காதல் தீண்டவே-8

காதல் தீண்டவே-8

அவள் உள்ளுக்குள் இன்றும் ஒலிக்கிறது, அன்றைய கண்ணீரின் விசும்பல்.

கண்களில் விரிகிறது, கணநேர விலகலில் கடந்துப் போன மரணத்தின் சாயல்கள்.

இன்னும் இன்னும் ஏதேதோ  நினைவடுக்குகளில் தோன்றி மறைய சட்டென்று தன் தலையை உலுக்கிக் கொண்டு கார்த்திக் ராஜ்ஜைப் பார்த்தாள்.

அவள் கண்களில் கேள்வியின் ரேகைகள் படிந்து இருந்தது, அது இப்போது குரலிலும் பிரதிபலித்தது.

“நீங்களா வரைஞ்சீங்க? இந்த ஓவியத்துக்கான இன்ஸ்பிரேஷன் எங்கே கிடைச்சது?” என்று அவள் கேட்கவும் பேருந்து கடைசி நிறுத்தத்தில் நிற்கவும் சரியாக இருந்தது.

கார்த்திக் ராஜ் அவளுடைய கேள்விக்கு பதிலளிக்காமல் பேருந்தை விட்டு கீழே இறங்க இவளும் அவசர அவசரமாக கைப்பையை எடுத்துக் கொண்டு அவனின் பின்னால்  ஓடினாள்.

ஆனால் அவசரத்தில் கீழே இருந்த சிறுக் கல்லை கவனிக்க மறந்துவிட்டாள்.

தடுமாறி விழப் போனவளை சட்டென தாங்கிப் பிடித்தவன் “பார்த்து வர மாட்டிங்களா?” என்று சைகையாலேயே கேட்டான்.

அவள் அதற்கு எல்லாம் விளக்கம் கொடுக்கும் நிலையினில் இல்லை அவளுடைய கேள்வி எல்லாம் ஒன்றே, எப்படி அவனுக்கு அன்று நடந்தது தெரியும் என்பது மட்டுமே..

“ராஜ் சார் இந்த ஓவியத்தை நீங்க வரைஞ்சீங்களானு கேட்டதுக்கு பதில் சொல்லவே இல்லை” என்று மீண்டும் அதேக் கேள்விக்கு வந்து நின்றாள்.

அவனோ அவளைப் பார்த்து புன்னகைத்து என்னப் பார்த்தா வரையுறா மாதிரியா இருக்கு? என்று பாவனையாலேயே கேட்டான்.

அவளோ அந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்தாள்.

அந்த நேரம் பார்த்து ராஜ்ஜின் அலைப்பேசி ஒளிர்ந்தது.

அதில் இருந்த குறுந்தகவலைப் படித்ததும் ராஜ்ஜின் முகத்தில் லேசான பரபரப்பு.

“அவசரமா ஒரு விஷயத்தைப் பத்தி டிஸ்கஸ் பண்ணனும் மிதுரா. இப்போ கிளம்புறேன் நாளைக்கு பார்க்கலாம்.” என்று டைப் செய்து காண்பித்துவிட்டு பரபரப்பாக அங்கிருந்து கிளம்பியவனையே ஏமாற்றமாகப் பார்த்தது அவளின் விழிகள்.

💐💐💐💐💐💐💐💐

அந்த சோபாவில் தவித்தபடி அமர்ந்து இருந்த சீமாவை தயக்கத்துடன் பார்த்தார் விஸ்வம்.

“மிதுரா இருக்கும் போது இதே மாதிரி நீ நெளிஞ்சுட்டு இருந்தேனா அவளுக்கு அது வித்தியாசமாப்படும் சீமா.  நெளியாம உட்காரு.” என்று தன்னருகில் அமர  சங்கடப்பட்டுக் கொண்டு இருந்த தன் மனைவியைப் பார்த்து சொன்னார்.

