல் தீண்டவே – 19

சில நேரங்களில் அப்படி தான்…

எங்கெங்கோ தேடி அலைந்து சோர்வாய் திரும்பும் போது, ‘இதோ இங்கேயே உன் பக்கத்திலே தானே நான் நின்றிருந்தேன் நீ பார்க்கவில்லையா?’ என கண் சிமிட்டி கண்ணாமூச்சு ஆட்டம் காட்டும் இந்த வாழ்க்கை.

அந்த கண்ணாமூச்சியை ஏற்கெனவே தீரன் மிதுராவிடம் விளையாடி முடித்திருக்க, இப்போது அதே ஆட்டத்தை  தீரனுடன் விளையாட  முடிவெடுத்திருந்தாள் மிதுரா. 

ஆனால் அந்த பாவைக்கு தெரியாது காலத்தின் ஆட்டம் வேறாக இருக்கும் என்று!

பதினொரு மாதங்களுக்கு முன்பு ஆதனின் பதிவு மிதுராவின் மனதினில் நேச விதையை இட்டு சென்றது.

இன்று தான் முதல் முறையாக அந்த நேச செடியின் மலரை நுகர்ந்துப் பார்க்கின்றாள்,  அதில் முழுக்க காதல் வாசம்!

ஆதனை நேரில் பார்த்ததும் உள்ளுக்குள் ஊறிய அன்பை கொட்ட வேண்டும் என நினைத்திருந்தவளோ இப்போது அணைப்போட்டு மௌனமாய் நின்றிருந்தாள்.

ஏற்கெனவே காதலினால் காயப்பட்டவன் அவன். 

சட்டென நிகழும் மின்வெட்டை போல சட்டென அவள் மீது காதல் கொண்டுவிடமாட்டான் என்பது அவள் அறிந்த உண்மையே.

முதலில் அவனது காயங்கள் ஒவ்வொரு அடுக்காக ஆற வேண்டும். பின்பு ஒரு மலர் மலருவதைப் போல அவனுக்கு தெரியாமலேயே அவனுக்குள் காதல் மலர வேண்டும்.

அந்த காதல் தாவரத்திற்கு தேவையான ஊட்டத்தை அளிப்பது என் கடமை.

அதற்கு தேவையான அன்பின் ஒளியை கொடுப்பேன்.

அந்த செடியின் நீர்க்கால்களுக்கு என் நேச நீரை பாய்ச்சுவேன்.

அடுத்த ஒரே மாதத்திற்குள் அவனது இதய செடியில் காதல் பூவை பூக்க செய்திடுவேன் என நினைத்தவளின் முகத்திலோ செந்தாமரையின் சிவப்பு.

“அடேய் ஆதா! உன் டயரியிலே குறிச்சு வைச்சுக்கோ… அடுத்த மாசம் இதே நாள் சரியா பதினொரு மணிக்கு சில்லுனு ஒரு காதல் நிகழ்ச்சியிலே நம்ம காதல் பதிவை உன் வாயலயே சொல்ல வைக்கிறேன்டா. அதை உன் காதலியா இருந்து நான் கேட்கல, என் பேரு மிதுரா இல்லைடா”  என உள்ளுக்குள் சபதம் எடுத்து கொண்டவள்  அதை செயல்படுத்த  வேக வேகமாக தன் அலைப்பேசியை எடுத்தாள்.

ஆனால் அதுவோ உயிர்ப்பற்று இருந்தது.

நேற்றிரவு மழையில் நனைந்து செயலிழந்து போனதே அப்போது தான் நினைவுக்கு வர சோகமாக அதை வைத்துவிட்டு நிமிர்ந்த நேரம் அறை கதவு தட்டப்பட்டது.

இவள் அடிப்பட்ட காலோடு எழ எத்தனிக்க சிற்பிகா அவளைக் கண்களால்  அடக்கிவிட்டு தானே சென்று கதவைத் திறந்தாள்.

வெளியே ராஜ் நின்று கொண்டிருந்தான்.

