காதல் தீண்டவே -pre
காதல் தீண்டவே -pre
தீரனும் மிதுராவும் அதற்கடுத்து வந்த நாட்களில் அதிகமாக பேசிக் கொள்ளவே இல்லை. கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிவிட்டது.
தீரனுக்கு தெரியும் அவளது காயம் அத்தனை சீக்கிரத்தில் ஆறாது என்று.
அவளை சமாதானப்படுத்துகிறேன் என்ற பெயரில் பல குட்டி கரணங்களை நிகழ்த்தி அவளை சங்கடப்படுத்த விரும்பவில்லை அவன்.
நீ பேசாததால் நான் சோகமாக இருக்கிறேன் பார், என்னை குடிக்க வைத்துவிட்டாய் பார், நான் நானாக இல்லை பார், என்னை அழித்துக் கொண்டேன் பார் என்று அவன் எதுவும் செய்து அவளை குற்றவுணர்வுக்கு ஆளாக்கவில்லை.
அவன் அவளுக்கான நேரத்தைக் கொடுத்தான்.
அவளை அதிகமாக தொந்தரவு செய்யாமல் அதே சமயம் தனியாகவும் விடாமல் அவள் அருகில் ஆறுதலாக நிழல் போல தொடர்ந்து கொண்டிருந்தான்.
உடைந்துப் போன தன்னை ஒட்டி மீட்டி எடுத்து கொண்டிருந்தவளை சில்லுகள் குத்திவிடாமல் கவனத்துடன் அருகில் நின்று பார்த்துக் கொண்டான்.
தீரனின் செயலில் தெரிந்த அன்பும் பாசமும் மிதுராவிற்கு புரியாமல் ஒன்றும் இல்லை. புரிந்தது தான்.
ஆனால் மன்னிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.
மனதோடு போராட்டம் நிகழ்த்திக் கொண்டிருந்தவளின் முன்பு லிஃப்ட் வந்து நிற்க உள்ளே ஏறிக் கொண்டவள் ஆறாவது எண்ணை அழுத்திவிட்டு திரும்ப அருகிலோ தீரன்.
அப்போது தான் அந்த லிஃப்ட்டில் தானும் தீரனும் மட்டும் தனித்து நின்றுக் கொண்டிருப்பதையே கவனித்தாள்.
அதே நேரம் பார்த்து மின்சாரமும் சென்றுவிட லிஃப்ட் பாதியிலேயே நின்றுவிட்டது.
அதைக் கண்டு மிதுராவின் இதழ்கள் ஏளனத்துடன் வளைந்தது.
“தீரா ஏன் இப்படி சினிமாத்தனமா பண்ற. லிஃப்ட்டை பாதியிலேயே நிறுத்தி வைச்சு இப்போ எனக்கு கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்து ரொமான்ஸ் பண்ணி சமாதானப்படுத்தப் பார்க்கிறியா. நான் அதுக்குலாம் சமாதானம் ஆகமாட்டேன்.” என்று அவள் பேசிக் கொண்டு இருக்கும் போதே தீரன் இடைமறித்தான்.
“மிது, நிறைய படம் பார்த்து கெட்டு போய் இருக்க. காதலியோட அனுமதியில்லாம அவளை அப்படி கட்டிப்பிடிச்சு சமாதானம் பண்றது ரொமான்ஸ் இல்லை ஹராஸ்மென்ட். அதை நான் கண்டிப்பா பண்ணமாட்டேன்.” என்றான் தீர்க்கமாக.
தீரனின் இந்த வார்த்தைகள் அவள் இதயத்தை அசைத்துப் பார்த்தது தான். அவன் மீது காதல் கணக்கில்லாமல் வழிந்து கொண்டிருந்தது தான்.
ஆனால் உள்ளுக்குள் இருக்கும் காயத்தின் வடுக்கள் இன்னும் அழியவில்லையே, என்ன செய்ய!
“ம்ம்ம் இதெல்லாம் நல்லா வக்கணையா பேசு. ஆனால் லவ் பண்றதுல மட்டும் கோட்டையை விட்டுடு.” என்று சொன்னவளின் புருவங்கள் கேள்வியாக அவனைப் பார்த்து உயர்ந்தது.
