காதல் தீண்டவே-5

காதல் தீண்டவே-5

பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருந்த அலுவலகத்தையே மலங்க மலங்க பார்த்துக் கொண்டு இருந்தாள் மிதுரா.

சிற்பிகாவின் முகத்திலும் அதே பாவனை தான்.

“ஹே சிற்பி உனக்கு ஏதாவது புரிஞ்சுதா?” என்று தன் கையில் வைத்து இருந்த டாக்குமெண்ட்டை சுட்டிக்காட்டி மிதுரா கேட்க அவளோ இல்லை என்று தலையசைத்தாள்.

“எனக்கும் எதுவும் புரியல மிது.” என்று உதட்டைப் பிதுக்கியவளைக் கண்டு பெருமூச்சுவிட்டது மிதுராவின் மூக்கு.

“அப்பாடா நான் கூட எனக்கு மட்டும் தான் புரியலையோனு நினைச்சு ரொம்ப வருத்தப்பட்டேன். இப்போ ஐ யம் ஹேப்பி சிற்பி.” என்று கன்னத்தைக் கிள்ளியவளைக் கொலைவெறியோடு முறைத்தாள்.

“ஏன்டி, நீ தானே நேத்து ப்ராக்ராமிங்ல இன்ட்ரெஸ்ட் அதனாலே தான் வந்து இங்கே ஜாயின் பண்ணேனு சொன்ன. அப்போ எழுதி தொலைய வேண்டியது தானே. ”

“ஐயோ அதெல்லாம் டீம்ல ஜாயின் பண்ணும் போது எல்லாரும் சொல்ற டிஃபால்ட்  டயலாக் டி.. எனக்கும் ப்ரோக்ராமுக்கும் ஒத்தே வராது. ஏன் நீ கூட தான் ப்ராக்ராம் பிடிக்கும்னு நேத்து சொன்னே அப்போ, எழுத வேண்டியது தானே.”

“அது மிது, நானும் உன்னை மாதிரி ரீல் தான் விட்டேன். எனக்கும் ப்ராக்ராமுக்கும் ஏணி வெச்சாக் கூட எட்டாது.

ஐயோ  இப்போ வெளியே போய் இருக்கிற ரெண்டு கார்த்திக் சாரும் திரும்பி வந்து எங்கே ப்ராக்ரெம்னு கேட்டா என்ன சொல்றது?”

“காக்கா தூக்கிட்டு போயிடுச்சுனு சொல்லுடி” என்ற மிதுராவை தீப்பார்வை பார்த்தாள்.

“அடியே கார்த்திக் ராஜ் சார் தான் நம்ம ரெண்டு பேரு ப்ராக்ராம்மையும் செக் பண்ண போறாருனு  தீரன் சார் சொன்னதை  நீ கவனிக்கலையா?” என்று சிற்பிகா கேட்க மிதுராவின் விழிகள் கோலி குண்டைப் போல உருண்டது.

“ஐயையோ என்ன டி சொல்ற? போச்சா! அந்த ஆளு வேற டெரர் பீஸ் ஆச்சே… வந்து கிழி கிழினு கிழிக்கப் போறாரு. ” என்று அவள் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அவளைக் கிழிப்பதற்காக இரண்டு கார்த்திக்கும் முன்னால் வந்து நின்றனர்.

“ரெண்டு பேரும் ப்ரோக்ராம் எக்ஸிக்யூட் பண்ணிட்டிங்களா?  ராஜ் அவங்க code ஐ செக் பண்ணுங்க.” என்று தீரன் சொல்ல, ராஜ் இருவரின் கணினித் திரையையும் உறுத்துப் பார்த்துவிட்டு பிறகு இருவரது முகத்தையும் மாறி மாறிப் பார்த்தான்.

அவன் கண்களில் லேசாக கோபம் மின்னியது.

“அது வந்து ராஜ் சார்… கம்ப்யூட்டர் இவ்வளவு நேரம் வொர்க் ஆகல. இப்போ தான் வொர்க் ஆச்சு. இனி தான் ப்ரோக்ராம் டைப் பண்ணனும்.” என்று சிற்பிகா சொல்ல ராஜ் அவளையும் கைக்கடிகாரத்தையும் மாறி மாறிப் பார்த்தான்.

அதைப் புரிந்துக் கொண்ட தீரன்

“ராஜ் உங்களுக்கு இன்னும் ஃபைவ் மினிட்ஸ்ல மீட்டிங் இருக்குல. நீங்க அபியோட சேர்ந்து அட்டென்ட் பண்ணுங்க. நான் இவங்க ப்ராக்ராம் பண்ணதும் செக் பண்றேன். ” என்று  சொல்ல சரியென்று தலையசைத்துவிட்டு அவன் மீட்டிங் ஹாலிற்குள் சென்றான்.