“வாங்க ராஜ்” என்றவள் புன்னகையோடு  உள்ளே வருவதற்கு வழிவிட்டபொழுது “சிற்பி” என்ற குரலோடு அபி வந்து நின்றான்.

“ஒரு நிமிஷம் என் கூட வாயேன் முக்கியமான விஷயம் பேசணும்” என்றவன் கூப்பிட இவள் அவனுடன் சென்றுவிட்டாள்.

இப்போது அந்த தனியறையில் ராஜ்ஜும் மிதுவும் மட்டும்.

உதடுகளில் வழிந்த புன்னகையோடு “குட் மார்னிங்” என்றவனை நெஞ்சம் நிறைய பார்த்தாள் மிதுரா.

எவ்வளவு  காயங்களுக்கு பிறகான புன்னகை இது!

முதலில் காதலை இழந்தான். பிறகு குரலை இழந்தான். அடுத்து சந்தோஷத்தை இழந்தான். இறுதியில் தன் இயல்பை இழந்து கோப முகமூடி போட்டுக் கொண்டான்.

‘இனி இவனை காயம்படாமல் அருகில் நின்று காப்பது தோழியான என் கடமை’ உறுதி எடுத்தபடி அவனைப் பார்த்தாள். 

“இப்போ பாதம் எப்படி இருக்கு மிது? வலி பரவாயில்லையா?” கேட்டபடியே எந்த தயக்கமுமின்றி தரையில் அமர்ந்தவன் அவளது பாதத்தையெடுத்து காயத்தின் வீரியத்தை ஆராய்ந்தான்.

அந்த செயலில் தாய்ப்பாசத்தை  உணர்ந்தவளின் கண்களோ நெகிழ்ந்தது.

மிதுராவின் பார்வை வீச்சம் அன்பாய் ராஜ்ஜின் மீது படர்ந்த நேரம் தீரன் அந்த அறையின் வாசலருகில் வந்து நின்றான்.

அங்கே கண்ட காட்சி அவன் இதயத்தை நொறுக்குவதாய்!

நேற்றிரவு தனது கரங்களுக்குள் அடங்கிப் போய் இருந்த மிதுராவின் பாதம் இப்போது ராஜ்ஜின் கரங்களில்.

எதையோ இழப்பதைப் போன்ற உணர்வு அவனுக்குள்.

அவளது காலைப் பரிசோதித்து நிமிர்ந்த ராஜ், “டைம் பதினொன்னு ஆகுது! ஏன் எனக்கு இன்னும் குட் மார்னிங் மெசேஜ் அனுப்பல” என்று உரிமையாக சைகையில் கேட்டான்.

மிதுராவோ “என் போன் சூசைட் பண்ணிக்கிச்சு. அதான் டெக்ஸ்ட் அனுப்ப முடியல.” என்றாள் கைகளை குழந்தைப் போல விரித்து.

விரித்து வைத்த அந்த வெற்றுக் கைகளில் புதியதாய் ஒரு கணம் கூட சட்டென கீழே குனிந்துப் பார்த்தாள்.

புதியதாய் ஒரு அலைப்பேசி!

“ஸ்மால் கிஃப்ட் ஃபார் யூ” என்று ராஜ் புன்னகை பூத்தபடி சொல்ல இங்கோ தீரன் தன் கையில் இருந்த பொருளை உணர்ச்சியற்றுப் பார்த்தான்.

அந்த பொருள் வேறொன்றுமில்லை, காலையிலேயே எழுந்து சென்று மிதுராவுக்காக புதியாக அவன் வாங்கி வந்திருந்த மொபைல் ஃபோன் அது.

இனி இதற்கும் அவசியமில்லை, தனக்கும் அவசியமில்லை! என உணர்ந்த கணத்தில் கனீரென இறங்கியது, அவன் இதய நிலத்திலொரு கூரிய கடப்பாரை.

💐💐💐💐💐💐💐

“அபி எதுக்காக என்னை வெளியே கூப்பிட்டிங்க?” சிற்பி கேட்க அபி தனக்கு எதிரே இருந்த சுவற்றை காண்பித்தான்.

அதில் ஏகப்பட்ட கிறுக்கல் கோடுகள்.