சீமாவும் சரியென்று தலையசைத்துவிட்டு நன்றாக அமர முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை.

ஏதோ ஒரு தயக்கம் அவரது உடலை பின்னி இருந்தது.

சீமாவும் விஸ்வமும் அதிகமாக இந்த வீட்டினில் ஒன்றாக சேர்ந்து வசித்தது இல்லை.

மிதுரா சிறுவயதினில் இருக்கும் போது அவருக்கு வெளியூரில் வேலை. மித்ரா கல்லூரியில் சேரும் போது அவர் இந்த ஊருக்கு வந்துவிட்டார் தான் ஆனால் இதே ஊரில் வேறொரு வீடெடுத்துத் தங்கி இருந்தார். மிதுரா விடுமுறை நாட்களில் இங்கே வரும் போது மட்டும் அவர் இங்கே வந்துவிடுவார்.

இருவரும் ஒரே வீட்டினில் ஆதர்ஷ தம்பதிகள் போல இருப்பதாய்  அவள் முன்னே நடித்து அவளை மீண்டும் விடுதிக்கு அனுப்பிவிடுவர்.

ஆனால் இந்த முறை கல்லூரி முடித்து மிதுரா இங்கே வீட்டிற்கே வந்துவிட  இருவரால் இப்போது  தனித்தனியாக இருக்க முடியாத நிலைமை.

விஸ்வம் தன் அறையை காலி செய்துவிட்டு இங்கே வந்துவிட்டார்.

இருவரும் மிதுராவின் முன்னால் மனம் ஒத்த தம்பதிகளாக தான் இருக்க முயற்சித்தனர்.

ஆனால் அவர்களால் முயற்சி மட்டும் தான் செய்ய முடிந்து இருந்தது, இருக்க முடியவில்லை.

அதை மிதுராவும் கவனித்து கேள்வியையும் கேட்டுவிட்டாள்.

இனிமேலும் இப்படியிருந்தால் அவள் கண்டிப்பாக உண்மையைக் கண்டுபிடித்துவிடுவாள் என்ற பயம் இருவரையும் ஆட்க்கொண்டு இருந்தது, முக்கியமாக விஸ்வத்தை.

அந்த பயம் தான் சீமாவிடம் இப்போது பேச வைத்திருந்தது.

எப்படி மிதுரா முன் இருவரும் நெருக்கமாக இருப்பதுப் போல காட்டிக் கொள்ள வேண்டும் என்று விஸ்வம் தான் சீமாவிற்கு விளக்கிக்  கொண்டு இருந்தார்.

ஆனால் சீமாவிற்கு அது சிரமமாக இருக்கும் என்பதை உணர்ந்த விஸ்வத்தின் கைகள்  சீமாவின் உள்ளங்கையை மெல்ல எடுத்துத் தன்னோடு பொத்தி வைத்துக் கொண்டது.

  திகைத்துத் திரும்பியது சீமாவின் விழிகள்.

“சீமா எனக்கு புரியது. இந்த திடீர் நடிப்பு உனக்கு கஷ்டமா இருக்கும், தயக்கமா இருக்கும். ஆனால் என்னை ஒரு அந்நியனா பார்க்காம ப்ரெண்டா பாரு. இந்த தயக்கம் எல்லாம் போயிடும்.” என்று அவர் சொல்ல சீமாவும் ஒரு சின்ன தலையாட்டலோடு இந்த முறை சோபாவில் இலகுவாக அமர முற்பட்டார்.
அமர்ந்தும் விட்டார்.

“சூப்பர் சீமா. அப்படி தான்.  அப்புறம் நம்ம பொண்ணு ஏதாவது பேசிட்டு இருக்கும் போது நான்  உன் கையைப் பிடிச்சுக்கிட்டே பேசுவேன். அதே மாதிரி நீயும் என் கையை பதிலுக்குப் பிடிக்கணும். அதைப் பார்த்தா நம்ம மகள் சந்தோஷப்படுவா” என்று சொல்ல சீமா  மீண்டும்  சரியென்று தலையசைத்தார்.