இங்கோ தீரன், சிற்பிகாவையும் மிதுராவையும் மாறி மாறிப் பார்த்தான்.

“இப்போ தான்  உங்க சிஸ்டம் வொர்க் ஆகுதுல. ப்ராக்ராம் டைப் பண்ணுங்க, நான் செக் பண்றேன்.” என்று சொல்லிவிட்டு தீரன் தன் வேலையைப் பார்க்க மீண்டும் சிற்பிகாவும் மிதுராவும் திருதிருவென்று முழித்தனர்.

கணினித் திரையையே வெறித்துக் கொண்டு இருந்த இருவரையும் பார்த்துவிட்டு தன் கைக்கடிகாரத்தைத் திருப்பிப் பார்த்தான். கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கு மேலாகிவிட்டது.

“ரெண்டு பேரும் முடிச்சுட்டிங்களா?” என்று திரும்பவும் தீரன் கேட்க இருவரும் மேலும் கீழுமாய் பிறகு இட வலமாய் என மாறி மாறி தலையசைத்து தடுமாறினர்.

அவர்களது தடுமாற்றத்தை ஊன்றிக் கவனித்தவன் வேகமாக வந்து கம்ப்யூட்டர் திரையைப் பார்க்க அவனது கண்கள் அதிர்ச்சியில் ஊறி இருந்தது.

“என்ன பண்ணி வெச்சு இருக்கீங்க?” என்று அவன் இருவரையும் பார்த்துக் கேட்க இருவரும் தடுமாறியபடி 

“ப்ராக்ராம்” என்று இழுத்தனர்.

“ஏது இது ப்ராக்ராம் ஆ? ” என்று அவன் மீண்டும் அழுத்தமாகக் கேட்க மிதுரா மெதுவாக தன் உதடுகளைத் திறந்தாள்.

“சாரி சார். இந்த ப்ராக்ராமை எங்களாலே புரிஞ்சுக்க முடியல. காலேஜ்ல படிச்சதுக்கும் இங்கே இருக்கிறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. அதனாலே…” என்று இழுத்தவளை மீண்டும் தீரன் கூர்மையாகப் பார்த்தான்.

அந்த பார்வையைத் தாங்க முடியாமல் இருவரும் தலைக் குனிந்தனர்.

“உங்களாலே இந்த ப்ரோக்ராம் போட முடியாதுனு தெரிஞ்சு தான் நாங்க கொடுத்தோம்” என்று தீரன் சொல்ல திகைத்து நிமிர்ந்த இருவரும் “ஏன் சார்” என்றனர் கோரசாக.

“உங்களோட honesty ஐ செக் பண்றதுக்காக கொடுத்தோம். ஆனால் உங்களோட நேர்மை வெளிப்பட கிட்டத்தட்ட மூணு மணி நேரம் ஆகி இருக்கு.” என்று அவன் கைக்கடிகாரத்தைக் காட்டி சொல்ல பெண்கள் இருவரும் பதில் சொல்ல முடியாத மௌனியாகினர்.

“நீங்க ஒரு விஷயத்தை தெரியாதுனு ஒத்துக்கிட்டா மட்டும் தான் அதைக் கத்துக்க முடியும். தெரிஞ்சா மாதிரி நடிச்சா கடைசி வரை நடிக்க மட்டும் தான் முடியும். கத்துக்க முடியாது. ” என்றவனது வார்த்தைகளைக் கேட்டு இருவரது தலையும் ஒரு சேர குனிந்தது.

“ஓகே இப்போவாவது தெரியாதுன்ற உண்மையை ஒத்துக்கிட்டு, புதுசா கத்துக்க ரெண்டு பேரும் தயாரா?” என்று அவன் கேட்க ” இருவரும் “எஸ் சார்” என்று ஒரு சேர நிமிர்ந்து பதிலளித்தனர்.

இருவருக்கும் இடையில் அமர்ந்து ப்ராக்ராமின் முக்கிய இத்தியாதிகளை தீரன் விளக்க இருவரும் அதை கவனமாக கேட்டுக் கொண்டனர்.

அவர்களுக்கு புரியும் படி மிக சுலபமாக அவன் கற்றுக் கொடுக்க இருவராலும் வெகு சீக்கிரத்திலேயே முக்கிய நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ள முடிந்தது.