அதைப் பார்த்தவள் சலிப்புடன் அபியின் பக்கம் திரும்பினாள்.

“இந்த கிறுக்கலை காட்டுறதுக்கா இவ்வளவு அவசரமா கூட்டிட்டு வந்தீங்க?”

“சிற்பி, இந்த சுவத்துல நம்மளைப் பத்தி தப்பா எழுதி வெச்சு இருந்தாங்க. நான் தான் யாரும் பார்க்கிறதுக்கு முன்னாடி இப்படி கிறுக்கி வைச்சேன்” என்று அபி சொல்ல சிற்பிகாவின் முகத்தில் கோப சிவப்பு.

“சே யாரு அபி, இந்த மாதிரி கேவலமான வேலையை பண்ணது? கையிலே மட்டும் மாட்டட்டும்… மொத்து மொத்துனு மொத்துறேன்” என்று சிற்பி கத்த அபியும் கோப இசைப்பாட்டு படித்தான்.

“ஆமாம் சிற்பி, பண்ணவங்களை கண்டுபிடிச்சு கேவலமா திட்டணும். ஏன்டா லூசு பயலே… ஃபேஸ்புக் ட்விட்டர்னு உலகம் போற ஸ்பீட்ல இன்னும் மொட்டை சுவத்துல எழுதுறியே உனக்கு வெட்கமா இல்லையா? டெக்னாலஜியே தெரியாதை உன்னை எல்லாம் எப்படி வேலைக்கு எடுத்தாங்கனு கேவலமா திட்டணும் சிற்பி” என்று சொன்னவனைப் பார்த்து தன்னை மறந்து சிரித்தாள்.

“யூ யூ அபி… நான் எதுக்கு கோபப்பட்டா நீ எதுக்கு கோபப்படுற. உண்மையா அவங்க நம்மளை பத்தி எழுதுனது  உனக்கு வருத்தமில்லையா?”

“அவங்க இல்லாததையா எழுதுனாங்க. இருக்கிறதை தானே எழுதுனாங்க. ” என்று அபி கண்ணடித்து சொல்ல சிற்பியின் முகத்தில் நாண படரல்.

“ஆமாம் நமக்குள்ளே என்ன இருக்கு அபி?” என்று எதுவும் தெரியாததைப் போல மெதுவான குரலில் கேட்டாள்.

அவள் முகத்தைக் கூர்ந்துப் பார்த்தவன் “ஆக உனக்கு நமக்குள்ளே என்ன இருக்குனு தெரியாது. அப்படி தானே?” அழுத்தமாய் அவன் கேட்க இவள் இல்லையென்று தலையாட்டினாள்.

“நமக்குள்ளே என்ன இருக்குனா… ” என்று அபி இழுக்க “ஹான் என்ன இருக்குனு சொல்லுங்க அபி…” என்று சிற்பி ஊக்கினாள்.

வறண்ட பாலையின் மழைக்கான ஏக்கம் அவள் முகத்தில் விரவிக் கிடந்தது. அந்த மழை சொல் அவனிடமிருந்து வெளிப்பட்டுவிடாதா என ஏக்கமாய் பார்த்தாள்.

‘அபி நீ புஷ்-அப்ஸ் எடுத்த அன்னைக்கே நான் உன் கிட்டே விழுந்துட்டேன்டா. எனக்கு தான் இந்த வெட்கம்னு ஒன்னு வந்து வார்த்தையை தின்னுடுது. நீயாவது நேரா சொல்லித் தொலையேன்டா!’ நினைத்தபடி அவள் ஏக்கமாக பார்க்க அபியோ அவளருகில் நெருங்கி வந்தான்.

அவள் நுரையீரல் முழுக்க இப்போது அபியின் மூச்சுக்காற்று!

படபடத்துப் போனவளாக நிமிர்ந்துப் பார்க்க, அபி அவள் நெற்றியிலிருந்து கோடிழுத்து மூக்குக்கு வந்து நிறுத்தினான் தன் விரல்களை.