அவர் எப்படி எல்லாம் நடந்துக் கொள்ள வேண்டும் எப்படி எல்லாம் நடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்த நேரம் அறைக்கதவு திறக்கும் ஒலி கேட்டது.

இருவரும் சட்டென்று பரபரப்பானார்கள்.

முகத்தில் ஒரு போலி புன்னகையை ஒட்டிக் கொண்டார்கள். கண்களில் முயன்று வர வழைத்த காதலை ஒட்டிக் கொண்டார்கள்.

இப்போது அவர்கள் தன் மகளையும் அவளது சந்தேக கண்களையும் எதிர்கொள்ள முழுமையாக தயாராகிவிட்டனர்.

தன் வீட்டிற்குள்ளே  நுழைந்த மிதுராவுக்கு அன்று ஏதோ வித்தியாசமாகப்பட்டது.

தன் தந்தையின் கைகளுக்குள் இருக்கும் தன் தாயின் விரல்களைப் பார்த்ததும் அவளது கண்கள் ஒளிர்ந்து.

தான் கவனித்ததை பார்த்துவிட்டு அவசரமாக கைகளை விடுவித்துக் கொண்டு வெட்கச் சிரிப்பு உதிர்த்தவர்களைப் பார்க்க அவளுக்கு புதியதாக இருந்தது.

முகத்தில் பூத்த முறுவலுடன் தன் பெற்றோரைப் பார்த்தாள்.

“எப்படி டா போச்சு இன்னைக்கு ஆபிஸ்? கையிலே பட்டக் காயம் இப்போ பரவாயில்லையா?” என்று அக்கறையாக வந்து விழுந்தது விஸ்வத்தின் வார்த்தைகள்.

“கையிலே வலி சுத்தமாயில்லை அப்பா.  ஆபிஸ்லாம் நல்லா போச்சு. ஆமாம் என்ன ரெண்டு பேர் முகத்திலேயும் இன்னைக்கு ஏதோ ஒளிஞ்சு இருக்கே அது என்னது? ஒரு வேளை அது காதலா இருக்குமோ?” என்று மிதுரா கேட்க அவர்கள்  வெட்கப்பட முயன்றனர்.

அதைப் பார்த்து மிதுரா சிரித்தபடி ” சரி சரி நான் கிண்டல் பண்ணல. அதுக்காக இப்படி வெட்கப்படுறேனு சொல்லி முகத்தை வெச்சுக்காதீங்க. ” என்று கேலியாக சொல்லிவிட்டு புன்னகையுடன் தன்னறைக்குள் சென்ற மகளையே ஒரு நிம்மதி பெருமூச்சுடன் பார்த்தனர்.

“என் பொண்ணோட இந்த சந்தோஷத்துக்காக என்ன வேணாலும் பண்ணலாம். ” என்று செல்லும் தன் மகளையேப் பார்த்து சொன்ன விஸ்வத்தை புன்முறுவலோடு பார்த்தது சீமாவின் கண்கள்.

தன்னறைக்குள் நுழைந்த மிதுராவின் மனதினுள்  தன் பெற்றோரைப் பற்றிய சந்தோஷம் ஒரு புறம் இருந்தாலும் எங்கிருந்து வந்தது இந்த திடீர் அன்பு என்ற கேள்வியும் இருக்கவும் தான் செய்தது.

ஆனால் இந்த எல்லாக் குழப்பங்களையும் பின்தள்ளி அவளது மூளையை இப்போது பிராண்டிக் கொண்டு இருந்தது ராஜ் காண்பித்த அந்த ஒவியம் மட்டுமே.

அந்த கேள்விக்கான விடை  ராஜ்ஜிடம் தான் இருந்தது.