இரண்டு பேருக்கும் முழுவதுமாக விளக்கிவிட்டு “ஓகே இப்போ புரிஞ்சுதா?  இந்த ப்ரோக்ராமை இப்போ பண்ண முடியும்னு நம்பிக்கை இருக்கா?” என்று அவன் கேட்க இரண்டு பேரும் நம்பிக்கையாக தலையசைத்துவிட்டு கணினிப் பக்கம் திரும்பினர்.

அதைப் பார்த்து மெல்லியதாக சிரித்தவன் தன் கைக்கடிகாரத்தைத் திருப்பிப் பார்த்தான்.  மணி இரண்டரையை நெருங்கியிருந்தது. அப்போது தான் காலியாக இருந்த அந்த அறையையே கவனித்தான்.

சொல்லிக் கொடுத்து கொண்டிருந்த மும்முரத்தில்  எல்லாரும் உணவருந்த சென்றுவிட்டதை அவன் கவனிக்கத் தவறியிருந்தான்.

தன் கவனக்குறைவை எண்ணி தலையில் மெதுவாகத் தட்டிக் கொண்டவன் வேகமாக திரும்பி ” டைம் ஆகிடுச்சு. சாப்பிட்டு வந்து கன்டினியூ பண்ணிக்கலாம். ” என்று சொல்ல இருவரும் அவசரமாக மறுத்தனர்.

“இல்லை சார். முடிச்சுட்டே சாப்பிட போறோம். ” என்று சொன்னவர்களை  வியப்பாக பார்த்தான்.

“அந்த அளவுக்கு ப்ராக்ராம் மேலே ஆர்வம் வந்துடுச்சா ரெண்டு பேருக்கும்?” என்றான் கண்களை விரித்தபடி.

இருவரும் ஒரு சேர ” இல்லை சார் சாப்பிட்டு வரதுக்குள்ளே மறந்துப் போயிடுவோம். அதான் இப்பவே முடிச்சுட்டு போகலாம்னு” என்று அசட்டு சிரிப்போடு இழுத்தனர்.

அவர்கள் சொன்ன பதிலுக்கு இவன் சட்டென்று திரும்பிப் பார்த்து முறைக்க இரண்டு பேரும் மீண்டும் “honesty சார். ” என்றனர்.

அந்த பதிலைக் கேட்டு உதடுகளில் புன்னகை பொங்கியது.

“நீங்க ரெண்டு பேரும் இனி honesty ஆ இருப்பீங்க னு எதிர்பார்த்தேன். ஆனால் இந்த அளவுக்கு honesty ஆ இருப்பீங்கனு நினைச்சு பார்க்கல.”  என்று சொல்லி சிரித்தவன் ” சரி சரி ரெண்டு பேரும் சீக்கிரமா முடிச்சுட்டு வாங்க, சாப்பிட போகலாம். ” என்று சொல்லிவிட்டு தன் கணினி திரைப் பக்கம் திரும்பிக் கொண்டான்.

சாப்பிட வெளியில் போய் இருந்தவர்கள் எல்லாம் அறைக்கு திரும்பி வரத் துவங்கி இருந்தனர்.

அதே சமயம் மிதுராவும் சிற்பிகாவும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை முடித்துவிட்டு “முடிச்சுட்டோம் சார்” என்று சொல்வதற்கும் ராஜ்ம் அபியும் அங்கே வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது.

“தீரன் சார் மீட்டிங் வெற்றிகரமா முடிச்சாச்சு. அவங்க நம்ம புது ப்ராஜெக்ட் அக்செப்ட் பண்ணிட்டாங்க. நீங்க பெங்களூர் போயிட்டு official ஆ சைன் பண்ணி முடிச்சுட்டா நாம வொர்க் நெக்ஸ்ட் வீக்லயே  ஸ்டார்ட் பண்ண வேண்டியதுதான். ” என்று அபி சொல்ல தீரன் புன்முறுவலோடு சரியென்று தலையசைத்தான்.

“ராஜ் வெல் டன் மேன். எப்பவும் போல பக்காவா டீல் முடிச்சுட்டே. அபி தேங்க்ஸ் ஃபார் யுவர் ஹெல்ப். ” என்று இருவரையும் அவன் பாராட்ட இருவரும் புன்முறுவலோடு தலையாட்டினர்.