அவளது முகத்தையே காதலாகப் பார்த்தவன், “நமக்குள்ளே இருக்கிற ரிலேஷன்ஷிப் எனிமி சிற்பி… எனிமி…” என்று குறும்புடன் கூறிவிட்டு கண்ணடித்தவன் செல்லமாக மூக்கில் தட்டிவிட்டுப் போனான்.

“சரியான ஃப்ராடு. வாயைத் திறந்து சொல்றானா பாரு.” என மனதிற்குள் செல்ல திட்டுகளை திட்டிவிட்டு அவன் சென்ற திசையையே இமைக்க மறந்துப் பார்த்து நின்றாள்.

இவர்கள் இருவரிடையே நடந்த சம்பாஷனைகளை தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டு இருந்த அந்த மூன்று ஜோடி கண்களிலும் அவ்வளவு ஆத்திரம்.

“என்னடி இஷிதா இப்படி ஆகிடுச்சு. அந்த சுவத்துலே எழுதி பெரிய புயல் வர வைக்கலாம்னு பார்த்தா இப்படி சப்புனு முடிஞ்சு போச்சே. அதுவேற இல்லாம ரெண்டு பேரும் நாளுக்கு நாள் க்ளோஸ் ஆகிட்டே வேற போறாங்க” என்று ஐஸ்வர்யா சொல்ல இஷிதா முகம் சோகத்தில் கூம்பியது.

இஷிதா அபியை ஒருதலையாக காதலித்துக் கொண்டிருந்தாள். அதை அவனிடம் வெளிப்படுத்த முயன்ற நேரத்தில் தான் சிற்பிகாவின் வருகை.

பின்பு எல்லாமே தலைகீழானது.
அவளால் அபியை நெருங்கவே முடியவில்லை.

எங்கே தான் அபியை இழந்துவிடுவோமோ என பரிதவித்தவளாக தோழிகளைப் பார்த்தாள்.

“அடச்சீ  எதுக்கு இப்போ சோக கீதம் வாசிக்கிற… இந்த சிற்பியை தூக்கிப் போட்டுட்டு அபியை உன்னை காதலிக்க  வைக்க வேண்டியது எங்களோட பொறுப்பு. நீ எதுவும் கவலைப்படாதே இஷி.  போ போய் அபி கூட கனவுலே டூயட் பாட ஸ்டார்ட் பண்ணு. நாங்க செய்ய வேண்டியதையெல்லாம் செஞ்சு முடிக்கிறோம்” என்று ஷாலினியும் ஐஸ்வர்யாவும் சமாதானம் சொல்ல இஷிதாவின் முகம் பிரகாசமானது.

அவளின் இந்த பிரகாசம் அபி சிற்பியின் காதலை இருளில் கொண்டு சென்று நிறுத்திவிடுமோ!

💐💐💐💐💐💐💐💐💐

ஒரு குரல் வலிகளுக்கு
   காரணியாய்…

ஒரு குரல் காயங்களுக்கு
   நிவாரணியாய்…

ஒரு குரல்  மனதின்
    பிடிமானமாய்…

ஒரு குரல் உயிரின்
    கடிவாளமாய்…

ஒரு குரல் மயிலிறகின்
     வருடலாய்…

ஒரு குரல் காதலின்
     பிரதிபிம்பமாய்…

என பல ரூபங்கள் எடுத்து
    என் நெஞ்சுக்குள் ஒலித்துக்
கொண்டே  இருக்கிறது
  உன் அன்பின் மீளுரு குரல்கள்.

மிதுராவின் வாட்ஸ்ப் ஸ்டேட்டஸில் போடப்பட்டு இருந்த இந்த கவிதையையே திரும்ப திரும்ப படித்து கொண்டிருந்தான் தீரன்.

ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் சிவாணி எழுதிய கவிதையின் சாயல்கள் திரளாக வந்து அவன் இதயத்தை முட்டிப் பார்த்தது.

எந்த வரிகளை உருகி உருகி நேசித்தானோ இப்போது அதே வரிகள் வேறொரு உருவில் வந்து நிற்பதைப் போன்ற பிரம்மை.