“உண்மையா நீ தான் ஆதனா? ஊருக்கே லவ்வுக்கு அட்வைஸ் கொடுக்கிற. ஆனால் உன் காதலிலே மட்டும் இப்படி சொதப்புறே. கார்த்திக் என்னாலே உன் மேலே இருக்கிற கோபத்தை சுமக்கல. ரொம்ப கனமா இருக்கு. ப்ளீஸ் ஏதாவது பண்ணி என்னை சரிப் பண்ணேன்” என்றவள் கெஞ்சல் குரலில் கேட்ட நேரம் போன மின்சாரம் திரும்ப வந்துவிட்டது.
ஆனால் இப்போதோ தீரனின் முகம் மின்சாரம் போன வீதியாக களையிழந்து போய் நின்றது.
முகம் முழுக்க வருத்தத்துடன் லிப்ஃட்டை விட்டு வெளியே சென்றவளைப் பார்த்தவனின் மனதினில் விஸ்தாரமெடுத்து நின்றது அந்த கேள்வி.
“இவளை எப்படி சமாதானப்படுத்தப் போகிறோம்”
அந்த நேரம் பார்த்து அலைப்பேசியில் வெளிச்சம் வர எடுத்துப் பார்த்தவனது முன்னே இப்போது நம்பிக்கை வெளிச்சமாக வந்து விழுந்தது ராஜ்ஜின் முகம்.
நேராக ராஜ்ஜின் முன்பு சென்ற தீரன், “டேய் மச்சான் எப்படியாவது மிதுவை எனக்கு கரெக்ட் பண்ணி கொடுடா” என உதட்டைப் பிதுக்கிக் கொண்டு கேட்க
“ஃப்ரெண்டா போய் தொலைஞ்சுட்ட, பண்றேன்டா! பண்ணி தொலையுறேன்.” என தலையில் அடித்துக் கொண்டான் ராஜ்.
💐💐💐💐💐💐💐💐💐💐
காலத்துக்கு காயத்தை ஆற்றும் வலிமை இருப்பது உண்மையே.
ஆனால் அதற்கு காயத்தை போக்கும் வலிமை இருத்கிறதா என்று கேட்டால் பதில் இல்லை.
அதிதிக்கு விஸ்வத்தின் மேல் முன்பிருந்த கோபம் இல்லை. ஆனால் அவரிடம் இயல்பாய் பேசவிடாமல் எதுவோ தடுத்தது.
அதைப் புரிந்துக் கொண்டு விஸ்வமும் ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு அவளை சங்கடப்படுத்தாமல் அங்கிருந்து நகர்ந்திடுவார்.
அந்த வீட்டில் ஒட்டியும் ஒட்டாமலும் இருந்த அதிதியை மிதுரா தான் இழுத்துப் பிடித்து உட்கார வைத்து பேச்சுக் கொடுப்பாள்.
அதிகாலையிலேயே அவளை எழுப்பி மொட்டைமாடிக்குள் தள்ளிக் கொண்டு வருகிறவள் தினமும் ‘தாய்-சி’ என்னும் யோககலையை மனநிம்மதிக்காக செய்ய வைப்பாள்.
வீட்டிலும் அலுவலகத்திலும் தன்னை அன்பாய்ப் பார்த்துக் கொண்ட மிதுராவோடு இப்போது எல்லாம் நட்பாக பழக ஆரம்பித்திருந்தாள் அதிதி.
சீமாவின் மேல் அவளுக்கு முன்பிருந்தே அன்பு உண்டு. ஆனால் இப்போதோ அது பேரன்பாக உருவெடுத்து இருந்தது.
அதுவும் உடம்பு சரியில்லாமல் அறைக்குள் படுத்து இருக்கும் தன்னை நொடிக்கு ஒரு முறை பரிதவிப்போடு பார்த்துவிட்டு செல்பவரின் மீது நேசம் வழிந்தோடியது.
குட்டிப் போட்ட பூனை போல் தவித்துக் கொண்டிருந்த சீமாவை நோக்கி “எனக்கு ஒன்னுமில்லை. லைட்டா தலைவலி. அதனாலே தான் ஆஃபிஸ்க்கு போகலே. கவலைப்படும்படி வேற எதுவும் இல்லை” என்று சமாதானம் செய்ய முயன்றாள்.
