காதல் தீண்டவே-25

காதல் தீண்டவே-25

மகிழ்ச்சியை விட துயரமும் துன்பமும் தான் இரண்டு ஆத்மாக்களை இன்னும் பலமாக இணைக்கும்.

அப்படி உறுதியாக பிணைக்கப்பட்ட உணர்வில் கட்டுண்டு கிடந்த மிதுராவையும் தீரனையும் நடப்பிற்கு கொண்டு வந்தது அலைப்பேசியொலி.

சட்டென்று பார்வையை விலக்கியவன், வேகமாக எடுத்து பார்த்தான்.

நிவின் மோட்டார்ஸிடமிருந்து அழைப்பு.

அவர்களிடம் தங்கள் பக்கத்து நிலைமையையும் நியாயங்களையும்  விளக்கிவிட்டு போனை வைத்தவனின் முகத்திலோ அத்தனை ஆயாசம்.

சோர்வாக பெருமூச்சுவிட்டவனைப் பார்த்து  அதிதி ஆறுதலாக முறுவலித்தாள்.

“எல்லாமே சரியாகிடும் தீரன். டோன்ட் வொர்ரி…” அவள் சொல்ல பதிலுக்கு முறுவலித்தபடி மிதுராவைப் பார்த்தான்.

பொறாமைதிரி அவள் முகத்தில் திகுதிகுவென எரிந்து கொண்டிருந்தது.

அதைக் கண்டு மௌனமாய் சிரித்தவன் இருக்கையில் வசதியாக சாய்ந்து கொண்டு அதிதியைப் பார்க்க
அவளோ காதினில் ஹெட்செட்டை மாட்டிக் கொண்டிருந்தாள். பக்கத்தில் இருந்த தீரனுக்கு தெளிவாக விழுந்தது ஆதனின் குரல்.

பரபரப்பான தீரனோ அதிதியை கூப்பிட்டான். திரும்பி பார்த்தவளின் கண்களிலோ கேள்வி.

“நீங்க ஆதன் ஷோ கேட்பிங்களா?” அவன் கேட்க மெதுவாக ஆமோதித்தாள்.

“உங்களுக்கு ஆதன் பேசுறது ரொம்ப பிடிக்குமா?” என மீண்டும் கேட்க அதிதியின் முகத்திலோ சலிப்பு.

“எனக்கு ஆதன் பேசுறது சுத்தமா பிடிக்கவே பிடிக்காது. அதுவும் இந்த உலகத்திலே காதல் ஒன்னு மட்டும்தான் பிரதானமா இருக்கிற மாதிரி பில்ட்அப் கொடுக்கும் போதுலாம் அப்படியே ஓடிப் போய் கொட்டிட்டு வரலாமானு தோணும்.” என்றாள் கோபமாக.

தீரனுக்கோ ‘அசிங்கப்பட்டான் ஆட்டோகாரன்’ மொமெண்ட்…

அதிதியை நோக்கி திரும்பியவன்  “அப்புறம் ஏன் பிடிக்காத ஷோவை கேட்குறீங்க?” என்றான் வேகமாக.

“எனக்கு ஆதனோட வாய்ஸ் ரொம்ப பிடிக்கும். அதுக்காக தான் அந்த ஷோ கேட்கிறேன். மத்தபடி ஆதன் பேசுறதை கேட்டாலே இப்போலாம் பத்திக்கிட்டு வருது. அவனும் அவன் பேச்சும்”  அதிதி ஆதனை கிழிக்க பின் சீட்டிலிருந்த மிதுராவும் ராஜ்ஜும் வயிற்றைப் பிடித்து சிரித்துக் கொண்டிருந்தனர்.

தீரனுக்கோ வெட்கமாக போய்விட்டது.

அதன் பின்னர் அந்த பேருந்து நிற்கும் வரை தீரன் அதிதியைத் திரும்பி பார்க்கவேயில்லை.

அவள் கிழித்த கிழி அப்படி!

பேருந்து தன் கடைசி நிறுத்தத்திற்கு வந்துவிட முதலில் ராஜ்ஜும் மிதுராவும் இறங்கிவிட்டனர். அதிதி அடுத்து இறங்க முயல அவளுக்கு பின்னே தீரன் நின்றிருந்தான்.

ஆனால் அதிதி கடைசிபடியில் இறங்கியபோது எதிர்பாராதவிதமாக கால் இடறியது.