அவனது மனபாரம் அதிகரிக்க தலை பாரமும் கூடியது, சட்டென்று அலைப்பேசியை  கீழே வைத்துவிட்டு நெற்றியைப் பிடித்துக் கொண்டான்.

திடீரென அந்த நெற்றியை வருடிவிட்டது ஒரு கரம்.

நிமிர்ந்துப் பார்த்தான்.

எதிரே ராஜ்!

“என்னாச்சுடா?” அக்கறையாய் வெளிவந்தது வார்த்தைகள் ராஜ்ஜிடம்.

“தெரியலைடா தலைபாரமா இருக்கு” வலியோடு சொன்னான் தீரன்.

“இரு நான் பிடிச்சுவிடுறேன்” என்றபடி நெற்றியை இதமாக அழுத்திய ராஜ்ஜின் செயலில் அவன் உயிரின் வேர்கள் நெகிழத் துவங்கியது. கூடவே பயமும் துளிர்விட்டது.

தன் இதய தானிய குதிருக்குள்ளே மிதுராவின் மீது ப்ரியம் மெதுவாக முளைக் கட்ட துவங்குவதை அவனால் உணர முடிந்திருந்தது.

அந்த செடிக்கு அவன் வெளிச்சம் தரவில்லை. பற்றிக் கொள்ள ஒரு பிடி நிலம் கூட தரவில்லை. இருந்தாலும் பிடிவாதமாக வளர்ந்துக் கொண்டிருக்கும் அதை என்ன செய்து தடுப்பது என்று புரியவில்லை.

அந்த ப்ரியத்தை வளரவிட்டால் ராஜ்ஜின் நம்பிக்கை வேர்கள் கருகிவிடும் என்று புரிந்தவன் ஒரு முடிவோடு நிமிர்ந்தான்.

“மச்சான் இனி நீ இங்கே பார்த்துக்கோடா. நான் அமெரிக்கா ப்ரான்ச் பார்த்துக்கிறேன். நீ என்ன சொல்ற? உனக்கு ஓகே தானே ” என்று கேட்ட தீரனின் தலையில்  நங்கென்று கொட்டினான் ராஜ்.

“ஏன்டா தலைவலியிலே உட்கார்ந்து இருந்தவன் மண்டையிலேயே கொட்டுறியே.. நியாயமா இது?” தலையை தடவியபடியே தீரன் கேட்க, ராஜ் கோபமாக மீண்டும் நான்கு கொட்டுகளை பரிசாக வைத்தான்.

“மவனே நீ தலைவலியிலே இருக்கிறதாலே தான் இதோட விடுறேன். இல்லைனா நீ சொன்ன வார்த்தைக்கு தலையை சீவியிருப்பேன்.” என்று முகம் சிவக்க வாயசைத்தவன் பின்பு நிதானித்து,

“என்னை விட்டு நீ போறதா இருந்தா போய்க்கோ. ஆனால் நான் அதுக்கு அப்புறம் உன் கிட்டே பேசவே மாட்டேன். பார்க்கவும் மாட்டேன் ” அழுத்தமாக சொன்ன ராஜ்ஜை கவலையோடு பார்த்தான்.

“ராஜ் ப்ளீஸ் டா. நான் போறேனே… ” என்று தீரன் மீண்டும் கெஞ்ச,

“என்னை விட்டு நீயும் போயிட்டேனா நான் செத்துடுவேன் டா. என்னை உயிர்ப்போட வெச்சு இருக்கிறது நீ தானே… நீயும் என்னைவிட்டு போயிட்டா நான் என்ன ஆவேனு யோசிச்சு பார்த்தியா தீரா?” சோகம் ததும்பிய முகத்தோடு பேசிய ராஜ்ஜை பார்க்க முடியவில்லை அவனால்.  

“சரி சரி மூஞ்சை அப்படி வைக்காதே… நான் உன்னை விட்டு போக மாட்டேன்” தீரன் எடையற்ற குரலில் சொல்லிவிட்டு ராஜ்ஜை செயலற்றுப் பார்த்தான்.