“தீரன் சார் பசிக்குது. இந்நேரத்துக்கு நம்ம கேன்டின்ல சாப்பாடு காலி ஆகி இருக்கும். நாம  வெளியே இருக்கிற கணேஷ் அண்ணா கடைக்குப் போய் சாப்பிடலாமா?” என்று அபி வயிற்றைப் பிடித்தபடிக் கேட்க “ஓகே அபி.”என்று சொல்லியவன் திரும்பி மிதுராவையும் சிற்பிகாவையும் வரும்படி கண்ணசைத்தான்.

ஐவரும் அலுவலகத்திற்கு வெளியே இருந்த  கணேஷ் மீல்ஸ் கடைக்கு வந்து  அமர்ந்தனர்.

மிதுராவும் அபியும்  தான் கொண்டு வந்த சாப்பாட்டை எடுக்க தீரனுக்கும் சிற்பிகாவிற்கும் ஒரே நேரத்தில் அலைபேசியில் அழைப்பு வந்தது.

“டேய் ராஜ். நமக்கு சாப்பாடு வாங்கி வை டா. நான் போய் கால் பேசிட்டு வந்துடுறேன். ” என்று தீரன் அலைப்பேசியை எடுத்துக் கொண்டு வெளியே சென்று விட்டான்.

“ஹே மிது, நீ எனக்கு சாப்பாடு வாங்கி வைக்கிறியா?” என்று சிற்பிகாவும் கேட்க, மிதுரா தலையசைத்தபடி உணவு வாங்கும் இடத்திற்கு சென்றாள்.

“அண்ணா ஒரு மீல்ஸ்” என்று சொல்லிவிட்டு அந்த கடையை தன் கண்களால் அலசினாள்.

தின்பண்டங்களும் உணவுப் பொருட்களும் வரிசைக் கட்டிக் கொண்டு கடையில் இருந்தது.

வாடிக்கையாளர்களை சமாளிப்பதற்காக இரண்டு பேர் கடையில் இருந்தனர்.

ஒருவர் உணவுப் பொருட்களை தட்டில் வைத்து அடுக்கிக் கொண்டு இருக்க இன்னொருவனோ வெறுமனே நிற்பவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

அந்த இன்னொருவனது பார்வை மிதுராவின் மீதே சுற்றிவர அந்தப் பார்வையின் அறுவெறுப்பு தாங்க முடியாமல் திரும்பி நின்றுக் கொண்டாள்.

“கணேஷ் அண்ணா கடைப் பொருளை எல்லாம் கலெக்ஷன் பண்ணிட்டேன். இந்தாங்க பத்தாயிரம் ரூபாய்.” என்று ஒருவர் பணம் தந்துவிட்டுப் போக அதை வாங்கி கல்லாவில் போட போகும் போது உள்ளே கருகிய வாசனை நாசியை நிறைத்தது அவருக்கு.

காசை அப்படியே வைத்துவிட்டு உள்ளே ஓடிச் சென்று அடுப்பை அணைத்துவிட்டு திரும்பி வரும் போது ராஜ் அங்கே  நின்று இருந்தான்.

அவனைக் கண்டு மிதுரா மரியாதை நிமித்தமாக ஒரு புன்னகை பூக்க, அவனோ மெல்லியதாக தலையசைத்துவிட்டு கணேஷ் பக்கம் திரும்பினான்.

“வாங்க ராஜ் சார். எப்போவும் போல 2 செட் பரோட்டா தானே.” என்று கணேஷ் அவனது வழக்கமான உணவை சொல்ல  அவன் தலை ஆமோதித்தது.

“ராஜ் சார் பத்தி எனக்குத் தெரியாதா? அவர் எப்போ என்ன சாப்பிடுவார்னு எனக்கு தான் அத்துப்படி ஆச்சே” என்று பெருமையுடன் சொன்னவர், அப்போது தான் நியாபகம் வந்து தான் வைத்துவிட்டு போன பணத்தைப் பார்க்க திரும்பினார்.

ஆனால் அங்கே இருந்த பத்தாயிரம் இப்போது இருந்த தடம் இல்லாமல் காணாமல் போய் இருந்தது.

கண்கள் பதற்றமாக அந்த இடத்தையே அலசியது. ஆனால் அவர் தேடியது கண்ணிற்கு அகப்படவே இல்லை.

நெற்றியில் துளிர்த்த வியர்வையோடு மிதுராவை சந்தேகமாகப் பார்த்தார்.

“ஏன் மா இங்கே வெச்சு இருந்த பத்தாயிரம் ரூபாய் பணத்தைப் பார்த்தியா?” என்று கேட்க மிதுராவோ இல்லை என்று தலையசைத்தாள்.