அதைக் கண்டு கொண்ட தீரன் பட்டென அவள் இடையை தாங்கிப் பிடிக்க ராஜ்ஜோ கையைப் பிடித்து அவளை கீழேவிழாமல் தாங்கியிருந்தான்.

மிதுராவின் கண்களோ அந்த காட்சியைக் கண்டு பம்பரமாய் சுழன்றது.

என்னடா இது!

அதே படி!

அதே சீன்!

அதே கார்த்திக்ஸ்!

ஆனால் எனக்கு பதிலா அதிதி…

இது சரியில்லையே!

அதுவும் தீரனின் கை அதிதியின் இடையிலிருப்பது கொஞ்சம்கூட சரியில்லையே…

அவள் தீரனை தீப்பார்வை பார்க்க அவன் எப்போதோ அதிதியின் இடையிலிருந்து கையை எடுத்துவிட்டிருந்தான். ஆனால் ராஜ் தான் அவனது கரத்தை விலக்கியபாடில்லை.

‘ஒரு பொண்ணு கை கிடைச்சா போதும்… விடாம பிடிச்சுக்குவானுங்க.’  கோபமாய் முணுமுணுத்தவளின் உதட்டசைவை படித்த ராஜ்ஜோ சட்டென்று அவளை விட்டுவிட்டான்.

இதை எதிர்பார்க்காத அதிதி, பிடிமானமில்லாமல் கீழே விழப்போக இம்முறை தீரனின் கவனம் மிதுராவின் மீதிருந்ததால் பிடிக்க தவறியிருந்தான்.

கீழே விழுந்து சில்லறைவாறியிருந்த அதிதியோ கோபமாக ராஜ்ஜை முறைத்தாள் ராஜ்ஜும் பதிலுக்கு முறைத்து வைத்தான்.

“டேய் என்ன ராஜ், கீழே விழுந்தவங்களை தூக்காம அப்படியே பார்த்துட்டு நிற்கிற…” கடிந்தபடி தீரன் அவளை எழுப்பிவிட மிதுராவும் இன்னொரு பக்கம் வந்து ஆதரவாக பிடித்தாள்.

“தனியா இவங்களாலே போகமுடியாது. வா, வீடு வரை கூட்டிட்டுப் போய் விட்டுட்டு வரலாம்” தீரன், ராஜ்ஜைப் பார்த்துக் கேட்க அவனோ வேகமாக மறுத்துவிட்டு திரும்பிகூட பாராமல் சென்றுவிட்டான்.

அவனையே கோபமாக பார்த்து முறைத்த அதிதியோ தீரனிடம் திரும்பி “இட்ஸ் ஓகே. நான் மிதுரா கூட போய்டுவேன். தேங்க்ஸ் ஃபார் யுவர் ஹெல்ப்” நாசூக்காக கூறி மறுத்த அதிதியின் தோளை ஆதரவாகப் பற்றிக்கொண்டு வீட்டிற்கு அழைத்து சென்றாள் மிதுரா.

காயத்தோடு வந்தவளைப் பார்த்து சீமா பதற்றப்பட, “லேசா தான் தேய்ச்சுக்கிட்டேன். கவலைப்படுற அளவுக்கு காயமில்லை.”ஆறுதலாக சொல்லிவிட்டு தன்னறைக்குள் புகுந்தவள் உடைமாற்றிவிட்டு வெளியே வந்தாள்.

மிதுரா அறைகதவும் அதே நேரம் திறக்கப்பட்டது.

டைனிங் டேபிளில் வரிசையாக உணவுப் பொருட்கள் அடுக்கிக் கொண்டிருந்த சீமா, “வாங்க ரெண்டு பேரும் சாப்பிடலாம்” என அழைத்தார்.

“அப்பா இல்லாமயா… ” என இழுத்தாள் மிதுரா.

“நீ சாப்பிட்டு முடிக்கும் முன்னே அப்பா வந்துடுவாருடா வா…” என சீமா அழைக்க மிதுராவும் அதிதியும் உணவருந்த அமர்ந்தனர்.

மிதுரா முதல் கவளத்தை எடுத்து வாயில் வைக்க குழம்பில் உப்பில்லை.

திணறியபடி அதிதியைப் பார்க்க அவளோ எதுவும் சொல்லாமல் கஷ்டப்பட்டு உணவை விழுங்கிக் கொண்டிருந்தாள்.