“அடுத்த தடவை போகணும்னு நினைச்ச உன்னை கொன்னுப் போட்டுடுவேன் நியாபகம் வெச்சுக்கோ” என்ற ராஜ்ஜின் மிரட்டலில் அவனது முகத்தில் புன்னகை கசிவு.

அவனது மூர்க்க அன்பைக் கண்டதும் அதுவரை தலையில் ஏறியிருந்த மனபாரம் எல்லாம் இறங்கிப் போனாற் போல இருந்தது.

இந்த பால்ய காலத்தின் நட்பின் வேர்கள் தான் எத்தனை உறுதியானது!

இதை யாராலும் அசைத்துப் பார்க்க  முடியாது என நினைத்தவனின் முகமோ இப்போது  தெளிந்த வானமாய்.

இன்றோடு அவர்களது சுற்றுலா பயணம் முடிவுக்கு வந்துவிட்டது. இன்னும் சில மணிநேரத்தில் இங்கிருந்து கிளம்ப வேண்டும். ராஜ் எல்லாவற்றையும் எடுத்து வைத்தாயிற்று. ஆனால் தீரன் எதுவும் எடுத்து வைக்கவில்லை.
எதையோ யோசித்துக் கொண்டு அப்படியே நின்ற தீரனின் மீது துணியைத் தூக்கி எறிந்தான் ராஜ்.

“என்ன அப்படியே பே னு நிக்குற… போ போய் சூட்கேஸ் எடு. ட்ரைன்க்கு டைம் ஆச்சு. சீக்கிரமா கிளம்பணும்” என ராஜ் அவனை ஊக்க இவனும் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு அறையைவிட்டு வெளியே வந்தான்.

அதே சமயம் மிதுராவின் பையையும் தன் பையையும் கையில் நிரப்பிக் கொண்டு தட்டுத் தடுமாறியபடி தன்  அறையிலிருந்து வந்து கொண்டிருந்தாள் சிற்பிகா.

ஏற்கெனவே சுமையோடு இருந்த சிற்பிகாவை பிடிமானத்திற்காக பிடிக்கவும் முடியாமல், தன் பாதத்தை அழுத்தி கீழே வைக்கவும் முடியாமல் திணறியபடி நடந்து வந்த மிதுராவைக் கண்ட ராஜ், வேகமாய் சென்று ஒரு பக்கமாய் மிதுராவை தாங்கிப் பிடித்துக் கொண்டான்.

ஆதரவாய் பற்றிக் கொண்டவனைப் பார்த்து புன்முறுவல் பூத்தவள் தீரனை நோக்கி இன்னொரு பக்க கையை நீட்டினாள்.

தாயைத் தூக்க சொல்லும் குழந்தையின் சிணுங்கலான முகபாவம் அவள் முகத்தில் பாவி கிடந்தது.

அவளையே மௌனமாகப் பார்த்தவன் தயக்கமாக அப்படியே நின்றான்.

அவனது தயக்கத்தைக் கண்டவள்
“என்னை விழாம பிடிக்க ரெண்டு கார்த்திக் இருக்காங்கனு நினைச்சேன். ஒரு வேளை நான் தப்பா நினைச்சுட்டேனோ?” என பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்க ராஜ் அதட்டலாக தீரனைப் பார்த்து முறைத்தான்.

இப்போது வேறு வழியில்லை. மிதுராவை தாங்கி தான் ஆக வேண்டும். ஆனாலும் ஏதோ ஒன்று அவன் மனதை நெருட கலக்கத்தோடு நின்ற நேரம் ராஜ் “பிடி டா” என்று அழுத்தமாக வாயசைத்தான்.

இருந்த கொஞ்ச நஞ்ச தயக்கமும் தீரனிடம் அதன் பின் காணாமல் போனது.

‘பிடிக்கிறேன் டா பிடிச்சு தொலையுறேன்” என்ற  முணுமுணுப்போடு மிதுராவின் இன்னொரு புறம் சென்று தாங்கிக் கொண்டான்.

மீண்டும் இருவரின் பாதுகாப்பு கரங்களுக்குள் பத்திரமாய் மிதுரா!

Leave a Reply

error: Content is protected !!