ஆனாலும் சீமாவின் மனது சமாதனம் ஆகவில்லை.
“நான் மெடிக்கல் ஷாப் போயிட்டு மாத்திரை வாங்கிட்டு வரேன்டா. ஈவினிங் தலைவலி குறையலேனா டாக்டர் கிட்டே போகலாம்.”
அவள் மறுப்பதையும் பொருட்படுத்தாது கிளம்பியவர் கையில் மாத்திரையோடு திரும்ப வந்தார்.
ஆனால் சீமாவின் முகத்தில் செல்லும் போது இருந்த தெளிவு திரும்பி வரும்போது இல்லை.
அப்படமான சோர்வு!
அவரது முகத்தையே யோசனையுடன் பார்த்துக் கொண்டு இருந்த அதிதியின் முன்பு சீமா தண்ணீரையும் மாத்திரையும் நீட்டினார்.
“இதைப் போட்டுட்டு தண்ணி குடிடா. சீக்கிரமா சரியாகி” என்று முழுவதாய் சொல்லி முடிக்கும் முன்பே சீமாவின் குரல் கடலலை போல உள்ளிழுத்துக் கொண்டது.
வலிகளின் ரேகை படர்ந்து நொடிப் பொழுதில் முகபாவனைகளில் அசாத்திய மாற்றம்.
கைகளில் இருந்த தம்ளர் பிடிமானமில்லாமல் நழுவி விழுந்ததைப் போல சீமாவும் சுயநினைவற்று கீழே விழுந்தார்.
தன் முன்னே மயங்கிவரைக் கண்டு அதிதியிடம் அதிர்வு.
“அம்மா அம்மா. என்னை பாருங்கமா. என்ன ஆச்சுமா?” என்று சீமாவின் கன்னங்களை தட்டியபடி அதிதி கதற அவரிடம் அசைவே இல்லை.
மிதுராவிற்கும் விஸ்வத்திற்கும் அலைப்பேசியில் தகவல் சொன்னவள் துரிதமாக செயல்பட்டு சீமாவை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு இருக்கையில் அமர்ந்தவளின் மனதிலோ அத்தனை வலி.
ஏற்கெனவே தாயை இழந்து பரிதவித்தவளின் உள்ளம் மீண்டும் கிடைத்த தாய்ப்பாசத்தை இழக்க பயப்பட்டது.
‘கடவுளே என் அம்மாவை எப்படியாவது காப்பாத்திக் கொடு’ என வேண்டிக் கொண்டிருந்தவளின் முன்பு பதற்றம் ஊறிய முகத்துடன் வந்து நின்றார் விஸ்வம்.
“என்னாச்சுடா சீமாவுக்கு?” என்று தவிப்பாக கேட்டவரின் கைகளை அதுவரை நடுங்கிக் கொண்டிருந்த அதிதியின் கைகள் தன்னிச்சையாக பற்றிக் கொண்டது.
“அப்பா பயமா இருக்குபா. அம்மாவுக்கு ஒன்னும் ஆகாது தானே. சந்தியா அம்மா மாதிரி சீமா அம்மாவையும் நான் இழந்திடமாட்டேன்ல” அழுகுரலோடு தன் தோளில் சாய்ந்தவளை தாங்கிய விஸ்வத்தின் கண்களிலும் கண்ணீர்.
“எதுவும் ஆகாதுடா. நம்ம சீமா நம்மளை விட்டு போகமாட்டாடா” மகளுக்கு சமாதானம் சொல்வதைப் போல தனக்கு தானே சொல்லிக் கொண்டவரின் முன்பு மிதுரா வந்து நின்றாள், கூடவே இரண்டு கார்த்திக்கும் அபியும் சிற்பியும்.
விஸ்வத்தின் ஒரு கை அதிதியை அணைத்து இருக்க மறுகை மிதுராவை நோக்கி நீண்டது.
அதில் சரண் புகுந்தவள் “அம்மாவுக்கு என்னாச்சுபா?” என்றாள் கதறியபடி.