அதைக் கண்டு மிதுராவின் கண்கள் பனித்தது.

தன் அன்னையை குறைகூறாமல் உணவு உண்பவளை பார்த்ததும் தன்னை மீறி பாசம் பெருகிட, அதிதியை நோக்கி உப்பை நகர்த்திவிட்டு புன்னகைத்தாள்.

அதிதியும் சிறுப்புன்னகையோடு அதை ஏற்றுக் கொண்டாள். கையில் உப்போடு வந்த சீமா அந்த காட்சியைக் கண்டு நெகிழ்ந்துப் போனார்.

இரு பெண்களும் சீக்கிரமாக நெருங்கிடுவார்கள் என நினைத்த நேரம், சரியாக விஸ்வத்தின் வருகை.

உணவு மேஜையில் வந்தமர்ந்தவரின் கரமோ மிதுராவின் தலையை வருடியது.

அதைக் கண்டு அதிதியின் கண்கள் சிவந்தன.

“காலையிலே இனி சாப்பிடாம போகாதேமா” விஸ்வம் வாஞ்சையாய் சொல்ல

“இதெல்லாம் நீங்க பெத்த பொண்ணு கிட்டே சொல்லுங்க. நான் யாரோ தானே…” என்றாள் மிது கோபமாக.

அதிதிக்கு அதற்கு மேல் அங்கே இருக்கப் பிடிக்கவில்லை.

சாப்பிடாமல் வேகமாக எழுந்து கொள்ள முயல, “சாப்பிடாம பாதியிலேயே எழுந்துக்காதேடா…” என கவலையாக ஒலித்தது விஸ்வத்தின் குரல்.

“இதை உங்க பொண்ணு கிட்டே சொல்லுங்க. ஏன் வீட்டுக்கு வந்த பேயிங்கெஸ்ட் கிட்டே சொல்றீங்க” கோபமாக சொன்னவள் விஸ்வத்தை முறைத்துவிட்டு செல்ல மிதுராவும் சாப்பிடாமல் எழுந்துவிட்டாள்.

இருதிசையில் சென்ற இருபெண்களையும் பார்த்து விஸ்வத்திற்கு ஐயோ என்றானது. சோர்ந்துப்போய் சாய்ந்தவரை தாங்கிய சீமா “எல்லாமே சரியாகிடும்” என்றார் ஆதரவாக.

💐💐💐💐💐💐💐💐💐💐

அறைக்குள் வந்து விழுந்த மிதுராவிற்கு தூக்கமே வரவில்லை.

மனதும் உடலும் புழுக்கமாக இருப்பதைப் போல தோன்ற தூயகாற்றிற்காக மாடிப்படியை நெருங்கினாள்.

அதே சமயம், அங்கே வானை வெறித்தபடி நின்று கொண்டிருந்தாள் அதிதி.

இறந்தவர்களை வானம் நட்சத்திர பொட்டாக தன்னில் சூடிக் கொள்ளுமென எங்கேயோ கேட்ட கதையின் நினைவில் அந்த நட்சத்திரத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘அம்மா என்னை மன்னிச்சுடுமா… உன் கடைசி காலத்துலே கூட உனக்கு துணையா இல்லாம எங்கேயோ ஓடி ஒளிஞ்ச இந்த பாவியை மன்னிச்சுடுமா’

கண்ணை சிமிட்டிக் கொண்டிருந்த அந்த
நட்சத்திரத்திடம் பேசிக் கொண்டிருந்தவளோ அழுகையுடன் அந்த மாத்திரையை விழுங்க சென்ற சமயம் மிதுரா கோபமாக வந்து தட்டிவிட்டாள்.

“எல்லாத்துக்கும் தற்கொலை முடிவில்லை. ப்ளீஸ் அடுத்த தடவை இந்த மாதிரி மாத்திரையோட நிற்காதிங்க… ” பதற்றமாக பேசிக் கொண்டே அந்த மாத்திரையை தூக்கிப் போட அதிதியோ ‘பே’ என பார்த்தாள்.

“அது நான் போடுற விட்டமின் அன்ட் ஸ்லீப்பிங் டேப்ளட்ஸ் மிதுரா. அதை எதுக்கு தூக்கிப்போட்டே?” அதிதி கேட்க இம்முறை பே என பார்ப்பது மிதுராவின் முறையானது.