நாளைக் காலை வரை காத்திருந்து தெரிந்து கொள்ளும் அளவிற்கு அவளது மனதிற்கு சிறிதளவு கூட பொறுமை இல்லை.

எப்படியாவது தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவெடுத்து சிற்பிகாவிற்கு அழைப்பெடுத்தாள்.

அழைப்பை ஏற்றதும்  சிற்பிகா சொன்ன முதல் வார்த்தை இது தான் “நான் நினைச்சேன். நீ கால் பண்ணிட்டே மிது. உன் கிட்டே ஒரு இம்பார்டெண்ட் விஷயத்தைக் கேட்கணும்னு நினைச்சேன்.” என்று அவள் சொல்ல மிதுரா தான் கேட்க வந்ததை ஒதுக்கிவிட்டு அவளைப் பற்றிக் கேட்க துவங்கினாள்..

“அப்படி என்ன இம்பார்டெண்ட் விஷயம் சிற்பி?”

“இல்லை நாளைக்கு பிங்க் கலர் ட்ரெஸ் போடலமா இல்லை லாவண்டர் கலர் ட்ரெஸ் போடலமானு ஒரே குழப்பமா இருக்கு. அதைப் பத்தி கேட்க வந்தேன்.” என்று சிற்பி சொல்ல அதைக் கேட்ட மிதுராவிற்கு எங்காவது முட்டிக் கொள்ள வேண்டும் போல இருந்தது.

“ஏது இது உனக்கு முக்கியமான விஷயமா? வேணாம்டி ஏற்கெனவே கொலைக்காண்டுல இருக்கேன். அப்புறம் உன்னைய கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போயிடப் போறேன்.’

“ஹே என்ன மிது! ஒரு கலர் கேட்டதுக்குக் கொலை வரை போறது அநியாயம் அக்கிரம்”

“சரி சரி அநியாயமாவே இருக்கட்டும். அதை விடு. முதலிலே உன் கிட்டே கார்த்திக் ராஜ் சார் நம்பர் இருக்கானு சொல்லு.”

“இல்லையேடி..  ஏன்?”

“இல்லை மா அவசரமா தேவைப்படுது. ஒரு முக்கியமான விஷயத்தைப் பத்தி பேசணும்.”

“அப்போ இரு மா. என் கிட்டே அபி நம்பர் இருக்கு நான் அவங்க கிட்டே கேட்டுப் பார்க்கிறேன். ஒரு டூ மினிட்ஸ். ” என்று சிற்பி சொல்லி அழைப்பைத் துண்டித்துவிட்டு அபியின் எண்ணிற்கு அழைப்பெடுத்தாள்.

புதியதாக ஒளிர்ந்த அந்த எண்ணைக் கண்டு நெற்றியில் முடிச்சு விழ அழைப்பை ஏற்றிக் காதில் வைத்தான் அபி.

“ஹலோ.” என்று எதிர்ப்புறம் ஒலித்தக் குரலைக் கேட்டதும் அவன் முகத்தில் பல மின்னல் கீற்றுகள்.

“வெயிட் வெயிட் நீங்க பேர் சொல்ல வேண்டாம். நானே சொல்றேன். பேசுறது சிற்பிகா தானே?” என்று அவன் கேட்க அவளது முகத்தில் ஆச்சர்ய ரேகைகள்.

“எப்படி கண்டுபிடிச்சீங்க அபி?” என்ற அவளது குரலிலும் வியப்பிற்கு பஞ்சமில்லை.

“என்னைப் பொதுவாவே எல்லாரும் அறிவாளினு சொல்லுவாங்க..அந்த அறிவை வெச்சுக் கண்டுபிடிச்சேன்.” என்று அவன் சொல்ல ” நான் நம்பிட்டேன் பா. ” என்றாள் புன்னகையுடன்.

“சரி சொல்லுங்கள் சிற்பி. இந்த நேரத்தில் தாங்கள் அழைத்ததன் நோக்கம்  என்னவோ?”