அவளின் தலைமுடியை கோதியபடியே, “கார்டியாக் அரெஸ்ட்னு நர்ஸ் சொன்னாங்கடா. டாக்டர் ட்ரீட்மெண்ட் பண்ணிட்டு இருக்காங்க. கண்டிப்பா அம்மாவுக்கு ஒன்னும் இருக்காது” என்று ஆறுதலாய் சொல்லியபடி இரண்டு மகள்களையும் தன் தோளில் தாங்கிக் கொண்டவர் தன் மனைவிக்காக தவிப்புடன் காத்து கொண்டிருந்தார்.
ஐ.சி.யூவில் இருந்து வெளியே வந்த மருத்துவர் விஸ்வத்தை தன்னறைக்கு அழைத்து சென்றுவிட அங்கே கதறிக் கொண்டிருந்த அதிதியையும் மிதுராவையும் மற்றவர்கள் தேற்ற முயன்றனர்.
அழுது அழுது சிவந்துப் போன மிதுராவின் முகத்தை துடைத்தபடி தீரன் சமாதானம் செய்து கொண்டிருக்க, ராஜ்ஜோ தன் கைக்குட்டையை எடுத்து அதிதியை நோக்கி நீட்டினான்.
அந்த நிலையிலும் அதை வாங்க மறுத்து அபியை நோக்கி “கர்சீஃப் கொடுடா” என்றவளைப் பார்த்து கோபத்தை சிந்தியது ராஜ்ஜின் விழிகள்.
மருத்துவர் அறையிலிருந்து வெளியே வந்த விஸ்வத்தின் முகத்தில் முன்பிருந்த கலக்கம் சென்று ஒரு தெளிவு வந்திருந்தது.
தன்னையே கேள்வியாக பார்த்துக் கொண்டிருந்த மகள்களின் முன்பு வந்தவர் , “சீமா ஆபத்தான கட்டத்தை தாண்டிட்டா. அவளுக்கு இது ஃபர்ஸ்ட் அட்டாக்ன்றதாலே காப்பாத்திட முடிஞ்சுது. இனி அவங்களை பத்திரமா பார்த்துக்க சொன்னாங்க” என்றதும் தான் சென்ற மூச்சு திரும்பி வந்தது அவர்களுக்கு.
அவசரப் பிரிவில் ஒருவர் மட்டுமே இப்போது சென்று பார்க்க அனுமதி தர விஸ்வம் உள்ளே சென்றார்.
அங்கே வாடிய மலராக சீமா!
முணுக்கென்று அவர் கண்களில் நீர் துளிர்க்க, சீமா கண்விழிப்பதை பார்ப்பதற்காக அங்கிருந்து நகராமல் மாலை வரை அவரையே பார்த்துக் கொண்டு இருந்ததார் விஸ்வம்.
அவர் முகத்தில் கடந்த காலத்தின் நினைவுகள்.
சீமாவை முதல்முறையாக பார்த்த நாள் நினைவு வந்தது.
அன்று மட்டும் சீமாவை பார்க்காமல் இருந்து இருந்தால் என்ன நிகழ்ந்து இருக்கும்! நினைக்கும் போதே நெஞ்சு நடுங்கியது.
எதிர்பாராமல் தன் வாழ்வில் வந்த சீமா, தந்தையாய் தவித்து நின்ற தனக்கு மிதுராவைக் கொடுத்து தன் கவலையை போக்கியது நினைத்து இப்போதும் அவருக்குள் நன்றியுணர்ச்சி.
இவர்கள் இருவரும் மட்டும் தன் வாழ்வில் வராது இருந்தால் வாழ்வே சூன்யமாகியிருக்கும். என்ன தான் கணவன் மனைவியாக வாழ்ந்திராவிட்டாலும் தங்களிடையே இருந்த அந்த பெயரிடடப்படாத உறவில் ஒவ்வொரு முறையும் விஸ்லம் நிம்மதியையும் சந்தோஷத்தையும் தான் உணர்ந்தார்.
தான் பெற்ற மகளை தன் மகளாக பாவித்து ஏற்றுக் கொண்ட சீமா, இப்போது மிதுராவை விட தாயன்பிற்காக மனதிற்குள் மருகித் தவிக்கும் அதிதியின் மீது தான் அதிகமாக பாசம் காட்டுகின்றாள்.