“பின்னே அழுதுக்கிட்டே மாத்திரை வெச்சுட்டு நின்னா என்ன நினைப்பாங்க” என்று கோபமாக கேட்டவள் பின்னே தன்னை நிதானப்படுத்திக் கொண்டு

“ஆமாம், ஏன் தூக்கம் வரலை” என்றாள் இதமான குரலில்.

“தெரியலை…” ஒற்றைவரியில் அதிதியிடமிருந்து பதில்.

“தூக்கத்துக்காக தூக்க மாத்திரை எல்லாம் போட வேண்டாம்… தாய் – சி னு ஒரு மெடிட்டேஷன் இருக்கு. அது பண்ணா நல்லா தூக்கம் வரும். நாம மார்னிங் பண்ணலாம்… ” என்ற மிதுராவையே விளங்காமல் பார்த்தாள் அதிதி.

அதை உணர்ந்து கொண்ட மிதுவோ மெதுவாக சிரித்தாள்.

“நம்ம ரெண்டு பேருக்குள்ளே இருக்கிற சண்டை நம்ம அப்பாவை மையப்படுத்தி தான்.
மத்தபடி நீங்களும் நானும் எதிரியில்லை. ப்ரெண்ட்ஸ்… “

கைநீட்டிய மிதுராவை தயக்கமாக பார்த்தவளின் மனதில் தனக்கு யாருமில்லையென காலையில் கவலைப்பட்டது மின்னலடித்தது.

அதன் பின்பு எந்த தயக்கமுமில்லாமல் நட்புக்கரம் நீட்டினாள் அதிதி.

💐💐💐💐💐💐💐💐💐💐💐

ஒளிர்விழந்துப்போன அந்த அலுவலக்தில் பிராகசமில்லாமல் அமர்ந்திருந்தாள் சிற்பி.

அவள் முன்னே எதுவும் பேசாமல் அபி.

இவர்களுடைய பேருந்து இன்று வேகமாக அலுவலகத்தை அடைந்துவிட இப்போது அந்த அறையில் அவர்களிருவர் மட்டுமே.

“அபி” என்றழைத்தாள் மெதுவாக.

திரும்பி பார்த்தவனின் முகத்தில் அந்நியபாவம்.

“நான் தான் அந்த காரியத்தை பண்ணேனு நீங்க நம்புறீங்களா?” உடைந்துப்போய் அவள் கேட்க அபியின் கண்களில் உணர்ச்சிப்பெருக்கு.

ஏதோ சொல்ல வாயெடுத்தவன் அலுவலகத்திற்குள் வந்த அந்த மூவர்குழுவைப் பார்த்து அப்படியே அடங்கினான்.

“நீ தான் சிற்பி பண்ணே… என் உணர்வுகளோட விளையாடி, என்னை ஏமாத்தி, என் சிஸ்டம் பாஸ்வேர்ட்டை வாங்கி, எனக்கே துரோகம் பண்ண பார்த்திருக்க…” அபி சொல்ல சிற்பிகாவின் முகம்முழுக்க வலி.

அதைக் கண்டு வன்மமாக சிரித்தது அந்த மூன்றுஜோடி கண்கள்.

“அபி சிற்பியை வெறுக்க ஆரம்பிச்சுட்டான். இதான் சரியான டைம். நீ உன் வேலையை ஆரம்பி இஷிதா…”  ஐஸ்வர்யா தூபம்போட இஷிதா அபியின் முன்னால் வந்து நின்றாள்.

“அபி விடுங்க… இனியாவது யார் நல்லவங்க யார் கெட்டவங்கனு புரிஞ்சுக்கோங்க. இவள் முகத்தையே பார்த்துட்டிருந்தா இன்னும் கோபம் தான் அதிகமாகும்… வாங்க கேன்டீன்க்கு போயிட்டு வரலாம்”  இஷிதா அழைக்க அபியும் அவளோடு இசைந்து இணைந்து சென்றுவிட்டான்.

இந்த காட்சியைக் கண்டு சிற்பியின் கண்கள் உடைய முயன்றநேரம் அறைக்குள் நுழைந்தனர் அதிதியும் மிதுவும்…

அவர்கள் பின்னே இரண்டுகார்த்திக்.