“எனக்கு கார்த்திக் ராஜ் சார் நம்பர் கிடைக்குமா?” என்றுத் தயங்கி தயங்கிக் கேட்டாள்.

“ஓ யெஸ் தந்துடலாமே.. ஆமாம் எதுக்காக அவர் நம்பர்?”

“அது கொஞ்சம் இம்பார்டெண்ட் விஷயம் பேசணும் அதனாலே. “

“ஓகே ஓகே நான் அனுப்புறேன் சிற்பி. இந்த நம்பர்ல தானே வாட்ஸ்அப் யூஸ் பண்றீங்க. இதுலேயே அனுப்பிடலாம் தானே. ” என்று அவன் கேட்க அவள் ஆமாம் என்று சொல்லிவிட்டு அவனது குறுஞ்செய்திக்காக திரையைப் பார்த்தாள்.

இரண்டே நொடியில் அவனிடம் இருந்து அலைப்பேசி எண் வந்து இருந்தது.

அதை சிற்பிகாவிற்கு அனுப்பிவிட்டு மீண்டும் அவனது வாட்ஸ்அப் ப்ரொஃபைலைப் பார்த்தாள்.

அதில் அவன் வைத்து இருந்த அவனது புகைப்படத்தைப் பார்த்து தன்னை மறந்து க்யூட் என்றது அவளது உதடுகள்.

அங்கே அப்படி தான் அபியும் அவளது புகைப்படத்தைப் பார்த்து க்யூட் சொன்னதை அவள் அறிவாளோ?

சிற்பிகாவிடம் இருந்து வந்த எண்ணைப் பார்த்ததும் மிதுராவின் முகத்தில் புன்னகை தவழ்ந்தது.

“என் நண்பேன் டி.” என்று அவளுக்கு அனுப்பியவள்  கார்த்திக் ராஜ்ஜின் எண்ணிற்கு அவசர அவசரமாக ஹாய் என்று அனுப்பிவிட்டு அவனது குறுஞ்செய்திக்காக காத்து இருந்தாள்.

அனுப்பிய சில நொடிகளிலேயே ஹாய் என்று ராஜ்ஜிடம் பதில் வந்து இருந்தது.

” ஐ யம் மிதுரா. ” என்று அவள் தன்னை அறிமுகம் செய்ய விரும்ப அவனோ

“யெஸ் ஐ நோ. என் கிட்டே உங்க நம்பர் இருக்கு.  சொல்லுங்க மிதுரா” என்றான்.

“இப்போ நீங்க ஃப்ரீயா சார். உங்க கிட்டே பேசலாமா?”

“”ஃப்ரீ தான். பேசலாமே…  அப்புறம் இந்த சார்  எல்லாம் ஆபிஸ்ல மட்டும் போதும் வெளியே வேண்டாம். ராஜ் னே கூப்பிடுங்க. நோ ப்ராப்ளெம்.” என்று அவன் சொல்ல ஓகே என்று அனுப்பிவிட்டு தயங்கி தயங்கி தட்டச்சு செய்தாள்.

“அந்த ஓவியத்தை வரைஞ்சது நீங்களா?” என்று அவள் கேட்க ராஜ்ஜின் முகத்தில் கேள்வியுடன் கூடிய புன்னகை.

“கண்டிப்பா பதில் தெரியணுமா மிதுரா?” என்று அவன் அனுப்ப ஆமாம் என்று மின்னல் பொழுதினில் பதில் அனுப்பினால் அவள்.

“அப்போ சரி சொல்றேன்.”  என்ற அவனது பதிலைப் பார்த்ததும் ஆர்வம் கூடிய முகத்துடன் ” Typing” என்று இருந்த அந்த அலைபேசியின் திரையையே உற்றுப் பார்க்கத்  துவங்கினாள்.

என்ன பதில் அனுப்பி  இருப்பானோ அவன்?

Leave a Reply

error: Content is protected !!