இவளது நற்குணம் யாருக்கு வரும்?
இவள் என் வாழ்க்கைத்துணைவியாக கிடைக்க தான் என்ன தவம் செய்து இருக்க வேண்டும் என நினைத்த பொழுது
சீமாவிடம் மெல்லிய அசைவு தெரிந்தது.
இமைகளை சுருக்கியபடி விழித்தவரின் கண்கள் விஸ்வத்தின் கண்ணீரை கண்டு தவித்தது.
அவரின் விழிநீரை துடைக்க ஐவி போடப்பட்ட சீமாவின் கைகள் தன்னிச்சையாக மேலெழ அதை ஆதூரமாகப் பிடித்துக் கொண்டார் விஸ்வம்.
“சீமா ஒரு நிமிஷம் செத்துட்டேன்டா. நீ இல்லைனா நான் என்னாவேன் நினைச்சுயா? இனி நான் உன்னை பத்திரமா பார்த்துக்கிறேன் சீமா. இனி இப்படியொரு நிலையிலே என்னாலே உன்னைப் பார்க்க முடியாது” என்றவரின் விழிநீர் உடைப்பெடுக்க சீமாவின் கண்கள் தவிப்போடு பார்த்தது.
அங்கே அவர்களுக்குள் நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கிற அந்த உணர்வை காதல் என்னும் ஒற்றை வார்த்தையில் அடக்கிவிடமுடியாது.
இது காதலுக்கும் அப்பாற்பட்ட புரிதல், அரவணைப்பு.
அறைக்குள்ளே அடுத்து நுழைந்த அதிதியும் மிதுராவும் “அம்மா” என்ற குரலோடு சீமாவை நோக்கி ஓடி வந்தனர்.
தன் மகள்களின் முகத்தில் கண்ட பரிதவிப்பைப் பார்த்த சீமா மறுகையை அவர்களை நோக்கி ஆதரவாக நீட்ட,
விஸ்வமோ அதிதியைப் பார்த்தவுடன் சங்கடமாக தன் கையை எடுக்க முயன்றார்.
அதைக் கவனித்த அதிதி அவர் விலக்க முடியாதபடி தன் கையை விஸ்வம், சீமா கரத்தோடு சேர்த்துப் பிடித்தவள் அவரைப் பார்த்து மெல்லியதாக புன்னகைத்தாள்.
“சந்தியா அம்மாவை இழந்தா மாதிரி உங்க ரெண்டு பேரையும் இழக்கமாட்டேன். எவ்வளவு தான் உங்க மேல் வருத்தம் இருந்தாலும், நீங்க எனக்கு அப்பா அது மாறப் போறதில்லை.மாறவும் மாறாது. உங்க கிட்டே ஏன் இப்படி பண்ணீங்க, ஏன் விட்டுட்டு போனீங்கனு கேட்க மாட்டேன். கடந்தகால வருத்தங்களாலே நிகழ்கால அன்பை இனி நிராகரிக்கமாட்டேன். எனக்கு என் அப்பாவோட அரவணைப்பு வேணும்” என்றாள் அவரைப் பார்த்து புன்முறுவல் பூத்தபடி.
விஸ்வத்தின் கண்களில் கண்ணீரும் புன்னகையும் ஒரு சேரப் போட்டியிட்டது.
காரணம் சொல்லாமலேயே தன் மகள் தன்னை ஏற்றுக் கொண்ட சந்தோஷம் அவர் முகத்தில் கண்ணாடியாய் பிரதிபலித்தது.
தன் இரு தோள்களிலும் இரு மகள்களைத் தாங்கியபடி தன்னுடைய கைவளைவில் தன் மனைவியை அணைத்துக் கொண்டவரின் இதயத்தில் இதுவரை இருந்த துயரங்களெல்லாம் துகளாய் மாறி உடைய இப்போது தெளிந்த வானமாய் அவர்.
வெவ்வேறு கிளைப் பறவைகள் அன்பென்னும் வானில் சிறகடித்த அற்புத தருணம் இது!