இருவரின் முகத்திலும் எப்போதும் குடியிருக்கும் நிதானம் இன்று பறந்திருந்தது.

அறைக்குள் வந்து அமர்ந்தவர்களின் கவனத்தை கைத்தட்டி கலைத்தான் தீரன்.

எல்லாரும் எழுந்து நின்றனர்.

“ஒரு இம்பார்டெண்ட் announcement. நிவின் மோட்டார்ஸ் கடைசியா நமக்கொரு வாய்ப்பு கொடுத்திருக்காங்க. இன்னொரு தடவை இந்த மாதிரி தப்பு நம்ம கம்பெனியிலே நடக்காதுனு வாக்கு கொடுத்திருக்கோம். அந்த வாக்கை நம்பி நாளைக்கே முழு ப்ராஜெக்டை நமக்கிட்டே கொடுக்க முடிவு பண்ணியிருக்காங்க. இந்த தடவையும் இடையிலே புகுந்து யாராவது கெடுத்தா நடக்கிறதே வேற” என சிற்பியைப் பார்த்து பல்லைக் கடித்தபடி தீரன் சொல்ல எதிரிலிருந்த ஐஸ்வர்யாவுக்கும் ஷாலினிக்கும் கொண்டாட்டம்.

எல்லாரும் சரியென்று தலையாட்டிவிட்டு உட்கார மிதுரா ஐடி கார்ட் அக்செஸ் லிஸ்ட்டை வாங்க வேறொரு ப்ரான்ச்சிற்கு சென்றுவிட்டாள்.

இஷிதாவுடன் கேன்டீனிற்கு போன அபி மதியம் வரை அலுவலகத்திற்கு திரும்பி வரவேயில்லை.

காலையிலிருந்து கண்கொத்தி பாம்பாக ராஜ், சிற்பிகாவை பார்த்துக் கொண்டிருக்க, அதிதியோ அவனை முறைத்தபடி இருந்தாள்.

தீரன் எல்லாரையும் மீட்டிங் ஹாலிற்குள் அழைத்து, புதிதாக துவங்க போகும் ப்ராஜெக்ட்டைப் பற்றி விளக்கி கொண்டிருந்த பொழுது மெதுவாய் அங்கிருந்து நழுவினாள் ஐஸ்வர்யா.

அதை கவனித்த தீரனின் உதடுகளிலோ அர்த்தமான முறுவல்.

வெளியே வந்த ஐஸ்வர்யா அந்த அறையையே சுற்றிமுற்றும் பார்த்தாள்.

யாரும் அங்கில்லை.

பூனைப் போல் பதுங்கி நடந்தவள் வேகவேகமாக அபியின் சிஸ்டத்தை லாகின் செய்தபொழுது அவளின் முன்னே கைக்கட்டி நின்றிருந்தான் ராஜ்.

அவனின் பின்னே தீரன்.

கையும்களவுமாக மாட்டிக் கொண்ட திருடனின் திறுதிறுப்பு, ஐஸ்வர்யாவின் முகத்தினில்.

அதே நேரம் கதவைத் திறந்து கொண்டு பரபரப்பாக உள்ளே வந்த மிதுரா தன் கையிலிருந்த காகிதத்தை நோக்கி இரண்டு கார்த்திக்கின் முன்பும் நீட்டினாள்.

“ஞாயிற்றுக்கிழமை சிற்பி ஒருத்தி மட்டும் ஆஃபிஸ்க்கு வரல. ஐஸ்வர்யா இஷிதாவும் வந்து இருக்காங்க. முதலிலே இவங்க ரெண்டு பேரையும் விசாரிச்சுட்டு அப்புறமா யார் அந்த குற்றவாளினு கண்டுபிடிங்க” மிதுரா மூச்சுவிடாமல் பேசி கொண்டேயிருக்க அவளை நோக்கி ராஜ் தண்ணீரை நகர்த்தி குடிக்க சொல்லி சமிக்ஜை செய்தான்.

தீரனோ அடக்கப்பட்ட முறுவலுடன் மிதுராவைப் பார்த்து “யார் குற்றவாளினு கண்டுபிடிச்சாச்சு. எதிர்ல நிற்கிற இவள் தான்” என்று கைநீட்டினான்.

அவன் காட்டிய திசையின் விளிம்பில் இப்போது ஐஸ்வர்யா.

Leave a Reply

error: Content is protected !!