“அது எப்படி மா பார்க்காம போய் இருப்ப? உன் முன்னாடி தானே பணத்தை இங்கே வெச்சுட்டு போனேன். உன்னைத் தவிர்த்து யாரும் அப்போ இங்கே இல்லையே. அந்த பணத்தை எடுத்து இருந்தா கொடுத்துடுமா. ” என்று கேட்டவரின் வார்த்தைகளைக் கேட்டு மிதுரா அதிர்ந்துப் போனாள்.

அவர் தன் மீது திருட்டுப் பட்டம் சுமத்துவதை அறிந்ததும் இதயம் கோபத்தில் துடித்தது.

“சார் வார்த்தையை அளந்துப் பேசுங்க.  நான் எந்த பணத்தையும் எடுக்கல. ராஜ் சாரும் என் பக்கத்துல தான் இருந்தாரு. அவர் கிட்டேயே கேட்டுப் பாருங்க. நான் திருடியா இல்லையான்ற உண்மை உங்களுக்குப் புரியும்” என்று அவள் ராஜ் பக்கம் திரும்ப அவன் அப்போதும் மௌனம் சாதித்தான்.

அவனது மௌனத்தைக் கண்டு மிதுராவிற்கு எரிச்சலாக இருந்தது.

ஆனாலும்

அதை அடக்கியபடி,

“ராஜ் சார் ப்ளீஸ்… நீங்களாவது நடந்த உண்மையை சொல்லுங்களேன். என் மேலே திருட்டுப் பட்டம் சுமத்தி இருக்காங்க. ப்ளீஸ் வாயைத் திறந்து பேசுங்களேன்.. ” என்று அவள் அவனிடம் கெஞ்சிக் கொண்டு இருக்க அவனோ அவள் பக்கம் பெயருக்குக் கூட திரும்பவில்லை.

அந்தக் கடையையும் அதற்குள்ளே இருந்த இருவரையும் மட்டும் தான் மாறி மாறி வெறித்துக் கொண்டு இருந்தான்.

ஆபத்திற்கு கூட வாயைத் திறந்து பேசாமல் திமிராக இருக்கும் அவனது செயலில் கோபத்தின் உச்சத்திற்கு சென்றவள் “சே. இப்போ கூட ன் வாயைத் திறந்து பேச மாட்டிங்களா? நீங்க என்ன ஊமையா?” என்று அவள் ஆத்திரத்தில் கத்துவதற்கும் தீரன் உள்ளே வருவதற்கும் சரியாக இருந்தது.

அவளுடைய கடைசி வார்த்தைகள் அவன் செவிப்பறையில் மோதி ஒலிக்க அவன் முகமெல்லாம் கோபத்தின் சிவப்பு பரபரவென பரவியது.

மிதுராவை எரிக்கும் பார்வை பார்த்தவன் அங்கே வைத்து இருந்த உணவுப் பொருளை கோபத்தில் தட்டிவிட அது மிதுராவின் கைகளில் சிதறி விழுந்தது.

அவள் கலங்கிய பார்வையுடன் தீரனைப் பார்க்க, அவன் குரலில் பெருஞ்சிங்கத்தின் கர்ஜனை.

“அவன் ஊமை இல்லை மிதுரா… அவனோட குரல் நான். இதை உன் கிட்டே முன்னாடியே சொல்லி இருக்கேன். அடுத்த தடவை அவனை ஊமைனு சொன்ன, இந்த தீரனை வேற மாதிரி பார்ப்ப.” என்று அவன் கத்த, அவளது இதயம் முழுக்க இப்போது  மீட்டப்பட்ட வீணையின் அதிர்வுகள்.

“என்னது கார்த்திக் ராஜ் சார் ஊமையா?” என்று அவள் அதிர்ந்துப் போய் கேட்க தீரனோ அவள் குரல் வளையைப் பிடித்து அடுத்து பேச முடியாதபடி இறுக்கினான்.

“இவ்வளவு சொல்லியும் மறுபடியும் அவனை ஊமைனா சொல்ற?”  என்று கோபத்தில் கொந்தளித்தவனின் கரத்தை வலுக்கட்டயமாக தன் கழுத்தினில் இருந்து விலக்கியவள் அடிப்பட்ட முகத்தோடு அவனைப் பார்த்துவிட்டு  மேலும் அங்கே நிற்க பிடிக்காமல்  அங்கிருந்து ஓடி மறைந்தாள்.

புள்ளியாய் மறைந்த அவளையே  வெறித்தபடி நின்றுக் கொண்டு இருந்தனர் இரண்டு கார்த்திக்கும்.

Leave a Reply

error: Content is protected !!